Tuesday, January 08, 2013

நான் எழுதிய பரீட்சைகள்

சென்ற ஆண்டு, சென்னைப் பல்கலைக்கழகத்தின் தொலைநிலைப் படிப்புமூலம் எம்.ஏ வைணவம் சேர்ந்தது பற்றிக் குறிப்பிட்டிருந்தேன். அதன் முதல் ஆண்டுப் பரீட்சைகள் சென்ற ஆண்டு (2012 ஜூன்) நடைபெற்றன. ஆனால் பரீட்சை தேதி கைக்குக் கிடைப்பதற்குமுன், இமயமலையில் பிரம்மி தால் என்ற பகுதியில் ஏறுவதற்காக நண்பர்களுடன் செல்ல முன்னதாகவே முடிவெடுத்திருந்தேன். பரீட்சையைப் பிறகு எழுதிக்கொள்ளலாம் என்று விட்டுவிட்டேன். பணம் கட்டியதோடு போயிற்று.

மீண்டும் அதே தேர்வுகளை டிசம்பர் 29, 30, ஜனவரி 5, 6, 12 ஆகிய தேதிகளில் சென்னைப் பல்கலைக்கழகம் அறிவித்திருந்தது. ஆனால் இந்தத் தேதிகளில்தான் பரீட்சை என்பது தெரிவதற்கு முன்பாகவே, உத்தமம் (INFITT) அமைப்பின் 11வது உலகத் தமிழ் இணைய மாநாட்டின் நிகழ்ச்சிக் குழுவின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்டிருந்தேன். அந்த மாநாடு டிசம்பர் 28-30 தேதிகளில் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. எனவே முதல் இரு தேர்வுகளையும் மீண்டும் எழுதமுடியாமல் போனது. ஆனால் ஜனவரி 5, 6 தேதிகளில் நடைபெற்ற தேர்வுகளை எழுதி முடித்துவிட்டேன். 12 அன்று ஒன்று பாக்கி. சென்னை புத்தகக் கண்காட்சி ஆரம்பித்துவிடும் என்றாலும் தேர்வைக் கட்டாயம் எழுதிவிடுவேன்.

இதுதான் நான் பல ஆண்டுகளுக்குப் பின் எழுதும் ‘பொதுத் தேர்வு’. கடைசியாக இப்படிப்பட்ட ஒரு தேர்வை நான் எழுதியது 1987-ம் ஆண்டில் எழுதிய 12-ம் வகுப்புத் தேர்வு! அதன்பின் ஐஐடியிலும் கார்னல் பல்கலைக்கழகத்திலும் எழுதிய தேர்வுகள் உங்கள் வகுப்புக்கு மட்டும் நடத்தப்படும் தேர்வுகளே. அதனால் தேவையற்ற கெடுபிடிகள் எல்லாம் கிடையாது. கார்னலில் பல தேர்வுகள், திறந்த புத்தகத் தேர்வுகள் அல்லது நேர வரையறை அற்ற தேர்வுகள். மேலும் 12-ம் வகுப்புக்குப் பிறகு பக்கம் பக்கமாக எழுதவேண்டிய தேர்வுகள் எவற்றையும் நான் எழுதியதில்லை.

இங்கே பயங்கரக் கெடுபிடியாக உள்ளது. நீங்கள் பதில் எழுதும் தாள் என்பது உண்மையில் ஒரு நோட்டுப் புத்தகம் போல் உள்ளது. மேற்கொண்டு பக்கங்கள் கொடுக்கமாட்டார்களாம். அதற்குள் நீங்கள் எழுதினால் ஆயிற்று. (ஆனால் அவர்கள் கொடுப்பதற்குமேல் பக்கங்கள் தேவை இருக்கவில்லை.) ஓர் அரசாங்க அலுவலகத்தில் படிவங்களை நிரப்புவதுபோல் நிறைய எழுதவேண்டியிருக்கிறது. உங்கள் பெயர். உங்கள் ரோல் நம்பர் எண்ணிலும் எழுத்திலும். தேர்வு எழுதும் இடத்தின் பெயர், அதன் குறியீட்டு எண். உங்கள் தேர்வுப்பாடத்தின் பெயர், அதன் குறியீட்டு எண், உங்கள் பிறந்த தேதி, உங்களுக்குத் தரப்படும் கேள்வித்தாளில் உள்ள குறியீட்டு எண். அதன்பின் பதில் புத்தகத்தில் நீங்கள் கையெழுத்திட்டு அருகில் தேர்வுக் கண்காணிப்பாளரும் கையெழுத்திட வேண்டும்.

உங்கள் பதில் புத்தகத்துக்கு என்று தனியான ஒரு சீரியல் நம்பர் உள்ளது. உங்கள் அருகில் உட்கார்ந்திருப்பவருக்குத் தரப்படும் புத்தகத்தில் வேறு ஓர் எண் இருக்கும். தேர்வு எழுதுவோர் அனைவருடைய பெயரும் குறிப்பிடப்பட்டிருக்கும் தாளில் அவரவர் பெயருக்கு நேராக, அவரவருடைய பதில் புத்தகத்தில் உள்ள எண்ணை எழுதி, அதற்கு அருகில் ஒரு கையெழுத்து இடவேண்டும்.

இந்தப் பதில் புத்தகங்களை மதிப்பிடுவதற்கு அனுப்பும்போது உங்கள் பெயர், ரோல் நம்பர் எழுதிய பகுதியைப் பிய்த்துவிட்டு டம்மி எண் ஒன்றைக் கொடுத்து அனுப்புவார்களாம்.

*

எம்.ஏ வைணவம், தமிழ் வழிப் பாடம். நான் கையால் தமிழ் எழுதிப் பல ஆண்டுகள் ஆகிவிட்டன. உண்மையில் கையெழுத்து போடுவதைத் தவிர மீதி எதையும் கையால் எழுதுவதில்லை! இந்தப் பரீட்சைக்காக, இருக்கும் கொஞ்ச நேரத்தில் கொஞ்சமாக எழுதிப் பார்த்தேன். ஆனால் பரீட்சையில் நேர நெருக்கடியில் எழுதுவது என்பது நிஜமாகவே கடினமாக இருந்தது. கையெழுத்து சீராக வரவில்லை. ஹ, ஷ, க்ஷ போன்ற கிரந்த எழுத்துகள் எழுதக் கஷ்டமாக இருந்தன. அடித்துத் திருத்தாமல் எழுதப் பெருமுயற்சி எடுக்கவேண்டியிருந்தது. ‘சேதனன்’ என்ற வார்த்தையை எழுத முற்படும்போது, முதலில் ‘தே’ (ச போலவே த உள்ளதல்லவா?) என்று எழுதிவிட்டால் பிறகு கை backspace-ஐத் தேடுகிறது. கணினியின் கீபோர்ட் என்னும் மனத்தடையை மீறித்தான் பரீட்சை எழுதவேண்டியிருந்தது.

நான் எழுதிய முதல் தேர்வு ‘திருமங்கையாழ்வார் பாசுரங்கள்’. அடுத்தது ‘ரஹஸ்ய இலக்கியங்கள்’. இனி எழுதவேண்டிய தாள் ‘பல்வேறு வைணவ சித்தாந்தங்கள்’.

நாங்கள் பரீட்சை எழுதிய அறையில் பிற பாடங்களில் பரீட்சை எழுதுபவர்களும் உள்ளனர். ஆட்களை உட்காரவைப்பதில் பெரும் முயற்சிகள் எதையும் கண்காணிப்பாளர் செய்வதில்லை. ஒரே தாளை எழுதும் இருவர் அருகருகில் உட்கார்ந்துகொள்கின்றனர். நான் பார்த்தவரை யாரும் பிட் அடித்ததாகத் தெரியவில்லை. ஓரிருவர் அறையில் தங்களுக்குள் பேசிக்கொண்டே இருந்தனர். ஓரிருமுறை எச்சரிக்கை செய்தபிறகு அடங்கினர்.

மூன்று மணி நேரம் சேர்ந்தாற்போல ஓரிடத்தில் உட்கார்ந்து பரீட்சை எழுதியபோதுதான் ஒன்றை உணர்ந்தேன். கடந்த 20 வருடங்களில் சேர்ந்தாற்போல் ஓரிடத்தில், போனை ஆஃப் செய்துவிட்டு, பிறருடன் பேசாமல் உட்கார்ந்திருப்பது இதுதான் முதல் தடவை என்று.

கடைசி 20-30 நிமிடங்களில் கண்காணிப்பாளர் பெரும் தொல்லை செய்கிறார். இன்னும் 15 நிமிடங்கள், இன்னும் 10 நிமிடங்கள், இன்னும் 5 நிமிடங்கள் என்று சொல்லிப் பதட்டத்தை ஏற்படுத்துகிறார். ஞாயிறு அன்று தேர்வு எழுதுவோர் கண்காணிப்பாளருடன் ‘உங்க வாட்ச் தப்பு, இன்னும் 10 நிமிடம் இருக்கு’ என்றெல்லாம் சண்டை போட ஆரம்பித்துவிட்டனர். நான் எழுதி முடித்துவிட்டதால் தாளைக் கொடுத்துவிட்டுக் கிளம்பிவிட்டேன். மேலும் அதிக டைம் கொடுக்கப்பட்டதா என்று தெரியாது.

சில ஆசாமிகள் இருக்கிறார்கள். வந்து ஒரு மணி நேரம் ஆவதற்குமுன்பே பதில் புத்தகத்தை ஜோராக கண்காணிப்பாளர் கையில் கொடுத்துவிட்டு ஹாயாக வெளியேறுகிறார்கள். இதற்கு ஏன் பரீட்சைக்கு வரவேண்டும் என்று தெரியவில்லை. நிச்சயமாக அவர்களால் தேர்வை ஒழுங்காக எழுதியிருக்க முடியாது.

*

[நான் முதல் தேர்வை மிக மிக நன்றாகவும், அடுத்ததை மிக நன்றாகவும் எழுதியுள்ளேன். எனக்குத் தனிப்பட்ட முறையில் இந்தத் தேர்வு முறை பிரச்னை அளிக்கவில்லை.

ஆனால் கூர்ந்து பார்த்தால், இந்தத் தேர்வு முறை என்பது சரியானதுதான என்ற கேள்வி எழுகிறது. அதுவும் முக்கியமாக ‘நீண்ட கட்டுரை’ எழுதச் சொல்லும் முறை. மொத்தமாக ஒவ்வொரு பரீட்சையிலும் அனைத்துக் கேள்விகளுக்கும் சேர்த்து 4,400 வார்த்தைகள் எழுதச் சொல்லிக் கேட்கிறார்கள். மூன்று மணி நேரத்தில் கேள்விகளைப் புரிந்துகொண்டு இத்தனை வார்த்தைகளை எழுதித் தள்ளுவது என்பது சாத்தியமா? ஒருவரது புரிதல் எவ்வளவு தூரம் என்பதைத் தெரிந்துகொள்ள வேறு பல முறைகள் இருக்கின்றனவே?

இந்தத் தேர்வுக்கு மாற்றுமுறையைக் கொண்டுவருவது மிக அவசியம் என்று நினைக்கிறேன்.

24 comments:

  1. after reading this it created an interest to join MA vainavam .do let me how to join.

    ReplyDelete
    Replies
    1. Contact Madras University, Distance Education Program. You can get all the details from here: https://www.ideunom.ac.in/home.html

      Delete
  2. நீங்கள் தேர்வை சுலபமாக எழுதிவிட்டீர்கள்.அது எப்படித் திருத்தப்படுகின்றது என்று என்னை மாதிரி ஆட்கள் எழுதினால் சுவாரசியம் பிய்த்துக்கொண்டு போகும்.உயர்கல்வி தேர்வு முறைகள் மாறிவிட்டன. கடந்த காலம் போன்று மாணவர்களை பெயிலாக்கும் மனோநிலை இல்லை. 4400 வார்த்தைகள் எழுதமுடிந்தால், (அதற்கு மேலும் எழுதும் அசகாய சூரர்கள் உள்ளனர்.அவர்களுக்காகவே இந்த நோட்டுப் புத்தக வடிவம்)பாஸ் பாஸ்

    ReplyDelete
    Replies
    1. தேர்வுகளை எப்படித்தான் திருத்துகிறீர்கள் என்று எழுதுங்களேன்:-) ஆனால் உங்கள் வேலையும் பாவம்தான். ஆளாளுக்கு எழுதியிருக்கும் புருடாக்களைப் படிக்கவேண்டுமே!

      Delete
  3. "திருமங்கை ஆழ்வார் பாசுரங்கள்" என்ற தாளில் கேட்கப்படும் கேள்விகள் பற்றி ஆவல். ஒன்றிரண்டு உதாரணம் தர முடியுமா?

    ReplyDelete
    Replies
    1. http://srivaishnavasri.wordpress.com/category/sri-vaishnava-sampradaya-books/

      மேற்கண்ட உரலியில் ஸ்ரீவைஷ்ணவம் தொடர்பான கேள்விகள்/பதில்கள், மாதிரி வினாத்தாள்களை படிக்கலாம்.

      நன்றி.

      Delete
  4. நீங்கள் மிகமிக நன்றாக எழுதியுள்ளதாக நீங்கள் நினைத்துக்கொண்டிருக்கலாம். ஆனால் அதை திருத்துபவர்கள் எதிர்பார்ப்பது வேறுமாதிரியிருக்கலாம். புத்தகத்தில் உள்ளதை அப்படியே 'வாந்தி' எடுப்பவர்களுக்குத்தான் அதிக மதிப்பெண் கிடைக்கும். நிச்சயம் நீங்கள் அப்படிச் செய்திருக்க மாட்டீர்கள் என்று எனக்குத் தெரியும். தேர்வு முடிவுகள் வந்ததும் சொல்லுங்கள் :-)

    கோவிந்தா...! கோவிந்தா...!!

    ReplyDelete
  5. இதை படித்தவுடன் ,எனக்கும் ஏதாவது ஒரு முதுகலை பயில வேண்டும் என்று ஆவல் எழுகிறது.

    ReplyDelete
  6. சுவாரஸ்யமான பதிவு. உங்கள் பரீக்ஷை அனுபவங்களை வெகு நாளாக எதிர்பார்த்துக் காத்திருந்தேன். யுனிவர்ஸிடி பற்றி மாணவர்கள் மத்தியில் (வரலாறு போன்ற பாடங்களில்) ஹால் வாசலில் கேட்க நேரும் வழக்கமான ஜோக்:" எடை பாத்துதான் திருத்துவாங்க. எதையாவது எழுதி நிரப்பிட்டா போதும்பா". சென்னை மட்டுமின்றிப் பெரும்பாலான தமிழ்ப் பல்கலைக்கழகங்களில் நடக்கும் MBA என்ற கூத்து இருக்கிறதே, அது கொடுமையான நகைச்சுவை. தொழில்சார்ந்த பட்டறிவை ஊக்குவிக்க வேண்டிய ஒரு படிப்பை இதை விட யாராவது கேவலப்படுத்த இயலுமா என்பது சந்தேகமே.

    ReplyDelete
  7. பிஎஸ்.சி கணிணி அறிவியல் தேர்வில் அக்கவுன்ட்ஸ் பேப்பரைத் திருத்துபவர்கள் எடைத்தராசை வைத்துக்கொண்டு மார்க் போடுவார்கள் என்று மாய்ந்து மாய்ந்து எழுதியது நினைவுக்கு வருகிறது.

    ReplyDelete
  8. திரு பத்ரி,
    பரீட்சை எழுதுவதில் தங்களது அனுபவம் சுவாரசியமாக இருந்தது உங்களுக்கு இப்பரீட்சை வித்தியாசமாக இருந்ததற்குக் காரணம் உண்டு. எஞ்சினீரிங் படிக்கும் போது பரீட்சைகளில் வதவ்த என்று எழுத வேண்டிய அவசியமே கிடையாது. ஆர்ட்ஸ் சப்ஜெக்ட்ஸ் முற்றிலும் வேறு விஷயம். பக்கம் பக்கமாக எழுதியாக வேண்டும்.ஆர்ட்ஸ் சப்ஜெக்ட்ஸ் பற்றிய எம்.ஏ ப்ரிட்சையில் சில கேள்விகளுக்கு 12 பக்கமும் எழுதலாம். இரண்டு வால்யூம் கொண்ட புத்தகமும் எழுதலாம்.உதாரணமாக எம்.ஏ பொலிட்டிகல் சயன்ஸ் பரீட்சையில் The Role of Governors in India என்ற கேள்விக்கு மூன்று வால்யூம் கூட எழுத முடியும். சயன்ஸ், எஞ்சினீரிங் எம். எஸ்ஸி, எம்,டெக் பரீட்சைகளில் நீங்கள் என்னதான் முயன்றாலும் விஸ்தாரமாக எழுத இடமில்லை.
    நீங்கள் மூன்று மணி நேரம் அதிகம் என்கிறீர்கள்.ஆர்ட்ஸ் ச்ப்ஜெக்ட் படிக்கிறவர்களைக் கேட்டால் மூன்று மணி நேரம் போதாது என்பார்கள்

    ReplyDelete
  9. நீங்கள் படித்த கல்விமுறைகள் வேறு என்பதால் உங்களுக்கு இது புதியதாக தோன்றலாம். ஆனால் என்போன்றவர்கள் முதுநிலை படிப்பு வரை இதே சூழலில் தான் இன்றும் படித்து வருகின்றோம் திரு சரவணன் அவர்கள் சொல்வது நிசர்சணமான உண்மையாக தோன்றுகிறது எனக்கு. நம் ஆசிரியர்களுக்கு உண்மையான (புத்தகத்தில் உள்ள) ப்தில்தான் தேவையே ஒழிய மானவனின் அறிவை இங்கே யாரும் பார்ப்பதில்லை என்பது என் கருத்து.

    ReplyDelete
  10. தேர்வு திருத்துதல் பற்றி கேள்விப்பட்டால் ஒரு மாஸிவ் ஹார்ட் அட்டாக் உறுதி. தொலை தூரக் கல்விக்கு அப்புறம் வருவோம். நேர்வழித் தேர்வு விடைத்தாள்கள் மத்திய தேர்வுத் திருத்துதல் பணிக்கு வரும். எனக்கு 8 வருடம் முன்பு முதல் அனுபவம். நண்பர் வற்புறுத்தலுக்காக ஒரு பல்கலைக்குச் சென்றேன். அன்று ஒரு விடைத்தாள் திருத்த 1 ரூபாய் ஐம்பது காசு. இந்த பிச்சைக்காசுக்காக பலர் வரமாட்டார்கள். எனவே திருத்த ஆள் கிடைக்காது. இந்தப் பிச்சைக்காசுக்கும் மாரடிக்க ஒரு சிறு கூட்டம் உள்ளது. அவர்கள் வந்து வால்யூம் பிசினஸ் செய்வார்கள். நிறையத் திருத்தினால் தான் ஓரளவு பஸ்ஸுக்காவது மிஞ்சும் என்று மாங்கு மாங்கென்று திருத்துவார்கள். அன்று, ஒரு மனிதர் திருத்திய தாள்களின் எண்ணிக்கை .... மூச்சை இழுத்து விட்டுக்கொள்ளுங்கள் .... 750 !!!! அதாவது உணவு இடைவேளை போக 8 மணி நேரத்தில். சராசரியாக ஒரு தாள் திருத்த ஆன நேரம் 40 வினாடிகள் !!! இதில் எதைப் படித்திருப்பார்கள் ? இதற்கு நடுவே தேர்வு திருத்தல் அலுவலர் அவர் பணி எப்படா முடியும் என்று செயல்வீரராய் இருப்பார். வந்தவர் கணக்கு வாத்தியாராய் இருப்பார். அவரிடம், எல்லாமே கணக்குதான்சார்னு "அத்துவைதம்" பேசி, எக்கனாமிக்ஸ், அக்கவுண்ட்ஸ், முடிந்தால் அய்ரோப்பிய வரலாறு, அரசியல் அறிவியல் என்று கட்டுக் கட்டாய் தாள்களைத் தலையில் கட்டுவார். அந்த ஒண்ணரை ரூபாய் ஜந்துவும் தாள் கூடினால் மீட்டர் ஏறுமே என்று சந்தோசமாய் மதிப்பெண்களை வீசித்தள்ளி செதுக்கி முடிக்கும். அதனால் தான் கன்னாபின்னாவென்று மார்க் ரிசல்ட் வருகிறது. நன்றாய் எழுதி மார்க் குறைந்த மாணவர்-பெற்றோர் வெகுசிலரே விடைத்தாள் ஜெராக்ஸ் வரை பெரும் போராட்டம் நடத்துவார்கள். அப்பிடி மாட்டினாலும் தவறாய்த் திருத்திய ஆசிரியர்கள் மீது எந்த நடவடிக்கையும் கிடையாது. நேர்வழிக்கே இப்படியென்றால், தொலைதூரக் கல்வி எப்படி இருக்கும் என்று நீங்களே ஊகித்துக்கொள்ளுங்கள். ஆனாலும் ஒன்றிரண்டு மனசாட்சிக்கு பயந்த தொழில்தருமம் காக்கும் பேராசிரியர்களும் இருப்பார்கள். செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால் எங்கும் திருவருள் பெற்று உங்கள் விடைத்தாள் அத்தகைய பெருந்தகைகளிடம் சென்று சேர பிரார்த்திக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. //இந்தப் பிச்சைக்காசுக்கும் மாரடிக்க ஒரு சிறு கூட்டம் உள்ளது//
      you would have used some better language

      Delete
    2. What better language ???? You come and see these insincere duffers who play with the future of kids. you'll start abusing with still more unparliamentary terms .... the whole education system is infected with such parasites. If any action is taken, they will bring all union, caste, religion into it. Government will not dare to touch them.

      Delete
    3. மாணவர்கள் வாழ்வில் விளையாடும் இந்த புழு போன்ற கூட்டமும் அ.கொ.தீ. கழகக் கூட்டம் தான். ...

      Delete
    4. I agree with Anonymous; some abysmally low IQ fellows who cannot comprehend the situation keep asking "better", "civilized" language on which they have no clue. We have to throw some ice-cold water on the faces of such cranky fellows to wake them up to reality.

      Delete
  11. It has been a while since our state universities have bid farewell to education. I have no clue what our "universities" are doing, but I'm pretty sure they don't do anything that even remotely linked to learning. Ever since Kazhagams grabbed power in Tamil Nadu, most of the VCs, Deans, faculty members, and staff are appointed based on bribe and political influence.

    ReplyDelete
    Replies
    1. Central universities are no different. Go to a Chennai's neighbour. Malpractices, corruption, caste politics, Religious politics, careless admin, careless educators- you can see one fully blown dirty concoction of all that is bad and the place literally stinks :(

      Delete
    2. I agree. Since Badri dealt with Madras Univeristy which is a state university, I conveyed the prevailing situation there. In fact if we visit any central university, or a national laboratory or places like ISRO & DRDO, we'll realize what our media projects is far from true. There is huge overwhelming population of dead-woods keeping those places sickeningly dirty. Our kalpakkam Indira Gandhi atomic center is also one such place. It's easy to destroy an institution, but it's very, very... hard to transform them into vibrant research organizations. In our system it's almost impossible to fire bad guys, but if the bad fellows stay, they'll keep ruining the institutions.

      Delete
  12. This comment has been removed by the author.

    ReplyDelete
  13. Hi Badri,

    I met you on that day. You were really busy to prepare yourself for the exam. But still you responded to my questions, I am really happy.

    S.Lakshminarayanan

    ReplyDelete
  14. 'திருக்குறளைப் பற்றி ஒரு கவிதைத் தொகுப்பு வெளியிடுகிறோம். தங்கள் கவிதையை அனுப்புங்கள்' என்று பல்லாண்டுகள் முன்பு ஒருவர் கேட்க, அவருக்காக எழுதிய வெண்பா இது.

    பக்கத்திற் கேற்ப மதிப்பெண்கள்; கையிலுள்ள
    ரொக்கத்திற் கேற்ப மரியாதை - இந்த
    எடைபோடும் மக்களின் கண்ணைத் திறக்கும்
    படையல்ல வாகுறட் பா.

    தேர்வுத் தாள் திருத்துதல் பற்றிய பின்னூட்டங்களைப் படித்த போது, இது நினைவுக்கு வந்தது.

    ReplyDelete