Wednesday, August 31, 2011

ஊழலுக்கான காரணங்கள்

ஓரிரு தினங்களுக்குமுன் லோக்பால் தொடர்பான விஜய் டிவியின் நீயா நானா நிகழ்ச்சி ஒளிப்பதிவின்போது ஓர் ஓரத்தில் நானும் ஒரு பங்கேற்பாளனாக அமர்ந்திருந்தேன்.

ஊழல் பற்றிப் பேசும்போது ஒருவர், ‘நோய்நாடி நோய்முதல் நாடி அது தணிக்கும் வாய்நாடி’ என்று திருவள்ளுவரை மேற்கோள் காட்டி, நாம் சிம்ப்டம்ஸ் பற்றித்தான் பேசுகிறோம், காஸ் பற்றிப் பேசுவதில்லை என்றார். பின்னர் பேசிய எழுத்தாளரும் களப்பணியாளருமான ஒருவர், 1991-க்குப் பிறகான புதிய தாராளவாதக் கொள்கைதான் ஊழல் இந்த அளவு வளர்வதற்குப் பெரும் காரணம் என்றார்.

அதற்குமுன் ஊழலே இல்லையா என்ற சந்தேகம் எனக்கு ஏற்பட்டது.

தாராளமயவாதிகளான என்னைப் போன்றோர், ஊழல் ஏற்படக் காரணமே பெருத்துப்போன அரசுதான் என்று நம்புகிறோம். அரசும் அரசு ஊழியர்களும்தான் ஊழலின் அடிப்படைக் காரணம் என்பது எங்கள் கருத்து. இடதுசாரிகளின் கருத்து வேறுமாதிரியாக உள்ளது. ஊழலுக்குக் காரணமே முதலியம்; பெரும் ஊழல் அனைத்துமே கொலைகாரப் பாவிகளான கேபிடலிஸப் பெருமுதலாளிகளால்தான் என்கிறார்கள் அவர்கள்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஜி.ராமகிருஷ்ணன் தங்கள் கட்சிக் கொள்கையை எடுத்துரைக்கும்போது ஊழலுக்குக் காரணம் Politician-Bureaucrat-Corporate nexus என்றார்.

அண்ணா ஹசாரே இயக்கத்தை எதிர்ப்பவர்கள், ஊழலுக்கு எதிரான லோக்பால் சட்டத்தில் ஏன் கார்பொரேட் நிறுவனங்கள் சேர்க்கப்படவில்லை, ஏன் என்.ஜி.ஓ அமைப்புகள் சேர்க்கப்படவில்லை, ஏன் மீடியா நிறுவனங்கள் சேர்க்கப்படவில்லை என்றெல்லாம் கேள்விகளை எழுப்பினர். இன்னும் கேட்கப்படாத ஒரே கேள்வி, ஏன் அமெரிக்க அதிபரை இதில் சேர்க்கவில்லை என்பதுதான்.

நேற்று சிபிஐ பொறி வைத்துப் பிடித்த ஒரு வழக்கு செய்திகளில் வெளியாகியுள்ளது. சென்னையைச் சேர்ந்த எவெரான் என்ற கார்பொரேட் நிறுவனம், கல்வித் துறையில் ஈடுபட்டுவருகிறது. இந்த நிறுவனம் வரி ஏய்ப்பு செய்துள்ளது என்பதை ஒரு வருமான வரி அதிகாரி கண்டுபிடிக்கிறார். உடனே அவர் என்ன செய்யவேண்டும்? அந்த நிறுவன அதிகாரியைக் கம்பி எண்ண வைத்துவிட்டு, நிறுவனச் சொத்துக்களைப் பறிமுதல் செய்து, வரியைக் கட்டுமாறு செய்திருக்கவேண்டும். ஆனால், மாறாக என்ன செய்கிறார்? ஓர் இடைத்தரகரை வைத்து (அவர் ஒரு சார்ட்டர்ட் அக்கவுண்டண்ட்!) பேரம் பேசி, 50 லட்ச ரூபாய் பணமாகப் பெற்றுக்கொண்டு, வரியைக் குறைக்கிறார். [செய்திகளின்படி, எவெரான் நிறுவன நிர்வாக இயக்குனர்தான் ஓர் இடைத்தரகர்மூலம் வருமான வரி அதிகாரி ரவீந்தரைத் தொடர்புகொள்கிறார்.] அப்போதுதான் சிபிஐ அவரைக் கையும் களவுமாகப் பிடிக்கிறது.

இப்போது என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்? எவெரானின் நிர்வாக இயக்குனர் கிஷோர்மீது உடனடியாக வழக்கைப் பதிவுசெய்துவிடலாம். அவர்களது நிறுவனம், ஏமாற்றிய வருமான வரியை இன்னும் ஒரு மாதத்துக்குள் கட்டவேண்டும் என்று ஆணை பிறப்பித்துப் பணத்தை மத்திய அரசு வசூலித்துவிடும். கிஷோர் ஜெயிலுக்கு அனுப்பப்படுவார்.

ஆனால், லஞ்சம் வாங்கிய ஐ.ஆர்.எஸ் அலுவலரான ரவீந்தருக்கு என்ன ஆகும்? அவர்மீது வழக்குப் பதிவு செய்ய மேலிட அனுமதி தேவைப்படும். டிபார்ட்மெண்டல் என்கொயரி நடக்கும். அவர் தாற்காலிகப் பதவிநீக்கம் செய்யப்படுவார். அவரது சொத்துகளைப் பறிமுதல் செய்ய முடியாது. சில ஆண்டுகள் கழித்தும்கூட அவர்மீது எந்த நடவடிக்கையும் எடுத்திருக்க மாட்டார்கள்.

கிஷோர் செய்தது குற்றம் என்பதில் சந்தேகமே இல்லை. அதனை லோக்பால் மசோதா இல்லாமலேயே தீர்க்கமுடியும். தீர்த்தும் விடுவார்கள். ஆனால் ரவீந்தரை என்ன செய்யலாம்? அடுத்து வரும் தினங்களில் நாமே பார்க்கப்போகிறோம். இந்த வழக்கு நல்லதோர் உரைகல்லாக இருக்கும்.

கார்பொரேட் பூச்சாண்டியைச் சற்று ஆழமாகப் பார்ப்போம். கார்பொரேட் நிறுவனங்கள் அரசு ஊழியர்களுடனும் அரசியல்வாதிகளுடனும் சேர்ந்து பேசி, தமக்குச் சாதகமான கொள்கைகளை எடுக்கத் தூண்டுகின்றன. லாபியிங் செய்கின்றன. இந்த லாபியிங் வெளிப்படையாக இருக்கும்வரை இதில் பிரச்னை இல்லை என்று தோன்றுகிறது. நாம் அனைவருமே ஏதோ ஒருவிதத்தில் அரசிடம் லாபியிங் செய்துகொண்டேதான் இருக்கிறோம்.

ஆனால் சிலருக்கு லாபமும் பெரும் பலருக்கு நஷ்டமும் வரும் வகையில் கொள்கைகளை மாற்ற (பணமாகவோ அல்லது பொருளாகவோ) லஞ்சம் கொடுப்பதைத்தான் நாம் ஊழல் குற்றம் என்கிறோம். இந்தக் குற்றம் நடைபெறும்போது இன்றைய தேதியில் சட்டப்படி, கார்பொரேட் நிறுவனங்கள்மீது நடவடிக்கை எடுக்கமுடியும். ஆனால் அரசியல்வாதிமீதோ அதிகாரிமீதோ நடவடிக்கை எடுப்பது மிகவும் சிக்கலானதாக, கிட்டத்தட்ட முடியாததாக ஆகிவிடுகிறது. இதைத்தான் ஒரு வலுவான லோக்பால் சட்டம் மாற்ற முனைகிறது. அப்படிப்பட்ட வலுவான சட்டத்தை நிறைவேற்ற அரசியல்வாதிகள் மறுக்கிறார்கள். எனவே ஒரு மக்கள் போராட்டம் நிகழ்கிறது.

ஒரு கார்பொரேட் நிறுவனம் பல இடங்களில் தவறுகளைச் செய்ய வாய்ப்பு உள்ளது. அரசுடன் உறவாடும் இடங்களில்; ஒரு கார்பொரேட் நிறுவனத்துக்கும் இன்னோர் அரசு-சாரா அமைப்புக்கும் (அது கார்பொரேட் நிறுவனமாக இருக்கலாம்; தனி நபராக இருக்கலாம்; என்.ஜி.ஓவாக இருக்கலாம்) இடையிலான உறவில்; கார்பொரேட் நிறுவனத்துக்கும் அதன் வாடிக்கையாளர்களுக்கும் இடையில் உள்ள உறவில்; கார்பொரேட் நிறுவனம் தன் வேலையைச் செய்யும் இடத்தைச் சுற்றியுள்ள மக்களுடனான உறவில்.

இதில் அரசுடனான உறவில்தான் ஊழல் என்பது வருகிறது. பிற நிறுவனங்கள் அல்லது தனியாருடனான உறவில் ஏமாற்றுதல் அல்லது ஒப்பந்தத்தை மீறுதல் என்பதுதான் நடக்கிறது. தன் அலுவலகம், தொழிற்சாலை போன்றவை உள்ள இடங்களில் சூழியல் சார்ந்த பிரச்னைகள், அங்குள்ள மக்களுடைய வாழ்வாதாரம்மீதான பிரச்னைகள் ஆகியவை நடைபெறலாம்.

இதில் ஊழலை ஒழிக்கப் புறப்படுகிறோம் என்றால் அரசுடனான உறவைப் பரிசீலித்தால் மட்டும் போதுமானது. பிறவற்றைச் சீரமைக்க நீதிமன்றச் செயல்பாடுகளைத் துரிதப்படுத்தினாலே போதும். இங்கு காவல்துறை ஈடுபட்டுக் கட்டப் பஞ்சாயத்து செய்கிறது என்று வைத்துக்கொள்வோம். அது உடனடியாக அரசுடனான உறவாகிறது; ஊழலாகிறது. உடனே லோக்பால் போன்ற சட்டம் அமலில் இருந்தால், அது நடைமுறைக்கு வரும்.

என்.ஜி.ஓ, மீடியா ஆகியவற்றை எடுத்துக்கொண்டாலும் இதேதான். எனவே அரசுத் தரப்பிலிருந்து ஊழலைக் கட்டுப்படுத்தினாலேயே கார்பொரேட் ஊழல் அடிபட்டுப் போய்விடும். அதைவிடுத்து ஊரில் உள்ள அனைத்து அமைப்புகளையும் தேவையின்றி உள்ளே புகுத்துவது லோக்பால் மசோதாவை நீர்த்துப்போகச் செய்யும்.

இது ஏதோ கார்பொரேட் நிறுவனத்துக்கு வக்காலத்து வாங்க என்று அல்ல. அரசு ஊழலை எடுத்துக்கொண்டால் அதிலேயே கார்பொரேட் நிறுவனங்கள் மாட்டிக்கொண்டுவிடும் என்பதால்தான் இப்படிச் சொல்கிறேன். இல்லாவிட்டால் வாடிக்கையாளர் குறைதீர்ப்பு மையங்கள் மாதிரி ஆகிவிடும் லோக்பால் நீதிமன்றங்கள்!

***

அங்கு விவாதிக்கப்பட்ட மேலும் இரண்டு விஷயங்களை அடுத்து எடுத்துக்கொள்ளப்போகிறேன்.

1. இட ஒதுக்கீடு, சமூக நீதி தொடர்பானது.
2. (ஜன்) லோக்பால் மட்டும் ஊழலை ஒழித்துவிடும் என்பதை எப்படி நம்புவது?

***

தொடர்புள்ள இரு பதிவுகள்:

வினவு: 50 எல் லஞ்சத்தின் பின்னே ஐ.ஏ.எஸ்-ஆடிட்டர்-முதலாளி-ஹவாலா..ஜெய்ஹிந்த்!
மாமல்லன்: ஊழலைப் பற்றி ஜல்லியடி வில்லுப்பாட்டு


Saturday, August 27, 2011

சிந்து-சரஸ்வதி சமவெளி நாகரிகம்

மிஷல் தனினோ ஒரு பிரெஞ்சுக்காரர். இந்தியாவுக்கு வந்து பல ஆண்டுகளாகக் கோயம்புத்தூரில் வசித்துவருபவர்.

இவர் ஆங்கிலத்தில் எழுதி, பெங்குவின் பதிப்பகம் வெளியிட்டுள்ள புத்தகம்: The Lost River: On the Trail of the Sarasvati.

சரஸ்வதி என்ற நதி உண்மையான நதியா அல்லது இந்துக்கள் மனத்தளவில் மட்டுமே இருந்துவரும் ஒரு நதியா என்ற கேள்விக்கு விடை காண தனினோ முற்படுகையில் தொடங்குகிறது அவரது தேடல். கங்கை ஆறும் யமுனை ஆறும் சங்கமம் ஆகும் இடத்தில் அடி ஆழத்தில் சரஸ்வதி என்ற நதியும் ஓடுவதாகவும், இந்த மூன்று நதிகள் கூடும் இடத்தில் முழுக்குப் போட்டால் பாவம் போய் புண்ணியம் பெருகும் என்பதும் இந்துக்களின் நம்பிக்கை.

ஆனால் தனினோ சொல்லும் கதை வேறுமாதிரியானது. எக்கச்சக்க சான்றுகளுடன், சரஸ்வதி என்ற நதி உண்மையாகவே இருந்தது என்றும் அந்த நதி இமயத்தின் ஷிவாலிக் மலையில் பிறந்து, இன்றைய ஹரியானா, ராஜஸ்தானம் வழியாகப் பாய்ந்து குஜராத்தில் அரபிக் கடலில் கலந்தது என்கிறார் தனினோ. இது இவரது தனிப்பட்ட கருத்து கிடையாது. பிற அறிஞர்கள் சொல்லியிருப்பதை அழகாகக் கோர்த்துக் கொண்டுவருகிறார் தனினோ. இந்த ஆற்றுக்கு நீரைத் தரும் ஆறுகள் நிலநடுக்கம் காரணமாக வேறு திசையில் திரும்பியதாலும், இந்த ஆற்றின் கரையில் வாழ்ந்த மக்கள் நீரைப் பெருமளவு பயன்படுத்தியதாலும் இந்த நதி நாளடைவில் வற்றிக் காய்ந்து சுருங்கிவிட்டதாம்.

ஆனால் இந்தப் புத்தகம் உண்மையில் சரஸ்வதி என்ற நதியைப் பற்றியது மட்டுமல்ல. உண்மையில் சிந்து சமவெளி நாகரிகத்தைப் பற்றியது. இந்தப் புத்தகத்தின் அளவுக்கு சிந்து சமவெளி நாகரிகத்தைப் பற்றி எளிமையாக மக்களுக்குச் சொல்லும் புத்தகத்தை நான் பார்த்ததில்லை. உண்மையில் சரஸ்வதி நதியின் கரையில்தான் அந்த நாகரிகம் உருவாகியது என்கிறார் தனினோ. சரஸ்வதி சுருங்கச் சுருங்க, மக்கள் சிந்துவை நோக்கி நகர்ந்தனர். கங்கையை நோக்கியும் நகர்ந்தனர். இதனை மேலும் நீட்டிக்கிறார் தனினோ. வேதங்கள் உண்மையில் கங்கைக் கரையில் உருவாக்கப்படவில்லை; அவை சரஸ்வதி நதிக்கரையிலேயே உருவாக்கப்பட்டுவிட்டன என்கிறார் தனினோ.

சிந்து சமவெளி நாகரிகமே திராவிட நாகரிகம் என்ற ஒரு கோட்பாட்டைப் பல அறிஞர்கள் முன்வைக்கிறார்கள். முக்கியமாக எழுத்துரீதியில் பார்க்கும்போது சிந்து சமவெளியில் கிடைத்திருக்கும் இலச்சினைகள் திராவிட மொழி ஒன்றையே குறிப்பாக உணர்த்துகின்றன என்கிற வாதத்தை ஐராவதம் மகாதேவன், அஸ்கோ பர்ப்போலா போன்ற பலர் முன்வைக்கின்றனர். ஆனால் வேறு பலரும் ‘ஆரிய’ நாகரிகமே சிந்து-சரஸ்வதி சமவெளிக் கரையில் உருவானது என்ற கருத்தை முன்வைக்கின்றனர்.

செப்டெம்பர் 3-ம் தேதி அன்று மாலை 5.30 மணிக்கு தமிழ்ப் பாரம்பரியக் குழுமத்தின் சார்பில் சென்னை தி.நகர் வெங்கட்நாராயணா சாலையில் உள்ள தக்கர் பாபா வித்யாலயாவில் மிஷல் தனினோ, சரஸ்வதி ஆற்றைப் பற்றியும் சிந்து-சரஸ்வதி சமவெளி நாகரிகம் பற்றியும் உரையாடுகிறார். அதுகுறித்த தகவல் இதோ.

மிஷல் தனினோ எழுதிய புத்தகத்தின் தமிழாக்கத்தை கிழக்கு பதிப்பகம் வெளியிட உள்ளது. இந்தப் புத்தகம் செப்டெம்பர் மாதப் பிற்பகுதியில் சென்னையில் வெளியிடப்படும். அதுகுறித்த தகவல்களைப் பின்னர் எழுதுகிறேன்.

மரண தண்டனை எதிர்ப்பு

எந்தவிதமான குற்றத்துக்கும் மரணதண்டனை தீர்ப்பாகாது என்று நம்புபவன் நான். உலகில் பெரும்பாலான நாடுகள் மரண தண்டனையை ரத்து செய்துள்ளன. இந்தியா, சீனா, அமெரிக்கா போன்ற உலகின் முக்கியமான சில நாடுகளில் துரதிர்ஷ்டவசமாக இன்னமும் இந்தத் தண்டனை செயல்பாட்டில் உள்ளது. அமெரிக்காவிலும் பல மாகாணங்களில் இந்தத் தண்டனை கிடையாது.

ராஜிவ் காந்தி கொலைவழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் இருக்கும் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு மரண தண்டனை அளிக்கப்பட்டு, அதன்மீதான கருணை மனுவைக் குடியரசுத் தலைவர் நிராகரித்துள்ள நிலையில் செப்டெம்பர் 9-ம் தேதி அன்று அவர்களுக்கு மரணதண்டனை நிறைவேற்றப்படும் என்று வெளியாகியுள்ள தகவல்களால் தமிழகத்தில் பலர் மரண தண்டனைக்கு எதிரான போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

இந்தக் குரல்களில் பல, மரண தண்டனை தரப்பட்டுள்ள கைதிகள் எவ்விதத்திலும் குற்றமற்றவர்கள் என்கின்றன. வேறு சிலரோ, தமிழர்கள் தூக்கில் இடப்படும்போது பார்த்துக்கொண்டு சும்மா இருப்பதா என்கின்றனர். அங்கிருந்து, இந்திய நீதித்துறை, புலனாய்வுத்துறை ஆகியவைமீது குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகின்றன. உணர்வுரீதியாக எழும் இந்தக் குரல்கள் மக்களில் பெரும் பகுதியினரைத் தள்ளிவைக்கும்.

தர்மபுரி பேருந்து எரிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மூன்று அஇஅதிமுகவினருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டபோது இனிப்பு வழங்கிக் கொண்டாடிய தமிழர்களையும் நமக்குத் தெரியும். கிட்டத்தட்ட அவர்கள்தான் இன்று பேரறிவாளன் மற்றும் பிறருக்கான மரண தண்டனையை நீக்கவேண்டும் என்று வாதாடும் செயலிலும் இறங்கியிருக்கிறார்கள். அது குற்றம், இது குற்றமே இல்லை என்றெல்லாம் நேரத்துக்குத் தகுந்தவாறு மாற்றிக்கொள்வது நியாயமில்லை.

இன்று தொலைக்காட்சியில் பார்க்கும்போது பலரும், பேரறிவாளன் குற்றமே செய்யவில்லை என்பதில் தொடங்கி, மூன்று அப்பாவித் தமிழர்கள் தூக்கு மேடைக்குப் போகிறார்கள் என்பதுவரை பேசினார்கள். முருகன் அப்பாவியா? சம்பந்தப்பட்ட கொலையில் அவருக்குப் பங்கே இல்லையா? சாந்தன் எந்த அளவுக்கு அப்பாவி என்பது தெரியவில்லை. பேரறிவாளன் பற்றி ரகோத்தமன் போன்றோர் சொல்வது முற்றிலும் வேறுவிதமானது.

எனவே, குற்றம் செய்துள்ளார்களா, இல்லையா என்பதைத் தாண்டி, எந்தக் குற்றத்துக்கும் மரண தண்டனை கூடாது என்பதே நாகரிக சமுதாயத்தின் லட்சியமாக இருக்கவேண்டும் என்ற வாதத்தின்படி, நடக்க இருக்கும் தூக்கு தண்டனையை நான் கடுமையாக எதிர்க்கிறேன். அனைத்தையும் மீறி இந்தத் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டால், நான் மிகவும் வேதனை அடைவேன்.

என் பழைய பதிவு: மரண தண்டனைக்கு எதிராக...

Thursday, August 25, 2011

CBSE கணிதப் பாடத்திட்டம்

கடந்த சில தினங்களாக, CBSE பாடத்திட்டத்தில் ஏழாம் வகுப்பு படிக்கும் என் மகளுக்குக் கணிதம் சொல்லிக்கொடுத்துக்கொண்டிருக்கிறேன். பல்வேறு வடிவங்கள் கொடுத்து அவற்றுக்கான பரப்பளவைக் கண்டுபிடித்தல், லாப நட்ட விகிதங்கள், பின்னங்களைக் கூட்டுதல், தனிவட்டி, பின்னங்களும் அடுக்குக்குறிகளும் - இதுபோன்றவை.

பாடங்கள் மிகவும் கடினமானவையாகவே தோன்றுகின்றன. அந்தப் பருவத்தில் இதுபோன்ற கடினமான கணக்குகளை நான் நிச்சயம் செய்யவில்லை. தமிழ்நாடு பாடத்திட்டம் இன்றும்கூட எளிதான ஒன்றாகத்தான் உள்ளது என்பேன்.

தொட்டால் பற்றிக்கொள்ளும் வகையிலான பிள்ளைகளின் படிப்பைப் பற்றிக் கவலைப்படவேண்டிய தேவையில்லை. என் பெண்ணுக்குக் கணிதம் அவ்வளவாகப் பிடிக்காத ஒரு பாடம். பொதுவாகவே பெண்களுக்குக் கணிதம் என்றால் எட்டிக்காயோ என்று நினைக்கத் தோன்றுகிறது. இருந்தும் ஒரு முடிவுடன் கணிதத்தை முடிந்தவரி எளிமைப்படுத்து அதை அவள் ரசிக்குமாறு சொல்லித்தருவதாகச் சவால் விட்டிருக்கிறேன். பார்ப்போம், எப்படிப் போகிறது என்று.

அவளுடைய பள்ளியில், அவள் வகுப்பில் படிக்கும் பிற குழந்தைகளும் இந்தப் பாடத்திட்டத்தை எதிர்கொள்ளக் கஷ்டப்படுகிறார்களாம். சமீபத்தில் நடந்த வகுப்புத் தேர்வில் பெரும்பாலான மாணவர்கள் படுமோசமாகச் செய்துள்ளனர்.

அடிப்படையில் பாடத்திட்டத்தில் நாம் எதை எதிர்பார்க்கிறோம்? ஏன் இப்படிக் கடுமையானதாக பாடத்திட்டங்கள் இருக்கவேண்டும்? அப்படித் திணித்து எதைச் சாதிக்கப்போகிறோம்? பெற்றோர்களால் தம் குழந்தைகளுக்குத் தேவையான படிப்பைச் சொல்லித்தர முடியாவிட்டால் அந்தக் குழந்தைகளின் நிலை என்னவாகும்? எத்தனை சிபிஎஸ்இ ஆசிரியர்கள் முதலில் இவற்றை ஒழுங்காகச் சொல்லித்தரப்போகிறார்கள்?

National Curriculum Framework, 2005 என்று பெரிதாகப் பெயர்சூட்டி இந்தக் கல்வியாளர்கள் எல்லாம் என்ன கிழிக்கிறார்கள்?

இந்தக் காரணத்துக்காகவே முரண்டுபிடித்துக்கொண்டு மினிமல் சிலபஸ் என்ற ஒன்றை நான் முன்வைக்க விரும்புகிறேன். அதில் மிக மிகக் குறைவான பாடங்கள் மட்டுமே இருக்கும். காட்டுத்தனமான நுழைவுத்தேர்வுகளைத் தவிர்த்து, கல்வி என்பது தம் அறிவுநிலையை உயர்த்திக்கொள்ள மட்டுமே என்ற விருப்பம் உள்ள எளிமையான பிள்ளைகளுக்கான ஒரு கல்வித்திட்டமாக அது இருக்கும்.

கணிதப் பதிவு

சீரியஸான கணிதப் பதிவு ஒன்றை ஆரம்பித்து, கடந்த சில தினங்களாக, குறைந்தது ஒரு பதிவாவது எழுதி வருகிறேன். உங்களுக்குத் தெரிந்த பள்ளிக்கூட ஆசிரியர்கள், மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு இந்தப் பதிவை அறிமுகப்படுத்துங்கள். அவர்களுக்கு நிச்சயம் உபயோகமாக இருக்கும் என்று நம்புகிறேன்.