Wednesday, February 19, 2014

தில்லி புத்தகக் கண்காட்சி: பிராந்திய மொழிகளில் பதிப்பித்தல்

PublishingNext என்ற கோவாவைச் சேர்ந்த அமைப்பு, நேஷனல் புக் டிரஸ்ட் ஆதரவுடன் ஒருநாள் கருத்தரங்கு ஒன்றை தில்லி புத்தகக் கண்காட்சியில் நடத்தியது. அதில் கலந்துகொள்வதற்காக நான் சென்றிருந்தேன். பிராந்திய மொழிப் பதிப்பு, மின்பதிப்பு, சுயபதிப்பு ஆகிய மூன்று தலைப்புகளில் மூன்று அமர்வுகள். இண்டப் பதிவில் பிராந்திய மொழிகளில் பதிப்பித்தல் தொடர்பான அரங்கில் நடந்ததை மட்டும் எழுதுகிறேன்.

இந்தி மொழி பற்றி அலிந்த் மஹேஷ்வரி பேசினார். இவர் ராஜ்கமல் பிரகாஷன் என்ற மிகப்பெரிய இந்திப் பதிப்பு நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவர். இளைஞர். இந்திப் பதிப்புலகம் இன்னமும் ‘தொழில்துறை’ என்ற நிலையை அடையவில்லை என்றார். (அதாவது புரஃபஷனலான நிலையில் இல்லை என்பது அவர் கருத்து. அப்படிப் பார்த்தால் இந்தியாவில், தமிழையும் சேர்த்து, எந்த மொழியிலும் இப்படிப்பட்ட நிலை கிடையாது.) கடந்த பத்து ஆண்டுகளில் நல்ல வளர்ச்சி இருக்கிறது என்றார். பல்வேறு புதிய தலைப்புகளில் பல புதுப் புத்தகங்கள் இந்தியில் வெளியாகின்றன. எழுத்தாளர் சந்திப்புகள், இலக்கியத் திருவிழாக்கள், புத்தகக் கண்காட்சிகள் என்று புத்தக விற்பனையைப் பரவலாக்கும், அதிகமாக்கும் முயற்சிகள் நிறைய நடப்பதாகச் சொன்னார். படிப்பவர்கள் நிறைய இருக்கிறார்கள்; ஆனால் அவர்களைச் சென்றடைவதுதான் கடினமாக உள்ளது என்றார். (இதே நிலைதான் பிற மொழிகளிலும்!) மொழிமாற்றல் புத்தகங்கள் நிறைய வருவதாகச் சொன்னார். புத்தம்புது ஆங்கிலப் புத்தகங்கள் மட்டுமல்லாது, நிறைய பழைய கிளாசிக் புத்தகங்களும் ஆங்கிலத்திலிருந்து அல்லது ஆங்கிலம் வழியாக இந்தி மொழிக்கு மாற்றப்படுகின்றனவாம். இந்திப் புத்தகங்கள், 50% மேற்பட்டவை அரசு நூலகங்கள்மூலம் வாங்கப்படுகின்றன என்றார். மத்திய அரசு, பல மாநில அரசுகள் என்று மிகப்பெரிய சந்தை உள்ளது. அதனால் தரமற்ற புத்தகங்கள் பலவும் அச்சிடப்பட்டு, அரசுகளுக்குத் தள்ளிவிடப்படுகின்றன என்றார்.

இந்திப் பதிப்பாளர்கள் பெரும்பாலும் ஹார்ட் பவுண்ட் கெட்டி அட்டைப் புத்தகங்களையே முதலில் பதிப்பிக்கிறார்கள்; பின்னர் பேப்பர் பேக் வடிவத்துக்கு மாறுகிறார்கள் என்றார். (ஆனால் ஹிந்த் பாக்கெட் புக்ஸ், பெங்குவின் போன்ற புதிய இந்திப் பதிப்பாளர்கள் முழுவதும் பேப்பர் பேக் வடிவிலேயே அச்சிடுகிறார்கள்.)

தேஸ்ராஜ் காலி, பஞ்சாபி பற்றிப் பேசினார். சுதந்தரம், தேசப் பிரிவினை ஆகிய காரணங்களால், பஞ்சாபி புத்தக உலகம், பாதிப் பேரை இழந்துவிட்டது. மேற்கு பஞ்சாப் சென்றவர்கள் பாரசீக எழுத்துருவில் பஞ்சாபியை எழுத ஆரம்பித்துவிட்டனர். பின்னர் மேலும் பாதிப் பேர், அதே மதக் காரணங்களுக்காக குருமுகியிலிருந்து விலகி இந்தி மொழி, நாகரி லிபி என்று மாறிவிட்டனர். இன்று குருமுகியில் எழுதப்படும் பஞ்சாபி மொழி இலக்கியம் பெரும்பாலும் மத இலக்கியமாக ஆகிவிடும் போக்கும் உள்ளது. ஆனாலும் தற்போது எழுதிக்கொண்டிருக்கும் குருமுகி/பஞ்சாபி எழுத்தாளர்களில் 70% பேர் தலித்துகள் என்று தான் ஆய்வுசெய்து கண்டறிந்துள்ளதாக தேஸ்ராஜ் கூறினார். அதனால் தலித் இலக்கியம் பெருமளவு பரவிவருவதாக அவர் சொன்னார். பஞ்சாபி மொழியில் புத்தகம் பதிப்பிக்கும் மிகப் பெரும் பதிப்பாளர்கள் பெரும்பாலும் சீக்கிய மதம் சார்ந்த புத்தகங்களையே வெளியிடுகிறார்களாம். கனடா போன்ற நாடுகளில் இந்தப் புத்தகங்களுக்குப் பெரும் சந்தை இருக்கிறதாம். ஆனால் மதத்துக்கு வெளியே அவர்கள் பதிப்பிப்பது மிகவும் குறைவு என்றார். இலக்கியம் போன்றவற்றைப் பதிப்பிப்பவர்கள் சிறு பதிப்பகங்கள்தான். அவர்களுடைய வியாபாரம் மிகவும் குறைவானது. ஆனால் சமீபத்தில் ஒன்பது சிறு பதிப்பாளர்கள் ஒன்றுசேர்ந்து, கல்லூரிகள், பள்ளிகள் ஆகிய இடங்களுக்குச் சென்று தங்கள் புத்தகங்களை விற்பனை செய்ய முனைந்துள்ளனராம். வரலாற்றுரீதியாக, மிகப் பெரிய பஞ்சாபி எழுத்தாளர்கள் (பேரா. மோகன் சிங், நானக் சிங், அம்ரிதா பிரீதம் ஆகியோர்) அனைவருமே சுயமாகப் புத்தங்களை வெளியிட்டு விற்றுவந்தவர்கள்தாம் என்றார். சமீபத்தில் நடந்த ஒரு என்.பி.டி புத்தகக் கண்காட்சியில் மொத்தம் 70 லட்ச ரூபாய்க்கு வியாபாரம் நடந்தது என்றார். (ஒப்பீட்டளவில் இது தமிழ்நாட்டில் சென்னையல்லாத ஒரு நகரில் நடக்கும் வியாபாரத்தைவிடக் குறைவானது. உதாரணமாக, சமீபத்தில் ராமநாதபுரத்தில் முதல்முறையாக நடந்த புத்தகக் கண்காட்சியிலேயே இந்த அளவு புத்தகங்கள் விற்பனை ஆகியிருக்கும்.)

ஒரு கட்டத்தில் அம்பேத்கர் புத்தகங்கள் விற்றன. பின்னர் நக்சலைட் கருத்துகள் கொண்ட புத்தகங்கள் அதிகம் விற்றன. அரசியல் மாற்றங்கள் நிகழும்போது அதற்கேற்றவாறு புத்தக விற்பனையிலும் மாற்றங்கள் நடைபெறுகின்றன. இப்போது தலித் இலக்கியம் வெகுவாக விற்கிறது என்றார்.

மங்கல் மாஜி, ஜார்க்கண்டிலிருந்து வந்திருந்தார். சந்தாலி என்ற மொழியில் புத்தகங்கள் எழுதுபவர், பதிப்பிப்பவர். சந்தாலி மொழி பேசுவோர் பிகார், ஜார்க்கண்ட், ஒடிஷா, சத்தீஸ்கர், அஹோம், வங்காளம், வங்கதேசம், நேபாளம் என்று பிரிந்துகிடக்கிறார்களாம். சந்தாலி மொழிதான் இந்தியாவிலேயே மிகவும் பழமையான மொழி என்றார். உலக மொழிகளுக்கெல்லாம் தாய் சந்தாலி மொழிதான் என்றார். (தமிழர்கள் இவரைத் தனியாகக் கவனித்துக்கொள்ளுங்கள்!) ஆனால் இந்த மொழி எழுத்து இல்லாமல் வாய்மொழியாக மட்டுமே இருந்துவந்திருக்கிறது. 1925-ம் ஆண்டில் ரகுநாத் முர்மு என்பவரும் வேறு சிலரும் இந்த மொழிக்கு ஒரு எழுத்துருவை உருவாக்கியிருக்கிறார்கள். அப்போதிலிருந்து சிறிது சிறிதாக இந்த மொழி, பள்ளிக்கூடங்களுக்குச் சென்றிருக்கிறது. இன்று இந்த மொழியில் கல்லூரிப் படிப்பும் படிக்கலாமாம். ஆனால் 2003-ல்தான் இந்த மொழியை மத்திய அரசு அங்கீகரித்திருக்கிறது.

ஆண்டுக்கு சுமார் 100 புத்தகங்கள் சந்தாலி மொழியில் வெளியாகிறதாம். இது அதிகாரபூர்வ தகவல், ஆனால் இதற்குமேலும் சில புத்தகங்கள் வெளியாகலாம் என்கிறார் மங்கல் மாஜி. பதிப்பாளர்கள் என்று நிறுவனமயமாக ஒருவரும் இல்லையாம். தனித்தனி மனிதர்கள்தான் புத்தகங்களை எழுதி, பதிப்பித்து வெளியிடுகிறார்கள். மங்கல் மாஜி 1996-ல் புத்தகங்களை விற்பனை செய்ய ஆரம்பித்திருக்கிறார். கொல்கத்தா புத்தகக் கண்காட்சியில் என்று நினைக்கிறேன். பலப்பல மாநிலங்களிலிருந்து மக்கள் வந்து சந்தாலி மொழிப் புத்தகங்களை வாங்கிச் செல்வதைப் பார்த்து, இந்தத் தொழிலிலேயே இறங்கிவிட்டார்.

நிறைய non-fiction புத்தகங்கள் விற்கின்றன என்றார். 25-26 பேர் ஒன்று சேர்ந்து ஒரு பதிப்பாளர் சங்கத்தை ஆரம்பித்துள்ளனராம். நாவல்கள், பாடல்கள் ஆகியவை அதிகம் விரும்பி வாங்கப்படுகின்றன என்றார். வங்காளத்தில் உள்ள நூலகங்கள்கூட சந்தாலிப் புத்தகங்களை வாங்குகின்றன; ஆனால் ஜார்க்கண்ட் அரசிடமிருந்து ஆதரவு இல்லை என்றார்.

ஸ்ரீதர் கௌடா, கன்னடப் பதிப்பாளர். கன்னடப் புத்தகங்களைப் படிப்பவர்களெல்லாம் 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றார். குழந்தைகள் எல்லாம் ஆங்கில வழிக் கல்வி பயிலச் சென்றுவிடுகின்றனர்; அதனால் கன்னடம் படிப்பது குறைந்துவருகிறது என்றார். ஆண்டுக்கு 7,000 புத்தகங்கள் (புதியவை + ரீபிரிண்ட்?) அச்சாகின்றன; ஆனால் 20% மட்டுமே புத்தகக் கடைகளுக்குச் செல்கின்றன என்றார். பிறவெல்லாம் நூலகங்களுக்காக என்றே அச்சிடப்படுகின்றன என்றார். மிகச் சிலதான் மீண்டும் மறு அச்சாக்கம் பெறுகின்றன என்றார்.

பூர்ணசந்திர தேஜஸ்வி என்ற எழுத்தாளரைப் பற்றிப் பேசினார். குவேம்பு என்ற புகழ்பெற்ற எழுத்தாளரின் மகன் இவர். கன்னடப் புத்தகங்களை பத்தாம் வகுப்பு படித்திருப்போரும் படிக்கவேண்டும் என்பதற்காக, எழுத்து நடையில் பெரும் மாற்றத்தைக் கொண்டுவந்தவர் இவர் என்றார். (2009-ம் ஆண்டில் இவர் இறந்துவிட்டார்.) இவருடைய புத்தகங்கள் ஆண்டுக்கு 3,000 பிரதிகள் விற்கின்றனவாம். ஆனால் யு.ஆர்.அனந்தமூர்த்தி போன்றோர் பேசுவது தலைப்புச் செய்திகளாக ஆகின்றனவே ஒழிய, அவர்களுடைய புத்தகங்கள் அதிகம் விற்பதில்லை என்றார். தேவனூர் மகாதேவா என்ற தலித் எழுத்தாளரைப் பற்றிச் சொன்னார். (என்ன சொன்னார் என்பதை நான் சரியாக உள்வாங்கிக்கொள்ளவில்லை.) பெங்களூர் புத்தகக் கண்காட்சி ரத்தானது குறித்து வருத்தம் தெரிவித்தார். மாறாக சென்னை புத்தகக் கண்காட்சிக்கு வந்திருந்தபோது, பெங்களூர் போல 20 மடங்கு பெரிதாக இருப்பதையும் இங்கு மக்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் புத்தகம் வாங்கிச் செல்வதைப் பார்த்து தான் அதிசயித்துப்போனதையும் சொன்னார். தனியாக இவருடன் பேசிக்கொண்டிருந்தபோது பெங்களூர் புத்தகக் கண்காட்சியில் கன்னடப் புத்தகங்களை விற்கும் ஸ்டால் போடுவதில் பிரயோஜனமே இல்லை என்றார். போட்ட முதல்கூடத் திரும்பக் கிடைப்பதில்லை என்றார்.

கௌரி நாத் என்ற இந்தி/மைதிலி எழுத்தாளர்/பதிப்பாளர் அடுத்துப் பேசினார். மைதிலி என்பது மக்கள் மொழி (ஜனபாஷா). ஒருவித வட்டார வழக்கு என்று எடுத்துக்கொள்ளலாம். (தமிழில் நாம் வட்டார வழக்குகளை இப்படிப் பிரித்துப் பார்ப்பதில்லை.) பிகாரில் மைதிலி பேசுபவர்கள் சுமார் 6 கோடிப் பேர் இருக்கிறார்களாம். நேபாளத்தில் 4 கோடிப் பேர். மைதிலி வட்டார வழக்கு என்ற நிலையில் இருப்பதால் அரசு எந்த ஆதரவையும் தருவதில்லை. எனவே விற்பனை செய்யும் புத்தகங்கள் எல்லாம் மக்கள் நேரடியாக வாங்குவதுதான். சாதாரண மக்கள் வாங்கி வாசிக்கிறார்கள் என்றார். சில எடுத்துக்காட்டுகளைக் கொடுத்தார். ராஜ்கமல் பதிப்பித்துள்ள சில இந்திப் புத்தகங்களின் மைதிலி வடிவம், இந்திப் பதிப்பு விற்பதைவிட மூன்று மடங்கு விற்கிறது என்றார். (அதாவது சில புத்தகங்கள் இந்தியிலும் மைதிலியிலும் ஒரே நேரத்தில் அச்சாகி விற்பனை ஆகின்றன! எழுத்துத் தமிழிலும் நாஞ்சில் நாட்டுத் தமிழிலும் ஒரு non-fiction விற்பனை ஆவதாக வைத்துக்கொள்ளுங்கள்!) சில ஆண்டுகளுக்குமுன் ராஜ்கமல் ஐந்து புத்தகங்கள் அடங்கிய ஒரு செட்டை மைதிலியில் வெளியிட்டார்கள்; ஆனால் அதன்பின் நிறுத்திவிட்டார்கள் என்றார். ஆண்டுக்கு 100 மைதிலி மொழிப் புத்தகங்கள் வெளியாவதாகச் சொன்னார்.

நேபாளத்தில் வெளியாகும் சில மைதிலிப் புத்தகங்கள் படுவேகமாக விற்கின்றன என்றார். சமீபத்தில் வெளியான ஒரு நாவல், இரண்டே மாதங்களில் 11 எடிஷன் விற்பனையாயின என்றார். ஆனால் இந்தியாவில் இந்தியின் தாக்கத்தால் மைதிலிப் புத்தகங்களுக்கு நெருக்கடி இருக்கிறது என்றார். இவரே ஆண்டுக்கு 50 புத்தகங்கள் வெளியிடுகிறார்; ஆனால் அதில் வெறும் 10 மட்டுமே மைதிலியிலானது என்றார்.

மைதிலி ஆரம்பத்தில் மிதிலாக்‌ஷர் என்ற எழுத்துருவில் எழுதப்பட்டுவந்ததாம். இது கிட்டத்தட்ட வங்கமொழி எழுத்துருவைப் போன்றதாம். ஆனால் நாளடைவில் இந்த எழுத்துருவை விட்டுவிட்டு நாகரி எழுத்துருவுக்கு மாறிவிட்டார்களாம். ஆரம்பக் கட்டத்தில் இதற்கு எதிராகவெல்லாம் சில போராட்டங்கள் நடந்தனவாம். ஆனால் இன்று யாரும் மைதிலியை நாகரியில் எழுதுவதற்கு எதிர்ப்பு எதையும் தருவதில்லை என்றார். இவராலேயே மிதிலாக்‌ஷர் லிபியைக் கஷ்டப்பட்டுத்தான் படிக்கமுடியும்; ஆனால் எழுதமுடியாது என்றார். இவர் எழுதுவது நாகரியில்தானாம். இன்று மைதிலியில் அச்சாகும் புத்தகங்கள் எல்லாம் நாகரி லிபியிலேயே எழுதப்படுகின்றன என்றார்.

நிகழ்ச்சியை வினுதா மால்யா மிக அழகாக ஒருங்கிணைத்தார். ஸ்ரீதர் கௌடாவைத் தவிர அனைவரும் இந்தியிலேயே பேசினர். அதையெல்லாம் ஆங்கிலத்தில் மாற்றி அழகான சுருக்கத்தை அவ்வப்போது அளித்துவந்தார்.

***

9 comments:

 1. இந்தி மற்றும் ஆங்கிலம் மற்ற மொழிகளின் பயன்பாடுகளை கண்டிப்பாக குறைப்பது கண் கூடாகத் தெரிகிறது

  ReplyDelete
 2. எனது சக வேலைத் தோழர் இந்திய-நேபால எல்லையிலிருந்து வந்தவர். மைதிலியை தாய்மொழியாகக் கொண்டவர். மிதிலாக்‌ஷர் என்பது முற்றிலும் வழக்கொழிந்து விட்டதாகவும், அனைவரும் நேபாளி, மைதிலியை தேவநாகரியிலேயே எழுதுவதாகவும் கூறினார்.

  ReplyDelete
 3. நன்றி பல. நாம் தான் அடுத்த அடி எடுத்து வைக்கவேண்டும்.
  இன்னம்பூரான்

  ReplyDelete
 4. நாகரி லிபி என்பது தேவநாகரி லிபியிலிருந்து வேறுபட்டதா? மைதிலி, போஜ்புரி, அவதி, ஹரியான்வி, சந்தாலி என்பது போன்ற பல மொழிகள் தமிழ் வட்டார வழக்குகள் போன்றனவேயா அல்லது (சந்தாலி போன்று) இவற்றில் சில தனித்த மொழிகளா என்பது சற்று குழப்பமாகவே உள்ளது.

  சரவணன்

  ReplyDelete
 5. பத்ரி போன்ற சுய எழுச்சியுள்ள நவீன பதிப்பாளர்கள் இன்னும் சற்று முயன்றால், இந்திய மொழிகளில் அதிகம் விற்பது தமிழில் தான் -என்ற நிலையைக் கொண்டுவர முடியும். (2) எனக்குத் தோன்றுவது என்னவென்றால்: புத்தகங்களுக்கும் 'ஆடித்தள்ளுபடி' விழா நடத்தினால் என்ன? அதை ஜூலைத் திருவிழா அல்லது ஆகஸ்ட்டுத்திருவிழா என்றும் அழைக்கலாம். ஜனவரியிலிருந்து ஆறு மதங்கள் கழித்து நடப்பதால் விற்பநிக்கும் அதிக வாய்ப்பு உண்டு. பதிப்பாளர்களின் கிடங்கிலிருந்து புத்தகங்கள் வெளியேறவும் அதனால் புதிய நூல்கள் வெளியிடப்படவும் வழி ஏற்படும். (இப்போது சென்னையில் எல்லாப் பதிப்பகங்களும் நவம்பர் -டிசம்பர் மாதங்களில் மட்டுமே உழைக்கிறார்கள் என்று தெரிகிறது. மற்ற மாதங்களில் பெரிய தொய்வு தான் காண முடிகிறது.

  ReplyDelete
 6. Your post contains a lot of feel good elements. It is a great feeling to come to know we have far more book lovers in Tamil than in Kannada.

  ReplyDelete
 7. பத்ரி, தமிழ்ப் பதிப்புலகம் மற்றும் வாசிப்பு பற்றிய உங்கள் கணிப்பாக நீங்கள் ஏதும் இந்த அமர்வில் பகிர்ந்தீர்களா அல்லது பார்வையாளராகக் கலந்து கொண்டீர்களா?
  ஆம் எனில் உங்கள் கருத்துகளையும் இங்கு பகிருங்களேன்..

  குழந்தைகளுக்கான படங்களுடன் கூடிய நன்னெறிப் புத்தகக் கதைப் புத்தகங்கள் ஏதும் கொண்டு வரும் எண்ணம் இருக்கிறதா?

  ReplyDelete
 8. Looks like there is a generation gap among readers in some languages. Unless reading habit and reading in mother/vernacular language is inculcated as a part of the educational process the possibility of many young readers preferring to read in English and ignore what gets published in vernacular languages will result in significant changes in reading patterns affecting book publishing in vernacular languages.

  ReplyDelete