Tuesday, May 04, 2010

அனந்தசயனச் சிற்பத் தொகுதி

எத்தனையோ கோயில்களில் பள்ளிகொண்ட விஷ்ணுவைப் பார்க்கலாம். அவர் வெறும் தரையில் படுத்திருக்கலாம் அல்லது பெரும்பாலும் பாம்புப் படுக்கையில் படுத்திருக்கலாம். சாதாரணமாக வணங்குதலுக்குரிய சிற்பங்களில் காணக்கிடைக்காத ஒன்று இங்கே மஹிஷாசுரமர்தினி மண்டபத்தில் காணப்படும் அனந்தசயனத் தொகுதியில் உள்ளது.

இந்தக் கதையும் மார்க்கண்டேய புராணத்தின் தேவி மஹாத்மியத்தில் வருவதுதான். மது, கைடபன் என்ற இரு அரக்கர்களை விஷ்ணு அழிக்கும் கதை. தேவி பாகவதத்தில் சற்றே மாறுபட்ட வெர்ஷன். மகாபாரதத்திலும் இந்தக் கதை வருகிறது.

முதலில் தேவி மஹாத்மிய வெர்ஷனைப் பார்ப்போம். பிரளயத்துக்குப்பின் இந்த உலகை மீண்டும் படைத்து, பிரம்மாவை உருவாக்கி, சிருஷ்டிக்கான செயல்களில் அவரை இறங்கவைத்தபின் விஷ்ணு யோகநித்திரையில் ஆழ்கிறார். அப்போது விஷ்ணுவின் காது அழுக்கு உருண்டு திரண்டு, அதிலிருந்து மது, கைடபன் என்று இரு அரக்கர்கள் வருகின்றனர்.

அவர்கள் இருவரும் பிரம்மாவைக் கொல்லச் செல்கின்றனர். பிரம்மாவோ பயந்து விஷ்ணுவிடம் ஓடுகிறார். விஷ்ணு யோகநித்திரையில் இருப்பதைப் பார்த்து, மாயையாகிய மஹா சக்தியை வழிபட ஆரம்பிக்கிறார். விஷ்ணுவின் யோகநித்திரைக்குக் காரணமே மாயைதான். பிரம்மாவின் புகழுரையைக் கேட்ட மாயை விஷ்ணுவிடமிருந்து விலகிக்கொள்ள விஷ்ணு விழித்தெழுகிறார். மது, கைடபனுடன் போர் புரிகிறார்.

போர் 5,000 ஆண்டுகளுக்குத் தொடர்ந்து நடக்கிறது. ஆனால் விஷ்ணுவால் அரக்கர்களை ஒன்றும் செய்யமுடிவதில்லை. அப்போது மாயை அந்த அரக்கர்களைத் தழுவ, அவர்கள் இருவரும் விஷ்ணுவிடம், ‘நீ எங்களிடம் வரம் கேள்’ என்கின்றனர். ‘நீங்கள் இருவரும் என் கையால் இறக்கவேண்டும்’ என்ற வரத்தை விஷ்ணு கேட்கிறார்.

வரம் கேட்டால் கொடுத்துவிட வேண்டும்! அதனால் உயிரே போனாலும் சரி. அரக்கர்கள் விஷ்ணு கேட்டதைக் கொடுக்க, அவர் தன் சுதர்சனச் சக்கரத்தால் அவர்களது தலையைக் கொய்கிறார். பிரம்மா தப்பிக்கிறார்.

தேவி பாகவதத்தில் இன்னும் கொஞ்சம் உப்பு, மிளகாய் சேர்த்துத் தயாரித்துள்ளார்கள். இங்கேயும் விஷ்ணுவின் காது அழுக்கில் உருவானவர்கள்தான் இந்த அரக்கர்கள். இங்கேயும் அவர்கள் பிரம்மாவைப் பொலி போடச் செல்ல, அவர் ஓடிவந்து தேவியை வணங்க, அவள் விஷ்ணுவை விழிக்கச் செய்ய, போர் நடக்கிறது. ஆனால் போரில் விஷ்ணுவால் ஜெயிக்க முடிவதில்லை. சோர்ந்து போகிறார். ஆனால் அரக்கர்களோ சோர்வதில்லை. எனவே விஷ்ணு, அரக்கர்களிடம் பேசிவிட்டு டைம் அவுட் வாங்குகிறார்.

அப்போதுதான் விஷ்ணுவுக்கு விவரம் புரிகிறது. அரக்கர்கள் இருவரும் தேவியிடம் வரம் வாங்கியவர்கள். அவர்கள் எப்போது விரும்புகிறார்களோ, அப்போதுதான் தங்கள் உயிரை விடுவார்கள். உடனே விஷ்ணு, தேவியை வேண்ட, அவள் அரக்கர்கள்மீது தன் கடைக்கண் பார்வையை காமக் கணைகளாக வீசுகிறாள். அப்போது விஷ்ணு அரக்கர்களிடம் தான் அவர்களது சண்டையை மெச்சி, அவர்களுக்கு வரம் தர விரும்புவதாகச் சொல்கிறார். ஆனால் தற்பெருமை மிக்க அரக்கர்கள், ‘உன் வரம் எனக்கு வேண்டாம். நீ வரம் கேள், நாங்கள் தருகிறோம்’ என்கிறார்கள். உடனே விஷ்ணு அவர்களைக் கொலை செய்ய வரம் கேட்டு, பெற்று, அவர்களது கழுத்தை அறுக்கிறார்.

மகாபாரதக் கதையில் தேவியோ, மாயையோ வருவதில்லை. விஷ்ணு மது, கைடபர்களை அழிக்கிறார்.

***

மஹிஷாசுரமர்தினி மண்டபக் காட்சியை இப்போது பாருங்கள்.

Anantasayana Panel, Mahishasuramardini Mandapam, Mamallapuram

மஹிஷாசுரமர்தினி தொகுப்புடன் ஒப்பிடும்போது மிகச் சில பாத்திரங்களே இங்கு உள்ளனர். பாற்கடல். ஆதிசேஷன் படுக்கையாக உள்ளது. ஆயிரம் தலை உள்ள ஆதிசேஷனைக் காண்பிக்கும்போது ஐந்து தலையை மட்டும் காட்டுவது வழக்கம். இங்கே ஐந்து தலைகளும் மிக அழகாகக் கொண்டுவரப்பட்டுள்ளன. புடைப்புச் சிற்பம் என்றாலுமேகூட ஆழத்தைக் காண்பிக்க, மூன்று தலைகள் செங்குத்தாக மேலே செல்லும்; மூன்று தலைகள் கிடைமட்டமாக இருக்கும். சேர்த்துப் பார்க்கும்போது ஆழம் வந்துவிடுகிறது அல்லவா? ஆதிசேஷன் சுருட்டிக்கொண்டிருப்பது பொதுவாக நாம் எப்போதும் பார்க்கும் வகையில் அல்ல. ஒரு கார்க்ஸ்க்ரூ மாதிரி சுருட்டிக்கொண்டுள்ளது.

விஷ்ணுவின் வலக்கை ஆயாசமாக நன்கு நீண்டுள்ளது. இடக்கை குத்திட்டு முழங்கைக்கு மேல்பகுதி எழும்பியுள்ளது. கழுத்தில் ஒரேயொரு எளிமையான மாலை. அந்த மாலையும் அழகாக புவி ஈர்ப்புக்குத் தோதாக கீழ் நோக்கிப் படர்ந்து விழுந்துள்ள அழகைப் பாருங்கள். தலையில் கிரீடம். எப்போதுமே விஷ்ணுவைக் காண்பிக்கும்போது தலையில் கிரீடம் இருக்கவேண்டும் என்பது சில்ப மரபு. அதனால்தான் தூங்கும்போதும் கிரீடம்!

கால்பக்கம் மதுவும் கைடபனும். ஒருவன் நன்கு திரும்பிக்கொண்டு முதுகில் கைவைத்து நிற்கிறான். மற்றொருவன் தாக்கத் தயாராக கையில் ஒரு கழியை வைத்துள்ளான். அவனும் பாதி திரும்பி, முகத்தை ஒரு கோணத்தில் வைத்துள்ளான். விஷ்ணு இன்னும் நித்திரையிலிருந்து எழுந்திருக்கவில்லை. அவரது காலடியில் லக்ஷ்மி அவரை எழுப்பும் விதமாகத் துதிக்கிறாள். இந்தத் தொகுதியில் பிரம்மா கண்ணிலேயே படுவதில்லை. ஆனால் மேலே இருவர், கீழே இருவர் என்று நான்கு பேர் உள்ளனர்.

அவர்கள் ஆயுத புருஷர்கள் எனப்படுகிறார்கள். கீழே இருப்பது விஷ்ணுவின் ஆயுதங்களான சக்கரம், சங்கு ஆகியவற்றின் வடிவங்கள். மேலே இருப்பது கதை, வாள் ஆகியவற்றின் வடிவங்களாக இருக்கலாம். அல்லது அவர்கள் வேறு சில வானவர்களாக இருக்கலாம். மேலே உள்ளவர்கள் பறந்து செல்வதுபோலக் காண்பிக்கப்படுகிறார்கள். கால்களை அவர்கள் வைத்திருக்கும் விதத்திலிருந்து இதனை நாம் உணர்ந்துகொள்ளலாம். இங்கு மட்டுமல்ல, மாமல்லபுரச் சிற்பத்தொகுதிகள் பலவற்றிலுமே இதுதான் கன்வென்ஷன்.

விஷ்ணு நித்திரையில் இருக்க, தாக்கவரும் மது, கைடபர்களை ஆதிசேஷன், தானே ஒரு வழி பண்ணிவிட முடிவு செய்து, ஹூம் என்று விஷக் காற்றாக மூச்சுவிடுவதாகவும், அந்தக் காற்றின் வெப்பம் தாளாமல் அரக்கர்கள் உடலைத் திருப்பிக்கொண்டு, முதுகில் கைவைத்திருப்பதாகவும் ஒரு வர்ணனையாளர் சொல்கிறார்.

எதிரே இருக்கும் மஹிஷாசுரமர்தினி சிற்பத்தில் காணப்படும் களேபரங்களுக்கு மாற்றாக, இங்கே ஒருவித அமைதி தெரிகிறது, ஆனால் அதே சமயம் ஆக்‌ஷனும் உள்ளது.

(தொடரும்)

Monday, May 03, 2010

மஹிஷாசுரமர்தினி

மார்க்கண்டேய புராணத்தின் ஒரு பகுதியான தேவி மஹாத்மியத்தில் ஒரு கதை வருகிறது. மஹிஷாசுரன் என்ற அரக்கன், தலை எருதாகவும் உடல் மனித உடலாகவும் கொண்டவன். கடுந்தவம் புரிந்த இந்த அரக்கன், ஏகப்பட்ட வரங்களை வாங்கிக்கொண்டு தேவர்களை இம்சிக்கத் தொடங்கினான். இவனை இந்திரனாலோ வேறு எந்தத் தேவனாலோ, சிவனாலோ, விஷ்ணுவாலோ தனியாகச் சண்டைபோட்டு வெல்ல முடியாது.

எனவே மும்மூர்த்திகளும் ஒன்று சேர்ந்தனர். தங்களது அம்சங்களை, தங்களது ஒட்டுமொத்த சக்தியை ஒன்றுதிரட்டி ஓர் உருவாக்கினார். உதித்தாள் துர்கை. சிவனின் அம்சம் அவளது முகம். யமனின் அம்சம் அவளது தலைமயிர். விஷ்ணுவின் அம்சம் அவளது கைகள். சந்திரனின் அம்சம் அவளது மார்பகங்கள். இந்திரனின் அம்சம் அவளது வயிறு. வருணனின் அம்சம் அவளது தொடைகளும் கால்களும். பூமியின் அம்சம் அவளது இடை. பிரம்மாவின் அம்சம் அவளது பாதங்கள். சூரியன், அவளது கால்விரல்கள். வசுக்கள், அவளது கைவிரல்கள். குபேரன் அவளது மூக்கு. பிரஜாபதி, அவளது பற்கள். அக்னி, அவளது மூன்று கண்கள். வாயு, அவளது காதுகள்.

இந்திரன் முதலான தேவர்கள், மும்மூர்த்திகள் தங்களது ஆயுதங்களையும் அவளுக்கு அளித்தனர். சிவன் திரிசூலத்தை அளித்தார். விஷ்ணு சக்கரத்தை. வருணன் சங்கை. அக்னி குத்தீட்டியை. மருதன் வில்லையும் நிறைய அம்புகளையும். இந்திரன் மின்னலையும் தன் யானை ஐராவதம் மூலமாக ஒரு மணியையும். யமன், ஒரு தடிக்கழியை. வருணன் சுருக்குக்கயிறை. பிரம்மா அக்‌ஷர மாலையையும் கமண்டலத்தையும் கொடுத்தார். சூரியன் அவளது உடலிலிருந்து வெளிப்படும் கிரணங்களை அளித்தான். காலம் அவளுக்கு வாளையும் கேடயத்தையும் கொடுத்தது.

பாற்கடல் அவளுக்கு கழுத்தில் நவரத்தின மாலை, அழியாத உடைகள், தலைக்குக் கிரீடம், காதுக்குக் குண்டலங்கள், கைக்கு வளையல்கள், அர்த்தசந்திர ஹாரம், வங்கி, சிலம்பு, விரல்களுக்கு மோதிரங்கள் ஆகியவற்றை அளித்தது. விஸ்வகர்மா ஜொலிக்கும் கோடரியையும் தகர்க்கமுடியாத கவசத்தையும் கொடுத்தார். கடல்கள் தாமரை மலர்களால் ஆன மாலையையும், கையில் பிடித்துக்கொள்ள ஒரு தாமரை மலரையும், மார்பில் அணிய ஒரு மாலையையும் கொடுத்தன. அவளது வாகனம் சிங்கம் - இமயமலை கொடுத்தது.

குபேரன் மது நிரம்பிய குவளையைக் கொடுத்தான். ஆதிசேஷன் ரத்தின மாலை கொடுத்தான்.

தேவி, அவளது கணங்களுடன் போருக்குப் புறப்பட்டாள். மறுபக்கம் மஹிஷாசுரன் அவனது அரக்கப் படைகளுடன்.

அரக்கர்கள் தங்கள் ஆயுதங்களுடன் தேவிமீது பாய்கின்றனர். அவளோ அம்புகளைச் சரமாரியாக எய்துகொண்டே, தன் வாளினால் அரக்கர்களை சீவித் தள்ளுகிறாள். எதிர்கொண்டு மோதும் சிக்சுரன், சமரன், உதாக்ரன், கராளன், உத்தாதன், பாஸ்கலன், உக்ராஸ்யன், உக்ரவீர்யன், மஹாஹானு, பிதாலன், துர்தரன், துர்முதன் என அனைவரும் கொல்லப்படுகின்றனர். மஹிஷாசுரன் கோபம்கொண்டு தேவியைத் தாக்கவருகிறான். தன் கையிலிருந்த சுருக்குக் கயிறை அவன்மீது வீசி அவனை அவள் இறுக்கக் கட்ட, அவன் தன் எருது வடிவிலிருந்து வெளியேறி, கையில் கத்தியுடன் அவள்மீது பாய்கிறான். தேவி அவன்மீது அம்பை எய்து வெட்டுகிறாள். அவன் ஒரு யானையாக மாறுகிறான். யானை, அவளது சிங்க வாகனத்தை முட்டுகிறது. தேவி தன் வாளால் அந்த யானையின் தும்பிக்கையை அறுக்கிறாள். அவன் மீண்டும் எருது வடிவுக்கு மாறுகிறான்.

தேவி தன் கையிலிருக்கும் மதுக் கோப்பையால் மதுவைக் குடித்துவிட்டு கண்கள் ரத்தச் சிவப்பாகுமாறு சிரித்தாள். அவன்மீது பாய்ந்து குதித்து, அவனைக் கீழே தள்ளி, தன் ஈட்டியால் அவனைக் குத்தினாள். தன் வாளால் அவன் தலையை அறுத்துத் தள்ளினாள்.

கந்தர்வர்கள் பாட, அப்சரஸ்கள் ஆட, தேவர்களும் முனிவர்களும் அகமகிழ்ந்தனர்.

மஹிஷாசுரமர்தினி மண்டபத்தில் காணப்படும் தொகுதியில், தேவி சிங்க வாகனத்தில் வீற்றிருக்கிறாள். அவளது கணங்கள் அவளைச் சுற்றிச் சூழ்ந்துள்ளார்கள். அவளுடன் ஒரு பெண் போராளி உருவிய கத்தியோடு நிற்கிறாள். ஒரு அரக்கன் தலைகுப்புற விழுகிறான். அவனது மொட்டை மண்டை மட்டும்தான் காணக் கிடைக்கிறது. கீழே ஓர் அரக்கனுடைய அறுந்த தலை கிடக்கிறது. தேவியின் ஒரு கையில் வில், ஒரு கை தூணியிலிருந்து அம்பை உருவுகிறது. ஒரு கையில் வாள், ஒரு கையில் கேடயம். மஹிஷாசுரனின் வாள் இடுப்பில் உள்ளது. கையில் ஒரு தடிக்கழி. அதனை அவன் வாகாகக் கையில் பிடித்துக்கொண்டு, எதிர்ப்பைக் காட்டும் வகையில் உறுதியோடு நிற்கிறான். தேவியின் தலையிலும் மஹிஷனின் தலையிலும் குடைகள் இருக்கின்றன. இருவருக்கும் இடையேயான போரில் இன்னமும் வெற்றி தோல்வி நிச்சயிக்கப்படவில்லை என்பதை இது காட்டுகிறது.

ஆனால் அரக்கர் படைகள் பின்வாங்கி ஓடும் நிலையிலும், தேவியின் கணங்கள் ஆக்ரோஷமாக முன் செல்லும் நிலையிலும் காணப்படுகின்றன.

Mahishasuramardini Panel, Mahishasuramardini Mandapam, Mamallapuram

பெர்ஸ்பெக்டிவ் வியூ, வானிஷிங் பாயிண்ட், பேலன்ஸ் என்றெல்லாம் ஓவியக்கலை தெரிந்தவர்கள் இந்தத் தொகுதியை நுட்பரீதியாக அலசலாம். அந்த அளவுக்கு எனக்குத் தெரியாது. ஆனால் அப்படியே ஒருகணம் நின்று பார்க்கும்போது தேவி மஹாத்மியம் உங்கள் கண்களில் ஓடும் என்பதை மட்டும் சொல்லமுடியும். எருதின் தலையை மனித உடலுடன் இணைத்து உயிரூட்டம் கொடுக்கமுடியும், அதுவும் கருங்கல்லில் என்பதை பல்லவச் சிற்பிகள் காண்பித்துள்ளனர்.

இந்தத் தொகுதியில் தேவியைவிட நம்மை ஈர்ப்பது, நம் நினைவைவிட்டு அகலாமல் இருப்பது வில்லனான மஹிஷனின் உருவம்தான்.

Mahishasura in close-up. Mahishasuramardini Mandapam, Mamallapuram

அடுத்தது, அதிரணசண்ட மண்டபத்தின் முன் இருக்கும் சிறு கல்லில் உருவாக்கப்பட்டுள்ள மினி-மஹிஷாசுரமர்தினி தொகுதி. இங்கே மஹிஷனின் ஆட்டம் முடிந்துவிட்டது. அவன் தலைமீதுள்ள குடை வீழ்ந்துவிட்டது. தலையில் கிரீடம் இல்லை. தேவியின் தலைமீது இன்னமும் குடை உள்ளது. மஹிஷன் பின்வாங்கி ஓடுகிறான். குட்டிச் சிங்க வடிவில் உள்ள ஒரு கணம், பாய்ந்து அவன் கையைக் கடிக்கிறது. எருது முகத்தில் களைப்பும் பயமும் தெரிகின்றன. புஸ் புஸ் என்று மூச்சுவிட்டு, நாக்கு வெளியே தள்ளியிருக்கிறது. சிங்க வாகனம் கால்களை உயத்தித் தாக்கத் தயாராக உள்ளது. தேவியும் கீழே இறங்குகிறாள். மஹிஷன்மீது பாய்ந்து, அவனைக் கீழே தள்ளி கழுத்தை வெட்டவேண்டியதுதான் பாக்கி. தேவி இறங்க வசதியாக அவள் காலடி எடுத்துவைக்க ஓர் ஆசனம் வைக்கப்பட்டுள்ளது.

Minor Mahishasuramardini Panel, Athiranachanda Mandapam, Mamallapuram

மாமல்லையில் துர்கை பல இடங்களில் காணப்படுகிறாள். வராக மண்டபத்தில், ஆதிவராக மண்டபத்தில், திரௌபதி ரதத்தில், திரிமூர்த்தி மண்டப சுவற்றில், கடற்கரைக் கோயில் பிரகாரத்தில் சிங்கவடிவிலான ஒரு கோயிலில், இன்னும் பல இடங்களில். கீழே திரிமூர்த்தி மண்டப சுவற்றில் அறுக்கப்பட்ட மஹிஷனின் தலைமீது நிற்கும் துர்கையைக் காணலாம். இந்தக் காலகட்டத்துக்குப் பிறகுதான் தமிழகக் கோயில்களில் பலவற்றிலும் நாம் காணும் மஹிஷன் தலைமீது நிற்கும் துர்கையைப் பார்க்கிறோம். இதுதான் அவை அனைத்துக்கும் ஆதி வடிவமாக இருக்கவேண்டும்.

Durga as Mahishasuramardini, Trimurti Mandapam, Mamallapuram

(தொடரும்)

மாமல்லையின் சிற்பத் தொகுதிகள்

மாமல்லபுரத்தில் மண்டபங்கள், ரதங்கள், கட்டுமானக் கோயில்கள் ஆகியவற்றுடன் மிக எளிதில் புரிந்துகொண்டு ரசிக்கக்கூடிய சிற்பத் தொகுதிகளும் உள்ளன. வணங்கக்கூடிய தெய்வங்கள், தங்கள் பரிவாரங்களுடன் இருக்கும் சிற்பத் தொகுதிகள் ஒருபக்கம் என்றால், புராண, இதிகாசங்களிலிருந்து ஒரு காட்சியைப் பிரதிபலிக்கும் சிற்பத் தொகுதிகள் மற்றொரு பக்கம்.

இங்கே நாம் இந்த புராண, இதிகாச சிற்பத் தொகுப்புகளை மட்டும் பார்ப்போம். இவற்றை சிறு குழந்தைகளுக்குக்கூட எளிதில் விளக்கிச் சொல்லிவிடமுடியும். கதை அல்லவா? இப்படித்தான் நான் என் மகளுக்கு மாமல்லபுரத்தை அறிமுகம் செய்தேன்.

மண்டபங்களுக்கு உள்ளாக நான்கு அற்புதமான சிற்பத் தொகுதிகள் உள்ளன: வராகத் தொகுதி, திரிவிக்கிரமத் தொகுதி, மஹிஷாசுரமர்த்தினி தொகுதி, அனந்தசயனத் தொகுதி. ஒரு மாபெரும் தொகுதி - மா தவத் தொகுதி (இமயமலைக் காட்சி) - அப்படியே ஒரு சிறு குன்றின்மீது செதுக்கப்பட்டுள்ளது. மற்றொன்று, கோவர்த்தனத் தொகுதி, இப்படித்தான் ஒரு மலை மீது செதுக்கப்பட்டிருந்தது. ஆனால் பின்னர் நாயக்கர் காலத்தில் இதன்மீது ஒரு மண்டபம் (கிருஷ்ண மண்டபம்) எழுப்பப்பட்டு, கோவர்த்தனத் தொகுதியின் அழகு பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது.

இவற்றைத் தவிர, சாலுவக்குப்பம் அதிரணசண்ட மண்டபத்தின் முன் இருக்கும் சிறு கல்லில் மற்றொரு மஹிஷாசுரமர்த்தினி தொகுதி காணப்படுகிறது. இமயமலைக் காட்சியின் மற்றொரு வடிவம் - மிகவும் சுமாரான தரத்தில் - மற்றொரு குன்றின்மீது காணப்படுகிறது. திரிமூர்த்தி மண்டபத்தின் பின்புறம் யானைகள், குரங்கு, மயில் கொண்ட ஒரு தொகுதி காணக்கிடைக்கிறது.

இவற்றை ஒவ்வொன்றாகக் காண்போம்.

(தொடரும்)

Sunday, May 02, 2010

பதிப்புக் காப்புரிமை - உரையாடல்

ஏப்ரல் 22 அன்று தமிழக நூலக ஆணையமும் புத்தகம் பேசுது இதழும் சேர்ந்து ஏற்பாடு செய்திருந்த ‘பதிப்புக் காப்புரிமை’ என்ற நிகழ்ச்சி எல்.எல்.ஏ கட்டடத்தில் நடைபெற்றது. அப்போதே இதைப்பற்றி எழுதவேண்டும் என்று நினைத்து நாள்கள் நழுவிவிட்டன. எனவே என் ஞாபகத்தில் இருப்பதை வைத்து எழுதுகிறேன்.

ஏகப்பட்ட பேர் பேச அழைக்கப்பட்டிருதனர். நான் கொஞ்சம் மெதுவாகத்தான் அரங்குக்குச் சென்றேன். சம்பிரதாயமான ஆசாமிகள் பேசிவிட்டுப் போயிருப்பார்கள்; உருப்படியான ஆசாமிகள் பேசுவதைக் கேட்கலாமே என்ற எண்ணம். நான் எதிர்பார்த்தபடியே சிலர் பேசிவிட்டுச் சென்றிருந்தனர். ஆனால் ஞாநியும் அப்போது பேசி முடித்திருந்தார். அவரது பேச்சு கடைசியில்தான் வரும் என்று நான் நினைத்தது தவறாகிவிட்டது. அவர் என்ன பேசினார் என்பதன் குறிப்புகளை அனுப்புமாறு அவரிடம் கேட்டிருக்கிறேன். எழுத்தாளர்களுக்கு குறைந்தபட்ச ராயல்டி என்று நிர்ணயிக்கவேண்டும் என்று அவர் பேசியதாகக் கேள்வி.

ஞாநி ராயல்டி சதவிகிதம் 10% அல்லது அதற்கும் குறைவாக இருப்பதை எதிர்க்கிறார் என்பதும், விற்பனையாளர்களுக்கான கமிஷனே 30-35% என்று இருக்கும்போது எழுதிய எழுத்தாளனுக்கு வெறும் 10% மட்டும்தானா என்னும் கேள்வியை முன்வைக்கிறார் என்பதும் நாம் ஏற்கெனவே பார்த்துள்ளோம். அது தொடர்பாக நான் முன்னமே எழுதியுள்ளேன். இதை மீண்டும் விரிவாக மற்றோர் இடத்தில் எழுத முற்படுகிறேன்.

இப்போது மீண்டும் பதிப்புக் காப்புரிமை கூட்டம். பதிப்புரிமை, காப்புரிமை என்ற இரண்டு வெவ்வேறு விஷயங்களை பச்சக் என்று ஒட்டி இந்த வார்த்தையை உருவாக்கிவிட்டார்கள் போல. ஒரு எழுத்தையோ, ஓவியத்தையோ, போட்டோவையோ... இப்படி ஏதோ ஒன்றைத் தம் சொந்த முயற்சியில், தம் சொந்த உழைப்பில் உருவாக்குபவர்களுக்குக் கிடைப்பதுதான் காப்புரிமை. அதன் வணிக சாத்தியங்களை அவர்கள் விரும்பினால் உரிமங்களாகப் பிறருக்குத் தரலாம். ஆனால் இதே ஆள்கள், பிறரிடம் சம்பளத்துக்காக வேலை செய்யும்போது உருவாக்கும் விஷயங்களுக்கு காப்புரிமை மாறுகிறது.

காப்புரிமை வைத்துள்ள ஒருவர் அந்தக் காப்புரிமையை பிறருக்கு ‘அசைன்’ செய்யலாம். அல்லது காப்புரிமையைத் தொடர்ந்து வைத்துக்கொண்டு, பதிப்புரிமையை மட்டும் குறிப்பிட்ட காலகட்டத்துக்கு ஒரு பதிப்பாளரிடம் தரலாம்.

நான் போனபோது பேசிக்கொண்டிருந்த வழக்கறிஞர் துரைசாமி, பெரியார் எழுத்துக்களைப் பதிப்பிப்பது சம்பந்தமாக திராவிடர் கழகத்துக்கு எதிரான வழக்கில் ஈடுபட்டிருப்பவர் என்று புரியவந்தது. ஆனால் அது சம்பந்தமாகத் தன்னால் ஏதும் பேசமுடியாது என்றும் வழக்கு இன்னும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது என்றும் சொன்னார். அதற்குமேல் அந்தப் பேச்சிலிருந்து வேறு ஏதும் அறியமுடியவில்லை.

மொழிபெயர்ப்பு பற்றி இரா.நடராசன் பேசினார். துரதிர்ஷ்டவசமாக, கம்யூனிஸ்டுகளின் முற்றுமுழுதான கருத்துகளைப் பின்பற்றி, காப்புரிமை என்பதே காலனியாதிக்க முதலாளிய சுரண்டல் கருத்து என்பதை முன்வைத்து எங்கெல்ஸை மேற்கோள் காட்டி, டபிள்யூ.டி.ஓ, பான் ஒப்பந்தம் போன்ற பலவற்றைத் தொட்டுப் பேசி, இந்தியாவின் காப்புரிமை தொடர்பான கருத்துக்கள் அனைத்தும் தேவையே இல்லை என்பதாக முடித்தார். இந்தக் கட்டுரை புத்தகம் பேசுது இதழிலோ அல்லது காப்புரிமை தொடர்பான சிறப்பிதழ் ஒன்றிலோ வரும் என்று நினைக்கிறேன். அதை எழுத்துவடிவில் படித்துவிட்டு மறுப்பு எழுதவேண்டும் என்று முடிவெடுத்துள்ளேன்.
நடராசன் மட்டுமல்ல, அவருக்குமுன் பேசிய துரைசாமியும் மொழிமாற்றம் தொடர்பாகப் பேசும்போது குறிப்பிட்ட ஒன்றை நான் கட்டாயம் இங்கே மறுத்தே ஆகவேண்டும். ஆங்கிலத்தில் ஒரு படைப்பு வருகிறது. அதனை மொழிமாற்றிப் பதிப்பிக்க, மூல ஆசிரியரிடம் உரிமம் பெறவேண்டும். இப்போது தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டாயிற்று என்று வைத்துக்கொள்வோம். இந்தத் தமிழ் வடிவத்தை தெலுங்கில் மொழிமாற்ற யாரிடம் உரிமை பெறுவது? யாரிடமும் உரிமம் பெறாமல் தமிழிலிருந்து தெலுங்குக்கு மொழிமாற்றி பதிப்பிக்கலாமா? நிச்சயம் அவ்வாறு செய்யலாம் என்றே நடராசன் பேசினார். இது முழுவதும் தவறு என்பது என் கருத்து.

முதலில் ஒரு படைப்பை மொழிமாற்ற யாரிடமும் உரிமை பெறவேண்டியதில்லை. அப்படி மொழிமாற்றி தனிச்சுற்றுக்கு அதனை அனுப்பும்பட்சத்திலும் யாரிடமும் உரிமம் பெறவேண்டியதில்லை. அதனை பொதுவில் பதிப்பித்து விலை வைத்து விற்க, அல்லது இலவசமாகவே இணையத்தில் பதிப்பிக்க என்று வரும்பட்சத்தில்தான் மூல ஆசிரியரிடம் அல்லது மூல ஆசிரியரின் மூல மொழிப் பதிப்பாளரிடம் உரிமம் பெறவேண்டும். அப்படிப்பட்ட மூலமொழியின் முதல் மொழ்பெயர்ப்பிலிருந்து மறு மொழிபெயர்ப்பு செய்யவும் யாரிடமும் உரிமம் கோரவேண்டியதில்லை. ஆனால் அந்த மொழிபெயர்ப்பைப் பதிப்பிக்கும்போதுதான் சிக்கல் வருகிறது. இங்கும் மூல மொழி எழுத்தாளரிடம் (அல்லது அவரது பதிப்பாளரிடம்) உரிமம் பெற்றாகவேண்டும் என்பது என் கருத்து. காப்புரிமை தொடர்பான சட்டங்கள் இதைத்தான் சுட்டிக்காட்டுகின்றன.

முதல் மொழிபெயர்ப்பாளரிடம் அனுமதி பெறவேண்டுமா? அது அவரது மொழிபெயர்ப்பில் ஏதேனும் விசேஷம் இருக்கிறதா என்பதை மட்டுமே பொருத்தது.

அடுத்து காந்தி கண்ணதாசன், பதிப்பகங்களும் காப்புரிமையும் என்பதுபற்றிப் பேசினார். தான் பஞ்சாபகேசன் என்ற வக்கீலிடம் ஜூனியராக இருந்தபோது அறிவுசார் சொத்துரிமை பற்றி சில வழக்குகளை எடுத்து நடத்தியது; கண்ணதாசன் என்ற படைப்பாளியின் மகனாக இருந்து பதிப்புரிமை தொடர்பான சில ஒப்பந்தங்களில் ஈடுபட்டது; இப்போது பதிப்பாளராக இருப்பது ஆகியவற்றைக் கொண்டு இது தொடர்பாகத் தன்னால் பேசமுடிவதைச் சுட்டிக்காட்டினார்.

தமிழ்ப் பதிப்பாளர்கள் எந்தவிதமான ஒப்பந்தங்களையும் எழுத்துபூர்வமாகச் செய்யாமல் இருப்பதன் குறைகளைச் சுட்டிக்காட்டினார். பொதுவாக தமிழ்ப் பதிப்புலகில் ‘அவுட்ரைட் ராயல்டி’ (சொல்லப்போனால் இதனை ராயல்டி என்றே சொல்லக்கூடாது - அவுட்ரைட் சேல் ஆஃப் காபிரைட் என்றுதான் சொல்லவேண்டும்) என்ற வகையில் வாய்மொழியாக ஒரு குறிப்பிட்ட அளவு பணம் கொடுத்து படைப்பை வாங்கி அதனை பதிப்பித்தபின், எழுத்தாளர் அதிகமாக அச்சடிக்கப்படும் புத்தகங்களுக்கு ராயல்டி கோரமுடியும் என்பதனைச் சுட்டிக்காட்டினார். ஒரு காகிதத்தில் எழுதி வாங்கிக்கொண்டால் ஒழிய, இது பின்னர் பிரச்னையைத் தரும் என்றார்.

கண்ணதாசனின் எழுத்துகளை வானதி பதிப்பகம் பதிப்பிக்கும்போது எந்தவித ஒப்பந்தமும் எழுத்துவடிவில் இல்லை என்றார். ஆனால் பூம்புகார் பதிப்பகம் கண்ணதாசன் எழுத்துகளைப் பதிப்பிக்க வந்தபோது மூன்று பக்கங்கள் கொண்ட ஒப்பந்தம் ஒன்றைக் கொடுக்க, அதை இவர் திருத்தி, குறைத்து ஒரு பக்க அளவில் வரும் ஒப்பந்தமாக மாற்றியதை நினைவுகூர்ந்தார்.

வழக்கறிஞர் செந்தில்நாதன் அடுத்து பேசும்போது காலச்சுவடு-புதுமைப்பித்தன் பதிப்பகம் இடையேயான காப்புரிமை வழக்கை விரிவாக விளக்கிக்கூறினார். (இது ஒரு தனிக்கதையாக எழுதப்படவேண்டிய பதிவு.)

இதற்குள் மிக அதிக நேரம் கடந்துவிட்டது. சிலர் கேள்விகள் கேட்கிறேன் என்ற பெயரில் தனித்தனியாக சொற்பொழிவாற்றி, சம்பந்தமில்லாத கருத்துகளை முன்வைத்தனர். அவசர அவசரமாக, கூட்டம் முடிக்கப்பட்டது. வெளியே வந்தும் சிலர் கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்தோம்.

***

காப்புரிமை என்றாலே காப்புரிமை பெறுபவர் முதலாலியவாதி என்றும் அவர் பிறர் தன் படைப்புகளை எந்தவிதத்திலும் துய்க்கக்கூடாது என்ற எண்ணம் கொண்டவர் என்பதுபோலவும், எதற்கெடுத்தாலும் வெள்ளைக்காரனுக்கு நாலு சாத்து, முதலாளிக்கு நாலு சாத்து என்பதுபோலவும் பேசுவதன் அபத்தத்தை நம் மக்கள் உணரவேண்டும். ஒன்று ஒருவருக்குச் சொந்தமானது என்ற மேலை உலகின் சட்டவிதிகள்தான் இன்று நம்மை இயக்குகின்றன. இப்படிப் பேசும் பலரது வீடுகளையும் சட்டை வேட்டிகளையும் நாம் நம்முடையது என்று உருவிக்கொள்ள முடியாதவகையில் காப்பது எது? இந்த மேலை நாட்டுச் சட்டங்களும் விதிகளும்தானே? ஆனால் அதே மனிதன், தன்னுடையதை அடுத்தவனிடம் இலவசமாகக் கொடுக்க உரிமை உள்ளது.

நான் என் வலைப்பதிவில் எழுதுவதெல்லாம் என் காப்புரிமை கொண்டது. ஆனால் அதனை பிறர் எப்படிக் கையாளலாம் என்று Creative Commons Attribution 2.5 India License மூலம் சொல்லியிருக்கிறேன். அதன்படி யாரும் எனக்கு ஒரு பைசா தரவேண்டியதில்லை. ஆனால் அதே நேரம் கிழக்கு/ப்ராடிஜி வாயிலாக நான் எழுதி/மொழிமாற்றி வெளியிடும் புத்தகங்களின் காப்புரிமை முழுதும் என்னிடம் உள்ளது; அதன் பதிப்புரிமை ஒரு குறிப்பிட்ட காலகட்டத்துக்கு நியூ ஹொரைஸன் மீடியாவிடம் உள்ளது. அதனை யாரும் எடுத்தாண்டு பணம் செய்ய உரிமை இல்லை. ஆக, என் இஷ்டப்படி என் படைப்புகளை - என் காப்புரிமை கொண்ட படைப்புகளை - இயக்கிக்கொள்ள எனக்கு உரிமை உள்ளது. இந்த உரிமையை எனக்குத் தருவது இந்தியக் காப்புரிமைச் சட்டம் 1957. இந்தச் சட்டம் இல்லையென்றால் இரா.நடராசனின் ‘ஆயிஷா’ கதையை யார் வேண்டுமானாலும் பதிப்பித்து எத்தனை பணம் வேண்டுமானாலும் செய்துகொள்ளமுடியும்.

இரா.நடராசன் பேசும்போது மொழிமாற்றல் தொடர்பாக ஏதோ ஐரோப்பிய நாடுகளுக்கு மட்டும் தனி உரிமை இருப்பதுபோலவும் இந்தியா போன்ற நாடுகளுக்கு அது இல்லை என்பதுபோலவும் சொன்னார். அப்படி ஏதும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. அது தொடர்பாக கொஞ்சம் ஆராய்ந்துவிட்டு எழுதுகிறேன்.

(போதும். மிக நீண்டுவிட்டதால் இத்தோடு நிறுத்திக்கொள்கிறேன்.)

Saturday, May 01, 2010

பாடாய்ப் படுத்தும் வெயில்

(அம்ருதா மே மாத இதழில் வெளியானது.)

வெயில் காலம் என்றாலே திண்டாட்டம்தான். அதுவும் சென்னை மாதிரி இடத்தில். கத்திரி வெயில், சித்திரை வெயில் என்று புலம்புகிறோம். கொதிக்கும் வெயிலில் நடந்தால் தலை வலிக்கிறது. சென்னை போன்ற கடலோர நகரங்களில் வியர்வை பெருக்கெடுத்து ஓடுகிறது. நாக்கு வறண்டு தாகம் எடுத்து, பாட்டில் பாட்டிலாக நீர் குடிக்கவேண்டியுள்ளது. தர்பூசணி, எலுமிச்சை பிழிந்த கரும்புச் சாறு, குளிரூட்டப்பட்ட கோக-கோலா, ஐஸ் போட்ட பழரசம், பானைத் தண்ணீர், நீர் மோர் என்று பதறுகிறோம்.

இதை எப்படி நாம் புரிந்துகொள்வது?

கோடையில் அப்படி நம் உடம்பில் என்னதான் மாறுதல் ஏற்படுகிறது?

கோடைக் காலத்தில், நாம் இருக்கும் பூமியின் பகுதி சூரியனுக்கு அருகில் செல்கிறது. பூமி சற்றே சாய்ந்த அச்சில் சுழல்வதால்தான் இது நிகழ்கிறது. பூமியை இரு அரைக் கோளங்களாக எடுத்துக்கொண்டால் வட அரைக்கோளத்தில் கோடைக் காலம் என்றால் தென் அரைக்கோளத்தில் அப்போது குளிர் காலம். உதாரணமாக இந்தியா, வட அமெரிக்கா, ஐரோப்பா ஆகிய இடங்களில் கோடைக் காலம் நடக்கும்போது ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் குளிர். அதேபோல ஆஸ்திரேலியாவில் கோடைக் காலம் நடக்கும்போது இந்தியாவில் குளிர் காலமாக இருக்கும்.

சூரியனுக்கு அருகில் செல்கிறோம் என்றாலும் ஒரு அரைக்கோளத்தில் உள்ள எல்லாப் பகுதிகளும் ஒரே மாதிரி அருகில் இருப்பதில்லை. நில நடுக்கோட்டுக்கும் கடக (அல்லது மகர) ரேகைக்கும் இடைப்பட்ட பகுதி சூரியனுக்கு நெருக்கமாக உள்ளது. இந்தப் பகுதியை வெப்ப மண்டலம் (ட்ராபிகல்) என்கிறோம். கடக ரேகையிலிருந்து இன்னும் கொஞ்சம் தாண்டி வட துருவத்தை நோக்கிப் போனால், வெப்பமண்டலத்தில் உள்ள அளவு வெப்பம் இருக்காது. சற்றுக் குறைவுதான். இந்தப் பகுதிக்கு மிதவெப்ப மண்டலம் (டெம்பரேட்) என்று பெயர். அதற்கும் அடுத்து, துருவம்வரை செல்லும் பகுதியில் அதிகபட்சமாக வெளிச்சம் இருக்கும். சூடு ஏதும் சொல்லிக்கொள்ளும்படி இருக்காது. கண் எதிரே ஐஸ் கட்டித் தரைகூட இருக்கும். இந்தப் பகுதிக்கு துருவ மண்டலம் (போலார்) என்று பெயர்.

கோடையில் வெப்ப மண்டலத்தில் சூடு உச்சக்கட்டத்தில் இருக்கும். ஆனால் ஏன் சென்னை போன்ற கடலோர நகரங்களில் இப்படி அதிகமாக வியர்க்கிறது? வீட்டில் உடை அணிந்துகொண்டு வாசல்வரை வருவதற்குள் தொப்பலாக நனைந்துவிடுகிறோமே?

இதற்கு காற்றின் ஈரப்பதம் என்பதை நாம் தெரிந்துகொள்ளவேண்டும். காற்றில் ஓரளவுக்கு நீராவி உள்ளது. கடலோரப் பகுதிகளில் இந்த நீரின் அளவு அதிகமாக இருக்கும். ஆற்றங்கரை, குளக்கரை என்றாலும் அப்படியே. ஆனால் கடல் பகுதிகளில் மிக மிக அதிகமாக இருக்கும். உதாரணமாக சென்னையில் காற்றின் ஈரப்பதம் 93% என்று உள்ளது. கோவையில் சுமார் 75% மட்டுமே. அதாவது சென்னைக் காற்றில் கோவைக் காற்றைவிட அதிக நீராவி உள்ளது.

இதனால் சென்னையில் நமக்கு ஏன் வியர்க்கவேண்டும்?

மனிதர்கள் உள்ளிட்ட பாலூட்டிகள், பறவைகள் போன்றவை வெப்ப ரத்தப் பிராணிகள் என்று அழைக்கப்படுகின்றன. பாம்புகள், பல்லிகள் போன்ற ஊர்வன குளிர் ரத்தப் பிராணிகள் எனப்படும். இந்தப் பெயர்களிலிருந்து என்ன நடக்கிறது என்பதைப் புரிந்துகொள்வது கடினம்! குளிர் ரத்தப் பிராணிகள் எந்தச் சூழலில் உள்ளனவோ அந்தச் சூழலில் என்ன சூடோ அவற்றின் ரத்தமும் அதே சூட்டுக்கு வந்துவிடும்.

அதாவது குளிர்ந்த பாறை இடுக்கில் ஒரு பாம்பு இருக்கிறது; அந்த இடத்தின் சுற்றுப்புற வெப்பம் 15 டிகிரி செண்டிகிரேட் என்றால் பாம்பின் உடலில் ஓடும் ரத்தமும் கிட்டத்தட்ட 15 டிகிரி செண்டிகிரேடில் இருக்கும். அதே பாம்பு கொதிக்கும் 40 டிகிரி செண்டிகிரேட் மணலில் ஓடினால், அதன் ரத்தமும் கிட்டத்தட்ட 40 டிகிரி செண்டிகிரேடுக்கு வந்துவிடும். ஆனால் மனித ரத்தம் அப்படியல்ல. அது எப்போதுமே கிட்டத்தட்ட 37 டிகிரி செண்டிகிரேடுக்கு அருகில் இருக்கவே முயற்சி செய்யும்.

வெளியே கடும் குளிர். 10 டிகிரி செண்டிகிரேட் அல்லது அதற்கும் கீழே. உடனே உடம்பு நடுங்க ஆரம்பிக்கும். கம்பளி போல எதையாவது இழுத்துப் போர்த்திக்கொள்ள முற்படும். கைகளைப் பரபரவென்று தேய்த்துக்கொள்ளத் தோன்றும். சூடாகக் கொஞ்சம் தேநீர் பருக விரும்பும். தம்மடிக்க ஆசைப்படும். எப்படியாவது உடல் சூட்டை, ரத்தத்தின் சூட்டை கிட்டத்தட்ட 37 டிகிரி செண்டிகிரேடில் வைக்க விரும்பும்.

அதேபோல கடுமையான வெயில். கொளுத்துகிறது. வெளியே இருப்பதோ 45 டிகிரி செண்டிகிரேட். என்ன செய்வது? உடலிலிருந்து வியர்வையை வெளியேற்றும். அந்த வியர்வை நீர் காற்றில் ஆவியாகும்போது சுற்றுப்புறம் சற்றே ஜில்லிடும். அதனைக்கொண்டு உடல் சூட்டைக் கொஞ்சம் தணித்து, மீண்டும் 37 டிகிரியை நோக்கி ஓடும்.

ஆனால் இங்குதான் காற்றின் ஈரப்பதம் தொல்லை கொடுக்கும். காற்றில் ஏற்கெனவே எக்கச்சக்கமாக நீராவி இருந்தால், மேற்கொண்டு நீர் ஆவியாக மறுக்கும். எனவே நம் உடலில் தோன்றும் வியர்வைத் துளிகள் ஆவியாகமல் அப்படியே தோல்மீதே வழியும். அதனால் எரிச்சல் ஏற்படும். வியர்வை பெருகி ஆறாகவே ஓடத் தொடங்கும். ஆனாலும் உடல் சூடு குறையாது. மேலும் மேலும் உடலில் உள்ள ரத்தம் தோல் பகுதிக்கு அருகில் வந்து தன்னிடமுள்ள அதிக சூட்டை வெளியேற்ற முற்படும். ஆனால் வெளியிலேயே சூடு அதிகமாக உள்ளதே? என்ன செய்வது?

இந்தக் காரணத்தால் மூளைக்குச் செல்லும் ரத்தம் குறையலாம். உடல் அசதி கொள்ளும். அப்படியே சாய்ந்து தூங்கிவிடலாமா என்று தோன்றும். அதனால்தான் நம்மை அறியாமலேயே வெயில் காலத்தில் மதிய நேரத்தில் ஒரு தூக்கம் போட்டுவிடுகிறோம்.

மற்றொரு பக்கம், உடல் சூட்டைத் தணிக்க நிழலாகப் பார்த்து உட்காருகிறோம். விசிறியால் அல்லது காற்றாடிகொண்டு நம் மீது காற்றை வீசுகிறோம். இந்தக் காற்று நம் உடலில் உள்ள ஈரத்தை அப்படியே அடித்துக்கொண்டு போய்விடும் என்ற விருப்பத்தில்தான். ஆனால் பல நேரங்களில் அதனாலும் பிரயோஜனம் இருக்காது.

அதனால்தான் ஏர் கண்டிஷனிங் என்பதைப் பெரிதும் பயன்படுத்துகிறோம். இந்த ஏர் கண்டிஷனர் என்ற கருவி, ஓர் அறையில் இருக்கும் காற்றில் உள்ள ஈரப்பதத்தை வெகுவாகக் குறைக்கிறது. இதனால்தான் நம் உடலில் இருந்து வெளியேறும் வியர்வை உடனடியாக ஆவியாகிறது. மேலும் ஏர் கண்டிஷனர் குளிர்ந்த காற்றை உள்ளே சுழல வைக்கிறது. வெறும் குளிர்ந்த காற்றும் மட்டும் இருந்தால் பயன் இருந்திருக்காது. ஈரப்பதத்தையும் அந்தக் கருவி வெளியேற்றுவதாலேயே கோடையில் அது பயனுள்ளதாக உள்ளது.

அத்துடன் நாம் அவ்வப்போது அருந்தும் குளிர்ந்த நீர், பிற குளிர் திரவங்கள் என அனைத்துமே நம் உடலின் வெப்பத்தைக் குறைக்கின்றன.

மனிதர்கள்தான் ஏர் கண்டிஷனிங் போன்றவற்றைச் செய்யமுடியும் என்று நினைக்காதீர்கள். பிற விலங்குகள் தமக்குள்ள அறிவைக் கொண்டு என்னென்னவோ செய்கின்றன. பொதுவாக விலங்குகள் வெப்பம் அதிகமாக உள்ள சமயத்தில் வெளியில் உலாத்தாமல், அந்த நேரத்தில் இரை தேடாமல் எங்காவது நிழலாகப் பார்த்து அமைதியாகப் படுத்து உறங்க முற்படும். யானை போன்ற மாபெரும் விலங்குகள் லிட்டர் லிட்டராக நீர் குடித்து, காதுகளை விசிறி விசிறி வெப்பத்தைத் தணிக்க முற்படும்.

இயற்கையில் அற்புதமாக வெப்பத்தைக் கட்டுப்படுத்துவதில் கரையான்கள் பெயர்போனவை. இந்தக் கரையான்கள் மாபெரும் புற்றுகளைக் கட்டுவதை நாம் ஆங்காங்கே பார்த்திருப்போம். அவற்றுக்கு தவறாக எறும்புப் புற்று அல்லது பாம்புப் புற்று என்று நாம் பெயர்கொடுத்திருப்போம். விட்டால் பக்கத்தில் ஒரு சூலத்தைச் செருகி, வழிபடவே ஆரம்பித்துவிடுவோம். ஆனால் இவற்றைக் கட்டுவது முழுக்க முழுக்க கரையான்கள். பார்க்க வெள்ளையாக இருக்கும். நம் வீடுகளில் உள்ள மரச் சாமான்களை, கதவுகளை எல்லாம் அப்படியே விழுங்கி ஏப்பம் விட்டுவிடும் மிக மோசமான உயிர் இவை.

இந்தக் கரையான்களில் சில மிக புத்திசாலி. இவை தமக்கு உணவாக சில பூஞ்சைகளை விவசாயமே செய்கின்றன. தங்கள் புற்றுக்களுக்கு உள்ளே, பூஞ்சைகளை சேகரித்து, அவை வளர ஆதரவாக மக்கிய இலைகளைக் கொண்டுவந்து போட்டு, வளர்ந்த பூஞ்சைகளை வெட்டி, சேகரித்துவைத்து, அவற்றைத் தின்கின்றன இந்தக் கரையான்கள். இந்தப் பூஞ்சைகள் வளர சரியான வெப்பம் தேவை. அதிகமாகவும் இருக்கக்கூடாது, குறைவாகவும் இருக்கக்கூடாது.

நாளின் பெரும்பகுதி சூரியன் உள்ளது, இரவில் சூரியன் மறைகிறது. இதேபோல கோடை, குளிர் என்று காலங்கள் மாறுகின்றன. கரையான்கள் எப்படி வெப்பத்தைக் கட்டுப்படுத்துகின்றன?

கரையான் புற்றில் அவை பல குழாய் போன அமைப்புகளை உருவாக்குகின்றன. புற்றில் நடுப்பாகத்தில்தான் கரையான்கள் வசிக்கின்றன. அங்கிருந்து தொடங்கி இந்தக் குழாய்கள் புகைபோக்கிகள் போல மேல் நோக்கிச் சென்று வெளிப்புறத்தை அடைகின்றன. வேண்டிய அளவு குழாய்களை மூடி அல்லது திறந்துவிடுவதன்மூலம் எவ்வளவு காற்று வெளியிலிருந்து உள்ளே வரும் என்பதை கரையான்கள் தீர்மானிக்கின்றன. அதைக்கொண்டு மையத்தில் இருக்கும் வெப்பம் ஒரு குறிப்பிட்ட அளவிலிருந்து அதிகம் நகராமல் கரையான்கள் பார்த்துக்கொள்கின்றன.

*

இன்று புவி சூடேற்றம் பிரச்னையாக ஆகியுள்ள நிலையில் நம் வீடுகளையும் நம்மால் கரையான்களைப் போல வடிவமைத்துக் கட்டமுடியும். இங்கும் அங்கும் சில ஜன்னல்களையும் துவாரங்களையும் முடுவதன்மூலமும் திறப்பதன்மூலமும் வீட்டில் பல பகுதிகளிலும் வெப்பத்தைக் கட்டுப்படுத்த முடியும். ஏர் கண்டிஷனர்களைக் குறைக்கமுடியும்.

எந்த விதத்தில் ஆற்றலை வீணடிக்காமல் இருக்கிறோமோ, அந்த அளவுக்கு பூமியின் வாழ்நாளையும், பூமியின் மனித சமுதாயத்தின் வாழ்நாளையும் நாம் நீட்டிக்கலாம்.