Thursday, June 13, 2013

செகுலரிசமும் மோதியும்

(1) செய்து காட்டுவார் மோதி
(2) பாஜகவின் கூட்டாளிகள்

தினம் தினம் மோதியா என்று அலுத்துக்கொள்ளாதீர்கள். சில கேள்விகள் எழுப்பப்படும்போது அவை பற்றி எனக்கே தெளிவு ஏற்படுத்திக்கொள்வதற்காக இந்தப் பதிவுகள். இன்னமும் நிறையக் கேள்விகள் கேட்கப்படுகின்றன. எனவே தொடர்ந்து மேலும் சில பதிவுகளும் அவ்வப்போது வரும்.

ஐக்கிய ஜனதா தளம் ஒரு செகுலர் (மதச்சார்பற்ற) கட்சி என்று கருதப்படுகிறது. பாஜக ஒரு மதச்சார்புள்ள கட்சியாகவே அனைவராலும் பார்க்கப்படுகிறது. ஏனெனில் இந்துத்துவம் அவர்களுடைய நோக்கங்களில் ஒன்று என்று அக்கட்சியைச் சேர்ந்த பலருமேகூடச் சொல்கிறார்கள். சிவ சேனை ஓர் இந்துத்துவக் கட்சியாகவே காணப்படுகிறது. அது தவிர, அகாலி தளம் என்ற கட்சி, சீக்கியம் என்கிற மதத்தின்மீதாகக் கட்டப்பட்டுள்ளதால் அதுவும் மதச்சார்புள்ள கட்சிதான். அதுதவிர முஸ்லிம் கட்சிகள் அனைத்தும் மதச்சார்புள்ளவையே. வெளிப்படையாகக் கிறிஸ்தவ மதச்சார்பை வெளிப்படுத்தும் கட்சிகள் என்று ஏதும் இந்தியாவில் இல்லை. மிச்சமுள்ள அனைத்துக் கட்சிகளும் என்ன சொன்னாலும் செய்தாலும், அவர்கள் அனைவருமே, காங்கிரஸ் உள்பட, செகுலர் கட்சிகளாகவே அறியப்படுகிறார்கள்.

இந்துத்துவ அரசியலின் அடிப்படையே, ‘பெரும்பான்மையான இந்துக்கள் ஏதோ ஒருவிதத்தில் வஞ்சிக்கப்படுகிறார்கள்; சிறுபான்மையினர், அதுவும் முக்கியமாக முஸ்லிம்கள், சலுகைகளாகப் பெற்றுத் தள்ளுகிறார்கள்’ என்ற கருத்து. இதற்கு முற்றிலும் மாறாக, முஸ்லிம்கள், தாங்கள் வஞ்சிக்கப்படுவதாக நினைக்கிறார்கள். எந்த ஒரு செகுலர் கட்சியாலும் தங்களுக்கு இதுகாறும் நன்மைகள் கிடைத்ததில்லை என்கிறார்கள். இப்போது கொடுக்கப்படும் சலுகைகள் போதவே போதா என்கிறார்கள். முஸ்லிம்கள் தொடர்ந்து பின்தங்கிய வகுப்பினர்களாகவே இருந்துவருவதாக அவர்கள் புள்ளிவிவரங்களோடு எடுத்துக்காட்டுகிறார்கள்.

பாஜகவுக்கான எதிர்ப்பு முஸ்லிம்களிடமிருந்து மட்டும் வருவதில்லை. மூன்று முக்கியமான இடங்களிலிருந்து வருகிறது. (1) முஸ்லிம்கள் மற்றும் பிற சிறுபான்மையினர். (2) தலித்துகள். (3) திராவிடவாதிகள் (அல்லது) நாத்திகவாதிகள்.

முஸ்லிம்களின் எதிர்ப்பைப் புரிந்துகொள்வது எளிது. இது பாபர் மசூதி தாண்டியது. குஜராத் கலவரம் தாண்டியது. தாம் சிறுபான்மையினராக இருக்கும் நாட்டில் தமக்குப் பாதுகாப்பு வேண்டும்; தம்முடைய வளர்ச்சிக்கு ஊக்கங்கள் வேண்டும்; தம்முடைய வழிபாட்டுமுறைக்கு எந்தக் குந்தகமும் வரக்கூடாது; தம்முடைய பின்தங்கிய நிலை மாறவேண்டும் என்று அவர்கள் எதிர்பார்ப்பது மிக நியாயமானதே. இந்த மாற்றங்கள் எவையும் பாஜகவிடமிருந்து கட்டாயமாக வர முடியாது என்ற கருத்து முஸ்லிம்களிடம் ஆழமாக உள்ளது. அப்படிப்பட்ட ஒரு கருத்தை யாராலும் புறந்தள்ளிவிட முடியாது. பாஜகவைவிட காங்கிரஸ் அல்லது மூன்றாவது அணியிடம் தங்களுக்கு அதிக சலுகைகள், வாய்ப்புகள் கிடைக்கும் என்று முஸ்லிம்கள் சொன்னால் அதை எப்படி மறுக்க முடியும்?

பாஜகவில் உள்ள ஒரு சில டோக்கன் முஸ்லிம் அரசியல்வாதிகள் (ஷாநவாஸ் ஹுசைன், முக்தார் அப்பாஸ் நக்வி, நஜ்மா ஹெப்துல்லா, இறந்துபோன சிக்கந்தர் பக்த்) தாண்டி சமீபத்தில் குஜராத்தில் சில புதிய இளம் முஸ்லிம் தலைவர்கள் உருவாகியுள்ளனர். இவர்களுடைய கருத்து: ‘மோதியின் ஆட்சியில் முஸ்லிம்கள், இந்துக்கள் என்று அனைவருமே முன்னேறுகிறார்கள்; இதுதான் உண்மையான வளர்ச்சி; அடையாள அரசியல்தான் ஆபத்தானது; இந்த அடையாள அரசியலால்தான் முஸ்லிம் தலைவர்கள் முஸ்லிம்களைப் பின்தங்கியவர்களாகவே வைத்துள்ளனர்.’ ஆனால் இந்தக் கூற்றுகளை இன்று ஒரு செகுலர் நபர் எளிமையாக ஒதுக்கிவிட முடியும். ஏனெனில் நம் கருத்துகள் நம் நம்பிக்கையிலிருந்தே உருவாகின்றன. தெளிவான சான்றுகளிடமிருந்து அல்ல. நாம் சான்றுகளைத் தேடிப் போவதில்லை. அதற்கான நேரமோ வலுவோ நம்மிடம் கிடையாது.

இன்று முஸ்லிம் கட்சிகளும் தனிப்பட்ட முஸ்லிம்களும் பாஜகவுக்கு, அதுவும் முக்கியமாக மோதிக்கு, வாக்களிப்பதற்கான வாய்ப்புகள் குறைவு. இத்தனை ஆண்டுகள் கழித்துத்தான் அத்வானிக்கு ஸ்பெஷலாக செகுலர் முத்திரை கிடைத்துள்ளது. இதற்குமுன் வாஜ்பாயிக்குக் கொஞ்சமாகக் கிடைத்தது. எனவே மேலும் பத்து இருபது ஆண்டுகளுக்குப் பிறகு மோதிக்கும் இந்த முத்திரை கிடைக்கலாம். அல்லது கிடைக்காமலேயே போகலாம்.

மோதி முஸ்லிம்களின் ஆதரவு என்ற முத்திரையைப் பெற்றபிறகுதான் பிரதமர் ஆகலாம் என்ற வீட்டோ இருந்தால் அவரால் என்றுமே இந்தியாவின் பிரதமர் ஆக முடியாது. இந்தியாவின் அரசியல் அமைப்புச் சட்டம் அப்படிப்பட்டதல்ல. உண்மையில் பாஜகவில் யாருக்குமே - ஏன் நாளை ஷாநவாஸ் ஹுசைன் பாஜகவின் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டாலுமேகூட - இந்த முத்திரை கிடைக்காது. இன்றைய நிலையில் பாஜகவுக்கு வெகு சில முஸ்லிம்களே வாக்களிப்பார்கள். மோதி தலைவராக இருந்தாலும் சரி, தலைவராக இல்லாவிட்டாலும் சரி.

இந்தக் காரணங்களாலேயே மோதி ஆட்சிக்கு வரக்கூடாது என்று சொல்லிவிடலாமா? அமெரிக்காவை எடுத்துக்கொண்டால் பொதுவாக கருப்பினத்தோரின் (ஆப்பிரிக்க அமெரிக்கர்கள்) வாக்குகள் டெமாக்ரடிக் கட்சிக்குத்தான் கிடைக்கும். இது ஒபாமா இப்போது வந்ததால் அல்ல. டெமாக்ரடிக் கட்சி சிறுபான்மையினர் நலனை முன்வைக்கும் என்ற கருத்து அங்கே உள்ளது. ரிபப்ளிகன் கட்சி ஒருவிதத்தில் அடிப்படைவாதம் பேசக்கூடியது. தீவிரவாத எவாஞ்செலிகல் கிறிஸ்தவர்களின் ஆதரவு கொண்ட கட்சி அது. அதேபோல லத்தீனோக்கள், ஆசியர்கள் ஆகியோரும் பொதுவாக டெமாக்ரடிக் கட்சிக்கு ஆதரவு அளிப்பவர்கள். தம் நலன் பொதுவாக டெமாக்ரட்டுகள் ஆட்சியில் பாதுகாப்பாக இருக்கும் என்ற காரணத்தாலேயே ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் லத்தீனோக்கள், ஆசியர்கள் ஆகியோர் தொடர்ந்து டெமாக்ரட்டுகளுக்கே அதிக வாக்கை அளித்துவருகின்றனர். ரிபப்ளிகன் கட்சியிலும்கூட இந்தக் குழுவினரிலிருந்து சில டோக்கன் ஆட்களைப் பார்க்கலாம். எப்படி பாஜகவில் சில டோக்கன் முஸ்லிம்கள் இருக்கிறார்களோ, அப்படி.

ஆனாலும் ரிபப்ளிகன் கட்சி அவ்வப்போது ஜெயித்துக்கொண்டுதான் வருகிறது. ஆப்பிரிக்க அமெரிக்கர்களுக்கு வீட்டோ ஏதும் கிடையாது. எப்போது பெரும்பான்மை அமெரிக்கர்கள் ஒட்டுமொத்தமாக ரிபப்ளிகன் கட்சி வேட்பாளருக்கு வாக்களிக்கிறார்களோ அப்போது அவர் வெற்று பெறுகிறார். எனவே முஸ்லிம்கள் ஓட்டு விழாவிட்டாலும்கூட அல்லது மிகக் குறைவாக விழுந்தாலும்கூட பாஜகவும் மோதியும் வெல்ல முடியும்.

பாஜகவுக்கு தலித்துகளிடமிருந்தும் திராவிடவாதிகளிடமிருந்தும் எதிர்ப்பு உள்ளது என்று சொல்லியிருந்தேன். இதற்கான காரணங்கள் வேறானவை.

பாஜகவும் அதன் ஆத்மாவாக இருக்கும் ஆர்.எஸ்.எஸ் இயக்கமும் உயர்சாதி, பிராமணியக் கருத்துகளை முன்வைக்கும் அமைப்பு என்பது பொதுவான இடதுசாரி லிபரல் சிந்தனையாளர்களின் கருத்து. இதில் உண்மை இல்லை என்று சொல்லிவிட முடியாது. பாஜக என்ற அரசியல் கட்சி காங்கிரஸுடன் ஒப்பிடும்போது இளம் கட்சிதான். அது ஒரு குறிப்பிட்ட சித்தாந்தப் பார்வையிலிருந்து ஜன சங்கமாக உருவாகி, பின் ஜனதாவுடன் ஐக்கியமாகி, பின்னர் மீண்டும் பாரதிய ஜனதாவாக மறு உருவெடுத்தது. அதன் சித்தாந்தப் பார்வை கொஞ்சம் கொஞ்சமாக inclusive-ஆக மாறிவருகிறது என்றே நான் கருதுகிறேன். இக்கட்சியில் பிற்படுத்தப்பட்டவர்களின், தாழ்த்தப்பட்டவர்களின் பிரதிநிதித்துவம் என்ன என்று கணக்கு எடுக்கக்கூடிய நிலையில் இப்போது நான் இல்லை. ஆனால் இது ஒரு சுவாரசியமான ஆய்வாக இருக்கும்.

இன்று காங்கிரஸ் கட்சியில் பாஜகவைவிட அதிகமான எண்ணிக்கையில் மேல்மட்டத்தில் பிற்படுத்தப்பட்டவர்களும் தாழ்த்தப்பட்டவர்களும் இருப்பார்கள் என்று யூகிக்கிறேன். ஆனால் நரேந்திர மோதியே பிற்படுத்தப்பட்ட ஒரு சாதியைச் சேர்ந்தவர்தான் என்பதை இங்கே கவனிக்கவேண்டும்.

தாழ்த்தப்பட்டவர்களுக்கும் பழங்குடியினருக்கும் சட்டமன்றங்களிலும் நாடாளுமன்றத்திலும் இட ஒதுக்கீடு இருக்கும் ஒரே காரணத்தால்தான் அவர்களால் இன்று ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் இந்தச் சட்டம் இயற்றும் மன்றங்களுக்குச் செல்ல முடிகிறது. இன்றும்கூட பொதுத் தொகுதியில் நிற்பதற்கு இந்தச் சாதிகளைச் சேர்ந்தோருக்கு பெரும் அரசியல் கட்சிகளிடமிருந்து பெரும்பாலும் வாய்ப்புகள் கிடைப்பதில்லை. ஆனால் பிற்படுத்தப்பட்டோர் தம் எண்ணிக்கை காரணமாகவும் தம் அரசியல் வலு காரணமாகவும் ஆட்சியில் தமக்குரிய இடத்தை வெகுவாகப் பிடித்துவிட்டனர். சொல்லப்போனால் இன்றைய இந்திய அரசியலில் மிக முக்கியமான பங்கைச் செலுத்திக்கொண்டிருப்பது இடைநிலைச் சாதிகள் என்று சொல்லப்படுவோரே.

தலித்துகள் தனியாக பாஜகமீது பயம் கொள்வார்களா, பாஜகவை ஒதுக்குவார்களா என்று தெரியவில்லை. இன்றைய default நிலையில் அவர்கள் பாஜகவைப் பெரிதாக ஒன்றும் ஆதரிக்கவில்லை. எனவே பாஜக இதற்கும் கீழே போய்விட முடியாது. மாறாக, பாஜக அவர்களுடைய ஆதரவை எதிர்காலத்தில் அதிகமாகப் பெறக்கூடும்.

இறுதியாக திராவிடவாதிகள். பொதுவாக இந்துமதத்தை எதிர்க்கும் இவர்களுக்கு இந்துத்துவவாதம் பேசுவோரை எதிர்ப்பதுதான் default position. திமுக சிறிதுகாலம் பாஜகவுடன் கூட்டணியில் இருந்தது என்றாலும் பொதுவாக பாஜகவுடன் கொள்கைரீதியில் ஒட்டுறவு இல்லாதவர்கள். தமிழ்நாட்டில் பாஜகவுக்குச் சுத்தமாக ஆதரவு இல்லாமல் இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம். ஆனால் மோதிமீது நிறையத் தமிழர்களுக்கு ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது என்பதைப் பல கருத்துக் கணிப்புகள் காண்பிக்கின்றன. இதனால் பாஜகவால் ஒரு சீட்டுகூடப் பெற முடியாது என்பதுதான் நிதர்சனம். அதற்கான கட்டமைப்பு இன்று பாஜகவுக்கு இல்லை.

கடைசியாக இடதுசாரி லிபரல் கருத்தியல் கொண்டவர்கள். இவர்கள் பாஜகவை எதிர்ப்பதற்கான முதன்மைக் காரணம் பாஜக ஒரு மதவாதக் கட்சி என்பதே. அதற்கு பாபர் மசூதி, குஜராத் கலவரம் ஆகியவை உதாரணமாகக் காண்பிக்கப்படுகின்றன. எனவேதான் அத்வானியும் மோதியும் வில்லன்கள். (இப்போது மோதி பெரிய வில்லன். அத்வானி கொஞ்சம் தேவலாம்.)

ஆக, இந்துத்துவத்தை வெறுத்து செகுலரிசத்தை முன்வைக்கும் இடதுசாரி லிபரல்கள், செகுலர் கட்சி ஆட்சியில் இருந்தால் மட்டுமே தமக்கு நன்மை என்று நினைக்கும் சிறுபான்மை மதக் கட்சிகள், இந்துத்துவம் என்பது உயர் சாதித்துவம் என்று நினைக்கும் தலித்துகள், இந்து மதம் என்பதே புரட்டு, எனவே இந்துத்துவ பாஜக எதிர்க்கப்படவேண்டியது என்று கருதும் திராவிடவாதிகள். இப்படி இவர்கள் எல்லோரும் எதிர்க்கும்போது பாஜகவை நான் ஏன் ஆதரிக்கவேண்டும்? அதுவும் முக்கியமாக மோதிக்கு ஏன் ஆதரவு தெரிவிக்கவேண்டும்?

என் காரணங்கள் தெளிவானவை. நான் என்னை மதச்சார்பற்றவன் என்றே நினைத்துக்கொள்கிறேன். கடவுள் நம்பிக்கை அற்றவன். பாஜக அரசியல்வாதிகளின் விசித்திரமான பல கருத்துகள் எனக்குக் குமட்டலை ஏற்படுத்துபவை. சமீபத்தில் ஒரு மகானுபாவர் உதிர்த்த கருத்துகள் (“கல்யாணம் ஆவதற்குமுன்பு பெண்கள் ஜீன்ஸ் போட்டுக்கொள்ளக்கூடாது. மொபைல் போன் வைத்துக்கொள்ளக்கூடாது.”) போன்று பெரும்பாலும் பிற்போக்கான கருத்துகள் பலவற்றை பாஜகவினரிடம் நான் பார்க்கிறேன். மும்பையில், உள்ளாடைகளைப் போர்த்தும் நிர்வாண பொம்மைகளைக் காட்சிக்கு வைக்கக்கூடாது என்பதை முன்மொழிந்த ஜோக்கர்கள், அல்லது வேலண்டைன் டே கொண்டாடக்கூடாது, பெண்கள் ஆண்களுடன் பாருக்குச் சென்று குடிக்கக்கூடாது போன்ற முட்டாள்தனமான கருத்துகளை முன்வைப்பவர்கள் இக்கட்சியில் அல்லது கூட்டணியில் உள்ளனர். அடிப்படைவாதத் தூய்மைவாத உணர்வு என்பது மிக அபாயமானது என்பது என் கருத்து. ஆர்.எஸ்.எஸ்மீது எனக்கு மிகுந்த சந்தேக உணர்வு உண்டு. வி.எச்.பி போன்ற அமைப்புகள்மீது கடும் வெறுப்பு உண்டு.

என் கருத்துகள் பொருளாதாரத் தளத்தில் வலதுசாரிப் பார்வை கொண்டவை. நாட்டின் பாதுகாப்பு, தேசத்தின் தன்மானம், தேசத்தின் கௌரவம் ஆகியவையும் எனக்கு முக்கியம். ஆனால் சமூகத் தளத்தில் அதிகபட்ச தனிநபர் சுதந்தரம் வேண்டும் என்று நான் நினைக்கிறேன். கலாசாரப் போலீஸ்களைக் கடுமையாக வெறுக்கிறேன். என் பார்வையில் என் கருத்துகளுடன் முழுமையாக ஒத்துப்போகும் அரசியல் கட்சி ஏதும் இல்லை. எனவே நான் சமரசம் செய்துகொள்ளவேண்டிய நிலையில் இருக்கிறேன். சமூகத் தளம் முக்கியமா, பொருளாதாரத் தளம் முக்கியமா என்று சிந்திக்கவேண்டிய நிலையில் இருக்கிறேன்.

காங்கிரஸின் பொருளாதாரப் பார்வை எனக்கு ஏற்புடையதாக இருந்து (நரசிம்ம ராவ்-மன்மோகன் சிங்), அதன் உட்கட்சி ஜனநாயகம் சிறப்பானதாக இருந்து, ஊழல் குறைவாக (அல்லது இல்லாததாக) இருந்தால் நான் கட்டாயம் அக்கட்சியையே ஆதரிப்பவனாக இருந்திருப்பேன். ஆனால் அப்படிப்பட்ட நிலை இன்று இல்லை. என்முன் இருக்கும் வாய்ப்புகள் என்ன என்று பார்க்கும்போது, மோதி தலைமையிலான பாஜக அதிக நம்பிக்கை அளிக்கிறது. கவனியுங்கள், பாஜக அதிக நம்பிக்கையளிக்கிறது என்று நான் சொல்லவில்லை; மோதியின் தலைமையிலான பாஜக அதிக நம்பிக்கையளிக்கிறது என்று சொல்கிறேன். வலுவான தொழில் வளர்ச்சி, வலிமையான பொருளாதாரம், தொலைநோக்குள்ள உள்கட்டமைப்பு, அழுத்தங்கள் அற்ற கல்விக்கொள்கை போன்றவற்றை முன்வைக்கும், தனிநபர் சுதந்தரத்தைக் கட்டிக்காக்கும் ஓர் அமைப்பாக, அதே நேரம் உலக அரங்கில் இந்தியாவுக்குச் சிறப்பான ஓரிடத்தைப் பெற்றுத்தரும் ஓர் அரசை மோதியால் அமைக்க முடியும் என்றும் நான் நம்புகிறேன். இந்த அமைப்பின்கீழ் சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்படும் என்று நம்புகிறேன். கலாசார போலீஸ்கள் கட்டுப்பாட்டில் வைக்கப்படுவர் என்று கருதுகிறேன். அப்போதும்கூட தினம் கருத்து முத்துகளை ஆர்.எஸ்.எஸ் ஆசாமிகளும் பாஜக அரசியல்வாதிகளும் உதிர்த்துக்கொண்டிருப்பர். அது எனக்குப் பிரச்னை இல்லை. அது என் வாழ்வையோ பிற குடிமக்களுடைய வாழ்வையோ பாதிக்கக்கூடாது. அமெரிக்காவின் அதி தீவிர கிறிஸ்தவ வலதுசாரிக் கருத்துகள் எப்படி அமெரிக்கப் பொதுமக்களுடைய வாழ்க்கையை பாதிக்காதவகையில் எதிர்க்கப்படுகின்றனவோ அதைப்போல பாஜக/ஆர்.எஸ்.எஸ் அல்லது பிற அதிதீவிர அடிப்படைவாதிகளின் தூய்மைவாதக் கருத்துகள் கட்டுக்குள் வைத்திருக்கப்படும் என்று நம்புகிறேன்.

இந்த என் நம்பிக்கை ஓர் இந்துவாக, ஒரு பிராமணனாக நான் பிறந்திருப்பதால்தான் எனக்குச் சாத்தியமாகியிருக்கிறது என்று ஒருவர் கருதக்கூடும். அவரை நான் குற்றம் சொல்ல முடியாது. ஒரு முஸ்லிமாக, ஒரு தலித்தாக மோதியின் ஆட்சியிடமிருந்து என்னதான் பெற்றுவிட முடியும் என்பதை அவரவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும். ஆனால் ஒரு தலித்தோ, ஒரு முஸ்லிமோ மோதியிடமிருந்து மோசமான ஒரு எதிர்காலத்தை மட்டுமே பெறுவார்கள் என்ற கருத்து தவறானது என்பது மட்டும் எனக்கு உள்ளுணர்வில் தோன்றுகிறது. எனக்குக் கிடைக்கும் வாய்ப்புகள் ஒரு முஸ்லிமுக்கும் ஒரு தலித்துக்கும் சமமாகவே கிடைக்கும் என்றே நான் நம்புகிறேன்.

அந்த நம்பிக்கை உள்ளவரையிலும் நான் மோதியை ஆதரிப்பேன்.

22 comments:

  1. //கவனியுங்கள், பாஜக அதிக நம்பிக்கையளிக்கிறது என்று நான் சொல்லவில்லை; மோதியின் தலைமையிலான பாஜக அதிக நம்பிக்கையளிக்கிறது என்று சொல்கிறேன். வலுவான தொழில் வளர்ச்சி, வலிமையான பொருளாதாரம், தொலைநோக்குள்ள உள்கட்டமைப்பு, அழுத்தங்கள் அற்ற கல்விக்கொள்கை போன்றவற்றை முன்வைக்கும், தனிநபர் சுதந்தரத்தைக் கட்டிக்காக்கும் ஓர் அமைப்பாக, அதே நேரம் உலக அரங்கில் இந்தியாவுக்குச் சிறப்பான ஓரிடத்தைப் பெற்றுத்தரும் ஓர் அரசை மோதியால் அமைக்க முடியும் என்றும் நான் நம்புகிறேன். இந்த அமைப்பின்கீழ் சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்படும் என்று நம்புகிறேன்//.....I second it......happily

    ReplyDelete
  2. great!
    good writing and
    all my support.
    -Surya

    ReplyDelete
  3. தெளிவாக உங்கள் நிலையைப் பதிவு செய்து விட்டீர்கள். எனது நிலையைப் பற்றி எழுதத் தூண்டியிருக்கிறது. நன்றி

    ReplyDelete
  4. உங்களின் பார்வையில் இந்துவாக இருந்து கொண்டு சிறிய கவலையுடன் பிஜேபிக்கு ஆதரவு சொல்லிவிடலாம் ஏன் என்றால் அச்சுருத்தல்,பாதிப்பு, கவலை இன்ன பிற எல்லாம் சிறுபான்மையினருக்கே ... அதுவும் மோடி போன்றவர்கள் சொல்லவே வேண்டாம்.... அதுதான் தலைவிதி என்றால் என்ன செய்ய இயலும் படைத்தவனை பிராத்திப்பதைவிட...

    ReplyDelete
  5. நல்ல அலசல்.. தலித்துகள் பா.ஜ.க வை வெறுப்பதற்கான காரணங்கள் குறைந்து கொண்டே வருகிறது. தமிழகத்தில் கன்யாகுமரியும், கோவையும் பா.ஜ.க வெற்றி பெறுவதற்கான வாய்ப்புள்ள இடங்கள்.. இஸ்லாமியர்கள் தங்களுக்கு ஒரு பொது எதிரி வேண்டும் என்பதற்காக மோதியை எதிர்க்கலாமே தவிர அவரால் இஸ்லாமியர்களுக்கு இருப்பதாக அவர்கள் நினைக்கும் அச்சுருத்தல் காங்கிரஸ் ஆட்சியில் அதைவிட உண்டு என்பதே நிதர்சனம்.. தீராவிட கும்பல்கள் பதவி கிடைக்குமென்றால் யாரையும் தியாகம் செய்ய தயங்கமாட்டார்கள் என்பதே வரலாறு.. ஆனால் சிறுபான்மையினர் அவர்களை நம்புவது திராவிட கும்பல்களுக்கு வசதியாக உள்ளது.. மொத்தத்தில் மோதியை ஆதரிப்பதே ஊழலற்ற, திறமையான நிர்வாகம் வேண்டுவோர் வேண்டுவோர் செய்ய வேண்டியது

    ReplyDelete
  6. You seems to be a Libertarian, that is socially Liberal but fiscally Conservative!

    BTB, the current republican party is becoming more libertarian nowadays. The evangelical christian wing lost its power but the Libertarian/Tea Party wings are more powerful now. Also in my opinion Indian Americans will be better of supporting republicans than the democrats as the former's polices like legal immigration/low taxes are much more relevant to indian americans then democratic party's polices like illegal immigration/welfare state.

    ReplyDelete
  7. /என் காரணங்கள் தெளிவானவை. நான் என்னை மதச்சார்பற்றவன் என்றே நினைத்துக்கொள்கிறேன். கடவுள் நம்பிக்கை அற்றவன். பாஜக அரசியல்வாதிகளின் விசித்திரமான பல கருத்துகள் எனக்குக் குமட்டலை ஏற்படுத்துபவை. / Make sure that after 30 years your wife will not say that your words are fake :)

    ReplyDelete
  8. "மோதி முஸ்லிம்களின் ஆதரவு என்ற முத்திரையைப் பெற்றபிறகுதான் பிரதமர் ஆகலாம் என்ற வீட்டோ இருந்தால் அவரால் என்றுமே இந்தியாவின் பிரதமர் ஆக முடியாது."

    ஒபாமா சட்டப்படி தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தாலும் தீவிர வலதுசாரியினர் பலர் அவரை இரகசிய முஸ்லிம் என்றும், அமெரிக்காவில் பிறக்காதவர், கென்யாவில் பிறந்தவர், ஆகையால் ஜனாதிபதியாக தகுதி இல்லாதவர் என்றும் கத்தித் திரிந்தனர். நீங்கள் சொல்லுவதுபோல் மோதி "முஸ்லிம்களின் ஆதரவு என்ற முத்திரையைப் பெற்றபிறகுதான் பிரதமர் ஆகலாம்" என்று சொன்னால் அது அமெரிக்க தீவிர வலது சாரி தேனீர் கட்சியினரின் பிரதிபிம்பமாகவே இருக்கும். ஆனால், மோதி பிரதமர் ஆவதை எதிர்ப்பவர்கள் நீங்கள் சொல்லும் காரணத்தால் அல்ல, அதாவது, முஸ்லிம்கள் அவரை ஆதரிக்கவில்லை, எனவே அவருக்கு பிரதமராக தகுதி இல்லை என்று யாரும் சொல்லுவதாக எனக்கு தெரியவில்லை.

    பா.ஜ.க வை எதிர்ப்பவர்கள் மோதியை மட்டுமல்ல, மற்ற பா.ஜ.க தலைவர்களையும் எதிர்ப்பவர்களாகவே இருப்பார்கள். ஆனால், மோதியை எதிர்ப்பதற்கு சில விஷேஷ காரணங்களும் உண்டு.

    மோதி பிரதமராவதை எதிர்ப்பவர்கள் காரணமாக காட்டுவது அவர் முஸ்லிம்களுக்கு எதிரான குஜராத் கலவரத்தில் முதல்வர் என்ற தகுதியில் தன்னுடைய கடைமைகளை முறையாக நிறைவேற்றவில்லை, மேலும், அப்பொழுது நடந்த கொடுமையில் அவருக்கே பங்கு உண்டு என்ற வாதம் சந்தேஹத்துக்கு இடமில்லாமல் நிராஹரிக்கப் படவில்லை. இந்த நிலையில் இவர் பிரதமரானால் உலக அரங்கில் இவரை தீண்டத்தகாதவராகவே கருதப்படுவார்.

    இந்த குற்றச்சாட்டுகளை முறையாக கையாண்டு எல்லோரும் ஒத்துக்கொள்ளும் வகையில் ஒரு முடிவான தீர்வை உருவாகினால், அவரை மற்ற பா.ஜ.க தலைவர்களைவிட மேலும் கடுமையாக எதிர்க்க வாய்ப்பில்லை. மேலும், பா.ஜ.க முறையாக தேர்தலில் வென்று ஆட்சியைக் கைப்பற்றினால், அவரை பிரதமராக ஏற்க (வேறு வழியில்லாமல்) எந்த தடையுமில்லை. பா.ஜ.க ஆட்சியில் இருந்தபோது அவர்கள் தேர்ந்தெடுத்த பிரதமருக்கு நாடு ஏற்றுக்கொள்ளவில்லையா என்ன? அதேபோல் அவர்கள் ஆட்சியை கைப்பற்றினால், மோதியைத் தவிர வேறு எவருக்கும் எதிர்ப்பு இருக்காது. மேற்கூறிய முக்கியமான கேள்விகளுக்கும் குற்றச்சாட்டுகளுக்கும் பெரும்பாலோரும் ஒத்துக்கொள்ளும் வகையில் பதிலளித்தால் மோதி பிரதமராவதற்கும் எந்த எதிர்ப்பும் இருக்காது. ஆனால், இந்த கேள்விகளையும் குற்றச்சாட்டுகளையும் அலட்சியம் செய்து மோதியை திணித்தால், அது இந்தியாவின் இழுக்காகவே கருதப்படும்.

    -- திலீபன்

    ReplyDelete
  9. Good one Badri sir...
    BJP is always looked as Brahmin Janatha Party. people accept Muslim parties as secular parties. Dalit parties as secular. but they dont consider BJP as secular party..
    irony..
    It is not secularism, but it is "sick"ularism followed by Congress and other parties like SP, RJD.

    As usual, now cong supported media started the non stop comedy show.."Federal Front/3rd Front"..

    ReplyDelete
  10. , தொலைநோக்குள்ள உள்கட்டமைப்பு, அழுத்தங்கள் அற்ற கல்விக்கொள்கை போன்றவற்றை முன்வைக்கும், தனிநபர் சுதந்தரத்தைக் கட்டிக்காக்கும் ஓர் அமைப்பாக, அதே நேரம் உலக அரங்கில் இந்தியாவுக்குச் சிறப்பான ஓரிடத்தைப் பெற்றுத்தரும் ஓர் அரசை மோதியால் அமைக்க முடியும் என்றும் நான் நம்புகிறேன்.

    எந்த தரவு,ஆதாரங்களின் அடிப்படையில் இந்த நம்பிக்கை

    அவருக்கு ஆதரவாக பல அறிவு ஜீவிகள் குதிக்கும் போது அவர் உயர்பதவி வாங்கி கொடுத்தது சுபாரி கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட அமித் ஷா அவர்களுக்கு.இந்த அழகில் தனி மனித உரிமைகள் மதிக்கப்படும் என்ற நம்பிக்கை சிரிப்பை தான் வரவழைக்கிறது

    பத்து ஆண்டுகளாக ஆட்சியில் மோடி குஜராத்தில் கல்வியில் சாதித்தது என்ன என்று கொஞ்சம் ஆராய்ந்து பார்த்து ஏதாவது தென்பட்டால் அனைவருக்கும் தெரிய படுத்துங்களேன்

    தனக்கு எதிரானவருக்கு பதவி தரப்பட்டது என்பதால் உதர்ப்ரதேச தேர்தல் பிரசாரத்திற்கு போகாதவர் அனைவரையும் மதித்து அரவைனைத்து செயல்படுவார் என்று உங்களை எப்படி நம்ப வைத்தார்

    பெண் கல்வி,பெண் வேலைவாய்ப்பு,ஆன்-பெண் சதவீதம்,ஏழை எளிய மக்களுக்கு கிடைக்கும் மருத்துவ வசதி ,கல்வி போன்றவற்றில் இந்த பத்து ஆண்டுகளில் சாதித்தது என்ன என்று பூதகண்ணாடி வைத்து பார்த்தாவது ஏதாவது தென்பட்டால் காட்டலாமே

    ReplyDelete
    Replies
    1. பூவண்ணன் சார் .....

      அடுத்தவங்களை குறை சொல்வதற்கு முன்னால் நம் முதுகை நாம் கொஞ்சம் திரும்பிப்பார்க்க வேண்டும்.....இஸ்லாமியர்களை கிண்டலடித்த‌தைப்பற்றி இவ்வளவு அங்கலாய்க்கும் நீங்கள் , ஹிந்துமதத்தை காலமெல்லாம் இழிவாக தூற்றி வரும் கருணாநிதியை தலையில் தூக்கி வைத்துக்கொண்டு ஆடுகிறீர்கள்...... தீராவிட இயக்க‌ங்கள் ஹிந்து மதத்தைப்பற்றி செய்த இழிவான பிரச்சாரங்கள் மோடியின் பேச்சுக்கு உறை போடக்காணாது.......

      மேலும் வாய்ப்புக்கிடைக்கும்போதெல்லாம் அமித் ஷாவை கொலைகாரன் என்கிறீர்கள்......அவர் என்ன தா.கிருஷ்ணன் . பொட்டு சுரேஷ் படுகொலை போல உட்கட்சி எதிரிகளை போட்டுத்தள்ளினாரா? இல்லை மதுரை லீலாவதியை போல மாற்றுக்கட்சியை சேர்ந்தவரை போட்டுத்தள்ளிவிட்டு கொலை காரர்களை அண்ணாத்துரை பிறந்த நாளை முன்னிட்டு விடுதலை செய்தாரா?

      இர்ஷத் ஜஹான் மற்றும் சொராபுதீன் ஆகிய இஸ்லாமிய பயங்கரவாதிகளை [ இவர்களை பயங்கரவாதிகள் என்று உறுதி செய்தது மத்திய அர‌சின் உளவு நிறுவனமான ஐ .பி ] காவல்துறை என்கவுண்டர் செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்......காரணம் , அவர் உள்துறை அமைச்சராம்.....போலீஸ் என்கவுண்டருக்கெல்லாம் உள்துறை அமைச்சர்களை கைது செய்வதென்றால் ,மத்திய உள்துறை அமைச்சர் உட்பட நாட்டின் எல்லா மாநில உள்துறை அமைச்சர்களும் உள்ளேதான் இருக்கவேண்டும்.......

      கருணாநிதி ஆட்சியில் பல ரவுடிகள் என்கவுண்ட்டர் செய்யப்பட்டுள்ள‌னர்......[ கபிலன் , சேரா ,லிங்கம் உட்பட]...ஜெ.ஆட்சிக்காலத்திலோ , சொல்லவே வேண்டாம்......வெங்க‌டேஷ் பண்ணையார் என்கவுன்ட்டர் ஒன்று போதும்......சமீபத்தில் மானாமதுரையில் ஆல்வின் சுதன் என்ற எஸ்.ஐ யை படுகொலை செய்த மூன்று ரவுடிகள் கடந்த ஐந்து மாதங்களில் மட்டும் என்கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் வெள்ளத்துரை அவர்களால் போட்டுத்தள்ளப்பட்டுள்ளனர்.............கருணாநிதி ஆட்சிக்காலத்திலும் , தற்போது ஜெ வும் தாங்களே உள்துறையை தம் வசம் வைத்துள்ளார்கள்..... இந்த என்கவுன்ட்டர்களுக்காக அவர்களை கைது செய்ய முடியுமா சி.பி. ஐ யால்?

      மோடியை சிக்க வைக்க காங்கிரஸ் பல வழிகளில் முயற்சி செய்தது......கலவரத்தை காரணம் காட்டி அவரை முடக்கிப்போட முயற்சி செய்தது........உச்ச நீதிமன்றம் அமைத்த எஸ்.ஐ.டி , மோடி மீது குற்றம் சுமத்த எந்த ஆதாரமும் இல்லை என்று கூறிவிட்டது......அந்த கடுப்பில் , மோடியின் வலது கரமான அமித் ஷாவை கைது செய்து பழி தீர்த்துக்கொண்டது காங்கிரஸ்......அவ்வளவுதான்.....

      Delete
    2. சொரபுட்தின் மனைவி கூட கடத்தப்பட்டு,பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு,உடல் எரிக்கப்பட்ட சாதனை மோடியின் குஜராதிர்க்கே உரிய தனிபெரும்பெருமை சார்.
      இதே போல மனைவியும் குற்றம் சாற்றப்பட்டவரோடு கடத்தபட்டு கொலை செய்யபடுவது, அதற்க்கு சாட்சியாக இருந்த பிரஜாபதி என்பவர் வெளிமாநில சிறையிலிருந்தாலும்,என் உயிருக்கு ஆபத்து என்று நீதிமன்றத்தில் கதறினாலும்,அங்கு இருந்து வரவழைக்கப்ட்டு போட்டு தள்ளப்பட்டது குஜரதிர்க்கும்,மோடி அரசிற்கும் ஒரு மைல் கல்.அதை குறைத்து மதிப்பிடாதீர்கள் சார்
      சலவைகள்தொழில் நடத்துபவர் சார்பாக அமித் ஷா ஆடிய ஆட்டங்கள் ,காவல்துறை உயர் அதிகாரிகளோடு தொடர்ந்து தொடர்பில் இருந்தது எல்லாம் கொஞ்சம் படியுங்கள் சார்
      அமித் ஷா மீது குற்றசாட்டு இருந்தாலும் அவர் நிரபராதி.ஆனால் தி மு க,காரரை இருந்தால் குற்றம் சாற்றப்பட்டாலே குற்றவாளி.நடத்துங்க சார் நாட்டாமையை
      குசர் பி என்ற பெயர் கொண்ட சொரபுத்தீன் மனைவியை (அவள்மேல் எந்த குற்ற பின்னணியும் கிடையாது.அவளை கடத்தி கொன்று விட்டு )இது எல்லாம் சாதாரணம் அப்பா என்று வாதிடுவது அடடா மோடி ஆதரவாளர்கள் எல்லாம் நியாய தர்மத்தில் எங்கயோ போயிட்டீங்க

      Delete
  11. அவர் பதவி வாங்கி கொடுப்பது கொலைகுற்றம் சாற்றப்பட்ட அரசியல்வாதிக்கு

    மாநில அரசியலில் தனக்கு எதிராக இருந்த சுனில் ஜோஷி ,ஹரேன் பாண்ட்யா போன்றோரை ஒதுக்க எல்லாவிதமான கீழ்த்தரமான வேலைகளையும் செய்பவர்,நாம் ஐந்து நமக்கு இருவத்தி ஐந்து என்று இஸ்லாமிய சமுதாயத்தினரை வன்மம் கொண்டு திட்டியவர்,கேவலமாக விமர்சித்தவர் தான் பிரதமர் பதவிக்கு தகுதியானவர் என்று கடவுள் நம்பிக்கை அற்றவர்,தனி மனித உரிமைகளை மதிப்பவர் நம்புவது வேதனை தான்.

    குஜராத் கலவரம் மட்டும் அல்ல ,ஒட்டுமொத்தமாக பல ஆண்டுகளாக 9 சதவீதத்திற்கு மேலிருக்கும் இஸ்லாமிய சமுதாயத்தை மொத்தமாக ஒரு இடம் கூட தராமல் ஒதுக்கியவர்,தண்டனை வழங்கப்பட்ட பஜ்ரங்கி,மாயா போன்றோருக்கு அரசு நியாயமாக செய்ய வேண்டிய மேல்முறையீடு விஷயத்தில் கூட மதவெறி இயக்கங்களுக்கு ஆதரவாக செயல்படுபவர் ,குஜராத்தில் கூட தனக்கு அடுத்த நிலைக்கு எந்த தலைவரையும் வளர விடாமல் செய்தவர்,காவல்துறையின் உயர் அதிகாரிகள் பலர் கம்பி என்ன காரணமாக இருப்பவர் நம்பிக்கை நட்சத்திரமாக லிபெர்டரியன் கொள்கைவாதிக்கு தெரிவது விந்தை தான்

    ReplyDelete
    Replies
    1. பூவண்ணன் ஐயா.......

      //தண்டனை வழங்கப்பட்ட பஜ்ரங்கி,மாயா போன்றோருக்கு அரசு நியாயமாக செய்ய வேண்டிய மேல்முறையீடு விஷயத்தில் கூட மதவெறி இயக்கங்களுக்கு ஆதரவாக செயல்படுபவர் //

      இதையெல்லாம் பேச நமக்கு எந்த அருகதையும் கிடையாது........

      கோவை குண்டு வெடிப்பு வழக்கில் விடுவிக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு எதிராக கருணாநிதி அரசு கடைசிவரை மேல்முறையீடு செய்யவில்லை....... கடைசியில் பாதிக்கப்பட்டவர்களே மேல்முறையீடு செய்தனர்......... முல்லைப்பெரியாறு விஷயத்தில் கேரள மாநில முதல்வருடன் பேச்சு நடத்தாத கருணாநிதி , மதானிக்காக பேச்சுவாரத்தை நடத்தினார்.......கோவை சிறையில் மதானிக்கு என்னென்னெ வசதிகள் வழங்கப்பட்டன என்பது குறித்து பொதுவெளியில் பேசக்கூட முடியாது......கேவலம்........

      // தனக்கு அடுத்த நிலைக்கு எந்த தலைவரையும் வளர விடாமல் செய்தவர்,//

      தொன்னூறு வயதாகியும் பதவியை விடாமல் பெற்ற மகனுக்கே தர மறுப்பவரின் ஆதரவாளர்கள் இதையெல்லாம் பேசலாமா?

      சரி......காங்கிரஸ் கட்சியில், நேரு குடும்பம் அல்லாத ஒருவரை தலைவர் பதவிக்கு நினைத்தாவது பார்க்க முடியுமா?
      அதிமுகவில் ஜெவுக்கு பிறகு யார்?

      Delete
    2. கலைஞர் கூடவே 60 வருஷமா இருக்கறவங்கள பட்டியல் போடட்டுமா .நேரு குடும்பத்திலிருந்து பிரதமர் வந்து 25 வருஷம் ஆக போவுது.ராவ் ,சிங் எல்லாம் நேரு குடும்பமா

      கவுன்சில்லர் தேர்தல்ல கூட போட்டி போடாம கூட இருந்தே குழி பறிச்சிட்டு நேரா முதல்வர் ஆன தலை நம்ம மோடி.அவர் கூடவே இருக்கறவங்க யாரையாவது காட்டுங்களேன்
      வகேலாவை கவுத்தாறு,சுரேஷ் மேஹ்தாவை துரதிட்டாறு,கேசுபாய் காலை வாரி விட்டாரு,ஜோஷிக்கு சி டி ,ஹரேன் பாண்டியாவ மேலயே அனுபிசிட்டாறு.இன்னிக்கு கூட அவர் மனைவி மோடி தான் கொலைக்காரன்ன்னு கதரறாங்க
      சொந்தமா ஒரு தொகுதியில செய்க்கறதுக்கு கூட வக்கில்லாம ,அதிக ஆதரவுள்ள எம் எல் ஏ க்களை கெஞ்சி தட்டு தடுமாறி எம் எல் ஏ ஆன காலத்திலேயே ,எதிர்ப்பு அதிகமாக இருந்தாலும் அவருக்கு மலை மாதிரி ஆதரவா இருந்தா அத்வானியை தூக்கிபோட்டு மேரிசாறு பாருங்க அடடா அவரு கூட நட்பா இருக்கறவங்களுக்கு சிலிர்த்திருக்கும்

      Delete
    3. //கலைஞர் கூடவே 60 வருஷமா இருக்கறவங்கள பட்டியல் போடட்டுமா .//

      60 வருடமென்ன......70 வருடமானாலும் கூட மட்டும்தான் இருக்கனும் ......புறங்கையை கூட நக்க முடியது......பதவின்னு வரும்போது, ஸ்டாலின் , அழகிரி , கனிமொழி , மாறன் போக ஏதாவது மிச்சம் மீதி இருந்தால்தான் மத்த‌வங்களுக்கு....இப்படி ஒரு குடும்பமே மொத்த மாநிலத்தையும் தின்னு தீர்க்கறதை விட குடும்பமே இல்லாமல் இருக்கும் மோடி ஆயிரம் மடங்கு மேல்......


      அப்புறம்........மன்மோகன் சிங் தான் இந்தியாவின் '' உண்மையான '' பிரதமரா? சொல்லவே இல்ல.......

      Delete
  12. \\\அவருக்கு ஆதரவாக பல அறிவு ஜீவிகள் குதிக்கும் போது அவர் உயர்பதவி வாங்கி கொடுத்தது சுபாரி கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட அமித் ஷா அவர்களுக்கு.இந்த அழகில் தனி மனித உரிமைகள் மதிக்கப்படும் என்ற நம்பிக்கை சிரிப்பை தான் வரவழைக்கிறது \\\

    @ Poovannan, Late Rajiv Gandhi continued to recognise the services of the likes of HKL Bhagat, Jadish Tytler, Sajjan Kumar, RK Dhawan et al et al.

    Had you ever questioned or the world at large questioned whether or not late Rajiv would honour individual rights because of such a massacre background.

    No blah blah that congress apologised and modi did not.

    \\\அவர் பதவி வாங்கி கொடுப்பது கொலைகுற்றம் சாற்றப்பட்ட அரசியல்வாதிக்கு \\\

    Congress is not much different

    \\\\மாநில அரசியலில் தனக்கு எதிராக இருந்த சுனில் ஜோஷி ,ஹரேன் பாண்ட்யா போன்றோரை ஒதுக்க எல்லாவிதமான கீழ்த்தரமான வேலைகளையும் செய்பவர்,\\\\

    Thats but Hindusthani political tool cutting across all political parties to arm twist political opponents. To single out Modi on that count just proves your grudge against Modi and that could not absolve equal measure of dirty arm twisting tactics deployed by *chal base* and living politicians.

    \\\நாம் ஐந்து நமக்கு இருவத்தி ஐந்து என்று இஸ்லாமிய சமுதாயத்தினரை வன்மம் கொண்டு திட்டியவர்,கேவலமாக விமர்சித்தவர்\\\

    just think of the deeds of late Sanjay Gandhi near Turkman Gate during emergency. But could you or any intellectual (pseudo) would ever question congress on that score or ever made them accountable for the scores of moslems (more in number count than that of modi) killed during their rule.

    ReplyDelete
  13. Many opinion polls predict that Modi factor will turn into seats in UP and Bihar. I think can BJP able to add at-least 40-60 seats of 120 seats in those hindi heartland state's.

    ReplyDelete
  14. Poovanan..

    On your question on HDI in Gujarat,there is timeline associated on this parameter. It will definitely take time to see the results on these social areas inspite of government initiatives. one has to compare the historical data of gujarat and improvement in recent years.

    It is proven Govt headed by Modi was taking lot of effort in these areas. some of actions executed are
    Chiranjeevi (to prevent infant mortality rate), Bal Sakha (Neo natal care)
    Both are operating in PPP mode. Care provided by Gynaecologists and Pedatricians who are then reimbursed by state.

    Janani Suraksha yojana (immunization coverage), Mamta abhiyan (Malnutrition assessment to Monitoring Act), Vitamin yutra poshak ahar yojana, Mamta Diwas, Beti Bachavo (to improve female gender ratio), Kanya Kelavani, Kishori Shakti yojana (to improve nutrition awarness, hygiene, healthcare of adolescent girls), Mamta Taruni Abhiyan (install adolescent friendly health centres across districts)

    ReplyDelete
    Replies
    1. 12 years are not a shorter period to show results.gender ratio in less than 5 was 883 for 1000 in 2001 and 886 in 2011 and this is the result of the golden era of modi.
      Gujarat has been dependant on other states for professional and technical manpower from doctors,nurses,professors,teachers to skilled labourers and the situation remains the same even now resulting in acute shortage ofmanpower across the state.
      karunanidhi reserved 30% jobs for females in 1989 and within years the presence of women in employment shoot up significantly.Can we compare gujarat with TN or kerala on womens education and employment.
      The IAS academy run by chennai mayor has produced more successful candidates than the total number of people who have joined central services from gujarat.The same holds true for those joining the armed and paramilitary forces.Nothing has changed under modi.

      Delete
  15. நம்ம தலை மோடி குஜராத்தை சார்ந்தவர். அங்கு எப்படி ஜனநாயக முறைப்படி வளர்ந்தார் என்று கொஞ்சம் பார்க்கலாமா
    பா ஜ க 14 மார்ச் 95இல் இருந்து ஆட்சியில் இருக்கிறது.கேஷுபாய் படேல்,வக்ஹெலா,சுரேஷ் மேஹ்தா என்று கட்சியில் பல ஆண்டு காலம் இருந்தவர்கள் எல்லாம் மோடி புண்ணியத்தில் அடித்து துரத்தப்பட்டார்கள்.
    கோஷ்டி வளர்த்த மோடியால் தான் மக்கள் ஆதரவு பெற்ற வகேலா கட்சியை உடைத்தார்,கேஷுபாய் தூக்கப்பட்டார் என்பதால் குஜராத் பக்கமே எட்டி பார்க்க கூடாது என்று மோடியை பா ஜ க தலைமை வேறு மாநிலத்துக்கு பொறுப்பாளராக துரத்தியதும் உண்டு.
    எப்படா காலை வாரலாம் என்று நம்ம EVKS மாதிரி காத்திருந்தவர் பூஹம்பம் வந்ததால் மக்களுக்கு கேஷுபாய் மீது இருந்த அதிருப்தியை தலைமையிடம் ஊதி பெரிதாக்கி திடீரென்று தலைமையின் காலை (கவுண்டமணி படத்தில் சரி என்று சொல்லும் வரை காலை விட மாட்டாரே ,அது போல)பிடித்து,காக்கா பிடித்து நேரடியாக முதல்வர் நாற்காலியில் அமர்ந்தார்.அவ்வளவு தான். ஒரு தேர்தலில் கூட நிற்காதவர் என்றாலும் போட்டியாளர்களை அழிப்பதில் தலை மோடிக்கு நிகராக வேறு யாரும் அருகில் கூட வர முடியாது
    முதல்வராக தொடர வேண்டுமானால் 6 மாதத்திற்குள் எம் எல் ஏ ஆக வேண்டும்.ஜனநாயக முறைப்படி தேர்தல் அரசியலில் இருந்திருந்து வந்திருந்தால் அவர் செல்வாக்கு உள்ள தொகுதி,பகுதிகள் இருந்திருக்கும்.ஆனால் காலை வாரி விட்டு நேரடியாக முதல்வர் ஆனவர் ஆயிற்றே .அதனால் 50000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கொண்டிருந்த பாண்ட்யாவின் தொகுதிக்கு குறி வைத்தார்.
    உடன்பட மறுத்தார் பாண்ட்யா.
    நடந்தது குஜராத் கலவரம்.தலை ஆனார் ஹிந்து சாமராட்.
    இன்றைய கைப்புள்ளையும் அன்றைய இரும்பு மனிதரும் ஆன அத்வானி மோடியின் வெறி ஏற்றும் பேச்சு,சிறுபான்மையினர் நடுங்கும் ஆட்சியினால் கவரப்பட்டு மோடிக்கு கிருஷ்ணா பரமாத்மா போலானார்.அனைத்து எதிர்ப்புகளையும் தவிடு பொடியாக்கினார்.
    ஆனால் அத்வானி ஆசைப்பட்டாலும் அப்போதே ,அடுத்த தேர்தலில் தொகுதியில் மிகுந்த செல்வாக்கோடு இருந்த பாண்ட்யாவிர்க்கு இடம் மறுத்தார்.பா ஜ க தலைமை வற்புறுத்தியும் ,அவர்களை மிரட்ட.மருத்துவமனை சென்று புகுந்து கொண்ட ஜனநாயகவாதி நம்ம மோடி.
    உட்கட்சி ஜனநாயகத்தை காக்க எப்படி எல்லாம் உழைத்து இருக்கிறார் பாருங்க நம்ம மோடி

    ReplyDelete