1987-ல் ஐஐடி சென்னையில் எனக்கு கவுன்செலிங். கவுன்செலிங் என்றால் என்னவென்று சரியாகத் தெரியாது. அவர்கள் அனுப்பியிருந்த கடிதத்தில் கொஞ்சம் பயமுறுத்தியிருந்தார்கள். மொத்தம் ஏழோ எட்டோ சாய்ஸ் இருந்தது என்று நினைக்கிறேன். நீங்கள் கேட்கும் இடம் கிடைக்கவில்லையென்றால் அவ்வளவுதான்.
இடம் என்றால் துறை + ஊர். மெக்கானிகல் எஞ்சினியரிங், ஐஐடி சென்னையில், அல்லது கெமிக்கல் எஞ்சினியரிங், ஐஐடி கான்பூரில். இப்படி. இதைத் தெரிவுசெய்வதற்கு வாகாக முந்தைய ஆண்டில் எந்தெந்த ஐஐடியில் எந்தெந்தத் துறைகளை எந்தெந்த ரேங்க் காரர்கள் எடுத்திருந்தனர் என்று ஓர் அட்டவணையைத் தந்திருந்தனர்.
எந்தத் துறையை எடுக்கலாம்?
எஞ்சினியரிங் என்றால் சிவில், மெக்கானிகல், எலெக்ட்ரிகல், எலெக்ட்ரானிக்ஸ் தவிர்த்து புதிதாக கம்ப்யூட்டர் சயன்ஸ் என்பது அப்பொழுதுதான் தொடங்கியிருந்தது. இவை தவிர, கெமிக்கல், ஏரோனாட்டிகல், மெட்டலர்ஜி, நேவல் ஆர்க்கிடெக்சர் போன்ற துறைகளும் இருந்தன.
இதில் ஏரோனாட்டிகல் மனத்தில் இனம்புரியாத கிளர்ச்சியை ஏற்படுத்தியது. நாகப்பட்டினத்தில் எப்பொழுதாவது வானத்தில் பறக்கும் விமானம் கண்ணில் படும். சிறுவர்களாக இருக்கும்போது அதைப் பார்த்து சத்தம் போட்டுக்கொண்டே ஓடுவோம். கண் சிமிட்டும் நேரத்தில் காணாமல் போய்விடும். எப்பொழுதாவது இந்திரா காந்தியோ ஃபக்ருதீன் அலி அஹமதோ ஹெலிகாப்டரில் ஊருக்கு வருவார்கள். பள்ளிக்கூடத்திலிருந்து வரிசை வரிசையாக எங்களை அழைத்துப் போயிருப்பார்கள். ஹெலிகாப்டர் கீழே இறங்கும்போது புழுதி பறக்கும். அதிலிருந்து இறங்கிய பெரிய மனிதர்கள் கையசைத்துவிட்டு சர் சர்ரென்று கிளம்பும் கார்களில் ஏறி காணாமல் போய்விடுவார்கள். மீண்டும் பல கிலோமீட்டர்கள் நடந்து வீடு வந்து சேருவோம்.
ஏரோனாட்டிகல் எஞ்சினியரிங் என்றால் விமானத்தையே கட்டமுடியுமோ? அதில் ஏறி ஓட்டமுடியுமோ? எவ்வளவு சந்தோஷமான விஷயம். அதையே தேர்ந்தெடுப்பதாக என் தந்தையிடம் சொன்னேன். அவருக்கு இதெல்லாம் அதிகம் புரியாத விஷயங்கள். சரி என்றார். ஐஐடி சென்னை ஏரோனாட்டிகல் முதல் சாய்ஸ். அடுத்து ஐஐடி மும்பை ஏரோனாட்டிகல். அடுத்து வேறு சில ஏரோனாட்டிகல். பிறகு ஏதாவது ஒரு சேஃப் சாய்ஸ் போட்டுவைப்போம் என்று முடிவு செய்தேன்.
கவுன்செலிங் தினத்துக்கு முதல் நாள் சென்னை ஐஐடி கேம்பஸுக்கு வந்துசேர்ந்தோம். அடேயப்பா! உள்ளே பஸ் விடும் அளவுக்கு பெரிய இடமோ! இப்பொழுதுதான் முதல்முறை பார்க்கிறேன் ஐஐடியை. பஸ்ஸில் ஒரு அண்ணா. நான்காவது வருடம் மெக்கானிகல் எஞ்சினியரிங் முடித்துவிட்டு அமெரிக்கா போவதாகச் சொன்னார். எதற்கு அமெரிக்கா போகிறீர்கள் என்றேன். மேலே படிக்க என்றார். இதற்குமேல் என்ன படிப்பது என்றேன். சிரித்துவிட்டு, நீயே பின்னால் தெரிந்துகொள்வாய் என்றார். ரேங்க் என்ன என்று கேட்டார். சொன்னேன். சென்னையில் மெக்கானிகல் கிடைக்கும் என்றார். இல்லை, ஏரோனாட்டிகல் எடுத்துக்கொள்ள விரும்புகிறேன் என்றேன். வேண்டாம், மெக்கானிகலே எடுத்துக்கொள் என்றார்.
ஹாஸ்டலில் காகிநாடாவிலிருந்து வந்த பையனைச் சந்தித்தேன். ரேங்க் கேட்டான். சொன்னேன். அவன், தான் மெக்கானிகல் எடுக்க இருப்பதாகச் சொன்னான். நான் ஏரோனாட்டிகல் எடுக்க இருப்பதாகச் சொன்னதைக்கண்டு ஆச்சரியப்பட்டான். இந்த ரேங்குக்கு மெக்கானிகல் கிடைக்குமே என்றான்.
அடுத்த நாள் கவுன்செலிங் நடந்தது. ஸ்ரீனிவாச ராவ் என்று ஒரு பேராசிரியர். விருப்பம் என்ன என்று கேட்டார். ஏரோனாட்டிகல் என்றேன். வேண்டாம், சென்னையில் மெக்கானிகல் எஞ்சினியரிங் எடுத்துக்கொள் என்றார். இல்லை, நான் விமானம் ஓட்ட விரும்புகிறேன் என்றேன். அவர் சிரித்துக்கொண்டே, அதெற்கெல்லாம் வாய்ப்புகள் கிடையாது என்றார்.
ராவ், ஏன் மெக்கானிகல் எடுத்துக்கொள்வது சிறந்தது என்று ஏதோ காரணங்கள் சொன்னார். எனக்குப் பெருத்த ஏமாற்றம். அவர் சமாதானம் சொன்னார். தேவை என்றால் மேற்கொண்டு படிக்கும்போது ஏரோ எடுத்துக்கொள்ளலாமாம்.
இப்படியாக என் கவுன்செலிங் முடிவடைந்தது. என் ரேங்குக்கு விதிக்கப்பட்ட மெக்கானிகலை எடுக்கவைத்தார்கள்.
-*-
எஞ்சினியரிங் படிப்பை எடுக்கும் பலரும், எஞ்சினியரிங் என்றால் என்ன, என்னென்ன துறைகள் உள்ளன, ஒவ்வொன்றும் எதைப்பற்றியது, அந்தத் துறையைப் பயின்றால் என்ன வேலை கிடைக்கும் என்றெல்லாம் யோசிப்பதில்லை. யார் யாரோ சொல்வதைக் கேட்டு ஏதோ சப்ஜெக்டை எடுத்து வெளியே வருகிறோம். அதன்பின் வாழ்க்கை வேறு எந்தத் திசையிலோ நம்மைப் பயணம் செய்ய வைக்கிறது.
இன்று நேவல் ஆர்க்கிடெக்சர் போன்ற துறைகள் தேவையே இல்லை. யோசித்துப் பார்த்தால் ஏரோனாட்டிகல் கூடத் தேவையில்லை. மெட்டலர்ஜிக்கு இன்று மெட்டீரியல் சயன்ஸ் எனப் பெயர் மாற்றம் ஆகியிருக்கலாம்.
சிவில், மெக்கானிகல், எலெக்ட்ரிகல் (பவர்), எலெக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர்ஸ், கெமிக்கல், மெட்டீரியல் சயன்ஸ். இந்த ஏழைத் தவிர வேறு எதுவும் இளநிலைப் படிப்பில் இருக்கக்கூடாது. லெதர், பிரிண்டிங், பேப்பர் அண்ட் பல்ப் அது, இது என்று இருக்கும் பாடங்கள் எல்லாம் தவறானவை என்றே நினைக்கிறேன். பயோடெக்னாலஜி வேண்டுமானால் ஒரு இளநிலைப் படிப்பாக இருக்கலாம்.
இந்தப் பாடங்களிலும்கூட வர்ணாஸ்ரம முறைகள் தேவையின்றி நுழைகின்றன. இந்த ரேங்கா, இத்தனை மார்க்கா, கம்ப்யூட்டர் எடு. அடுத்த நிலையா? எலெக்ட்ரானிக்ஸ் எடு, இல்லையா மெக்கானிகல். கடைசியாக கெமிக்கல், அடுத்து சிவில். இப்படியெல்லாம் சொல்லிச் சொல்லி உள்ளே நுழையும் மாணவர்களைக் கெடுத்து குட்டிச்சுவர் ஆக்கிவிடுகிறார்கள். இன்று சிவில் எஞ்சினியரிங் துறைக்கு இருக்கும் வாய்ப்புகள் ஏராளம். அதேபோல மெட்டீரியல் சயன்ஸும் கெமிக்கலும். ஆனால் பல சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் இந்தத் துறைகள் இருப்பதே இல்லை. பல தமிழக அரசுக் கல்லூரிகளிலும் அரசு மான்யம் பெறும் தனியார் கல்லூரிகளிலும் கெமிக்கல் எஞ்சினியரிங் துறை இருப்பதே இல்லை.
எஞ்சினியரிங் படிப்பு முடிக்கும் மாணவர்கள் பாதிப்பேர் கடைசியில் டி.சி.எஸ், விப்ரோ, இன்ஃபோசிஸ் என்று போய்ச் சேருகிறார்கள். மீதமுள்ள பலர் எம்.பி.ஏ படிப்புக்குப் போகிறார்கள். எஞ்சினியரிங் படிப்பில் சேர்வதற்கு முன்னமே ஒவ்வொரு துறையைப் பற்றியும் மேலோட்டமாகவாவது தெரிந்துகொள்வது நல்லது. அப்படித் தெரிந்துகொண்டால் அந்தத் துறையில் தீராத ஆசை வரலாம். கவுன்செலிங் அழுத்தத்தையும்மீறி அந்தத் துறையில் சேர்ந்து பெரும் சாதனை புரியலாம்.
நிர்மால்யா கருத்தரங்கு, உரைகள் எண்ணங்கள்
2 hours ago
பத்ரி - நான்கூட கொஞ்சம் நாட்களாக இதைப் பற்றி எழுதவேண்டும் என்று நினைத்திருந்தேன். ஒவ்வொரு துறையையும் சார்ந்தவர்கள் அவர்களது துறைக்கு ஏன் வந்தார்கள், சாதக பாதகங்கள் என்னென்ன என்று எழுத வேண்டும். சில நாட்களுக்கு முன்னால் ரவி சங்கர் நன்றாக எழுதியிருந்தார்.
ReplyDeleteவேறு விஷயம். ஒரு தொடர் விளையாட்டுக்கு உங்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறேன். நேரமிருந்தால் எழுதவும். பார்க்க:
http://domesticatedonion.net/tamil/?p=697
//பயோடெக்னாலஜி வேண்டுமானால் ஒரு இளநிலைப் படிப்பாக இருக்கலாம்.//
ReplyDeleteவேண்டுமானால் இல்லீங்க, கண்டிப்பாக வேண்டும். 4 ஆண்டுகள் படித்த பிறகும் இந்தத் துறையின் பரப்பு கண்ணைக் கட்டி காட்டில் விட்ட மாதிரி தான். b.tech chemical, m.tech biotech or b.sc / m.sc biotech படித்து வருபவர்களின் திறனைக் காட்டிலும் b.tech biotech மாணவர்களின் திறன், துறை அறிவு கூடுதலாக இருக்கும் என்பது உறுதி. அதே வேளை எந்தக் கல்லூரியில் உயிரித்தொழில்நுட்பம் படிக்கிறோம் என்பதும் முக்கியம். முன்னணிக் கல்லூரியில் இடம் கிடைக்காவிட்டால் இந்தப் படிப்பைத் தேர்ந்தெடுக்காமல் விடுவது நல்லது. தரம் குறைந்த கல்லூரிகளில் உள்ள ஆசிரியர்களின் திறமின்மை, ஆய்வக வசதி இல்லாமலை, வெளியுலக அறிமுகம் இல்லாமை மாணவர்களின் எதிர்காலத்தைக் கேள்விக் குறியாக்கிவிடும். இது எல்லா படிப்புகளுக்கும் பொருந்தும் என்றாலும் உயிரித் தொழில்நுட்பம் பெரிதும் ஆய்வு சார்ந்து இருப்பதால் இது முக்கியம்
Badriji: you are correct in saying most of the students take the courses without much understanding or peer pressure.
ReplyDeleteSooner or later the enginnering courses will have considerable overlap between various engg disciplines-
example
--- Chemical eng and biomedical engg.
----electrical/ electronics- computer engg-
In USA it is easier to take (related) multiple engg degrees in four years itself offerring the student with more choices. India also should adopt this type of curriculumn. (ofcourse in USA most of the engg students take a second major in arts. one of the most popular second major - believe me- is music!!)
thyaga
//எஞ்சினியரிங் படிப்பை எடுக்கும் பலரும், எஞ்சினியரிங் என்றால் என்ன, என்னென்ன துறைகள் உள்ளன, ஒவ்வொன்றும் எதைப்பற்றியது, அந்தத் துறையைப் பயின்றால் என்ன வேலை கிடைக்கும் என்றெல்லாம் யோசிப்பதில்லை. யார் யாரோ சொல்வதைக் கேட்டு ஏதோ சப்ஜெக்டை எடுத்து வெளியே வருகிறோம். அதன்பின் வாழ்க்கை வேறு எந்தத் திசையிலோ நம்மைப் பயணம் செய்ய வைக்கிறது//
ReplyDeleteமிகவும் ரசித்தேன்.
I completely second venkat ...i felt the same ...
ReplyDeleteஎஞ்சினியரிங் படிப்பை எடுக்கும் பலரும், எஞ்சினியரிங் என்றால் என்ன, என்னென்ன துறைகள் உள்ளன, ஒவ்வொன்றும் எதைப்பற்றியது, அந்தத் துறையைப் பயின்றால் என்ன வேலை கிடைக்கும் என்றெல்லாம் யோசிப்பதில்லை. யார் யாரோ சொல்வதைக் கேட்டு ஏதோ சப்ஜெக்டை எடுத்து வெளியே வருகிறோம். அதன்பின் வாழ்க்கை வேறு எந்தத் திசையிலோ நம்மைப் பயணம் செய்ய வைக்கிறது//.......even I felt the same..
ReplyDeleteBio tech padicha job kidaikuma enna job kidaikum kojam.solluga bro
ReplyDelete