இன்று காலை நானும் சத்யாவும் கொட்டிவாக்கம் தொகுதியில்
ராஜ் செருபால் சார்பில் பிரசாரத்தில் ஈடுபட்டோம். சத்யா ஏற்கெனவே இரண்டு நாள்கள் பிரசாரத்துக்குச் சென்றிருந்தார். நான் போவது இதுதான் முதல் முறை.
ராஜ் கொட்டிவாக்கம் தொகுதியில் (வார்ட் எண் 183) சென்னை மாநகராட்சி கவுன்சிலர் பதவிக்கு நிற்கிறார். சில மாதங்களுக்குமுன் ராஜ், நான், சத்யா, இன்னும் சிலர் சேர்ந்து வெவ்வேறு தொகுதிகளில் நிற்கலாம் என்று பேசிக்கொண்டிருந்தோம். பல்வேறு காரணங்களால் நாங்கள் பலரும் கழன்றுகொண்டோம். ராஜ் மட்டும் நிற்கிறார்.
ராஜ், சிடிகனெக்ட் என்ற லாபநோக்கில்லா அமைப்பில் பணி புரிகிறார். ஒரு நகரம் சரியாகத் திட்டம் தீட்டாத காரணத்தால் மக்களுக்குத் தரவேண்டிய அடிப்படை வசதிகளைச் சரியாகத் தருவதில்லை. இருக்கும் இடத்துக்குள் அந்த வசதிகளை எப்படிச் செய்துதருவது என்பதை ஆராய்கிறது சிடிகனெக்ட். போக்குவரத்து நெரிசலா? எப்படியான சிறு சிறு மாறுதல்களைச் செய்தால் நெரிசலைக் குறைக்கலாம்? தெருவோரத்தில் மக்கள் நடக்க ஏன் மாநகராட்சி வசதிகளைச் செய்துதருவதில்லை? அதனை எப்படி மக்களின் ஈடுபாட்டுடனேயே நடைமுறைப்படுத்தலாம்? தெருவோர வியாபாரிகளைப் பொதுவாகத் துரத்துவதையே ஆட்சியாளர்கள் நோக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் எந்த அளவுக்கு ஒரு உள்ளூர்ப் பொருளாதாரத்துக்கு உபயோகமானவர்கள், அவர்களுக்கு எப்படிப்பட்ட வசதிகளைச் செய்துகொடுக்கலாம்; அதே நேரம் பாதையில் நடக்கும் மக்களுக்கும் பிரச்னையில்லாமல் எப்படிச் செய்யலாம்? இதுபோன்ற பல விஷயங்கள், நீர், குப்பை என்று மக்களுக்குத் தேவையான பலவற்றைப் பற்றியுமான ஆராய்ச்சியில் ஈடுபட்டிருப்பவர் ராஜ்.
கிழக்கு மொட்டைமாடிக் கூட்டம் ஒன்றில் தி.நகர் போக்குவரத்து நெரிசல் பிரச்னையை எப்படி எதிர்கொள்வது என்பது பற்றி ராஜ் விரிவாகவே பேசியிருந்தார்.
***
காலையில் சுமார் 8 மணிக்கு ராஜை அவர் வீட்டில் சந்தித்து துண்டுப் பிரசுரங்களைச் சேகரித்துக்கொண்டோம். வரைபடத்தில் ஏற்கெனவே கவர் செய்திருந்த பகுதிகளைக் குறியிட்டிருந்தார். அதுபோக இன்று பார்க்கவேண்டிய தெருக்களைக் குறித்துக்கொண்டு நானும் சத்யாவும் கிளம்பினோம். முதலில் ஒவ்வொரு வீட்டுக்கும் இருவருமே போய்க் கதவைத் தட்டிப் பேச்சுக்கொடுக்க ஆரம்பித்தோம். மிடில் கிளாஸ், லோவர் மிடில் கிளாஸ், ஏழை மக்கள் என்று கலந்துகட்டிய பகுதி. பக்கிங்காம் கால்வாய்க்கும் கிழக்குக் கடற்கரைச் சாலைக்கும் இடைப்பட்ட பகுதி. களத்துமேட்டுத் தெரு, வெங்கடேச நகர் பகுதிகளில் சில பல தெருக்களிலும் சந்துகளிலும் வீடு வீடாகச் சென்றோம்.
மக்கள் அனைவருமே நின்று நாங்கள் பேசியதைக் கேட்டனர். பலரும் எங்களை வீட்டுக்கு அழைத்து தண்ணீர் கொடுத்தனர். காபி குடிக்கிறீர்களா என்று கேட்டனர்.
இந்தப் பகுதிக்கு நீங்கள் ஒருமுறை சென்றால் தெரியும். திறந்த சாக்கடை. ஆங்காங்கே குளம் குட்டையாக நீர் தேங்கி பல்வேறு உயிரினங்கள் பல்கிப் பெருகுகின்றன. குப்பைகள் எடுக்கப்படுவதே இல்லை. சாலைகள் சரியாக இல்லை. டீ வீலர், ஃபோர் வீலர் என்று எதுவாக இருந்தாலும் ஒரு மாதத்தில் பஞ்சர் ஆகிவிடும் அல்லது சஸ்பென்ஷன் போய்விடும். அனைத்து வீடுகளுக்கும் ஒழுங்காகக் குடிநீர் வருவதில்லை. இப்படிப் பலவிதப் பிரச்னைகள்.
இதுவரையில் கொட்டிவாக்கம் பஞ்சாயத்தாக இருந்த இந்த இடம் இப்போது ஒரு வார்டாக சென்னை மாநகராட்சியில் சேருகிறது. ராஜ் செருபால் போன்ற ஒருவர் கவுன்சிலராக வந்தால் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தமுடியும் என்ற எங்கள் நம்பிக்கையை அங்குள்ள அனைத்து மக்களும் ஏற்றுக்கொண்டதாகவே எனக்குத் தோன்றியது.
சிறிது நேரம் கழித்து வேறு இரு நண்பர்கள் சேர்ந்துகொண்டனர். ராஜும் சேர்ந்துகொண்டார். மேலும் பல வீடுகளுக்குச் சென்றோம். சுயேச்சை வேட்பாளர் இவர் என்பது அனைத்து இடங்களிலுமே வரவேற்பைத் தந்தது. சிலர் ‘படித்த ஆசாமி’ என்று வரவேற்றனர். அமெரிக்கா சென்று படித்தவர் என்பது மட்டுமின்றி குடிமைச் சமூக வேலைகளில் கடந்த பல ஆண்டுகளாக இந்தியாவில் ஈடுபட்டவர், தில்லியில் மட்டுமின்றி சென்னையிலும் கடந்த சில ஆண்டுகளாக இந்தத் துறையில் ஈடுபட்டு வருகிறவர் என்பதைச் சுட்டிக் காட்டினோம். ஒரு சிலர், இவர் ஏழை மக்களுடன், குப்பத்தில் உள்ளவர்களுடன் பேசுவாரா என்று சந்தேகத்தை வெளிப்படுத்தினர்.
ஆனால் குப்பம் ஒன்றுக்கு ராஜ் செருபால் சென்றபோது, அங்குள்ள இளைஞர்கள் பலரும் தன்னார்வலர்களாகப் பணியாற்ற விருப்பம் தெரிவித்தனர். அவர்களுக்குக் காசு பணம் கொடுக்க முடியாது என்பதை ராஜ் செருபால் விளக்கியபோது, அவர்கள் காசு ஏதும் தேவையில்லை என்று தெளிவாகவே கூறினர். இதுவரை காசு கொடுத்த கட்சிகள் மக்களுக்கு ஒன்றும் செய்ததில்லை என்பதை இந்த இளைஞர்கள் நன்றாகவே உணர்ந்திருந்தனர். நேற்று இரவு முழுதும் கண் விழித்து தெருவெங்கும் போஸ்டர்களை அவர்கள்தான் ஒட்டினர். 150-க்கும் ஏற்பட்ட மகளிர் சுய உதவிக் குழு ஒன்றைச் சேர்ந்த ஏழைப் பெண்கள் அனைவரும் ராஜ் செருபாலின் பிரசாரத்துக்கு ஆதரவு தந்து கூட வந்து வாக்கு கேட்பதாகச் சொல்லியுள்ளனர்.
வார்டு எண் 183-ல் இருக்கிறீர்களா? செயலூக்கம் கொண்ட கவுன்சிலர் உங்களுக்குத் தேவையா? தன்னார்வலராக ராஜ் செருபாலுக்கு வாக்கு சேகரிக்க விரும்புகிறீர்களா? என்னைத் தொடர்பு கொள்ளுங்கள்.