Sunday, July 28, 2013

சாப்பாட்டுக் கணக்கு

ஒருநாள் சாப்பாட்டுக்கு எவ்வளவு செலவாகும் என்று நான் எழுதிய பதிவைக் கண்டு பலர் பொங்கிப் புறப்பட்டுவிட்டார்கள். அதில் பலர் முதல்முறையாக என் பதிவைப் படிப்பவர்கள் என்று நினைக்கிறேன். யாரோ ஃபேஸ்புக்கில் என் பதிவை இணைத்து, அதைப் படித்துவிட்டு இங்கு வந்து குமுறியிருப்பவர்கள் பலர். மொத்தத்தில் அவர்கள் குமுறல் எல்லாமே அறிவார்ந்ததாக எனக்குப் படவில்லை. வெறும் அவுட்ரேஜ் வகையறாக்கள்.

1) உணவகத்தில் ஒருவேளை சாப்பாடு என்ன விலை தெரியுமா - வகைக் கேள்விகளை முதலில் எடுத்துக்கொள்கிறேன்.

உணவகத்தில் ஒரு தோசை என்ன விலை விற்றால் எனக்கென்ன கவலை? வீட்டில் ஒரு தோசையைச் செய்ய என்ன செலவாகிறது என்பதைத்தான் நாம் கணக்கில் எடுத்துக்கொள்ளவேண்டும். அதற்கு இடுபொருள், எரிபொருள், மின்சார விலைகளை மட்டும்தான் எடுத்துக்கொள்ளவேண்டும். சரவணபவனில் என்ன விலை, அம்மா உணவகத்தில் என்ன விலை என்றெல்லாம் ஆராய்ச்சி செய்யக்கூடாது.

2) திட்டக்குழு ஏழைமைக்கோடு பற்றிச் சொன்னதற்கும் நான் சொல்வதற்கும் சில வித்தியாசங்கள் உள்ளன.

திட்டக்குழு, ஒருவர் ஒரு நாளைக்குச் செய்யும் மொத்தச் செலவு - உணவு, காஸ்மெடிக்ஸ், துணி, மருந்து என அனைத்தையும் சேர்த்துச் சொல்கிறது. நான் உணவுக்கு, அதுவும் எனக்கு இன்று ஆகும் செலவைக் குறிப்பிட்டேன். திட்டக்குழு மதிப்பீடு கொஞ்சம் குறைவானதே. ஆனால் மிக மிக குறைவானதல்ல என்பது என் கருத்து. பொங்கிப் புறப்படுவோருக்கு வீட்டுப் பொருள்களை வாங்குவதிலோ அல்லது வீட்டு வேலைகளைச் செய்வதிலோ எந்த அனுபவமும் இல்லை என்பது நன்றாகத் தெரிகிறது.

கடந்த இரு நாள்களில், வீட்டுக்குப் பொருள்கள் வாங்கி, குடும்பத்துக்குப் பொங்கிப் போடும் சில இல்லத்தரசிகளிடம் விசாரித்துப் பார்த்தேன். என்னுடைய எஸ்டிமேட் மிகச் சரி என்பதைக் கண்டுகொண்டேன். தாம் தூம் என்று செலவழிப்போரை விடுத்துப் பார்த்தால், நான்கு பேர் உள்ள குடும்பத்துக்கு ஒரு மாதத்துக்கு 3,500 ரூபாய்க்குமேல் செலவாவதே இல்லை. சில வீடுகளில் அதிகமாகப் பழம் வாங்குவார்கள் என்றால் 4,000 வரை போகிறது. (வெஜிட்டேரியன்கள் மட்டும்.) ஆக ஒரு நாளைக்கு ஒருவருக்கு அதிகபட்சம் 30 ரூபாய்தான். இல்லை என்றால் பதிலுக்கு எனக்குக் கணக்கு காண்பியுங்கள்.

3) காங்கிரஸ் - பாஜக சண்டை.

இதைப்பற்றி எனக்கு என்ன கவலை? நான் பாஜகவை ஆதரிக்கவில்லை. மோதி பிரதமர் ஆவதை ஆதரிக்கிறேன். பாஜகவினர் சொல்வதையெல்லாம் நான் ஆதரித்துப் பேசவேண்டியதில்லை. மோதி சொல்லும் எல்லாவற்றையும்கூட நான் ஆதரிக்கவேண்டியதில்லை. அதேபோல காங்கிரஸ் தோற்கவேண்டும் என்று விரும்புகிறேன். அதற்காக அந்த அரசு சொல்லும் எல்லாவற்றையும் மறுக்கவேண்டியது என் வேலை இல்லை.

திட்டக்குழு சொல்வதற்கு ஒரு தெளிவான பின்னணி இரூக்கிறது. தெண்டுல்கர் முறைமையைப் பின்பற்றியே அவர்கள் இந்த எண்ணிக்கையைத் தருவித்திருக்கிறார்கள். அந்த மெதடாலஜியைப் படித்துப் பார்த்தேன். சரியாகத்தான் தெரிகிறது.

4) உணவு இல்லை பிரச்னை. பிற செலவுகள்தாம் பிரச்னையே. அதிலும் முக்கியமாக கல்வி, பொதுச் சுகாதாரம், போக்குவரத்து ஆகியவற்றில் உள்ள செலவுகளைக் கட்டுப்படுத்தவேண்டும். அதில் பெரும்பாலான மாநில அரசுகள் தோல்விகண்டுள்ளன. தரும் சேவையும் தரமற்று உள்ளது. நகரங்களில் வீட்டுவசதிக்காகப் பெரும் செலவு ஆகிறது. அதைப் பற்றியும் விரிவாக எழுதியுள்ளேன்.

நான் மேற்கொண்டு எழுத, விளக்க ஒன்றும் இல்லை. அவுட்ரேஜ் மட்டும் செய்ய விரும்புவோர் கொஞ்சம் உங்கள் அம்மா, மனைவி, சகோதரியிடம் உட்கார்ந்து கணக்கு போட்டுவிட்டு வந்து செய்யுங்கள்.

19 comments:

  1. உணவு விஷயத்தில் உங்கள் கருத்து சரிதான். நம்மில் பலர் மாதம் ஒரு முறையே மொத்தமாகப் பலசரக்கு வாங்குபவர்கள். பலசரக்கு+பால்+ காஸ் சிலிண்டர்+காய்கறிச் செலவு இவற்றைக் கூட்டி குடும்ப உறுப்பினரால் வகுக்க நிச்சயம் நீங்கள் சொன்னது சரிதான் என்று ஒத்துக்கொள்வார்கள்.

    ReplyDelete

  2. If consumption of Rs 24/day (at today’s prices) was the poverty norm for decades, why does Rs 32/day sound so low today? Mainly because we don’t usually think in terms of consumption per day. The average family size in India is five members. Poor people have more children, so an average poor household will have around six members. If six members consume Rs 32/day, it adds up to almost Rs 6,000 per month.

    Middle class HYPOCRICY on poverty line...
    http://swaminomics.org/middle-class-hypocrisy-on-the-poverty-line/

    Only those who can do basic maths will understand...

    ReplyDelete
  3. உங்கள் பதிலைப்படித்ததும் ஒரு சேடிஸ்சின் வாசனை அடிக்கிறது.
    வெறுத்து ஒதுக்கவேண்டி ஒரு மனிதனாக உயர்ந்து நிற்கீர்கள் வாழ்த்துகள்.

    ReplyDelete
  4. பத்ரி : உங்கள் செலவினம் எல்லாம் சரி ஆனால் உணவு முறையே தவறோ என்று நினைக்கிறேன் என்னதான் உடல் பெருத்து விட்டாலும் உடல் எடை குறைக்க வேண்டும் என்றாலும், அலோபதி டையடீசியன் சொல்லு முறைகளை இங்கு பயன்படுத்த கூடாது என்பதே என் எண்ணம். உங்கள் உணவில் சரிவிகிதமே கிடைக்காது மேலும் கஞ்சி போன்று அரைத்து கரைத்த உணவெல்லாம் இந்த வயதில் தினமும் உண்ணும் உணவல்ல. இந்திய சமையல் முறை பண்டங்களில் உடல் கட்டுகோப்பை பேண உதவும் இஞ்சி பூண்டு புதினா மல்லி தேங்காய் மஞ்சள் உணவு பொருட்கள் தினமும் உணவில் இருப்பது தான் இந்த சீதோஷ்ண நிலைக்கு நல்லது. உங்களுக்கு எளிதான உணவு உடலுக்கு வலுவும் தேவை, நீங்க செய்யும் வேலை உட்கார்ந்தே செய்வதை இருந்தாலும் இதுவே சரி அளவு வேணுமானால் குறைத்து கொள்ளலாம், சிந்திக்கவும். ஓட்ஸ் எல்லாம் சரிவிகத உணவு இல்லை அப்பறம் மற்றவர்கள் கருத்துகளை எதிர் நோக்கி.

    ReplyDelete
  5. பத்ரி, நீங்கள் நெடுனாட்களாக பதிவும் / கீச்சியும், ஃபேஸ்புக்கியும் வருகிறீர்கள். உங்களுக்கு அவசியம் கீழ்கண்டவை பற்றித் தெரிந்திருக்கும். இருந்தாலும்:

    1. பின்னூட்டஅடிப்படைவாதம் என்கிற ஒன்று இருக்கிறது. இதனுடைய அத்தை பையன் லைக்முதல்வாதமும் இருக்கிறது. இந்த அடிப்படைவாதிகள், மகாமகோகோர கந்தறகோள வாதிகள், பொதுவாக - மூளை அவர்களுக்கு இருக்கிறது என்பதை மறந்து - அதனை மறுத்து மட்டுமே செயல்படுபவர்கள். தடக்புடக்கென்று சம்பந்தமில்லாமல் - அடிப்படை வாதமுறைகள் தெரியாமல், அடிப்படைக் கணக்குபற்றி அறியாமல், என்ன சொல்ல வருகிறீர்கள் எனப் புரிந்துகொள்ளவே முடியாமல் முட்டியடி எதிர்வினைகளை அளிப்பவர்கள். ஒன்றுமே தெரியாமல், மீயறிதல் கிட்டவே போகாமல், சிந்தனைகள் இல்லாமல் சும்மனாச்சிக்கும் ‘பள்ளம் ரொம்பிச்சு’ செய்பவர்கள் - அது கொடுக்கும் லாகிரியில் மிதப்பவர்கள்.

    உதாரணத்துக்கு உங்களுடைய ’ஒரு நாள் சாப்பாட்டுக்கு எவ்வளவு பணம் தேவைப்படும்?’ பதிவின் பெரும்பாலான எதிர்வினைக்காரர்கள். ஆனால், ஏன் இவர்களை பொருட்படுத்த வேண்டும்? காதுகளைத் திருகி, கன்னத்தில் செல்லமாக ரெண்டு அறை விட்டு, ’யோசீங்கடா, சுயானுபவம் - சுயசிந்தனை சார்ந்த தரவுகளை எடுத்து வாதிடுங்கடா’ என்று சொல்லாமல் ஏன் விலாவாரியாக மறுபடியும் மறுபடியும் உங்கள் தரப்பைச் சொல்லிக் கொண்டிருக்கவேண்டும்.

    2. இந்த அடிப்படைவாதிகளுக்கு நகைச்சுவை உணர்ச்சியும், கிண்டலைப் புரிந்துகொள்ளும் தன்மையும், பகடியை ரசிக்கும் மனப்பான்மையும், அங்கதச் சுவையையுணர்தலும் இல்லவே இல்லை. உதாரணத்திற்கு - உங்கள் கீச்சல்களில் ஒன்றுக்கு வந்துள்ள ஃபேஸ்புக் வழியான பெரும்பாலான எதிர்வினைகள்: https://www.facebook.com/badriseshadri/posts/675823329101740

    நான் ஒரு பின்னூட்டமட்டுறுத்தல்அடிப்படைவாதி. முடிந்தவரை இம்மாதிரி ஆட்களை அனுமதிப்பதில்லை. ;-)

    ஆனால், உங்களுக்கு நகைச்சுவை உணர்ச்சி கொஞ்சம் அளவுக்கதிகமாக இருப்பதனால்தான், நீங்கள் தொடர்ந்து இப்படிப்பட்ட பகிரல்கள் செய்கிறீர்களோ, பதிவுகள் எழுதுகிறீர்களோ என்னவோ? 8-)

    பின்குறிப்பு: எனக்கும் நீங்கள் சொல்லும் கணக்கு போலத்தான் (சுமார் ரூ 3900/- என் குடும்பத்தில் உள்ள நால்வருக்கு) மாதாந்திர உணவுக்குச் செலவாகிறது. நான் ஒரு நாளுக்குக் குறைந்தபட்சம் மூன்று மணி நேரம் உடலுழைப்பு செய்பவன் - தோட்டவேலை, பட்டறை வேலை முதலியன போல. சாகபட்சிணி.

    ReplyDelete
  6. I also shared that article in FB, I didn't expect that will create this many difference of opinion.

    Makeshprabu

    ReplyDelete
  7. Dear Badri,

    Don't you think it is more important to see how much food costs as a fraction of income? Recently USDA released a chart for different countries that was recently covered by The Economist (http://www.economist.com/blogs/graphicdetail/2013/03/daily-chart-5). Actually your item # 4 directly stems from this.

    With Regards
    Narasimhan

    ReplyDelete
  8. கஞ்சி சாப்பிடுவது சரியா, ஓட்ஸ் சாப்பிடுவது சரியா என்ற பிரச்சினைக்குப் போக நான் விரும்பவில்லை. ஆனால் உங்கள் சாப்பாட்டுச் செலவும் கணக்கு அனேகமாகச் சரியே. நான் ஓய்வு பெற்றதற்கு முன்னர் வீட்டுச் செலவுக் கணக்கு என் கையில் இருந்தது ஆகவே என்னால் இது பற்றிக் கூற முடியும்.
    நமது உணவில் இடம் பெறும் அயிட்டங்களில் எண்ணெய், பால் பருப்பு காய்கறி ஆகியவற்றுக்கு ஆகும் செலவு தான் மிக அதிகம்
    .பருப்பு, எண்ணெய், காய்கறி ஆகியவற்றின் விலைகளை ஒரு பெரிய கொள்ளை லாபக் கும்பல் நிர்ணயிக்கிறதோ என்று சந்தேகிக்க வேண்டியிருக்கிறது.இந்த மூன்றுக்கும் ஆகும் ( பாலையும் சேர்த்துக் கொள்ளலாம்) செலவை யாரேனும் ஏற்றுக்கொண்டால் உணவுச் செலவு பெருமளவுக்கு குறைந்து விடும்.
    அமெரிக்காவில் உணவுக்கு ஆகும் செலவு எப்போதும் குறைவு. போக்குவரத்துச் செலவும் குறைவு. எரிபொருள் விலையும் குறைவு. இவை குறைவாக இருக்கும்படி அரசு பார்த்துக் கொள்கிற்து.
    இந்த நாட்டிலோ வீட்டு வாடகை, போக்குவரத்துச் செலவு, எரிபொருள் செலவு, பால், பருப்பு, சமையல் எண்ணெய் ஆகியவற்றின் விலைகள் மேலும் மேலும் பயங்கரமாக உயர்ந்து கொண்டே போகின்றன. ஆனால் இதைத் தடுக்க அரசு தவறி விட்டது. அரசிடம் அதிகாரம் இருக்கிறது. ஆனால் ஓட்டு போய் விடும் என்ற பயம் காரணமாக அரசு(கள்) மக்கள் படும் கஷடத்தைஅக் க்ண்டு கொள்ளாம்ல் உள்ளது.

    ReplyDelete
  9. WELL SAID BADRI.
    IF WE COOK AT HOME OUR EXPENSES ARE GREATLY REDUCED; MOST OF THE TIFFIN ITEMS IN HOTELS ARE MADE FROM RICE THAT IS PROCURED ILLEGALLY FROM THE FAIR PRICE SHOPS. THIS IS THE TRUTH.
    BALA

    ReplyDelete
  10. I live in city. For a family of 2 adults, even if you high quality ingredients,groceries plus vegetables and fruits cost maximum 3k per month.1500 per person per month which is 50 rs daily. I agree 100% with your article.

    ReplyDelete
  11. A friend in Facebook, Karthikeyan (whose family is involved in grocery store business) has sent me a detailed working, how much it will cost for food a day per person. I will post it in Google docs and link the data here. The number he has derived is, if vegetarian Rs. 41 per day per person and if non-vegetarian, Rs. 47.

    ReplyDelete
  12. I totally agree with Badri.. My expenses for 4 members only for Food is approximately Rs 4500 to Rs 5000 pm.

    ReplyDelete
  13. வளரும் குழந்தைகளுக்கும், வயது முதிர்ந்தவர்களுக்கும் அதிக ஊட்டச்சத்து மிக்க, முக்கியமாக புரதச் சத்து மிக்க உணவு வகைகளான மீன், கோழி, இறைச்சி மிக அவசியமாகின்றது. அந்த வகை உணவுகள் இல்லாதனால் மூளையும் உடலும் வலுவில்லாமல் உடலின் இடைப்பகுதி பெருத்து கிடப்பவர்கள் தான் இந்தியர்கள்.

    குட்டிக் குட்டி ஆப்பிரிக்க ஏழை நாடுகளிலிருந்து வரும் வீரர்கள் கூட பதக்கங்கள் வெல்லும் ஒலிம்பிக்ஸில் ஒரு பதக்கம் வெல்லவே 100 கோடி இந்தியர்களுக்கு நாக்கு தள்ளிவிடுகிறது. ஊட்டச்சத்து குறைபாட்டுடனேயே (முக்கியமாக புரதச் சத்து குறைபாடு) வளரும் இந்தியர்கள் சோம்பேரிகளாக டயபிடிக்குகளாக இருப்பதில் வியப்பேதும் இல்லை. அதிலும் ஒரு நாளைக்கு 50 ரூபாயில் 2 பேர் சமைத்துச் சாப்பிட்டுவிடுவார்களாம். என்ன சாப்பிடுவார்கள் ? சோறு. சோறுடன் மிச்சர், கடலை, அப்பளம் என்று வருத்தது பொரித்தது!

    நீங்கள்ல்லாம் 60 வயதில் சாவாமல் உயிருடன் இருப்பதே medical miracle


    ReplyDelete
    Replies
    1. பொன்.முத்துக்குமார்Wed Jul 31, 10:43:00 PM GMT+5:30

      இபப்டீல்லாமா அபத்தமா ஒருத்தங்க யோசிப்பாங்க ?

      யப்பா ! ராசா !! புரதம், மீன், கோழி, இறைச்சி-ல மட்டும் இல்லப்பா. சைவ உணவுகள்-ளயும் இருக்கு. (சோயா, சோயா-ன்னு ஒண்ணு கேள்விப்பட்டதே இல்லையா ?)

      உடலின் இடைப்பகுதி பெருத்துக்கிடப்பதுக்கு மீன், கோழி, இறைச்சி சாப்பிடாதது காரணம்-ன்னு கண்டுபிடிச்ச உமக்கு அடுத்த நோபல் பரிசுதான் தரணும். 'மீன், கோழி, இறைச்சி' தினமும் சாப்பிடற அமெரிக்கா-ல வந்து பாருங்க கண்ணா, உடலின் இடைப்பகுதி பெருத்துக்கிடப்பவங்க எவ்ளோ பேருன்னு.

      மட்டுமில்லாம, இந்தியர்கள் மீன், கோழி, இறைச்சி சாப்பிடாதவங்க-ன்னு உங்களுக்கு யாருங்க சொன்னது ? எத்தன சதவீதம் இந்தியர்கள் அசைவ உணவுக்காரர்கள்-ன்னு இந்த லிங்க்-ல படிச்சி பாருங்க.

      இந்திய அசைவ உணவு சதவீதம்

      அதே மாதிரி ஒலிம்பிக்ஸ்-ல தங்கம் வாங்காம இருக்கறதுக்கு, வேறு வேறு காரணங்கள் உண்டு. மிக முக்கியமா நா நினைக்கிறது, நம்மில் பெரும்பான்மையானவர்கள், விளையாட்டுல ஜொலிக்க நம் முன்னிருக்கும் 'ஆர்வம், முயற்சி, கடுமையான தொடர் பயிற்சி'-ங்கிற சவாலை சந்திக்க தயாராக இல்லை-ங்கிறதுதான். நாம மீன், கோழி, இறைச்சி சாப்பிடாம இருக்கறதுக்கும் அதுக்கும் சம்பந்தம் இருக்கறதா எனக்கு தெரியலை. முடிஞ்சா அறிவியல்பூர்வமா நிரூபிக்கவும்.

      ஜவகல் ஸ்ரீநாத்-ன்னு ஒரு கிரிக்கெட்காரர் கேள்விப்பட்டிருக்கிறீரா ? கர்நாடகா-காரர். வேகப்பந்து வீச்சாளரா இந்திய அணில கலக்கினார். அவர் வீசின பந்துகள் உலகின் முன்னணி மட்டையாளர்கள் அனைவருக்கும் கலக்கத்த ஏற்படுத்தினவை.

      அவர் சைவ உணவுக்காரர்தான்.

      Delete
  14. முத்துகுமார் சார் பால் ,தயிர் ,மோர்,வெண்ணை.நெய் என்று அடித்து விளையாடுபவர்களை சைவர்கள் என்று கூறி முழுமையாக மிருக உணவுகளை தவிர்ப்பவர்களை அவமானபடுத்த கூடாது

    பால் பாலூட்டிகளிடம் சுரப்பது அதன் குட்டிகளுக்காக தான்.அதை பறித்து கொண்டு ,ருசித்து கொண்டே சைவம் என்று சொல்வது மிகவும் அநியாயம்

    ReplyDelete
  15. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  16. பத்ரி சார்

    17வது பின்னூட்டம் நான் எழுதியது கிடையாது.
    ஒரே பெயரில் ,நான் எழுதியது போல ஏன் பின்னூட்டதிற்கு தொடர்போடு கீழ்த்தரமாக எழுதுவது ஏன் என்று தெரியவில்லை .தயவு செய்து உடனே அந்த மெயில் id பற்றி எனக்கு தகவல் அளிக்கவும்
    அது எந்த மெயில் id இல் இருந்து வந்தது என்பதை தெரிவித்தால் புகார் செய்வேன்.அதை நீக்கி விடுங்கள்

    ReplyDelete
    Replies
    1. பூவண்ணன்: அந்தப் பின்னூட்டத்தை அழித்துவிட்டேன். நான் பின்னூட்டங்களை அஞ்சல் வழியாகப் பெறுவதில்லை. அவை என் blogger பக்கத்தில் இருக்கும். அங்கு வந்து, spam தவிர்த்து மிச்சமுள்ள அனைத்தையும் பெரும்பாலும் ஏற்றுக்கொண்டுவிடுவேன். அந்தக் குறிப்பிட்ட பின்னூட்டம் Name/URL என்ற வழியைப் பயன்படுத்திப் போட்டதாக இருக்கும். ஆனால் அதனை நீக்கவேண்டுமானால் Anonymous பின்னூட்டங்கள் எதுவுமே வரமுடியாது. என் பதிவில் பின்னூட்டம் எழுதுபவர்கள் பெரும்பாலானோர் அனானிமஸாக வந்து எழுதுபவர்கள்தான். இம்முறை abuse செய்யப்பட்டால், அதனை நிறுத்தத் தயங்கமாட்டேன்.

      Delete