Monday, March 03, 2008

மாலனின் தினமணிக் கட்டுரை - எதிர்வினை

இன்று (3 மார்ச் 2008) தினமணி நடுப்பக்கக் கருத்துப்பத்தியில் மாலன் 'தடுமாறுகிறார் முதல்வர், ஏன்?' என்ற தலைப்பில் எழுதியிருப்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

1. திருமாவளவன் 'கருத்துரிமை மீட்பு மாநாடு' நடத்தியதனால் அவர் கைதுசெய்யப்படவேண்டுமா என்ற கேள்விக்கு மாலன் இவ்வாறு எழுதுகிறார்:
திருமாவளவன் விடுதலைப் புலிகள் என்ற பயங்கரவாத இயக்கத்தின் செயல்களை ஊக்குவிக்கும் நோக்கமில்லாமல் (அதாவது 'தெரியாமல்') அவர்களுக்கு ஆதரவாகப் பேசினாரா? கருத்துரிமை மீட்பு மாநாட்டை ஒட்டி அவர் வெளியிட்ட வேறு சில கருத்துகளின் வெளிச்சத்தில் பார்த்தால் அவர் ‘தெரியாமல்' செய்துவிட்டதாக எண்ண இயலவில்லை. "விடுதலைப் புலிகளுக்காக ஆயுதம் கடத்துவேன், பெருமையாக'' என்று அவர் ஒரு வார இதழுக்கு அந்த மாநாடு முடிந்த கையோடு பேட்டி அளிக்கிறார். ஆயுதம் கடத்துவது என்ற சட்டத்திற்குப் புறம்பான செயலைச் செய்யும் மனநிலை, குற்றம் செய்வதற்கான மனநிலையைக் காட்டவில்லையா? ஆயுதம் கடத்தும் அந்தச் செயல், பயங்கரவாத இயக்கத்தின் செயல்களை ஊக்குவிக்குமா, ஊக்குவிக்காதா?
இந்தக் கருத்தை ஏற்றுக்கொள்ளமுடியாது. கருத்துரிமை மீட்பு மாநாட்டில் பேசப்பட்ட விஷயத்தை மட்டுமே வைத்துக்கொண்டு அந்த மாநாட்டின் அடிப்படையில் ஒருவரைக் கைது செய்யவேண்டுமா, கூடாதா என்று பார்க்கவேண்டும். மற்றபடி, 'புலிகளுக்காக ஆயுதம் கடத்துவேன்' என்று திருமாவளவன் சொல்லியிருந்தால், அவர்மீது நிச்சயமாக நடவடிக்கை எடுக்கவேண்டும். இது புலிகளுக்காக என்பதனால் அல்ல, ஆயுதம் கடத்துதல் என்ற இந்தியச் சட்டங்களுக்குப் புறம்பான ஒரு விஷயத்தை முன்வைத்ததனால். அதுவும்கூட இதைப்போன்ற ஒரு விருப்பத்தைத் தெரிவித்ததனால் கடுமையான தண்டனைக்கு ஒருவரையும் உள்ளாக்கமுடியாது. ஆனால் திருமாவளவனது நண்பர்கள் அவரிடம் இதுபோன்று தேவையற்று வாயைக் கொடுத்து உளறி, உங்களது செயலை, விடுதலைப் புலிகளுக்கான தார்மீக ஆதரவை நீர்த்துப்போகச் செய்யாதீர்கள் என்று அறிவுரை சொல்லவேண்டும்.

2. தமிழ்ச்செல்வன் கொலை விவகாரம் பற்றி மாலன் இவ்வாறு எழுதுகிறார்:
தமிழ்ச்செல்வன், இந்திய ராணுவத்தை எதிர்த்துப் போரிட்டவர். இந்திய அமைதிப்படையில் இருந்த பலர், போர்க்களத்தில் பலியாகக் காரணமானவர். இந்திய ராணுவம் என்பது இந்திய அரசின் ஓர் அங்கம். அயல் மண்ணில் இந்திய நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஓர் அமைப்பு. அதை எதிரியாகக் கருதி வீழ்த்த முற்பட்ட ஒருவருக்கு, கருணாநிதி அஞ்சலி செலுத்துகிறார் என்பதுதான் புருவங்களை உயரச் செய்கிறது.
இது கடுமையான வலதுசாரிக் கருத்து. இதனை எந்த லிபரல் சிந்தனை உள்ளவரும் ஏற்றுக்கொள்ளமாட்டார். பாகிஸ்தானின் தற்போதைய அதிபர் (ஓய்வுபெற்ற) ஜெனரல் பர்வீஸ் முஷரஃப் பாகிஸ்தான் ராணுவத்தில் பலகாலம் பணிபுரிந்து, பல இந்திய ராணுவ வீரர்களைக் கொன்றவர். கடைசியாக கார்கில் யுத்தத்தின்போது பல இந்திய ராணுவ வீரர்களின் சாவுக்குக் காரணமாக இருந்தவர். ஆனால் அவர் பாகிஸ்தானின் அதிபராக (இத்தனைக்கும் மக்களால் நியாயமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கூடக் கிடையாது) இந்தியா வருகிறார். இந்தியாவின் டிப்ளோமேட்டிக் மரியாதை அத்தனையையும் வாங்கிக்கொள்கிறார். கட்டியணைத்து அவரை வரவேற்கிறார்கள் இந்தியாவின் தேசபக்தியைக் கட்டிக் காக்கப் பிறந்துள்ளதாகத் தங்களைக் கருதிக்கொள்ளும் பாரதீய ஜனதா கட்சியின் வாஜபேயி, அத்வானி ஆகியோர்.

தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டபோது அவர் போர் உடையில் இல்லை. போர் புரியவும் இல்லை. முன்னர் ஒருகாலத்தில் அவர் போர் புரிந்திருக்கலாம். போர் வீரர்களுக்கு தனிப்பட்ட விரோதம் கிடையாது. இறையாண்மை உள்ள நாடுகள் அல்லது பிரிவினைக்குப் போராடும் தலைமை அமைப்புகள் சொல்வதை அந்தந்தப் படைவீரர்கள் செய்கின்றனர். தமிழ்ச்செல்வன் கொலைக்கு ஏன் பரந்துபட்ட அனுதாபம் எழுந்தது? தமிழ்ச்செல்வன் அப்பொது அங்கீகரிக்கப்பட்ட அமைதிப்பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது போர்நிறுத்த ஒப்பந்தம் இலங்கையில் அமுலில் இருந்தது. (இருபக்கமும் அதைத் தினம் தினம் மீறிக்கொண்டிருந்தனர் என்பது வேறு விஷயம்.) நார்வே தலைமையிலான அமைதிக்கான குழு தமிழ்ச்செல்வனை விடுதலைப்புலிகளின் சிவிலியன் அதிகாரி என்ற முறையிலேயே சந்தித்துப் பேசிவந்தனர். அந்த நிலையில் தமிழ்ச்செல்வன்மீது குண்டுவீசிக் கொன்றது எந்தவித யுத்த தர்மத்துக்கும் முரணானது என்பதை மனித நேயமுள்ள அனைவரும் ஒப்புக்கொள்வர்.

இந்த அடிப்படைப் புரிதல் இல்லாவிட்டால் போராடும் அமைப்புகள் எதனோடும் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தமுடியாது. அமைதிப் பேச்சுவார்த்தை நடத்துகிறேன் என்றுகூறி கூடிப்பேச அழைத்து, அங்கே வந்தவரைச் சுட்டுக்கொன்றுவிட்டு, முன் ஒருநாள் நீயும் போரில் என் நாட்டவரைக் கொன்றாயே என்று குற்றம் சுமத்துவது போலத்தான் இது உள்ளது. மேலும் மாலன் இவ்வாறு சொல்கிறார்:
தமிழ்ச்செல்வனின் மரணம் மகாத்மா காந்தியினுடையதைப் போன்றோ, மார்டின் லூதர் கிங்கினுடையதைப் போன்றோ நேர்ந்த அரசியல் படுகொலை அல்ல. அவர் போரில் மரணம் அடைந்தவர். போர் என்ற வாழ்க்கை முறையில் மரணம் என்பது அன்றாட நிகழ்வு.
இது சரியான விவாதம் அல்ல. காந்தியும் கிங்கும் முழுக்க முழுக்க அமைதிப் பணியில் ஈடுபட்டிருந்தனர். தமிழ்ச்செல்வனை அவர்களோடு ஒப்பிட முடியாது. யாரோடு ஒப்பிடலாம்? ஃபிடல் காஸ்ட்ரோ? யாசிர் அரஃபாத்? மாவோ? இவர்கள் அனைவருமே துப்பாக்கி ஏந்திச் சண்டை போட்டவர்கள். பிறரை சண்டையில் கொன்றவர்கள். இதில் காஸ்ட்ரோவும் மாவோவும் பின்னர் ஆட்சியைக் கைப்பற்றி நாட்டை ஆண்டவர்கள். ஆனால் அரஃபாத் கடைசிவரை நாடு கிடைக்காமல், தன் மக்களுக்கு முழுமையான வழியைக் காட்டாமல் முதுமை, உடல்நலக் குறைவு காரணமாக உயிரை விட்டார். தமிழ்ச்செல்வன், துப்பாக்கி ஏந்தி சண்டை போட்டவர்தான். ஆனால் அவர் கொலைசெய்யப்பட்டபோது அவர் அங்கீகரிக்கப்பட்ட ஓர் அமைதிப்பணியைத்தான் செய்துவந்தார் என்பதை ஏன் நம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை? அதாவது இன்றைய பி.எல்.ஓவின் அப்பாஸ்போல. பொட்டு அம்மான்மீதோ பிரபாகரன்மீதோ குண்டுவீசித் தாக்கியிருந்தால் அது வேறு விஷயம். ஆனால் தமிழ்ச்செல்வன்மீதான் தாக்குதல் நிச்சயம் உலக நாடுகளால் கடுமையாகக் கண்டிக்கப்படவேண்டிய விஷயம்.

3. தமிழக முதல்வர் கருணாநிதி தடுமாறுகிறாரா என்பதைப் பற்றி மாலன் கட்டுரை முழுக்க ஆராய்கிறார். மொத்தத்தில் மாலனின் வாதம் இதுதான்:
விடுதலைப் புலிகளை அவர் [கருணாநிதி] ஆதரிக்காமல் இருக்கலாம். ஆனால் அவர் அந்த இயக்கத்தை எதிர்க்கவில்லை.

...

கருணாநிதியோ தி.மு.க.வோ, விடுதலைப் புலிகள் விஷயத்தில் தங்கள் நிலை என்ன என பகிரங்கமாக அறிவிக்க முன்வருவார்களா?
ஆக, விஷயம் இதுதான். கருணாநிதியும் திமுகவும் மிகவும் டெலிகேட்டான ஒரு சூழ்நிலையில் உள்ளனர். உணர்வுரீதியாக விடுதலைப் புலிகளது போராட்டத்துக்கு ஆதரவு அளிக்கிறார்கள். ஆனால் அரசியல்ரீதியாக அதனை வெளிப்படையாகச் சொல்லமுடியாத சூழ்நிலையில் உள்ளனர். கூட்டணிக் கட்சியான காங்கிரஸுக்கு வருத்தம் கொடுக்கும் எதையும் திமுகவால் இப்போது செய்யமுடியாது. இந்த தர்மசங்கடமான நிலையில் கருணாநிதி தனது நிலையை விளக்கியாகவேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவராக ஜெயலலிதாவோ, பத்திரிகையாளராக மாலனோ கேட்பது நியாயம்தான்.

முதல்வர் கருணாநிதியும் திமுகவும், இதற்கான பதிலை விரைவில் சொல்லிவிடுவது நல்லது.

கருத்துரிமை மீட்பு மாநாடு பற்றி நான் எழுதியது: திருமாவளவனுக்கு ஆதரவாக

13 comments:

 1. 1.
  திருமாவளவன் சாதாரண ஆள் கிடையாது, பல பேர் உறுப்பினராக உள்ள ஒரு கட்சியின் தலைவர். அவர் இப்படி பேசினால், 'ஓகோ ஆயுதம் கடத்துவது பெருமைக்குரிய விஷயம் போலும்' என்று யாராவது எண்ணி அப்படி செய்ய துணிந்துவிட்டால்?
  இதற்க்காகவே அவரிடம் அரசே எச்சரிக்கை விட வேண்டும்.

  2.
  //தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டபோது அவர் போர் உடையில் இல்லை. போர் புரியவும் இல்லை. முன்னர் ஒருகாலத்தில் அவர் போர் புரிந்திருக்கலாம். போர் வீரர்களுக்கு தனிப்பட்ட விரோதம் கிடையாது. //

  லட்சுமன் கதிர்காமரும் போர் உடையில் இல்லை, போர் புரியவில்லை அவரும் சிவிலியன் பிரதிநிதி தான், அமைதி பேச்சில் அவரும் இருந்தார். பிறகு ஏன் கொல்லப்பட்டார்?

  //இந்த அடிப்படைப் புரிதல் இல்லாவிட்டால் போராடும் அமைப்புகள் எதனோடும் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தமுடியாது. அமைதிப் பேச்சுவார்த்தை நடத்துகிறேன் என்றுகூறி கூடிப்பேச அழைத்து, அங்கே வந்தவரைச் சுட்டுக்கொன்றுவிட்டு, முன் ஒருநாள் நீயும் போரில் என் நாட்டவரைக் கொன்றாயே என்று குற்றம் சுமத்துவது போலத்தான் இது உள்ளது. //

  Ditto

  ReplyDelete
 2. "முதல்வர் கருணாநிதியும் திமுகவும், இதற்கான பதிலை விரைவில் சொல்லிவிடுவது நல்லது.
  "

  1991ல் நடந்ததை கருணாநிதி மறந்திருக்கமாட்டார்.ஆனால்
  திருமா போன்றவர்களுக்கு
  எதைப் பேசக்கூடாது என்பது
  தெரியவில்லை.அதற்கான
  விலையை கருணாநிதி
  கொடுக்க வேண்டி வரலாம்
  என்பதை அவர்கள் உணரவில்லை.
  தன் வாயால் கெடும் நுணல்களை
  யார் காப்பாற்ற முடியும்.

  ReplyDelete
 3. //அதற்கான விலையை கருணாநிதி கொடுக்க வேண்டி வரலாம் என்பதை அவர்கள் உணரவில்லை.//

  அந்த விலை என்ன? ஆட்சிக்கலைப்பா?
  அதனால் தமிழனுக்கு என்ன இழப்பு? கருனாநிதி குடும்பத்தின் நலனுக்காக தமிழன் தனது இன உணர்வுகளை வெளிப்படுத்தக் கூடாதா?

  ReplyDelete
 4. "அந்த விலை என்ன? ஆட்சிக்கலைப்பா?
  அதனால் தமிழனுக்கு என்ன இழப்பு? கருனாநிதி குடும்பத்தின் நலனுக்காக தமிழன் தனது இன உணர்வுகளை வெளிப்படுத்தக் கூடாதா?"

  கருணாநிதி குடும்பம் நன்றாக
  இருந்தால்தான் தமிழர்கள் அத்தனை
  பேரும் நன்றாக இருக்க முடியும்,
  அதற்காக அவர் எத்தனையோ சிரமங்களை தாங்கிக் கொண்டு
  பதவியில் இருக்கிறார் :)

  ReplyDelete
 5. //லட்சுமன் கதிர்காமரும் போர் உடையில் இல்லை, போர் புரியவில்லை அவரும் சிவிலியன் பிரதிநிதி தான், அமைதி பேச்சில் அவரும் இருந்தார். பிறகு ஏன் கொல்லப்பட்டார்? அமைதி பேச்சில் அவரும் இருந்தார். பிறகு ஏன் கொல்லப்பட்டார்?//

  அவரைக் கொன்றவர்களிடம் கேட்க வேண்டிய கேள்வி. இது தான் இலங்கை பிரச்சனையின் ஆணி வேர். உண்மை என்னவென்று தெரியாமல் தமிழருக்கென்று ஒரு தேசம் கிடைக்கக்கூடாது என்ற ஒரே காரணத்திற்காக பலரும் புலிகளை எதிர்ப்பது.

  நீங்கள் ராஜிவ் காந்தி குறித்து இந்த கருத்தை கூறியிருந்தால் கூட பரவாயில்லை. ஆனால் கதிர்காமர் பற்றி கூறியது தான் எனக்கு எரிச்சல்.

  ராஜீவின் கொலையும் கண்டிக்கத்தக்கதே, கதிகாமரின் கொலையும் கண்டிக்கத்தக்கதே, தமிழ்செல்வனின் கொலையும் கண்டிக்கத்தக்கதே.

  ReplyDelete
 6. இது ஒரு தர்மசங்கடமான பிரச்சினை

  பெரும்பாலும் எல்லா தமிழர்களுக்கும் இலங்கை பிரச்சினைக்கு மனதளவில் ஆதரவாக இருக்கிறார்கள் என்பது உண்மை ஆனால் அதனை வெளிப்படையாக தெரிவிககமுடியாமல் ராஜீவ் கொலையும் சட்டமும் தடுக்கின்றன, அதனால் பெரும்பாலும் தானாகவே அவர்களுக்கு ஒரு நல்லது நடந்துவிடாதா என்கிற எதிர்பார்ப்பு எல்லோருக்கும் உள்ளது என்றே நான் நம்புகிறேன், அது சிலநேரங்களில் தம்மனதில் உள்ளது வெளிப்படுகிறது, அதனை அரசியல் எதிரிகள் தங்கள் சுயலாபத்திற்காக பயன் படுத்திக்கொள்ள இது போன்ற சம்பவங்கள் உதவுகிறது மற்றபடி இலக்கியவாதிகளும் அறிவுசார் மனிதர்களும் இதை ஒரு கருணை அடிப்படையிலேயே அம்மக்களின் துயரங்களை நோக்குகிறார்கள் என்பது என் எண்ணம்.
  செல்வி

  ReplyDelete
 7. பத்ரி,

  திருமாவளவனின் பேச்சைக் குறித்துச் சட்ட மன்றத்தில் பதிலளிக்கும் போது கருணாநிதி, பொடா சட்டத்தின் தீர்ப்பைக் குறிப்பிட்டுப் பேசுகிறார். அந்தத் தீர்ப்பு குற்றத்தின் செயலை மட்டுமல்ல, நோக்கத்தையும் பார்க்க வேண்டும் என்ற கிரிமினல் சட்டத்தின் அடிப்படைக் கோட்பாடான, mens reaவைப் சுட்டிக் காட்டி சில கருத்துக் களைச் சொல்கிறது. (இது பற்றி என் தினமணிக் கட்டுரையில் விளக்கியிருக்கிறேன்) இந்த அடிப்படையில்தான் திருமாவளவனின் மாநாட்டை மட்டுமல்ல, அந்தன் பின்னுள்ள நோக்கத்தையும் பார்க்க வேண்டும் எனச் சொல்கிறேன். அந்த நோக்கம் அவரது ஜூவி பேட்டியில் வெளிப்படுகிறது.
  கருணாநிதி இதைக் கருத்தில் கொள்ளாமல் பேசினார் என்பதுதான் என் வாதம். அவர் இதைக் கருத்தில் கொள்ளவில்லை என்பது மட்டுமல்ல, உச்சநீதி மன்றம் சர்ர்சைக்குரிய பிரிவுகளாகக் கருதப்பட்ட 21, 22, 23 பிரிவுகளைச் செல்லாது எனச் சொல்லவில்லை என்பதையும் வசதியாக மறந்து விட்டார். மறந்து விட்டார் என்பது மட்டுமல்ல, தீர்ப்பில் இல்லாததை இருப்பது போல பேசுகிறார். அதைச் சுட்டிக் காட்டுபவர் மீது அவர் கட்சிக்காரர்களால் உரிமைப் பிரசினையும் கொண்டு வரப்படுகிறது. இவை எல்லாம் out of the way போய் அவர் திருமாவளவனை காக்க முற்படுகிறார் என்பதைக் காட்டுகின்றன. ஏன் என்பதுதான் கேள்வி. அவர் திருமாவளவனது நோக்கங்களை ஆதரிக்கிறாரா என்பதுதான் சந்தேகம்.

  நீங்கள் முழுச் சித்திரத்தையும் பார்க்க வேண்டும்.

  2.முஷரஃப்போடு தமிழ்ச் செல்வனை ஒப்பிட முடியாது. முஷராஃப் இறையாண்மை கொண்ட ஒரு நாட்டின் ராணுவத்தின் அதிகாரி என்ற முறையில் அந்த ராணுவம் இட்ட கட்டளைகளை நிறைவேற்றியிருக்கலாம். ஆனால் விடுதலைப் புலிகள் இறையாண்மை கொண்ட ஒரு அரசின் ராணுவம் அல்ல. அது ஒரு பயங்கரவாத இயக்கம்.

  தமிழ்ச் செல்வனை அமைதிப் புறாவாக வர்ணிப்பதும் அவரது மரணத்தை அரசியல் படுகொலையாக சித்தரிப்பதும்தான் மகாத்மா, மார்டின் லூதர் உதாரணங்களை நினைவுபடுத்தத் தூண்டுகிறது.

  அன்புடன்
  மாலன்

  ReplyDelete
 8. பத்ரி,

  கருணாநிதியும் தி.மு.க.வும் விடுதலைப் புலிகள் விஷயத்தில் தங்கள் நிலை என்ன என பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் என்பது சரிதான். விடுதலைப் புலிகள் விஷயத்தில் உங்கள் நிலை என்ன என்று பகிரங்கமாக அறிவிக்க முடியுமா? ஏற்கனவே எழுதியிருக்கிற இத்தனை கட்டுரைகளில் சொல்லியிருக்கிறேன் என்று அவற்றிற்கான சுட்டிகள் தராமல் (அவற்றைப் படித்திருந்தாலும் மீண்டும் தொகுத்துக் கொள்ள இதைக் கேட்கிறேன் என்று எடுத்துக் கொள்ளவும்) -

  1. விடுதலைப் புலிகளை ஆதரிக்கிறீர்களா?

  2. முதல் கேள்விக்குப் பதில் ஆம் என்றால்
  2a) உணர்வுரீதியாக ஆதரிக்கிறீர்களா?
  2b) அரசியல்ரீதியாக ஆதரிக்கிறீர்களா?
  2c) உணர்வுரீதியாகவும் அரசியல்ரீதியாகவும் ஆதரிக்கிறீர்களா?

  என்பதை ஆம்/இல்லை என்ற பதில்களால் சொல்ல முடியுமா? கருணாநிதியும் தி.மு.க.வும் போல நீங்களும்கூட டெலிகேட் நிலையில் நின்றுகொண்டு, கம்பிமீது சாகசம் செய்கிற வேலையை இவ்விஷயத்தில் செய்வதாக எனக்குள் ஓர் எண்ணம். எனவே அறிந்து கொள்ள கேட்கிறேன். கருணாநிதியும் தி.மு.க.வும் வெளிப்படையாகச் சொல்ல வேண்டிய அரசியல் கட்சிகள், பத்ரி தனிமனிதர். சொல்ல வேண்டிய அவசியமில்லை என்ற பதில் சொல்வீர்களேயானால், நன்றி.

  அன்புடன், பி.கே. சிவகுமார்

  ReplyDelete
 9. 1. நான் தனித் தமிழ் ஈழம் என்னும் அமைப்பை ஆதரிக்கிறேன். சிங்கள மக்களிடமிருந்து தமிழர்களுக்கு எப்போதும் நியாயம் கிடைக்காது என்று நம்புகிறேன்.

  2. விடுதலைப் புலிகளது ஆயுதம் ஏந்திய விடுதலைப் போராட்டத்தை - அரசியல் ரீதியில் - ஆதரிக்கிறேன்.

  3. விடுதலைப் புலிகளின் பல செயல் திட்டங்கள், நடைமுறைகளை எதிர்க்கிறேன். முக்கியமாக அரசியல் தலைவர்களை தற்கொலைப் படை கொண்டு கொல்வது, தனக்குப் பிடிக்காதவர்களை வன்மமாகத் தீர்த்துக் கட்டுவது, எதிர்க்கருத்துகளுக்குச் சிறிதும் இடம் கொடுக்காதது.

  உணர்வுரீதியாக எனக்கும் கொசாவா மக்களுக்கும் எந்த உறவுமில்லை, பகையுமில்லை. ஆனால் கொசாவா பிரிந்து தனி நாடானதை நான் ஆதரிக்கிறேன். அதேபோலத்தான் தமிழ் ஈழத்தையும் ஆதரிக்கிறேன்.

  ReplyDelete
 10. பத்ரி, தங்கள் கருத்துகளுக்கு நன்றி.

  அன்புடன், பி.கே. சிவகுமார்

  ReplyDelete
 11. //உணர்வுரீதியாக எனக்கும் கொசாவா மக்களுக்கும் எந்த உறவுமில்லை, பகையுமில்லை. ஆனால் கொசாவா பிரிந்து தனி நாடானதை நான் ஆதரிக்கிறேன். அதேபோலத்தான் தமிழ் ஈழத்தையும் ஆதரிக்கிறேன்.//

  ஆக...! தமிழ் ஈழத்தை ஆதரிக்கிறீர்கள். ஆனால் உணர்வுரீதியாக உங்களுக்கும் ஈழத் தமிழர்களுக்கும் உறவும் இல்லை பகையும் இல்லை என்கிறீர்கள்.

  உணர்விரீதியாக தமிழன் எனும் உறவுள்ளவர்கள் ஆதரிக்கத்தானய்யா செய்வார்கள். இந்தியா என்பது ஆட்சி அதிகாரத்திற்காக போடப்பட்ட எல்லைக்கோடுகள். அதற்கும் அப்பால் தமிழர் எனும் உணர்வும் உறவும் எமக்கும் எம் ஈழத்தமிர்களுக்கும் உண்டு. அதை அரசியல் எல்லைக் கோடுகள் தடுத்துவிட முடியாது.

  தமிழன் அல்லாத "பார்ப்பனன்" ஆன உங்களுக்கு உணர்வுரீதியான உறவு இருக்காது என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை.

  ReplyDelete
 12. இப்போது தான் காண நேர்ந்தது:

  'ananimous' (tue aug5) கருத்துக்களின் கடைசி பத்தி என்னை உலுக்கி விட்டது. இது போல் கருத்துக்கள் சோ போன்றவர்க்கு காய்த்துப்போயிருக்கலாம்: ஆனால் பொது நன்மை, பொது அறிவு என்ற ஆர்வத்தில் பதிவு செய்வதாக (நான் நினைக்கும் ) தங்கள் போன்றவர்க்கு இது அநீதி என்றே எனக்கு தோன்றுகிறது. த்மிழன் அல்லாத பார்ப்பான் என்ற சொற்றொடர் ஒவ்வாதது: பார்பனத் தமிழன் என்று சொன்னால் ஒருவேளை கொஞ்சம் மென்மையாக இருந்திருக்கலாம்:

  ஆனால், அதையும் விட ஒன்று கவனியுங்கள்: இப்படி ஒப்பாரி வைப்பதற்கும் ஒரு பார்பனத் தமிழன் தான் முன் வார வேண்டும் என்பது தான் இன்னும் நம் நிலை.
  தமிழன் என அங்கீகாரம் பெற இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் காத்திருக்கவேண்டுமோ?

  ReplyDelete