Tuesday, June 17, 2014

“எங்களுக்கு இந்திதான் வேண்டும்!” - தமிழர்கள் ஆர்வம்

என்.டி.டி.வியில் இப்படி ஒரு “சிறப்பு” செய்தி ஓடிக்கொண்டிருக்கிறது. அதில் பேசும் சிலர் எப்படியாவது தமிழ் படிப்பதிலிருந்து தப்பித்துக்கொள்ளவேண்டும் என்று பேசுகிறார்களே ஒழிய, இந்தி கற்றுக்கொள்வதால் உண்மையிலேயே ஏதேனும் நன்மை இருக்கிறது என்று உணர்ந்து பேசுவதுபோல் தெரியவில்லை. ஓரிரு திறமைசாலிகள், “லோக்கல் லாங்குவேஜும்” முக்கியம் என்கிறார்கள். ஆனால் அதை வீட்டிலேயே தெரிந்துகொண்டுவிடலாமாம். அதற்கு எதற்குப் பள்ளிக்கூடம் என்று கேட்கிறார்கள்.

தமிழ் மீடியம் படிப்பு என்பதை இன்று தமிழர்களுக்கு விற்பது மிக மிகக் கடினம். தாய்மொழியில் படித்தால்தான் நன்றாகப் புரியும் என்றெல்லாம் மக்களிடம் பேசப்போனால் உடனே ‘உன் மகன்/ள் எந்த வழியில் படிக்கிறான்/ள்?’ என்று கேள்வி கேட்பார்கள். என் மகள் சி.பி.எஸ்.இ பள்ளி ஒன்றில் ஆங்கில வழியில் படிக்கிறாள். ஆனால் தமிழ்தான் இரண்டாவது மொழி. அந்தப் பள்ளியில் சமஸ்கிருதம், இந்தி போன்ற பல ஆப்ஷன்கள் உள்ளன. மூன்றாவது மொழியாக (எட்டாம் வகுப்புவரை) இந்தி படித்தாள்.

குறைந்தபட்சம் தமிழை ஒரு பாடமாகவாவது படித்தாகவேண்டும் என்ற எண்ணம் இன்று நகரங்களில் வசிக்கும் உயர்மட்டத்தவர்களிடையே இல்லாமல் போய்விட்டது. வீடுகளில் ஆங்கிலம்தான் பேச்சு மொழி.

அப்படி இவர்கள் படிக்கும் இரண்டாம் மொழியான இந்தி, சமஸ்கிருதம், பிரெஞ்சு, ஜெர்மன் போன்றவற்றில் இந்த மாணவர்கள் எப்படிப்பட்ட உயர் நிலையை அடைந்திருக்கிறார்கள் என்றால் பெரும்பாலும் குப்பையாகத்தான் இருக்கும். உலகமயச் சூழலில் உலகை வெல்ல இன்னொரு மொழியைக் கற்பது மிக முக்கியமானது என்பதுபோல் இவர்கள் பேசினாலும், 12-ம் வகுப்புக்குப் பிறகு அதற்கான எந்தச் சிறப்பு முயற்சியையும் இவர்கள் எடுப்பதில்லை என்பதிலிருந்தே இவர்களுடைய குட்டு வெளிப்பட்டுவிடுகிறது. நீங்கள் படிக்கப்போவது பெரும்பாலும் பொறியியல். அங்கே உங்களுக்கு ஆங்கிலம்கூட அதிகம் சொல்லிக்கொடுக்கப்படுவதில்லை! ஆக, சும்மா எதையாவது சொல்லி, தமிழ்ப் படிப்பிலிருந்து ஓடிவிடுவதுதான் நோக்கம்.

இதற்குத் தமிழாசிரியர் பெருந்தகைகளும் ஒரு காரணம் என்பதை இங்கு நாம் குறிப்பிடவேண்டும். சமஸ்கிருதம் தொடங்கி பிரெஞ்சுவரை எளிமையான பாடங்கள் இருக்க, சமச்சீர் கல்வியின் தமிழ்ப் பாடம் மட்டும் வறண்டுபோன மொழியில் இருக்கிறது. அதன் தரமும் பிற மொழிப் பாடங்களைவிட அதிகம். தமிழின் தொன்மையான இலக்கியங்கள்கூட இருந்துவிட்டுப் போகலாம்; அவற்றைச் சுவையாகச் சொல்லித்தர முடியும். ஆனால் மிகக் கொடூரமான இலக்கணப் பாடங்கள்! எட்டுவிதமான பொருள்கோள்கள் யாவை, தகுந்த எடுத்துக்காட்டுகளுடன் விளக்குக! இவையெல்லாம் தேவையே இல்லை. அடிப்படையான திறன்களைப் பயிற்றுவிக்கும் பாடமுறையாக இல்லை.

இப்போதிருக்கும் பாடத்திட்டத்தைத் தொடருங்கள்... தமிழ்நாட்டில் ஒருவர்கூடத் தமிழ்ப் பாடத்தை விருப்பத்துடன் ஒரு பாடமாக எடுத்துப் படிக்க மாட்டார். சட்டம் இயற்றி மிரட்டித்தான் அவரைப் படிக்க வைக்க முடியும். ஒரு கட்டத்தில் நீதிமன்றம்கூட அவருக்கு ஆதரவாகப் போவதற்கு வாய்ப்பு உண்டு.

***

தமிழைக் கட்டாயமாக ஒரு பாடமாகப் படிக்கவேண்டும் என்ற தமிழக அரசின் சட்டத்தை நான் முழுவதுமாக ஆதரிக்கிறேன். ஆனால் அத்துடன் தமிழ்ப் பாடத்திட்டத்தை உடனடியாக மறுபரிசீலனை செய்யவேண்டும் என்ற கோரிக்கையையும் வைக்கிறேன்.

மேலும் ஆங்கிலம், தமிழ் இரண்டுக்கும் ஒவ்வொரு வகுப்புக்கும் இரண்டிரண்டு பாடத்திட்டங்கள் தேவை. ஆங்கில வழியில் படிப்பவருக்கான ஆங்கிலப் பாடம் சற்றே உயர் நிலையிலும் தமிழ் வழியில் படிப்பவருக்கான ஆங்கிலப் பாடம் சற்றே தாழ் நிலையிலும் இருக்கவேண்டும். அதேபோலத்தான் தமிழ்ப் பாடமும். எனவே எட்டாம் வகுப்பு என்றால், ஆங்கிலம்-உயர், ஆங்கிலம்-தாழ், தமிழ்-உயர், தமிழ்-தாழ் என்று நான்கு வெவ்வேறு பாடத்திட்டங்கள் வேண்டும். பரீட்சையின் கடுமையும் அவ்வாறே மாறவேண்டும்.

இவற்றுடன்கூட மும்மொழித் திட்டத்தையும் நடைமுறைப்படுத்தவேண்டும். மூன்றாவது மொழியாக, மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி, உருது, சமஸ்கிருதம், சீனம், ஜப்பானியம், ஜெர்மன், பிரெஞ்சு, ஸ்பானிஷ் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றைப் படிக்கவேண்டும் என்று சொல்லலாம். மூன்றாம் வகுப்பில் தொடங்கி பத்தாம் வகுப்பு வரை இந்த மூன்றாவது மொழியும் இருக்கவேண்டும். இதன் தரம் மேலே சொல்லப்பட்ட தமிழ், ஆங்கிலம் இரண்டையும்விடக் குறைவானதாக இருக்கவேண்டும்.

***

தமிழைத் தாய்மொழியாகக் கொள்ளாதவர்கள் என்ன செய்வது?

தமிழ் படிக்கப் பிடிக்கவில்லை அல்லது விருப்பமில்லை என்றால் சி.பி.எஸ்.இ பள்ளிகளில் சேர்ந்துகொள்ளுங்கள்.

உருது படிக்க விரும்பினால் அல்லது சமஸ்கிருதம் படிக்க விரும்பினால் என்ன செய்வது? அதனை மூன்றாவது மொழியாக எடுத்துக்கொள்ளுங்கள்.

இந்தி, சமஸ்கிருதம் இரண்டையும் படிக்க விரும்பினால்? ஒன்றைப் பள்ளியிலும் மற்றொன்றை இந்தி பிரசார் சபா, சமஸ்கிருத பாரதி போன்றவற்றில் சேர்ந்தும் படித்துக்கொள்ளுங்கள்.

***

தமிழை ஒரு பாடமாகவாவது கட்டாயமாகப் படிக்கவேண்டும் என்று சட்டம் இயற்ற தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளதா? தனி நபர் உரிமையில் தலையிடுவதாக ஆகாதா?

நீதிமன்றம்தான் இதற்குப் பதில் சொல்லவேண்டும். ஆனால் எனக்குத் தெரிந்தவரை, தமிழக அரசுக்கு இப்படிப்பட்ட சட்டத்தை இயற்றுவதற்கு அதிகாரம் உள்ளது. தமிழ் நாட்டில் பலருக்கு ஆங்கிலம் படிக்கப் பிடிப்பதில்லை. மாறாக மலையாளம் படித்தால் அதில் எளிதாகத் தேர்ச்சி பெறலாம் என்று நினைக்கிறார்கள். ஆனால் அவர்களை விட்டுவிடுகிறோமா? கிடையாதே? அவர்கள் ஆங்கிலத்தைக் கட்டாயமாகப் படித்துத் தேர்ச்சி பெற்றே ஆகவேண்டும் என்கிறோம் அல்லவா? அதேபோலத்தான் தமிழும் மற்றொரு கட்டாயப் பாடம்.

ஒருவர், தான் ஆங்கில வழியில் படிக்க விரும்பவில்லை, ஃபிரெஞ்சு வழியில் படிக்கிறேன் என்று சொல்வார். இன்னொருவர் முழுக்க முழுக்க சீன மொழிவாயிலாகவே படிப்பேன் என்பார். இவற்றை நாம் அனுமதிக்கிறோமா? இல்லையே?  தன்கீழ், தமிழ் வழியாக அல்லது ஆங்கில வழியாக மட்டுமே படிக்க முடியும் என்கிறது தமிழக அரசு. அதே அதிகாரத்தின்கீழ், தமிழையும் ஆங்கிலத்தையும் கட்டாயப் பாடங்களாகப் படித்தே தீரவேண்டும் என்று சொல்லவும் அரசுக்கு உரிமை உள்ளது.

தமிழே படிக்காமல் 12-ம் வகுப்பைத் தாண்ட, சி.பி.எஸ்.இ, ஐ.சி.எஸ்.இ போன்ற பிற போர்டுகள் இருக்கவே இருக்கின்றன.

25 comments:

  1. உங்களது கருத்துக்களை நான் அப்படியே வழிமொழிகிறேன். தமிழ் வேண்டாம் என்று சொல்லும் பெற்றோர்களும் குழந்தைகளும் பிற மொழியை சேர்ந்தவர்களாகத்தான் இருப்பார்கள்! இவர்கள் அவரவர்கள் மாநிலத்திற்கே திரும்பி சென்று அவர்களது குழந்தைகளை அங்கேயே படிக்க வைத்துக்கொள்ளலாம். தமிழ்நாட்டில் மட்டும்தான் தமிழே படிக்காமல் பட்ட மேற்படிப்பு கூட படிக்கலாம். இந்த அநியாயம் வேறு எந்த மாநிலத்திலும் செல்லுபடியாகாது. தமிழ்நாட்டில் வாழ்ந்துகொண்டு, தமிழ்நாட்டில் தொழில் செய்து கொண்டு, பிழைத்துக்கொண்டு, இங்கு சம்பாதித்துக்கொண்டு, சாப்பிட்டுக்கொண்டு தமிழ் படிக்க மாட்டேன் என்று சொல்வதற்கு எவ்வளவு தைர்யம் வேண்டும்! 'மெட்ரிகுலேஷன் பள்ளிகளை நடத்தி பிழைத்துக்கொண்டிருக்கும் கல்வி வியாபாரிகளால்தான் இவ்வளவு பிரச்சனைகளும்! அவற்றை தடை செய்தால்கூட தப்பில்லை. அறந்தை மணியன்.

    ReplyDelete
    Replies
    1. One can not be compelled. The court will strike it down. That means
      it is not legally enforceble. Your likes and prejudices can not be imposed on others. Even a Tamilian by birth ,if he does not want to learn Tamil ,how can we impose? Think.

      Delete
  2. உண்மையில் பொருள்கோள் போன்றவை சுவாரசியமாகத்தான் இருந்தன! 'சுரை ஆழ, அம்மி மிதப்ப' என்று செய்யுளில் இருக்கும். அதை மாற்றிப் படித்தால்தான் நிஜமான பொருள் வரும். இதெல்லாம் சுவாரசியமே. கணிதத்தில் கூடத்தான் தேவையே இல்லாமல் கண்ட கண்ட வடிவங்களுக்கு (ஒழுங்கற்ற நாற்கரம், டிரபீசியம், ராம்பஸ் என) பரப்பளவு கண்டுபிடிக்கும் சூத்திரங்கள் கற்றுத்தரப்படுகின்றன. வாழ்வில் இதெல்லாம் யாருக்காவது பயன் பட்டிருக்கின்றனவா?

    இதெல்லாம் இருக்கட்டும். சிபிஎஸ்இ போர்டில் 11, 12 வகுப்புகளில் ஆங்கிலம் மட்டுமே இருக்கிறது! இந்தியை கணிதத்துக்குப் பதிலாக சிறப்பு பாடமாக வேண்டுமானால் எடுத்துக்கொள்ளலாம். தமிழ்நாட்டில் ஏன் மேல்நிலையில் 2 மொழிப் பாடங்கள் (ஆங்கிலம் + தமிழ்) கட்டாயமாக வைக்கப்பட்டுள்ளன? சிபிஎஸ்இ-யில் ஐந்தே பாடங்கள், மொத்தம் 500 மதிப்பெண்கள் மட்டுமே. தமிழ் நாட்டு மாநில வழியில் 6 பாடங்கள், 1200 மதிப்பெண்கள் என்று இருக்கிறது.

    சரவணன்

    ReplyDelete
  3. //அந்தப் பள்ளியில் சமஸ்கிருதம், இந்தி போன்ற பல ஆப்ஷன்கள் உள்ளன. // இதில் எங்கே பல விருப்பத் தேர்வுகள் உள்ளன? ஒன்று வழக்கில் இல்லாத ஒரு மொழி . இன்னொன்று இந்திய அரசின் ஆதிக்க இந்தி மொழி . இரண்டும் நமக்கு தேவையில்லாதது . உண்மையில் வேறு ஒரு மொழியை கற்க வேண்டுமெனில் நமது அருகாமையில் உள்ள மொழிகளையே கற்க வேண்டும் . மலையாளம் , தெலுங்கு , கன்னடம் தான் கற்க வேண்டியது . அது நம் அண்டை மாநிலத்தவருடன் பழக பேச பயன்படும் .

    ReplyDelete
    Replies
    1. நண்பரே ! இந்தி மிக உபயோகமுள்ள மொழி. அண்டை மாநில மக்களிடமும் உரையாட உதவும். இந்தியாவின் எந்த பகுதிக்கு சென்றாலும் உதவியாக இருக்கும். பங்களூருவில் இருக்கும் ஒரு நபர் நான்கு,ஐந்து மொழிகள் பெசகூடியவாரக இருக்கிறார். இது கண்ணில் பட்டதில்லையோ? நமது விருப்பு வெறுப்புக்களை இன்றைய குழந்தைகளின் மீது திணித்தால் 60 பதுகளில் ஏற்பட்ட நிலை மேலும் நீடிக்கும். இது நல்லதா என்று சிந்திக்கவும்.

      Delete
    2. பொன்.முத்துக்குமார்Thu Jun 19, 08:32:00 PM GMT+5:30

      உண்மைதான், மறுக்கவில்லை. ஒருவர் பல மொழிகள் கற்றுக்கொள்வது வரவேற்கத்தகுந்ததுதான். ஆனால், அது தாய்மொழியை ஒதுக்கிவைத்துவிட்டுத்தான் இருக்கவேண்டுமா ? அதற்கு பல்லாண்டுகள் பள்ளியில் படித்தால்தான் ஆகுமா ? இது விருப்பு வெறுப்பு சம்பந்தப்பட்ட சமாசாரம் மட்டுமல்ல. தாய்மொழியை கற்றுக்கொண்டு, எழுதவும், படிக்கவும் தெரிந்துகொள்வதில் என்ன அவமானம் அல்லது கௌரவக்குறைச்சல் ? இதுதான் இங்கு கேள்வி. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரியமும், சிறப்பான இலக்கணக்கட்டமைப்பும், நாகரிகமும், வலுவான சொற்களஞ்சியமும், நவீனத்துக்கு ஈடுகொடுக்கும் வசதியும் கொண்ட செம்மொழியை, உயிர்ப்போடு வைத்திருக்க வேண்டிய நமது தார்மீக கடமையிலிருந்து, அருவருக்கத்தக்க நமது தாழ்வு மனப்பான்மையால் நழுவுவது நமக்கே இழுக்கில்லையா ?

      Delete
    3. இங்க தார்மீக கடமையெல்லாம் இல்லேங்க. தனது தாய்மொழியில படிக்கத் தெரியாதவன் வேறெந்த மொழியிலெ படித்துக் கிழிக்கப் போறான்? மனப்பாடம் பன்னிக்கிட்டு அதைப் போய் தேர்வில கக்கறது எல்லாம் வேலைக்காகாது. படிக்கிறது புரியனும். அதுக்குதான் தாய்மொழிவழி கல்வி. இதையெல்லாம் பத்ரியே நல்லா சொல்லிட்டாரு.

      Delete
  4. கட்டாய மூன்றாவது மொழிப்பாடம் கல்விச் சுமையைக் கூட்டும்.

    முதல் நிலை-ஆங்கிலம், உயர் நிலை - ஆங்கிலம் என பிரிப்பது ஆங்கிலம் படிக்க இயலாத மாணவருக்கு உதவும்.

    ஆனால், முதல் நிலை - தமிழ் என்ற பெயரில் ஒப்புக்குச் சப்பாணியாக தமிழைப் படித்து ஒப்பேற்றும் வேலை நடைபெறலாம்.

    பாடத்திட்டம் சுவையாக இல்லை என்பது எல்லா பாடங்களுக்கும் பொருந்தும்.

    ReplyDelete
  5. Instead of teaching maths, science and social science up to 10th standard
    it is better to teach students any five of the languages they choose to learn. One language must be their regional language. This is my opinion. There is no need for reducing the standard of syllabus according to the medium of their study. Grammar must enhance the language flow of the students. It should not hinder the learning of a language. I agree with you .

    ReplyDelete
  6. ஹாரி பாட்டர், பெர்சி ஜாக்சன் கதைகள் வரும் வரை “ஆங்கிலம் படிக்கும் ஆர்வம், அதாவது புத்தகம் படிக்கும் ஆர்வம் நம் நாட்டில் சிறுவர்களிடம் குறைந்துவிட்டதே” என்று அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் புலம்பி தள்ளினர் பல பெற்றோர். என் பள்ளிக்காலத்தில் ஆங்கில பாட புத்தகத்தில் ஷெர்லாக் ஹோம்ஸ் கதையும், சாகி கதையும் சுவையூட்டின. கிராம வாடை வீசிய கல்கியின் மயிலக்காளையும், பாரதியின் மிளகாய்ப்பழச்சாமியும் கசந்தன.

    ஆங்கில தமிழ் இலக்கணம் இரண்டுமே கசந்தன. விகடன், குமுதம் பல்லவன் பஸ்ஸில் திருக்குறள் இவை தான் எனக்கு தமிழ் ஊட்டின. வீட்டுக்கு வீடு வாசப்படி.

    ReplyDelete
    Replies
    1. பொன்.முத்துக்குமார்Wed Jun 18, 10:29:00 PM GMT+5:30

      // என் பள்ளிக்காலத்தில் ஆங்கில பாட புத்தகத்தில் ஷெர்லாக் ஹோம்ஸ் கதையும், சாகி கதையும் சுவையூட்டின. கிராம வாடை வீசிய கல்கியின் மயிலக்காளையும், பாரதியின் மிளகாய்ப்பழச்சாமியும் கசந்தன. //

      ஏன் என்று தெரிந்துகொள்ளலாமா ? தோல் நிறம் தொடர்பாலா அல்லது “கிராம வாடை” அருவருப்பூட்டியதா ?

      Delete
  7. தமிழ்மீது ஆர்வம் வரப் பாடத்திட்டம் மட்டுமன்றி சுவாரசியமாகப் பாடம் எடுக்கும் தமிழாசிரியர்களும் ஒரு காரணம். ஆனந்த விகடன், குமுதம் இதழ்கள் அன்றைய தரத்தில் இன்று இல்லை. பெற்றோர் எண்ணினால் வீட்டில் படிக்கும் பழக்கத்தை நடமுறைப்படுத்தலாம்.

    ReplyDelete
  8. தமிழ் நாட்டில் பலருக்கு ஆங்கிலம் படிக்கப் பிடிப்பதில்லை. மாறாக மலையாளம் படித்தால் அதில் எளிதாகத் தேர்ச்சி பெறலாம் என்று நினைக்கிறார்கள். ஆனால் அவர்களை விட்டுவிடுகிறோமா? .அருமை.

    ReplyDelete
  9. பொன்.முத்துக்குமார்Wed Jun 18, 10:27:00 PM GMT+5:30

    நிச்சயமாக இது அபாயகரமான போக்கு. வட இந்தியா செல்லும்போது, ஹிந்தி தெரிந்திருப்பதால் கிடைக்கும் இரு நன்மைகள் (எனக்குத்தெரிந்த அளவில்) :

    1. தினசரி வாழ்வில் சமாளிக்க உதவுவது.
    2. அலுவலகத்தில் தனித்துப்போகாமல், சுலபமாக எல்லாரோடும் நட்புறவாட உதவுவது. (இங்கே அமெரிக்காவில் எங்கள் அலுவலகத்தில் ஹிந்தி தெரியாதவன் நான் ஒருவனே. இருக்கும் நான்கைந்து வட இந்தியர்களும் ஹிந்தி தெரிந்த ஏழெட்டு தெலுங்கர்களும் - என் குழு சகாவான ஒரு தெலுங்கர் மட்டுமே ஹிந்தி பேசுவார், மற்றவர்களுக்கு பேசினால் புரியும் - ஹிந்தியிலேயே பேசிக்கொள்ளும்போது எரிச்சலாக இருக்கும். இதைவிட கொடுமை, சில சமயம் நேக்காக என் சகாவிடமே தங்களது வேலைகளை தருவர்)

    ஆனால் ஹிந்தியை பேச மட்டுமே தெரிந்துகொள்ள, பள்ளியிலிருந்தே படிக்கவேண்டுமா ? அதுவும் தாய்மொழியை ஒதுக்கிவிட்டு ?

    ஆபாசமாக இருக்கிறது.

    அன்புடன்
    பொன்.முத்துக்குமார்

    ReplyDelete
    Replies
    1. திரும்ப திரும்ப இந்த தவறான எண்ணத்தை எதிர்நோக்கி ஆயாசமாக உள்ளது என்று நினைத்தேன், அதுவல்ல, 'ஆபாசமாக இருக்கிறது' என்ற சரியான மன உணர்வை தெளிவுபடுத்தியதற்கு நன்றி. மத்திய அரசாங்கம், தமிழகம் தவிர பிற மாநிலங்களில் ஆங்கிலம் கூட உபயோகிப்பதில்லை. தமிழக எதிர்ப்பால்தான், இன்னும் ஆங்கிலம் இந்தியாவில் உள்ளது. இல்லாவிட்டால் நாம் ஹிந்தி மீடியத்தில் படித்துக்கொண்டிருப்போம்.

      ஏற்கனவே உள்ள ஹிந்திமயமாக்களை எதிர்க்கவேண்டிய அனைவரும், Stockholm syndrome - பாதிப்பில் உள்ளார்கள்.

      உண்மைதான், தமிழகம் தவிர பிற மாநிலத்தவர்கள் எல்லாம் ஒன்றாகிக்கொல்கிறார்கள் . நாமும் ஹிந்தி பேசிவிட்டால் அனைத்து பிரச்சினைகளும் சரியாகிவிடுமா? ஹிந்தியை தாய் மொழியாகக்கொண்ட மாநிலங்கள் எல்லாம் வளர்ந்துள்ளனவா?

      ஹிந்திமயமாக்களின் நோக்கம் வேறானது. அது நிறைவேறும் பொது அனைவரும் உணர்வார்கள். ஹிந்தி எதிர்ப்பை தனது அரசியல் வளர்ச்சிக்கு மட்டும் பயன்படுத்திக்கொண்ட கட்சிகளின் இரட்டை வேடம், அவர்கள் மத்திய அரசுகளில் அங்கம் வகித்தபோது செய்ததெல்லாம் மன்னிக்க முடியாத குற்றமாகும், ஏனென்றால், நமது இன்றைய நிலைப்பாட்டிற்கு அவர்கள் தான் காரணம்.

      தமிழர்களின் நுனியில் உக்கார்ந்துகொண்டு கிளையை வெட்டும் இந்த இயல்பு உண்மையாக ஆபாசமாகத்தான் இருக்கிறது.

      Delete
  10. பொய் கவுரவம் கூட தமிழ் கற்காததற்கு காரணம். இன்றைய குழந்தைகளுக்கு (நான் வட இந்தியாவிலும் பார்த்து விட்டேன்) தனது தாய் மொழியின் மீதுள்ள ஆர்வம் குறைவு மற்றும் சரியாக வாசிக்கத் தெரியவில்லை. அனைவரும் ஆங்கில மோகத்தில் மூழ்கியுள்ளனர். தாய் மொழியின் அவசியத்தை புரிய வைத்து அவர்களை படிக்க வைப்பதும் நமது இந்திய அரசின் கடமை.

    க. செல்வமகராஜன்

    ReplyDelete
  11. As of 2001, Tamil nadu and Nagaland were the only two states, where one can complete their education up to school final without learning an alphabet of the state language in a government assisted school. It is "legal" to force the state language in all these other states in India. Forcing Tamil on non-Tamils was "illegal" in TN. Perhaps due to their inferiority complex!

    ReplyDelete
  12. thiru Badri! There is much difference in language teaching between the time I studied Tamil in school and now. As pointed out by you ,Tamil is made tasteless by these guys and naturally the students want to shy away from it. They should make Tamil a likeable language first by changing the dry lessons. That is the primary need of the hour. All debates then can take place. On seeing the books I too got a shock. It was so dry and hard. No one would love to learn it in the present state.

    ReplyDelete
  13. எந்த மொழியையும் ஒரளவிற்கு நன்றாகவே கற்றுக்கொள்ள 2 ஆண்டுகள் தாராளமாகப் போதும். எனவே இந்தி கற்றுக்கொள்ள வேண்டும் என்றாலும் அதை 7 - 8 வருடங்கள் கற்கத் தேவையில்லை.

    இதற்கு அந்த அந்த மொழியைத் தாய் மொழியாகக் கொண்ட நேட்டிவ் ஸ்பீக்கர்ஸ் மட்டுமே மொழிப்பாட ஆசிரியர்களாக இருக்க வேண்டும். ஃபிரஞ்ச், ஜெர்மன், ஜப்பானீஸ், சைனிஸ், கொரியன், இத்தாலியன், ஸ்பானிஷ் போன்ற அயல் மொழிகளை அந்த அந்த தூதரகங்களோடு இனைந்த கலாசார மையங்களில் நடக்கும் வகுப்புகளில் கற்பதே பள்ளியில் கற்பதைவிட நல்லது.

    எல்லா மொழிக் கல்விகளிலும் கணினித் தொழில்நுட்பத்தை முழுமையாகப் பயன் படுத்த வேண்டும்.

    சரவணன்

    ReplyDelete
  14. IN GOVT SCHOOLS, ONLY TAMIL MEDIUM IS AVAILABLE.
    ALL GOVT SCHOOL STUDENTS ARE STUDYING TAMIL. NO OPTION.
    NOW THE QUSTION IS ABOUT OTHER PRIVATE SCHOOLS, WHERE STUDENTS ARE STUDYING IN ENGLISH MEDIUM.
    I SUGGEST THE FOLLOWING TWO.
    1. RESERVATION RULE SHOULD APPLY FOR ONLY GOVT SCHOOL STUDENTS.
    2. GOVT JOB ONLY FOR GOVT SCHOOL STUDENTS.
    WHY PEOPLE WHO CAN "BUY" EDUCATION WANT ANY CONCESSION FROM GOVT?

    ReplyDelete
  15. You will be surprised to know that many north indiand below 30 could not read any govt oredrs in hindi. I can read better than them though i studied hindi through dakshin bharat hindi prachar sabha. Even north indians are not intrested in their mother tongue - sankaranarayanan

    ReplyDelete
  16. தாய் மொழிக் கல்வி மிக நல்லது. எளிதில் விளங்கிக் கொள்ளலாம். கல்வி முழுமை பெற உதவும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், வருங்கால வாழ்வுக்கு உறுதி தராமல், தாய்மொழிக் கல்வி கட்டாயமாக்கப் பட்டால், அது சந்தர்ப்பவாத அரசியல் அன்றி வேறென்ன? தாய் மொழிக் கல்வி பயில்வோர் அனைவரும் ஒரே சாதியாகக் கருதப் படுவார்கள். முற்பட்ட, பிற்பட்ட வகுப்பு வேறுபாடுகள் கணக்கில் கொள்ளப்பட மாட்டா. இவர்களுக்கு பொறியியல், மருத்துவம் மற்றும் சிறப்பு அறிவியல் துறைகளில் கற்க முன்னுரிமை. மாநில வேலை வாய்ப்புக்களிலும் முன்னுரிமை என்று அறிவிக்கட்டும். தாய்மொழியை விடச் சாதிகள் முக்கியமில்லைதானே!

    வேறு மொழிகளைக் கற்றவர்கள் எல்லாம் வசதி அடைந்து விட்டார்களா? இங்க்லிஷ் எத்தனை நாடுகளில் செல்லும்?’ என்று ஜல்லியடிக்கும் அரசியல் தரகர்களுக்கு ஏற்ற கொள்கை கட்டாயத் தாய்மொழிக் கல்வி. பொது மக்களுக்கு உதவாது. ஜப்பான், ஜெர்மனி, போன்ற நாடுகள் குறைந்த மக்கட்தொகையே உடையதால், பெரும்பாலும் தமது தேவைகளைத் தாமே பூர்த்தி செய்துகொள்ளும் நிலையில் உள்ளவை. தமது தாய் மொழியிலேயே தங்கள் உள்நாட்டுப் பரிமாற்றங்களை நிகழ்த்திக்கொள்வதில் எவ்விதச் சிக்கலும் அத்தகைய நாடுகளுக்குக் கிடையாது. அவர்களோடு இந்தியாவை ஒப்பிட்டு நாம் ஏன் வேற்று மொழிகளைக் கற்க வேண்டும் என்று பம்முவது முட்டாள்தனம்.

    சீனா மக்கட்தொகை மிகுந்த நாடு. இங்க்லிஷ் கற்பதில் அதிக அக்கறை காட்டாததின் விளைவை தற்போது அனுபவிக்கிறது. எனினும், அந்தக் குறைவை உற்பத்தித் திறனில் ஈடு செய்ய முயல்கிறது. அமெரிக்காவின் மின்னணுத்துறை சார்ந்த உற்பத்தியில் பெரும்பான்மையைக் கைப்பற்றி, பெருமளவு வேலை வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொண்டு, உலக அளவில் ஒரு மாபெரும் பொருளாதார சக்தியாக விளங்குகிறது. இந்தியாவில் அந்தக் கண்ணோட்டமும் இல்லை. வேலை வாய்ப்பு, உற்பத்தி என்று பேசத்துவங்கும் முன்னரே, வேலை நிறுத்த உரிமையைக் கோரும் சங்கங்களால் தடம் மாறிப் போகும் மனித சக்திதான் இங்கு அதிகம். மென்பொருள் துறையில் இந்தியாவின் தனித் திறமை உலகளவில் மதிக்கப் படுவதற்கும், இந்தியர்களுக்கு அது தொடர்பான வேலை வாய்ப்பு பெரிய அளவில் கிட்டுவதற்கும் இங்க்லிஷ் ஒரு முக்கியக் காரணம்.

    வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ள மக்கள் தொகை அதிகம். பன்முக வாழ்வு முறைகள். பல்வேறு மொழிகள் அன்றாடப் புழக்கத்தில் உள்ளன. இத்தகைய இந்தியாவில், மாநிலங்கள் வாரியாகத் தாய்மொழிக் கல்வி கட்டாயமாக்கப் பட்டால், ‘ஒரே இந்தியா’வை எங்கே காண்பது? கற்காலத்துக்கு விரைந்து செல்லத் தற்கால வழியாகவே அது இருக்கும்.


    மொழி ஒரு தகவல் தொடர்புக் கருவி மட்டுமே என்ற பகுத்தறிவு வேண்டும். தொப்புள் கொடி, பப்பிள் கடி என்றெல்லாம் மிதமிஞ்சி, உணர்வுகளைத் தூண்டிவிட்டு, பயன்பாட்டை மீறி அதற்கு ஒரு மகத்துவத்தைக் கற்பிக்க முயலுவது வாழ்வாதாரத்தைத் தகர்க்கும். பொது நல நோக்கின்றி, வம்படியாய் வாய் வீசும் மேடைப் பேச்சாளர்கள் மட்டுமே வசதியாக வாழ உதவும்.

    ReplyDelete
    Replies
    1. ஐயா, இங்கு விவாதம் பயிற்று மொழியாகத் தமிழ் (தமிழ் மீடியம்) இருக்க வேண்டுமா என்பது பற்றியதே அல்ல. அரசும் தமிழ் மட்டுமே பயிற்று மொழி என்று உத்தரவு போடவும் இல்லை. விவாதம் தமிழை ஒரு பாடமாகப் படிப்பது தொடர்பானதே. அதில் என்ன கெட்டுப்போய்விடும்? எதற்கு ஜப்பான். சீனா என்று சம்பந்தமில்லாமல் இழுக்கிறீர்கள்?

      சரவணன்

      Delete
  17. திரு. சரவணன், தங்கள் கேள்வி மிகச் சரி. விவாதப் பொருளைத் தவறாகப் புரிந்து கொண்டு எழுதி விட்டேன். எடுத்துக் காட்டியமைக்கு நன்றி.

    ReplyDelete