Wednesday, September 20, 2017

புல்லட் ரயில் வேண்டுமா, வேண்டாமா?

பொதுவாகவே ராக்கெட், விண்கலம், செயற்கைக்கோள், படுவேக ரயில் போன்றவை குறித்து ஒரு பிரதமரோ அல்லது மத்திய அரசோ சிந்தித்தால் உடனே கல்வி, சுகாதாரம் ஆகியவற்றில் முதலீடு செய்வதுதான் முக்கியம் என்று பேசுவது வாடிக்கையாக இருக்கிறது.

இப்போது இருக்கும் ரயில்வே மிகவும் பழையது. இதை நிச்சயமாக மேம்படுத்தவேண்டும். இதற்கு எக்கச்சக்கமான அளவு பணம் வேண்டும். இதை ஜப்பான் தூக்கிக்கொடுக்காது. இது நம் வரிப்பணத்திலிருந்துதான் வரவேண்டும். ஒரேயடியாக இம்மாற்றங்களைச் செய்துவிடவும் முடியாது.

நமக்கு புல்லட் ரயில் கட்டாயமாக வேண்டும். பெங்களூரு, சென்னை, ஹைதராபாத், மும்பை, அகமதாபாத், திருவனந்தபுரம், தில்லி, கொல்கத்தா, லக்னோ, போபால் போன்று பல நகரங்களை தனியான அதிவேக ரயில் இணைப்புகளைக் கொண்டு இணைக்கவேண்டும். அதற்கு நிறையப் பணம் தேவை. உள்நாட்டு வரிவரவிலிருந்து இதற்குத் தேவையான பணம் இப்போதைக்குக் கிடைப்பது சாத்தியமே இல்லை.

ஜப்பான் மிகக் குறைந்த வட்டியில் கடன் கொடுக்கிறது. கண்ணை மூடிக்கொண்டு இதனை வாங்கிக்கொள்ளலாம். அவர்கள் நமக்குக் கடன் கொடுப்பது ஜப்பானியத் தொழில்நுட்பத்தைக் கொண்டு  புல்லட் ரயிலைக் கட்டுவது. இதனைச் செய்வதில் என்ன குறை?

நாளை பிரான்ஸ் 90% கடனை 0.1% வட்டியில் கொடுத்தால் அரீவாவின் நியூக்ளியர் மின்சார நிலையத்தை அமைப்பதில் தவறே இல்லை. அதிலிருந்து கிடைக்கும் மின்சாரமும் நமக்கு அவசியம் தேவை.

கல்வியிலும் சுகாதாரத்திலும் அதிகமான முதலீடு வேண்டும் என்றால் அதனை நம் வரி வருமானத்திலிருந்து நாம் செய்யவேண்டும். அதற்கு எந்த வெளிநாடும் கடன் தராது.

புல்லட் ரயில் போன்ற தொழில்நுட்பங்கள் நமக்கு மிகவும் அவசியம். இதனால் நம் நாட்டில் பல உபதொழில்கள் ஏற்படுத்தப்படும். பல ஆயிரம் புது வேலைகள் உருவாகும். அனைத்துக்கும் மேலாக இந்தத் தொழில்நுட்பத்தைக் கொண்டு வேறு பலவற்றை நம் நாட்டில் நாம் உருவாக்கிக்கொள்ள முடியும்.

மிக முக்கியமானதொரு பலனும் இதன்மூலம் கிடைக்கிறது. விமானத்தை இயக்க எரிபொருள் தேவை. மேக்லெவ் ரயிலை இயக்க மின்சாரம் போதும். எரிபொருள் தேவையை ஒழிப்பது இன்று மிக முக்கியமான ஒரு தேவையாக நமக்கு இருக்கிறது.

அடுத்த இருபது ஆண்டுகளில் மின் ஸ்கூட்டர், மின் கார், மின் ரயில், மின் பேருந்து ஆகியவை பிற அனைத்து வாகனங்களையும் பின்னுக்குத் தள்ளிவிடும். அப்போதும் விமானங்கள் தேவைப்படும். அவை மின்சாரத்தில் இயங்குவது சாத்தியமே அல்ல. ஹைட்ரஜன் வாயுவை எரிபொருளாகக் கொண்டு கார்களும் லாரிகளும் விமானங்களும் இயங்குவதும் நிகழலாம்.

ஹைப்பர்லூப் பற்றிய பேச்சுகள் இன்னொரு பக்கம் நிகழ்கின்றன என்பதை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள்.

3 comments:

 1. மெக்லெவ் ரயிலா வருகிறது? (இதன் வேகம் 500 - 600 கிமீ மணிக்கு, காந்தப்புலத்தில் மிதப்பது) மெக்லெவ் ஜப்பானிலேயே கமர்ஷியலாக ஓடவில்லை என்று நினைக்கிறேன் (சைனாவில் மட்டும்
  கமர்ஷியல் சர்வீஸ் ஓடுகிறது) இங்கு வருவது சாதாரணமாக சக்கரங்கள் தண்டவாளத்தின்மீது ஓடுகிற புல்லட் ரயில் (வேகம் 250 - 300 கிமீ மணிக்கு) என்று நினைக்கிறேன். (தவறாகவும் இருக்கலாம்.)
  அடுத்து, இப்போது ஓடிக்கொண்டிருக்கும் ரயில்களும் பெரும்பாலும் மின்மயமாக்கப்பட்ட பாதைகளில், மின்சாரத்தில்தான் ஓடுகின்றன.
  மற்றபடி புல்லட் ரயில் எந்த வகையானதாக இருந்தாலும், எதில் ஓடினாலும் வரவேற்க வேண்டியதே.

  சரவணன்

  ReplyDelete
 2. WHY ALWAYS AHMEDABAD AND BOMBAY. WHY CANT IT BE
  CHENNAI TRICHY MADURAI TIRUNELVELI AND KANYAKUMARI?
  TAMILNADU IS ALSO PART OF INDIA .

  ReplyDelete
 3. Considering the cost bullet train can benifit only long routes like chennai to delhi, mumbai to kolkatta. present selected route is waste of money, and it is only show off to home state people of PM.

  ReplyDelete