Monday, November 15, 2010

நட்புலகம்

நண்பர் அன்புச் செழியனை சில ஆண்டுகளாகவே அறிவேன். சிங்கப்பூரில் வேலை பார்த்துவந்தார். சிறுவர்களுக்காக ஒரு நூலகம் அமைக்கவேண்டும் என்பது பற்றி அவரது திட்டங்களை அவ்வப்போது எனக்கு மின்னஞ்சலில் எழுதுவார். விரைவில் இந்தியாவில் தன் வீட்டைக் கட்டும்போது அதில் ஒரு பகுதி சிறுவர்கள் பயன்பாட்டுக்கென நூலகமாக இருக்கும் என்று சொல்லியிருந்தார். சிங்கப்பூரில் வசித்துவந்த காரணத்தால், அங்கு பல இடங்களைப் பார்த்துப் பழகிய காரணத்தால், என்ன மாதிரியான இடமாக அது இருக்கவேண்டும் என்பது பற்றி அவருக்கு பல உயர்ந்த அபிப்ராயங்கள் இருந்தன.

அது வெறும் புத்தகங்கள் மட்டும் இருந்த நூலகமாக இருந்துவிடக்கூடாது என்பது அவர் விருப்பம். படிக்கப் புத்தகங்கள், பார்க்க சிறுவர் படங்கள், வீடியோக்கள், விளையாடப் பொம்மைகள், இணைய வசதிகொண்ட கணினிகள், புதிர்கள், சிக்கல்கள், கூடி விளையாட ஓரிடம், ஒருவேளை கதைகள் கேட்க, தரையில் உட்கார்ந்து தாளில் கிறுக்க... என முழுமையாக குழந்தைகள் மகிழ்ச்சியுடன் இருக்க ஓரிடமாக அது இருக்கவேண்டும் என்று விரும்பினார்.

அப்படி அவர் உருவாக்கியிருப்பதுதான் மேடவாக்கத்தில் அவரது வீட்டின் தரைத்தளத்திலும் இரண்டாம் மாடியிலும் உள்ள நட்புலகம் (ஆங்கிலத்தில் BuddiesWorld). அனைத்து அறைகளுக்கும் குளிர்சாதன வசதி செய்யப்பட்டுள்ளது. மினி தியேட்டர் உள்ள அறையில் சுமார் 20 குழந்தைகள் உட்கார குஷன் வைத்த படிகள் உள்ளன. எல்லா அறைகளுக்கும் இதமான வண்ணம் பூசப்பட்டு, குழந்தைகள் விரும்பும் கார்ட்டூன் படங்கள் ஒட்டப்பட்டுள்ளன.

நேற்று அதன் திறப்பு விழாவுக்காக நான் சென்றிருந்தேன். அண்ணா பல்கலைக்கழக கிண்டி பொறியியல் கல்லூரி கணினித்துறை உதவிப் பேராசிரியர் மதன் கார்க்கி, அவரது மனைவி, குழந்தையுடன் வந்து, ரிப்பன் கத்திரித்து தொடங்கிவைத்தார். நிகழ்ச்சியில் மேடவாக்கம் ஊராட்சி மன்றத் தலைவர் ப.ரவி, திமுக மாணவர் அணி மாநிலச் செயலாளர் இள.புகழேந்தி ஆகியோரும் கலந்துகொண்டனர்.

சம்பிரதாயமான பேச்சுகள் இருந்தன. நான் பேசும்போது, குழந்தைகளுக்கு ஒரு கதை சொல்லி (பாட்டி - வடை - காக்கா), கதை கேட்பதை (அல்லது பார்ப்பதை)விட, கதை படிப்பதில் மேலதிகச் சாத்தியக்கூறுகள் என்னென்ன உள்ளன என்பதைச் சுட்டிக்காட்டினேன். குழந்தைகள் ஆர்வமாகக் கேட்டாற்போல எனக்குத் தோன்றியது.

அந்தப் பகுதியில் உள்ள பல குழந்தைகளும் தங்கள் வீட்டில் இதுபோன்ற வசதிகளைச் செய்துகொள்ள முடியாத நிலையில் இருப்பவர்கள் என்று நான் யூகிக்கிறேன். மத்திய வகுப்பினர் பலராலேயே இது சாத்தியப்படாதது. அந்நிலையில் இதுபோன்ற வாய்ப்புகளைப் பயன்படுத்த பல பேற்றோர்களும் கொஞ்சம் பணம் செலவழிக்க முன்வரவேண்டும். இணையம், புத்தகங்கள் ஆகியவை உயர் நடுத்தர வகுப்பினருக்கு மட்டுமே என்ற நிலை இருக்கக்கூடாது.

அன்பு உருவாக்கியுள்ள இந்தத் திட்டம் அவருக்கு லாபகரமானதாக இருக்கவும் சுற்றுப்புற குழந்தைகளுக்கு நல்ல வாய்ப்பை அளிப்பதாக இருக்கவும் வாழ்த்துகிறேன். குழந்தைகள் தினத்தன்று தொடங்கப்பட்டுள்ள இந்த முயற்சி பெரும் வெற்றியை எட்டட்டும்.


முகவரி:

நட்புலகம், கம்பர் தெரு, இரண்டாவது பிரதான சாலை, விஜயநகரம், மேடவாக்கம், சென்னை 600100
போன்: 91764-04391
மின்னஞ்சல்: bwchennai@gmail.com
இணையம்: http://www.buddiesworld.net/

11 comments:

 1. மேடவாக்கம் ஊராட்சித் மன்றத் தலைவர் ப.ரவி, திமுக மாணவர் அணி மாநிலச் செயலாளர் இள.புகழேந்தி ஆகியோரும் கலந்துகொண்டனர்.

  நல்ல செய்தி. ஆமாம் மேலே உள்ளவர்கள் இந்த நிகழ்ச்சியில் வந்து கலந்து கொள்வது மரியாதை நிமித்தம் மட்டுமே தானே?

  ReplyDelete
 2. ஜோதிஜி: அன்புச் செழியன் குடும்பம் திமுக குடும்பமாக இருக்கலாம் என்று நினைக்கிறேன். நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த அதியமான் நெடுமான் அஞ்சி, கருஞ்சட்டையுடன் வந்திருந்தார்; நெய்வேலி திராவிடர் கழக பிரெசிடெண்டாம். புத்தகக் கண்காட்சிகளில் திராவிடர் கழக ஸ்டால்களில் அவரைப் பார்த்திருக்கிறேன்.

  ===

  கட்சி தவிர்த்து, மேலே பல நல்ல விஷயங்களும் உள்ளன அல்லவா? :-)

  ReplyDelete
 3. சுஜாதா அவர்களின் 'பூக்குட்டி' ஏனோ நினைவுக்கு வருகிறது.
  நல்ல முயற்சி! அன்பு அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
  பகிர்ந்தமைக்கு நன்றி!

  ReplyDelete
 4. /கதை படிப்பதில் மேலதிகச் சாத்தியக்கூறுகள் என்னென்ன உள்ளன என்பதைச் சுட்டிக்காட்டினேன்./

  அந்த விடயத்தை எம்மோடும் பகிர்ந்துகொள்ளலாமே?

  அந்த மேலதிக சாத்தியக்கூறுகளை நானும் அறிந்துகொள்ள ஆவலாயுள்ளேன்.

  ReplyDelete
 5. குழந்தைகளுக்காக ஒரு இடம்.கேட்கவே நன்றாக இருக்கிறது. உருவாக்கிய
  அன்பு செழியன் அவர்களுக்கு வாழ்த்துகள்.

  ReplyDelete
 6. நல்ல இடுகை! குழந்தைகளை இப்போது யார் கவனித்துக் கொள்கிறார்கள்? இருவரும் வேலை பார்க்கும் ‘ ந்யூக்ளியஸ் ‘ ஃபேமிலி’ களில், ’கூலிக்கு மாற’டிக்கும் ஆயாக்களின் ‘இரவல் உறவி’ல்
  எத்தனை இளம் தளிர்கள் இம்சிக்கப் படுகிறார்கள்?

  “ஆரண்ய நிவாஸ்” ஆர்.ராமமூர்த்தி

  ReplyDelete
 7. பதிவுக்கு நன்றி ! மதன் கார்கி மற்றும் ஹைக்க்கு படங்களையும் போட்டு இருக்கலாம் ..

  anna library at kotturpuram also a nice place for kids.visited last week..
  மெட்ராஸ் மக்கள் கொடுத்துவைத்தவர்கள் !!!

  ReplyDelete
 8. தாங்கள் சிங்கப்பூரில் உள்ள நூலகங்களைப் பார்த்திருப்பீர்கள். 704 சதுர கிலோமீட்டர் பரப்பளவு உள்ள ஊரில் 22 பொது நூலகங்கள் உள்ளன. எல்லா நூலகங்களும் ஒன்றுடன் ஒன்று இணைக்கப் பட்டுள்ளன. எந்த நூலகத்தில் வேண்டுமானாலும் புத்தகங்களை எடுக்க முடியும் மற்றும் திருப்பி கொடுக்க முடியும். நமது ஊர்களிலும் இத்தகைய நூலகங்கள் அமைய வேண்டும்.

  ReplyDelete
 9. நல்ல மனம் ப​​டைத்தவர்கள் இன்னும் இருக்கிறார்கள்.

  ReplyDelete
 10. அன்பு பத்ரி,

  உங்கள் வருகைக்கும், பொறுமைக்கும், நேரத்துக்கும், இந்த ஒரு இனிய அறிமுகத்துக்கும் மீண்டும் நன்றி. பதிவை வாசித்த, பின்னூட்டமிட்டு ஊக்குவித்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.

  சிறுவர்களுக்கென ஒரு பிரத்யேக உலகை கொடுக்கும் ஒரு முயற்சி இது! பெரும்பாலும் ஒற்றைப் பிள்ளைகளாய் தனித்து வாழும் இந்த கால கட்டத்தில், தொலைக்காட்சி ஒன்றே ஒரே பொழுதுபோக்கு என்ற நிலை மாற்றி, நமது பால்யம் போல், தெருவில், அண்டை வீட்டில், ஓடியாடி விளையாடிய ஒரு நிலையை கொடுக்க முடியா விட்டாலும், புத்தகங்கள், பொம்மைகள், புதிர் விளையாட்டுக்கள், கதைகள், சிறுவர் படங்கள், இணைய வசதிகொண்ட கணினிகள், நிகழ்வுகள் மூலம் நண்பர்களாக, குடும்பமாக ஒரு நட்புலகில் வாழ ஒரு இடம் கொடுக்கும் ஆர்வம் இது. கைக்கெட்டும் தூரத்தில், கட்டுபடியான விலையில் கொடுக்கும் முயற்சி இது.

  ReplyDelete
 11. Badri, Thanks for passing on the news. The mass must recognize and utilize such efforts and I hope its a win-win for everyone, as you said. I have a couple of relatives who live in medavakkam area and I just emailed them the link to visit this place as well as to pass it on to other locals.

  Anbu, Congratulations on kick starting this worthy initiative. I wish you all the very best in succeeding in your mission.

  ReplyDelete