Sunday, May 04, 2014

உத்தமர்சீலி கிராமப் பயணம்

சமயபுரம் எஸ்.ஆர்.வி மெட்ரிக் பள்ளியில் "வெளிக்காற்று உள்ளே வரட்டும்" என்ற ஒரு வார முகாம் ஒவ்வோர் ஆண்டும் நடந்துவருகிறது. எழுத்தாளர்கள் ஞாநியும் தமிழ்ச்செல்வனும் ஆலோசகர்களாக இருந்து உருவாக்கியுள்ள நிகழ்வு இது.

பதினோராம் வகுப்பு படிக்கும் மாணவர்களில் 200 பேரைத் தேர்ந்தெடுத்து, ஆண்டு முழுதும் அவர்களுக்கென்று பிரத்யேகமான நிகழ்வுகளை நடத்துகிறார்கள். பின்னர் ஆண்டிறுதியில், மே மாதத்தில் ஒரு வார முகாம் நடைபெறுகிறது. இதில் பல சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள், இதழாளர்கள் ஆகியோர் மாணவர்களிடம் வந்து பேசுகின்றனர். யோகா பயிற்சி கொடுக்கப்படுகிறது. மாணவர்கள் சேர்ந்து ஒரு நாடகம் போடுகிறார்கள். இத்துடன் மாணவர்கள் ஒருநாள் அருகில் இருக்கும் கிராமம் ஒன்றுக்குச் சென்றுவருகிறார்கள்.

இம்முறை இந்த கிராமப் பயணத்தை மேலும் செறிவானதாக ஆக்கலாம் என்று அது தொடர்பான ஒரு திட்டத்தை நான் பள்ளி முதல்வர் துளசிதாசனிடம் அளித்தேன். ஏற்கெனவே கிண்டி பொறியியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்களுடன் சேர்ந்து இரு கிராமங்களில் இதுபோன்ற பயிற்சியைச் செய்திருக்கிறோம். ஆனால் அவையெல்லாம் ஒரு வார கால முகாம்கள். இதுவோ ஒரே ஒரு நாள்.

பேராசிரியர் ரெங்கசாமி, மதுரை சமூக அறிவியல் கழகத்தில் டீனாக இருந்து ஓய்வுபெற்றவர். அவர்தான் பங்களிப்பு முறையின் அடிப்படையில் கிராமங்களை அறிந்துகொள்வது குறித்த என்.எஸ்.எஸ் நிகழ்வுகளை ஒருங்கிணைத்து வழி காட்டியவர். ஒருநாள் நிகழ்ச்சி என்றால் அதனை எப்படிச் செயல்படுத்தலாம் என்று யோசித்து அதற்கு ஒரு வழிமுறையை உருவாக்கினார். அவருடன் மதுரை சமூக அறிவியல் கழகத்தில் முதல்வராக இருந்து ஓய்வுபெற்ற பேராசிரியர் நாராயண் ராஜாவும் கலந்துகொண்டார். எங்கள் மூவருக்கும் உதவியாக திருப்பூரைச் சேர்ந்த சேகர் (இவர் மென்பொருளாளர்; மிகவும் சுவாரசியமானவர்; பிறகு இவரைப் பற்றி எழுதுகிறேன்) சேர்ந்துகொண்டார்.

திருச்சிக்கு அருகில் உள்ள உத்தமர்சீலி என்ற கிராமத்தை பள்ளி நிர்வாகத்தினர் தேர்ந்தெடுத்திருந்தனர். ரெங்கசாமியும் பள்ளி நிர்வாகத்தினரும் கிராமத்துக்கு முன்னதாகச் சென்று பஞ்சாயத்துத் தலைவர், கவுன்சிலர், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் சிலருடன் பேசி, மாணவர்களின் வருகை குறித்தும் நோக்கங்கள் குறித்தும் விளக்கியிருந்தனர். எனவே கிராம நிர்வாகத்தின் முழுமையான ஒத்துழைப்பு எங்களுக்கு இருந்தது.


அந்த நாளை மூன்று பகுதிகளாகப் பிரித்துக்கொண்டோம். முதல் பகுதியில் எட்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்ட மாணவர்கள், கிராமம் முழுதும் பரவி, குறிப்பிட்ட துறை சார்ந்த பல படங்களைப் பிடித்துக்கொண்டு, கிராம மக்களிடம் அதுகுறித்த தகவல்களைக் கேட்டுக் குறித்துக்கொள்வார்கள். இரண்டாவது பகுதியில் கிராம நிர்வாகத்தினரும் பொதுமக்களும் குழுமியிருக்க, ஒவ்வொரு படமாகப் பெரிய திரையில் காட்டப்படும்போது, கிராம மக்கள் அது குறித்த தகவல்களைப் பகிர்ந்துகொள்வார்கள். மாணவர்களும் விவாதத்தில் கலந்துகொள்வார்கள். கேள்விகளைக் கேட்பார்கள். மூன்றாவது பகுதியில், பள்ளிக்கு மீண்டும் வந்து மாணவர்கள் தங்களுக்குள் விவாதத்தைத் தொடர்வார்கள்.


கிராம நிர்வாகம், கல்வி, விவசாயம், பிற தொழில்கள், சமுதாய அமைப்பு, சுகாதாரம், வழிபாட்டுத் தலங்கள் போன்ற துறைகளை எடுத்துக்கொண்டோம். காலை ஒன்பது மணி முதல் மூன்று மணி நேரத்துக்கு மாணவர்கள் கிராம மக்களிடம் பேசிப் படங்களை எடுத்துக்கொண்டனர். சுமார் 750 குடும்பங்கள் அந்த கிராமத்தில் வசிக்கின்றன.

அடுத்து சமுதாய நலக் கூடத்தில் சுமார் 200 மாணவர்களும் சுமார் இருபது கிராமத்தினரும் பங்கேற்றனர். தவிர, ஆசிரியர்கள், நாங்கள் சிலர் இருந்தோம். மின்வெட்டு இருக்கும் என்பதால் ஜெனரேட்டர் ஏற்பாடு செய்திருந்தோம். பெரிய திரையில் படங்களை ப்ரொஜெக்ட் செய்ய வசதியான ஏற்பாடுகளைக் கையோடு கொண்டுவந்திருந்தோம். ஒவ்வொரு துறையாக, ஒவ்வொரு படமாக வரவர, கிராமத்தவர்கள் பல தகவல்களைப் பகிர்ந்துகொண்டனர். பேராசிரியர் ரெங்கசாமி, இந்தப் பகுதியை மிகத் திறமையாகக் கையாண்டு, கிராமத்தவர்களிடமிருந்து தகவல்களைக் கறந்தார். அப்பகுதியின் விவசாயம் குறித்து, நூறு நாள் வேலைத்திட்டம் குறித்து, பள்ளிக்கூடம் குறித்து, கல்வி பற்றியும் பெண்கள் பற்றியும் சாதிகள் பற்றியும் பல தகவல்கள் பகிர்ந்துகொள்ளப்பட்டன. எல்லாமே முழுமையான தகவல்கள் என்று சொல்ல முடியாது. மறைக்கவேண்டிய தகவல்கள் மறைக்கப்பட்டன. சர்ச்சைக்குரியவை பூசி மெழுகப்பட்டன.


அனைவரும் பெருமாள் கோவில் சென்று, பள்ளிக்கூடத்திலிருந்து தயார்செய்து கொண்டுவரப்பட்ட மதிய உணவு உண்டபின் மீண்டும் பள்ளிக்குத் திரும்பினோம்.


சிறிது ஓய்வுக்குப்பின், மாலை 5 மணிக்கு மாணவர்கள் கலந்துகொள்ளும் அமர்வு தொடங்கியது. நான் இதனை முன்னின்று நடத்தினேன். கிராம ஆட்சிமுறை, நிர்வாகச் சிக்கல்கள், சாதிப் பூசல்கள், தீண்டாமை, பெண்களின் நிலை, கல்வி, மது போன்ற தலைப்புகளில், தாங்கள் பார்த்த, கேட்ட, புரிந்துகொண்ட தகவல்களை மாணவர்கள் முன்வைத்துப் பேசினர். விவாதம் மிக ஆழமாக இருந்தது. பொதுவாக பொறியியல் கல்லூரி என்.எஸ்.எஸ் மாணவர்களுடன் இவை குறித்து விவாதிக்கும்போது மிகக் குறைவான மாணவர்களே வாய் திறந்து பேசுவார்கள். பல நேரம் கமுக்கமாக வாயே திறக்காமல் இருந்துவிடுவார்கள். ஆனால் இங்கே மாணவர்கள் பேசத் தயங்கவேயில்லை. குறைந்தது 50 பேருக்கு மேல் பேசியிருப்பார்கள். மேலும் அவர்களின் பேச்சுத் திறனும் விவாதிக்கும் திறனும் மிகச் சிறப்பாக இருந்தது. நாங்கள் தமிழிலேயே உரையாடினோம்.


எந்தக் கிராமத்தைப் பற்றியும் ஒரு நாளில் முற்றிலுமாகப் புரிந்துகொள்ள முடியாது. ஆனால் பள்ளியில் படிப்பதற்கும் நேரில் இருப்பதற்குமான வித்தியாசம் என்ன என்பதை மாணவர்களுக்குக் காட்ட முடிந்தது. உண்மையில் பல முகங்களைக் காட்ட முடிந்தது. ஒரே விஷயத்தை எப்படி மக்கள் பல கோணங்களில் புரிந்துகொண்டு, பல விதங்களில் பேசுகிறார்கள் என்பதைச் சுட்டிக்காட்ட முடிந்தது. சாதிச் பிரச்னை, தீண்டாமை, இரட்டைக் குவளை முறை (இந்த கிராமத்தில் உள்ளது), கிராம நிர்வாகத்துக்கு என்று வரும் பணம் மடைமாற்றப்படுவது, ஊழல், பெண்களின் நிலை, ஆண்-பெண் நாள்கூலியில் உள்ள வித்தியாசங்கள், மதுவின் அதீதத் தாக்கம், அதனால் வரும் அழிவு என்று பலவும் மாணவர்களைக் கோபப்படுத்தியது. அதே நேரம் இவற்றுக்கெல்லாம் உடனடித் தீர்வுகள் என்று எவையும் இல்லை, தீர்வுகள் நீண்டகாலத் தன்மை கொண்டவை என்பதைப் பற்றியும் ஓரளவுக்கு விவாதித்தோம். 

மணி இரவு எட்டு ஆகிவிட்டது. இதற்குமேல் உணவளிப்போர் இரவு உணவு அளித்துவிட்டு வீடுகளுக்குப் போகவேண்டும் என்பதால் முதல்வர் துளசிதாசன் தலையிட்டு நிகழ்ச்சியை நிறுத்தவேண்டியதாயிற்று. இல்லாவிட்டால் இன்னமும் இரண்டு, மூன்று மணி நேரங்கள் பேசியிருப்போம்.

இதுபோன்ற நிகழ்வுகளின் தாக்கம் என்ன என்று எனக்கு முழுமையாகப் புரியவில்லை. ஆனால் ஏதோ ஓரளவில் மாணவர்களை நிஜ உலகம் குறித்து சென்சிடைஸ் செய்ய முடிகிறது என்று நினைக்கிறேன். தாம் வாழவேண்டிய சமூகத்தை எப்படி மாற்றவேண்டும் என்பது குறித்து அவர்கள் சிந்திப்பதற்கு அடித்தளம் அமைத்துக்கொடுக்க உதவும் என்று நினைக்கிறேன்.

10 comments:

 1. What you are doing is an excellent activity and the kids get a platform to discourse there by the kids from multiple background will start merging in future - the double tumbler system will disappear as the multi-background kids will see and hear other views - i.e. when the next generation takes over, hopefully this will fade away. Fantastic effort and God be with you to support and sustain such events.

  ReplyDelete
 2. உத்தமர்சீலி peyarkkaaranam enna ?

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சங்கர் Sir,

   முதலில் இந்த ஊர் உத்தமர்சீலி, உத்தமர்சேரி, உத்தமசீலி, உத்தமசேரி பல பெயர்களைக் கொண்டுள்ளதே ஆச்சரியமானது. கரிகாற் சோழன் இங்கு தங்கியிருந்துதான் கல்லனையைக் கட்டினார் என்றும் ஒரு பேச்சு உள்ளது.

   பெயர்க்காரணங்கள்.
   1). உத்தம சோழன் என்னும் அரசன் ஆண்டதால் இது பிற்காலத்தில் சோழ அரசகுலப்பெயர் மருவி உததமசீலி என்றானது.

   2). கோயிலுக்கு பூஜை செய்யும் குடும்பத்தார்கள் மூன்றே மூன்று குடும்பம்தான் வாழமுடியும் என்ற சாபம் உள்ளதாம். காரணம் இரண்டு நபர்கள் அபயம் தேடி கோயில் பூசாரியிடம் தஞ்சம் கேட்டுள்ளனர். பூசாரியும் கோயிலுக்குள் இருவரையும் வைத்து பூட்டி விட்டார். பிறகு சிறிது நேரத்தில் அந்த இருவரையும் தேடி வந்தவர்கள் பூசாரியிடம் விசாரித்துள்ளனர். பூசாரியோ தஞ்சமாக அடைந்த இருவரையும் காட்டி கொடுத்து பூட்டையும் திறந்து விட்டுள்ளார். தேடி வந்தவர்கள் இருவரையும் வெட்டியுள்ளனர். அவர்கள் உயிர் பிரியுமுன் "இந்த ஊர் உத்தமர் வாழும் சீலியில்லை இது உத்தமசேரி" என்று கூறினார்கள் என்ற கதையும் இங்கு நிலவுகிறது, சாபத்தால் கோயில் பூசாரிகள் குடும்பம் பெருகினால் பெருகும் குடும்பம், அல்லது பழைய குடும்பம் வெளியூர் சென்று Average விடுகிறார்கள்.

   3) சீலி என்ற உத்தமர் வாழ்ந்துள்ளார் என்பதனால் இப்பெயர்.

   4) அரசின் பல ஆவணங்களில் உத்தமச்சேரி என்றுதான் உள்ளது. அழைப்பது உத்தமசீலி என்று.

   இன்னும் இது போன்று ஏராளமாக செய்திகள் உள்ளன. ஊரைச்சுற்றி உத்தமர்சீலி, உத்தமர்சேரி, உத்தமசீலி, உத்தமசேரி அனைத்து பெயர் பலகைகளும் உள்ளன.

   பேராசிரியர் திரு.S.ரெங்கசாமி அவர்கள் சொன்னது நிறைய யோசிக்க வைத்துள்ளது.
   அதாவது மன்னர்கள் வலம் வந்த இது போன்ற கிராமங்கள் ஏன் வளர்ச்சி பெறவில்லை. ஐம்பது அறுபது வருடங்களுக்குள் தோன்றிய ஊர்கள் இப்போது பெரும் நகராகி நாலு கால் பாய்ச்சலில் ஓடுகிறது, ஆனால் சரித்திரம் கூறும் ஊர்களின் வளர்ச்சி எதனால் நின்று போனது என்னும் கேள்விதான்.

   Delete
  2. மிக்க நன்றி :-)

   கொற்கை என்ற ஊரைப் பற்றிக் கேள்விப்பட்டபோதும் நீங்கள் சொன்னது போலவே உணர்ந்தேன்.

   Delete
 3. முனைவர் ப. சரவணன்Sun May 04, 09:00:00 PM GMT+5:30

  பேரன்புள்ள எழுத்தாளரே வணக்கம்!
  மிக நல்ல முயற்சி. பாடத்திட்டம் காட்டும் சமுதாயம் வேறு இனி வாழப்போகும் சமுதாயம் வேறு என்பதனைப் பள்ளிக்குழந்தைகள் புரிந்துகொள்வார்கள் (தற்போது அது தெளிவற்ற புரிதல்லாக இருப்பினும்). “நிமிர்ந்துநில்“ திரைப்படக் கதைநாயன் போல் இவர்கள் யாரும் சமுதாயத்தில் திண்டாடாமல் இருக்க இரு வழிவகுக்கும்.
  வாழ்த்துகள்.

  ReplyDelete
 4. நல்ல முயற்சி, இன்றைய மாணவர்களுக்கு அவர்கள் வாழப்போகும் சமுதாயம் பற்றிய விழிப்புணர்வு நிச்சயம் தேவை. இதுபோன்ற முயற்சிகள் அதற்கு கை கொடுக்கும்...

  ReplyDelete
 5. Nice effort. Great work. This real time experience for them would have made them think a lot.

  ReplyDelete
 6. இது போன்ற நிகழ்வுகளை மேலும் பல இடங்களில் நடத்த வேண்டுகின்றேன். நகர மாணவர்களிடம் சிறு தயக்கயமும் அச்சமும் இருப்பது உண்மை. அதற்கு பள்ளி அல்லது கல்லூரி நிர்வாகமும் காரணம். அதனால்தான் அவர்கள் இந்த கிராம மாணவர்கள் போல் பேசுவதில்லை.

  தங்கள் இந்த சேவையை தொடர வாழ்த்துகள்.

  ReplyDelete
 7. இது ஒரு வித்தியாசமான முயற்சியாக தெரிகிறது. இளைய சமுதாயம் முற்றிலும் உணர வேண்டியது நாட்டின் வளர்ச்சியில் கிராமங்களின் பங்களிப்பு பற்றியது என்பது எனது கருத்து. ஏன் என்றால், தற்போதைய சூழ் நிலையில் நகர்புறத்தில் வேலை பார்ப்பதை மட்டுமே பெரும்பாலானோர் விரும்புகின்றனர். இப்படியே போனால் விவசாயம் என்பதே காணாமல் போய்விடும். மேலும் கிராமத்தில் உள்ள பிரச்சனைகளை கண்டறியவும் அதற்கு நல்ல வழியில் தீர்வு காண்பதற்கும் இத்தகைய முயற்சி சிறிதளவேனும் பலன் அளிக்கும் என்று நம்புகிறேன்.

  வெ. வெங்கடேஸ்வரன்

  ReplyDelete
 8. இன்றைய தலைமுறைக்கு கிராமங்களின் இன்றியமையாமையை அறிவுறுத்துவது அவசியத் தேவையாக உள்ளது. ஏன் என்றால் தங்களின் எதிர்கால முன்னேற்றத்திற்காக கிராமங்களில் உள்ள இளைஞர்கள் நகர்புறங்களில் வேலைதேடி செல்வது அதிகமாகிக் கொண்டே செல்கிறது. இப்படியே போனால் விவசாயம் என்பதே காணாமல் போய்விடும்.

  தாங்கள் நடத்தும் இதுபோன்ற புதிய நிகழ்வுகள் நிச்சயமாக நகர்புற மாணவர்களுக்குக் கூட கிராமங்களில் உள்ள பல்வேறு வாய்ப்புகளை பற்றி அறிய உதவுவதுடன் கிராமத்தில் வசிப்பவர்களும் தங்களிடம் உள்ள நிறை குறைகளை உணர்ந்துகொள்ள ஒரு வாய்ப்பு அமையும் என்பதில் சிறிதும் ஐயம் இல்லை.

  வாழ்த்துக்கள்.

  ReplyDelete