Thursday, July 03, 2008

ரிவர்ஸ் மெர்ஜர்

பங்குச்சந்தை பட்டியலில் இல்லாத ஒரு தனி நிறுவனம் (Private Limited), பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள ஒரு பொது நிறுவனத்தை (Public Limited) விலைக்கு வாங்கி தன்னோடு இணைத்து தானே பப்ளிக் லிமிடெட் நிறுவனமாக மாறுவதுதான் ரிவர்ஸ் மெர்ஜர்.

இரண்டு நாள்களுக்குமுன் செய்தித்தாளில் சுபிக்‌ஷா சூப்பர் மார்க்கெட் நிறுவனம் பற்றி இப்படி ஒரு செய்தி வெளியாகியுள்ளது.

பொதுவாக ஒரு நிறுவனம் ஏன் பங்குச்சந்தைக்குப் போகிறது?

(1) முதலீட்டைப் பெருக்க. ஒரு கட்டத்துக்குமேல் தனி மனிதர்களிடமிருந்து தேவையான அளவுக்கு முதலீட்டைச் சேகரிக்கமுடியாது. அப்போது பங்குச்சந்தையில் நிறுவனத்தைக் கொண்டுவந்து IPO என்னும் வழியின்மூலம் அதிகமான மூலதனத்தைப் பெறமுடியும்.

(2) லிக்விடிட்டியை ஏற்படுத்த. ஒரு பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் பங்குகளை நினைத்தநேரத்தில் விற்றுவிடமுடியாது. வாங்குவதற்கு யாரும் தயாராக இல்லாமல் இருக்கலாம். யாரெல்லாம் அந்தப் பங்குகளை வாங்கத் தயாராக உள்ளனர் என்பதே தெரியாது. ஆனால் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனத்தின் பங்குகளை வாங்க நிறையப் பேர் காத்திருப்பார்கள். அவர்கள் என்ன விலை தரத் தயாராக உள்ளனர் என்பதையும் டிரேடிங் டெர்மினலில் பார்க்கலாம். இதனால் வேண்டும்போது பங்குதாரர்கள் தங்களிடம் இருக்கும் பங்குகளில் சிலவற்றை விற்கமுடியும். விற்ற இரண்டு நாள்களில் பணம் கைக்கு வைந்துவிடும்.

ஆனால் யாரும் நினைத்தமாத்திரத்தில் IPO போய்விடமுடியாது. அதற்கென பல சடங்குகள் உள்ளன. SEBI என்ற கட்டுப்பாட்டு வாரியத்திடம் அனுமதி பெறவேண்டும். IPO-க்காக மெர்ச்சண்ட் பேங்கர்களை நியமிக்கவேண்டும். ரெட் ஹெர்ரிங் பிராஸ்பெக்டஸ் என்பதனை செபியிடம் சமர்ப்பிக்கவேண்டும். இப்போது இருப்பது போன்ற மோசமான நிலை பங்குச்சந்தையில் இருந்தால் IPO-வை கேன்சல் செய்யவேண்டியதுதான்.

இந்தப் பிரச்னைகள் இல்லாமலேயே பங்குச்சந்தையில் பட்டியலிட வைப்பதற்கு ரிவர்ஸ் மெர்ஜர் உதவும். சுபிக்‌ஷா நிறுவனத்துக்கு 1,480 கடைகள் உள்ளன. கடந்த ஆண்டின் வருமானம் ரூ. 2,300 கோடி. ஆனால் தனி நிறுவனம்.

மெட்ராஸ் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள ப்ளூ கிரீன் கன்ஸ்டரக்‌ஷன்ஸ் அண்ட் இன்வெஸ்ட்மெண்ட் என்ற நிறுவனத்தின் 40% பங்குகளை ரூ. 2 கோடிக்கு சுபிக்‌ஷா வாங்கியுள்ளது. அதாவது இந்த “ஷெல்” நிறுவனத்துக்கு மதிப்பு மொத்தமாகவே ரூ. 5 கோடிதான். சுபிக்‌ஷாவின் மதிப்போ குறைந்தபட்சம் ரூ. 5,000 கோடியாகவாவது இருக்கும்.

எப்படி இந்த ரிவர்ஸ் மெர்ஜரை நிகழ்த்துவார்கள்? சுபிக்‌ஷாவின் 60% பங்குகள் அதன் புரோமோட்டரான சுப்ரமணியன் மற்றும் அவரது உறவினர்களிடம் உள்ளது. மீதம் ஐசிஐசிஐ வென்ச்சர்ஸ் போன்ற பிறரிடம் உள்ளது. முதலில் சுபிக்‌ஷா நிறுவனமே, ப்ளூ கிரீனின் 100% பங்குகளை வாங்கிவிடும். அடுத்து ஷேர் ஸ்வாப் - பங்குகளைப் பரிமாற்றிக்கொள்வதன்மூலம், சுபிக்‌ஷா நிறுவனத்தின் பங்குகளை வைத்திருப்பவர்களுக்கு, அதை வாங்கிக்கொண்டு, அதற்குபதில் ப்ளூ கிரீனின் பங்குகளைத் தருவார்கள். இது நடப்பதற்குமுன் சுபிக்‌ஷா நிறுவனத்தின் சப்சிடியரியாக ப்ளூ கிரீன் இருக்கும். இந்த ஷேர் ஸ்வாப் முடிந்ததும் ப்ளூ கிரீனின் சப்சிடியரியாக சுபிக்‌ஷா மாறிவிடும்.

அடுத்ததாக, ப்ளூ கிரீனின் கையில் இருக்கும் சுபிக்‌ஷா நிறுவனத்தின் பங்குகளை கேன்சல் செய்து இரண்டு நிறுவனங்களையும் முழுவதாக இணைத்துவிடுவார்கள். அடுத்து, பெயர் மாற்றம் நடைபெறும். ப்ளூ கிரீன் என்பதை சுபிக்‌ஷா லிமிடெட் என்று பெயர் மாற்றம் செய்துவிட்டால் இப்போது பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட சுபிக்‌ஷா நிறுவனம் தயார்.

அடுத்து இதன் பங்குகளுக்கு என்ன விலை என்ற கேள்வி வரும். இதன் பங்குகள் சந்தைக்கு விற்பனைக்கு வர, சந்தையில் உள்ளவர்கள் என்ன விலைக்கு வாங்கத் தயாராக இருக்கிறார்களோ அந்த விலைக்கு பங்குகள் ஏறத்தொடங்கும். அதற்கு ஒரு வழிகாட்டியாக, ஏதாவது சில அனலிஸ்டுகள், நிறுவனத்தின் லாப நஷ்டக் கணக்குகளைப் பார்த்து, P/E கணக்குகளைப் போட்டு, இதன் பங்குகளை இன்ன விலைக்கு வாங்கலாம் என்று சொல்வார்கள். அல்லது சுபிக்‌ஷா லிமிடெட், PE முதலீட்டாளர் யாருக்காவது 5% பங்குகளை ஒரு குறிப்பிட்ட விலைக்கு விற்க, அந்த விலையே வழிகாட்டி விலையாக இருக்க நேரிடும்.

அதற்கு சில மாதங்கள் கழித்து சுபிக்‌ஷாவின் சந்தை விலை ஓரிடத்தில் வந்து நிற்கும். அந்த நேரத்தில் follow-on offering ஒன்றைச் செய்து, சுபிக்‌ஷா மேற்கொண்டு முதலீட்டைத் திரட்டலாம்.

***

இது நல்ல வழியா என்றால், பெரும்பாலும் அமெரிக்கா, பிரிட்டன் போன்ற சந்தைகளில் கண்ணியமான நிறுவனங்கள் பெரும்பாலும் இதுபோன்ற ரிவர்ஸ் மெர்ஜரில் ஈடுபடா. இந்தியாவில் அதிகமாக ரிவர்ஸ் மெர்ஜர் நடந்தது கிடையாது. அப்படி நடந்து முன்னிலையில் இருக்கும் நிறுவனங்கள் ஏதும் எனக்கு ஞாபகத்தில் இல்லை. அதனாலேயே ரிவர்ஸ் மெர்ஜர் என்றால் கெட்டது என்றாகிவிடாது.

இந்த “ரிவர்ஸ் மெர்ஜர்” நடந்தால் மார்க்கெட் இதனை எப்படிப் பார்க்கிறது என்பது சுவாரசியமாக இருக்கும்.

5 comments:

  1. ரிவெர்ஸ் மெர்ஜர் என்பது இந்தியாவில் தான் ஒருமாதிரியாக கெட்டதாக மாறி போனது. உலகளவில், ரி.மெ சகஜம். ஆயில் ரேகை எழுதும் பா.ராவிடம் கேட்டால், ரி.மெ ஆன ஆயில் நிறுவனங்களை பட்டியிலிடுவார். எம்.டி.என்.- அனில் அம்பானி பேச்சு வார்த்தை கூட ஒரு மாதிரியான ரி.மெ தான்.

    லண்டன் ஏய்ம் சந்தையில் (Alternative Investment Market) ரி.மெ பண்ணுவதற்காகவே பணம் சேர்க்கும் நிறுவனங்கள் இருக்கின்றன. பணத்தினை பொதுமக்களிடமிருந்து வசூலித்து, பின் அந்த பணத்தினை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று யோசிக்கும் வகையில் இந்நிறுவனங்கள் ஆளுமைப்படுத்தப்பட்டிருக்கும். இவர்கள் முக்கால்வாசி யோசிப்பது ரி.மெ அல்லது எல்.பி.ஒ என்று சொல்லப்படும் leveraged buy outs, அதாவது பெரும்பணம் கொடுத்து ஒரு மொத்த நிறுவனத்தையும் வாங்கி, இவர்களை நடத்துவது. ரி.மெ போகக்கூடிய சூழல் இந்தியாவில் குறைவு. காரணம் நிறுவனத்தின் ஸ்தாபகர்கள். இன்னமும் இந்தியாவில் பொது நிறுவனத்தினை கூட sole proprietership மாதிரியான நிலையில் நடத்தும் நிறுவனர்கள் அதிகம். மற்றும் இந்திய தொழில்முனைவோர்களின் ஈகோ ரி.மெ பண்ண பெரும்பாலும் இடம் கொடுக்காது.

    இந்திய பங்குச்சந்தை இன்று இருக்கும் சூழலில், இம்மாதிரியான ஷெல் நிறுவனங்கள் மூலம் ரி.மெ பண்ணும் சாத்தியக்கூறுகள் அதிகம். ஆனால், இந்தியாவில் பீ.ஈ நிறுவனங்கள் அதிகம், அதனால், ரி.மெயினை விட, பீ.ஈ மூலம் பணம் பெற்றுக் கொண்டு, சந்தை சமநிலைக்கு வந்த பின் ஐபீஒ போக தான் பெரும்பாலான நிறுவனங்கள் காத்து கொண்டிருக்கின்றன. எம்மார் எம்.ஜி.எப், வொர்க்கார்ட் ஹாஸ்பிடல்ஸ் ரி.மெ-க்கான சாத்தியங்கள் இருக்கிறது. எம்மார் பி.ஈ வழியாக போய்விட்டார்கள், இருந்தாலும் ஐபிஒ போக எதிர் கொண்டிருக்கிறார்கள். வொர்க்கார்ட் ஹாஸ்பிடல்ஸ் நிலை தெரியவில்லை. நான் இப்போது மூதலீட்டு ஆலோசனை செய்து கொண்டிருக்கும் ஒரு பெரும் மருத்துவமனை, ரி.மெ வேண்டாம், பீ.ஈ போகலாம் என்று சொல்லிவிட்டார்கள். ஆக, ரி.மெ இந்தியாவில் பரவலாக நடக்காது என்றுதான் தோன்றுகிறது.

    இதுதாண்டி, ரி.மெ போக யோசித்து கொண்டிருக்கும் சிறு நிறுவனங்கள் pinksheets.com பக்கம் தங்கள் பார்வையினை ஒடவிடலாம்.

    ReplyDelete
  2. இந்த முறையில் சில குழப்பங்கள் இருப்பது போலத் தோன்றுகிறதே?

    உதாரணமாக, x என்கிற பிரைவேட் லிமிடட் நிறுவனத்துக்கு, பங்குச் சந்தையில் நுழையத் தேவையான யோக்கியதை இல்லை என்று செபி ஏற்கனவே ஆப்பு வைத்திருந்தால், இந்த x, y என்கிற லிஸ்டட் நிறுவனத்தை வாங்கி அதன் மூலம் பின் வழியாக பங்குச் சந்தைக்குள் நுழைவதை செபி எப்படிக் கட்டுப்படுத்தும்?

    சுபிக்ஷா, லிஸ்டட் நிறுவனத்தின் 40% பங்குகளை வாங்கும் என்றால், மீதம் உள்ள 60 சதவீத பங்குகளை, அவற்றின் உரிமையாளர்களுக்கு , ரிவர்ஸ் மெர்ஜருக்குப் பிறகு, சுபிக்ஷாவின் பங்குகளாக மாற்றித் தரவேண்டும் இல்லையா? அந்த விலையை எப்படிக் கண்டுபிடிப்பார்கள்?

    மொத்ததிலே ஏதோ போங்கு ஆட்டம் போலத்தான் தோன்றுகிறது?

    ReplyDelete
  3. There is nothing wrong with it.

    A small co. which is a subsidiary of a bigger one, can do for markets sake, merge backwards!

    Here Subiksha brand name is good! so if Courts allow, promoters willing, they can get sold, and then get the parents merged with itself, getting the rights of a listed co.

    Regards
    Vijay

    ReplyDelete
  4. நாராயண்: எம்.டி.என் - ரிலையன்ஸ் இன்ஃபோகாம் இணைப்பை நிஜமாக “ரிவர்ஸ் மெர்ஜர்” என்று சொல்லமுடியுமா என்று தெரியவில்லை. இரண்டு கிட்டத்தட்ட சம அளவுள்ள (மார்க்கெட் கேப்) நிறுவனங்கள், இரண்டுமே லிஸ்டட் நிறுவனங்கள். இரண்டும் இணையப்போகின்றன.

    ஆனால் நான் இங்கே குறிப்பிட்டுள்ளது லிஸ்ட் ஆகாத பிரைவேட் கம்பெனி பெரிதாகவும், லிஸ்ட் ஆகியுள்ள கம்பெனி உப்புமா கம்பெனியாகவும் இருக்கும்போது, பின்வாசல் வழியாக லிஸ்ட் ஆவதற்காகச் செய்யும் சில காரியங்களை மட்டுமே.

    இதனாலேயே சுபிக்‌ஷா எதோ தில்லுமுல்லு செய்கிறது, போங்காட்டம் என்று நான் நம்பவில்லை. இன்றைய சந்தை நிலையில் ஐ.பி.ஓ செய்வது தற்கொலை செய்வதற்குச் சமம். எனவே சுபிக்‌ஷா இந்த முறையைப் பின்பற்றி இருக்கலாம்.

    இந்தியாவில் ஏன் ரி.மெ அதிகமாக நடப்பதில்லை என்பதற்கான காரணங்களை நான் யோசித்ததில்லை. ஆனால் இன்றைய நிலையில் பி.ஈ பக்கம் போகவும் பலர் தயங்குவார்கள். இன்றைய செய்திப்படி, பி.ஈ ஆசாமிகள் வேல்யூவேஷனை எப்படியடா இறக்கலாம் என்ற யோசனையில் இருக்கிறார்கள் என்கிறது பிசினஸ் ஸ்டாண்டர்ட்.

    ReplyDelete
  5. //உதாரணமாக, x என்கிற பிரைவேட் லிமிடட் நிறுவனத்துக்கு, பங்குச் சந்தையில் நுழையத் தேவையான யோக்கியதை இல்லை என்று செபி ஏற்கனவே ஆப்பு வைத்திருந்தால், இந்த x, y என்கிற லிஸ்டட் நிறுவனத்தை வாங்கி அதன் மூலம் பின் வழியாக பங்குச் சந்தைக்குள் நுழைவதை செபி எப்படிக் கட்டுப்படுத்தும்?//

    எனக்கும் இந்த சந்தேகம் வந்தது

    ReplyDelete