Friday, May 16, 2014

புதிய இந்தியா

முதலில் இவரை பாஜகவின் பிற தலைவர்களே வரவிடாமல் செய்துவிடுவார்கள் என்றார்கள். நடக்கவில்லை.

தேசிய ஜனநாயக முன்னணியின் பிற கட்சிகள் அவரை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்றார்கள். நிதீஷ் குமார் விலகவும் செய்தார். ஆனால் இறுதியில் ஓரளவுக்கு நல்ல கூட்டணி உருவாக்கப்பட்டது. தமிழகத்தில்கூட ஒரு கூட்டணி உருவானது.

கட்டாயமாக தே.ஜ.முன்னணிக்குப் பெரும்பான்மை கிடைக்காது என்றார்கள். (நானும்கூட கொஞ்சம் குறைவாகக் கிடைக்கும், ஆனால் தேர்தல் முடிவுகளுக்குப்பின் பிற கட்சிகள் வந்து சேர்ந்துகொள்ளும் என்றுதான் நினைத்திருந்தேன்.) தேவையே இல்லை என்றானது.

பாஜகவுக்கே 272+ கிடைத்தது!

மோதி ஊதிப் பெருக்கிய வெறும் பலூன் என்றார்கள். கருத்துக்கணிப்புகள் பொய் என்றார்கள். கார்ப்பரேட் சதி என்றார்கள். அனைத்தையும் மோதி உடைத்தெறிந்திருக்கிறார்.

மோதி செய்துள்ளது ஒன்றல்ல, பல சாதனைகள்.

1. உட்கட்சி ஜனநாயகத்தின் அடிப்படையில் கட்சியின் பிரதமர் வேட்பாளராக, ஒவ்வொரு தடையையும் உடைத்துக்கொண்டு மோதி முன்னுக்கு வந்தார். எதிர்த்த அத்வானி, சுஷ்மா போன்றவர்களை நியாயமான முறையில் தோற்கடித்து முன்னுக்கு வந்தார். பாஜகவின் அனைத்து மாநில முதல்வர்களையும் தன்னை ஏற்றுக்கொள்ள வைத்தார். அதன் பின்னரே பிரசாரத்தில் இறங்கினார்.

2. இந்தியா இதுவரை கண்டிராத மாபெரும் தேர்தல் பிரசாரத்தை முன்வைத்தார். அதன் பின்னான உழைப்பு அபாரமானது. ஒரு பக்கம் பொதுக்கூட்டங்கள். இன்னொரு பக்கம் இணையம் வழியாக அவற்றின் நேரலை ஒளிப்பதிவு. இதில் அவர் தொலைக்காட்சி நிலையங்களை முற்றிலுமாகத் தேவையற்றவையாக ஆக்கினார். ஆனால், இவருடைய பேச்சுகளைக் காண்பிப்பதால் தங்கள் ரேட்டிங் உயர்கிறது என்பதால் தொலைக்காட்சிகளே இவருடைய பேச்சுகளைக் காண்பிக்கத் தொடங்கின. இவரைப் படுமோசமாகத் தாக்கிய தொலைக்காட்சிகளே வரிசையில் நின்று இவரைப் பேட்டி காண விரும்பின.

3. பொதுமக்களுடன் உணர்வுபூர்வமான ஓர் இணைப்பைக் கொண்டுவந்தார். எனக்கு இவருடைய உரைகள் போதுமானவையாகத் தோன்றவில்லை. என்ன செய்யப்போகிறோம் என்பதை இவர் இன்னமும் ஆழமாகச் சொல்லியிருக்கலாம் என்பதுதான் என் கருத்து. ஆனால் அவர் மிக எளிய மக்களிடம் நேரடியாகப் பேச அதெல்லாம் தேவையில்லை என்று முடிவு செய்தார் போலும். அவருடைய உத்திதான் இறுதியில் வென்றது.

4. உத்தரப் பிரதேசத்தில் மிகச் சிறப்பான தேர்தல் பணியின்மூலம் 80 இடங்களில் 73 இடங்களைக் கைப்பற்றியிருக்கிறார். இது ஒன்றுதான் பாஜகவை 272+ என்ற எண்ணிக்கைக்குக் கொண்டுபோனது.

5. இனி கூட்டணி ஆட்சிதான் என்று குதூகலித்த அனைவரையும் முற்றிலுமாகத் தோற்கடித்திருக்கிறார்.

6. காங்கிரஸ் இனி மீண்டுவருவது மிகக் கடினம் என்று ஆக்கியிருக்கிறார். காங்கிரஸின் ஐடியாலஜி என்ன? ஒரு குடும்ப ஆட்சி என்பது இனியும் சாத்தியமா? இதுபோன்ற கேள்விகளையெல்லாம் கேட்கவைத்திருக்கிறார்.

7. இறுதியாக பிரசாரத்தின் முக்கியமான புள்ளி வளர்ச்சியே என்பதன்மூலம் தேசியக் கதையாடலை மாற்றியிருக்கிறார். வளர்ச்சி என்றால் என்ன என்பதில் மாறுபாடுகள் இருக்கலாம். ஆனால் இனி வளர்ச்சி ஒன்றை மட்டும்தான் அனைத்துக் கட்சிகளும் பேசமுடியும் என்று ஆக்கியிருக்கிறார்.

பேச்சுகள் முடிந்துவிட்டன. இனி செயல்.

9 comments:

 1. India was looking for a DEFINITION in the leadership..and even the secular reluctantly voted for that DEFINITION inspite of the blatant right wing image of Modi.

  ReplyDelete
 2. எல்லோரும் தோற்ற ஒரே மாநிலம் - தமிழ்நாடு.

  அதிமுக தவிர மற்ற கட்சிகள் அனைத்தும் நேரடியாக தோல்வியுற்று இருந்தாலும், அதிமுக விற்கு கிடைத்துள்ளது மறைமுக தோல்வியே. 40 ஐயும் வென்றால் எப்படியும் பிரதமராக வாய்ப்பு கிடைத்துவிடும் என்று மிகப்பெரிய நம்பிக்கையுடன் அரும்பாடுபட்ட ஜெயலலிதா, கிட்டத்திட்ட எதிர்பார்த்தவை கிடைத்த பிறகும் அதனால் ஒரு பயனும் இல்லை என்று ஆனபின்பு, வெற்றிப் பெற்றும் தோல்வியுற்றவர் ஆகின்றார். சுரத்தே இல்லாமல் கடமைக்காக தொலைக்காட்சியில் அவர் நன்றி நவிலிய பாங்கிலேயே அவரது ஏமாற்றம் தெரிந்தது. இந்த தேர்தலுக்காக அதிமுக செலவு செய்தது ஏராளம். பயனில்லாத 37 எம்பிக்களைக் கொண்டு விட்டதை எடுக்க முடியாது என்பதை அவர் அறிவார். இதன் விளைவை தமிழகமே அனுபவிக்க வேண்டி வரும். தேர்தலுக்கு முன்பே ஒவ்வொரு அமைச்சர்களுக்கும் கோட்டா நிர்ணயிக்கப்பட்டு துறை வாரியாக பெரும் வசூல் நடைபெற்றது. இனி அது இரண்டு மடங்காகும். அடுத்த இரண்டு ஆண்டுகள் தமிழகத்திற்கு சோதனைக் காலமாகத்தான் இருக்கும்.

  ReplyDelete
  Replies
  1. நீங்கள் சொல்லியது மிகவும் சரியானது; நன்றி

   Delete
 3. தனிப்பெரும்பான்மை பெறுவார் என்று எதிர்பார்க்கவில்லை. ஆனால் பிரச்சினையில்லாமல் மோடி பிரதமராவார் என்றே நினைத்தேன்.

  ReplyDelete
 4. i was eagerly awaiting for ur post after the results .all is well now.thank u badri.

  ReplyDelete
 5. இனி செயல் தான் அது ததான் பயமாய் இருக்கிறது இன்றைக்கே இராம கோபாலன் அஞ்சலட்டையைக் காண்பித்து ஆரம்பித்திருக்கிறார்

  ReplyDelete
 6. பேரன்புள்ள திரு. பத்ரி அவர்களே
  வணக்கம்.
  இனி வாரிசு அரசியலுக்கு வாய்ப்பில்லை. மத்தியிலும் சரி மாநிலத்திலும் சரி. அந்த வகையில் எனக்கு மகிழ்ச்சியே.
  நன்றி.
  தங்கள்
  முனைவர் ப. சரவணன்.

  ReplyDelete
 7. மோடி மீது அவதூறுகளை அள்ளி வீசினால் அவரைத் தோற்கடித்து விட முடியும் என்று நினைத்தார்கள். அவர் மீது வாய்க்கு வந்தபடி ஏசினால் தோற்கடித்து விடலாம் என்று நினைத்தார்கள். அதுவும் நடக்கவில்லை.
  1984 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஒரு கட்சி தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்துள்ளது என்பது பெரிய நிம்மதி.

  ReplyDelete
 8. சுருக்கமான ஆனால் முக்கிய விதயங்களைத் தொட்டு விட்ட பதிவு.
  மோடி சுதந்திர இந்தியாவில் 70 களுக்குப் பிறகு வலம் வந்த தலைவர்களில் மிகவும் வித்தியாசமானவராகத் தெரிகிறார்.பல விதயங்களில் அட, என்று ஆச்சரியப் பட வைத்திருக்கிறார். ஒரு 'நின்று விளையாடும்' தலைவர் இந்தியாவிற்கு வெகு பத்தாண்டுகளுக்குப் பிறகு கிடைத்திருக்கிறார் என்றே நான் நினைக்கிறேன். இது ஒரு 65 சதம் எனது பார்வைக் கருத்தாக்கம்.(ஒப்பினீயன்)
  செயல் எந்த அளவிற்கு இருக்கும் என்பதைப் பொறுத்து மீதம் 35 சதத்தை முடிவு செய்யலாம்.

  ஆனால் தினமணி வைத்தியநாதனுக்கு அவர் அளித்த பேட்டியும் டைம்ஸ் அர்னானுக்கு அளித்த பேட்டியும்( ஒன்று தேர்தலுக்கு முன், இன்னொன்று தேர்தலுக்குப் பின்) மிகவும் ஆக்க பூர்வமான பார்வையைத் தந்திருக்கின்றன.

  மோடியை( ஆங்கிலத்தில் மோடி என்றுதான் எழுதுகிறார்கள், நீங்கள் ஏன் மோ'தி'ப் பார்க்கிறீர்கள்?) எழுந்து நின்று கை தட்டி வரவேற்கலாம். ( மக்கள் ஏற்கனவே அதைத் தேர்தலில் காட்டி விட்டார்கள்!)

  ReplyDelete