Friday, March 07, 2008

தி.மு.க. வரலாறு

தி.மு.க. வரலாறு, டி.எம்.பார்த்தசாரதி, பாரதி பதிப்பகம், முதல் பதிப்பு ஜனவரி 1961, இப்போதைய பதிப்பு மார்ச் 2006, விலை ரூ. 100. கிரவுன் 1/8, பக்: 468.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் அதிகாரபூர்வ வரலாறு என்று கருதப்படும் இந்தப் புத்தகத்தை எழுதியிருப்பவர் திமுகவின் நிறுவன முன்னோடிகளில் ஒருவர். அதனால் அருகில் இருந்து கண்ணால் பார்த்தவற்றை கவனமாகப் பதிவு செய்துள்ளார்.

இந்திய குடியாட்சி வரலாற்றில் பல அரசியல் கட்சிகள் தோன்றியுள்ளன. பல பிளவுண்டு புதிய கட்சிகளைத் தோற்றுவித்துள்ளன. பல கட்சிகள் முற்றிலுமாக அழிந்துள்ளன. இந்தக் கட்சிகள் உருவான காலகட்டம், அவற்றுக்கான தேவை, இந்தக் கட்சிகளின் லட்சியம், லட்சியத்தை அடைவதில் அவை வெற்றிகண்டனவா இல்லையா ஆகியவற்றை விளக்கும் வண்ணம் கட்சிகளுக்கான முழுமையான வரலாறுகள் தேவை.

இந்தப் புத்தகத்தைப் படிக்கும்போது, அண்ணாதுரை என்ற தனிமனிதர், எந்த அளவுக்கு டெமாக்ரசி என்பதன் கருத்தை உள்வாங்கி, சிறப்பான முறையில் ஒரு கட்சியை அமைத்து குறுகிய காலத்துக்குள் அந்தக் கட்சியின் லட்சியங்களை அடைந்தார் என்பது பிரமிக்க வைக்கிறது.

பெரியார் ஈ.வெ.ராமசாமியின் பிரதான சீடர்களில் ஒருவராக இருந்த அண்ணாதுரைக்கு பெரியாரின் சர்வாதிகாரப் போக்கு சிறிதும் ஒவ்வாததாக இருந்திருக்கிறது. மணியம்மையைத் திருமணம் செய்ய முடிவெடுத்தது முதற்கொண்டு, அதற்காக ராஜாஜியை பெரியார் கலந்தாலோசித்தது, தன்னைச் சுற்றியுள்ளவர்களை பெரியார் சோம்பேறிகள், பணத்தை லவட்டுபவர்கள் என்றெல்லாம் பேசியது அண்ணாதுரையைக் கடுமையாகப் பாதித்திருக்கிறது.

கொள்கையில் பெரிதும் பெரியாரை அப்படியே பின்பற்றினாலும், கட்சி அமைப்பை உருவாக்குவதில் அண்ணாதுரை முற்றிலும் புதிய வழியைக் கடைப்பிடித்தார். அண்ணாதுரை எந்தக் கட்டத்திலும் ஒரு துளியேனும் தன் வழியைப் புகுத்துபவராகக் காணப்படவில்லை. செயல்குழு, பொதுக்குழு, மாநாடு, கட்சி அமைப்பு, கட்சிக்கான சட்டதிட்டம், கிளை அமைப்புகள் என்று கட்சிக்கு வலுவான அடித்தளம் அமைத்துள்ளார். தொடக்கம் முதலே கட்சியின் தனிப்பெரும் தலைவன் தான்தான், மற்றவரெல்லாம் வெறும் ஜீரோ என்ற எண்ணம் அண்ணாதுரையிடம் இருந்ததாகவே தெரியவில்லை.

இன்று ஆளுக்காள் கட்சி ஆரம்பிக்க முனைகிறார்கள். கட்சி ஆரம்பிப்பது, கட்சியை வளர்ப்பது எப்படி என்பதைத் தெரிந்துகொள்ள, அண்ணாவைப் படிப்பது அவசியமாகிறது. கட்சிப் பணிக்கு ஆள் சேர்ப்பது, கட்சிக்கு நிதி சேர்ப்பது, பத்திரிகைகள் நடத்தி, அதன்மூலம் கொள்கைகளை விசுவாசிகளிடம் கொண்டுசேர்ப்பது, தொடர்ச்சியாகப் போராட்டங்கள் நடத்துவது ஆகியவற்றை எப்படிச் செய்வது என்பதை அண்ணாவின் வாழ்கையைப் படித்தே ஒருவர் தெரிந்துகொள்ளலாம். (விஜயகாந்த், சரத்குமார் கவனிக்க!)

அந்நாளைய காங்கிரஸ் கட்சியின் தமிழகக் கிளை எவ்வளவு அபத்தமாக ஆட்சி செய்துள்ளது என்பது அதிர்ச்சியைத் தருகிறது. சொல்லப்போனால், ஆங்கிலேயர்கள் வெளியேறி, காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தபோது, ஆங்கிலேயர் அளவுக்கு அதே மூர்க்கத்தனத்துடன் ஆட்சியை நடத்தியுள்ளனர் காங்கிரஸார். இதில் ராஜாஜி மட்டுமல்ல, காமராஜர், பக்தவத்சலம் ஆகியோரும் அடக்கம்.

உப்புப்பெறாத விஷயங்களுக்கும்கூட இம்மியளவு எதிர்க்கருத்துகளுக்கு இடம் கொடுக்காமல் அடக்குமுறையை அவிழ்த்துவிட்டிருக்கிறார்கள். சில்லறை விஷயங்களுக்கெல்லாம் திமுக தலைவர்கள்மீது நீதிமன்றத்தில் வழக்கு, சிறைத்தண்டனை, அபராதம், திமுக தொண்டர்கள்மீது போலீஸ் தடியடி, கண்ணீர்ப்புகை, துப்பாக்கிச் சூடு என்று நடந்திருக்கிறது.

இந்தக் கண்மூடித்தனமான அடக்குமுறையே தமிழகத்தில் காங்கிரஸ்மீதான வெறுப்பாக மாறி, காங்கிரஸை முற்றிலுமாக அழித்துவிட்டது. அவ்வப்போது முதல்வர் கருணாநிதி எழுதும் கவிதைகளில் வரும் ஒரு வரி 'கொள்கை மறவர் கொட்டிய குருதியில் குழைத்துக் கட்டிய கோட்டை'. இதைப் படிக்கும்போது அபத்தமாகத் தோன்றும். ஆனால் திமுக வரலாற்றைப் படிக்கும்போது நிஜமாகவே அந்தக் கட்சியைக் கட்டமைக்க, ஏகப்பட்ட ரத்தம் சிந்தப்பட்டிருக்கிறது என்று புரிகிறது.

திமுக உருவான கட்டத்திலிருந்து அண்ணாதுரை ஆட்சியில் ஏறுவதுவரை விளக்கும் இந்தப் புத்தகத்தில் ஈ.வி.கே.சம்பத் கட்சியிலிருந்து பிரிவது விரிவாகக் காணப்படுகிறது. இந்தக் கட்டம் மிக முக்கியமானது. அண்ணாதுரை கடைசிவரை இந்தப் பிளவு ஏற்படாமல் இருக்குமாறு பார்த்துக்கொள்ள பல முயற்சிகள் எடுக்கிறார். ஆனால் முடியவில்லை. இதைப்பற்றி சம்பத் தரப்பில் இருந்த கவிஞர் கண்ணதாசன் என்ன சொல்லியிருக்கிறார் என்று நான் தேடிப்பிடித்து படிக்கவேண்டும்.

திமுக கட்டமைப்பில் அண்ணாதுரைக்கு அடுத்தபடியாக மதியழகன், சம்பத் (பின்னர் விலகிவிடுகிறார்), நெடுஞ்செழியன் போன்ற பலர் இருந்துள்ளனர். கருணாநிதியும் முக்கியமான தலைவர்கள் வரிசையில் உள்ளார். ஆனால் அண்ணாதுரையின் மறைவுக்குப் பின் கருணாநிதி எப்படி கட்சித் தலைவர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பதை பார்த்தசாரதி விளக்கவில்லை. புத்தகம் 1984-ல் நான்காம் பதிப்பாக விரிவாக்கி எழுதப்பட்டாலும், இந்த விஷயத்தைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுகிறது.

இந்தப் புத்தகத்தின் குறைகள் சில:

* சீனப்போருக்குப் பிறகு, தனித் திராவிட நாடு கொள்கையிலிருந்து, இந்திய நாட்டுக்குள்ளாக ஒரு கூட்டாட்சி (ஃபெடரல்) அமைப்பை நோக்கிச் செல்வதாக அண்ணாதுரை முடிவெடுப்பது, அதற்கு கட்சிக்குள் எந்த மாதிரியான வரவேற்பு இருந்தது ஆகியவற்றை சற்றே அதிகமாக விளக்கியிருக்கலாம்.

* பெரியார் என்ற நபர் புத்தகத்தின் ஆரம்பத்தில் வருகிறார். ஆனால் திமுக தொடங்கப்பட்டதும், அவர் வேறெங்குமே காணப்படுவதேயில்லை!

* திமுக வெற்றிபெற்று ஆட்சியமைத்த 1967 தேர்தல் பற்றிய தகவல்கள் மிகவும் குறைவு. அதற்கு முந்தைய தேர்தல்களில் கட்சி எந்தெந்தத் தொகுதிகளில் யாரை நிற்கவைத்தது என்பதுவரை தகவல் கொடுத்தவர், இதற்கும் நிறைய பக்கங்களை ஒதுக்கியிருக்கலாம்.

* புத்தக மொழி முழுவதுமே மேடைப்பேச்சு மொழியாகவே அமைந்துள்ளது. இதனால் பல இடங்களில் வாக்கியங்கள் முற்றுப்பெறுவதே இல்லை. குழப்பமான வாக்கியங்கள் பல உள்ளன. கடுமையான எடிடிங் தேவை.

* பின்னணித் தகவல்கள் போதவில்லை. இந்தி திணிப்புக்கான போராட்டம் பல கட்டங்களில் நடக்கிறது. ஆனால் ஒவ்வொரு முறையும் வெவ்வேறு அடிப்படைக் காரணத்துக்காக. தூண்டுகோல் பற்றிய விளக்கம் குறைவாக உள்ளது. அதேபோலவே குலக்கல்வித் திட்டம் பற்றியும் விளக்கம் குறைவுதான்.

தூரதர்ஷன் என்னும் தொல்லைக்காட்சி

எப்போதோ பார்த்த படம். பீட்டர் செல்லர்ஸ் நடித்த 'Being There'. ஒரு வயதானவர் வீட்டில் தோட்டக்காரராக வேலை செய்யும் குறைந்த ஐக்யூ உள்ள ஒரு மனிதர். எழுதப் படிக்கத் தெரியாதவர். வீட்டைவிட்டு வெளியே எங்கேயும் போனதில்லை. ஆனால் நல்ல உடையணிந்து பார்க்க பெரிய மனிதரைப் போலத் தோன்றுவார். தோட்டவேலை செய்ததுபோக, அவரது ஒரே பொழுதுபோக்கு தொலைக்காட்சி பார்ப்பது. அந்தத் தொலைக்காட்சியின் ரிமோட்தான் அவரது உற்ற நண்பன். தொலைக்காட்சி வழியாக மட்டுமே அவர் கற்றதும் பெற்றதும்.

வயதானவர் செத்துப்போக, நடுத்தெருவுக்கு அனுப்பப்படும் சான்ஸ் கார்டெனர் வாழ்வின் என்னென்ன மாற்றங்கள் ஏற்படுகின்றன என்பதுதான் கதை.

கதை எதுவாக வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும். ஒரு மனிதன் தொலைக்காட்சிமூலமாக மட்டுமே உலகை உணரமுடியுமா, அறியமுடியுமா? தனது புறவுலகை தொலைக்காட்சியின் அசையும் படங்களாலும் ஒலிக்கும் குரல்களாலும் மட்டுமே கட்டமைக்கமுடியுமா? அப்படி நடந்தால் என்ன ஆகும்?

அற்புதமான கற்பனை.

ஆனால் அந்தத் தொலைக்காட்சியில் தூரதர்ஷன் மட்டும்தான் தெரியும் என்றால் என்ன நடக்கும் என்று நினைத்துப் பாருங்கள். பகீர் என்கிறது.

நல்லவேளையாக எந்தத் தொலைக்காட்சி சானலும் என் புறவுலகைத் தீர்மானிக்கவில்லை. 'டிவி பார்த்தா கெட்டுப்போயிடுவான்' என்று என் வாத்தியார் அப்பா, நான் 12-வது தாண்டும்வரை டிவியே வாங்கவில்லை. அதற்குப்பின் நான் என் பெற்றோர் வீட்டில் வசிக்கவுமில்லை.

அடுத்த நான்கு வருடங்கள் ஹாஸ்டலில் கழித்த தினங்களில் தூரதர்ஷனைப் பார்த்துள்ளேன். மொத்தமாக ஐந்து நிகழ்ச்சிகள் ஞாபகத்துக்கு வருகிறது. ஒவ்வொரு ஞாயிறு காலையும் வந்த ராமனந்த் சாகரின் ராமாயணம், வாராவாரம் புதன்கிழமை இரவு வரும் சித்ரஹார் - ஹிந்தி சினிமாப் படங்களின் ஒலியும் ஒளியும், வெள்ளிக்கிழமை தமிழ்ப் படங்களில் ஒலியும் ஒளியும், கடைசி இரண்டு வருடங்கள் பார்த்த என்.டி.டி.வியின் The World This Week-ம், அதில் பார்த்த ஈராக்-குவைத் போரும், தினம் பார்த்த தூரதர்ஷன் செய்திகளும்.

அதைத்தவிர என் நினைவில் இருப்பவை எல்லாம் 'தடங்கலுக்கு வருந்துகிறோம்', அதையே ஹிந்தி மொழியில் 'ருகாவட் கே லியே கேத் ஹை', ஙொய் என்ற சத்தத்துடன் பல வண்ண நெடுக்குப் பட்டைகளுடன் காட்சியளிக்கும் திரை, சமயோசிதமே இல்லாமல் மிக முக்கியமான கிரிக்கெட் மேட்சில், மிக முக்கியமான கட்டத்தில் இருக்கும்போது செய்திகளுக்குக் கட் செய்வது...

அய்யோ! அப்புறம் அந்த கிரிக்கெட் மேட்ச்களை என்னவென்று சொல்வது. ஹாஸ்டலில் கிரிக்கெட் மேட்ச் பார்ப்பது சுகமான அனுபவம். ஆனால் அதற்கு முன்னரே பள்ளிக்கூடச் சிறுவனாக இருக்கும்போதே எப்போதாவது தொலைக்காட்சியில் கிரிக்கெட் பார்த்துள்ளேன். நான் வசித்த நகரம் ராஜீவ் காந்தியால் அப்போது ஆசீர்வதிக்கப்படவில்லை. எனவே வானம் நிர்மலமாக இருக்கும் பொழுதுகளில்மட்டுமே தொலைக்காட்சியில் பலவித டிசைன்களுக்கு இடையில் வெள்ளையுடை வீரர்கள் ஓடுவதும் நடப்பதும் தெரியும். அதுவும்கூட சாஸ்வதம் கிடையாது. எப்போதுவேண்டுமானாலும் திரை புள்ளிகளாக மாறலாம். யார் எப்படி அவுட்டானார்கள் என்றெல்லாம் கண்டுபிடிப்பதற்கு தனி சாமர்த்தியம் வேண்டியிருக்கும். பின் கொடைக்கானலிலோ கும்பகோணத்திலோ ஒரு டிரான்ஸ்மிட்டர் வைக்கப்பட்டதால் படம் கொஞ்சம் தெளிவாகத் தெரிகிறது என்றார்கள். ஆனால் நான் கிறிஸ்டல் கிளியர் தொலைக்காட்சியை சென்னை வந்துதான் பார்த்தேன்.

தெருவோர சாயா கடையில் சிங்கிள் டீ அடிப்பவனை ஃபைவ் ஸ்டார் ஹோட்டலுக்கு அழைத்துக்கொண்டுபோய் டீ கொடுத்தால் எப்படியிருக்கும்? அங்கே பால், டீத்தூள் பொட்டலம், சர்க்கரை, சுகர் ஃப்ரீ என்று என்னென்னவோ வைத்திருப்பார்கள். இதை நாமே கலக்கி சாப்பிடுவதற்கு இவனுக்கு எதற்குப் பணம் என்று நாம் யோசிப்போம். எதையாவது தப்பாகச் செய்கிறோமோ என்று பயம் இருக்கும். நம்மை ஆங்காங்கே பயங்கர ஸ்டார்ச் போட்டு உடையணிந்த பேரர்கள் உளவு பார்ப்பதாகத் தோன்றும். கடைசியில் டீயே வேண்டாம் என்று ஓடிவிடுவோம்.

அதேபோல வெறும் தூரதர்ஷன் உலகத்திலிருந்து பல சானல்கள் இருக்கும் அமெரிக்க கேபிள் டிவி உலகத்துக்குச் சென்றது பயங்கர கல்ச்சர் ஷாக்காக இருந்தது. பொருள்களை விற்பதற்கு என்றே தனி சானல். சதா 24 மணி நேரமும் செய்திகளுக்கு என்று சில சானல்கள். அல்லேலுயா சானல்கள். ஒரே காதலனுக்காக 'நீ முண்டை, நான் முண்டை' என்று அசிங்க அசிங்கமாகத் திட்டிக்கொண்டே ஒருவர்மீது ஒருவர் பாய்ந்து அடித்துக்கொள்ளும் பெண்கள், ஆங்காங்கே பீப் பீப் என்று கெட்டவார்த்தைகளை சென்சார் செய்தவண்ணம் இருக்கும் ரியாலிட்டி தொலைக்காட்சி சானல்கள். (அந்தக் காதலன் ஒய்யாரமாக ஒருபக்கம் சாய்ந்தவாறு, விவஸ்தையே இல்லாமல் உட்கார்ந்திருப்பான்.) சினிமாப் படங்களுக்கு என்றே 24 மணிநேரமும் இயங்கும் சானல்கள்.

எல்லாம் இருந்தும் நான் அமெரிக்காவைவிட்டு மீண்டும் இந்தியா வரும்வரையில் கிரிக்கெட் மட்டும் அமெரிக்கத் தொலைக்காட்சியில் வாய்க்கவில்லை.

மீண்டும் இந்தியா வந்து பார்த்தால், தெருவோரக் கடையில் டீ ருசித்தது. ஆனால் தூரதர்ஷனைப் பார்க்கும்போதே குமட்டிக்கொண்டு வந்தது. சொஃபிஸ்டிகேஷன் என்றால் வீசை என்ன விலை என்று கேட்பார்கள். அழகுணர்ச்சி சிறிதும் இல்லாத, யோசனை துளிக்கூட இல்லாத, போரடிக்கும் சானல்கள். மற்றொரு பக்கம், போட்டிபோட்டுக்கொண்டு கிளம்பியிருந்த கேபிள் சானல்கள், படுபயங்கர வேகத்தில் முன்னேறினார்கள். தூரதர்ஷன் மட்டும் கடந்த காலத்திலேயே இருந்தது.

இத்தனைக்கும் அரசு நடத்தினால் அது மோசமாகத்தான் இருக்கவேண்டும் என்பதில்லை. அரசே நேரடியாக நடத்தாவிட்டாலும் பொதுமக்கள் காசில் நடக்கும் பிபிசியைப் பாருங்களேன்? பொறாமைப்பட வைக்கிறார்கள். அட, இப்போது சீன அரசு நடத்தும் ஆங்கில மொழிச் சானலான CCTV-9 எவ்வளவு ஒய்யாரமாக சீனாவை உலகுக்குக் காட்டுகிறது? இதே வேலையை நம் மானம் கப்பலேறிப் போகும் அளவுக்கு தூரதர்ஷனும் நிகழ்த்திக் காட்டிக்கொண்டுதானே இருக்கிறது தினம்தினம்?

தூரதர்ஷன் நாளைக்கே நிறுத்தப்பட்டால் நான் ஒரு சொட்டுக் கண்ணீர்கூட விடமாட்டேன். கடவுள் புண்ணியத்தில் நாளைக்கு தூரதர்ஷனை தனியார்வசம் ஒப்படைத்தால்தான் அதை இனி மனிதன் உட்கார்ந்து பார்க்கமுடியும்.

Tuesday, March 04, 2008

2008-09 இந்திய பட்ஜெட்

மைய அரசின் நிதிநிலை அறிக்கைமீது இப்போதெல்லாம் அதிக சுவாரசியம் இருப்பதில்லை.

என் பார்வையில் இரண்டு முக்கியமான அறிவிப்புகள் வந்துள்ளன. முதலாவது விஷயம், வருமான வரியில் ஏற்பட்டுள்ள மாற்றம். குறைந்தபட்சம் ரூ. 4,000-லிருந்து, கிட்டத்தட்ட ரூ. 50,000 வரை சேமிப்பு இருக்கும். (பெண்களுக்கு, சீனியர் குடிமகன்களுக்கு சற்றே மாறுபடும்.) இது நிச்சயமாக நல்ல செய்திதான். சந்தோஷம் தரக்கூடியதே.

இரண்டாவதாக விவசாயக் கடன் ரத்து. எந்தக் கடன் ரத்தும் எனக்கு ஏற்புடையது அல்ல.

அட, உன் வரியைக் குறைத்தால் சந்தோஷப்படும் நீ, அடுத்தவன் கடன் சுமையைக் குறைத்தால் அதை ஏற்பதில்லையே என்று நீங்கள் கேட்கலாம். நியாயமான கேள்விதான்.

இரண்டையும் நான் சமமாகக் கருதவில்லை.

வரிச்சலுகை வேறு, கடன் ரத்து வேறு.

ஒரு பக்கம், அரசு பொதுமக்களிடமிருந்து இதுவரை வரியாகப் பெற்ற பணத்தை சற்றே குறைத்துப் பெற்றுக்கொள்ள முடிவு செய்துள்ளது. ஏன் இப்படிச் செய்யவேண்டும்? அரசு எதிர்பார்த்ததைவிட இப்போது அதிகமான வருமான வரி சேகரமாகிறது.

முன்னெப்பொதும் இல்லாத அளவுக்கு கடந்த வருடம் அதிகமானபேர் வருமான வரி கட்டியுள்ளனர். நாட்டின் ஜிடிபியுடன் ஒப்பிட்டால் அதிக சதவிகிதம் வரி அரசுக்குச் சேர்கிறது. மக்கள் மனத்தில் வரி ஏய்க்கவேண்டும் என்ற எண்ணம் சற்றே குறைந்துள்ளது என்று இதிலிருந்து தெரிகிறது. இதனால் அரசு மக்களுக்கு கொஞ்சம் ரிபேட் கொடுத்துள்ளது.

இப்போதும்கூட பலர் வருமான வரியிலிருந்து தப்பித்துவிடுகிறார்கள். ஏமாற்றவேமுடியாதவர்கள் என்று பார்த்தால் அது மாதச் சம்பளக்காரர்கள்தான்! ஏன் ஏமாற்றமுடியாது? இவர்களது வரியை இவர்கள் வேலை பார்க்கும் நிறுவனமே சம்பளத்திலிருந்து பிடித்து முழுமையாகக் கட்டிவிடவேண்டும்.

நீங்கள் தொழில் செய்கிறீர்கள் என்றால், உங்களது வருமானத்திலிருந்து உங்கள் செலவுகளைக் கழித்துக்கொண்டு மீதமுள்ளதற்கு மட்டும் வரி கட்டலாம். ஆனால் நீங்கள் ஒரு அலுவலகத்தில் சம்பளத்துக்கு வேலை செய்கிறீர்கள் என்றால் இந்தச் செலவு, அந்தச் செலவு என்று கழித்துக்கொள்ளமுடியாது.

உதாரணத்துக்கு நீங்கள் ஒரு நிறுவனத்தில் ஊழியராக இல்லாது, ஒப்பந்தக்காரராக (contractor) பணிபுரிகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். உங்களது 'ஊதியத்தில்' 10.3% வரியாகப் பிடித்து கட்டிவிட்டு, மீதத்தை உங்களுக்குத் தந்துவிடுவார்கள். இந்த 10.3% என்பது TDS - Tax deducted at source. நீங்கள் உங்கள் வரியைச் செலுத்தும்போது, உங்களது செலவுகள் பலவற்றைக் கழித்துக்கொள்ளலாம். உதாரணமாக பெட்ரோல் செலவு, ஓட்டுனர் இருந்தால் அவரது சம்பளத்தில் ஒரு பகுதி அல்லது முழுப்பகுதி, உங்களது வேலையை/ஒப்பந்தத்தை நிறைவேற்ற உங்களுக்குத் தேவையாக இருக்கும் பொருள்களை வாங்கச் செலவழித்த தொகை ஆகியவற்றைக் கழித்துக்கொள்ளலாம். நீங்கள் வேறு சிலரை உங்களுக்குக்கீழ் வேலை செய்ய வைத்துக்கொண்டதாகக் காண்பித்து அவர்களுக்குக் கொடுக்கும் சம்பளத்தைச் செலவாகக் கழித்துக்கொள்ளலாம். இங்கு 'திருட்டுத்தனம்' செய்ய நிறைய வாய்ப்புகள் உள்ளன. செய்யப்படுகிறது.

நீங்கள் சேவைத் தொழிலில் ஈடுபட்டிருப்பவர் என்றால் (டாக்டர், வக்கீல், முடிவெட்டுபவர்...) இதேபோல உங்களது வருமானம், உங்களது செலவுகள் ஆகிய அனைத்தையும் கணக்கில் எடுத்துக்கொண்டு மிச்சம் இருக்கும் தொகையில் பல கழிவுகளைக் கணக்கில் எடுத்து, மீதத்துக்கு வரி கட்டுகிறீர்கள்.

ஆனால் மாதச் சம்பளக்காரர்களால் இதையெல்லாம் செய்யமுடியாது. அவரது மாதச் சம்பளத்தை முன்வைத்து அவரது ஆண்டு வருமானம் எவ்வளவு என்று கணக்கிட்டு அடிப்படைப் பிடித்தங்கள்போக (அதற்கு ரசீதுகளைக் காண்பித்தாகவேண்டும்) மீதத்துக்கு கறாராக வரியைக் கணக்கிட்டு, மாதாமாதம் அந்த வரி பிடிக்கப்பட்டு, அந்தந்த மாதமே அரசிடம் கட்டப்பட்டுவிடும்.

மாதச்சம்பளக்காரர் பகுதிநேரத் தொழில் ஒன்றைச் செய்து அதில் நஷ்டம் வந்தது என்றால் அந்த நஷ்டத்தைத் தனது மாதச் சம்பளத்தில் கழித்துவிட்டு வரி கட்டமுடியாது. ஆனால் டாக்டர் ஒருவர், தனது டாக்டர் தொழிலுடன் ஒரு பெட்டிக்கடையையும் வைத்திருப்பதைக் காண்பித்து (நிஜமாகவே அப்படி ஒன்று இருந்தால்) ஒன்றில் வரும் லாபத்தை மற்றொன்றில் வரும் நஷ்டத்துடன் இணைத்து மொத்தம் லாபமாக அல்லது நஷ்டமாக இருந்தால் அதற்கு ஏற்றாற்போல வரி கட்டலாம்.

நிறுவனங்கள் மாதச் சம்பளக்காரர்களுக்கு பல சலுகைகள் (allowance) கொடுத்துவந்தன. இதில் ஏதோ வரி ஏய்ப்பு நடக்கிறது என்று நினைத்து சிதம்பரம் fringe benefit tax (FBT) என்ற கொடூரமான வரியைக் கொண்டுவந்தார். கொஞ்சம் விஷயம் தெரிந்தவர்களிடம் கேட்டுப்பாருங்கள் - FBT என்பது நிறுவனங்களுக்கு திகிலை ஏற்படுத்தும் ஒரு விஷயம். இதனால் பல நிறுவனங்களும் FBT வலைக்குள் மாட்டிக்கொள்ளாமல் இருக்க, அலவன்ஸுகளை மொத்தமாக நிறுத்தினர். விளைவாக, கையில் கிடைக்கும் மொத்த வருமானத்துக்கும் மாதச் சம்பளக்காரர்கள் வருமான வரி கட்டவேண்டி இருந்தது. இப்போது மாதச் சம்பளக்காரர்களுக்கு கொஞ்சம் அதிகமான ரிலீஃப் கிடைத்துள்ளது. FBT இன்னமும் இருக்கிறது.

இந்தப் பிரச்னைகள் ஏதும் இன்றி, சுயதொழில் செய்வோர் தங்களது செலவுகளைக் கழித்து, வரிச்சுமையைக் குறைக்கமுடியும். அவர்களுக்கும் இந்த வரி மாறுதல்களால் அதிகமான லாபம்தான். ஆனால் நிஜமாகவே மகிழ்பவர்கள் மாதச் சம்பளக்காரர்களே.

***

ஆனால் கடன் விவகாரம் என்பது முற்றிலும் வேறு.

விவசாயிகள் பெறும் கடனை ரத்துசெய்யும்போது பல விஷயங்கள் கவனிக்கப்படுவதில்லை.

விளைச்சல் பிரச்னையால் பாதிக்கப்பட்ட விவசாயி யார், பாதிக்கப்படாதவர் யார் என்று தீர்மானிப்பது கிடையாது. ஒட்டுமொத்த கடன் ரத்து ஏற்படுகிறது. இரண்டு ஹெக்டேர் என்று நிலத்துக்கு ஒரு வரம்பு கொடுக்கப்படுகிறது. ஆனால் இந்தியா முழுமையிலும் 2 ஹெக்டேர் வைத்து விவசாயம் செய்த அனைவருக்கும் நஷ்டமே ஏற்பட்டுக்கொண்டிருக்கிறதா, என்ன? ஒருவருக்குக்கூடவா லாபம் ஏற்படுவதில்லை.

விவசாயம் என்பது ஒரு புனிதப்பசுவாகி விடுகிறது. விவசாய வருமானத்துக்கு வரி கட்டவேண்டியதில்லை. அவர்கள் உணவு தயாரிப்பதால் (அதில் பலரும் காட்டாமணக்குமுதல் மல்லிகைப்பூவரை எதை வேண்டுமானாலும் பயிரிடலாம்!) அவர்களுக்குச் சிறப்பிடம் உள்ளது என்பதை நாம் ஏற்றுக்கொள்ளும் அதே வேளையில், விவசாயத்தை வளரவிடாமல் இருப்பதற்கு என்னென்ன செய்யவேண்டுமோ அத்தனையையும் செய்துவிடுகிறோம். கடன் ரத்து என்பதே அத்தகைய ஒரு விஷயம்தான். அடுத்தமுறை எந்த வங்கியும் விவசாயக் கடன்களைக் கொடுக்காமல் அதற்குபதில் பணம் ஒழுங்காகத் திரும்பக் கிடைக்கும் மைக்ரோஃபைனான்ஸ் பக்கம் போய்விடுவார்கள்.

விதர்பாவில் விவசாயிகள் தற்கொலை என்றால் அதற்கான அடிப்படைக் காரணத்தை ஆராய்ந்து அதற்கான தீர்வை முன்வைப்பதில்லை. விதை, உரம், பூச்சிக்கொல்லி, தண்ணீர், சாகுபடிக்கான காப்பீடு, பொருள்களைப் பாதுகாத்து வைப்பதற்கான குளிர்சாதன வசதி, நல்ல கொள்முதல் விலை - இவற்றில் எங்கு பிரச்னை என்பதைக் கவனிப்பதில்லை நாம்.

இயற்கை விவசாயத்தை முன்வைக்கவேண்டுமா? கொள்முதல் விலையை வெகுவாக அதிகரிக்கவேண்டுமா? சாகுபடிக்குக் கட்டாயக் காப்பீடு எடுக்க விவசாயிகளை வற்புறுத்தவேண்டுமா? அல்லது காப்பீட்டுக்கான பிரீமியத்தை அரசே செலுத்தவேண்டுமா? தண்ணீர், மின்சாரம் ஆகியவற்றைக் குறைவான விலையில் (இலவசமாக அல்ல), வேண்டிய அளவு தர முயற்சிகள் எடுக்கவேண்டுமா?

இவற்றை விட்டுவிட்டு கடன்களை ரத்துசெய்வதால் என்ன விளைவு ஏற்படும்? வங்கிகள் அனைத்தும் பிரச்னையில் மாட்டும். அதுவும் அரசாங்க வங்கிகளும் கூட்டுறவு வங்கிகளும்தான் பிரச்னையில் மாட்டும். தனியார் வங்கிகள் இதில் ஈடுபடுவதே இல்லை. கொடுத்த கடன் திரும்பி வராமலே போகலாம் என்பதால்தான் தனியார் வங்கிகள் விவசாயம் பக்கமே போக பயப்படுகிறார்கள்.

***

வரி விகிதத்தில் உள்ள மாற்றம் ஏப்ரல் மாதம் முதலே மாதச் சம்பளக்காரர்களைத் தொட்டுவிடும். அவர்கள் மாதம் வீட்டுக்கு எடுத்துக்கொண்டுபோகும் தொகை அதிகரிக்கும். விவசாயக் கடன் ரத்து பற்றி சிதம்பரம் அறிவித்துவிட்டாரேதவிர இன்னமும் எப்படி இதனைச் செயல்படுத்துவது என்று யோசித்து முடிக்கவில்லையாம். எனவே நடைமுறைக்குவர நாளாகும். அதற்குள் பாரத ஸ்டேட் வங்கி, கனரா வங்கி போன்ற அரசு வங்கித் தலைமையில் உள்ளவர்களுக்கு வயிற்றைக் கலக்கும்.

கருணாநிதி/அன்பழகன் செய்ததுபோல, சிதம்பரமும் வங்கிகளுக்குக் கடன் பத்திரங்களைக் கொடுத்து நழுவிக் கொள்ளலாம். வங்கிகளின் பேலன்ஸ் ஷீட் உதை வாங்கும். அவர்களது லாபம் குறையும். கேஷ் ஃப்ளோவிலும் பிரச்னை வரும்.

இல்லாவிட்டால் சிதம்பரம் இன்னொன்றைச் செய்யலாம். வருமான வரி கட்டும் அனைவரும் 3% சிறப்புக் கல்வி வரி (educational cess) என்பதை சேர்த்துக் கட்டுகிறோம். இதுவே சிதம்பரம் உருவாக்கிய பஜனை வரி. நேரடி வரி வருமானத்திலிருந்து கல்விக்கு அதிகமாகச் செலவு செய்யாமல் அங்கும் இங்கும் திரட்டி கல்விக்குச் செலவழிப்பதாகப் போக்கு காண்பிக்கிறார். 2% என்று ஆரம்பித்து இப்பொது 3% ஆக்கியுள்ளார். அதேபோல விவசாயச் சிறப்பு வரி (agricultural cess) என்று மேலும் ஒரு 2%-3% சேர்க்கலாம். அதில் வரும் பணத்தைக்கொண்டு கடன் ரத்துக்கு பதிலாக விவசாயிகளுக்கு மான்யமாகக் கொடுக்கலாம்.

***

இந்த இரண்டு மாயாபஜார் வேலைகளைக் கொண்டு வாக்குகளை வாங்கிவிடுமா காங்கிரஸ் என்பதில் எனக்கு நம்பிக்கையில்லை.

Monday, March 03, 2008

மாலனின் தினமணிக் கட்டுரை - எதிர்வினை

இன்று (3 மார்ச் 2008) தினமணி நடுப்பக்கக் கருத்துப்பத்தியில் மாலன் 'தடுமாறுகிறார் முதல்வர், ஏன்?' என்ற தலைப்பில் எழுதியிருப்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

1. திருமாவளவன் 'கருத்துரிமை மீட்பு மாநாடு' நடத்தியதனால் அவர் கைதுசெய்யப்படவேண்டுமா என்ற கேள்விக்கு மாலன் இவ்வாறு எழுதுகிறார்:
திருமாவளவன் விடுதலைப் புலிகள் என்ற பயங்கரவாத இயக்கத்தின் செயல்களை ஊக்குவிக்கும் நோக்கமில்லாமல் (அதாவது 'தெரியாமல்') அவர்களுக்கு ஆதரவாகப் பேசினாரா? கருத்துரிமை மீட்பு மாநாட்டை ஒட்டி அவர் வெளியிட்ட வேறு சில கருத்துகளின் வெளிச்சத்தில் பார்த்தால் அவர் ‘தெரியாமல்' செய்துவிட்டதாக எண்ண இயலவில்லை. "விடுதலைப் புலிகளுக்காக ஆயுதம் கடத்துவேன், பெருமையாக'' என்று அவர் ஒரு வார இதழுக்கு அந்த மாநாடு முடிந்த கையோடு பேட்டி அளிக்கிறார். ஆயுதம் கடத்துவது என்ற சட்டத்திற்குப் புறம்பான செயலைச் செய்யும் மனநிலை, குற்றம் செய்வதற்கான மனநிலையைக் காட்டவில்லையா? ஆயுதம் கடத்தும் அந்தச் செயல், பயங்கரவாத இயக்கத்தின் செயல்களை ஊக்குவிக்குமா, ஊக்குவிக்காதா?
இந்தக் கருத்தை ஏற்றுக்கொள்ளமுடியாது. கருத்துரிமை மீட்பு மாநாட்டில் பேசப்பட்ட விஷயத்தை மட்டுமே வைத்துக்கொண்டு அந்த மாநாட்டின் அடிப்படையில் ஒருவரைக் கைது செய்யவேண்டுமா, கூடாதா என்று பார்க்கவேண்டும். மற்றபடி, 'புலிகளுக்காக ஆயுதம் கடத்துவேன்' என்று திருமாவளவன் சொல்லியிருந்தால், அவர்மீது நிச்சயமாக நடவடிக்கை எடுக்கவேண்டும். இது புலிகளுக்காக என்பதனால் அல்ல, ஆயுதம் கடத்துதல் என்ற இந்தியச் சட்டங்களுக்குப் புறம்பான ஒரு விஷயத்தை முன்வைத்ததனால். அதுவும்கூட இதைப்போன்ற ஒரு விருப்பத்தைத் தெரிவித்ததனால் கடுமையான தண்டனைக்கு ஒருவரையும் உள்ளாக்கமுடியாது. ஆனால் திருமாவளவனது நண்பர்கள் அவரிடம் இதுபோன்று தேவையற்று வாயைக் கொடுத்து உளறி, உங்களது செயலை, விடுதலைப் புலிகளுக்கான தார்மீக ஆதரவை நீர்த்துப்போகச் செய்யாதீர்கள் என்று அறிவுரை சொல்லவேண்டும்.

2. தமிழ்ச்செல்வன் கொலை விவகாரம் பற்றி மாலன் இவ்வாறு எழுதுகிறார்:
தமிழ்ச்செல்வன், இந்திய ராணுவத்தை எதிர்த்துப் போரிட்டவர். இந்திய அமைதிப்படையில் இருந்த பலர், போர்க்களத்தில் பலியாகக் காரணமானவர். இந்திய ராணுவம் என்பது இந்திய அரசின் ஓர் அங்கம். அயல் மண்ணில் இந்திய நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஓர் அமைப்பு. அதை எதிரியாகக் கருதி வீழ்த்த முற்பட்ட ஒருவருக்கு, கருணாநிதி அஞ்சலி செலுத்துகிறார் என்பதுதான் புருவங்களை உயரச் செய்கிறது.
இது கடுமையான வலதுசாரிக் கருத்து. இதனை எந்த லிபரல் சிந்தனை உள்ளவரும் ஏற்றுக்கொள்ளமாட்டார். பாகிஸ்தானின் தற்போதைய அதிபர் (ஓய்வுபெற்ற) ஜெனரல் பர்வீஸ் முஷரஃப் பாகிஸ்தான் ராணுவத்தில் பலகாலம் பணிபுரிந்து, பல இந்திய ராணுவ வீரர்களைக் கொன்றவர். கடைசியாக கார்கில் யுத்தத்தின்போது பல இந்திய ராணுவ வீரர்களின் சாவுக்குக் காரணமாக இருந்தவர். ஆனால் அவர் பாகிஸ்தானின் அதிபராக (இத்தனைக்கும் மக்களால் நியாயமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கூடக் கிடையாது) இந்தியா வருகிறார். இந்தியாவின் டிப்ளோமேட்டிக் மரியாதை அத்தனையையும் வாங்கிக்கொள்கிறார். கட்டியணைத்து அவரை வரவேற்கிறார்கள் இந்தியாவின் தேசபக்தியைக் கட்டிக் காக்கப் பிறந்துள்ளதாகத் தங்களைக் கருதிக்கொள்ளும் பாரதீய ஜனதா கட்சியின் வாஜபேயி, அத்வானி ஆகியோர்.

தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டபோது அவர் போர் உடையில் இல்லை. போர் புரியவும் இல்லை. முன்னர் ஒருகாலத்தில் அவர் போர் புரிந்திருக்கலாம். போர் வீரர்களுக்கு தனிப்பட்ட விரோதம் கிடையாது. இறையாண்மை உள்ள நாடுகள் அல்லது பிரிவினைக்குப் போராடும் தலைமை அமைப்புகள் சொல்வதை அந்தந்தப் படைவீரர்கள் செய்கின்றனர். தமிழ்ச்செல்வன் கொலைக்கு ஏன் பரந்துபட்ட அனுதாபம் எழுந்தது? தமிழ்ச்செல்வன் அப்பொது அங்கீகரிக்கப்பட்ட அமைதிப்பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது போர்நிறுத்த ஒப்பந்தம் இலங்கையில் அமுலில் இருந்தது. (இருபக்கமும் அதைத் தினம் தினம் மீறிக்கொண்டிருந்தனர் என்பது வேறு விஷயம்.) நார்வே தலைமையிலான அமைதிக்கான குழு தமிழ்ச்செல்வனை விடுதலைப்புலிகளின் சிவிலியன் அதிகாரி என்ற முறையிலேயே சந்தித்துப் பேசிவந்தனர். அந்த நிலையில் தமிழ்ச்செல்வன்மீது குண்டுவீசிக் கொன்றது எந்தவித யுத்த தர்மத்துக்கும் முரணானது என்பதை மனித நேயமுள்ள அனைவரும் ஒப்புக்கொள்வர்.

இந்த அடிப்படைப் புரிதல் இல்லாவிட்டால் போராடும் அமைப்புகள் எதனோடும் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தமுடியாது. அமைதிப் பேச்சுவார்த்தை நடத்துகிறேன் என்றுகூறி கூடிப்பேச அழைத்து, அங்கே வந்தவரைச் சுட்டுக்கொன்றுவிட்டு, முன் ஒருநாள் நீயும் போரில் என் நாட்டவரைக் கொன்றாயே என்று குற்றம் சுமத்துவது போலத்தான் இது உள்ளது. மேலும் மாலன் இவ்வாறு சொல்கிறார்:
தமிழ்ச்செல்வனின் மரணம் மகாத்மா காந்தியினுடையதைப் போன்றோ, மார்டின் லூதர் கிங்கினுடையதைப் போன்றோ நேர்ந்த அரசியல் படுகொலை அல்ல. அவர் போரில் மரணம் அடைந்தவர். போர் என்ற வாழ்க்கை முறையில் மரணம் என்பது அன்றாட நிகழ்வு.
இது சரியான விவாதம் அல்ல. காந்தியும் கிங்கும் முழுக்க முழுக்க அமைதிப் பணியில் ஈடுபட்டிருந்தனர். தமிழ்ச்செல்வனை அவர்களோடு ஒப்பிட முடியாது. யாரோடு ஒப்பிடலாம்? ஃபிடல் காஸ்ட்ரோ? யாசிர் அரஃபாத்? மாவோ? இவர்கள் அனைவருமே துப்பாக்கி ஏந்திச் சண்டை போட்டவர்கள். பிறரை சண்டையில் கொன்றவர்கள். இதில் காஸ்ட்ரோவும் மாவோவும் பின்னர் ஆட்சியைக் கைப்பற்றி நாட்டை ஆண்டவர்கள். ஆனால் அரஃபாத் கடைசிவரை நாடு கிடைக்காமல், தன் மக்களுக்கு முழுமையான வழியைக் காட்டாமல் முதுமை, உடல்நலக் குறைவு காரணமாக உயிரை விட்டார். தமிழ்ச்செல்வன், துப்பாக்கி ஏந்தி சண்டை போட்டவர்தான். ஆனால் அவர் கொலைசெய்யப்பட்டபோது அவர் அங்கீகரிக்கப்பட்ட ஓர் அமைதிப்பணியைத்தான் செய்துவந்தார் என்பதை ஏன் நம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை? அதாவது இன்றைய பி.எல்.ஓவின் அப்பாஸ்போல. பொட்டு அம்மான்மீதோ பிரபாகரன்மீதோ குண்டுவீசித் தாக்கியிருந்தால் அது வேறு விஷயம். ஆனால் தமிழ்ச்செல்வன்மீதான் தாக்குதல் நிச்சயம் உலக நாடுகளால் கடுமையாகக் கண்டிக்கப்படவேண்டிய விஷயம்.

3. தமிழக முதல்வர் கருணாநிதி தடுமாறுகிறாரா என்பதைப் பற்றி மாலன் கட்டுரை முழுக்க ஆராய்கிறார். மொத்தத்தில் மாலனின் வாதம் இதுதான்:
விடுதலைப் புலிகளை அவர் [கருணாநிதி] ஆதரிக்காமல் இருக்கலாம். ஆனால் அவர் அந்த இயக்கத்தை எதிர்க்கவில்லை.

...

கருணாநிதியோ தி.மு.க.வோ, விடுதலைப் புலிகள் விஷயத்தில் தங்கள் நிலை என்ன என பகிரங்கமாக அறிவிக்க முன்வருவார்களா?
ஆக, விஷயம் இதுதான். கருணாநிதியும் திமுகவும் மிகவும் டெலிகேட்டான ஒரு சூழ்நிலையில் உள்ளனர். உணர்வுரீதியாக விடுதலைப் புலிகளது போராட்டத்துக்கு ஆதரவு அளிக்கிறார்கள். ஆனால் அரசியல்ரீதியாக அதனை வெளிப்படையாகச் சொல்லமுடியாத சூழ்நிலையில் உள்ளனர். கூட்டணிக் கட்சியான காங்கிரஸுக்கு வருத்தம் கொடுக்கும் எதையும் திமுகவால் இப்போது செய்யமுடியாது. இந்த தர்மசங்கடமான நிலையில் கருணாநிதி தனது நிலையை விளக்கியாகவேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவராக ஜெயலலிதாவோ, பத்திரிகையாளராக மாலனோ கேட்பது நியாயம்தான்.

முதல்வர் கருணாநிதியும் திமுகவும், இதற்கான பதிலை விரைவில் சொல்லிவிடுவது நல்லது.

கருத்துரிமை மீட்பு மாநாடு பற்றி நான் எழுதியது: திருமாவளவனுக்கு ஆதரவாக

கிரிக்கெட்: இந்தியா - ஆஸ்திரேலியா விவகாரங்கள்

இப்போது நடக்கும் இந்தியா - ஆஸ்திரேலியா கிரிக்கெட் ஆட்டங்களின்போது ஏற்பட்டுவரும் விவாதங்கள், பிரச்னைகள் அனைத்துமே ஓரளவுக்குப் புரிந்துகொள்ளக்கூடியதாக உள்ளது.

இந்தியா-பாகிஸ்தான் ஆட்டங்களுக்கு இடையே இதற்குமுன் இருந்த மின் அதிர்வுகள் இப்போது இல்லை. அதேபோல இங்கிலாந்து - ஆஸ்திரேலியா ஆட்டங்களிலும் இப்போது கடும் போட்டி இருப்பதில்லை. இடையில் சில காலம் மட்டுமே இருந்த ஆஸ்திரேலியா - நியூசிலாந்து ஆட்டங்களின் சுவாரசியமும் இப்போது இல்லை.

ஆனால் இப்போது இந்தியா - ஆஸ்திரேலியா ஆட்டங்களில் மட்டுமே கடுமையான போட்டி நிலவுகிறது. தங்களை சாம்பியன் என்று கருதிவரும் ஆஸ்திரேலிய மீடியா, விசிறிகள், விளையாட்டு வீரர்கள் அனைவருமே இதனை எதிர்பார்க்காததால் தங்களது கோபத்தை எதிரணியின்மீது திருப்புகிறார்கள். இந்திய அணி வீரர்களுக்கு சொஃபிஸ்டிகேஷன் பத்தாது. ஆனால் போட்டி மனப்பான்மை (காம்பெடிடிவ் ஸ்பிரிட்) ஜாஸ்தி. கங்குலி காலத்திலிருந்து தொடர்வது இது.

அதன் விளைவாகவே இன்று நாம் பார்க்கும் பிரச்னைகள், விவாதங்கள் அனைத்துமே வருகின்றன.

நேற்று நடந்த போட்டியில் இந்தியா அபாரமாக விளையாடியது. அதனை அடுத்து, ஹர்பஜன் சிங்மீது மற்றுமொரு குற்றச்சாட்டு. ஏற்கெனவே ஹர்பஜன் சிங், இஷாந்த் ஷர்மா ஆகியோர்மீது ஆட்ட நடுவர் தண்டனை விதித்துள்ளார். இதில் ஹர்பஜன்மீது இனவெறி என்ற குற்றச்சாட்டு அபத்தமானது. ஆஸ்திரேலிய வீரர்கள் - ஹெய்டன், கிளார்க், பாண்டிங், சிமான்ஸ் ஆகியோர் இந்திய வீரர்களிடம் மோசமாக நடந்துகொண்டுள்ளனர். வாய்க்கு வந்தபடி பேசியுள்ளனர். இந்தத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இவற்றை இனவெறி என்ற கட்டத்துக்குள் இந்தியா அடைக்கவில்லை. ஆஸ்திரேலிய மீடியா இந்த அபத்தத்துக்குள் மாட்டிக்கொள்ளக்கூடாது.

ஆஸ்திரேலிய அணியில் ஒரேயொரு கறுப்பினத்தவர் விளையாடுகிறார். அவரும் இங்கிலாந்தில் வளர்ந்தவர். ஆஸ்திரேலியப் பழங்குடியினர் சமூகத்தவர், பிற நாடுகளிலிருந்து வந்து ஆஸ்திரேலியக் குடியுரிமை பெற்றவர் என்று ஒருவர்கூட சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியதில்லை. சில வருடங்களுக்குமுன் ரிச்சர்ட் சீ-க்வீ என்ற சீன (ஹாங் காங்?) வம்சாவளியினர் ஃபர்ஸ்ட் கிளாஸ் ஆட்டங்களில் விளையாடியுள்ளார். அவ்வளவுதான். இதுதான் ஆஸ்திரேலியாவின் சமதர்ம, சமத்துவ, இன அமைதிக் கொள்கை.

அதைப்பற்றியெல்லாம் கேள்வி கேட்காத ஆஸ்திரேலிய மீடியா, கிடைத்த ஒரே வாய்ப்பை விட்டுவிடக்கூடாது என்று சிமான்ஸுக்கு ஆதரவாக களத்தில் குதித்துள்ளது. கறுப்போ/வெள்ளையோ, சிமான்ஸ், சர்வதேச கிரிக்கெட் ஆட்டத்தில் சதா வாயால் பேசி எதிரணி வீரர்களைத் தாக்கும் ஒரு பேர்வழி. ஹெய்டன், நேற்றைக்கு விளையாட வந்துள்ள மைக்கேல் கிளார்க், அணித்தலைவர் பாண்டிங் என்று ஒருவர்கூட 'வாய்வார்த்தை' விஷயத்தில் நேர்மையான ஆட்டக்காரரில்லை. இதில் இவர்கள் அடுத்த அணி ஆட்டக்காரர்களைப் பற்றிக் குறைசொல்வது மகா அபத்தம்.

***

இந்தியா அடுத்த ஆட்டத்திலும் வெற்றிபெற்று, காமன்வெல்த் கோப்பையைக் கைப்பற்றுவதுதான் ஆஸ்திரேலிய மீடியாவுக்குக் கொடுக்கும் சரியான பதிலடியாக இருக்கும்.