இந்தியாவில் இந்து, புத்த, சமண மதங்கள் கல்,
மரம், உலோகம், சுதை ஆகியவற்றால் கடவுள் சிலைகளை உருவாக்கி வழிபடும் பாரம்பரியத்தைக்
கொண்டவை. சிந்து-சரசுவதி நாகரிக காலப் பொருள்கள் உண்மையில் வழிபாட்டுக்குரிய
பொருள்களா என்று எனக்குத் திட்டவட்டமாகத் தெரியாததால் அவற்றை விடுத்துவிட்டுப்
பேசுகிறேன். அசோகன் காலத்திலிருந்து, அதாவது குறைந்தபட்சம் 2200 ஆண்டுகளுக்கு முன்பிருந்து,
சிற்பப் பொருட்கள் நமக்குக் கிடைக்கின்றன. மௌரிய, சாதவாகன, குஷாண, குப்த என்று
தொடங்கி அடுத்தடுத்த நூற்றாண்டுகளில் இந்தியா முழுவதிலும் இந்து, புத்த, சமணக் கடவுளர்களின்
சிற்பங்கள் கிடைக்கின்றன.
இந்தச் சிற்பங்களை
உருவாக்கிய ஸ்தபதிகளும் இந்தச் சிற்பங்களுக்கான நிதி உதவி செய்தவர்களும், இந்தச்
சிற்பங்களைக் கடவுளாக மட்டுமே கண்டனர். இவற்றைக் கலைப்பொருள்களாக அவர்கள்
எப்போதும் காணவில்லை. இன்றுவரையிலும் இதுதான் நிலைமை. ஒரு சிற்பி (ஸ்தபதி),
கல்லிலோ, உலோகத்திலோ, சுதையிலோ ஒரு கடவுள் படிமத்தை உருவாக்குவதற்குமுன்,
அக்கடவுளுக்கான தியான சுலோகத்தை மனத்தில் இருத்தி வணங்குவார். அவர் மனத்தில்
தோன்றும் வடிவத்தைப் பின்னர் உருவாக்குவார். அதன்பின், ஒவ்வொரு சம்பிரதாயத்தின்படியும்,
முறையான ஆகம வழிமுறைகள்மூலம், குறிப்பிட்ட கடவுளின் தன்மை அச்சிலையினுள் ஆவாகனம்
செய்யப்படும்.
இந்துக் கோவில்களில்
மூலவர் கல் அல்லது சுதையில் இருக்கும். உற்சவரும் பலி ஏற்பவரும் (இரண்டும்
வெவ்வேறு படிமங்கள்), உலோகத்தில் இருக்கும். உற்சவரை (உற்சவபேரர்) வாகனங்களில் அல்லது
தேரில் ஏற்றி, அல்லது தோளில் சுமந்து கோவிலின் உள்ளேயும் வீதிகளிலும் உலா வருவர்.
பலி ஏற்கும் படிமம் (பலிபேரர்), பலிபீடங்களின் முன் வந்து பலியை (உணவை) ஏற்பதற்கு
மட்டுமே பயன்படும். சமணக் கடவுள்களுக்கும் இவ்வாறே. கருவறை தவிர, விமான கோஷ்டங்கள்,
கோபுரங்கள் ஆகிய இடங்களிலும் கல்லினால் அல்லது சுதையினால் ஆன கடவுள் சிற்பங்கள்
உள்ளன.
இந்து, சமணக் கோவில்கள்
ஒரே மாதிரியான அமைப்பைக் கொண்டவை. ஆனால் புத்த சைத்தியங்களும் விகாரைகளும்
வடிவத்தில் வேறுபட்டவை. கருவறையிலும் சுற்றுச் சுவர்களிலும் கற்சிலைகள் கொண்ட,
இன்று வழிபாட்டில் இல்லாத பல சைத்தியங்களும் விகாரைகளும் நமக்குக் கிடைக்கினறன. சென்னை
அருங்காட்சியகத்தில் சோழர் கால புத்த உற்சவர் உலோகச் சிலைகள் நிறைய உள்ளன. எனவே
வீதியுலா நடந்திருக்கவேண்டும். பலியுணவு தருதல் இருந்ததா என்பது தெரியவில்லை.
சிற்பங்கள்
பின்னமாகும்போது, அதாவது உடைந்துபோகும்போது, அவற்றின் கடவுள் தன்மை நீங்கிவிடும்.
இதுதான் மரபு. அந்த நிமிடத்திலிருந்தே அச்சிலையானது வெறும் கல்லாக அல்லது உலோகமாக
ஆகிவிடுகிறது. அது கடவுள் கிடையாது. இந்திய மரபின்படி, இந்த வெறும் கல், உலோகம்
அழிக்கப்படவேண்டும். குன்றின்மீது செதுக்கப்பட்டிருந்தால், அந்த இடத்தில்
மேற்கொண்டு வழிபாடு தொடராது. கற்சிலையாக இருந்தால் குளத்திலோ, கிணற்றிலோ
போட்டுவிடுவார்கள். உலோகமாக இருந்தால் அதனை உருக்கி, அடுத்த சிலையைச் செய்யப்
பயன்படுத்திக்கொள்வார்கள். மரமோ, சுதையோ நாளடைவில் அழிந்து நமக்குக்
கிடைத்திருக்கவே கிடைத்திருக்காது. அல்லது யாருக்காவது விறகாகக்கூடப் பயன்பட்டிருக்கலாம்.
ஆக, மரபின்படி, அது கடவுளா அல்லது வெறும் பொருளா என்பதை அதன் முழுமை மற்றும் ஆகம
முறைப்படியான ஒரு வழிபாட்டிடத்தில் அது இருக்கிறதா, அதற்கு ஆகமச் சடங்குகள்,
குடமுழுக்கு ஆகியவை நடந்துள்ளதா என்பதைப் பொருத்ததே ஆகும்.
இந்தியர்கள் எந்தக்
காலத்திலும் இந்தச் சிலைகளை எடுத்துக்கொண்டுவந்து வீட்டில் வைத்துக்
கலைப்பொருளாகப் பார்த்ததில்லை. (இன்று மாற்றம் உண்டு.) அதற்குக் காரணம், அவை
வழிபடு பொருள்கள் என்பதாலும் நியமத்துடன் அவற்றை வழிபடவேண்டும் என்பதாலுமே. இம்மாதிரியான
நியமங்களைப் பின்பற்ற முடியும் என்போரே தமக்கெனக் கடவுள் சிலைகளை உருவாக்கி
வீட்டில் வைத்து வழிபட்டு வருகின்றனர்.
இஸ்லாமியர்களும்
கிறிஸ்தவர்களும் இந்தச் சிலைகளை வெறுக்கத்தக்க பொருளாகவே பார்த்தனர். முஸ்லிம் அரசர்கள்,
இந்தச் சிலைகளை அழிப்பதையும், கொள்ளையடிப்பதையும் தொழிலாகவே செய்தனர். இந்தியா
வந்த கிறிஸ்தவப் பயணிகளும் பாதிரிகளும் இச்சிலைகள் குறித்துக் கீழானவிதத்திலேயே
எழுதியிருக்கின்றனர். ஆனால், பின்னர் ஆங்கிலேய ஆட்சியாளர்களாக இருந்த பலர்,
இந்தியக் கடவுள் சிலைகளைத் தங்களுடைய சொத்துகளாக, கலைப்பொருள்களாக, பிரிட்டனுக்கு எடுத்துச்
சென்றனர்.
ஆங்கிலேயர்
ஆட்சியின்போது வில்லியம் ஜோன்ஸ் முதலாகப் பல்வேறு இந்தியவியலாளர்கள் இந்திய
மதங்களையும் இலக்கியங்களையும் சற்றே வேறுபட்ட கண்ணோட்டத்தில் பார்க்கத்
தொடங்கினர். ஆனந்த குமாரசாமி போன்றோர் இந்தியச் சிலைகளைக் கலைக் கண்ணோட்டத்துடன்
எழுதியபிறகு உலக அரங்கில் இந்தச் சிலைகள் குறித்து சற்றே மரியாதைக்குரிய கருத்து
தோன்ற ஆரம்பித்தது. ஆனால் பெரும் பிரச்னையும் அங்கிருந்துதான் உருவாகத் தொடங்கியது.
ஆனந்த குமாரசாமியே இந்தியாவிலிருந்து எண்ணற்ற கடவுள் சிலைகளை உலக
அருங்காட்சியகங்களுக்குப் பெற்றுக் கொடுத்திருக்கிறார். இவை வழிபாட்டில் இருந்த
சிலைகளா அல்லது பின்னம் என்று தூக்கி எறியப்பட்டவையா என்பது குறித்து எனக்குத்
தெரியாது.
பத்தொன்பதாம்
நூற்றாண்டு தொடங்கி மேற்கத்திய அருங்காட்சியகங்களும் தனிச் சேகரிப்பாளர்களும்
இந்தியக் கலைப் பொருள்களைச் சேகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்தியாவில்
திரும்பிய இடமெல்லாம் கோவில்கள். பல்வேறு காலகட்டங்களில் அந்நியப்
படையெடுப்பின்போது காப்பாற்றவேண்டும் என்பதற்காக நிலத்தினடியில்
புதைத்துவைக்கப்பட்ட சிலைகள், குளங்களில், கிணறுகளில் எறியப்பட்டிருந்த சிலைகள்
போன்றவை இன்றும்கூடத் தோண்டியெடுக்கும்போது கிடைக்கின்றன. ஆனால் இவை
எப்போதாவதுதான் கிடைக்கும். மேலை நாடுகளிலோ மிகப்பெரிய ஆர்வம் இச்சிலைகளுக்கு
உள்ளது. எனவே, இந்தியாவில், பாதுகாப்பற்ற கோவில்களிலிருந்து சிலைகள் கடத்துவது
என்பது மிகப்பெரிய தொழிலாக ஆனது.
இது இன்று நேற்று
அல்ல. நான் சிறுவனாக நாகப்பட்டினத்தில் வசிக்கும்போதே (1970, 80கள்), வாட்ஸப், ஃபேஸ்புக்
போன்ற வதந்தி பரப்பும் சாதனங்கள் இல்லாதபோதே, சிலை கடத்தல் நடப்பதாகவும் அதில்
ஊரின் முக்கியமான மருத்துவர்கள், ஆடிட்டர்கள் ஆகியோர் ஈடுபடுவதாகவும் அவர்கள்
அதன்மூலம் கொள்ளைப் பணம் ஈட்டுவதாகவும் மக்கள் பேசிக்கொண்டனர். சிறு சிறு கோவில்களிலிருந்து
சிலைகள் கடத்தப்படுவதும் நிஜமாகவே நடந்துகொண்டிருந்தது.
மேலை நாடுகளின்
அருங்காட்சியகங்கள் இந்தச் சிலைகளை வாங்குவதற்குமுன், இவற்றுக்கு Provenance Certificate என்பது தேவை. இந்தச் சிலையின் வரலாறு என்ன, இது எந்தக் காலத்தைச்
சேர்ந்தது, இது எந்தக் கோவிலில் இருந்திருக்கலாம் போன்ற தகவல்கள். கடத்தல்
சிலைகளுக்கும், பிரச்னை வராத வகையில் வேண்டிய மாதிரி இந்தச் சான்றிதழை எழுதித்தர
பல வரலாற்று, கலைத்துறைப் பேராசிரியர்கள் கூட்டுச் சதியில் சேர்ந்துகொண்டனர்.
இன்று மேலை நாடுகளின் அருங்காட்சியகங்களில் நீங்கள் காணும் ‘மதிப்பு மிக்க’, ‘விலை
உயர்ந்த’ இந்தியச் சிற்பங்கள் அனைத்துமே நியாயமான முறையில் இந்தியாவிலிருந்து
பெறப்பட்டதல்ல. காலனியாதிக்கக் காலத்தில் எடுத்துச் செல்லப்பட்டவை, அல்லது இந்தியச்
சுதந்தரத்துக்குப் பிறகு திருடிச் செல்லப்பட்டவை. சுதந்தரத்துக்குப் பின்
திருடப்பட்ட சிலைகளைப் பொருத்தமட்டில் பெரும் குற்றவாளிகள் அனைவரும் இந்தியர்களே.
மேலை நாடுகளின் ஒரே குற்றம், அவர்கள் திருட்டுச் சிலை என்ற கவலையின்றி, அவற்றுக்குக்
கணிசமாகப் பணம் கொடுத்துத் தம் அருங்காட்சியகங்களில் அவற்றை வைத்துக்கொண்டதே.
ஒவ்வோர்
அருங்காட்சியகத்திலும் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் சிலைகளைவிடப் பல மடங்கு
சிலைகள் கிட்டங்கியில் வைக்கப்பட்டுள்ளன. எந்த அருங்காட்சியகமும் தன்னிடம்
இருக்கும் முழுச் சேகரத்தின் பட்டியலை வெளியில் கொடுப்பதில்லை. இதைவிட மோசம்,
தனிச் சேகரிப்பாளர்களிடம் இருக்கும் சிலைகள். அவை பற்றி நமக்குத் துளியும்
தெரியாது. இவற்றில் சில எப்போதேனும் ஏல நிறுவனங்கள் வாயிலாக வெளியே வரும்போதுதான்
இப்படிப்பட்ட ஒன்று ஏதோ ஒரு நாட்டில் இருப்பதே நமக்குத் தெரியவரும்.
இன்று இந்தியச் சிற்பிகள்,
கலைப்பொருளாகவே இவற்றைக் கல்லிலும் உலோகத்திலும் செய்துதருகிறார்கள். இவற்றை எந்த
அருங்காட்சியகமும் வாங்கிக்கொள்ளலாம். இவை சட்டபூர்வமானவை. ஆனால் மேலை நாட்டு அருங்காட்சியகங்களுக்கோ
பழைய சிலைகளை - சோழர், பாண்டியர், குப்தர், மௌரியர், கங்கர், பாலர், சாளுக்கியர்,
சாதவாகனர் காலச் சிலைகளை - சேகரிப்பதில்தான் ஆர்வம் இருக்கிறது. அத்தகைய சிலைகளைத்
திருடி மட்டுமே பெற முடியும். அவை வழிபாட்டில் இல்லையாயின், இந்திய அரசின்,
இந்தியத் தொல்லியல் துறையின் சொத்தாகும். இந்திய அரசு, பரிசாக அவற்றில்
சிலவற்றை வேறு நாடுகளுக்குக் கொடுத்தால் அவைமட்டுமே சட்டபூர்வமாகப் பெறப்பட்டவை.
மீதம் அனைத்தும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ திருடப்பட்டவை மட்டுமே.
இந்தத் திருட்டில்
யார் சம்பந்தப்பட்டிருந்தாலும், அவர்கள் அனைவரும் சட்டபூர்வமாகக் குற்றவாளிகள்.
விடலைத்தனமாக, ‘கடவுளால் தன் சிலையையே காப்பாற்றிக்கொள்ள முடியவில்லையா’ என்று
கேள்வி கேட்போர் முட்டாள்கள் மட்டுமே. கடவுள் என்பது நம்பிக்கை. திருடனால்
சிலுவையையும் திருட முடியும், சிவன் சிலையையும் திருட முடியும், நபியின்
முடியையும் திருட முடியும், புத்தரின் பல்லையும் திருட முடியும். மக்களின்
நம்பிக்கைக்குரிய படிமங்கள் தொலைந்துபோகாமல் இருக்க சட்டம் ஒழுங்கைத் தன்னகத்தே
வைத்திருக்கும் அரசுகள்தான் அமைப்புகளை ஏற்படுத்தவேண்டும். திருடப்பட்ட படிமங்களைத்
திரும்பிப் பெற அனைத்து சட்டபூர்வ ஏற்பாடுகளையும் அரசுகள் செய்யவேண்டும்.
மிகப் பழமை வாய்ந்த
நாகரிகங்கள் உள்ள நாடுகள் மிகச் சிலவே. கிரேக்கம், இத்தாலி, மெசபடோமியப் பகுதி
நாடுகள், பாரசீகப் பகுதி, எகிப்து, சீனம், இந்தியா, தென்கிழக்காசிய நாடுகள்,
மத்திய அமெரிக்க நாடுகள் ஆகிய பகுதிகளில்தான் பெருமளவு பண்டைய மதங்கள் சார்ந்த
கடவுள் சிலைகள் உள்ளன. இதில் பெரும்பாலான பழைய மதங்களை கிறிஸ்தவமும் இஸ்லாமும்
அழித்துவிட்டன. சீனத்தில் கம்யூனிசம் அந்த வேலையைச் செய்தது. இந்தியாவிலும் சில
புத்த மத நாடுகளிலும்தான் பண்டைய மதக் கடவுள்கள் இன்றும் கோவிலில் இருக்கிறார்கள்.
எகிப்தின் சூரியக் கடவுள் சிலை இன்றைக்கு அந்நாட்டு மக்களைப் பொருத்தமட்டில்
வெறும் கலைப்பொருள் மட்டுமே. ஈராக்கிலும் அப்படியே. சொல்லப்போனால் தாலிபன், ஐஸிஸ்
போன்ற பழமைவாத வெறியர்கள் இவற்றைக் கணக்கின்றி அழித்துள்ளனர். ஆனால் இந்தியாவிலும்
இலங்கை, திபெத் தொடங்கி கிழக்காசிய புத்தமத நாடுகளிலும் உள்ள இந்து, புத்த, சமணச்
சிலைகள் அந்நாட்டு மக்களுக்கு வழிபடு படிமங்கள் ஆகும். அவை வெறும் கலைப்பொருள்கள்
அல்ல. இதனை அந்தந்த நாட்டு அரசுகள் மனத்தில் கொண்டு செயல்படுகின்றன. இந்த மதங்கள்
அனைத்துக்கும் தாய்நாடு இந்தியா. ஆனால் அது தன் தலைமைத்துவத்தைச் சரியாகக் காண்பிப்பதில்லை.
இத்தாலிபோல, இந்தியாவும் இதற்கென ஒரு தனி துப்பறியும் அமைப்பை ஏற்படுத்தி, இந்தியக்
கடவுள் படிமங்கள் எந்த நாட்டில் இருந்தாலும் அவற்றைத் துப்பறிந்து, சட்டபூர்வமான
நடவடிக்கைகள்மூலம் மீட்டு இந்தியாவுக்குக் கொண்டுவரவேண்டும்.
India Pride Project என்னும் தன்னார்வலர்
அமைப்பு இத்துறையில் பெரும் பங்காற்றிவருகிறது. திருடப்பட்ட இந்தியக் கடவுளர்
படிமங்கள் மீண்டும் இந்தியா வருவதற்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்ய நீங்கள்
விரும்பினால் அவர்களைத் தொடர்புகொள்ளுங்கள். இதுநாள்வரை அவர்கள் எந்தெந்தக் கடவுள்
படிமங்களை இந்தியாவுக்குத் திரும்பக் கொண்டுவருவதில் உதவியுள்ளனர் என்ற தகவலையும்
அவர்களுடைய தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.
திருடப்பட்ட சிலை எல்லாம் அதை தொழுபவனால் திருடப்பட்டிருக்கமுடியாது
ReplyDeleteபயனுள்ள தகவல்களை தெரிவித்திருக்கிறீர்கள்.நன்றி!
ReplyDelete"விடலைத்தனமாக, ‘கடவுளால் தன் சிலையையே காப்பாற்றிக்கொள்ள முடியவில்லையா’ என்று கேள்வி கேட்போர் முட்டாள்கள் மட்டுமே. கடவுள் என்பது நம்பிக்கை. திருடனால் சிலுவையையும் திருட முடியும், சிவன் சிலையையும் திருட முடியும், நபியின் முடியையும் திருட முடியும், புத்தரின் பல்லையும் திருட முடியும்."
பொட்டில் அறைந்தாற்போல் இருக்கிறது.புரியாது வேஷம் போடுபவர்களுக்கு புரிந்தால் சரி.