இந்தியத் தொழில்நுட்பத்தின் மிகச் சிறந்த ஓர் எடுத்துக்காட்டாக, நேற்று மாலை ஜி.எஸ்.எல்.வி ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. ராக்கெட்டின் இறுதி அடுக்கில், சொந்தமாக இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட மீ-குளிர் எஞ்சின் ஒன்று பயன்படுத்தப்பட்டு, அது வெற்றிகரமாக இயங்கியுள்ளது. இதற்குமுன் ரஷ்யாவிலிருந்து பெற்ற மீ-குளிர் எஞ்சின்களைப் பயன்படுத்தியிருந்தோம். அமெரிக்க அழுத்தத்தால் அவர்கள் கையை விரித்துவிட, இந்தியா சொந்தமாகத் தயாரித்த மீ-குளிர் எஞ்சின்களைப் பயன்படுத்தத் தொடங்கினோம். 2010-ம் ஆண்டு இரண்டுமுறை அந்த எஞ்சின்கள் இயங்காமல்போக ராக்கெட்டுகள் வானிலேயே வெடித்துச் சிதறின. இரண்டு தோல்விகளுக்குப்பின், இம்முறை, நேற்று, வெற்றி.
ராக்கெட் நுட்பம் உங்களுக்கு நன்கு தெரிந்திருக்கும். ஆக்சிஜனேற்றம் என்ற முறையில் ஓர் எரிபொருளை ஆக்சிஜன் கொண்டு எரிக்கும்போது, வெப்பம் வெளிப்படும். எரிப்பதனால், வாயுக்களும் வெளியாகும். வெளியாகும் வாயுக்கள் வெப்பத்தால் விரிவடையும். அவற்றை ஒரு சிறு துளை (Nozzle) மூலம் வெளியேற்றும்போது (நியூட்டனின்) எதிர்வினை காரணமாக ராக்கெட் முன்னோக்கிப் பாயும்.
திட, திரவ எரிபொருள்கள் பலவற்றை ராக்கெட்டில் பயன்படுத்துவார்கள். ஆனால் அனைத்தையும்விட மிகச் சிறந்த எரிபொருள் ஹைட்ரஜன் வாயுதான். அது ஆக்சிஜனுடன் சேர்ந்து எரியும்போது மிக அதிக அளவிலான வெப்பம் வெளிப்படும். இரண்டும் இணைந்து நீராவி ஆகும். வெப்பத்தில் இந்த நீராவி நன்கு விரிவடையும்.
ஆனால் ஆக்சிஜனும் ஹைட்ரஜனும் சாதாரண அறை வெப்பநிலையில், வளிமண்டல அழுத்தத்தில் வாயுக்களாகவே இருக்கும். வாயுக்களாக இருந்தால் நிறைய இடத்தை அடைத்துக்கொள்ளும். எனவே ராக்கெட் தொழில்நுட்பத்தில் இவற்றைப் பயன்படுத்தவேண்டுமானால் இவற்றைத் திரவமாக மாற்றவேண்டியிருக்கும். திரவமாக மாற்ற, வெப்பநிலையைக் குறைக்கவேண்டும்.
வளிமண்டல அழுத்தத்தில், ஆக்சிஜன் -183 டிகிரி செண்டிகிரேடிலும் ஹைட்ரஜன் -253 டிகிரி செண்டிகிரேடிலும் திரவ நிலையை அடைந்து நிலையாக அப்படியே இருக்கும். இந்த அளவுக்கான குளிர்ச்சியை எளிதில் உருவாக்கிவிட முடியாது. இந்தத் தொழில்நுட்பத் திறன் உலகில் அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ், சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளிடம் மட்டுமே இருக்கிறது. இப்போது இந்தியாவும் இந்தத் தொழில்நுட்பத்தை வெற்றிகரமாகப் பரிசோதித்துவிட்டது.
மீ-குளிர் எஞ்சின் மிக அதிகமான சக்தி காரணமாக, அதிக எடை கொண்ட பொருள்களை, அதிக உயரத்துக்கு எடுத்துச் செல்லக்கூடிய ஆற்றல் நம் ராக்கெட்டுகளுக்குக் கிடைக்கும். ஜியோஸ்டேஷனரி செயற்கைக்கோள்களை (அதாவது பூமி தன் அச்சில் தான் சுழலும் அதே கோணத் திசைவேகத்தில் இந்த செயற்கைக்கோள் பூமியைச் சுற்றிச் சுழலும். இதனால் இந்தச் செயற்கைக்கோள் பூமியின்மேல் ஓரிடத்தில் நிலையாக இருப்பதுபோன்ற தோற்றம் ஏற்படும். இது, பூமியின் மேற்பரப்பிலிருந்து - கடல் மட்டத்திலிருந்து 35,786 கிமீ உயரத்தில் உள்ளது) வானில் ஏவ இந்த ராக்கெட்டுகளைப் பிரமாதமாகப் பயன்படுத்தலாம்.
இதுவரை, இஸ்ரோவின் பொதி சுமக்கும் கழுதை, பி.எஸ்.எல்.வி என்ற ராக்கெட்டாகத்தான் இருந்தது. இதனால் கனமான பொருள்களை மிக அதிக உயரத்துக்குக் கொண்டுசெல்ல முடியாது. ஆனால் இதனைக்கொண்டுதான் சந்திரயான், மங்கள்யான் ஆகியவற்றை ஏவினோம். இப்போது புதிய பொதிக்குதிரையாக ஜி.எஸ்.எல்.வி வந்துவிட்டது. இதுவரை எடுத்துச் சென்றதுபோல் இரு மடங்கு அல்லது அதற்கும் மேலாக ஏற்றிச்செல்ல முடியும். மேலும் சந்திரனுக்குச் செல்லவேண்டும் என்றால் ஒரேயடியாக பூமியின் விடுபடு வேகத்தைத் தாண்டிக்கூட ஒரே உந்தலில் இந்த மீ-குளிர் எஞ்சின்களின் உதவியால் சென்றுவிட முடியும் (என்று நினைக்கிறேன்). பி.எஸ்.எல்.வி கொண்டு சந்திரயான் ஏவப்பட்டபோது (பின்னர் மங்கள்யானிலும்) ஒரு கீழான நீள்வட்டப்பாதையில் நுழைந்து, கொஞ்சம் கொஞ்சமாகப் பாதையை மீ-நீள்வட்டப்பாதையாக மாற்றி, பின்னர்தான் பூமியின் விடுபடு வேகத்தைத் தாண்டினோம். அப்படியெல்லாம் இனி காத்துக்கொண்டிருக்க வேண்டியதில்லை.
***
விஜய் டிவி நீயா நானா விருதுகளில், இஸ்ரோவின் மங்கள்யான் திட்ட இயக்குனர் சுப்பையா அருணனுக்கு விருது அளிக்கப்பட்டது. அப்போது நானும் அரங்கில் இருந்தேன். அந்த விருது அருணனுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த இஸ்ரோவுக்கே அளிக்கப்பட்டது என்று எடுத்துக்கொள்ளவேண்டும். எண்ணற்ற இந்திய விஞ்ஞானிகளும் தொழில்நுட்ப வல்லுனர்களும் சேர்ந்து, மிகவும் எதிர்மறையான சூழலில், உலகில் யாருமே உதவாத சூழலில், இந்தியாவிலும் இஸ்ரோவின் சாதனைகளை யாரும் கண்டுகொள்ளாத சூழலில், “ஏழைகள் உண்ண உணவில்லாமல் கஷ்டப்படும்போது ராக்கெட் ஒரு கேடா?” என்று கரித்துக்கொட்டப்படும் சூழலில் செய்யப்படிருக்கும் மாபெரும் சாதனைகள் இவை.
நாளை இந்தியா அனைத்துத் துறைகளிலும் தன்னிறைவு பெற, இந்தியாவில் ஏழைமை அகல, இந்தத் தொழில்நுட்பங்கள் மிகவும் பயன்படும். ஹைட்ரஜன் எரிபொருள், இந்தியாவின் எரிபொருள் தேவையைப் பெருமளவு பூர்த்தி செய்யலாம். அணுசக்தியைக் கொண்டு உருவாக்கும் எக்கச்சக்கமான வெப்பத்தைப் பயன்படுத்தி ஒரு பக்கம் மின்சாரம் தயாரிக்கும் அதே நேரம், இன்னொரு பக்கம் தண்ணீரை உடைத்து ஹைட்ரஜனாகவும் ஆக்சிஜனாகவும் உருவாக்கலாம். இன்றே இந்தத் தொழில்நுட்பங்கள் புழக்கத்தில் உள்ளன. தொடர்ந்து இவற்றில் ஆராய்ச்சி செய்வதன்மூலம் உருவாக்கப்படும் ஹைட்ரஜனின் செலவைக் குறைப்பது எப்படி என்று பார்க்கலாம். ஹைட்ரஜனை எரிபொருளாகக் கொண்டு எஞ்சின்கள் செய்தால் நாளை கார்கள், பேருந்துகள் அனைத்தும் இதில் இயங்கலாம். வெளிநாடுகளிலிருந்து பெட்ரோலியம், கரி ஆகியவற்றை நாம் இறக்குமதி செய்யவேண்டிய தேவையே இல்லை. இஸ்ரோவும் இந்தியாவின் அணு சக்தித் துறையும் இணைந்து தம்முடைய தொழில்நுட்பத் திறன்களை ஒன்றாகக் கொண்டுவந்தால் இந்தியப் பொருளாதாரத்துக்கு அது நல்ல வலு சேர்க்கும்.
மீண்டும் ஒருமுறை, இஸ்ரோ விஞ்ஞானிகளையும் பொறியாளர்களையும் வாழ்த்துவோம்.