Saturday, October 08, 2011

ஆப்பிளின் எதிர்காலம்

ஸ்டீவ் ஜாப்ஸ் பற்றிய இரங்கல் இல்லை இந்தப் பதிவு.

* ஆப்பிள் அற்புதமான கணினியாக இருந்தாலும் எதையெடுத்தாலும் நான்தான், நானேதான் செய்வேன் என்று தொங்கிக்கொண்டிருந்த காரணத்தால் வளரவேயில்லை. மைக்ரோசாஃப்ட் செழித்தது; பிசி பிசினஸ் வளர்ந்தோங்கியது. இன்றும்கூட ஒரு சிறு குழுவைத் தாண்டி மேகிண்டாஷ் கணினிகள் பரவவில்லை என்பது நிதர்சனம்.

* ஜாப்ஸின் உண்மையான மார்க்கெட்டிங் மாயாஜாலம் ஐபாட், ஐட்யூன்ஸில் ஆரம்பித்தது. அதுவரையில் வெறும் தொழில்நுட்ப, அழகியல் கலைஞராக இருந்தவர் பணம் பண்ணும் ஒரு மாபெரும் ஐடியாவை எடுத்தாண்டது இந்த விஷயத்தில்தான். இன்றுவரை ஆப்பிள்தான் இந்தத் துறையில் கிங். ஆனால் இனியும் அப்படி இருக்கமுடியாது. காரணத்தை அடுத்து பார்ப்போம்.

* ஐபாட், ஐஃபோன், ஐபேட் - தமிழ்கூறும் நல்லுலகின் பாஷையில் சொல்லப்போனால், ‘சான்ஸே இல்ல’. ப்ராடக்ட் இன்னோவேஷன் + மார்க்கெட்டிங் சென்ஸ் சரியான கலவையில் கலந்து செய்த வித்தை.

* ஸ்டீவ் ஜாப்ஸின் தோல்வி - புத்தகச் சந்தையைப் புரிந்துகொள்ளாதது; அமேசானின் திறனைச் சரியாகக் கணக்கிடாதது.

* ஆப்பிளின் போட்டிக்காரன் அமேசான். ஐக்ளவுட் என்று ஆப்பிள் பேசிக்கொண்டிருக்கும்போதே அமேசான் அதனைச் செய்துமுடித்துவிட்டது. கிண்டில் ஃபயர் என்னும் கலர் டேப்ளட் ஐபேடை ஒப்பிடும்போது மிகக் குறைந்த விலை. ஆப்பிள் அதற்குப் போட்டியாக ஒன்றைச் செய்து முடிப்பதற்குள், இதுவரை ஐபேட் வாங்கியிராத உலக மக்கள் பலரும் கிண்டில் ஃபயருக்குத் தாவியிருப்பார்கள்.

* கிண்டில் ஃபயரில் என்னவெல்லாம் செய்யமுடியும்? புத்தகங்களை வாங்கி, படிக்கலாம். புத்தகம் கிளவுடில் இருக்கும். சினிமாக்களை வாடகைக்கு எடுத்துப் பார்க்கலாம். பாடல்களை இறக்கிக் கேட்கலாம். அமேசானின் கிளவுட் வழியாக வெப் பிரவுசிங் செய்யலாம். (இது எனக்குப் பிடிக்கவில்லை!) ஆப்பிள் இந்த நிலைக்கு வர கனகாலம் பிடிக்கும் என்று நினைக்கிறேன்.

அடுத்த ஐந்தாண்டுகள், அமேசானின் ஆண்டுகள்.

இதில் ஆப்பிள் ஒரு லூஸர் என்றால், கூகிள் மாபெரும் லூஸர்!

Amazon > Apple > Google !

கிழக்கு பதிப்பகம் ‘அதிரடி’ புத்தகக் கண்காட்சி - தி.நகரில்

கிழக்கு பதிப்பகத்தின் ‘அதிரடி’ புத்தகக் கண்காட்சி மீண்டும் தி.நகருக்கு வருகிறது. அதே பழைய இடம். ஆனால் பல புதுப் புத்தகங்கள்.

தீபாவளி பர்ச்சேஸுசுக்கு என்று தி.நகர் செல்லாதோரும் உண்டா என்ன? அப்படியே ஒரு நடை நடந்து சிவா விஷ்ணு கோவிலுக்கு எதிரே எல்.ஆர்.ஸ்வாமி ஹாலில் நடக்கும் இந்தப் புத்தகக் கண்காட்சிக்குச் சென்று பார்த்துவிடுங்கள்.

முன்னர் ஏப்ரல் மாதத்தில் நடந்த கண்காட்சியின்போது இல்லாத பல புத்தகங்கள் இப்போது கிடைக்கும். எனவே கட்டாயம் ஒருமுறை சென்று பார்த்துவிடுங்கள்.

இடம்: எல்.ஆர்.ஸ்வாமி ஹால், சிவா விஷ்ணு கோவில் எதிரில், சங்கர பாண்டியன் ஸ்டோர் அருகில், தி. நகர்.
நாள்: 8 அக்டோபர் முதல்.
 

நேரம்: காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை. 

தொடர்புக்கு: 95000 45608

Tuesday, October 04, 2011

Monday, October 03, 2011

வீடு மாற்றம்

சென்னையின் ஒரு பகுதியிலிருந்து இன்னொரு பகுதிக்கு வீடு மாற்றியுள்ளேன். புது இடம் பழைய இடத்தைவிடத் திருப்தியாக உள்ளது. பல காரணங்களுக்காக.

பழைய இடத்தில் நம்மைத் தேடி எந்தக் கடைக்காரரும் வரமாட்டார். நாம்தான் தேடித் தேடிச் சென்று வேலைகளைச் செய்துகொள்ளவேண்டும். இங்கு வந்து சேர்ந்த முதல் நாளுக்குள் பால் வாங்கித்தரும் அம்மாவும் பேப்பர்காரரும் வந்து விவரங்கள் பேசிக்கொண்டு உடனடியாகச் சேவையை ஆரம்பித்துவிட்டனர். இது என்ன பெரிய விஷயம்; எல்லா இடங்களிலும் இப்படித்தான் நடக்கும் என்று விட்டுவிட்டேன். அடுத்து சுத்திகரிக்கப்ட்ட குடிநீர். அடுத்து அரிசிக்காரர். என்ன மாதிரியான அரிசி, எத்தனை கிலோ என்று கேட்டுவிட்டு, அடுத்த நாள் காலை அனுப்புவதாகச் சொல்லிச் சென்றார். வீடு கூட்டிப் பெருக்கித் துடைக்க உடனடியாக ஒருவர் கிடைத்தார். சுற்றி காய்கறிக் கடை எங்கே, சூப்பர்மார்க்கெட் எங்கே, மருந்துக்கடை எங்கே, அவசரம் என்றால் டாக்டர் எங்கே உள்ளார் என்று ஒரு நடை நடந்துவிட்டு வந்ததில் எல்லோருமே பத்து நிமிட நடைக்குள்ளாக உள்ளனர். அதே இடத்துக்குள்ளாக ஹார்ட்வேர் கடை, ஸ்டேஷனரி கடை, இட்லிக் கடை எல்லாம்.

நடக்கவேண்டிய வேலைகள் - கார்பொரேட் சமாசாரங்களான ஏர்டெல் இணைப்பு மாற்றம், எஸ்.சி.வி கேபிள் கனெக்‌ஷன் ஆகியவை மட்டுமே. புறவேலைகளைவிட வீட்டுக்குள் நடக்கவேண்டிய வேலைகள்தான் பாக்கி.

பத்து நிமிட நடையில் கிழக்கு பதிப்பகத்தின் புத்தகங்கள்கூட ஒரு சூப்பர்மார்க்கெட்டில் கிடைக்கிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்!

காந்தி: மனிதரா, புனிதரா, தெய்வமா?