Saturday, July 06, 2013

இளவரசன் - திவ்யா - விடுதலைச் சிறுத்தைகள் - பாமக

நேற்றி இரவு தந்தி டிவியில் ‘ஆயுத எழுத்து’ விவாதத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், பாமக மாநில பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன் ஆகியோருடன் நானும் கலந்துகொண்டேன்.

இளவரசன் மரணம் குறித்த சர்ச்சைதான் தலைப்பு என்றாலும் விவாதம் பெரிதும் பாமகவின் நிலைப்பாடு குறித்தே நிகழ்ந்தது. முக்கியமான சில விஷயங்களைப் பற்றி மட்டும் இந்தப் பதிவில் குறிப்பிடுகிறேன்.

வடிவேல் ராவணனின் முக்கியமான குற்றச்சாட்டு, வட மாவட்டங்களில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியுடன் தொடர்புகொண்ட பறையர் இளைஞர்கள் முக்கியமாக வன்னியர் பெண்களைக் குறிவைத்து அவர்களைக் காதல் நாடகம் என்ற வலைக்குள் வீழ்த்தி, அதைக் கொண்டு பணம் பறிக்க முற்படுகிறார்கள் என்பதே. இம்மாதிரியாக வட மாவட்டங்களில் ஒவ்வோர் ஊரிலும் பத்து பத்து வழக்குகளையாவது காணலாம் என்றார். இதுமாதிரியான நிகழ்வுகள் தென் மாவட்டங்களில் நடப்பதில்லை என்றார். தேவேந்திரகுல வெள்ளாளர்கள் எனப்படும் பள்ளர்கள் பல சாதிகளைச் சேர்ந்தவர்களையும் திருமணம் செய்துகொண்டு பிரச்னையில்லாமல் இருக்கிறார்களாம். ஆனால் வட மாவட்டத்தில் பறையர்கள்தான், அதுவும் குறிப்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியுடன் தொடர்புள்ளவர்கள்தான் மேலே குறிப்பிட்ட பணம் பறிக்கும் செயல்களில் ஈடுபடுகிறார்களாம்.

முதலில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த, ஒரு குறிப்பிட்ட இயக்கத்தைச் சேர்ந்த என்றெல்லாம் குறிப்பிட்டார். நான் நேரடியாக, ‘நீங்கள் யாரைச் சொல்கிறீர்கள், விடுதலைச் சிறுத்தைகளையா?’ என்று கேட்டேன். அதற்கு, ‘விடுதலைச் சிறுத்தைகள்தான்’ என்று தெளிவாகச் சொன்னார்.

இதே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியுடன் பாமகவுக்கு நல்ல கூட்டணியும், அதையும் தாண்டி இரு கட்சியின் தலைவர்களிடமும் நெருங்கிய உறவும் இருந்ததே, அப்போதெல்லாம் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்கவில்லையா, கடந்த ஓரிரு வருடங்களில்தான் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்கின்றனவா என்று கேட்டேன். முன்னும் இதுபோன்ற நிகழ்வுகள் நடந்துகொண்டிருந்தன, ஆனால் நல்லுறவு வேண்டுமே என்ற காரணத்தால் உறவைத் துண்டிக்காமல் இருந்தோம் என்றார்.

சரி, திவ்யா-இளவரசன் விவகாரம் இப்படிப்பட்டதுபோலத் தெரியவில்லையே, எந்த இடத்திலும் திவ்யா அவ்வாறு குற்றம் சாட்டவில்லையே என்றேன். இல்லை, இந்த திவ்யா-இளவரசன் உறவும் நாடகக் காதல்தான்; இங்கேயும் ஐந்து லட்ச ரூபாய் கேட்டார்கள்; இரண்டு லட்ச ரூபாய் கொடுக்கவும் பட்டது என்றார் வடிவேல் ராவணன்.

***

இவை மிகவும் காட்டமான குற்றச்சாட்டுகள். ஃபேஸ்புக் பக்கத்தில் வைக்கப்படும் இதேபோன்ற குற்றச்சாட்டுகளைத் தாண்டி நேரலைத் தொலைக்காட்சியிலேயே ஓர் அரசியல் கட்சியின் பொறுப்புமிக்க தலைவர் இதுபோன்ற குற்றச்சாட்டுகளை வைத்திருக்கிறார். இவற்றில் எந்த உண்மையும் இல்லை என்றும் தம் கட்சி இதைப்போன்ற செயலில் ஒருபோதும் ஈடுபடவில்லை என்றும் சொல்லவேண்டியது விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு அவசியமாகும்.

தனி நபர் செயல்பாடுகளை ஒரு சமுதாயத்தின்மீதும் ஒரு கட்சியின்மீதும் ஏற்றி, சதித்திட்டம் தீட்டப்பட்டே இம்மாதிரி செயல்களில் ஒரு குறிப்பிட்ட மக்கள் ஈடுபடுகின்றனர் என்று ஆதாரம் இன்றிச் சொல்வது அபாண்டமானது. உண்மையிலேயே இம்மாதிரியெல்லாம் நடந்திருந்தால் அவற்றைத் தொகுத்து ஒரு வெள்ளையறிக்கையை ஏன் உங்கள் கட்சி வெளியிடக்கூடாது என்று வடிவேல் ராவணனிடம் கேட்டேன். பாமக அவ்வாறு செய்யுமா என்று பார்ப்போம்.

இளவரசன் - திவ்யா என்ற இரு தனி நபர்களின் காதல், இவ்வளவு பெரிய கொடுஞ்செயலாக இரு சமூகத்தின்ரிடையே பகைமையைத் தூண்டும் அளவுக்கு மாறியிருப்பது மிகவும் பயம் தரக்கூடியதாக இருக்கிறது.

14 comments:

  1. பாராட்டுக்கள் பத்ரி. நீங்கள் கேட்டிருப்பது நியாயமான கோரிக்கை.

    ஆனால், இதை கேட்டிருக்க வேண்டியது விடுதலைச் சிறுத்தைகள் கட்சி. இந்தக் குற்றச்சாட்டு பொய் என்றால் நிச்சயம் அவர்கள் இப்படிப்பட்ட கோரிக்கையை முன்வைத்திருப்பார்கள்.

    ReplyDelete
  2. ஒரு ரெண்டு வருசத்துக்கு தமிழ்நாட்டில் இரண்டு பக்கமும் இருக்கின்ற ஒரு நூறு பேர்களை அந்தமான் செல்லுலார் ஜெயிலில் போட்டு விட்டு அந்த சாவியை தொலைத்து விட்டு வந்து விட்டால் போதும்ன்னு நினைக்கின்றேன்.

    இது போன்ற பயம் தரக்கூடிய பிரச்சனைகள் கொஞ்சமாவது மாறிடும்ன்னு நினைக்கின்றேன்.

    ReplyDelete
  3. I feel It is unnecessary to ask VC to give a reply. PMK want to make the issue bigger, by giving reply for every comment of PMK will give them chance to make it big. so its better to keep silence.

    ReplyDelete
  4. இராவணன் சொல்வதில் உண்மை இருக்கிறது. வேண்டுமானால், பொது நல உண்மை விரும்பிகள், வடமாவட்டங்களில் கள ஆய்வு செய்து பக்க சார்பற்ற நிலவரத்தை வெளியிடட்டும்.

    ReplyDelete
  5. rrmercy, here is your link

    http://www.cinekolly.com/2013/07/ayutha-ezhuthu-05-07-2013-thanthi-tv.html

    ReplyDelete
  6. இந்த வீடியோவை பாருங்கள் https://www.youtube.com/watch?v=oEoCRVBQz34

    இந்த மாதிரி பிரச்சாரங்கள் இல்லையென்றால் இதெல்லாம் சாதாரண காதல் நிகழ்வுகள் தான் என போகலாம். ஆனால் இதை ஒரு பிரச்சாரமாக முன்னெடுக்கும் போது எதிர் தரப்பும் எதிர்வினையாற்றுகிறது. இந்த வீடியோவில் பேசும் ஒருவர் வக்கீல் ரஜனிகாந்த். இவர் தாம் இளவரசனின் வக்கீலும் கூட.

    திருமாவும் இப்படி பேசியதாக சொல்கிறார்கள். ஆனால் வீடியோ ஆதாரம் இல்லை.

    ReplyDelete
  7. //இவற்றில் எந்த உண்மையும் இல்லை என்றும் தம் கட்சி இதைப்போன்ற செயலில் ஒருபோதும் ஈடுபடவில்லை என்றும் சொல்லவேண்டியது விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு அவசியமாகும்.//

    பணம் கொடுக்கப்பட்டதற்கு ஆதாரம் தந்து நிரூபிப்பது முதலில் பாமக / திவ்யா தரப்பின் கடமை. அதற்கு பிறகு தான் விடுதலை சிறுத்தைகளையோ இளவரசன் குடும்பத்தையோ இது குறித்து விளக்கச் சொல்லும் உரிமையே நமக்கு வருகிறது. போகிற போக்கில் சில லட்சங்கள் கைமாறின என்று ஒருவர் சொல்வதை சீரியஸாக எடுத்துக்கொண்டு எதிர்தரப்பு மெனக்கெட்டு அப்படி நடக்கவில்லை என நிரூபிக்க வேண்டும் என்று நாம் எதிர்பார்ப்பதே தவறான அணுகுமுறை அல்லவா!

    ஒருவேளை போலீஸோ பொதுமக்களோ அந்த‌ அடிப்படையுமின்றி அப்படி எதிர்பார்த்தால் அது மிக மோசமான முன்னுதாரணமாக ஆகி விடும். நாளை யார் வேண்டுமானாலும் யார் மீது வேண்டுமானாலும் இது போன்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை வைத்து விட்டு அவர்களை இல்லை என நிரூபிக்கச் சொல்லி அலைய வைப்பர். தர்க்கப்படி பார்த்தால் கூட இன்ன விஷயம் நடந்தது என‌ நிரூபிப்பதே சரியான வழி; நடக்கவில்லை என நிரூபிக்கக் கேட்பதை விட.

    ReplyDelete
  8. my take. http://suryaprakashv73.blogspot.in/2013/07/two-lives-and-two-political-parties.html

    ReplyDelete
  9. // இவற்றில் எந்த உண்மையும் இல்லை என்றும் தம் கட்சி இதைப்போன்ற செயலில் ஒருபோதும் ஈடுபடவில்லை என்றும் சொல்லவேண்டியது விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு அவசியமாகும்.//

    பத்ரி நீங்கள் விடுதலைச் சிறுத்தைகள் என்ன பதில் சொல்லவேண்டும் என்பதை நீங்களே சொல்லி இருக்கிறீர்கள் எனவே நீங்கள் எந்தப்பக்கம் இருக்கிறீர்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது. ஏன்? நீங்களே அப்படி சொல்லிவிடுங்களேன். திருமாவளவனின் ஊதுகுழலாக........

    ReplyDelete
  10. இளவரசனை இழந்து தவிக்கும் எனது குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். -இளவரசன் தந்தை

    மகன் இறந்ததை காரணம் காட்டி இழப்பீடு கேட்கும் இவர் ஏன் பேரம் பேசி இருக்க மாட்டார் என்ற கேள்வி சாதரணமாக எழுகிறது பத்ரி. இவர் ஒன்றும் வேலை இல்லாமல் இருப்பவர் இல்லை. இவர் தருமபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பிரேதப் பரிசோதனை துறையில் ரிப்போர்ட்டர் எனும் வேலை பார்த்து வருகிறார். மேலும் இறந்த இவரது மகன் வேலை தேடிக்கொண்டு இருந்தவன் தான் என அறிகிறேன்.

    தமிழ்நாட்டு மக்களின் தற்போது மனநிலை எதற்கு எடுத்தாலும் இழப்பீடு கேட்கும் வழக்கம் இயற்கை பெரழிவில் தொடங்கி காவேரி நீர், புயல் என்று தொடர்கிறது. இனி தனி மனித சாவிற்கும் இது முதல் ஆரம்பம்.

    அந்த இளைஞனின் இழப்பு என்பது வருந்ததக்கது தான். ஆனால் இது பல முறையற்ற செயல்களுக்கு தொடக்கமாக இருக்ககூடாது. உழைக்கும் நடுத்தர மக்களிடம் இருந்து அரசுக்கு வரும் வருமானம் இப்படி இழப்பீடுகளாகவும் இலவசமாகவும் ஒரு சிலருக்கு சேருவது எப்படி நியாயமாகும்?

    ReplyDelete
    Replies
    1. Darmapuri case: A police officer said that usually the money demanded is anywhere between Rs 1 lakh and Rs 3 lakh.

      Read following link for more details,

      http://www.deccanchronicle.com/130712/news-current-affairs/article/dc-special-here-love-gets-fixed%E2%80%99?page=show

      Delete
  11. வணக்கம்...

    உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/07/blog-post_14.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    ReplyDelete
  12. http://www.deccanchronicle.com/130712/news-current-affairs/article/dc-special-here-love-gets-fixed%E2%80%99?page=show

    ReplyDelete