Thursday, October 31, 2019

தமிழ் பிராமி - சில குறிப்புகள்

ஐராவதம் மகாதேவனின் "Early Tamil Epigraphy - From the Earliest Times to the Sixth Century CE" என்று விரிவாக்கப்பட்ட பதிப்பு (Central Institute of Classical Tamil, Chennai, 2014 வெளியீடு), ஒரு பொக்கிஷம். இப்புத்தகத்தைத் தோண்டத் தோண்ட புதையல்கள் வெளிவந்துகொண்டேயிருக்கின்றன. அதிலிருந்து சில தகவல்கள் மட்டும் இங்கே:
  1. தமிழ் பிராமி பொறித்த கல்வெட்டுகள் மட்டுமின்றி, பானை ஓடுகள், காசுகள், முத்திரைகள், மோதிரங்கள் ஆகியவை தமிழகத்தில் கிடைத்துள்ளன. [கீழடியில் தங்கக் கட்டிகளில் தமிழ் பிராமி எழுத்துகள் பொறித்தது தெரியவருவதற்குள் மகாதேவன் இறந்துவிடுகிறார்.]
  2. தமிழ் பிராமி பொறித்த பானை ஓடுகள் தமிழகத்துக்கு வெளியே ஆந்திரத்திலும் கேரளத்திலும் கிடைத்துள்ளன
  3. இந்தியாவுக்கு வெளியே இலங்கையில், வட இலங்கையின் யாழ்ப்பாணத்திலும் தென்னிலங்கையில் திஸ்ஸமஹரமாவிலும், எகிப்தில் இரண்டு இடங்களிலும், ஓமானிலும், தாய்லாந்திலும் கிடைத்துள்ளன.
  4. இன்னொரு பக்கம், தமிழகத்தில் கிடைத்துள்ள சில பானை ஓடுகளில் தென்னிந்தியாவில் புழங்கும் பிராகிருத மொழியும் இலங்கையில் வழங்கும் பிராகிருத மொழியும் கிடைத்துள்ளன. [இலங்கை வழக்கை மகாதேவன் சிங்கள-பிராமி என்று குறிப்பிடுகிறார். இதனை ராஜன் சரியாகவே மறுக்கிறார். ஏனெனில் சிங்களம் என்ற மொழி பிற்காலத்தில்தான் தோன்றுகிறது. பாலி-பிராமி என்றுவேண்டுமானால் அதனைக் குறிப்பிட்டிருக்கலாம்.]
  5. கல்வெட்டுகளை மட்டும் கணக்கில் எடுத்துக்கொண்டு, எத்தனை வார்த்தைகள் சொற்குவியலில் உள்ளன என்று மகாதேவன் அலசுகிறார். மொத்தம் 96 தமிழ் பிராமிக் கல்வெட்டுகள். அதில் 330 சொற்கள் (இரட்டிப்பு நீக்கப்பட்ட தனிச் சொற்கள்). அதில் 237 திராவிட மொழிக்குடும்பம், 81 இந்தோ-ஆரிய மொழிக்குடும்பம், 12 எதுவென்று சொல்லமுடியாதவை. 
  6. முக்கியமாக ஹளே கன்னடச் சொற்கள் இவற்றில் இருப்பதையும் பெரும்பாலான கல்வெட்டுகள் சமணம் சார்ந்து இருப்பதையும் வைத்து எழுத்துமுறை சமணர்கள் மூலம், கர்நாடகத்திலிருந்து தமிழகம் வந்திருக்கலாம் என்கிறார். இது வெகுவாக தமிழ்நாட்டவரால் மறுக்கப்படுகிறது. இது தனி விவாதமாக எடுத்துக்கொள்ளப்படவேண்டியது.
  7. மகாதேவன், மௌரியர் காலத்தைய எழுத்துக்குப் பொதுவாக பிராமி அல்லது அசோகன் பிராமி அல்லது மௌரியன் பிராமி என்று பெயர் வைக்கிறார். மௌரியர் காலத்துக்குப் பின் வட இந்தியாவில் மாற்றம் அடைந்த பிராமி எழுத்துகளை வட-பிராமி என்றும் தென்னிந்தியாவின் மாற்றம் அடைந்த எழுத்துகளுக்கு தென்-பிராமி என்றும் பெயரிடுகிறார். ஆந்திரத்தின் பட்டிப்ரோலு என்ற இடத்தில் கிடைக்கும் பிராமி எழுத்துக்கு அந்த இடத்தின் பெயரையே வைக்கிறார். அதற்கு அடுத்து, தமிழகத்தில் நிலவிய பிராமிக்கு தமிழ்-பிராமி என்று பெயர் சூட்டுகிறார். இலங்கையில் பயன்படுத்தப்பட்ட எழுத்துக்கு சிங்கள்-பிராமி என்று பெயரிடுகிறார்.
  8. மயிலை சீனி வேங்கடசாமி நாட்டார், தமிழ் பிராமிக்கு முன்பே தமிழகத்தில் ஓர் எழுத்து முறை இருந்ததாகவும், அது, தமிழ் பிராமி வந்தபின் வழக்கொழிந்துபோய்விட்டதாகவும் குறிப்பிடுவதை மகாதேவன் மேற்கோள் காட்டுகிறார். [மயிலையார் எந்தச் சான்றுகளையும் கொடுப்பதில்லை என்பது வேறு விஷயம்.]
  9. காலத்தால் முற்பட்ட வட்டெழுத்துக் கல்வெட்டு (பூலாங்குறிச்சி), ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தது. அதுவரையில் தமிழ் பிராமி எழுத்துகள் மட்டும்தான் தமிழ்நாட்டில் புழக்கத்தில் இருந்துவருகிறது.
  10. ஆறாம் நூற்றாண்டில் பல்லவர்கள் கிரந்த எழுத்துகளையும் தமிழ் எழுத்துகளையும் அறிமுகப்படுத்துகிறார்கள். சிறிது சிறிதாக இந்தத் தமிழ் எழுத்து முறை, வட்டெழுத்தைத் தமிழகத்திலிருந்து துரத்துகிறது. பத்தாம் நூற்றாண்டுக்குப் பிறகு தமிழகத்திலிருந்து வட்டெழுத்து காணாமல் போய்விடுகிறது. 
  11. கேரளத்தில் மட்டும் 19-ம் நூற்றாண்டுவரை வட்டெழுத்து புழக்கத்தில் இருக்கிறது.


4 comments:

  1. Why is this book "Early Tamil Epigraphy - From the Earliest Times to the Sixth Century CE" priced so high? Rs 3500/- that also by Central Institute of Classical Tamil, Chennai

    ReplyDelete
  2. Because it costs a lot of money to print. It can't be given away for free?

    ReplyDelete
  3. ஐராவதம் ஐயாவின் இடத்தை பத்ரி நிரப்புவார் என்று எதிர்பார்க்கிறேன்.

    தங்கள் தொல்லியல் ஆய்வு களப்பணியை நோக்கிச் செல்ல வேண்டும் என்று விரும்புகிறேன்.

    எதிர்வரும் கீழடி,ஆதிச்சநல்லூர், கொடுமணல், சிவகலை அகழாய்வு சான்றுகளின் உண்மைகளை வெளிக்கொணர்வதில் பத்ரியின் பங்கு குறிப்பிடத்தக்க அளவு இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன்...

    ReplyDelete
  4. தமிழக வரலாற்றில் கீழடி,ஆதிச்ச நல்லூர்,கொடுமணல்,சிவகலை அகழாய்வுகளும் கிடைதுள்ள சான்றுகள் புதிய வெளிச்சமாகும்,அதில் தங்களது பங்களிப்பும் பணிகளும் வரலாறு வரவு வைத்துக்கொள்ளும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துகொள்கிறேன்.நன்றி.

    ReplyDelete