Sunday, May 25, 2003

மருத்துவக் கல்லூரி மாணவர்கள் படிப்பு நிறுத்தம்

தமிழகத்தில் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் சில நாட்கள் முன்னர் படிப்பு நிறுத்தல் போராட்டம் நடத்தினர். காரணமாக, தனியார் மருத்துவக் கல்லூரிகள் தொடங்க அரசு அனுமதி தரவிருப்பதைக் காட்டினர். அரசு மருத்துவர்களும் இதற்கு ஆதரவு தந்தனர்.

விளைவு: நடுத்தர, மற்றும் அதற்குக் கீழ் உள்ள மக்களுக்குத்தான் தொல்லை.

தனியார் மருத்துவக் கல்லூரிகள் தொடங்க அனுமதி தருவதில் என்ன தவறு? இதனால் மருத்துவப் படிப்பு வியாபர மயமாக்கப்படும், பட்டம் பெற்று வரும் மருத்துவர்கள் தரமில்லாதவர்களாக இருப்பார்கள் என்று வேலை/படிப்பு நிறுத்தம் செய்வோர் கூறுவது சிரிக்கத் தக்கது.

தற்போது தமிழகத்தின் கல்லூரிகளில் 73,875 பொறியியல் இடங்கள் உள்ளன. இவற்றில் அரசு மற்றும் அரசுத் துணையோடு நடக்கும் கல்லூரிகளில் உள்ள இடங்கள் வெறும் 5,870 தான். தனியார் கல்லூரிகளின் இடங்களோ 68,005. ஆனால், மருத்துவக் கல்லூரிகளைப் பொறுத்த மட்டில், மொத்த இடங்கள் வெறும் 1,255 மட்டுமே! இதில் ஒரே ஒரு தனியார் கல்லூரிதான் அடக்கம், 320 இடங்களோடு. (தகவல்: The Hindu, 24/05/2003)

இந்தத் தொகை, நிச்சயமாக 10,000-த்தையாவது தாண்ட வேண்டும். அப்பொழுதுதான் தேவையான அளவிற்கு மருத்துவர்கள் மாநிலத்திற்குக் கிடைப்பார்கள். அரசினால், இத்தனை கல்லூரிகளைக் கட்ட முடியாது. தனியார் துறையினால் மட்டுமே முடியும். இப்படியிருக்க மருத்துவக் கல்லூரி மாணவர்கள் ஏன் இந்த முடிவை எதிர்க்க வேண்டும்?

தனியார் கல்லூரிகளின் தரத்தை நிச்சயிக்க வேண்டியது அதற்கான அரசின் துறைகள் மட்டுமே. படிப்பு/வேலை நிறுத்தம் செய்யும் கற்றுக்குட்டி மாணவர்களும் பொறுப்பு இல்லாத மருத்துவர்களும் அல்ல.

No comments:

Post a Comment