Sunday, October 09, 2011

தேர்தல் பிரசாரம்

இன்று காலை நானும் சத்யாவும் கொட்டிவாக்கம் தொகுதியில் ராஜ் செருபால்  சார்பில் பிரசாரத்தில் ஈடுபட்டோம். சத்யா ஏற்கெனவே இரண்டு நாள்கள் பிரசாரத்துக்குச் சென்றிருந்தார். நான் போவது இதுதான் முதல் முறை.

ராஜ் கொட்டிவாக்கம் தொகுதியில் (வார்ட் எண் 183) சென்னை மாநகராட்சி கவுன்சிலர் பதவிக்கு நிற்கிறார். சில மாதங்களுக்குமுன் ராஜ், நான், சத்யா, இன்னும் சிலர் சேர்ந்து வெவ்வேறு தொகுதிகளில் நிற்கலாம் என்று பேசிக்கொண்டிருந்தோம். பல்வேறு காரணங்களால் நாங்கள் பலரும் கழன்றுகொண்டோம். ராஜ் மட்டும் நிற்கிறார்.

ராஜ், சிடிகனெக்ட் என்ற லாபநோக்கில்லா அமைப்பில் பணி புரிகிறார். ஒரு நகரம் சரியாகத் திட்டம் தீட்டாத காரணத்தால் மக்களுக்குத் தரவேண்டிய அடிப்படை வசதிகளைச் சரியாகத் தருவதில்லை. இருக்கும் இடத்துக்குள் அந்த வசதிகளை எப்படிச் செய்துதருவது என்பதை ஆராய்கிறது சிடிகனெக்ட். போக்குவரத்து நெரிசலா? எப்படியான சிறு சிறு மாறுதல்களைச் செய்தால் நெரிசலைக் குறைக்கலாம்? தெருவோரத்தில் மக்கள் நடக்க ஏன் மாநகராட்சி வசதிகளைச் செய்துதருவதில்லை? அதனை எப்படி மக்களின் ஈடுபாட்டுடனேயே நடைமுறைப்படுத்தலாம்? தெருவோர வியாபாரிகளைப் பொதுவாகத் துரத்துவதையே ஆட்சியாளர்கள் நோக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் எந்த அளவுக்கு ஒரு உள்ளூர்ப் பொருளாதாரத்துக்கு உபயோகமானவர்கள், அவர்களுக்கு எப்படிப்பட்ட வசதிகளைச் செய்துகொடுக்கலாம்; அதே நேரம் பாதையில் நடக்கும் மக்களுக்கும் பிரச்னையில்லாமல் எப்படிச் செய்யலாம்? இதுபோன்ற பல விஷயங்கள், நீர், குப்பை என்று மக்களுக்குத் தேவையான பலவற்றைப் பற்றியுமான ஆராய்ச்சியில் ஈடுபட்டிருப்பவர் ராஜ்.

கிழக்கு மொட்டைமாடிக் கூட்டம் ஒன்றில் தி.நகர் போக்குவரத்து நெரிசல் பிரச்னையை எப்படி எதிர்கொள்வது என்பது பற்றி ராஜ் விரிவாகவே பேசியிருந்தார்.

***

காலையில் சுமார் 8 மணிக்கு ராஜை அவர் வீட்டில் சந்தித்து துண்டுப் பிரசுரங்களைச் சேகரித்துக்கொண்டோம். வரைபடத்தில் ஏற்கெனவே கவர் செய்திருந்த பகுதிகளைக் குறியிட்டிருந்தார். அதுபோக இன்று பார்க்கவேண்டிய தெருக்களைக் குறித்துக்கொண்டு நானும் சத்யாவும் கிளம்பினோம். முதலில் ஒவ்வொரு வீட்டுக்கும் இருவருமே போய்க் கதவைத் தட்டிப் பேச்சுக்கொடுக்க ஆரம்பித்தோம். மிடில் கிளாஸ், லோவர் மிடில் கிளாஸ், ஏழை மக்கள் என்று கலந்துகட்டிய பகுதி. பக்கிங்காம் கால்வாய்க்கும் கிழக்குக் கடற்கரைச் சாலைக்கும் இடைப்பட்ட பகுதி. களத்துமேட்டுத் தெரு, வெங்கடேச நகர் பகுதிகளில் சில பல தெருக்களிலும் சந்துகளிலும் வீடு வீடாகச் சென்றோம்.

மக்கள் அனைவருமே நின்று நாங்கள் பேசியதைக் கேட்டனர். பலரும் எங்களை வீட்டுக்கு அழைத்து தண்ணீர் கொடுத்தனர். காபி குடிக்கிறீர்களா என்று கேட்டனர்.

இந்தப் பகுதிக்கு நீங்கள் ஒருமுறை சென்றால் தெரியும். திறந்த சாக்கடை. ஆங்காங்கே குளம் குட்டையாக நீர் தேங்கி பல்வேறு உயிரினங்கள் பல்கிப் பெருகுகின்றன. குப்பைகள் எடுக்கப்படுவதே இல்லை. சாலைகள் சரியாக இல்லை. டீ வீலர், ஃபோர் வீலர் என்று எதுவாக இருந்தாலும் ஒரு மாதத்தில் பஞ்சர் ஆகிவிடும் அல்லது சஸ்பென்ஷன் போய்விடும். அனைத்து வீடுகளுக்கும் ஒழுங்காகக் குடிநீர் வருவதில்லை. இப்படிப் பலவிதப் பிரச்னைகள்.

இதுவரையில் கொட்டிவாக்கம் பஞ்சாயத்தாக இருந்த இந்த இடம் இப்போது ஒரு வார்டாக சென்னை மாநகராட்சியில் சேருகிறது. ராஜ் செருபால் போன்ற ஒருவர் கவுன்சிலராக வந்தால் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தமுடியும் என்ற எங்கள் நம்பிக்கையை அங்குள்ள அனைத்து மக்களும் ஏற்றுக்கொண்டதாகவே எனக்குத் தோன்றியது.

சிறிது நேரம் கழித்து வேறு இரு நண்பர்கள் சேர்ந்துகொண்டனர். ராஜும் சேர்ந்துகொண்டார். மேலும் பல வீடுகளுக்குச் சென்றோம். சுயேச்சை வேட்பாளர் இவர் என்பது அனைத்து இடங்களிலுமே வரவேற்பைத் தந்தது. சிலர் ‘படித்த ஆசாமி’ என்று வரவேற்றனர். அமெரிக்கா சென்று படித்தவர் என்பது மட்டுமின்றி குடிமைச் சமூக வேலைகளில் கடந்த பல ஆண்டுகளாக இந்தியாவில் ஈடுபட்டவர், தில்லியில் மட்டுமின்றி சென்னையிலும் கடந்த சில ஆண்டுகளாக இந்தத் துறையில் ஈடுபட்டு வருகிறவர் என்பதைச் சுட்டிக் காட்டினோம். ஒரு சிலர், இவர் ஏழை மக்களுடன், குப்பத்தில் உள்ளவர்களுடன் பேசுவாரா என்று சந்தேகத்தை வெளிப்படுத்தினர்.

ஆனால் குப்பம் ஒன்றுக்கு ராஜ் செருபால் சென்றபோது, அங்குள்ள இளைஞர்கள் பலரும் தன்னார்வலர்களாகப் பணியாற்ற விருப்பம் தெரிவித்தனர். அவர்களுக்குக் காசு பணம் கொடுக்க முடியாது என்பதை ராஜ் செருபால் விளக்கியபோது, அவர்கள் காசு ஏதும் தேவையில்லை என்று தெளிவாகவே கூறினர். இதுவரை காசு கொடுத்த கட்சிகள் மக்களுக்கு ஒன்றும் செய்ததில்லை என்பதை இந்த இளைஞர்கள் நன்றாகவே உணர்ந்திருந்தனர். நேற்று இரவு முழுதும் கண் விழித்து தெருவெங்கும் போஸ்டர்களை அவர்கள்தான் ஒட்டினர். 150-க்கும் ஏற்பட்ட மகளிர் சுய உதவிக் குழு ஒன்றைச் சேர்ந்த ஏழைப் பெண்கள் அனைவரும் ராஜ் செருபாலின் பிரசாரத்துக்கு ஆதரவு தந்து கூட வந்து வாக்கு கேட்பதாகச் சொல்லியுள்ளனர்.

வார்டு எண் 183-ல் இருக்கிறீர்களா? செயலூக்கம் கொண்ட கவுன்சிலர் உங்களுக்குத் தேவையா? தன்னார்வலராக ராஜ் செருபாலுக்கு வாக்கு சேகரிக்க விரும்புகிறீர்களா? என்னைத் தொடர்பு கொள்ளுங்கள்.

19 comments:

  1. அந்த மொட்டை மாடிக் கூட்டத்தில் நான் கலந்து கொண்டேன். எனது தனிப்பட்ட அபிப்ராயம் : ராஜ் செருபல் மட்டும் போதாது , ராஜ் செருபல்கள் வேண்டும்

    ReplyDelete
  2. எழுத்தோடு நிறுத்திக்கொள்ளாமல் களத்தில் இறங்கி பிரச்சாரம் செய்யும் பத்ரிக்கு பாராட்டுதல்கள்!

    ReplyDelete
  3. அப்ப இவரு 'இனி சேரி இல்லை' - சத்யா நகரை மாத்தினவர் இல்லையா...?

    ReplyDelete
  4. என் புத்தகங்கள்

    நீங்கள் எழுதிய ராமானுஜம் ஐன்ஸ்டீன் ஆகிய புத்தகங்கள் அருமை நண்பா ....

    ReplyDelete
  5. one major hurdle is that people normally vote for the councilars who are part of the ruling party. To get atleast some funds or things done.

    hope raj wins.

    ReplyDelete
  6. கொட்டிவாக்கம் தேர்தல் வலைப்பக்கம் http://rajcherubal.com/ முழுக்கவே ஆங்கிலத்தில் மட்டும் இருப்பது சரியான அறிகுறியாகத் தெரியவில்லையே.

    ReplyDelete
  7. Pani Sirraka Valthugal :)

    ReplyDelete
  8. ராமதுரை எழுதியது
    காசு எதுவும் தேவையில்லை என்று கூறி பலர் தாங்களாக வந்து போஸ்டர்கலை ஒட்டினர் என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள். இது சிறு ஆரம்பமாக இருக்கலாம். வருகிற ஆண்டுகளில் இத்தகையவர்களின் தொகை நிச்சயம் பல்கிப் பெருகும். ஆகவே இத் தடவை ராஜ் ஜெயிக்காமல் போனாலும் பரவாயில்லை. நல்ல்தொரு ஆரம்பம் மேற்கொள்ளப்பட்டுள்ளது குறித்தும் பிரசாரத்தில் தாங்கள் பங்கு கொண்டது பற்றியும் மகிழ்ச்சி.
    ராமதுரை

    ReplyDelete
  9. உங்கள் முயற்சி சிறக்க வாழ்த்துக்கள்..
    ராஜ் போன்ற சிந்தனையாளர்களே இந்நாட்டிற்கு தேவை..
    தேர்தலில் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  10. Raj must win the election, let us support him, let us encourage him in our own way, let us encourage him to reach out the voters with real interest in them to improve the means to achieve the good city civic life.

    ReplyDelete
  11. இவரோட பேர்தான் பெரிய பிரச்சனையா இருக்கும்னு தோணுது..

    ReplyDelete
  12. ராஜ் ஒரு மலையாளி. சென்னையில்தான் டி.ஜி.வைஷ்ணவா கல்லூரியில் படித்தார். பிறகு அமெரிக்கா சென்று படித்தார். தில்லியில் இருந்தார். கடந்த சில வருடங்களாக சென்னையில் வசிக்கிறார். தமிழ் எழுதத் தெரியாது. ஆனால் தமிழ் பேசுவார்.

    வேறு ஒருவர் கேட்டார்... அவருடைய வலைப்பதிவு தமிழில் இல்லையே என்று. குறைதான். நேரம் இல்லை. எனவே தேர்தலில் ஜெயித்தவுடன் சரிசெய்துவிடுவோம். இல்லாவிட்டால் அடுத்த தேர்தலுக்குமுன் சரிசெய்துவிடுவோம்.

    ஏன் அதிஷா, ‘தமிழர்களுக்குத்தான் தமிழ்நாடு’ கோஷமா? நன்றாகப் போடுங்கள்.

    ReplyDelete
  13. தமிழர்களுக்கே தமிழ்நாடு கோஷம் கிடையாது. (அது வேற டிபார்ட்மென்ட், அதைப்பற்றி இங்கே பேச ஒன்றுமில்லை)

    நான் குறிப்பிட்டது அவருடைய தேர்தலில் போட்டி என்கிற அடிப்படையில் சொன்னது. வெறும் ராஜ் என்று மட்டுமே பிரச்சாரம் செய்யலாம். ராஜோடு ஒட்டிக்கொண்டிருக்கும் செருபால் அவரை வாக்காளர்களிடமிருந்து அந்நியப்படுத்தும் என்பது என் எண்ணம். ஏதோ ஹிந்திகாரன் போல என்று சிலர் நினைக்க கூடும். அது நிச்சயமாக அவரை அந்நியப்படுத்தும்.

    அவர் மலையாளி என்பதே நீங்க சொன்னபின்தான் எனக்குத்தெரிகிறது. நானும்கூட இந்திகாரர் என்றே நினைத்தேன்.

    ReplyDelete
  14. ஹிந்தியோ, மலையாளமோ......செருபால் என்றால் 'சைபால்' என்று நாபகம் வருகிறது :-)

    ReplyDelete
  15. பத்ரி,

    முடிந்தால் ராஜ் செருபலின் வலைப்பக்கத்திறுகு ஒரு சுட்டி கொடுக்கவும். நன்றி.

    http://rajcherubal.com

    http://twitter.com/#!/rajcherubal

    http://www.facebook.com/rajforcouncillor

    ReplyDelete
  16. பத்ரி,
    அதிஷா சொன்னது மிகவும் சரி.
    "செருபால்" எல்லாம் அனாவசியம்..
    இசகேடான இடத்தில் "ப்" சேர்த்துவிடுவார்கள்!
    மேலும் எனக்கொரு சந்தேகம்.
    ஒருவேளை இவர் கவுன்சிலராக வந்தால் கூட
    மற்ற கவுன்சிலர்களையோ, அல்லது மேயரையோ மீறி ஏதாவது செயல்பாடு செய்ய முடியுமா?
    செய்ய விடுவார்களா?
    ஆனானப்பட்ட ஸ்டாலினயே டம்மிபீஸ் ஆக்கி (அவர் கடந்த அ.தி.மு.க ஆட்சியில் மேயராக இருந்தபோது)உட்கார வைத்தவர்கள் தானே..

    எப்படி இருப்பினும்
    திறத்தினால் எளியராகி,
    செய்கையில் உயர்ந்து நிற்கும்
    உங்கள் குழுமத்திற்கு
    நன்றி,வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  17. அட்வான்ஸ் வாழ்த்துக்கள் :)

    ReplyDelete
  18. திரு. ராஜ் ஜெயிக்க வாழ்த்துகள்!

    ReplyDelete