Wednesday, September 24, 2014

மங்கள்யான்

இன்று காலை இந்தியா அனுப்பிய விண்கலமான மங்கள்யான், செவ்வாய் கிரகத்தின் ஈர்ப்புப் பிடிக்குள் கொண்டுவரப்பட்டது. பல மாதங்களாக விண்வெளியில் பறந்துகொண்டிருந்த மங்கள்யான் கலத்தின் வேகம் மிக அதிகமாக இருந்தது. அந்த வேகத்தில் அது செவ்வாயைத் தாண்டிப் பறந்து சென்றுவிடும். செவ்வாயைச் சுற்றிவரவேண்டும் என்றால் அதன் வேகத்தைக் கடுமையாகக் குறைக்கவேண்டும்.

அந்தச் செயல் இன்று காலை செய்யப்பட்டது. LAM எனப்படும் லிக்விட் அபோஜீ மோட்டாரை இயக்கி, எரிபொருள் எரிக்கப்பட்டு, கலம் செல்லும் திசையில் ஜெட் துவாரம் வழியாக எரிவாயுக்கள் வெளியேற்றப்படும். இதனால் கலம் செல்லும் திசைக்கு எதிர்த் திசையில் விசை உருவாகும் (நியூட்டனின் மூன்றாம் விதி). இது கலத்தின் வேகத்தைக் குறைக்கும்.

இதில் முக்கியமானது, எத்தனை நிமிடத்துக்கு எரிபொருளை எரித்தால், நாம் விரும்பும் வேகக் குறைவு ஏற்படும் என்பதே. இதனை “லைவ்” முறையில் செய்யவும் முடியாது. விண்கலம் வெகு தொலைவில் இருப்பதால் அதற்கும் நமக்குமான உரையாடல் நேரமே கணிசமாக இருக்கும். மின்காந்த அலைகள் ஒளிவேகத்தில் சென்றாலுமே அவ்வளவு நிமிடங்கள் கழித்துத்தான் அந்த இடத்தைச் சென்றடையும்.

எனவே எரிபொருளை எரிப்பதற்கான ஆணைகளை முன்கூட்டியே அனுப்பிவிட்டார்கள். சரியான நேரத்தில் அது இயங்கவேண்டியதுதான் பாக்கி.

இன்னொரு சிக்கலும் இருந்தது. சரியாக வேலை நடக்கிறதா என்பதைக் கண்காணிக்க முடியாத நிலையும் இருந்தது. ஏனெனில் இந்த லாம் மோட்டாரை இயக்கும்போது அது செவ்வாயின் அண்மை நிலையில் இருக்கவேண்டும். அந்த நேரத்தில் விண்கலத்தை பூமியிலிருந்து பார்க்க முடியாதபடி செவ்வாய் கிரகமே மறைத்துவிடும். எனவே விண்கலத்திலிருந்து பூமிக்கு சிக்னல் வராது. அதனால் சுமார் இருபது நிமிடம் கழித்துதான் நாம் கொடுத்துள்ள ஆணைகள் நடந்தனவா, ஒழுங்காக பாதை மாறியதா என்பது தெரியவரும்.

காலை 7.35 மணிக்கு ஆணைகள் இயங்க ஆரம்பித்தாலும், 8.00 மணிக்குத்தான் அது கச்சிதமாக நடந்துமுடிந்துள்ளது என்பது தெரியவந்தது. அதன்பின் ஒரே கொண்டாட்டம்தான்.

மிகவும் மகிழ்ச்சிகரமான விஷயம் இது. இந்திய விஞ்ஞானிகள் (என்பதைவிடப் பொறியாளர்கள் என்று சொல்லவேண்டும்) மிக அற்புதமான பணியாற்றியிருக்கிறார்கள். இந்தக் குழுவின் சராசரி வயது 27 என்று எங்கோ படித்தேன். மிக ஆச்சரியமாக இருந்தது. இளைஞர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

நாம் போகவேண்டிய தூரம் மிக அதிகம். எனவே தொடர்ந்து வேலை செய்துகொண்டே இருக்கவேண்டும்.

3 comments:

  1. Great!!!.Congratulations to ISRO..

    ReplyDelete
  2. இந்திய விஞ்ஞானிகளைப் பாராட்டுவோம்

    ReplyDelete
  3. பாராட்டப்பட வேண்டியவர்கள்.

    ReplyDelete