(அம்ருதா மே மாத இதழில் வெளியானது.)
வெயில் காலம் என்றாலே திண்டாட்டம்தான். அதுவும் சென்னை மாதிரி இடத்தில். கத்திரி வெயில், சித்திரை வெயில் என்று புலம்புகிறோம். கொதிக்கும் வெயிலில் நடந்தால் தலை வலிக்கிறது. சென்னை போன்ற கடலோர நகரங்களில் வியர்வை பெருக்கெடுத்து ஓடுகிறது. நாக்கு வறண்டு தாகம் எடுத்து, பாட்டில் பாட்டிலாக நீர் குடிக்கவேண்டியுள்ளது. தர்பூசணி, எலுமிச்சை பிழிந்த கரும்புச் சாறு, குளிரூட்டப்பட்ட கோக-கோலா, ஐஸ் போட்ட பழரசம், பானைத் தண்ணீர், நீர் மோர் என்று பதறுகிறோம்.
இதை எப்படி நாம் புரிந்துகொள்வது?
கோடையில் அப்படி நம் உடம்பில் என்னதான் மாறுதல் ஏற்படுகிறது?
கோடைக் காலத்தில், நாம் இருக்கும் பூமியின் பகுதி சூரியனுக்கு அருகில் செல்கிறது. பூமி சற்றே சாய்ந்த அச்சில் சுழல்வதால்தான் இது நிகழ்கிறது. பூமியை இரு அரைக் கோளங்களாக எடுத்துக்கொண்டால் வட அரைக்கோளத்தில் கோடைக் காலம் என்றால் தென் அரைக்கோளத்தில் அப்போது குளிர் காலம். உதாரணமாக இந்தியா, வட அமெரிக்கா, ஐரோப்பா ஆகிய இடங்களில் கோடைக் காலம் நடக்கும்போது ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் குளிர். அதேபோல ஆஸ்திரேலியாவில் கோடைக் காலம் நடக்கும்போது இந்தியாவில் குளிர் காலமாக இருக்கும்.
சூரியனுக்கு அருகில் செல்கிறோம் என்றாலும் ஒரு அரைக்கோளத்தில் உள்ள எல்லாப் பகுதிகளும் ஒரே மாதிரி அருகில் இருப்பதில்லை. நில நடுக்கோட்டுக்கும் கடக (அல்லது மகர) ரேகைக்கும் இடைப்பட்ட பகுதி சூரியனுக்கு நெருக்கமாக உள்ளது. இந்தப் பகுதியை வெப்ப மண்டலம் (ட்ராபிகல்) என்கிறோம். கடக ரேகையிலிருந்து இன்னும் கொஞ்சம் தாண்டி வட துருவத்தை நோக்கிப் போனால், வெப்பமண்டலத்தில் உள்ள அளவு வெப்பம் இருக்காது. சற்றுக் குறைவுதான். இந்தப் பகுதிக்கு மிதவெப்ப மண்டலம் (டெம்பரேட்) என்று பெயர். அதற்கும் அடுத்து, துருவம்வரை செல்லும் பகுதியில் அதிகபட்சமாக வெளிச்சம் இருக்கும். சூடு ஏதும் சொல்லிக்கொள்ளும்படி இருக்காது. கண் எதிரே ஐஸ் கட்டித் தரைகூட இருக்கும். இந்தப் பகுதிக்கு துருவ மண்டலம் (போலார்) என்று பெயர்.
கோடையில் வெப்ப மண்டலத்தில் சூடு உச்சக்கட்டத்தில் இருக்கும். ஆனால் ஏன் சென்னை போன்ற கடலோர நகரங்களில் இப்படி அதிகமாக வியர்க்கிறது? வீட்டில் உடை அணிந்துகொண்டு வாசல்வரை வருவதற்குள் தொப்பலாக நனைந்துவிடுகிறோமே?
இதற்கு காற்றின் ஈரப்பதம் என்பதை நாம் தெரிந்துகொள்ளவேண்டும். காற்றில் ஓரளவுக்கு நீராவி உள்ளது. கடலோரப் பகுதிகளில் இந்த நீரின் அளவு அதிகமாக இருக்கும். ஆற்றங்கரை, குளக்கரை என்றாலும் அப்படியே. ஆனால் கடல் பகுதிகளில் மிக மிக அதிகமாக இருக்கும். உதாரணமாக சென்னையில் காற்றின் ஈரப்பதம் 93% என்று உள்ளது. கோவையில் சுமார் 75% மட்டுமே. அதாவது சென்னைக் காற்றில் கோவைக் காற்றைவிட அதிக நீராவி உள்ளது.
இதனால் சென்னையில் நமக்கு ஏன் வியர்க்கவேண்டும்?
மனிதர்கள் உள்ளிட்ட பாலூட்டிகள், பறவைகள் போன்றவை வெப்ப ரத்தப் பிராணிகள் என்று அழைக்கப்படுகின்றன. பாம்புகள், பல்லிகள் போன்ற ஊர்வன குளிர் ரத்தப் பிராணிகள் எனப்படும். இந்தப் பெயர்களிலிருந்து என்ன நடக்கிறது என்பதைப் புரிந்துகொள்வது கடினம்! குளிர் ரத்தப் பிராணிகள் எந்தச் சூழலில் உள்ளனவோ அந்தச் சூழலில் என்ன சூடோ அவற்றின் ரத்தமும் அதே சூட்டுக்கு வந்துவிடும்.
அதாவது குளிர்ந்த பாறை இடுக்கில் ஒரு பாம்பு இருக்கிறது; அந்த இடத்தின் சுற்றுப்புற வெப்பம் 15 டிகிரி செண்டிகிரேட் என்றால் பாம்பின் உடலில் ஓடும் ரத்தமும் கிட்டத்தட்ட 15 டிகிரி செண்டிகிரேடில் இருக்கும். அதே பாம்பு கொதிக்கும் 40 டிகிரி செண்டிகிரேட் மணலில் ஓடினால், அதன் ரத்தமும் கிட்டத்தட்ட 40 டிகிரி செண்டிகிரேடுக்கு வந்துவிடும். ஆனால் மனித ரத்தம் அப்படியல்ல. அது எப்போதுமே கிட்டத்தட்ட 37 டிகிரி செண்டிகிரேடுக்கு அருகில் இருக்கவே முயற்சி செய்யும்.
வெளியே கடும் குளிர். 10 டிகிரி செண்டிகிரேட் அல்லது அதற்கும் கீழே. உடனே உடம்பு நடுங்க ஆரம்பிக்கும். கம்பளி போல எதையாவது இழுத்துப் போர்த்திக்கொள்ள முற்படும். கைகளைப் பரபரவென்று தேய்த்துக்கொள்ளத் தோன்றும். சூடாகக் கொஞ்சம் தேநீர் பருக விரும்பும். தம்மடிக்க ஆசைப்படும். எப்படியாவது உடல் சூட்டை, ரத்தத்தின் சூட்டை கிட்டத்தட்ட 37 டிகிரி செண்டிகிரேடில் வைக்க விரும்பும்.
அதேபோல கடுமையான வெயில். கொளுத்துகிறது. வெளியே இருப்பதோ 45 டிகிரி செண்டிகிரேட். என்ன செய்வது? உடலிலிருந்து வியர்வையை வெளியேற்றும். அந்த வியர்வை நீர் காற்றில் ஆவியாகும்போது சுற்றுப்புறம் சற்றே ஜில்லிடும். அதனைக்கொண்டு உடல் சூட்டைக் கொஞ்சம் தணித்து, மீண்டும் 37 டிகிரியை நோக்கி ஓடும்.
ஆனால் இங்குதான் காற்றின் ஈரப்பதம் தொல்லை கொடுக்கும். காற்றில் ஏற்கெனவே எக்கச்சக்கமாக நீராவி இருந்தால், மேற்கொண்டு நீர் ஆவியாக மறுக்கும். எனவே நம் உடலில் தோன்றும் வியர்வைத் துளிகள் ஆவியாகமல் அப்படியே தோல்மீதே வழியும். அதனால் எரிச்சல் ஏற்படும். வியர்வை பெருகி ஆறாகவே ஓடத் தொடங்கும். ஆனாலும் உடல் சூடு குறையாது. மேலும் மேலும் உடலில் உள்ள ரத்தம் தோல் பகுதிக்கு அருகில் வந்து தன்னிடமுள்ள அதிக சூட்டை வெளியேற்ற முற்படும். ஆனால் வெளியிலேயே சூடு அதிகமாக உள்ளதே? என்ன செய்வது?
இந்தக் காரணத்தால் மூளைக்குச் செல்லும் ரத்தம் குறையலாம். உடல் அசதி கொள்ளும். அப்படியே சாய்ந்து தூங்கிவிடலாமா என்று தோன்றும். அதனால்தான் நம்மை அறியாமலேயே வெயில் காலத்தில் மதிய நேரத்தில் ஒரு தூக்கம் போட்டுவிடுகிறோம்.
மற்றொரு பக்கம், உடல் சூட்டைத் தணிக்க நிழலாகப் பார்த்து உட்காருகிறோம். விசிறியால் அல்லது காற்றாடிகொண்டு நம் மீது காற்றை வீசுகிறோம். இந்தக் காற்று நம் உடலில் உள்ள ஈரத்தை அப்படியே அடித்துக்கொண்டு போய்விடும் என்ற விருப்பத்தில்தான். ஆனால் பல நேரங்களில் அதனாலும் பிரயோஜனம் இருக்காது.
அதனால்தான் ஏர் கண்டிஷனிங் என்பதைப் பெரிதும் பயன்படுத்துகிறோம். இந்த ஏர் கண்டிஷனர் என்ற கருவி, ஓர் அறையில் இருக்கும் காற்றில் உள்ள ஈரப்பதத்தை வெகுவாகக் குறைக்கிறது. இதனால்தான் நம் உடலில் இருந்து வெளியேறும் வியர்வை உடனடியாக ஆவியாகிறது. மேலும் ஏர் கண்டிஷனர் குளிர்ந்த காற்றை உள்ளே சுழல வைக்கிறது. வெறும் குளிர்ந்த காற்றும் மட்டும் இருந்தால் பயன் இருந்திருக்காது. ஈரப்பதத்தையும் அந்தக் கருவி வெளியேற்றுவதாலேயே கோடையில் அது பயனுள்ளதாக உள்ளது.
அத்துடன் நாம் அவ்வப்போது அருந்தும் குளிர்ந்த நீர், பிற குளிர் திரவங்கள் என அனைத்துமே நம் உடலின் வெப்பத்தைக் குறைக்கின்றன.
மனிதர்கள்தான் ஏர் கண்டிஷனிங் போன்றவற்றைச் செய்யமுடியும் என்று நினைக்காதீர்கள். பிற விலங்குகள் தமக்குள்ள அறிவைக் கொண்டு என்னென்னவோ செய்கின்றன. பொதுவாக விலங்குகள் வெப்பம் அதிகமாக உள்ள சமயத்தில் வெளியில் உலாத்தாமல், அந்த நேரத்தில் இரை தேடாமல் எங்காவது நிழலாகப் பார்த்து அமைதியாகப் படுத்து உறங்க முற்படும். யானை போன்ற மாபெரும் விலங்குகள் லிட்டர் லிட்டராக நீர் குடித்து, காதுகளை விசிறி விசிறி வெப்பத்தைத் தணிக்க முற்படும்.
இயற்கையில் அற்புதமாக வெப்பத்தைக் கட்டுப்படுத்துவதில் கரையான்கள் பெயர்போனவை. இந்தக் கரையான்கள் மாபெரும் புற்றுகளைக் கட்டுவதை நாம் ஆங்காங்கே பார்த்திருப்போம். அவற்றுக்கு தவறாக எறும்புப் புற்று அல்லது பாம்புப் புற்று என்று நாம் பெயர்கொடுத்திருப்போம். விட்டால் பக்கத்தில் ஒரு சூலத்தைச் செருகி, வழிபடவே ஆரம்பித்துவிடுவோம். ஆனால் இவற்றைக் கட்டுவது முழுக்க முழுக்க கரையான்கள். பார்க்க வெள்ளையாக இருக்கும். நம் வீடுகளில் உள்ள மரச் சாமான்களை, கதவுகளை எல்லாம் அப்படியே விழுங்கி ஏப்பம் விட்டுவிடும் மிக மோசமான உயிர் இவை.
இந்தக் கரையான்களில் சில மிக புத்திசாலி. இவை தமக்கு உணவாக சில பூஞ்சைகளை விவசாயமே செய்கின்றன. தங்கள் புற்றுக்களுக்கு உள்ளே, பூஞ்சைகளை சேகரித்து, அவை வளர ஆதரவாக மக்கிய இலைகளைக் கொண்டுவந்து போட்டு, வளர்ந்த பூஞ்சைகளை வெட்டி, சேகரித்துவைத்து, அவற்றைத் தின்கின்றன இந்தக் கரையான்கள். இந்தப் பூஞ்சைகள் வளர சரியான வெப்பம் தேவை. அதிகமாகவும் இருக்கக்கூடாது, குறைவாகவும் இருக்கக்கூடாது.
நாளின் பெரும்பகுதி சூரியன் உள்ளது, இரவில் சூரியன் மறைகிறது. இதேபோல கோடை, குளிர் என்று காலங்கள் மாறுகின்றன. கரையான்கள் எப்படி வெப்பத்தைக் கட்டுப்படுத்துகின்றன?
கரையான் புற்றில் அவை பல குழாய் போன அமைப்புகளை உருவாக்குகின்றன. புற்றில் நடுப்பாகத்தில்தான் கரையான்கள் வசிக்கின்றன. அங்கிருந்து தொடங்கி இந்தக் குழாய்கள் புகைபோக்கிகள் போல மேல் நோக்கிச் சென்று வெளிப்புறத்தை அடைகின்றன. வேண்டிய அளவு குழாய்களை மூடி அல்லது திறந்துவிடுவதன்மூலம் எவ்வளவு காற்று வெளியிலிருந்து உள்ளே வரும் என்பதை கரையான்கள் தீர்மானிக்கின்றன. அதைக்கொண்டு மையத்தில் இருக்கும் வெப்பம் ஒரு குறிப்பிட்ட அளவிலிருந்து அதிகம் நகராமல் கரையான்கள் பார்த்துக்கொள்கின்றன.
*
இன்று புவி சூடேற்றம் பிரச்னையாக ஆகியுள்ள நிலையில் நம் வீடுகளையும் நம்மால் கரையான்களைப் போல வடிவமைத்துக் கட்டமுடியும். இங்கும் அங்கும் சில ஜன்னல்களையும் துவாரங்களையும் முடுவதன்மூலமும் திறப்பதன்மூலமும் வீட்டில் பல பகுதிகளிலும் வெப்பத்தைக் கட்டுப்படுத்த முடியும். ஏர் கண்டிஷனர்களைக் குறைக்கமுடியும்.
எந்த விதத்தில் ஆற்றலை வீணடிக்காமல் இருக்கிறோமோ, அந்த அளவுக்கு பூமியின் வாழ்நாளையும், பூமியின் மனித சமுதாயத்தின் வாழ்நாளையும் நாம் நீட்டிக்கலாம்.
Saturday, May 01, 2010
Subscribe to:
Post Comments (Atom)
fantastic.
ReplyDeleteரொம்ப ரொம்ப அருமையா இருக்கு பத்ரி. இந்த மாதிரி பதிவு போடுங்க... It is very informative...
ReplyDeleteThanks
Venkat R
அருமையான விளக்கங்கள்..
ReplyDelete// இன்று புவி சூடேற்றம் பிரச்னையாக ஆகியுள்ள நிலையில் நம் வீடுகளையும் நம்மால் கரையான்களைப் போல வடிவமைத்துக் கட்டமுடியும். இங்கும் அங்கும் சில ஜன்னல்களையும் துவாரங்களையும் முடுவதன்மூலமும் திறப்பதன்மூலமும் வீட்டில் பல பகுதிகளிலும் வெப்பத்தைக் கட்டுப்படுத்த முடியும்
ReplyDelete//
புரியவில்லை சார்..!!
இன்னும் கொஞ்சம் விளக்கமா இருந்தா நன்றாக இருந்திருக்கும்! அருமையான பயனுள்ள கட்டுரை!
ReplyDeleteThanks Badri, I had difficulty in understanding humidity related problems for quite some time. It is now cleared. Simply superb.
ReplyDeleteBadri, Earth is not closer to Sun during summer. It is closer to Sun during winter. The heat comes from Earth's tilt toward the Sun (the 23 1/2 degree tilt) in Summer. TRS
ReplyDeleteடி.ஆர்.எஸ்: பூமிப்பந்தின் சாய்மானம் காரணமாகவே நாம் இருக்கும் பகுதி சூரியனுக்கு அருகில் வருகிறது என்று சொல்ல நினைத்தேன். சரியான வார்த்தைகள் வராலம் இருந்திருக்கலாம்.
ReplyDeleteசூரிய ஒளியின் கோணம் தான் இதில் முக்கிய அம்சம். சூரியனின் கதிர்கள் செங்குத்தாக விழும் போது வெயில் நன்கு உறைக்கும். சாய்வாக அதுவும் மிகச் சாய்வாக விழும் போது உறைக்காது. வட துருவத்தில் 6 மாதகாலம் பகலாக இருந்தாலும் பனிக்கட்டிகள் உருகாததற்கு அங்கு சூரியனின் ஒளி மிகக் குறுகிய கோணத்தில் விழுகிறது.சென்னையை எடுத்துக் கொண்டால் மே மாத வாக்கில் சூரியன் கிட்டத்த்ட்ட நம் தலைக்கு நேர் மேலே90 டிகிரி அளவுக்கு நேர் செங்குத்தாக உள்ளது ( தேதி மறந்து விட்டது ) ஆகவே தான் அக்கினி நட்சத்திரம். மறுபடி ஆகஸ்ட் வாக்கில் மறுபடி சென்னைக்கு நேர் மேலே 90 டிகிரியில் அமைகிறது. ஆகவே தான் புரட்டாசியில் கடும் வெயில். புரட்டாசியில் பிரண்டை கூடக் காய்ந்து விடும். தமிழகத்தைப் பொருத்தவரையில் நமக்கு இரு கோடைக்காலங்கள் அதாவது மார்ச் 21 ல் பூமத்திய ரேகைக்கு நேர் மேலே இருக்கும் சூரியன் வடக்கே செல்லும் போது முதல் தடவையும் (சித்திரை-வைகாசி) பின்னர் ஜூனுக்குப் பிறகு தெற்கே செல்லும் போது இரண்டாம் தடவையும் நல்ல வெயில் அடிக்கும்.
ReplyDeleteபுழுக்கம் பற்றி தெரிவித்த விளக்கம் மிகத் தெளிவாக இருந்தது.க்ரையான்கள் அற்புதமான வகையில் வெப்பத்தைக் கட்டுப்படுத்திக் கொள்கின்றன.கரையான் புற்றுகளின் குழல் போன்ற பகுதி வழியே காற்று செல்லும் போது குள்ர்வடையும். வாயைக் குவித்துக்கொண்டு காற்றை வெளியே ஊதினால் அது குளிர்ச்சியாக இருக்கும். மொத்ததில் வெயில் பற்றிய் தங்களது விளக்கம் மிக எளிமையாக எவருக்கும் புரியும் வகையில் அமைந்திருந்தது. உங்களுக்கு இதற்கெல்லாம் எப்படி நேரம் கிடைக்கிறது.
இரும்பு பற்றிய கட்டுரை சிறப்பாக உள்ளது. என்னுடைய உலோகங்கள் பற்றிய manuscript தங்களிடம் உள்ளதை எனக்கு நினைவுபடுத்தியது. (உங்களுக்கு நினைவு படுத்தவே இக் குறிப்பு) இரண்டு அல்லது மூன்று வாரங்களாக என் கம்ப்யூட்டர் ரிப்பேர். இரண்டு நாட்களுக்கு முன்னர் தான் சரியாகியது.
இதுவரை எழுதியதில் சில பகுதிகளே comments பகுதிக்கு. மற்றவை கடிதம் போல் அமைந்து விட்டன்
ராமதுரை
சூரியன் இருப்பது எட்டாயிரம் கோடி கிலோ மீட்டர்கள் தூரம் . அதன் கதிர்கள் சாய்ந்த கோணம் ...அல்லது ...நேர் கோணம் ...எந்த கோணத்தில் வந்தாலும் வெப்பத்தில் மாற்றம் இருக்காது மாற்றத்துக்கு காரணம் வேறு . நம் பூமியில் வந்தடையும் சூரிய வெப்பமானது ...பூமியின் காற்று மண்டலத்தை தொடும் போது ஒரே வெப்ப நிலையிலே இருக்கும் .காற்று மண்டலத்தால் மட்டுமே அது மாறு படுகிறது . சாய்வான கோணத்தில் பூமிக்கு பயணிக்கும் கதிர்கள் நீண்ட காற்று மண்டலத்தையும் ...நேர்கோணத்தில் பயணிக்கும் கதிர்கள் குறைந்த காற்று மண்டலத்தையும் கடப்பதால் வெப்பத்தின் தண்மை மாறுபடுகிறது .அதனால்தான் மாலை வெயில் நம்மை தாக்குவது இல்லை .இந்தியாவின் மாலைநேர வெயிலும் saudi arabia மதிய நேர வெயிலும் ஒன்றே .சூரியனின் தூரமும் ஒன்றே கடந்து வரும் காற்றின் அளவு சாய்ந்த கோணத்தில் அதிகம் அவ்வளவுதான் .
DeleteVery informative post. Especially the bit on Termites doing farming, I didn't know and found it very interesting.
ReplyDeleteExcellent article sir...we expect articles like this
ReplyDeleteBadri,
ReplyDeleteThanks for the info.I have two question.Why is it sweating in Madurai also which is far away from Seashore.And is it not healthy when person is in airconditioned room all day,since there is no sweating .?
Thanks
Senthil
excellent , educative sir.
ReplyDelete”பக்கத்துல உக்கார்ந்து சின்ன புள்ளைக்கி கதை சொல்றமாதிரி” எவ்வளவு எளிமையா,அருமையா ஒரு விளக்கம்!
ReplyDeleteதொடருங்கள் பத்ரி சார்.
சென்னை, மதுரை போன்ற நகரங்களில் கூட்டத்தைக் குறைத்தாலே ஒரு 2-3 டிகிரி குறைக்கலாம். மேலும் மரங்கள் வளர்ப்பதன் மூலம் ஒரு 2-3 டிகிரி குறைக்கலாம்.
ReplyDeleteமொத்தம் 5-8 டிகிரி குறைத்தாலே பெரிய அளவில் ஈரப்பதத்தின் அளவை மாற்றிக்கொள்ள முடியும். பிறகு வியர்வை ஆவியாவதன் மூலம் நம் உடல் வெப்பத்தைத் தாங்கிக்கொள்ளும்.
எல்லாத்தையும் சென்னையிலேயே போய் கொட்டிக்கொண்டிருந்தால் அங்கே ஒரு நாள் திடீர்ன்னு சூட்டுக்கு கேஸ் சிலிண்டர்கள் எல்லாம் வெடிக்க ஆரம்பித்துவிடும்.
Good article for common people. Vajra's suggestions to reduce population and grow more trees in major cities like Chennai and Madurai are also right. But their benefit is not reduction of local temperature by 5-8 degrees. He is confusing between local temperature (which this article talks about) and global warming. The Intergovernmental Panel on Climate Change predicts 1.1-6.4 degree Celcius increase in the global surface temperature by 2100 depending on the emission levels which will wreak havoc on the life on earth.
ReplyDeletePopulation reduction and more trees in big cities will bring other benefits not an air-conditioning like change for the whole city. Air quality will improve; water will be available more; transportation problems will be less; and so on.
அப்படியே ஒரு கொழாயைப் போட்டு டிஸ்கவரி சேனலுக்குள்ள போய்ட்டு வந்த மாதிரி இருந்துது.
ReplyDeletethanks badri
ReplyDeleteVery informative post. Till now I never understood the concept of humidity and profuse sweating. But why is that people dying due to heatstrokes is more in Andhra and North and Central India? Any reasons for this.
ReplyDeleteThe irony is that i get blue star a/c add on the top when i read this article (ha ha ha).
ReplyDeleteஈரப்பதம் குறித்து நீண்ட நாட்களாக இருந்த சந்தேகம் தீர்ந்தது. கணித,அறிவியல் விஷயங்கள் மூளைக்குள் அத்தனை எளிதில் நுழைவதில்லை. இது போன்ற எளிமையான கட்டுரைகள் அதைச் சாதிக்கின்றன. நன்றி. இது போல் அவ்வப்போது எழுதுங்கள் / பகிர்ந்து கொள்ளுங்கள்.
ReplyDeleteபயனுள்ள கட்டுரை பத்ரி,.
ReplyDeleteகூடவே வீடுகளில், அலுவலகங்களில் மர ஜன்னல்கள், கதவுகள் உபயோகம்
இருப்பு கம்பிகள், பீ வீ சி கதவுகள், தடுப்புகள் ஏற்படுத்தும் வெப்பம் குறித்தும் முடிந்தால் பகிரவும்