Wednesday, December 18, 2013

புத்தகங்களின் விலை

சமூக வலைத்தளங்களின் ஆதிக்கம் பரவியுள்ளதன் காரணமாக, எல்லோரும் புத்தகங்களின் விலை குறித்து புத்தகப் பதிப்பாளர்களைக் கேள்வி கேட்கத் தொடங்கியுள்ளனர்!

புத்தகங்களுக்கு எப்படி விலை வைக்கப்படுகிறது என்று முகில் ஃபேஸ்புக்கில் எழுதியிருந்தார். அதற்கு சில பதில்களை நான் எழுதியிருந்தேன். எந்த அளவுக்கு இது வாசகர்களுக்கு அவசியம் என்று தெரியவில்லை. பொதுவாக வாசகர்கள் இந்தக் கேள்விகளைக் கேட்கும்போது அடிப்படையில் ஒரேயொரு ஆதங்கம்தான் உள்ளது. என் பர்ஸில் உள்ள பணத்துக்கு எட்டாமல் இந்தப் புத்தகங்களின் விலை ஏறிக்கொண்டே போகிறது; விலை குறையவேண்டும். அவ்வளவுதான். அல்லது, நான்கு வருடங்களுக்குமுன் புத்தக விலை குறைவாக இருந்ததே, இப்போது ஏன் அதிகமாகிப்போனது? அதுவும் இவ்வளவு அதிகமா?

எனவே சில விஷயங்களை மட்டும் இங்கே விளக்குகிறேன்.

தமிழ்ப் புத்தகத் தொழிலில் பல விஷயங்கள் சதவிகிதத்தில் இயங்குகின்றன. உதாரணமாக, ராயல்டி என்பது புத்தக எம்.ஆர்.பி விலையில் 10% (அல்லது 7.5% அல்லது 5%). புத்தக விற்பனையாளர்களுக்கு எம்.ஆர்.பியில் 25% அல்லது 30% அல்லது 35% தொகையை பதிப்பாளர் தரவேண்டும். ஆக, அதிகபட்சமாக எடுத்துக்கொண்டால், புத்தக எம்.ஆர்.பியில் 45% வரை ராயல்டி + விற்பனையாளரருக்குப் போய்விடும். குறைந்தபட்சம் என்றால் ராயல்டி = 0, புத்தக விற்பனையாளருக்கு 25% = மொத்தம் 25%.

ஆங்கிலப் பதிப்பாளர்கள், விற்பனையாளர்களுக்கு 50% வரை, சிலர் அதற்குமேலும்கூடக் கொடுக்கிறார்கள். அதனை நாம் இங்கே கணக்கில் எடுத்துக்கொள்ளவேண்டாம்.

கிழக்கு பதிப்பகம் நேராக எழுதப்பட்ட புத்தகங்களுக்கு 10% ராயல்டி தருகிறது. ப்ராடிஜி புத்தகங்களுக்கு 7.5% ராயல்டி. மொழிமாற்றல் புத்தகங்களில் எழுத்தாளருக்கு 7.5%, மொழிபெயர்ப்பாளர்களுக்கு 5% என்று ராயல்டி கொடுக்கிறது. இதில் சிலச்சில மாற்றங்கள் இருக்கலாம். அதேபோல விற்பனை விநியோகஸ்தர்களுக்கு 35% வரை கொடுக்கிறோம்.

மீதமுள்ள சுமார் 52.5 - 55% தொகையில்தான் புத்தகத்தை அச்சிடவேண்டிய தாள், அச்சுக்கூலி, பைண்டிங் கூலி, ஊழியர்களின் சம்பளம், வாடகை, மின்சாரம், இத்யாதி என்று பார்த்துக்கொள்ளவேண்டும். உங்களுடைய overheads-ஐப் பொருத்து அச்சுக்கான செலவு எவ்வளவு, பிற செலவுகள் எவ்வளவு என்று நீங்கள் முடிவு செய்யவேண்டும். நாங்கள் பொதுவாக, அச்சுக்கான செலவு 20-22.5% இருக்குமாறும் பிற செலவுகள்+லாபம் சேர்த்து 30% இருக்குமாறும் திட்டமிடுவோம். இவ்வாறு திட்டமிட்டவுடனேயே, ஒரு புத்தகத்துக்கு என்ன விலை வைக்கவேண்டும் என்பது தெளிவாகிவிடும்.

புத்தகத்தை அச்சிட என்ன செலவு என்று முதலில் தீர்மானிக்கலாம். எத்தனை பக்கம், எந்தமாதிரியான உருவாக்கம், யாரிடம் கொடுத்து பிரிண்ட் செய்யப்போகிறோம், எத்தனை பிரதிகள் அடிக்கப்போகிறோம் என்று தெரிந்தவுடனேயே, ஒரு பிரதியை அச்சடிக்க என்ன செலவு என்பது தெளிவாகிவிடும். அந்த எண்ணிக்கையை 0.2 அல்லது 0.225 என்பதால் வகுத்தால், புத்தகத்துக்கு என்ன விலை வைக்கவேண்டியிருக்கும் என்பது முடிவாகிவிடும். அதன்பின் கொஞ்சம் மேலே அல்லது கீழே ரவுண்ட் ஆஃப் செய்யலாம். இவ்வளவுதான்.

2,000 பிரதிகள் அடிக்கும் ஒரு பிரதியின் உருவாக்கச் செலவு, 1,200 பிரதிகள் அடிக்கும்போது ஆவதைவிடக் குறைவு. எனவே அதிகம் விற்கும் புத்தகங்களுக்கு எம்.ஆர்.பியைக் குறைவாக வைக்க முடியும்.

குறிப்பிட்ட பக்கங்கள் கொண்ட புத்தகத்துக்கே பல பதிப்பாளர்கள் வைக்கும் விலை ஒரு கோடியிலிருந்து மறு கோடி வரை இருக்கும்.

உதாரணமாக, ராயல்டி தராத, 25%-க்குமேல் கழிவு தராத, ஓவர்ஹெட்ஸ் அதிகம் இல்லாத, மிகச் சுமாரான தாளில் புத்தகத்தை உருவாக்கும் ஒன் மேன் ஆர்மி பதிப்பாளர் ஒருவர், புத்தக விலையை மிகவும் குறைவாக வைக்கலாம். மாற்றாக, 10%-12.5% ராயல்டி, 35% விற்பனையாளர் கமிஷன், அதிக ஓவர்ஹெட்ஸ், மிகத் தரமான உருவாக்கம் ஆகியவற்றை முன்வைக்கும் பெரிய பதிப்பாளர் ஒருவர், புத்தக விலையை அதிகமாகத்தான் வைக்கவேண்டியிருக்கும். வேறு வழியில்லை.

எவ்வளவு வித்தியாசம் இருக்கலாம்? 160 பக்க டெமி 1/8 புத்தகம், பெர்ஃபெக்ட் பைண்டிங் செய்யப்பட்டது ரூ. 70 முதல் ரூ. 150 வரை முழு ஸ்பெக்ட்ரம் விலை கொண்டதாக இருக்கலாம்.

2004-ல் கிழக்கு பதிப்பகம் ஆரம்பித்தபோது 160 பக்க டெமி 1/8 புத்தகங்களை ரூ. 60 என்ற விலையில் விற்றுவந்தோம். 2006-ல் ப்ராடிஜி புத்தகங்கள், 80 பக்க கிரவுன் 1/8, ரூ. 25 என்ற விலையில் விற்றோம். அப்போது பேப்பர் ஒரு கிலோ ரூ. 23-24 என்ற கணக்கில் இருந்தது. இன்று நல்ல பேப்பர் கிலோ ரூ. 67-70, அதாவது மூன்று மடங்கு ஏறியுள்ளது. அச்சுக்கூலி அதிகம் ஏறவில்லை. இந்தப் பத்தாண்டுகளில் 25% ஏறியிருந்தால் அதிகம் என்று நினைக்கிறேன். பிளேட், நெகடிவ், லாமினேஷன் இவையெல்லாம் அதிகம் ஏறவில்லை. பைண்டிங் செய்வதற்கான கூலியும் அதிகம் ஏறவில்லை. ஆனால் அலுவலக வாடகை, புத்தகக் கிடங்கின் வாடகை, மின்சாரம், அலுவலர்களின் சம்பளம் ஆகியவையெல்லாம் வெகுவாக ஏறியுள்ளது.

இன்று 80 பக்க கிரவுன் 1/8 புத்தகங்களை ரூ. 40-க்கு விற்கிறோம். 160 பக்க டெமி 1/8 புத்தகத்தை 100 ரூ முதல் 150 ரூபாய்வரை விற்கிறோம். அது எவ்வளவு பிரதிகள் அச்சடிக்கிறோம் என்பதைப் பொருத்தது.

தாளின் விலை ஏறிக்கொண்டேதான் போகும். விலையைக் குறைக்கவேண்டுமானால் மின் புத்தகங்கள் மட்டும்தான் ஒரே வழி.

***

ஃபேஸ்புக்கில் முகிலுடைய ஸ்டேடஸ் மெஸேஜின்கீழ் எழுதியது:

ஒரு 160 பக்கப் புத்தகத்தை எடுத்துக்கொள்ளுங்கள். டெமி 1/8 சைஸ். பேப்பர்பேக். 1,200 பிரதிகள் அடிக்கவேண்டும். இதனை மிகக் குறைந்த செலவில் செய்யவேண்டுமானால் நீங்கள் சற்றே சுமாரான 60 ஜி.எஸ்.எம் வெள்ளைத் தாளில் அச்சடிக்கலாம். அல்லது நல்ல மில் தயாரிப்பில் 70 ஜி.எஸ்.எம் நேச்சுரல் ஷேட், ஹை பல்க் பேப்பரில் அச்சடிக்கலாம். அட்டையானது, 300 ஜி.எஸ்.எம் தாளில், நான்கு வண்ணத்தில் இருக்கும். 70 ஜி.எஸ்.எம், 300 ஜி.எஸ்.எம் காம்போவில் பேப்பர், பிரிண்டிங், பைண்டிங், லேமினேஷன், பிளேட் மேக்கிங் என்று பார்த்தால், ஒரு புத்தகத்தை அச்சிட உங்களுக்கு ஆகும் செலவு கிட்டத்தட்ட ரூ. 29-32 ஆகிவிடும். இது ஒரேயொரு புத்தகத்தை மட்டும் நீங்கள் அச்சிடௌவதாக இருந்தால். பேப்பர் விலை கிலோ ரூ. 67-70 என்ற நிலையில் உள்ளது. இதற்குபதில் கிலோ பேப்பர் ரூ. 60-க்குக்கூடக் கிடைக்கும் மில்லிலிருந்து வாண்க்கிக்கொண்டு, 70-க்கு பதில் 60 ஜி.எஸ்.எம் பேப்பரைப் பயன்படுத்திக்கொண்டால், செலவைக் கணிசமாகக் குறைக்கலாம். ஒரு பிரதி ரூ. 23-24 என்று முடியும். இதையே நான்கு புத்தகங்களைச் சேர்த்து பிரிண்ட் செய்தால், நான்கு அட்டைகளையும் ஒரே நேரத்தில் அச்சிடலாம். அதனால் மேலும் 2-3 ரூபாய்கள் குறையும். ஒரு பிரதி ரூ. 22 முதல் ரூ. 26 வரை ஆகலாம். (பேப்பரைப் பொருத்து)

நாங்கள் பெரும்பாலான புத்தகங்களை மும்பையில் அச்சிடுகிறோம். (அதற்குப் பல காரணங்கள் உண்டு.) எங்களுக்கு இதே புத்தகத்தை அச்சிட கிட்டத்தட்ட ரூ. 36 வரை ஆகிறது (இப்போதைக்கு).

எழுத்தின் அளவைக் குறைத்து, மார்ஜின் அளவைக் குறைத்து, அதனால் பக்கங்களைக் குறைத்து, வெகு சுமார் கிரீமோ செகண்ட் கிரேட் மில் பேப்பரைப் பயன்படுத்தி, டிரெக்ட் டு பிளேட் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தாமல் லேசர் பிரிண்ட்-ஃபில்ம் நெகடிவ்-பிளேட் என்று போனால் அச்சாக்கும் செலவையும் குறைக்கலாம், பேப்பர் செலவையும் குறைக்கலாம்.

ஆக, இதே புத்தகத்தை வேறுமாதிரியான பேப்பர், தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, ரூ. 16-க்கும் உருவாக்கலாம். ஆக 16 ரூ. டூ 36 ரூ. என்று ஒரு பெரிய ரேஞ்ச் இருக்கிறது.

இதுதான் அடக்கவிலை. அடுத்து, ராயல்டி தருகிறோமா, இல்லையா என்பதைப் பொருத்தும், விற்பனையாளர்களுக்கு என்ன மார்ஜின் தருகிறோம் என்பதைப் பொருத்தும் பிற விஷயங்கள் மாறுகின்றன.

விகடன், வானதி, அல்லயன்ஸ் போன்ற பதிப்பகங்கள் 25% மார்ஜின்தான் கொடுக்கிறார்கள். கிழக்கு பதிப்பகம், 30% (கடைக்காரர்களுக்கு) அல்லது 35% (விநியோகஸ்தர்களுக்கு) கொடுக்கிறது. பெரும்பாலான தமிழ்ப் பதிப்பாளர்கள் 25, 30, 35 சதவிகிதத்துக்குள்தான் இயங்குவார்கள். ராயல்டி ஒருவருக்கு ஒருவர் மாறுபடும். நான் அதுகுறித்துப் பேசப்போவதில்லை.

இப்போது ஒரு பிரதிக்கு ஆகும் அடக்கவிலை 30 ரூபாய் என்று வைத்துக்கொள்ளுங்கள். கடைக்காரருக்குத் தரப்போவது 35% என்று வைத்துக்கொள்ளுங்கள். எழுத்தாளருக்கு 10% ராயல்டி. உங்கள் பதிப்பகத்துக்கு 30%-ஆவது வேண்டும். (இது லாபமல்ல. உங்கள் அலுவலக வாடகை, மின்சாரம், ஆள் சம்பளம், வேர்ஹவுஸ் வாடகை, நீங்கள் பணம் கடன் வாங்கி அச்சடிக்கும்போது, அதற்குத் தரவேண்டிய வட்டி.... அதற்குப்பின் உங்கள் லாபம்). அப்படியானால் அச்சடிக்க ஆகும் செலவு 25% என்று இருக்கவேண்டும். (25%+10%+35%+30% = 100%). அப்படியானால், அச்சுக்கு ஆகும் செலவை நான்கால் பெருக்கினால், புத்தகத்துக்கு வைக்கவேண்டிய எம்.ஆர்.பி கிடைத்துவிடும். இந்த இடத்தில் 30*4 = 120 ரூ. எனக்கு அச்சாக்கும் செலவு ரூ. 36 ஆகிறது என்றால் நான் புத்தகத்துக்கு 145 ரூ. அல்லது 150 ரூ. வைப்பேன். இதுதான் விஷயம்.

அதுவும் 1200 பிரதிகளும் விற்றால்தான் உங்களுக்குக் கையில் பணம் வரும். இல்லை என்றால் நஷ்டம்.

இதே இன்னொருவர் ராயல்டி தரப்போவதில்லை, அச்சாக்கும் செலவு அவருக்கு ரூ. 20 மட்டும்தான் என்று வைத்துக்கொள்வோம். மேலும் அவர் 25% மட்டுமே டிஸ்கவுண்ட் தருவார். அவருக்கும் 30% போதும் என்று வைத்துக்கொண்டால், அச்சுச் செலவு 45%வரை இருக்கலாம் (45% + 25% + 30% = 100%). அப்படியானால் அவர் புத்தகத்துக்கு 20/(45%) = 20/0.45 = ரூ. 45 என்று வைத்தாலே போதும். ஆக, ஒரே புத்தகத்துக்கு 45 அல்லது 50 ரூபாயும் வைக்கலாம், கிட்டத்தட்ட 150 ரூபாயும் வைக்கலாம்.

இந்த ரேஞ்சில் ஒரு பதிப்பகம், தாங்கள் எங்கே இருக்கவேண்டும் என்பதை முடிவெடுத்துக்கொள்ளலாம்.
=======

13 comments:

  1. ஒரு சுற்று பதிப்பு என்பது வெறும் ஆயிரத்து இரநூறு புத்தகங்கள் மட்டும் தான ?.. ஏன் அதனை குறைந்தது பத்தாயிரம் என்று வைத்துக்கொள்ள கூடாது அவ்வாறு வைத்துகொண்டால் செலவு குறைந்து புத்தகமும் விலை குறைவாக கிடைக்கலாம் அல்லவா ?.. அதுபோக பெரும்பாலான சிறு வணிக கடைகளில் புத்தகங்களுக்கான கழிவு என்பது வாடிக்கையாளர்களுக்கு கிடைப்பதே இல்லை .ஆனால் அவர்கள் ஒரு நூறு ருபாய் புத்தகத்திற்கு முப்பது ருபாய் வரை லாபம் பெறுகிறார்கள் .அதற்க்கு மாற்றாக FMCG பெருல்களை போல சந்தைபடுத்த முடியாத ?.. உதாரணத்திற்கு நூறு விலையுள்ள புத்தகம் ஒன்று ஆறு சதம் கட்டும் கமிசன் கொடுக்க பட்டு விற்பனை செய்ய முடியுமானால் அதே நூறு விலையுள்ள புத்தகம் இருபத்து நான்கு ருபாய் விலை குறையும் அல்லவா ?.. அவர்கள் முதலீடு செய்யவேண்டாம் பில் டு பில் கிளியர் பண்ண வாய்ப்பு கிடைத்தால் மாட்டேன் என்று சொல்வார்கலாக ?...

    ReplyDelete
    Replies
    1. பத்தாயிரம் புத்தகங்களும் விற்றுவிடும் என்று நினைக்கின்றீர்கள்? புத்தகங்கள் கிடைக்குமிடங்கள் அதிகமானால்தான் இது சாத்தியம். நான் பெங்களூரில் தமிழ் புத்தகங்களை எங்கு வாங்க முடியும், எனக்கு தெரிந்து எங்குமில்லை. ஹிக்கின் பாதம்ஸ் சென்றால் சமைக்க கற்று கொள்ளலாம். கடைசியில் எனக்கு தோதானது ஆன்லைன் ஆர்டரிங்தான். தமிழகத்தில் எனது சொந்த ஊர் பக்கம் புத்தககடை என்றால் அது வாரந்திரிகளும், செய்தித்தாளும்தான். மாவட்ட தலைநகர் தேனியில் கூட புத்தகங்கள் கிடைக்குமென்று தோன்றவில்லை. கடைகள் இருந்தாலும் புத்தகங்கள் கிடைக்க வேண்டும். மதுரை பெரியார் பஸ்நிலையமருகில் மூன்று நான்கு கடைகள் உள்ளன, சும்மா மேய்ந்து கொண்டிருந்தேன், ஒருவர் வாடி வாசலை மூன்று கடைகளிலும் தேடிகளைத்து போய் போனார். மல்லிகையை நிலையமோ அல்லது சர்வோதயாவோ, கிழக்கு புத்தகங்கள் வருவதில்லை என்றார் (ஒரு வருடம் முன்னால்). சிலருக்கு விகடன் பதிப்பகம் ஆகாது. ஆன்லைன் வசதி இல்லையென்றால் (அதுவும் குறிப்பாக தபால் செலவு இல்லை) நானெல்லாம் பேசாமல் விகடனைத்தான் படித்துக்கொண்டிருப்பேன்.

      Delete
  2. Why e-books and paper books costs are almost same?

    ReplyDelete
  3. சார், அனைத்து பக்கங்களிலும் படங்கள் இருக்கும் புத்தகங்களுக்கும் சாதாரண எழுத்துக்கள் மட்டும் இருக்கும் புத்தகங்களுக்கும் எவ்வளவு தயாரிப்பு செலவு வித்தியாசம் இருக்கும்.

    ReplyDelete
  4. தமிழக அரசின் நூலகத்துறை வாங்கும் விலையென்பது டெமி அளவு புத்தகத்திற்கு, பாரம் ( 16 பக்கங்கள் ) ஒன்றிற்கு ரூ 5.43, அந்த வகையில் 160 பக்கமுள்ள ஒரு புத்தகத்தின் விலை ரூ 86.00 ஆகிறது. அதாவது பதிப்பகத்தால் நிர்ணயிக்கப்பட்ட விலை ரூ 150.00 ஆகவுள்ள ஒரு புத்தகத்தின் அரசாங்க கொள்முதல் விலை பாதிதான். இந்த பாதி விலையில் நூலக ஆணையைப் பெறுவதற்கும் பதிப்பகங்கள் 15 - 20 சதவீத லஞ்சம் கொடுக்கவேண்டியுள்ளதாக பத்திரிகைச் செய்திகள் உள்ளன. ஆக ஒரு பதிப்பாளர் தீர்மானிக்கும் புத்தக விலையில் இவ்வாறாக 65 % போகவுள்ள மீதி 35 % இல் ஏதோ ஒரு லாபம் இருப்பதினால்தானே பதிப்பங்கள் தொடர்ந்தும் அடித்துப் பிடித்து லஞ்சம் கொடுத்து நூலக ஆணையை வாங்குகிறார்கள். எனக்குத் தெரிந்தவரை கடந்த பத்து ஆண்டு காலத்தில் எந்தவொரு பதிப்பாளரும் பதிப்புத் தொழில் நட்டம் என்று தொழிலை இழுத்துமூடிவிட்டுப் போகவில்லை, நட்டத்துடன் தொழில் நடத்தும் நிலையில் எவரையும் நான் காணவில்லை. விவசாயிகள் எலிக்கறி உண்கிறார்கள், நெசவுத் தொழிலாளிகள் பட்டினி இருக்கிறார்கள், சினிமாத் தயாரிப்பாளர் லாபம் கிடைக்காதமையால் தற்கொலை செய்துகொண்டார், சாயப்பட்டறைத் தொழிலாளர்கள் / உரிமையாளர்கள் போராட்டம் நடத்தினார்கள் என்பது போன்ற செய்திகள் பத்திரிகைகளில் வந்துள்ளன. ஆனால் இன்றுவரை பதிப்பாளர்கள் தொடர்பில் ஒரு உண்மையான போராட்டம்கூட நடத்தியாதாக செய்திகள் இல்லை. ஆண்டுதோறும் சென்னைப் புத்தகக் காட்சிக்கு மட்டும் புதிய புத்தகங்கள் 50, 100 என்று புதிய புத்தகங்களைத் தயாரித்து வெளியிடும் பதிப்பகங்கள் எண்ணிக்கை கூடிக்கொண்டே வருகின்றது.

    அந்த வகையில் புத்தகொமொன்றின் தயாரிப்புச் செலவு என்பது, விற்பனை விலையில் 25% தான் இருக்கும் என்பது என் கணிப்பு.

    10 ஆண்டுகளில் எழுத்தாளர்களைவிட பதிப்பாளர்கள் செழிப்பாக இருப்பதும் காண முடிகிறது. பதிப்பாளர்கள் எழுத்தாளர்களிடம் பணம் வாங்கிக்கொண்டும் புத்தகங்களை வெளியிடுகிறார்கள், ஒரு சிலர் விலக்காக இருக்கலாம்.

    நூலகத்துறை இனிமேல் புத்தகங்களைக் கொள்முதல் செய்யும்போது, குறித்த எழுத்தாளரிடம் இருந்து ஆட்சேபனை இல்லையென்ற உறுதிக் கடிதத்தை இணைக்கவேண்டும் என்று கட்டாயப்படுத்தினால், எழுத்தாளர்கள் ஓரளவேனும் நன்மை கிடைக்கப்பெற்றவர்களாவார்கள்.

    ReplyDelete
  5. நல்ல பதிவு. இது மாதிரி பதிப்பகதுறை சார்ந்த நல்லது கெட்டது பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.

    தமிழ் பதிப்புலகத்தின் சந்தை அளவினை எவ்வாறு கண்டுப்பிடிப்பது? அப்படி ஏதேனும் உண்டா?

    ReplyDelete
  6. நான் ஓர் எழுத்தாளன் பதிப்பாளர் என் புத்தகங்களின் விலையை அதிகரித்தால் எனக்கு ராயலிடி வகையில் அதிக பணம் கிடைக்கும்.
    நாட்டில் எவ்வளவோ பொருட்களின் விலைகள் விஷம் போல ஏறிக் கொண்டே போகின்றன. அப்பொருட்களின் விலைகள் எப்படி நிர்ணயிக்கப்படுகின்றன என்று யாரும் கேட்பதில்லை. நல்லெண்ணெயின் விலை ஏன் அதிகம் என்று கேட்டு அந்த எண்ணெயைத் தயாரிக்கின்ற நிறுவனத்துக்கு ஒரு கார்டு கூடப் போடுவதில்லை. வாயைத் திறக்காமல் வாங்கிச் செல்கின்றனர்
    புதிதாக வெளியாகின்ற சினிமாவைப் பார்க்க ஒரு டிக்கெட் விலை ரூ 150 என்றாலும் அதற்கு செலவிடத் தயங்குவதில்லை

    அப்படியான நிலையில் புத்தகங்களின் விலைகள் எப்படி நிர்ணயிக்கப்படுகிறது என்று மட்டும் கேட்கிறார்கள்.அப்படிக் கேட்பவர் ஓர் ஆண்டில் நான்கு புத்தகம் கூட வாங்காதவராக இருப்பார்.
    பல கோடிப் பேர் வாழும் தமிழகத்தில் ஒரு நல்ல புத்தகம் ஓர் ஆண்டில் 2000 பிரதி கூட விற்பதில்லை. ஒரு புத்தகம் 20 ஆயிரம் பிரதி விற்கின்ற நிலை இருக்குமானால் புத்தகத்தின் விலையை பதிப்பாளரே குறைத்து விற்க வாய்ப்பு உண்டு. ஆனால் நிலைமை அப்படி இல்லை.
    நல்ல புத்தகங்களை வாங்கத் தமிழகத்தில் ஆளில்லை என்ற நிலைமை தான் உள்ளது.
    ஆகவே தான் நான் ஒரு கட்டத்தில் புத்தகமே எழுதுவதில்லை என்று தீர்மானித்தேன். அக்கட்டத்தில் தான் திரு பத்ரி சேஷாத்ரி மறுபடியும் என்னை எழுதத் தூண்டினார்.
    புத்தகம் வாங்க மக்களிடையே ஆர்வம் இல்லை என்பதால் தான் நான் அறிவியல் கட்டுரைகளை வெளியிட தனி வலைப்பதிவு தொடங்கினேன். அதில் வருமானம் கிடையாது.ஆனால் உலகில் பல நாடுகளில் தமிழ் அன்பர்கள் படிக்கிறார்கள் என்ற திருப்தியும் மன நிறைவும் உள்ளது

    அளவுக்கு மீறிய ஆங்கில மோகம் அதனால் தமிழ் மீதான வெறுப்பு, நலல தமிழ் நூல்களை ஊக்குவிக்காத போக்கு இதுதான் தமிழகத்தில் இன்றுள்ள நிலைமை

    பத்ரி அவர்கள் ஏன் மெனக்கெட்டு விலாவாரியாக விளக்கம் அளித்திருக்கிறார் என்று புரியவில்லை.அதற்குத் தேவையே இல்லை

    ReplyDelete
  7. சாதாரண தாளில் அச்சகிய பொன்னியின் செல்வன் இந்து பதிப்பகம் ரூபாய் 280 இக்கு நான்கு பாகங்களும் வெளியிடுகிறது மற்றவர்கள் ஒரு பாகதிற்கே இந்த விலை வைக்கின்றார்கள் .40 வயதிற்கு மேற்பட்ட நடுத்தர வர்க்கம் த்தான் புத்தகங்களை வாங்குகின்றார்கள் என்பதை பதிப்பகதர்கள் நினைவில் கொள்வது நல்லது.மலிவு விலை பதிப்புகளுக்கு எப்பொழுதும் அமோக வரேவேர்ப்பு உண்டு

    ReplyDelete
  8. there is an increasingly huge market outside of india. it is widely dispersed all over the world. the quick and only way to reach them is through e-books or pdf. i still dont understand the reluctance of tamil publishers to simultaneiously publish ebooks along with the print edition. a print book is shared by so many folks in tamil nadu. whereas folks like me are probably single readers in small towns in the usa canada europe or such places. and to us prices in indian rupees is not an issue. whereas getting some tamil books through amazon makes it too pricey at $20 + on an average. thank you.

    ReplyDelete
  9. /புத்தக விற்பனையாளர்களுக்கு எம்.ஆர்.பியில் 25% அல்லது 30% அல்லது 35% தொகையை பதிப்பாளர் தரவேண்டும். /
    நேரடியாகவோ பதிப்பகத்திலோ/இனையத்தின் மூலமாகவோ வாங்குபவற்களுக்கு ஏன் இதை கழிவாக கொடுக்க கூடாது?.

    ReplyDelete
  10. நான் இதுவரை எழுதிய புத்தகங்களில் ₹1 கூட எனக்கு லாபம் வந்ததே இல்லை.. நான் எழுத்தாளர் தான்.. கடவுளே! போதும்.. நானே எல்லாமும் ( DTP,desing, rapper,sales) பண்ணிட்டு இருக்கேன்.. பிரிண்டிங்கு மட்டும்தான் வெளியே கொடுக்குறேன்.. ஏதோ ஒரு புத்தகத்துக்கு ₹35 வரை இலாபம் பார்க்கறேன்.. ஆனா தலையெழுத்து, நானே எழுதி நானே எல்லாம் பண்ணி நானே விற்பனையும் பண்ணிட்டு இருக்கேன்.. நான் எழுத்தாளரா? டிசைனரா? டைப்பிஸ்ட்டா? அட்டைப்பட தயாரிப்பாளரா? என்னத்த சொல்ல? இந்த எழுத்தாளர்களின் நிலை படு மோசம்🤦🤦🤦🤦

    ReplyDelete