Friday, September 13, 2013

ஸ்லிப்

நான் பள்ளிக்கூடம் படித்துக்கொண்டிருக்கும்போது அதிகாலை எழுந்து பாடம் படிக்க ஒரேயொரு காரணம் மட்டுமே இருந்தது. ஆஸ்திரேலிய வானொலியில் கிரிக்கெட் நேர்முக வர்ணனை கேட்க முடியும் என்பதுதான் அது. ஆஸ்திரேலியா யாருடன் விளையாடினாலும் அந்த ஆட்டங்களின் வர்ணனையைக் கேட்பது என் வழக்கம்.

ஆஸ்திரேலியா பாகிஸ்தான் டெஸ்ட் மேட்ச் அது. ஆட்டம் எங்கே நடந்தது என்ற ஞாபகமெல்லாம் இப்போது இல்லை. கார்ல் ராக்கமென் என்ற ஆஸ்திரேலியப் பந்துவீச்சாளர். அவர் பந்து வீசும்போது தடுப்பாளர் வியூகத்தில் எழு ஸ்லிப் வைக்கப்பட்டுள்ளது என்றார் வர்ணனையாளர். இது எனக்குப் புரியவில்லை. எதற்கு ஒரு பந்துவீச்சாளருக்கு ஏழு ஸ்லிப் வேண்டும்? தொலைக்காட்சி பார்க்காத காலகட்டம் என்பதால் என்னால் ஆட்ட நிலையைப் புரிந்துகொள்ள முடியவில்லை.

நான் நேரில் பார்த்த எந்த ஆட்டத்திலும் (அதாவது நாகப்பட்டினம் அவுரித் திடல் அல்லது வலிவலம் தேசிகர் பாலிடெக்னிக் அல்லது உப்பாற்றுத் திடல்) ஒரு ஸ்லிப்புக்கே வேலை இருக்காது. இந்தியா விளையாடும் ஆட்டங்களில் கபில் தேவ் பந்துவீசும்போது முதல் சில ஓவர்களில் அல்லது புதுப்பந்து எடுக்கும்போது மூன்று ஸ்லிப்புகள்வரை வைத்திருப்பார்கள். இப்படி விக்கெட்கீப்பர் பக்கத்தில் ஏழு பேர் நின்றால் மிச்சம் இரண்டு பேர்தான் பாக்கி. அவர்களில் ஒருவர் ஆஃப் சைடிலும் ஒருவர் ஆன் சைடிலும் முன்பக்கம் நிற்கிறார்கள் என்றால் ரன்களை எப்படித் தடுப்பது?

தொலைக்காட்சியில் கிரிக்கெட் பார்க்கத் தொடங்கியபின்னும் இந்தக் கேள்வி மண்டையைக் குடைந்துகொண்டே இருந்தது. உண்மையிலேயே ஒரு வேகப்பந்து வீச்சாளருக்கு எத்தனை ஸ்லிப்புகள் வேண்டும்? வேகம் மட்டும்தான் இதனை முடிவு செய்கிறதா அல்லது பந்தின் ஸ்விங் இதில் சேர்த்தியா? சும்மா மட்டை பிடிப்பவரைப் பயமுறுத்த என்றே ஸ்லிப்புகளை அதிகப்படுத்துகிறார்களா? நான்கு ஸ்லிப், ஒரு கல்லி என்று ஃபீல்டிங் செட் அப் வைத்துவிட்டால், வீசுபவர் பயங்கர வேகத்தில் வீசப்போகிறார் என்று பேட்ஸ்மேன் பயந்து நடுங்கிவிடுவார் என்று எதிர்பார்க்கிறார்களா?

நான் கிரிக்கெட்டை உன்னித்துப் பார்க்கும் காலத்தில் இந்தியா நோஞ்சான் அணியாகவே இருந்தது. காவஸ்கர், கபில் தேவ் என்ற இருவர்தான் உலகத்தரம் வாய்ந்தவர்கள் என்றும் பிறர் எல்லாம் 11 பேர் வேண்டுமே என்பதற்காக அணியில் இருக்கிறார்கள் என்றுமே நினைத்துக்கொண்டிருந்தேன். நான் கிரிக்கெட்டைக் கவனிக்கத் தொடங்கி சீக்கிரமே விஸ்வநாத் ரிட்டயர் ஆகிவிட்டார். வெங்க்சர்க்கார் அப்போது பெரிய பெயர் பெற்றிருக்கவில்லை. இன்று இந்தியப் பொருளாதாரத்தைப் பார்க்கும்போது ஏற்படும் பயம்தான் அப்போது இந்திய கிரிக்கெட் அணியைப் பார்த்தபோது எனக்கு ஏற்பட்டு வந்தது. அப்போது பெரும் வயிற்றெரிச்சலே பாகிஸ்தான் அணி மீதுதான். அதுவும் அவர்களுடைய வேகப்பந்து வீச்சாளர்கள்மீது. மாமிச உணவு, இஸ்லாம் தரும் முரட்டுத்தனம் என்றெல்லாம் ஏதேதோ கற்பனைகள் இருந்தன. அதுவும் மிகக் கடுப்பாவது அவர்கள் வியூகத்தில் இருக்கும் ஸ்லிப்புகளின் எண்ணிக்கை. ஸ்லிப்புகளின் எண்ணிக்கை ஏதோ ஒருவிதத்தில் ஆண்மையின் அடையாளம் என்பதாகவே எனக்குப் பட்டது.

அதனாலேயே கார்ல் ராக்கமென் ஏழு ஸ்லிப் வைத்து பாகிஸ்தானியர்களுக்கு எதிராகப் பந்து வீசி அவர்களைக் கதற அடித்தது உள்ளூர சந்தோஷமாக இருந்தது. அதையே ஓர் இந்தியப் பந்துவீச்சாளர் செய்திருந்தால் இன்னமும் அதிகமாக மகிழ்ந்திருப்பேன்.

கொஞ்சம் கிரிக்கெட் புரிய ஆரம்பித்தபின்னரும் ஸ்லிப் மீதிருந்த மோகம் போகவில்லை. இப்போதும் ஒரு டெஸ்ட் மேட்ச் ஆரம்பித்து முதல் ஓவரில், நான்கு அல்லது ஐந்து ஸ்லிப், ஒரு கல்லி, ஒரு பாயிண்ட், ஒரு கவர் என்று வைத்து சும்மா ஒப்புக்கு ஆன் சைடில் ஒரேயொரு மிட்விக்கெட் அல்லது மிட் ஆன் வைத்து, புத்தம் புது சிகப்புப் பந்துடன் வேகப் பந்துவீச்சாளர் ஓடிவந்து பந்துவீசும்போது ஒரு சிலிர்ப்பு ஏற்படும். இந்த மைதானமே உன் முன்னால் இருக்கிறது; தெம்பு இருந்தால் காலை முன்னேயோ பின்னேயோ மாற்றி வைத்து நேராக அடித்துப் பார் என்று வேகப் பந்துவீச்சாளர் விடும் அறைகூவல் அது. என் வேகத்தையும், துல்லியத்தையும், பந்தின் வளைவையும் உன்னால் கணிக்கவே முடியாது; அப்படியே கணித்தாலும் அந்தப் பந்தை விட்டுவிடுவதுதான் உனக்கு நல்லது; ஏனெனில் தொட்டால் உன்னைக் கவ்வ ஆறு பேரை நியமித்திருக்கிறேன் என்கிற அகங்காரம் அது. மிஞ்சி மிஞ்சிப் போனால் உன் மட்டையின் விளிம்பைத் தொட்டு ஸ்லிப்பின் தலைக்குமேல் எகிறிச் சென்று நான்கு ரன்கள் கிடைக்கலாம்; ஆனால் உன்னைத் தவறு செய்ய வைத்துவிட்டேன் என்ற வெற்றியும் எனக்குத்தான் என்கிற கர்வம்.

இந்த மாதிரி எதிரணியினரை வெகுசில இந்தியப் பந்துவீச்சாளர்களே பயமுறுத்தியுள்ளனர். ஜவகல் ஸ்ரீநாத், கொஞ்சம் இஷாந்த் ஷர்மா. நம் வேகப்பந்து வீச்சாளர்கள் பலரும் மிதவேகத்துக்குமேல் செல்வதில்லை. அப்படியே வேகமாக வீசுபவர்களையும் அணிப் பயிற்சியாளர் கீழே இறக்கிவிடுகிறார்போல.

சுழல்பந்தா, வேகப்பந்தா எது நமக்கு ஏற்றது என்ற பட்டிமன்றங்களையெல்லாம் நாம் இப்போது தாண்டி வந்துவிட்டோம். அனைத்திலும் ஒரு சமச்சீர் வேண்டும் என்பதை நன்கு அறிந்துவைத்துள்ளோம். அதற்கு ஏற்றாற்போல இன்று பல வேகப்பந்து வீச்சாளர்கள் கண்ணுக்குத் தென்படுகின்றனர்.

இன்றும் டெஸ்ட் மேட்ச்சில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் முதல் ஓவர் வீசுவதை ஆர்வத்துடன் பார்க்க முனைகிறேன். குறைந்தபட்சம் கிரிக்கின்ஃபோவிலாவது வர்ணனையைப் படித்துவிடுகிறேன். ஐந்து ஸ்லிப், ஒரு கல்லி, மணிக்கு 150 கிமீ வேகத்தில் வீசும் அந்தப் பந்துவீச்சாளருக்காகக் காத்துக்கொண்டிருக்கிறேன்.

4 comments:

 1. பசுமை நிறைந்த நினைவுகள். ஏழு ஸ்லிப் வைத்தால் கல்லி எங்கே நிற்பார்? என்னுடைய ஞாபகத்தில் 8 ஸ்லிப் ஒரு பார்வெர்ட் ஷார்ட்லெக் வைத்து ஒரு ஆஸ்திரேலிய ஆட்டப்புகைப்படம் உள்ளது. வெகு பழையது.

  இது புதுசாம்: http://mynethome.net/blog/wp-content/uploads/2009/04/pic00024oo.jpg

  ReplyDelete
 2. என்ன ஸார், கிரிக்கெட் ஸீஸன் (இந்திய) இல்லாத சமயங்களில் கிரிக்கெட்!
  "கொஞ்ச இஷாந்த்" perfectly said.
  கபில் தேவ்வின் புயல் வேகபந்து வீச்சை பத்திரிக்கைகளில் படித்து என்னவெல்லாமோ கற்பனை செய்து வைத்திருந்தேன். பின்னர் 85 Bensen Hedges தொடரை ஓசி டிவியில் பார்த்தபோது கீப்பர் இடுப்பு அல்லது இன்னும் கீழே சென்ற "புயல் வேகத்தை" கண்டு ஏமாற்றம். அப்புறம், சரி, கால் முட்டி ஆப்ரேஷனுக்கு முன்னால் உண்மையிலேயே அவர் புயல் என்று கூட ஓசி டீவி பார்த்துக்கொண்டிருந்த உள்ளூர் கிரிக்கெட் அணி சீனியர்கள் சொன்னதை ஏற்றுக்கொண்டேன்.
  பின்னர், அசார், சாஸ்திரியை விட உயரமாகவும் ஒல்லியாகவும் இருந்த ஜவகல் ஸ்ரீநாத்தின் முதல் ஸ்பெல் கீப்பர் முகத்தின் நேராக செல்வதைப் பார்த்து ஆச்சரியப்பட்டேன்.. ஒருவேளை குள்ள கீப்பர் (மோரெ அல்லது மோங்கியா) என்பதால் இருக்குமோ என்று சந்தேகமாகவும் இருந்தது.
  நீங்கள் சொல்வது சரி. இன்னும் நச்சென மூன்றாவது ஸ்லிப்பில் காட்ச் கொடுக்க வைக்கும் பந்துவீச்சாளர் நமது நாட்டில் வரவில்லை.

  ReplyDelete
 3. ராமானுஜம் சத்தியமூர்த்தி
  தாங்கள் குறிப்பிட்ட site க்குச் சென்று அப்படத்தைப் பார்த்தேன். பிரமிப்பூட்டியது. வரலாற்று சிறப்புமிக்க ப்டம் என்றும் சொல்லலாம். அந்த ஆஸ்திரேலிய பந்துவீச்சாளருக்குத் தான் என்ன் தன்னம்பிக்கை!

  ReplyDelete