Thursday, November 15, 2012

தேசிய புத்தக வாரம்

இந்த வாரம் தேசிய புத்தக வாரமாகக் கொண்டாடப்படுகிறது. நேஷனல் புக் டிரஸ்ட் சார்பில் ஒரு முழுப்பக்க விளம்பரத்தை இன்றைய ஹிந்து பத்திரிகையில் பார்த்திருப்பீர்கள்.

பொதுவாக நம் பள்ளிக் குழந்தைகள் பாடப்புத்தகம் தாண்டி வேறு புத்தகங்கள் படிப்பதில்லை. அவ்வாறு படிக்க அவர்கள் ஊக்குவிக்கப்படுவதில்லை. வீட்டுக்கு வீடு வண்ணத் தொலைக்காட்சி உள்ளது. அதில் கிடைக்கும் கேளிக்கை ஆனந்தம் புத்தகங்களில் குழந்தைகளுக்குக் கிடைப்பதில்லை. தொடர்ந்து புத்தகம் படிக்க ஆரம்பித்துவிட்டால் அதன் சுவையே தனிதான் என்று குழந்தைகள் புரிந்துகொள்வார்கள். ஆனால் சுவை தெரியவந்தால்தானே?

பள்ளிக் குழந்தைகளைப் (பாடப்புத்தகம் அல்லாத பிற) புத்தகங்கள் படிக்கவைக்கவேண்டும் என்ற விருப்பம் எனக்கு நிறைய உண்டு. கிழக்கு பதிப்பகம் சார்பில் இதில் முடிந்த அளவு ஈடுபடவேண்டும் என்று முடிவெடுத்துள்ளேன். புத்தகங்களை ஒரு பள்ளிக்குக் கொடுத்தால் மட்டும் போதாது; அங்குள்ள மாணவர்களுடன் அந்தப் புத்தகங்களை முன்வைத்து உரையாடுவதும் உறவாடுவதும் அவசியம்.

இதற்காக இரண்டு இடங்களைத் தேர்வு செய்துள்ளேன்.

1. சென்னை மாநகராட்சிப் பள்ளிகள். சென்னை மாநகராட்சி மேயர், கல்வி அலுவலர்கள் ஆகியோரிடம் அனுமதி பெற்று, ஒரு மாநகராட்சிப் பள்ளியை ‘மாதிரி’ பள்ளியாகத் தேர்ந்தெடுத்துள்ளோம். இந்தப் பள்ளியில் ஒவ்வொரு வகுப்பிலும் உள்ள குழந்தைகள் என்ன படிக்கக்கூடியவர்கள், எம்மாதிரியான புத்தகங்களை இவர்கள் விரும்புவார்கள் போன்ற சில விஷயங்களைப் புரிந்துகொள்ள முற்பட்டுள்ளேன். இந்தப் புத்தகங்களை பள்ளியில் நூலகத்தில் அடைத்து வைக்காமல் பிள்ளைகளிடமே கொடுத்து அவர்கள் ஒரு புத்தகத்தைப் படித்து முடித்ததும் கொண்டுவந்து மற்றொரு மாணவருடன் மாற்றிக்கொள்ளுமாறு செய்யவேண்டும். வாரத்துக்கு இரண்டு வகுப்புகள் புத்தகம் படிப்பதற்காக ஒதுக்கப்படவேண்டும். இந்த வகுப்புகளில் வெளியிலிருந்து வரும் தன்னார்வலர்கள் மாணவர்களிடம் உறவாடி, அவர்களுக்கு வரும் சந்தேகங்களைப் போக்குவார்கள். (ஆசிரியர்களும் ஈடுபட்டால் நல்லது, ஆனால் ஈடுபடாவிட்டாலும் பரவாயில்லை.)

2. வேலூரைச் சுற்றியுள்ள அரசுப் பள்ளிகள்.

வேலூரில் என் நண்பர் ஹரிகோபால் சன்பீம் மெட்ரிகுலேஷன்/சி.பி.எஸ்.ஈ பள்ளிகளை நடத்திவருகிறார். அவரிடம் என் திட்டத்தைப் பற்றிச் சொன்னேன். அவர் வேலூர் பகுதியில் தானே இதில் ஈடுபடுவதாகச் சொன்னார். இந்தத் திட்டத்துக்கு ‘ஞானதீபம்’ என்ற பெயரையும் அவர் வைத்தார். பள்ளிக்கூடங்களுக்கு வேண்டிய புத்தகங்களை கிழக்கு பதிப்பகம் கொடுக்கும். (அவை கிழக்கு பதிப்பித்த புத்தகங்கள் மட்டுமல்ல, பிற பதிப்பகங்களுடைய புத்தகங்களும்கூட.) சன்பீம்/காந்தி கல்வி அறக்கட்டளை நண்பர்கள் அவற்றை அருகில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்குக் கொடுத்து அம்மாணவர்கள் படிப்பதற்கு உதவுவார்கள். முதலாவதாக காட்பாடி அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியைத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பள்ளிக்கு புத்தகங்களை அனுப்பியுள்ளோம். வாரம் இருமுறை தன்னார்வலர்கள் உதவியுடன் பள்ளி மாணவிகளுக்குப் புத்தகங்கள் தரப்படும். அவர்கள் படித்துவிட்டு புத்தகங்களை மாற்றிக்கொள்வார்கள்.

(இதுகுறித்த ஹிந்து செய்தி இங்கே: Project to motivate reading habit)

இந்த முயற்சிகள் மேற்கொண்டு எப்படி நடக்கப்போகின்றன, எவ்வளவு தூரம் செல்லப்போகின்றன என்று தெரியவில்லை. அவ்வப்போது இது குறித்த தகவல்களை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.

6 comments:

  1. Sir,

    You have taken a really good initiative. I wish all success in the project.

    ReplyDelete
  2. மிக நல்ல முயற்சி, வெற்றி பெற்று மேலும் விரிவடையும் என்று நம்புவோம்! ஆசிரியர்களுக்கு இதில் கூடுதல் வேலை ஏதுமின்றி இருப்பதும், சொல்லப்போனால் வாரம் 2 பாடவேளைகள் அவர்களுக்கு வேலை மிச்சம் என்பதும் குறிப்பிடத்தக்க விஷயங்கள். ஏனென்றால் அவர்களது வேலையைச் சிறிதேனும் அதிகரிக்கும் விதமான திட்டங்களுக்கு அவர்களது ஒத்துழைப்பு கிடைக்காது.
    எனவே தன்னார்வலர்களை ஈடுபடுத்துவது மிக நல்ல யோசனை! வெறுமனே புத்தகங்களை அனுப்பிவிட்டு ஆசிரியர்கள் இதில் ஆர்வத்துடன் செயல்படுவார்கள் என்று எதிர்பாஈர்த்தால் (விதிவிலக்குகள் தவிர்த்து) பெரும்பாலும் வெற்றி கிடைக்காது.

    சரவணன்

    ReplyDelete
  3. Very very good effort! Good luck with the effort!

    ReplyDelete
  4. Great initiative, Badri. Wishing you the very best.

    ReplyDelete
  5. Dear Badri - Thanks much for this initiative

    ReplyDelete
  6. Badri Sir,

    this is very useful idea for Younger generation.

    சுருக்கமா சொல்லனும்னா "what an idea sirji...!!"

    ReplyDelete