Tuesday, September 17, 2013

தேர்தலில் நிற்கிறேன்!

நாடாளுமன்றத் தேர்தல் அல்ல!

தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத் தேர்தலில்தான்.

இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பபாசி எனப்படும் தெ.பு.வி.ப.சங்கத்துக்குத் தேர்தல் நடைபெறும். இந்தத் தேர்தல் செப்டெம்பர் 19-ம் தேதி (வியாழக்கிழமை) அன்று நடைபெற உள்ளது.

2009-ம் ஆண்டு நான் இந்தத் தேர்தலில் ‘செயற்குழு உறுப்பினர் - தமிழ்’ என்ற இடத்துக்கு நின்றேன். தோல்வி அடைந்தேன். மொத்தம் 12 செயற்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அதில் ஆறு பேர் தமிழ்ப் பதிப்பாளர்கள் அல்லது புத்தக விற்பனையாளர்கள். ஆறு பேர் ஆங்கிலப் பதிப்பாளர்கள்/விற்பனையாளர்கள். அப்போது எனக்கு பபாசி தேர்தல்கள் பற்றி முழுமையான புரிந்தல் இருந்திருக்கவில்லை. தேர்தல் என்று வந்தால் அணி திரண்டு நிற்பார்கள் என்று எனக்கு அப்போது தெரியாது.

பபாசி தேர்தலில் சுமார் அறுநூற்று சொச்சம் உறுப்பினர்கள் வாக்களிக்கவேண்டும். ஒரு தலைவர், இரு துணைத்தலைவர்கள், ஒரு செயலர், ஓர் இணைச் செயலர், இரு துணைச் செயலர்கள், ஒரு பொருளாளர், 12 செயற்குழு உறுப்பினர்கள், 4 நிரந்தர புத்தகக் கண்காட்சி உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படவேண்டும்.

2011-ல் தேர்தலில் மீண்டும் நிற்க விரும்பினேன். அப்போதுதான் நாங்கள் அலுவலகம் மாற்றிக்கொண்டிருந்தோம். எனவே தேர்தல் விண்ணப்பத்துக்கான காலம் முடிவடைந்த பின்னரே ஆண்டறிக்கை அஞ்சலும் தேர்தல் தேதியும் அங்கும் இங்கும் சுற்றி என் கைக்குக் கிடைத்தது.

இம்முறை தேர்தலில் நிற்பது என்று முடிவெடுத்திருந்தேன். உயிர்மை மனுஷ்யபுத்திரனுடன் ஒருமுறை பேசியிருந்தேன். நல்லோர் அடங்கிய ஓர் அணியைத் திரட்டி, பபாசிக்குப் புது ரத்தம் பாய்ச்சவேண்டும் என்று சொன்னார். ஆனால் அப்படி ஒரு செயலில் ஈடுபட்டு பலரையும் சந்தித்துத் திரட்டக்கூடிய அளவு என்னிடம் நேரம் இல்லை. மாறாக யாரேனும் என்னைத் தொடர்புகொண்டால் அந்த அணியில் யார் இருக்கிறார்கள் என்று பார்த்து அவர்களுடன் சேர்ந்து நிற்பது, அல்லது தனியாக ‘அடிமட்ட’ இடமான செயற்குழு-தமிழ் என்ற இடத்தில் நிற்பது என்று முடிவெடுத்திருந்தேன்.

தேர்தல் அறிவிப்பு வந்தவுடன் சிக்ஸ்த் சென்ஸ் புகழேந்தி தொடர்புகொண்டார். மணிவாசகர் பதிப்பகத்தின் மீனாட்சி சுந்தரம் தலைவர் பதவிக்கும் புகழேந்தி செயலர் பதவிக்கும் நிற்பதாகவும் அந்த அணியின் சார்பில் செயற்குழு உறுப்பினர் பதவிக்கு நான் நிற்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். நான் உடனே ஒப்புக்கொண்டேன். இவர்கள் இருவர்மீதும் எனக்கு மரியாதை உண்டு.

இந்தப் பதிவைக் காணும் பபாசி உறுப்பினர்கள், ஏற்கெனவே யாருக்கு வாக்களிப்பது என்று முடிவு செய்யவில்லை என்றால் எனக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நான் போட்டியிடும் அணியில் வேறு யார் யார் உள்ளனர் என்பதை விவரமாக ஓரிரு மணிக்குள் பதிகிறேன்.

10 comments:

 1. தேர்தலில் வென்று புத்தக பதிப்பாளர், விற்பனையாளர் சங்கத்தின் மோதியாக வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. why are you comparing Badri to Modi ??? Badri will definitely win with out any hype like Modi

   Delete
 2. My vote is there for you.We will meet on 19th.

  ReplyDelete
 3. முதல் கமெண்ட்-லேயே மோதியா? போகிற போக்கில் நீங்கள் ஜாதி பத்ரி மாதிரி மோதி பத்ரி ஆகி விடுவீர்கள் போலிருக்கே :-) வென்று வர வாழ்த்துகள்

  ReplyDelete
 4. (1)அமெரிக்க நூல்களுக்கு இணையான கட்டமைப்பும் உறுதியும் பதிப்பீட்டுத்தரமும் தமிழிலும் கொண்டுவர முடியும் என்பதையும், (2) நூலக ஆர்டர் இல்லாமலேயே தமிழிலும் ஆயிரத்து இருநூறு பிரதிகளுக்கு மேல் அச்சடித்து விற்பனை செய்யமுடியும் என்பதையும், (3) இணையம் / மின்னஞ்சல் வாயிலாகத் தமிழ்ப் புத்தக வணிகத்தைப் பிரபலப்படுத்தமுடியும் என்பதையும் கடந்த சில ஆண்டுகளிலேயே நிரூபித்திருக்கிறீர்கள். இளைய தலைமுறை பதிப்பாளர்களின் நம்பிக்கை நட்சத்திரம் நீங்கள். எனவே “பத்ரி அணி” வெற்றி பெற்றிட அனைவரும் ஆதரவு தெரிவிக்க வேண்டுகிறேன்.

  வாழ்த்துக்கள். –கவிஞர் இராய. செல்லப்பா (இமயத்தலைவன்), சென்னை. 044-67453273

  ReplyDelete
 5. தமிழார்வம்,தொழில் நுடப ஆர்வம்,திறந்த உரையாடலை விரும்பும் மனம் வெற்றியைத் தரும். வாழ்த்துகள்.

  ReplyDelete
 6. வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்.
  ராமதுரை

  ReplyDelete
 7. Mr. Gandhi kannadasan gave a good proposal but it never took off, now it is your term to make it a success . advance congratulations, it is very happy news for me, good strategy.

  ReplyDelete