Monday, July 07, 2008

அமர்நாத் யாத்ரீகர்களுக்காக

இன்று காங்கிரஸ் ஆட்சி காஷ்மீரத்தில் கவிழ்ந்துள்ளது. இதன் பின்னணி வருத்தம் தரத்தக்கது. அமர்நாத் என்னும் இந்துக்களுக்கான புனிதத்தலம் முஸ்லிம் பெரும்பான்மை காஷ்மீரில் உள்ளது. இந்த இடத்துக்குச் செல்வதற்கு இந்து யாத்ரீகர்களுக்குப் பெரும் தொல்லை. எப்படி முஸ்லிம்கள் மெக்கா செல்கிறார்களோ அதேபோல, இந்துக்களின் நம்பிக்கை காரணமாக பல தொல்லைகளையும் பொருட்படுத்தாமல் பல ஆயிரம் இந்துக்கள் ஒவ்வோர் ஆண்டும் அமர்நாத் செல்கிறார்கள்.

அப்படிச் செல்லும் யாத்ரீகர்களுக்கு வசதி செய்துகொடுக்க சில ஏக்கர் நிலத்தை ஸ்ரீ அமர்நாத் ஷ்ரைன் போர்ட் (SASB) என்னும் வாரியத்துக்கு காங்கிரஸ் தலைமையிலான ஜம்மு காஷ்மீர் அரசு தர முடிவுசெய்தது. உடனே இதற்கு எதிர்ப்பு கிளம்பியது. ஒருபக்கம் இந்திய அரசுக்கு எதிரான பிரிவினைவாதிகள், வெளிப்படையாகவே இந்து எதிர்ப்பைக் காட்டினார்கள். கொஞ்சம் மிதவாதிகள், சுற்றுச்சூழல் பாழ்படும் என்று செகுலர் எதிர்ப்பைக் காட்டினார்கள். நேஷனல் கான்ஃபரன்ஸ் தெருத்தெருவாகச் சென்று எதிர்ப்பிரசாரம் செய்தது. காங்கிரஸின் கூட்டாளிக் கட்சியான பி.டி.பி அந்தர் பல்ட்டி அடித்து, “கூடாது, கூடாது, நிலத்தைக் கொடுக்கக்கூடாது” என்று சொல்லி, அரசுக்கு அளித்துவந்த ஆதரவை விலக்கிக்கொண்டது.

ஆட்சி கவிழும் நிலையில், காங்கிரஸ் அரசு, ஷ்ரைன் போர்டுக்குக் கொடுத்த நிலத்தைத் திரும்பப் பெற்றுக்கொண்டு, அரசின் சுற்றுலாத் துறையே யாத்ரீகர்களுக்கு வசதிகள் செய்துகொடுக்கும் என்று அறிவித்தது. இதை வரவேற்ற பி.டி.பி, அரசுக்கு மீண்டும் ஆதரவு கொடுக்கமாட்டோம் என்று அறிவித்தது. இன்று குலாம் நபி ஆசாத் தலைமையிலான ஆட்சி கவிழ்ந்துள்ளது.

பெரும்பான்மை இந்துக்கள் உள்ள தேசமான இந்தியாவில் முஸ்லிம்களின் வழிபாட்டு இடங்களை முஸ்லிம்களே நிர்வகிக்கும்படி வக்ஃப் வாரியம் அமைந்துள்ளது. முஸ்லிம்கள் மெக்காவுக்குப் புனிதப்பயணம் செல்ல மத்திய அரசு மானியம் வழங்குகிறது. ஆனால் காஷ்மீர் போன்ற மாநிலத்தில் இந்துக்கள் சிறுபான்மையினராக இருக்கும்போது அவர்களது மத உரிமையை நிலைநாட்ட மிகச்சிறிய அளவுக்கு சில வசதிகளைச் செய்துகொடுக்கும்போது இந்த அளவுக்கு எதிர்ப்பு காண்பிக்கப்படுவது அசிங்கமாக உள்ளது.

“நமது நிலத்தை இந்தியர்களுக்குத் தூக்கிக் கொடுக்கிறார்கள்” போன்ற வார்த்தைகள் பிரிவினைவாதிகளிடமிருந்து வரும்போது அவற்றை எதிர்க்காத காஷ்மீர் அரசியல் கட்சிகளையும் அறிவுஜீவிகளையும் கண்டிக்கிறேன்.

காஷ்மீரின் எதிர்காலம் பயம் கொடுப்பதாக உள்ளது. பாகிஸ்தான் ஒரு “தோல்வியுற்ற” நாடு. தன்னை மேலே தூக்கிக்கொள்ளவே அந்த நாட்டுக்கு பல ஆண்டுகள் ஆகும். இந்தியாவுடன் இருப்பதில்தான் காஷ்மீரிகளுக்குப் பொருளாதார லாபம். கல்விமுதல் வேலைவாய்ப்புகள்வரை அனைத்தும் இந்தியாவின் தயவால்தான் அவர்களுக்குக் கிடைக்கிறது. இருக்கும் கொஞ்ச நஞ்ச சுற்றுலாத் துறையையும் குண்டுவெடித்து பயமுறுத்திவிட்டார்கள். இந்து பண்டிட்களை மாநிலத்தைவிட்டே துரத்தியாகிவிட்டது. பலமுறை அமர்நாத் செல்லும் அப்பாவி யாத்ரீகர்களையும் லஷ்கார்-ஈ-தோய்பா, பிற அமைப்புகள் பலமுறை தாக்கியுள்ளன. கடந்த ஓரிரு வருடங்களில் தாக்குதல்கள் ஏதும் இல்லை. இப்போது நடந்துள்ள அசிங்கமான அரசியல் போராட்டத்துக்குப் பிறகு இதுபோன்ற தாக்குதல்கள் அதிகரிக்கலாம்.

அப்படி நடந்தால் பெரும்பான்மை இந்தியர்களது “செண்டிமெண்ட்” திசை மாறும். அப்போது பாஜக ஆட்சியில் இருந்தால் (அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் இது நிகழ அதிக வாய்ப்பு உள்ளது) காஷ்மீரிகள்மீதான ராணுவ அடக்குமுறை அதிகரிக்கலாம். இந்த நிலைக்கு காஷ்மீர் அரசியல் கட்சிகள், முக்கியமாக நேஷனல் கான்ஃபரன்ஸும் பி.டி.பியும் துணைபோவது வருத்தம் தருகிறது.

மேலும் இந்தியாவின் பிற இடங்களில் இந்துத் தீவிரவாத அமைப்புகள் முஸ்லிம்கள்மீதான தாக்குதலில் ஈடுபடுவதற்கும் இது வழிவகுக்கிறது.

காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா தீவிரமான சில நிலைப்பாடுகளை எடுக்கவேண்டிய நேரம் வந்துள்ளது. ஆர்ட்டிகிள் 370-ஐத் துடைத்து எறிந்துவிட்டு, காஷ்மீரையும் இந்தியாவின் மற்ற மாநிலங்களைப் போலக் கருதும் நேரம் வந்துவிட்டது என்று நினைக்கிறேன்.

Friday, July 04, 2008

தங்கப் பறவை

(Grimms' Fairy Tales, The Golden Bird, abridged and retold by Badri)

ஒரு ராஜாவின் அழகான தோட்டத்தில் தங்க ஆப்பிள் காய்க்கும் அற்புதமான மரம் ஒன்று இருந்ததாம். அந்த மரத்தில் உள்ள தங்க ஆப்பிள்களை எண்ணி கணக்கு பார்த்து வைத்திருப்பார்கள். ஆனால் பழங்கள் பழுக்க ஆரம்பித்த நேரம், நாள் ஒன்றுக்கு ஒன்றாக ஒரு தங்க ஆப்பிள் காணாமல்போகத் தொடங்கியது.

ராஜாவுக்கு ஒரே கோபம். தோட்டக்காரனைக் கூப்பிட்டு கடுமையாகத் திட்டினார். தோட்டக்காரன், தனது முதல் மகனைக் கூப்பிட்டு, “ராத்திரி தூங்காமல் கவனமாகப் பார். யார் திருடிக்கொண்டு போகிறானோ அவனைப் பிடித்துவிடவேண்டும்” என்றான்.

அன்று இரவு சரியாகப் பன்னிரண்டு மணி ஆகும்போது காவலுக்கு உட்கார்ந்திருக்கும் முதல் மகன் தூக்கத்தில் ஆழ்ந்தான். அன்றும் ஒரு தங்க ஆப்பிள் காணாமல் போனது. அடுத்த நாள் தோட்டக்காரன் தனது இரண்டாவது மகனைக் காவலுக்கு அனுப்பினான். அன்றும் நடு இரவில், இரண்டாவது மகனும் தூங்க, அன்றும் ஓர் ஆப்பிள் காலி. தோட்டக்காரனுக்கு மூன்றாவது மகன் ஒருவன் இருந்தான். சிறியவன். எனவே தோட்டக்காரன் அவனைக் காவலுக்கு அனுப்ப விரும்பவில்லை. ஆனாலும் மூன்றாவது மகனது நச்சரிப்பைத் தாங்கமாட்டாமல் அனுப்பிவைத்தான்.

அன்று இரவு, மூன்றாவது மகன் தூங்காமல் காவல் காத்தான். நள்ளிரவில் தங்கத்தான் ஆன ஒரு பறவை பறந்து வந்து, தங்க ஆப்பிளைக் கொத்தியது. மூன்றாவது மகன் அந்தப் பறவையை நோக்கி அம்பை எய்தான். ஆனால் தங்கப் பறவை தப்பியோடியது. அதன் ஓர் இறகு - முழுவதும் தங்கத்தால் ஆனது - மட்டும் கீழே விழுந்தது.

அடுத்த நாள் அந்தத் தங்க இறகை ராஜாவிடம் காட்டினார்கள். ராஜா அந்தப் பறவையை உயிருடன் பிடித்துக்கொண்டுவருமாறு கட்டளையிட்டார். தோட்டக்காரனின் முதல் மகன் கிளம்பினான். காட்டுக்குள் செல்லும்போது அங்கே ஒரு நரி உட்கார்ந்திருந்தது. அதை அம்பு எய்திக் கொல்ல, குறிவைத்தான். உடனே நரி, “என்னைக் கொல்லாதே. நீ தங்கப் பறவையைப் பிடிக்க இங்கே வந்திருக்கிறாய் என்று எனக்குத் தெரியும். இப்படியே நடந்தால் மாலையில் ஒரு கிராமத்தை அடைவாய். அங்கே இரண்டு தங்கும் விடுதிகள் எதிரெதிராக இருக்கும். அதில் ஒன்று அழகாகவும் வசதியாகவும் இருக்கும். மற்றொன்று குப்பையாகவும் மோசமாகவும் இருக்கும். அதில் மோசமானதில் தங்கு” என்றது.

இந்த நரிக்கு என்ன தெரியும் என்று எகத்தாளத்துடன் முதல் மகன் அதை நோக்கி அம்பை எய்தான். ஆனால் அம்பு குறிமீது படவில்லை. நரி தப்பியோடியது.

அன்று மாலை நரி சொன்னதுபோன்றே ஒரு கிராமத்தை அடைந்த அவன், மோசமான விடுதிக்குள் நுழைவது பைத்தியக்காரத்தனம் என்று எண்ணி, அழகான விடுதிக்குள் நுழைந்தான். அங்கே இஷ்டத்துக்கு சாப்பாடு, மது என்று சந்தோஷமாக நாள்களைக் கழிக்க ஆரம்பித்தான். தங்கப் பறவையை மறந்தான். தன்னை மறந்தான்.

வெகு நாள்களாகியும் முதல் மகன் வரவில்லை என்றதும் இரண்டாவது மகன் கிளம்பினான். அவனும் நரியைச் சந்தித்தான். அது கொடுத்த அறிவுரையை அவனும் சட்டை செய்யவில்லை. தன் அண்ணனைப் போலவே நரியைத் தீர்த்துக்கட்ட முயற்சி செய்தான். நரி தப்பித்து ஓடியது. அன்று மாலை, அவனும் அழகான விடுதிக்குள் நுழைந்து முதல் மகனைப் போன்றே தன்னை மறந்து குடி, விருந்தில் காலத்தைக் கழித்தான்.

மேலும் பல நாள்கள் ஆகின. கடைசி மகன் தான் செல்வதாகச் சொன்னான். ஆனால் தந்தை முதலில் மறுத்தார். பின்னர், வெறுவழியின்றி அனுப்பிவைத்தார். அவனும் காட்டுக்குள் நரியைச் சந்தித்தான். ஆனால் தனது சகோதரர்களைப் போலன்றி, நரியின் அறிவுரையை காதுகொடுத்துக் கேட்டான். மேலும் நரியைத் தீர்த்துக்கட்ட நினைக்கவில்லை. இதனால் நரி அவனைத் தனது வாலில் உட்கார்ந்துகொள்ளச் சொன்னது. அவனது தலைமுடி விஷ்ஷென்று சத்தமிட, பயங்கர வேகத்தில் பறந்தனர். பக்கத்து கிராமத்தை அடைந்தனர்.

அங்கே நரியின் அறிவுரையைப் பின்பற்றி மோசமான விடுதிக்குள் நுழைந்தான் அவன். இரவு முழுதும் அங்கேயே தங்கினான். அடுத்த நாள் காலை, நரி அவனுக்காகக் காத்துக்கொண்டிருந்தது. “இங்கேயிருந்து கிளம்பி நேராகப் போனால் ஒரு கோட்டை வரும். அங்கே பல சிப்பாய்கள் குறட்டை விட்டு தூங்கிக்கொண்டிருப்பார்கள். அவர்களைக் கண்டுகொள்ளாதே. உள்ளே சென்றால் ஒரு மரக்கூண்டில் தங்கப் பறவை இருக்கும். பக்கத்திலேயே மிக அழகான தங்கக் கூண்டு ஒன்றும் இருக்கும். அதனைக் கண்டுகொள்ளாதே. கட்டாயமாக தங்கப் பறவையை எடுத்து தங்கக் கூண்டில் வைக்காதே. அப்படிச் செய்தால் நீ வருத்தப்படவேண்டியிருக்கும். மரக்கூண்டிலேயே வைத்து தங்கப் பறவையை எடுத்துக்கொண்டு கிளம்பிவிடு” என்றது நரி. அவன் மீண்டும் நரியின் வாலில் ஏறிக்கொள்ள, தலைமுடி விஷ்ஷென்று சத்தமிட, பயங்கர வேகத்தில் பறந்து கோட்டையை அடைந்தனர்.

கோட்டையில் எல்லாமே நரி சொன்னமாதிரியே இருந்தது. அங்கே மரக்கூண்டுக்குள் தங்கப் பறவை இருந்தது. பக்கத்தில் ஒரு தங்கக் கூண்டும் இருந்தது. அருகில் தோட்டத்திலிருந்து எடுத்துவந்திருந்த மூன்று தங்க ஆப்பிள்களும் இருந்தன. “சே, இந்த அழகான தங்கப் பறவையை, வெறும் மரக்கூண்டிலா எடுத்துக்கொண்டு செல்லவேண்டும்” என்று எண்ணி, அவன் கூண்டைத் திறந்து பறவையைப் பிடித்து தங்கக் கூண்டுக்குள் வைத்தான். உடனே தங்கப் பறவை பயங்கரமாகக் கத்தியது. சிப்பாய்கள் அனைவரும் விழித்துக்கொண்டு ஓடிவந்து அவனைக் கைதுசெய்தார்கள்.

கைது செய்து, அவனை ராஜாவிடம் கொண்டுபோய் நிறுத்தினார்கள். அவர் அவனுக்கு மரண தண்டனை கொடுத்தார். ஆனால், காற்றைப் போலப் பறக்கும் ராஜாவின் தங்கக் குதிரை காணாமல்போயிருந்தது. அதனைக் கண்டுபிடித்துக் கொடுத்தால், தங்கப் பறவையை அவனுக்கே தந்துவிடுவதாக அந்த ராஜா சொன்னார்.

மிகுந்த துக்கத்துடன் மூன்றாவது மகன், ராஜாவின் தங்கக் குதிரையைத் தேடிக் கிளம்பினான். தன் விதியை நொந்துகொண்டான். நரி சொன்னபடி செய்திருந்தால் இதெல்லாம் நடந்திருக்காதே என்று அவனுக்குத் தோன்றியது. அப்போது நரி அங்கு வந்தது. “பார்த்தாயா, நான் சொன்னதை நீ ஏன் கேட்கவில்லை? பரவாயில்லை. நான் உனக்கு மீண்டும் நல்லதைச் செய்கிறேன். ஆனால் நான் சொல்வதை அப்படியே செய்யவேண்டும். இங்கிருந்து போனால் ஒரு கோட்டை வரும். அங்கே லாயத்தில் தங்கக் குதிரை இருக்கும். அதனருகில் குதிரைக்காரன் தூங்கிக்கொண்டிருப்பான். குதிரையின் முதுகில் தோலால் ஆன சேணம் பூட்டப்பட்டிருக்கும். பக்கத்திலேயே தங்கச் சேணம் ஒன்றும் இருக்கும். அதனைத் தொடாதே. தோல் சேணத்துடனேயே குதிரையை அழைத்துக்கொண்டு வந்துவிடு” என்றது. நரி மீண்டும் தன் வாலை நீட்ட, அவன் அதில் ஏறி உட்கார்ந்துகொண்டான். தலைமுடி விஷ்ஷென்று சத்தமிட, பயங்கர வேகத்தில் பறந்து கோட்டையை அடைந்தனர்.

நரி சொன்னதுபோலவே அனைத்தும் இருந்தன. “சே, இந்த அழகான குதிரைக்கு வெறும் தோல் சேணமா? இதற்கு தங்கச் சேணத்தைப் பூட்டுவோம்” என்று அதனை எடுத்து குதிரையின் முதுகில் போட்டான். உடனே குதிரைக்காரன் விழித்துக்கொண்டு சத்தம்போட, காவலர்கள் ஓடிவந்து அவனைக் கைதுசெய்தனர்.

அடுத்த நாள் அந்த ராஜாவும் அவனுக்கு மரண தண்டனை விதித்தார். ஆனால், அழகான இளவரசி ஒருத்தியைக் கண்டுபிடித்து கொண்டுவந்து கொடுத்தால் அவனது தண்டனையை ரத்துசெய்து, கூடவே தங்கக் குதிரையையும் தங்கப் பறவையையும் கொடுப்பதாகச் சொன்னார்.

மிகவும் வருத்தத்துடன் அவன் நடக்க ஆரம்பித்தபோது நரி மீண்டும் அங்கு வந்தது. “ஏன் இப்படி சொல்பேச்சு கேட்கமாட்டேன் என்கிறாய்? பார்த்தாயா என்ன நடந்தது என்று? சரி, கடைசியாக மீண்டும் ஒருமுறை உனக்கு அறிவுரை தருகிறேன். உன்னை ஒரு கோட்டைக்கு அழைத்துச் செல்வேன். அங்கே நடு நிசியில் இளவரசி குளிக்கவருவாள். நேராகச் சென்று அவளை முத்தமிடு. அவள் உன்னுடன் கிளம்பிவிடுவாள். ஆனால் கவனம் தேவை. அவள் தன் தாயையும் தந்தையையும் பார்க்கவேண்டும் என்பாள். அதற்குமட்டும் சம்மதிக்காதே” என்றது நரி. நரி வாலில் அமர்ந்து, தலைமுடி விஷ்ஷென்று சத்தமிட, பயங்கர வேகத்தில் பறந்து அந்தக் கோட்டையை அடைந்தனர்.

நரி சொன்னதுபோலவே நடந்தது. அவன் இளவரசியை முத்தமிட, அவள் அவனுடன் ஓடிப்போக சம்மதம் தெரிவித்தாள். ஆனால் தாய், தந்தையை ஒருமுறை பார்த்துவிட அனுமதி கேட்டாள். அவன் முதலில் மறுத்தான். ஆனால் அவள் விடாது அவன் காலில் விழுந்து, கெஞ்சி, ஓவென்று அழ, கடைசியாக அவளுக்கு அனுமதிகொடுத்தான். அவள் தன் வீட்டை நெருங்கியதும் காவலர்கள் ஓடிவந்து அவனைக் கைதுசெய்தனர்.

அந்த ராஜா, அவனிடம் “என் ஜன்னலுக்கு வெளியே உள்ள மலை என் பார்வையைத் தடுக்கிறது. அடுத்த எட்டு நாள்களில் அந்த மலையைத் தரைமட்டமாக்கினால் என் பெண்ணை உனக்குக் கொடுக்கிறேன். இல்லாவிட்டால் மரணம்தான்” என்றார்.

அந்த மலையை எப்படி உடைப்பது. ஏழு நாள்கள் வேலை செய்தும் ஒரு அங்குலம்கூடக் குறையவில்லை. அன்று நரி மீண்டும் அங்கு வந்தது. “போ, போய்ப் படுத்துக்கொள், நான் பார்த்துக்கொள்கிறேன்” என்றது. அடுத்த நாள் காலை எழுந்துபார்த்தால், நரி மலையைத் தரைமட்டமாக்கியிருந்தது. ராஜாவும் வேறு வழியில்லாமல் இளவரசியைக் கொடுக்கவேண்டியிருந்தது.

அவன் இளவரசியை அழைத்துக்கொண்டு கிளம்பினான். நரி அவனிடம் வந்து ஒரு யோசனை சொன்னது. “நான் சொன்னபடி நடந்தால் உனக்கு இளவரசி, குதிரை, பறவை எல்லாமே கிடைக்கும்” என்றது. “அதெப்படி முடியும்?” என்றான் அவன். “நான் சொல்வதைமட்டும் நீ கேட்டால் போதும். அதுதான் மாட்டேன் என்கிறாயா” என்றது நரி. “இந்த முறை நீ சொல்வதை அப்படியே செய்கிறான்” என்றான் அவன்.

“இளவரசியை அழைத்துக்கொண்டுபோய் அந்த ராஜாவிடம் கொடு. அவன் குதிரையைக் கொடுப்பான். கிளம்பும்போது எல்லோருக்கும் கை கொடு. ஆனால் இளவரசியிடம் கடைசியாகச் செல். அவளுக்குக் கைகொடுக்கும்போது சரேலென அவளைத் தூக்கி குதிரையில் வைத்துக்கொண்டு கிளம்பு. குதிரை காற்றுவேகத்தில் செல்லும் என்பதால் யாராலும் உன்னைப் பிடிக்கமுடியாது” என்றது நரி.

இம்முறை நரி சொன்னதுபோல நடந்துகொண்டான் அவன். இளவரசியுடன் தங்கக் குதிரையில் பறந்து வெளியேறியவன் சிறிது தூரம் சென்று நரியை மீண்டும் சந்தித்தான்.

“நானும் இளவரசியும் வாசலில் நிற்போம். நீ அடுத்த ராஜாவிடம் போய், குதிரையைக் காண்பி. ஆனால் குதிரையிலிருந்து இறங்காதே. ராஜா, அது தங்கக் குதிரைதான் என்பதைத் தெரிந்துகொண்டதும் தங்கப் பறவையைத் தருவான். அது சரியான பறவைதானா என்பதைப் பரிசீலிக்கவேண்டும் என்று சொல்லி குதிரையின்மீதே அமர்ந்திரு. உன் கையில் பறவையைக் கொடுத்ததும் உடனே குதிரையைத் தட்டிக் கிளப்பி, வெளியேறு” என்றது நரி.

இங்கும் நரி சொன்னபடியே நடந்தது. இவ்வாறாக தங்கப் பறவை, தங்கக் குதிரை, இளவரசி ஆகியோரோடு அவன் வெளியேறினான். நரி அவனிடம் மீண்டும் வந்தது. “இப்போது என்னைக் கொன்று என் கால்களையும் தலையையும் வெட்டிப்போடு” என்றது. அவன் மறுத்துவிட்டான். “சரி, நான் தொடர்ந்து உனக்கு நல்ல அறிவுரைகளாகவே சொல்லிவருவேன். இங்கிருந்து வீட்டுக்குப் போகும் வழியில் மரணதண்டனைக் கைதிகள் யாருக்கும் பிணை கொடுத்து விடுவிக்காதே. ஆற்றங்கரையில் உட்காராதே” என்று சொல்லிவிட்டுச் சென்றது நரி. “அது ஒன்னும் அவ்வளவு கஷ்டமில்லை” என்று நினைத்துக்கொண்டான் அவன்.

அங்கிருந்து இளவரசியுடனும் தங்கக் குதிரை/பறவையுடனும் செல்லும் வழியில் தன் இரு சகோதரர்கள் தங்கிவிட்ட கிராமத்துக்கு வந்தான். அங்கே அவனது சகோதரர்கள் வழிப்பறிக் கொள்ளையர்களாக மாறியிருந்தனர். அவர்கள் பிடிபட்டு, மரணதண்டனைக் கைதிகளாக இருந்தனர். மூன்றாவது மகன் தன் சகோதரர்களை மீட்கவேண்டி அந்த கிராமத்தவர் கேட்ட பிணைத்தொகையைக் கொடுத்தான். நரி சொன்ன அறிவுரையைக் கேட்காமல் மீண்டும் மீறினான். தன் சகோதரர்களையும் அழைத்துக்கொண்டு கட்டுவழியாக வீட்டை நோக்கிப் புறப்பட்டான்.

காட்டு வழியாகச் செல்லும்போது ஓர் ஆற்றங்கரையில் அமர்ந்து சாப்பிடலாம் என்று சகோதரர்கள் சொன்னார்கள். மீண்டும் நரி சொன்னதைக் கேட்காமல் மூன்றாவது மகன் உட்கார, அவனது சகோதரர்கள் அவன் பின் வந்து அவனைத் தண்ணீரில் பிடித்துத் தள்ளிவிட்டனர். பிறகு அவர்கள், இளவரசி, தங்கக் குதிரை, தங்கப் பறவை ஆகியவற்றை எடுத்துக்கொண்டு ஊர் திரும்பினர். தங்களது ராஜாவிடம் அனைத்தையும் சென்று காட்டி, தங்களது திறமையால்தான் இத்தனையும் கிடைத்தது என்றனர். அனைவருக்கும் மகிழ்ச்சி. ஆனால் குதிரை சாப்பிட மறுத்தது; பறவை பாட மறுத்தது; இளவரசி அழுதுகொண்டே இருந்தாள்.

இதற்கிடையில், ஆற்றில் தள்ளப்பட்ட மூன்றாவது மகன் உயிர் போகவில்லை. நரி மீண்டும் அங்கு வந்தது. “சொல்லச் சொல்லக் கேட்காமல் இப்படிச் செய்கிறாயே. ஆனாலும் உன்னை அப்படியே விட எனக்கு மனதில்லை. என் வாலைப் பிடித்துக்கொள். உன்னை மேலே தூக்கிவிடுகிறேன்” என்றது. அவன் பிடித்துக்கொள்ள, அவனைக் கரைக்கு இழுத்தது. “நீ ஊருக்கு வந்தால் உன்னைக் கொலைசெய்ய உனது சகோதரர்கள் ஆட்களை அமர்த்தியுள்ளனர்” என்றது நரி. எனவே அவன் ஓர் ஏழை குடியானவனாக மாறுவேடம் போட்டுக்கொண்டு ராஜசபைக்கு வந்தான்.

அவன் உள்ளே நுழைந்ததுமே தங்கக் குதிரை சாப்பிட ஆரம்பித்தது; தங்கப் பறவை பாட்டு பாடியது; இளவரசி அழுகையை நிறுத்தினாள். அவன் அரசனிடம் சென்று நடந்தது அனைத்தையும் சொன்னான். அரசன் இரண்டு கெட்ட சகோதரர்களையும் பிடித்து சிறையில் அடைத்தான். இளவரசியை மூன்றாவது மகனுக்கு மணம் செய்வித்தான். ராஜா இறந்ததும் அந்த ராஜ்ஜியமும் அவனுக்கே கிடைத்தது.

பல ஆண்டுகளுக்குப் பிறகு அவன் காட்டுக்குச் செல்லும்போது நரி அங்கே மீண்டும் வந்து தன்னை வெட்டிப்போடுமாறு கேட்டுக்கொண்டது. அவன் அவ்வாறு செய்ய, நரி ஒரு மனிதனாக மாறியது. அந்த நரி, இளவரசியின் சகோதரன். ஏதோ மந்திரத்தால் இப்படி நரியாக மாறியிருந்தானாம்.

***

[இந்தக் கதையை நாடகமாக மாற்றி என் மகள் அவளது வகுப்பில் நடிக்கப்போவதாகச் சொன்னாள்.]

Thursday, July 03, 2008

தாடி ராஜா

(From Grimms' Fairy Tales, King Grisly-Beard, abridged and retold by Badri)

ஒரு ராஜாவுக்கு அழகான ஒரு பெண். ஆனால் இளவரசி ரொம்பவே அகம்பாவக்காரி. அவளைக் கல்யாணம் செய்துகொள்ள வரும் இளவரசர்களை மூக்குடைத்து அனுப்புவதில் அவளுக்கு அலாதி ஆனந்தம்.

ஒரு நாள் ராஜா தன் பெண்ணுக்கு சுயம்வரத்துக்கு ஏற்பாடு செய்திருந்தார். ஏகப்பட்ட பேரரசர்கள், அரசர்கள், குறுநில மன்னர்கள், ஜமீந்தார்கள் என்று பெரும் கூட்டம். இளவரசி ஒவ்வொருத்தராகப் பார்வையிட்டு வந்தாள். சற்றே குண்டாக இருந்த ஒருவரைப் பார்த்து, “உருளைக்கிழங்கு போண்டா மாதிரி” என்றாள். ஒல்லியாக நெட்டையாக இருந்தவரைப் பார்த்து “ஈர்க்குச்சி” என்றாள். குள்ளமாக இருந்தவரைப் பார்த்து “குள்ளக் கத்திரிக்காய்” என்றாள். வெளுத்த உடலாக இருந்தவரைப் பார்த்து “மைதா மாவு” என்றாள். இப்படி அவளது சாட்டை நாக்கிடம் மாட்டாத ஆளே கிடையாது. கொஞ்சம் நீண்ட தாடி வைத்திருந்த ஒருவரைப் பார்த்து, “தாடியப் பாரு, தரை துடைச்சுவிடற விளக்குமாறு மாதிரி இருக்கு” என்றாள்.

ராஜாவுக்கு தனது மகள் செய்தது பிடிக்கவேயில்லை. இவ்வளவு அகம்பாவக்காரிக்கு தண்டனை, கண்ணில்படும் முதல் பிச்சைக்காரனுக்கு இவளைக் கல்யாணம் செய்துவைக்கவேண்டியதுதான் என்று முடிவெடுத்தார்.

அடுத்த நாள், பாட்டு பாடிப் பிச்சையெடுக்கும் ஒருவன் அரண்மனைக்கு வந்தான். பாட்டுப் பாடி பிச்சை கேட்டான். “உனது பாட்டை மெச்சினோம். பரிசாக எமது மகளை உனக்குக் கொடுக்கிறோம்” என்று சொல்லி, உடனே பாதிரியாரைக் கூப்பிட்டு கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்தார். இளவரசி கெஞ்சிக் கதறினாள். “மன்னிச்சிடுங்கப்பா, இனி இப்படியெல்லாம் செய்யமாட்டேன்” என்றாள். ஆனால் ராஜா, சொன்னது சொன்னதுதான் என்று சொல்லிவிட்டார்.

பாட்டுப் பிச்சை, அவளை கல்யாணம் செய்துகொண்டு தன் ஊருக்குக் கூட்டிச்சென்றான். வழியில் பெரும் காடு கண்ணில் பட்டது. யாருடையது என்று கேட்டாள் அவள். “எல்லாம் தாடிக்கார ராஜாவோடது” என்றால் பாட்டுப் பிச்சை. “அய்யோ, என்ன துரதிர்ஷ்டம்! நான் அந்த தாடிக்கார ராஜாவைக் கட்டிக்கொள்ள சம்மதித்திருந்தால் இத்தனையும் எனக்குத்தானே?” என்றாள் அவள். கொஞ்சம் தள்ளி சமவெளிகள் நிறையக் கண்ணில் பட்டன. “யாருடையவை இவை” என்று கேட்டாள் அவள். “எல்லாம் தாடிக்கார ராஜாவோடது. நீ மட்டும் அவனைக் கட்டிகிட்டிருந்தால் எல்லாம் உன்னோடதாகியிருக்கும்” என்றான் அவன். “என்ன துரதிர்ஷ்டம்” என்று நொந்துகொண்டாள் அவள்.

அடுத்து அற்புதமான நகர் ஒன்றை அடைந்தனர். யாருடையது என்று கேட்டாள். “எல்லாம் தாடிக்கார ராஜாவோடது. நீ மட்டும் அவனைக் கட்டிக்கிட்டிருந்தா எல்லாம் உன்னோடதாக்கும்” என்றான் அவன். “அய்யோ துரதிர்ஷ்டமே. நான் அவனைக் கட்டிக்கலையே” என்றாள் அவள். “உனக்கெதுக்கு இன்னொரு புருஷன்? ஏன், நான் போதாதா உனக்கு” என்றான் அவன் பதிலுக்கு.

கடைசியாக சிறு வீடு ஒன்றை அவர்கள் அடைந்தனர். “இந்த அழுக்கான குப்பை வீடு யாரோடது” என்று கேட்டாள் அவள். “நம்ம ரெண்டு பேரோட வீடுதான்” என்றான் அவன். “வேலைக்காரங்க எல்லாரும் எங்க” என்றாள் அவள். “வேலைக்காரங்க எதுக்கு? எல்லா வேலையையும் நாமதான் செய்யணும். சரி, சமையல் செய். சாப்பிடுவோம். ரொம்ப அயற்சியா இருக்கு” என்றான் அவன். முன்பின் விறகைப் பற்றவைக்கத் தெரியாத அவள் தடுமாறினாள். வேறு வழியின்றி அவனும் உதவிசெய்ய எதையோ சமைத்து எதையோ தின்றுவைத்தனர்.

இப்படி 2-3 நாள் ஓடியபிறகு, “இப்படியே வாழமுடியாது. நீ எதையாவது செய்ய கத்துக்கோ. கூடை முடைஞ்சு பணம் சம்பாதி. நான் காட்டுக்குப் போய் விறகு வெட்டிகிட்டு வரேன்” என்றான் அவன். கூடை முடையும்போது பிரம்பு கையை அழுத்திப் புண்ணாக்கியது. காட்டிலிருந்து வந்த கணவன், “இதெல்லாம் உனக்கு ஒத்துவராது என்றால் பஞ்சை நூலாக நூற்க ஆரம்பி” என்றான். நூல் நூற்கும்போது அது கைகளை வெட்டி ரத்தம் வரவைத்தது. “சே, எனக்குன்னு வந்து வாய்ச்சிருக்கியே! சரி, சட்டி பானை விற்கும் வேலையாவது செய்” என்றான் அவன்.

அவளுக்கு நிறைய சட்டி பானைகளை வாங்கித் தந்தான். அழகான பெண்ணொருத்தி கடைத்தெருவில் சட்டி பானை விற்பதைக் கண்ட மக்கள், விலை விவரம் பற்றிக் கவலைப்படாமல் அவள் விற்பதை வாங்கிக்கொண்டனர். கொஞ்சம் பணம் கிடைத்தது. அடுத்து மேலும் கொஞ்சம் பானைகளை வாங்கிக்கொடுத்தான். ஆனால் இந்தமுறை கடையில் அவள் இருக்கும்போது குடிகார சிப்பாய் ஒருத்தன் குதிரையில் வந்து பானைகளை அடித்து நொறுக்கி உடைத்துவிட்டான்.

ஓவென்று அழுதுகொண்டே வீட்டுக்கு வந்தவளை கணவன் கடுமையாகத் திட்டினான். “மண் பானை விற்பவள் ஓரமாக உட்காரலாமா? நாலு கடைக்கு நடுவில் உட்கார்ந்தால்தானே பத்திரமாக இருக்கும் பானைகள்?” என்றான். “சரி. இது சரிப்படாது. உன்னை சமையல் வேலை செய்ய ஒரு வீட்டில் கொண்டுபோய் சேர்க்கிறேன்” என்றான்.

அடுத்த சில தினங்கள் ஒரு வீட்டில் சமையல் வேலை செய்ய இளவரசி போனாள். அங்கே அவர்கள் கொடுக்கும் மிச்சம் மீதி இறைச்சியைக் கொண்டே அவர்களது வீட்டில் சாப்பாடு நடந்தது. ஒரு நாள் அந்த ஊர் ராஜாவின் பெரிய பையனுக்குத் திருமணம் என்று பேசிக்கொண்டார்கள். ஊரே திருவிழாக் கோலம். இளவரசிக்கு ஒரே வெறுப்பு. தனக்கு நடக்கவேண்டிய திருமணம் இப்படித்தானே இருந்திருக்கவேண்டும் என்று நினைத்தாள்.

வேலைக்காரர்கள் அவளுக்கு நிறைய இறைச்சியைக் கொடுத்தார்கள். அதை அவள் கூடையில் போட்டுக்கொண்டு செல்லும்போது இளவரசன் ஒருவன் அங்கே வந்து அவளைத் தன்னுடன் நாட்டியம் ஆட அழைத்தான். அந்த இளவரசனைப் பார்த்ததும் அவன்தான் தாடிக்கார ராஜா என்று தெரிந்துவிட்டது. அவன் தன்னை அவமானப்படுத்தவே அவ்வாறு கூப்பிடுகிறான் என்று அவள் நினைத்து பயந்துபோனாள். ஆனால் அவன், அவளது கையைப் பிடித்து இழுத்தான். இழுத்த இழுப்பில், அவள் கையிலிருந்த கூடை கீழே விழுந்து, அதிலிருந்து இறைச்சித் துண்டுகள் சிதறின. அனைவரும் கொல்லென்று சிரித்தனர்.

பூமி பிளந்து தன்னை விழுங்கிவிடாதா என்ற எண்ணத்துடன் அவள் அங்கிருந்து ஓடத்தொடங்கினாள். ஆனால் துரத்தி வந்த தாடி ராஜா அவளைப் பிடித்துவிட்டான். அவளிடம் சொன்னான், “பயப்படாதே. உன் கணவனான பாட்டுப் பிச்சைக்காரனும் நான்தான். குடிகார சிப்பாயாக வந்து சட்டி பானைகளை உடைத்தவனும் நான்தான். உன் அகம்பாவத்தை அழித்து உனக்கு நல்ல புத்தி கொடுக்கவே நான் அவ்வாறு செய்தேன். இன்று நமது திருமணத்தின்பொருட்டே இந்த விருந்து” என்றான்.

வேலைக்காரிகள் அழகான ஆடைகளைக் கொண்டுவந்து அவளுக்கு அணிவித்தனர். அனைவரும் பாட்டு, ஆட்டம், குடி, விருந்து என்று கொண்டாடினர்.

***

“இந்த ராஜா தசாவதாரம் கமல் போலவாப்பா?” என்றாள் என் பெண்.

ரிவர்ஸ் மெர்ஜர்

பங்குச்சந்தை பட்டியலில் இல்லாத ஒரு தனி நிறுவனம் (Private Limited), பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள ஒரு பொது நிறுவனத்தை (Public Limited) விலைக்கு வாங்கி தன்னோடு இணைத்து தானே பப்ளிக் லிமிடெட் நிறுவனமாக மாறுவதுதான் ரிவர்ஸ் மெர்ஜர்.

இரண்டு நாள்களுக்குமுன் செய்தித்தாளில் சுபிக்‌ஷா சூப்பர் மார்க்கெட் நிறுவனம் பற்றி இப்படி ஒரு செய்தி வெளியாகியுள்ளது.

பொதுவாக ஒரு நிறுவனம் ஏன் பங்குச்சந்தைக்குப் போகிறது?

(1) முதலீட்டைப் பெருக்க. ஒரு கட்டத்துக்குமேல் தனி மனிதர்களிடமிருந்து தேவையான அளவுக்கு முதலீட்டைச் சேகரிக்கமுடியாது. அப்போது பங்குச்சந்தையில் நிறுவனத்தைக் கொண்டுவந்து IPO என்னும் வழியின்மூலம் அதிகமான மூலதனத்தைப் பெறமுடியும்.

(2) லிக்விடிட்டியை ஏற்படுத்த. ஒரு பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் பங்குகளை நினைத்தநேரத்தில் விற்றுவிடமுடியாது. வாங்குவதற்கு யாரும் தயாராக இல்லாமல் இருக்கலாம். யாரெல்லாம் அந்தப் பங்குகளை வாங்கத் தயாராக உள்ளனர் என்பதே தெரியாது. ஆனால் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனத்தின் பங்குகளை வாங்க நிறையப் பேர் காத்திருப்பார்கள். அவர்கள் என்ன விலை தரத் தயாராக உள்ளனர் என்பதையும் டிரேடிங் டெர்மினலில் பார்க்கலாம். இதனால் வேண்டும்போது பங்குதாரர்கள் தங்களிடம் இருக்கும் பங்குகளில் சிலவற்றை விற்கமுடியும். விற்ற இரண்டு நாள்களில் பணம் கைக்கு வைந்துவிடும்.

ஆனால் யாரும் நினைத்தமாத்திரத்தில் IPO போய்விடமுடியாது. அதற்கென பல சடங்குகள் உள்ளன. SEBI என்ற கட்டுப்பாட்டு வாரியத்திடம் அனுமதி பெறவேண்டும். IPO-க்காக மெர்ச்சண்ட் பேங்கர்களை நியமிக்கவேண்டும். ரெட் ஹெர்ரிங் பிராஸ்பெக்டஸ் என்பதனை செபியிடம் சமர்ப்பிக்கவேண்டும். இப்போது இருப்பது போன்ற மோசமான நிலை பங்குச்சந்தையில் இருந்தால் IPO-வை கேன்சல் செய்யவேண்டியதுதான்.

இந்தப் பிரச்னைகள் இல்லாமலேயே பங்குச்சந்தையில் பட்டியலிட வைப்பதற்கு ரிவர்ஸ் மெர்ஜர் உதவும். சுபிக்‌ஷா நிறுவனத்துக்கு 1,480 கடைகள் உள்ளன. கடந்த ஆண்டின் வருமானம் ரூ. 2,300 கோடி. ஆனால் தனி நிறுவனம்.

மெட்ராஸ் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள ப்ளூ கிரீன் கன்ஸ்டரக்‌ஷன்ஸ் அண்ட் இன்வெஸ்ட்மெண்ட் என்ற நிறுவனத்தின் 40% பங்குகளை ரூ. 2 கோடிக்கு சுபிக்‌ஷா வாங்கியுள்ளது. அதாவது இந்த “ஷெல்” நிறுவனத்துக்கு மதிப்பு மொத்தமாகவே ரூ. 5 கோடிதான். சுபிக்‌ஷாவின் மதிப்போ குறைந்தபட்சம் ரூ. 5,000 கோடியாகவாவது இருக்கும்.

எப்படி இந்த ரிவர்ஸ் மெர்ஜரை நிகழ்த்துவார்கள்? சுபிக்‌ஷாவின் 60% பங்குகள் அதன் புரோமோட்டரான சுப்ரமணியன் மற்றும் அவரது உறவினர்களிடம் உள்ளது. மீதம் ஐசிஐசிஐ வென்ச்சர்ஸ் போன்ற பிறரிடம் உள்ளது. முதலில் சுபிக்‌ஷா நிறுவனமே, ப்ளூ கிரீனின் 100% பங்குகளை வாங்கிவிடும். அடுத்து ஷேர் ஸ்வாப் - பங்குகளைப் பரிமாற்றிக்கொள்வதன்மூலம், சுபிக்‌ஷா நிறுவனத்தின் பங்குகளை வைத்திருப்பவர்களுக்கு, அதை வாங்கிக்கொண்டு, அதற்குபதில் ப்ளூ கிரீனின் பங்குகளைத் தருவார்கள். இது நடப்பதற்குமுன் சுபிக்‌ஷா நிறுவனத்தின் சப்சிடியரியாக ப்ளூ கிரீன் இருக்கும். இந்த ஷேர் ஸ்வாப் முடிந்ததும் ப்ளூ கிரீனின் சப்சிடியரியாக சுபிக்‌ஷா மாறிவிடும்.

அடுத்ததாக, ப்ளூ கிரீனின் கையில் இருக்கும் சுபிக்‌ஷா நிறுவனத்தின் பங்குகளை கேன்சல் செய்து இரண்டு நிறுவனங்களையும் முழுவதாக இணைத்துவிடுவார்கள். அடுத்து, பெயர் மாற்றம் நடைபெறும். ப்ளூ கிரீன் என்பதை சுபிக்‌ஷா லிமிடெட் என்று பெயர் மாற்றம் செய்துவிட்டால் இப்போது பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட சுபிக்‌ஷா நிறுவனம் தயார்.

அடுத்து இதன் பங்குகளுக்கு என்ன விலை என்ற கேள்வி வரும். இதன் பங்குகள் சந்தைக்கு விற்பனைக்கு வர, சந்தையில் உள்ளவர்கள் என்ன விலைக்கு வாங்கத் தயாராக இருக்கிறார்களோ அந்த விலைக்கு பங்குகள் ஏறத்தொடங்கும். அதற்கு ஒரு வழிகாட்டியாக, ஏதாவது சில அனலிஸ்டுகள், நிறுவனத்தின் லாப நஷ்டக் கணக்குகளைப் பார்த்து, P/E கணக்குகளைப் போட்டு, இதன் பங்குகளை இன்ன விலைக்கு வாங்கலாம் என்று சொல்வார்கள். அல்லது சுபிக்‌ஷா லிமிடெட், PE முதலீட்டாளர் யாருக்காவது 5% பங்குகளை ஒரு குறிப்பிட்ட விலைக்கு விற்க, அந்த விலையே வழிகாட்டி விலையாக இருக்க நேரிடும்.

அதற்கு சில மாதங்கள் கழித்து சுபிக்‌ஷாவின் சந்தை விலை ஓரிடத்தில் வந்து நிற்கும். அந்த நேரத்தில் follow-on offering ஒன்றைச் செய்து, சுபிக்‌ஷா மேற்கொண்டு முதலீட்டைத் திரட்டலாம்.

***

இது நல்ல வழியா என்றால், பெரும்பாலும் அமெரிக்கா, பிரிட்டன் போன்ற சந்தைகளில் கண்ணியமான நிறுவனங்கள் பெரும்பாலும் இதுபோன்ற ரிவர்ஸ் மெர்ஜரில் ஈடுபடா. இந்தியாவில் அதிகமாக ரிவர்ஸ் மெர்ஜர் நடந்தது கிடையாது. அப்படி நடந்து முன்னிலையில் இருக்கும் நிறுவனங்கள் ஏதும் எனக்கு ஞாபகத்தில் இல்லை. அதனாலேயே ரிவர்ஸ் மெர்ஜர் என்றால் கெட்டது என்றாகிவிடாது.

இந்த “ரிவர்ஸ் மெர்ஜர்” நடந்தால் மார்க்கெட் இதனை எப்படிப் பார்க்கிறது என்பது சுவாரசியமாக இருக்கும்.

Tuesday, July 01, 2008

மூன்று மகன்கள்

(From: Grimms' Fairy Tales, The Three Children of Fortune, abridged and retold)

வயதான கிழவர் ஒருவருக்கு மூன்று மகன்கள். தனது காலம் முடிவடையப்போகிறது என்று தெரிந்ததும் தந்தை தனது மகன்களை அழைத்துப் பேசினார். “உங்களுக்கென்று நான் சொத்து எதுவுமே சேர்த்துவைக்கவில்லை. என்னிடம் இருப்பதை உங்களுக்குத் தருகிறேன். அவை இல்லாத இடமாகப் பார்த்து அவற்றை எடுத்துச்சென்று பயனடையுங்கள்” என்று சொன்னார்.

முதல் மகனுக்கு ஒரு சேவலைக் கொடுத்தார். இரண்டாவது மகனுக்கு கதிர் அறுக்கும் அறுவாள். மூன்றாவது மகனுக்கு ஒரு பூனை. சீக்கிரமே தந்தை இறந்துபோனார்.

சில நாள்கள் கழித்து, முதல் மகன் சேவலை எடுத்துக்கொண்டு தந்தை சொல்படி கிளம்பினான். எந்த நகரத்துக்குச் சென்றாலும் தேவாலயத்தின்மேல் திசைகாட்டியில் சேவல் செதுக்கப்பட்டிருந்தது. எந்த கிராமத்துக்குச் சென்றாலும் வீடுகளின் கூரையில் உயிருள்ள சேவல்களே இருந்தன. கடைசியாக முதல் மகன் ஒரு தீவுக்குச் சென்றான். அங்குள்ள மக்கள் சேவலை முன்பின் பார்த்தே அறியாதவர்கள்.

சேவலே இல்லையென்பதால் அந்தத் தீவு மக்களுக்கு நேரம் என்பதே தெரியவில்லை. அவர்களுக்கு பகல் தெரியும், இரவு தெரியும். ஆனால் எப்போது இரவு போய் பகல் வரும் என்று அவர்களுக்குத் தெரியவில்லை. முதல் மகன் அவர்களிடம் சேவலைக் காட்டி அதன் அருமை பெருமைகளைப் பற்றிப் பேசினான். “இதன் தலையைப் பாருங்கள், கிரீடம் சூட்டப்பட்டுள்ளது. இதன் கால்களைப் பாருங்கள், சிறப்புக் காலணி அணிந்துள்ளது. இது இரவு நேரத்தில் மூன்றுமுறை கூவும். மூன்றாவது முறை கூவும்போது சரியாக காலை ஆறு மணியாகியிருக்கும்; பொழுதும் விடிந்திருக்கும்” என்றான்.

அன்று இரவு, அந்தத் தீவின் மக்கள் விழித்திருந்து சோதனை செய்தனர். சரியாக இரண்டு மணிக்கு சேவல் கூவியது. அடுத்து நான்கு மணிக்குக் கூவியது. கடைசியாக ஆறு மணிக்கு சேவல் கூவும்போது சூரியன் உதித்தது. மக்கள் மகிழ்ந்தனர். அந்தச் சேவலை விலைக்கு வாங்க எவ்வளவு வேண்டுமானால் தருவதாகக் கூறினர். முதல் மகன் ஒரு கழுதை சுமக்கும் அளவுக்குத் தங்கம் கேட்டான். தந்தனர். வாங்கிக்கொண்டு சந்தோஷமாக வீடு திரும்பினான்.

அடுத்து இரண்டாவது மகன், கதிர் அறுவாளுடன் கிளம்பினான். அவனுக்கும் முதலில் சென்ற இடங்களிலெல்லாம் தோல்விதான். கடைசியில் அவனும் ஒரு தீவைக் கண்டுபிடித்தான். அங்குள்ள மக்கள் அறுவாளையே பார்க்காதவர்கள். அவர்களுக்கு பயிர்களை அறுவடைசெய்ய வெகு காலம் பிடித்தது. இரண்டாம் மகன் அறுவாளைக் கொண்டு ஒரு வயலை சில மணிகளுக்குள்ளாக அறுவடை செய்துகாட்டினான். அந்தத் தீவு மக்கள் கதிர் அறுவாளை வாங்கிக்கொள்ள விரும்பினர். ஒரு குதிரை சுமக்கும் அளவுக்குத் தங்கம் வாங்கிக்கொண்டு அந்த அறுவாளை விற்றுவிட்டு அவனும் திரும்பினான்.

மூன்றாவது மகன் பூனையை எடுத்துக்கொண்டு ஊரெல்லாம் சுற்றினான். கடைசியில் அவனும் ஒரு தீவை வந்தடைந்தான். அங்கே எலிகளின் அட்டகாசம் தாங்கமுடியாமல் இருந்தது. அந்த ஊர் மக்கள் அரசனிடம் முறையிட்டு எந்தப் பலனும் இல்லை. பூனையையே அறியாத தீவு அது. மூன்றாம் மகன் பூனையை அங்கே எடுத்துச் சென்றதும், பூனை தாவிச்சென்று சில விநாடிகளுக்குள்ளாக சில பல எலிகலைப் பிடித்து கபளீகரம் செய்தது. அதைக் கண்ட மக்கள் நேராக அரசனிடம் சென்று அந்தப் பூனையை வாங்குமாறு கேட்டுக்கொண்டனர். அரசனும் ஒரு கோவேறுகழுதை சுமக்கும் அளவுக்குத் தங்கத்தைக் கொடுத்து பூனையை வாங்கிக்கொண்டு கிளம்பிவிட்டான்.

[கதை இத்தோடு முடிந்துவிடும் என்று நீங்கள் எதிர்பார்த்தால், தவறு!]

பூனை அடுத்த சில மணிநேரம் அரண்மனையில் இருந்த எலிகளைப் பரலோகம் அனுப்பிக்கொண்டிருந்தது. அதற்கு திடீரென தாகம் எடுத்தது. தண்ணீர் வேண்டும் என்பதற்காக மியாவ், மியாவ் என்றது. பூனை என்ன சொல்கிறது என்று அங்குள்ள யாருக்கும் புரியவில்லை. அரசன் தனது அமைச்சர்களை அழைத்தான். ஆலோசனை செய்தனர். பிறகு ஒரு தூதனை அழைத்து பூனையிடம் சென்று கத்தாமல் இருக்குமாறும், தொடர்ந்து கத்தினால் பீரங்கியால் அதனைச் சுடவேண்டியிருக்கும் என்ற தகவலை சொல்லச் சொன்னார்கள்.

தூதன் பூனையிடம் சென்று கத்தாமல் இருக்குமாறு கேட்டுக்கொண்டான். பூனை பதிலுக்கு மியாவ், மியாவ் என்றது. “மாட்டேன், மாட்டேன்” என்று அது சொல்கிறது என்று இவர்கள் எடுத்துக்கொண்டனர். உடனே தளபதி தனது பீரங்கிப் படைகளைக்கொண்டு பூனையைச் சுற்றி வளைத்துக்கொண்டார். முதல் குண்டு பூனைமீது பாய்வதற்குள் பூனை தாவிக் குதித்து ஓடிவிட்டது. பீரங்கிகளால் மாற்றி மாற்றிச் சுட, அரசனது அரண்மனை சுக்குநூறாக உடைந்து தூள் தூளாகியது!

[இப்பத்தாங்க கதையே முடியுது!]