Sunday, August 17, 2008

சென்னையில் மாபெரும் நூலகம்

பல நாள்களாக சொல்லிக்கொண்டிருந்த இந்த நூலகத்துக்கு நேற்று அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. கோட்டூர்புரத்தில் சிங்கப்பூர் நூலகத்துக்கு இணையாக இந்த நூலகம் கட்டப்படும் என்று பேசுகிறார்கள். நல்ல விஷயம்.

ஏற்கெனவே சென்னையில் இருக்கும் கன்னிமரா நூலகம், தேவநேயப் பாவாணர் நூலகம் ஆகியவையும், ஆங்காங்கே அமைந்திருக்கும் கிளை நூலகங்களும் எந்த அளவுக்கு உருப்படியாகப் பயன்படுத்தப்படுகின்றன என்பதற்கு அரசு சில புள்ளிவிவரங்களைக் கொடுத்தால் நன்றாக இருக்கும்.
என் அலுவலகத்தில் சில நண்பர்கள் பேசிக்கொண்டிருக்கும்போது, கன்னிமரா நூலகத்தில், தங்களுக்குத் தேவையான புத்தகங்களை, யாருமே செல்லாத இடங்களில் ஒளித்துவைத்துவிட்டு பின்னர் எடுத்துவந்து படிப்பதாகச் சொன்னார்கள். இதனால் பிற வாசகர்களுக்கு எந்த அளவுக்கு பாதிப்பு உண்டு என்பதை அவர்கள் அறிந்தார்களா என்று தெரியாது. நான் தேவநேயப் பாவாணர் நூலகத்துக்கு நான்கைந்து முறை சென்றிருக்கிறேன். அங்குள்ள சூழல் அவ்வளவாகக் கவரவில்லை. அங்கும் இங்குமாக சில புத்தகங்களைத் தேடிப்பார்த்து, போரடித்து வெளியே வந்திருக்கிறேன். கன்னிமரா நூலகத்துக்கு ஒருமுறை மட்டுமே சென்றிருக்கிறேன். அது கொஞ்சம் தேவலாம்.

நூலகத்துக்கு மிக முக்கியமான தேவை நூலகர்(கள்). புத்தகத்தை ஆசை ஆசையாகச் சேர்க்கவேண்டும். அவற்றை ஒழுங்காக அடுக்கி, “கேடலாகிங்” செய்து, தேடும் புத்தகம் உடனடியாகக் கையில் கிடைக்குமாறு செய்யவேண்டும். சரியான படிப்பும் இல்லாமல் சுய ஆர்வமும் இல்லாமல் சாதாரண அரசு ஊழியராக வந்துசேரும் நூலக அலுவலர்கள் ஒரு நல்ல நூலகத்தை “கைமா” செய்துவிடுவார்கள். 120 கோடி ரூபாய் கோட்டூர்புரம் நூலகம் அவ்வாறு ஆகாமல் இருக்க வேண்டுவோம்.

முதல்வர் கருணாநிதி நேற்று பேசும்போது இவ்வாறு சொல்லியிருக்கிறார்:
தமிழகத்தில் மொத்தம் 3,924 பொது நூலகங்கள் உள்ளன. எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும்கூட, நூலகங்களின் சிறப்பு, செயல்பாடு போற்றத்தக்கதாக இல்லை என்பதை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

எழுத்தாளர்களின் கோரிக்கையை ஏற்று, நூலகங்களில் பெறப்படும் புத்தகங்களின் எண்ணிக்கையை 1000-மாக அரசு உயர்த்தியுள்ளது. நூலகங்களுக்கு மேலும் அதிக புத்தகங்கள் தேவைப்படுமானால், இதை 2 ஆயிரமாக உயர்த்த அரசுக்கு அதிக நேரம் ஆகாது. (தினமணி)

[நூலக ஆணைக்காக வாங்கப்படும் புத்தகங்களின் பிரதிகளை 1000-லிருந்து] 2000-க்கு உயர்த்துவதற்கு வெகு நேரம் ஆகாது. ஆனால் எழுத்தாளர்களும் பதிப்பாளர்களும் நூலகங்களின் தரத்தை உயர்த்துவதற்கு உதவ முன்வரவேண்டும். (தி ஹிந்து)
நான் நாகப்பட்டினம் கிளை நூலகத்தில் உறுப்பினராக இருந்து எத்தனையோ புத்தகங்களைப் படித்திருக்கிறேன். அதை மிகச்சிறந்த ஒரு நூலகம் என்று சொல்லமாட்டேன். ஆனால் அன்றைய காலகட்டத்தில் ஏற்கத்தக்க ஒரு நூலகமாக அது இருந்தது. தமிழ், ஆங்கிலப் புத்தகங்கள் பல இருந்தன. ஒரு பள்ளி மாணவன் உறுப்பினராக முடிந்தது. புத்தகங்களை வீட்டுக்கு எடுத்துவந்து படிக்கமுடிந்தது. ஆனால் இன்று தமிழகமெங்கும் உள்ள கிளை நூலகங்களின் நிலை மோசமாகியுள்ளடு என்று பலரிடம் பேசியதில் தெரியவந்தது.

சில எண்ணங்கள்:

1. தமிழக நூலகங்களின் எண்ணிக்கை வெகு அதிகம் என்று சொல்லமுடியாது. தமிழகம் போன்ற பெரிய மாநிலத்துக்கு 4,000 கிளை நூலகங்கள் போதா. 10,000 அல்லது அதற்கு மேற்பட்டு இருக்கவேண்டும். அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின்படி பல பஞ்சாயத்துகளில் நூலகங்கள் உருவாக்குவதாகப் பேசினார்கள். அந்த நூலகங்களுக்குப் புத்தகங்கள் வாங்குவதாகச் சொன்னார்கள். இன்றுவரை புத்தகங்கள் வாங்கப்படவில்லை. மூன்று நிதியாண்டுகள் ஓடிவிட்டன. நூலகங்களும் கட்டப்பட்டிருக்க மாட்டா என்றே நினைக்கிறேன்.

2. இருக்கும் நூலகங்களுக்கு கமிட்டி அமைத்து மொத்தமாகப் புத்தகங்கள் வாங்குவதில் நிறைய முறைகேடுகள் நடக்கின்றன. இந்திய அரசியல், நிர்வாகத்தில் ஊழலுக்குப் பஞ்சம் இல்லை என்பதால் ஒரே இரவில் இந்த ஊழல்கள் காணாமல்போய்விடும் என்று நம்பமுடியாது. ஆனால் ஊழல்களுக்கும் முறைகேடுகளுக்கும் இடையிலும் ஓரளவுக்காவது நல்ல நூல்கள் பல வாங்கப்படும் என்று நம்புவோம்.

ஒன்று செய்யலாம். மையமாக, அனைத்து நூலகங்களுக்கும் என்று சேர்த்துப் புத்தகங்களை வாங்குவதற்குபதில், கேரளத்தில் நடப்பதுபோல ஒவ்வொரு நூலகத்துக்கும் நிதி ஒதுக்கி, அவர்கள் விரும்பும் புத்தகங்களை வாங்கவைக்கலாம். அப்போது, அந்தந்த நூலகங்கள் இருக்கும் பகுதிக்கேற்ப, அந்தந்த மக்கள் விரும்பும் நூல்களை வாங்குவது நடக்கக்கூடும். அந்தந்த வட்டார எழுத்தாளர்களது நூல்கள் அதிகம் வாங்குவதற்கான வாய்ப்பும் உண்டு. இந்த நூல்களைத் தேர்வு செய்யும் குழுவிலும் வாசகர்கள், நூலக உறுப்பினர்கள் சிலர் இருக்குமாறு பார்த்துக்கொண்டால் ஊழல் வெகுவாக அல்லது முற்றிலுமாகக் குறையலாம்.

3. கணினிமயமாக்கலும் இணையத்தில் படிக்கும் உரிமையும்: மொத்தம் 4,000 நூலகங்கள். அரசு அதிகபட்சம் 1,000 பிரதிகள் வாங்கும். என்றால், ஒரு நல்ல நூல் எந்தக் கட்டத்திலும் அனைத்து நூலகங்களிலும் இருக்க வாய்ப்பே இல்லை. எனவே அரசு நூலகங்கள் அனைத்தையும் கணினி, இணைய இணைப்பு கொண்டு இணைத்து, நூலக மின் - புத்தக உரிமையை பதிப்பாளர்களிடம் பெற்று புத்தகங்களை வாசகர்களுக்கு அளிக்கலாம். குறைந்தபட்சம், தமிழில் பதிப்பாகும் அனைத்து நூல்களுக்கும் மின் - புத்தக உரிமையை கோட்டூர்புரம் நூலகத்துக்காகவாவது வாங்கலாம். இதன்மூலம் ஆராய்ச்சியாளர்களுக்குப் பெருத்த உதவி கிடைக்கும்.

4. நூலகங்களில் எந்தப் புத்தகம் படிக்கப்படுகிறது என்னும் புள்ளிவிவரம் மிகவும் உபயோகமானது. இதனைக்கொண்டு, அடுத்த ஆண்டு என்னென்ன புத்தகங்கள் வாங்கவேண்டும் என்று முடிவு செய்வது முக்கியமில்லை. ஆனால் இந்தத் தகவல், எழுத்தாளர், பதிப்பாளர் ஆகியோருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதற்கேற்ப, ஒவ்வொரு நூலகத்திலும் பயனர் புத்தகத்தைப் பெறுவதையும் தருவதையும் கணினிமயமாக்கவேண்டும்.

5. சொத்துவரியில் நூலக மீவரி (cess) வசூலிக்கப்படுகிறது. இது முழுவதும் நூலக மேம்பாட்டுக்கு, புத்தகம் வாங்குவதற்கு என்று பயன்படுகிறதா என்றால் சந்தேகமே. இதைப்பற்றி தெளிவான விளக்கத்தை எந்த அமைச்சரும் தருவதில்லை. யாரும் கேட்பதும் இல்லை.

6. நூலகங்கள் அந்தந்த ஊரின், பகுதியின் எழுத்து மற்றும் படிப்பு சார்ந்த மையமாகத் திகழவேண்டும். ஆனால் நான் பார்த்த சில சிற்றூர்களில் பாதி நேரம் அந்த இடம் பூட்டப்பட்டுள்ளது. முக்கியமாக சிறு கிராமங்களில். அந்த ஊரின் மக்கள் அந்த இடத்தின்மீது அதிகமான உரிமை கொண்டாடவேண்டும். இது எப்படி நடக்கும் என்பது எனக்குப் புரியவில்லை.

***

இந்த நிலையில் முதல்வர், எந்த விதத்தில் எழுத்தாளர்களும் பதிப்பாளர்களும் நூலகங்களின் செயல்பாட்டை முன்னேற்றமுடியும் என்று நினைக்கிறார் என்று தெரியவில்லை. தமிழக நூலகங்களில் முதலில் வாசகர்களேகூட ஒரு பங்குதாரராகக் கருதப்படவில்லை. ஒரு வாசகராக, ஓர் உறுப்பினராக, என்ன புத்தகங்கள் வேண்டும், வரவு என்ன, செலவு என்ன என்று கேட்கும் உரிமை என்னிடம் இல்லை. எழுத்தாளருக்கும் நூலகத்துறைக்கும் எந்தவிதத் தொடர்பும் இருப்பதில்லை. எழுத்தாளரே சொந்தமாகப் புத்தகங்களைப் பதிப்பிக்கும்போது, ஒரு பதிப்பாளராகவே நூலகத்துறையை அணுகுகிறார். ஆணை கிடைத்தால் புத்தகங்களைக் கொடுத்துவிட்டு, பணத்தைப் பெற்றுக்கொள்கிறார். அவ்வளவுதான்!

இந்த நிலையை மாற்றவேண்டும் என்றால், வாசகர்கள், எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள் ஆகியோரை அரசுடன் பங்குதாரர்களாக ஆக்கவேண்டும். ஒவ்வொரு பகுதியின் நூலக வளர்ச்சியில் இவர்களைப் பங்குகொள்ளச் செய்யவேண்டும்.

முதல் கட்டமாக நூலகத்துக்குப் புத்தகங்கள் வாங்குவதை “decentralise” செய்து ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தனித்தனியான குழுக்கள் அமைக்கலாம். அப்போது அந்தக் குழுக்களில் வாசகர்கள், அந்தப் பகுதியின் எழுத்தாளர்கள், ஓரிரண்டு பதிப்பாளர்கள் ஆகியோரை உறுப்பினராக்கலாம். மொத்தம் 10 பேர் கொண்ட குழு என்றால், 2 நூலக அதிகாரிகள், 2 வாசகர்கள், 2 எழுத்தாளர்கள், 2 கல்வியாளர்கள், 2 பதிப்பாளர்கள் என்று இருக்கலாம்.

***

மற்றொரு பக்கம், பொதுமக்களாகச் சேர்ந்து அரசு சாராத நூலக வளர்ச்சியில் ஈடுபடலாம்.

கிழக்கு பதிப்பகம் சார்பாக மயிலாடுதுறை பக்கம் சில கிராமங்களில் (5-6 இடங்கள் இருக்கும்) ஒரு முயற்சியில் ஈடுபட்டோம். அந்த முயற்சி படுதோல்வியில் முடிந்தது. எங்களது புத்தகங்கள் அனைத்திலும் சில பிரதிகளைக் கொடுத்து, அவற்றைக் கொண்டு அந்த கிராமங்களில் நூலகம் ஒன்றை நடத்துவதுதான் நோக்கம். இந்த நூலகத்தைப் பயன்படுத்தக் கட்டணம் உண்டு. வருமானத்தில் பெரும்பான்மை நூலகத்தை நடத்துபவருக்கும், சிறு பங்கு எங்களுக்கும் வருவதாகக் கணக்கு. என்ன கட்டணம் வசூலிக்கவேண்டும் என்பதை அந்தந்த கிராமத்தில் நூலகத்தை நடத்துபவர் முடிவுசெய்துகொள்வார். ஆனால் இது ஆரம்பம் முதலே சரியாக நடக்கவில்லை. மிகக் குறைந்த கட்டணம்தான் வைக்கவேண்டும் என்பது எனது கொள்கை. ஒரு பயனருக்கு, மாதத்துக்கு 5 ரூபாய்க்குமேல் போகக்கூடாது என்றேன் நான். ஆனால் அதை அவர்கள் கேட்பதாக இல்லை.

கடைசியில், ஒழுங்காக நடத்தமுடியாமல், வருமானம் வராமல், புத்தகங்களையெல்லாம் திருப்பி அனுப்பிவிட்டனர்.

மீண்டும் வேறு இடத்தில், வேறு வடிவில் இந்த பைலட் சோதனையை நடத்திப் பார்க்கவேண்டும்.

7 comments:

 1. //அந்த முயற்சி படுதோல்வியில் முடிந்தது. //

  சில யோசனைகள

  1. நீங்கள் ஊரை எவ்வாறு தேர்ந்தெடுத்தீர்கள். அங்குள்ள எழுதப்படிக்க தெரிந்தவர்களின் சதவிதம் எத்தனை. பள்ளிப்படிப்பு முடித்தவர்களின் சதவீதம் எத்தனை என்று விபரம் சேகரித்த்ரீர்களா

  2. இது போன்ற முயற்சிகளை தூத்துக்குடி திருநெல்வேலி போன்ற மாவட்டங்களில் இருக்கும் சில சிற்றூர்களில் ஆரம்பித்தால் முடிவு வேறு மாதிரி இருக்கலாம். உதாரணம் ச.கைலாசபுரம், நாசரேத் போன்ற ஊர்களில் ஆரம்பித்தால் வரவேற்பு இருக்கலாம்

  3. தனிக்கட்டிடத்தில் நடத்தப்பட்டதா அல்லது வேறு ஏதேனும் துறையுடன் (அஞ்சல் அலுவலகம், அங்கன்வாடி) இணைத்து நடத்தப்பட்டதா

  4. தனி நபரிடம் அளிப்பதற்கு பதில் சுய உதவி குழுக்கள் மூலம் முயலலாமே.

  ReplyDelete
 2. இந்த நூலகம் திறப்பதற்கு சிங்கப்பூர் நூலகத்தை பல முறை கண்டு வியந்த ஒருவர் தூண்டுகோலாக இருந்தார். அவரின் ஆலோசனையின் படி தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசு சிங்கப்பூருக்கு வந்து நேரடியாக நூல் நிலையத்தினை பார்வையிட்டு சென்றுள்ளார். அவருக்கு சிங்கை நூல் நிலையம் எவ்வாறு செயல்படுகின்றது என்று விளக்கியுள்ளனர். சென்னை நூல் நிலையமும் அவ்வாறு இயங்கும் என்று நம்பிக்கை வைப்போம்.

  ReplyDelete
 3. ஒரு காலத்தில் கன்னிமரா நூலகம் நன்றாக இயங்கிக்கொண்டிருந்தது. எந்தத் துறை சார்ந்தும் எளிதாக நூல்களைப் பெற முடிந்தது. பராமரிப்பவர்களின் அசிரத்தை காரணமாக காலப்போக்கில் அந்நூலகத்தின் சிறப்புகள் குன்றத்தொடங்கின. புத்தகங்கள் களவுபோவது ஒருபுறமென்றால் ‘விற்பனை’க்கும் அவ்வப்போது கிடைத்தன. புத்தகத்தின் கனத்துக்கேற்ப விலை வைக்கும் கீழ்மட்ட ஊழியர்கள் இருந்தார்கள். சுட்டிக்காட்டினால் வெளியே எடுத்துவந்து கொடுத்துவிடுவார்கள்.[இவ்வகையில் பொன்னியின் செல்வன் ஐம்பது ரூபாய். அம்மா, ஐந்து ரூபாய்க்கே வருவாள்.] பிற்பாடு மாணவர்கள்தவிர பொதுவாசகர்களுக்குப் பெரிய அளவில் உபயோகமில்லாமலானது. இலக்கியப் பகுதியில் புறநாநூறைத் தாண்டி ஏதுமிராது. மிஞ்சிப்போனால் தெ.பொ.மீனாட்சிசுந்தரனார் அல்லது திரு.வி.க. தவறாமல் மு.வ. தப்பித்தவறி ஜானகிராமனோ ராமாமிருதமோ ஜெயகாந்தனோ இவர்களையொத்த வேறு யாருமோ தென்பட்டுவிட்டால் ஒன்றிரண்டு தினங்களில் வெளியேற்றப்பட்டுவிடுவார்கள். முன்சொன்ன அதே விதங்கள்.

  பகல் பொழுதில் குடித்துவிட்டு உறங்க வருபவர்களின் சொர்க்கபூமியாக அது ஆனபோது வாசகர்கள் வரத்து குறையத் தொடங்கியது.பின்னும் காதலர்களின் ஆக்கிரமிப்புக் காண்டம் ஆரம்பமாக, நூலகமெங்கும் ஜோடிகளாகக் காணமுடிந்தது.

  பழைய நூலகக் கட்டட வளாகத்தின் நிலைமை அதிமோசம். பழைய பேப்பர் கடை மாதிரி புத்தகங்கள் குவித்துவைக்கப்பட்டிருக்கும். இடையிடையே பீடித்துண்டுகளும் ஆணுறைகளும்கூட.

  விடாமல் வாரம்தோறும் சென்றுகொண்டிருந்தவன் ஒரு கட்டத்தில் அந்தப்பக்கம் எட்டிப்பார்ப்பதையே நிறுத்தும்படியானது.

  சுந்தர ராமசாமியின் ‘ஜேஜே: சில குறிப்புகள்’ நாவலில் ஒரு நூலகத்தைக் குறித்து ஜேஜே எழுதிய கட்டுரையொன்று ஒரு பகுதியாக வரும். அதிலே ஒரு வரி: ‘ஹக்ஸ்லியின் என்னென்ன நூல்கள் இங்கே உள்ளன?’

  பதில்: ‘நீங்கள் எந்த ஹக்ஸ்லியைச் சொல்கிறீர்கள்?’

  விவரமறிந்த நூலகர்கள் / ஊழியர்கள் இங்கு யாருமில்லை இன்று. நல்ல நூலகம் தேவையென்று அரசு கருதுவது நல்லதே. கூடவே நல்ல நூலக ஊழியர்களையும் தயார் செய்து அனுப்பிவைப்பார்களேயானால் கோடி புண்ணியமுண்டு.

  ReplyDelete
 4. மிகுந்த சந்தோசமான சேதி.
  ஆஹா... சிங்கை நூலகம் பலரையும் கனவு காண வைக்கிறது:)

  //அந்த முயற்சி படுதோல்வியில் முடிந்தது. //
  எப்படி!? ஆச்சரியமும், அதிர்ச்சியுமாய் இருக்கிறது.

  ஆனால் நான் பார்த்த சில சிற்றூர்களில் பாதி நேரம் அந்த இடம் பூட்டப்பட்டுள்ளது.

  தி‍ங்கள் முதல் சனி 9.00 A.M to 7.30 P.M
  ஞாயிறு 9.30 A.M to 6.00 P.M

  கன்னிமாரா‍வின் வேலை நேரமே, 7.30க்கு முடியும் பட்சத்தில் மாணவர்கள், பணியில் இருப்பவர்கள், நூலகம் செல்ல ஆசைப்பட்டால் கூட எப்படி இயலும்?

  இங்கு சிங்கையிலும் மக்களை ஈர்க்க மிகுந்த பிரயத்தனப்படத்தான் செய்கின்றனர். குறிப்பாக தமிழ் பகுதியில் பல புத்தகங்கள் புத்தம் புதியதாகவே பாதுகாக்கப்படுகிறது. மக்களை ஈர்க்க, இப்போதெல்லாம் அக்கம்பக்க நூலகம் பெரும்பாலும் மக்கள் கூடும் பேரங்காடிகளில் அமைக்கின்றனர். இரவு 9 மணி வரை திறந்திருக்கிறது. புதிய புத்தகங்கள் அதிகம் வாங்குகின்றனர். சென்னை புத்தக கண்காட்சியில் கடந்தமுறை அதிகம் வாங்கியது ‍ சிங்கை நூலக வாரியம்தானே!? நூலகம் என்றால் புத்தகம் மட்டுமல்ல... அனைத்தும் கிடைக்கிறது.

  சிங்கை நூலக வாரியம

  ReplyDelete
 5. ஏற்கனவே சென்னையில் இரண்டு பெரிய நூலகங்கள் இருக்க புதிதாக ஒன்றை அங்கேயே ஏன் தொடங்க வேண்டும்? அதுவும் சென்னையில் எத்தனை பேருக்கு தமிழ் வாசிக்கத் தெரியும்?

  ReplyDelete
 6. பத்ரி,

  பெரும்பாலான அரசு நூலகங்களில் நூலகர்களுக்கு நூற்களின் மேல் எந்த அக்கறையும் கிடையாது. எந்தெந்த நூற்கள் எங்கே உள்ளன என்பது பற்றியும் அவற்றின் நிலை பற்றியும் அவர்களுக்கு கிஞ்சித்தும் அக்கறை கிடையாது. நான் வசிக்கும் பெரம்பூர் பகுதியில்,வீனஸ் தியேட்டர் எதிரே உள்ள கிளை நூலகத்தில் காலச்சுவடு, உயிர்மை போன்ற பதிப்பகங்களின் நூற்கள் வாசகர்களின் கைக்கு எட்டாத வகையில் பாதுகாப்பாக ஒரு குகையில் ஒட்டடை பதிந்து போய் பரிதாபமாக உள்ளன. ரமணிசந்திரனும் பாலகுமாரனும் மட்டுமே அணுகும் வகையில் உள்ளனர். விசாரிப்பதற்கு நூலகரே இல்லை.

  தேவநேய பாவாண தலைமை நூலகத்தில் பெரும்பாலும் முனைவர் பட்டத்திற்காக எழுதப்பட்ட தறுதலை புத்தகங்களே இருக்கும். இவற்றிற்காக அரசு செலவழிக்கும் பணம் அத்தனையும் வீண். இவற்றோடு ஒப்பிடும் போது கன்னிமரா தேவலை என்றாலும் விரும்பும் புத்தகங்களை எடுக்க யாரும் உதவ மாட்டார்கள். நமக்கு நாமே திட்டம்தான்.

  ReplyDelete
 7. மதுரை, திருச்சி, சேலம், கரூர், கோவை, தஞ்சை, நெல்லை போன்ற நகரங்களில் வசிப்பவர்கள் வரிப்பணத்தில் சென்னையில் நூலகம் கட்டினால் மற்றவர்கள் என்ன இ.வாயர்களா ? அத்தகய மாபெரும் நூலகம் விளங்குமா ?

  முழுக்க முழுக்க சென்னைவாசிகளின் வரிப்பணத்தில் சென்னையில் மாபெரும் என்ன உலகிலேயே பெரிய்ய நூலகம் கூட கட்டிக் கொள்ளட்டும்.

  ReplyDelete