Saturday, August 27, 2011

மரண தண்டனை எதிர்ப்பு

எந்தவிதமான குற்றத்துக்கும் மரணதண்டனை தீர்ப்பாகாது என்று நம்புபவன் நான். உலகில் பெரும்பாலான நாடுகள் மரண தண்டனையை ரத்து செய்துள்ளன. இந்தியா, சீனா, அமெரிக்கா போன்ற உலகின் முக்கியமான சில நாடுகளில் துரதிர்ஷ்டவசமாக இன்னமும் இந்தத் தண்டனை செயல்பாட்டில் உள்ளது. அமெரிக்காவிலும் பல மாகாணங்களில் இந்தத் தண்டனை கிடையாது.

ராஜிவ் காந்தி கொலைவழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் இருக்கும் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு மரண தண்டனை அளிக்கப்பட்டு, அதன்மீதான கருணை மனுவைக் குடியரசுத் தலைவர் நிராகரித்துள்ள நிலையில் செப்டெம்பர் 9-ம் தேதி அன்று அவர்களுக்கு மரணதண்டனை நிறைவேற்றப்படும் என்று வெளியாகியுள்ள தகவல்களால் தமிழகத்தில் பலர் மரண தண்டனைக்கு எதிரான போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

இந்தக் குரல்களில் பல, மரண தண்டனை தரப்பட்டுள்ள கைதிகள் எவ்விதத்திலும் குற்றமற்றவர்கள் என்கின்றன. வேறு சிலரோ, தமிழர்கள் தூக்கில் இடப்படும்போது பார்த்துக்கொண்டு சும்மா இருப்பதா என்கின்றனர். அங்கிருந்து, இந்திய நீதித்துறை, புலனாய்வுத்துறை ஆகியவைமீது குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகின்றன. உணர்வுரீதியாக எழும் இந்தக் குரல்கள் மக்களில் பெரும் பகுதியினரைத் தள்ளிவைக்கும்.

தர்மபுரி பேருந்து எரிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மூன்று அஇஅதிமுகவினருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டபோது இனிப்பு வழங்கிக் கொண்டாடிய தமிழர்களையும் நமக்குத் தெரியும். கிட்டத்தட்ட அவர்கள்தான் இன்று பேரறிவாளன் மற்றும் பிறருக்கான மரண தண்டனையை நீக்கவேண்டும் என்று வாதாடும் செயலிலும் இறங்கியிருக்கிறார்கள். அது குற்றம், இது குற்றமே இல்லை என்றெல்லாம் நேரத்துக்குத் தகுந்தவாறு மாற்றிக்கொள்வது நியாயமில்லை.

இன்று தொலைக்காட்சியில் பார்க்கும்போது பலரும், பேரறிவாளன் குற்றமே செய்யவில்லை என்பதில் தொடங்கி, மூன்று அப்பாவித் தமிழர்கள் தூக்கு மேடைக்குப் போகிறார்கள் என்பதுவரை பேசினார்கள். முருகன் அப்பாவியா? சம்பந்தப்பட்ட கொலையில் அவருக்குப் பங்கே இல்லையா? சாந்தன் எந்த அளவுக்கு அப்பாவி என்பது தெரியவில்லை. பேரறிவாளன் பற்றி ரகோத்தமன் போன்றோர் சொல்வது முற்றிலும் வேறுவிதமானது.

எனவே, குற்றம் செய்துள்ளார்களா, இல்லையா என்பதைத் தாண்டி, எந்தக் குற்றத்துக்கும் மரண தண்டனை கூடாது என்பதே நாகரிக சமுதாயத்தின் லட்சியமாக இருக்கவேண்டும் என்ற வாதத்தின்படி, நடக்க இருக்கும் தூக்கு தண்டனையை நான் கடுமையாக எதிர்க்கிறேன். அனைத்தையும் மீறி இந்தத் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டால், நான் மிகவும் வேதனை அடைவேன்.

என் பழைய பதிவு: மரண தண்டனைக்கு எதிராக...

14 comments:

 1. மிகவும் சரியான நேரத்தில் அறிவுப்பூர்வமாக ஆணித்தனமாக எழுதப்பட்ட கருத்து.. நான் முற்றிலும் வரவேற்கிறேன். தவறு செய்தார்களா என்பதைப் பற்றி நாம் பேசுவது ஆரோக்கியம் அல்ல அது நீதியின் கடமை ஆனால் மரணத்தண்டனை என்பது கொலைக்கு கொலை என்ற நிலை ஏற்கதக்கது இல்லை.

  பத்ரி அவர்களே வழக்கறிஞர் இருக்கும் உண்ணாவிரத்தில் நீங்கள் வந்து வழக்கறிஞர்களை ஆதரிப்பீர்களா? நாளை சினிமாத்துறையினர் வர உள்ளனர் முன்னணி நடிகர் விஜய் உட்பட....

  சுரேஷ்
  advocate,27/08/11.

  ReplyDelete
 2. கட்டாயம் வருகிறேன்.

  ReplyDelete
 3. மக்களின் நிலையை மற்றவர்கள் (அந்நியர்கள்) பயன்படித்தும் நிலையில் உள்ள எந்த சமுகத்திலும் மரணதண்டனை நீக்குவது என்பது அந்த சமுகத்தின் மரணத்தை விரைவுபடுத்தும் என்பதை தீவிரமாக நம்புபவன் நான்.

  ReplyDelete
 4. //குற்றம் செய்துள்ளார்களா, இல்லையா என்பதைத் தாண்டி, எந்தக் குற்றத்துக்கும் மரண தண்டனை கூடாது என்பதே நாகரிக சமுதாயத்தின் லட்சியமாக இருக்கவேண்டும் என்ற வாதத்தின்படி, நடக்க இருக்கும் தூக்கு தண்டனையை நான் கடுமையாக எதிர்க்கிறேன். அனைத்தையும் மீறி இந்தத் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டால், நான் மிகவும் வேதனை அடைவேன்.//
  அருமையான கருத்து சார்.

  ReplyDelete
 5. அறிவு ஜீவிகள் வருங்காலத்தில் எப்படி சிந்திப்பார்கள் என்று அவர்களின் கோணத்திலிருந்து நானே கற்பனை செய்ததில் தோன்றிய கேள்வி: மரண தண்டனை மட்டும்தான் அநாகரிகமான விஷயமா? ஒரு மனிதனை ஆயுள் காலத்தில் பெரும்பகுதி இருளிலும் தனிமையிலும் வைத்திருப்பது மரணத்தைவிடக் கொடியது அல்லவா? ஆயுள்தண்டனையையும் நீக்கி விடலாமே?
  சிறைவாசத்தால் திருந்துவதற்குப் பதில் சிலர் மேலும் குற்றவாளிகளாகி வெளியில் வருகிறார்களே, அவர்கள் மீது கருணை கொண்டு சிறைச்சாலைகளையே ஒழித்து விடலாமா?
  வேண்டாம்,வேண்டாம்! பாவம்,தீவிரவாதிகள், ஊர்முழுதும் பொதுமக்கள் நடமாடுவதால் ஒரு துப்பாக்கியைக் கடத்துவதற்கும் ஒரு குண்டு வைக்கவும் அவர்கள் பயந்து பயந்து சாக வேண்டி இருக்கிறது. அப்பாவித் தீவிரவாதிகளுக்கு இடையூறில்லாமல் இருப்பதற்காகப் பொதுமக்கள் எல்லாரையும் சிறையில் வைத்துவிடலாமென்று நாளைக்கே ஒரு மனித உரிமை சிந்தனையாளருக்குப் பெருங்கருணை தோன்றினால்? சிறைச்சாலைகள் இருக்கட்டும்!ஆனால் அங்கே காவல் வேண்டாம்! அரைகுறை நாகரீகம் ஆபத்தானது. அதனால் முழு நாகரிகமான சமுதாயமே நமது லக்ஷியமாக இருக்கட்டும்.

  ReplyDelete
 6. Had this case been conducted under regular IPC the judgment would have been totally different.The prosecution could not produce accused no 1 and 2 in this case.I hope you know who were they. Sivarasan and Thanu committed suicide. In other words the main conspirator& brain behind the conspiracy were not produced before the court and the assassin committed suicide. So most of the evidences were circumstantial or obtained by CBI under TADA.
  The trial was under TADA. The outcome was death sentence for all accused and the Supreme Court awarded death sentence to just 4 and released many others/reduced the sentence. This itself speaks volumes about the inquiry and handling of the case by CBI.Had IPC been invoked CBI would have failed miserably in the trial court itself to prove conclusively beyond any doubt.
  Ragothamans can fool persons like you but no those who know the facts about the case.

  ReplyDelete
 7. //பேரறிவாளன் பற்றி ரகோத்தமன் போன்றோர் சொல்வது முற்றிலும் வேறுவிதமானது.//

  இரகோத்தமன் என்ன சொன்னார் என்று கொஞ்சம் விளக்கமாகச் சொல்வீர்களா? இராஜீவ் கொலை வழக்கு நடத்தப்பட்ட விதமே மிகுந்த அயோக்கியத்தனமாக இருக்கிறது. கொடிய 'தடா'வின் கீழ் விசாரணை நடத்தப்பட்டதைச் சரியென ஏற்றுக்கொள்ளும் மனநிலையை விட தூக்குத்தண்டனையை ஆதரிப்பது நாகரீகமானதுதான், உண்மையிலேயே நாமெல்லாம் நாகரீகக்கனவான்களாகத் தோற்றமளிக்க விரும்பினால்.

  நன்றி - சொ. சங்கரபாண்டி

  ReplyDelete
 8. எனக்கென்னமோ சில உயிர்களைக் காப்பாற்ற வேண்டி ஒருவர் தீக்குளித்து தன் உயிரை இழப்பது மிகத் தவறான முன்னுதாரணம் என்று தோன்றுகிறது. பத்ரி சாரின் கருத்து என்னவோ? -பா.கணேஷ்.

  ReplyDelete
 9. //Ragothamans can fool persons like you but no those who know the facts about the case. //

  who knows the facts about the case???

  தொலைக்காட்சியில் பேரறிவாளனின் தாய்க்கும் ரகோத்தமனுக்கும் நேரடியாக பேசும் வாய்ப்பு அளிக்கப்பட்டது. அப்போது அவரது வழக்கறிஞரும் அருகில் இருந்தார்.
  ரகோத்தமன் சில தினங்களை குறிப்பிட்டு அன்று உங்கள் மகன் எங்கே இருந்தார் என்று சொல்ல முடியுமா? என்று கேட்ட போது அதற்க்கு பதில் சொல்லாமல் உணர்ச்சி வசப்பட்டு ரகோத்தமனை சாடினார் அந்தத் தாய். அவர் உணர்வுகள் புரிந்து கொள்ளக் கூடியது. கூட இருந்த வழக்கறிஞர் பேசி இருக்க வேண்டும். பார்வையாளர்களுக்கு முறையான பதில் சொல்லி இருந்தால் வெறும் பொம்மை வாங்க பாட்டரி கொடுத்தார் என்று நம்பலாம்.

  தவறே செய்யாமல் தூக்கு கொடுக்க முனைவது போல் கட்டமைப்பது நியாயம் இல்லை. இறந்து போனது யாரோ தானே என்ற எண்ணம். ராஜீவ் வாடா நாட்டு ஆள். நமக்கு என்ன என்ற எண்ணம். கூடவே எத்தனை உயிர் போச்சு? அதில் தமிழர்கள் இல்லையா? இன்னும் உயிர்ச் சேதம் அதிகமாக இருந்திருந்தால்?

  இருபது வருடம் குற்றத்துக்கு தண்டனை அனுபவித்தாயிற்று மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்கலாம் என்று சொன்னால் நியாயமாக இருக்கும். அதை விடுத்து செய்யாத குற்றத்துக்கு இருபது வருடம் தமிழனை தண்டித்து விட்டதாக சொல்வது எல்லாம் அநியாயம். இதில் ஒரு பெண்ணின் உணர்வுகளைத் தூண்டி அது தற்கொலை வேறு செய்திருக்கிறது. அதற்கு வீரப் பெண் என்று பட்டம் வேறு

  ReplyDelete
 10. //எந்தக் குற்றத்துக்கும் மரண தண்டனை கூடாது என்பதே நாகரிக சமுதாயத்தின் லட்சியமாக இருக்கவேண்டும்//well said
  மரண தண்டனை வேண்டவே வேண்டாம் என்பதுதான் எனது கருத்தும் .

  ReplyDelete
 11. "the cruelty of capital punishment lies not only in the execution itself and the pain incident thereto, but also in the dehumanizing effects of the lengthy imprisonment prior to execution"

  "and it would, therefore, be open to a condemned prisoner, who has been under a sentence of death over a long period of time, for reasons not attributable to him, to contend that the death sentence should be commuted to one of life"

  Supreme Court in Jagdish Vs State of MP

  பேரறிவாளன், தண்டனையும், நம்பிக்கைகளும்...
  http://marchoflaw.blogspot.com/2011/08/blog-post.html

  ReplyDelete
 12. மூவரின் தூக்கை குறைக்க சட்டசபையில் தீர்மானம்; மூவரையும் தூக்கில் போட 8 வாரம் தடை - உயர்நீதிமன்றம்
  http://tamilpadaipugal.blogspot.com/2011/08/blog-post_30.html

  ReplyDelete
 13. பேரறிவாளன் 8 நாட்கள் மிகக் கொடூரமாகச் சித்திரவதை செய்யப்பட்டார். அவ்வாறு பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில் தண்டனை தருவது நீதி அல்ல, அநீதி.

  அவர் தெரிந்து பாட்டரி வாங்கிக்கொடுத்தாரா என்பது கடவுளுக்குத்தான் தெரியும். எனவே மரணதன்டனை கொடுத்து உயிரைப்பறிக்க நமக்கு உரிமை இல்லை.

  2000 ஆண்டுகளுக்கு முன்பே சிலப்பதிகாரத்தை உலகிற்கு வழங்கியவர்கள் நாம். அந்தக் காவியம் நமக்கு உணர்த்துவது என்ன? இன்னும் நாம் அதிலிருந்து எதையும் கற்றுக்கொள்ளவில்லை என்றால் அதைவிடக் கேவலம் வேறு இல்லை.

  சரவணன்

  ReplyDelete
 14. தலீவா.. அப்படியே என்கவுண்டருக்கு எதிராவும் கொஞ்சம் கொரலு கொடுப்பா.. நம்ம பேரு லிஸ்ட்ல இருக்குன்னு அடிக்கடி பயமுறுத்துறானுங்கோ.. ஒரு கிட்நாப் பண்ணமுடியலை.. ஒரு கொலை பண்ண முடியலை.. எந்த கட்ட பஞ்சாயத்தும் பண்ண முடியலை.. வாழ்க்கையே "ச்சே" ன்னு ஆயிடுச்சுப்பா..

  - பாம் பாஸ்கர்

  ReplyDelete