Tuesday, February 18, 2014

ஒருங்குறியில் தமிழ் - தேவைகளும் தீர்வுகளும்

தமிழ் இணையக் கல்விக்கழகம் (Tamil Virtual Academy), 05.03.2014, புதன்கிழமை அன்று யூனிகோட் தொடர்பான ஒருநாள் கருத்தரங்கு ஒன்றை, சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அதன் அலுவலகத்தில் ஏற்பாடு செய்துள்ளது.

ஒருங்குறியில் தமிழ் - தேவைகளும் தீர்வுகளும்
  1. தமிழ் பின்னம் – பெயரிடல் மற்றும் வரிவடிவம் தொடர்பாக.
  2. ஒருங்குறி எழுத்துருக்களும், விசைப்பலகையும் - பயன்பாடு
  3. ஒரு இந்தியா - ஒரு எழுத்துரு - திரு. அமைதி ஆனந்தம் அவர்களின் கருத்துரு
  4. தமிழ் 16-பிட்டு அனைத்துரு எழுத்துரு (TACE16) – செயல் திட்டம்
  5. நவீன கருவிகளில் தமிழ் - சிக்கல்களும் தீர்வும்
  6. கலந்துரையாடல்
இதில் ‘நவீன கருவிகளில் தமிழ் - சிக்கல்களும் தீர்வு(களு)ம்’ என்னும் தலைப்பில் பேசுவதற்கும் அந்த அமர்வை ஒழுங்குபடுத்துவதற்கும் என்னைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.

நவீன கருவிகள் என்று நாம் கணினி அல்லாத அனைத்து கணிக் கருவிகளையும் குறிப்பிடுகிறோம். செல்பேசிகள், பலகை/சிலேட்டு/டேப்லட் கணினிகள், கிண்டில் போன்ற மின்புத்தகப் படிப்பான்கள், இவைபோல் நாளை வரப்போகும் பல்வேறு கையடக்கக் கருவிகள் அனைத்தும் இதில் அடக்கம். அவற்றில் தமிழ் (யூனிகோட்) தெரியவேண்டும்; எழுத்துகள் உள்ளிடப்படும் வசதி வேண்டும். தமிழ் சார்ந்த கருவிகள் (எழுத்துணரி, எழுத்திலிருந்து பேச்சு, பேச்சிலிருந்து எழுத்து, சொற்பிழை திருத்தி, மொழிமாற்றி, அடிப்படை அகராதி இம்மாதிரியானவை...) வேண்டும்.

அதற்குமுன், இன்று சந்தையில் கிடைக்கும் அனைத்துக் கருவிகளிலும் இன்றைய நிலை என்ன என்பது தெரியவேண்டும். அதன்பின்னரே இக்கருவிகளில் எம்மாதிரியான மாற்றம் தேவை என்பதை நாம் ஆராய முடியும். இதில் அரசு என்ன செய்யவேண்டும் என்று அரசுக்கு ஆலோசனை கூறமுடியும். இதற்கு எனக்கு உங்களுடைய உதவி வேண்டும். என்னிடம் இதுபோல் பல கருவிகள் உள்ளன. ஆனால் உலகில் இதுவரை வெளியாகியுள்ள அனைத்துக் கருவிகளையும் நான் பார்த்திருக்க வாய்ப்பே இல்லை. எனவே உங்களிடம் இதுபோன்ற கருவிகள் இருந்தால் அவை குறித்து எனக்குக் கீழ்க்கண்ட தகவல்களை அளிக்க முடியுமா?
  1. உங்கள் கருவியின் தயாரிப்பாளர் யார்? பிராண்ட், மாடல் பெயர்?
  2. அக்கருவியின் இயக்குதளம் யாது? அதன் வெர்ஷன் எண் என்ன?
  3. அதில் தமிழ் படிக்க முடிகிறதா? தமிழ் எழுத்துகள் உடையாமல் தெரிகின்றனவா? தமிழ் எழுத்துகள் பழைய லை/னை/ணை என்று தெரிகின்றனவா?
  4. உங்கள் கருவியில் தமிழ் (யூனிகோட்) எழுத்துகளை உள்ளிட முடிகிறதா? முடிகிறது என்றால் உங்கள் இயக்குதளத்திலேயே அதற்கான வசதிகள் செய்துதரப்பட்டுள்ளதா அல்லது வெளிச் செயலி எதையேனும் பயன்படுத்தி இதைச் செய்கிறீர்களா?
  5. மின்புத்தகப் படிப்பான் என்றால் அதில் இயல்பாகவே தமிழ்க் கோப்புகளை, தமிழ் மின்புத்தகங்களைப் படிக்க முடிகிறதா? முடிகிறது என்றால் எம்மாதிரியான கோப்பு வடிவம்?
  6. மின்புத்தகங்களைத் தமிழில் எந்தத் தளத்திலிருந்தாவது வாங்கி, தரவிறக்கிப் படிக்கிறீர்களா? படிப்பதில் சிக்கல்கள் ஏதேனும் உள்ளனவா?
  7. சிக்கல்கள் இருக்கும்பட்சத்தில் அவை எம்மாதிரியானவை என்று தமிழிலோ, ஆங்கிலத்திலோ விளக்கி எழுதி என் மின்னஞ்சலுக்கு அனுப்ப முடியுமா? அனுப்புவதுடன் ஸ்க்ரீன்ஷாட் படங்களையும் சேர்த்து அனுப்ப முடியுமா?
என் மின்னஞ்சல் முகவரி bseshadri@gmail.com

நீங்கள் அனுப்பும் தகவல்களையெல்லாம் ஒழுங்குசெய்து, சேகரித்து, கருத்தரங்கு அன்று பேசுகிறேன். அங்கு நேரில் வருவோருடன் சேர்ந்து, அரசுக்கு எம்மாதிரியான ஆலோசனைகளைத் தரமுடியும் என்று கலந்தாலோசிப்போம். அவை குறித்தும் என் வலைப்பதிவில் உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.

நன்றி.

5 comments:

  1. எனது சாம்சுங் டியுவோஸ் (Samsung Duos) இல் தமிழ் பெட்டி பெட்டியாகத் தெரிகிறது. எனது நோக்கிய ஈ5 (Nokia e5) இலும் இதே பிரச்சினை. வாங்கும் போது தமிழ் ஒருங்குறியை ஆதரிக்கிறதா இல்லையா எனத் தெரிவதில்லை. வாங்கிய பின்னர்தான் தலையிடி

    ReplyDelete
    Replies
    1. என்னுடைய கேலக்சி ட்யோவோஸில் தமிழ் தெரிகிறது. உங்கள் கைபேசியில் ஆண்டிராய்ட் இயங்குதளம் பழையதாக இருக்கலாம்.

      என்னுடைய சீனத் தயாரிப்பு டேப்லட்டிலும் தமிழ் தெரிவதில்லை. ஏனெனில் அதன் ஆண்டிராய்ட் 2.2 பதிப்பாகும். 2.2 ஒருங்குறியை சப்போர்ட் செய்யவில்லை.

      Delete
  2. Badri:

    Please give details about one of your device for sample purpose. So that everybody can try to follow. This way - you may get more feedback from readers...

    Thanks for your initiatives,
    Ravi.

    ReplyDelete
  3. பத்ரி இதனைப் பற்றி நீண்ட நாட்கள் பல்வேறு மாடல் அலைபேசி மற்றும் பலகைக் கணினியில் உழன்றவன் என்ற முறையில்...

    இன்றைய பல அலைபேசிகள் மற்றும் அறிவுறுபேசிகளில் பெரும்பாலனவை மூன்று இயங்கு தளத்தில் இயங்குபவை. அவை முறையே ட்ராய்ட், ஆப்பிள் ஐ இயங்கு தளம் மற்றும் விண்டோஸ் இயங்கு தளம்.

    தனித்தனியே பல மாடல் பேசிகளை ஒப்பிடுவதை விட ஒரு வழியாக இயங்கு தளத்தைப் பற்றிப் பேசிவிடுதல் நலம்.

    ட்ராய்டில் ஜெல்லி பீன் 4.2 வரிசை அல்லது அதற்குப் பிறகான அனைத்து இயங்கு தளத்திலும் தமிழ் படிக்கலாம்...தமிழ் உள்ளிடுவதற்கு டாம் 99 தட்டச்சுப் பலகையை ட்ராய்ட் தருகிறது. சாம்சங் நிறுவனத்தின் பேசிகளில் இந்திய மொழிகளுக்கான தனி தட்டச்சுப் பலகையை அமைத்துக் கொள்ள முடியும். அநேகமாக இது இந்தியாவில் வெளிவரும் சாம்சங் பேசிகளுக்கு மட்டும் வாய்க்கிறது என்று நினைக்கிறேன்.
    ட்ராய்ட் நுட்பம் அனைத்து பயன் பாட்டிலும் தமிழை உள்ளிடும் வசதியைத் தருகிறது, எக்ஸெல் உட்பட. ஆனாலும் வரி வடிவதிலிருந்து ஒலி வடிவம் மற்றும் ஒலி வடிவத்திலிருந்த வரி வடிவம், நல்ல பிழை திருத்தி போன்றவை இன்னும் அமையவில்லை. முத்து நெடுமாறனின் செல்லினம் பிழை திருத்தத்தில் நன்கு செயல்படுகிறது.ஆயினும் இது முழுமையான பிழை திருத்தி அல்ல. தட்டச்சும் போது நிகழம் சாத்தியக் கூறுகளை முன்வைக்கும் திருத்து. இது கோப்புகளைத் தட்டச்சியபின் பிழை திருத்த உதவாது என்று நினைக்கிறேன்.

    ஐ இயங்கு தளம் தனது வரிசை ஏழு மற்றும் அதற்குப் பின்னான வெளியீடுகளில் தமிழ் மொழியைத் தட்டச்சிலும் சேர்த்திருக்கிறது என்று நினைக்கிறேன். எந்த வரிசையிலிருந்து என்பதில் சிறிது குழப்பம். வரிசை ஆறில் இந்த வசதி இருந்ததாக நினைவில்லை.

    ஆயினும் தமிழ்த் தளங்கள் மற்றும் கோப்புகளைப் படிப்பதில் ஆறில் இருந்து எந்தப் பிரச்னையும் இல்லை என்றே நினைக்கிறேன்.

    இதிலும் ஒலியிலிருந்து வரி மற்றும் வரியிலிருந்து ஒலி பயன்பாடுகள் இல்லை.

    பிழை திருத்தும் வசதிகளும் இல்லை.

    ஐ தளத்தின் சிரி செயலி ஆங்கிலத்தில் அட்டகாசமாக செயல்படுகிறது.இது போன்ற ஒரு செயலி தமிழில் கிடைத்தால் தமிழில் பயன்பாட்டு வீச்சு பெரிதளவில் மாறுபடும் என்று நினைக்கிறேன். எனக்கே எழுதத் தோன்றும் நினைவுகளைத் தட்டச்ச வேண்டும் என்று நினைக்கும் போது கணினி இருந்தால்தான் வசதி என்ற நிலை ஆயாசம் தருவது.

    இது அறிவுறுபேசி மற்றும் பலகைகளில் எளிதாக ஒலியிலுருந்த வரி வடிவம் என்ற வசதி கிடைத்தால் எழுதுவதும் படிப்பதும் இன்னும் எளிதாகும். இதற்குச் சற்றும் குறையாத தேவை வரியிலிருந்து ஒலி வடிவம். ஆனால் இவை எல்லாம் தமிழக சூழலில் கிடைக்க வருடங்கள் ஆகும் என்று தோன்றுகிறது.

    இன்றைய நிலையில் கூட கணினியில் தமிழ் முயற்சிகள் முத்து நெடுமாறன் போன்ற பலரின் ஆக்கமான தொடக்ககால முயற்சிகளிலிருந்தே முகிழ்ந்திருக்கிறது என்று நினேக்கிறேன்; ட்ராய்ட் அடுத்து நிகழ்ந்த ஒரு பெரு வீச்சு..அடுத்ததில் நீங்கள் பெரும்பங்கு வகிக்க ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.. :)

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி. உங்களுடைய மற்றும் பிறருடைய தகவல்களிலிருந்து ஒரு சுருக்கமான பேச்சைத் தயார் செய்துள்ளேன். நாளை நிகழ்வில் நடப்பதைத் தொகுத்து எழுதுகிறேன்.

      Delete