Wednesday, October 15, 2014

புத்தக வாசிப்பு வாரம்

இன்று காலை பிர்லா கோளரங்கத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன். வாசிப்புத் திறன் மேம்பாட்டுக் கூட்டமைப்பு என்ற அமைப்பு இந்த நிகழ்ச்சியை நடத்தியது. புத்தக வாசிப்பைப் பரவலாக்கும் விதத்தில் பள்ளிக்கூடங்களில் புத்தக வாசிப்பு வாரம் என்று நடத்துகிறார்கள். அந்நிகழ்ச்சியின் தொடக்க விழா இது. சென்ற ஆண்டு இதே நிகழ்ச்சிக்காக சில பள்ளிக்கூடங்களுக்குச் சென்று குழந்தைகளிடம் கதைகள் படித்துக் காண்பித்தேன். அவர்கள் அனைவருக்கும் ஆளுக்கு ஒரு வண்ணக் கதைப் புத்தகம் கொடுத்தேன்.

இன்றைய நிகழ்ச்சியில் எழுத்தாளர்கள் இரா.நடராசன், பாஸ்கர் சக்தி, விழியன் ஆகியோரும், சினிமா இயக்குநர் பா.ரஞ்சித்தும் கலந்துகொண்டனர். வேறு இருவர் கலந்துகொள்வதாக இருந்து சில அபத்த அரசியல் காரணங்களுக்காகக் கலந்துகொள்ளவேண்டாம் என்று வற்புறுத்தப்பட்டதால் மேடைக்கு வரவில்லை. அதில் ஒருவர் பார்வையாளராகக் கலந்துகொண்டு மாணவர்களுடன் பின்னர் உரையாடினார்.

விழா இறுதியில் நான் கோட்டூர் மாநகராட்சிப் பள்ளி எட்டாம் வகுப்பு மாணவர்களுடன் கொஞ்சம் நேரம் பேசிக்கொண்டிருந்தேன். மிக சுவாரசியமான கலந்துரையாடல் அது. அதிலிருந்து ஒரு சில துளிகள் மட்டும்:

* அனைவருக்கும் பிரிட்டானியா ஆரஞ்ச் கேக் பேக்கெட்டும் ஆப்பிள் ஜூசும் கொடுத்திருந்தார்கள். சில மாணவர்கள் குப்பைகளைக் கீழே போட்டிருந்தனர். நானும் சில மாணவர்களும் கீழே விழுந்துகிடந்த குப்பைகளையெல்லாம் எடுத்து குப்பைத்தொட்டியில் போடப்போனோம். உடனே அனைத்து மாணவர்களும் அருகில் இருந்த குப்பைகளைத் திரட்டி எடுத்துக்கொண்டனர். ‘பிரதமரின் தூய்மை இந்தியா’ திட்டம் பற்றி உடனே பலர் நினைவுகூர்ந்தனர்.

* படித்தால் நல்ல வேலை கிடைக்குமா என்ற கேள்வியை ஒரு மாணவி எழுப்பினார். வேலை என்றால் என்ன, படிப்புக்கும் வேலைக்கும் என்ன தொடர்பு ஆகியவை குறித்து விளக்கினேன். அவர்கள் அனைவரும் கம்ப்யூட்டர் கற்றுக்கொள்ளவேண்டும் என்றேன். அவர்கள் 12-ம் வகுப்பு வரும்போது இலவசமாக கம்ப்யூட்டர் தருவார்கள், அதனை அவர்கள் பயனுள்ளதாக ஆக்கிக்கொள்ளவேண்டும் என்றேன். உடனேயே ஒரு மாணவன் “இப்பத்தான் அம்மாவை ஜெயிலில் போட்டுவிட்டார்களே, இனி கம்ப்யூட்டர் எப்படிக் கிடைக்கும்?” என்று கேட்டான். அதற்கு நான், வேறு யார் முதல்வராக இருந்தாலும் இந்தத் திட்டம் தொடரும், உங்களுக்கெல்லாம் கட்டாயமாக கம்ப்யூட்டர் கிடைக்கும் என்றேன். [இதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்றாலும்...] அந்த மாணவனும் இன்னும் சிலரும் இதனை நம்பவில்லை. இனி வரும் அரசுகளும் இப்போதிருக்கும் அரசும் தொடர்ந்து இந்த நற்செயலை மட்டுமாவது தொடர்ந்தால் நல்லது.

* நான் பேசிய அனைவருக்கும் சினிமா பிடித்திருக்கிறது, தொலைக்காட்சி பிடித்திருக்கிறது. ஆனால் உண்மையில் புத்தகங்கள் குறித்து அவர்களுக்கு அவ்விதமான சந்தோஷம் இல்லை. ஒரு சினிமாவைப் பார்க்கவேண்டும் என்று எதை வைத்துத் தேர்ந்தெடுப்பீர்கள் என்று கேட்டேன். தொலைக்காட்சியில் காண்பிக்கப்படும் திரை விமர்சனம் நிகழ்ச்சியை வைத்து என்று பலர் சொன்னார்கள். அதற்கு இணையான புத்தக விமர்சன நிகழ்ச்சி ஏதும் இல்லாதது ஒரு பெரிய குறைபாடுதான். தொலைக்காட்சியில் இல்லாவிட்டாலும் பள்ளிக்கூடங்களில் மாணவர்களுக்கு நல்ல புத்தகங்களை அறிமுகம் செய்வதற்கான வாய்ப்புகளை உருவாக்கவேண்டும்.

* நான் பேசிய மாணவர்கள், வகுப்பறை உண்மையிலேயே போரடிக்கிறது என்றார்கள். அனைவரும் தங்களுக்குப் பிடித்தமானவை என்று சொன்னது: விளையாடுதல், சினிமா பார்த்தல், தொலைக்காட்சி பார்த்தல், படம் வரைதல், பாட்டு கேட்டல், வெட்டிக்கதை பேசுதல். (வெட்டிக்கதை என்ற பதம் அவர்களுடையது. என்னுடையதல்ல.) புத்தகங்கள் அறிவைத் தரும், புத்தகங்கள் உன்னைச் சிறந்தவனாக்கும் என்றெல்லாம் சொல்லாமல், புத்தகங்களும் மகிழ்ச்சியைத் தரும் என்றேன். எம்மாதிரியான புத்தகங்களைப் படித்து நான் மிகுந்த மகிழ்ச்சி அடைந்திருக்கிறேன் என்பதைப் பற்றி கோடிட்டுக் காட்டினேன். கையோடு கொண்டு சென்றிருந்த கிண்டில் கருவியை அவர்களிடம் கொடுத்து அதில் எம்மாதிரியான புத்தகங்களை வைத்துப் படித்துவருகிறேன் என்று காட்டினேன். தேவை: ஆளுக்கு ஒரு கிண்டில் போன்ற (புத்தகம் மட்டும் படிக்க உதவும்) கருவி + பல ஆயிரம் தமிழ்ப் புத்தகங்கள். சில லட்சம் மாணவர்களுக்கு இக்கருவியை இலவசமாகக் கொடுப்பதன்மூலம் ஒரு பெரிய மாற்றத்தைக் கொண்டுவரலாம் என்று நினைக்கிறேன். (நடக்ககூடிய காரியமா என்று தெரியவில்லை...)

7 comments:

  1. சிறுவர்களுக்கான சிறந்த 10 அல்லது 100 புத்தகங்கள் உள்ளனவா?

    ReplyDelete
  2. Where can I buy Tamil books / novels for Kindle?
    Only a few are available in Amazon.

    ReplyDelete
  3. மாணவர்களிடம் லாப்டாப் கொடுப்பதற்குப் பதிலாக பள்ளிக்கு 50 டெஸ்க்டாப் தரலாம். இதனால் கீழ் வகுப்பு மாணவர்கள் முதல் எல்லோரும் பயன்படுத்த வாய்ப்பு ஏற்படும்; செலவு குறைவு; வருடா வருடம் திரும்பத் திரும்பக் கொடுக்க வேண்டாம்; இணைய இணைப்பு ஏற்படுத்தித் தரலாம்; யார்-எதற்காக இவற்றைப் பயன்படுத்துகிறார்கள் என்ற கண்காணிப்பு இருக்கும்.

    லாப்டாப் பெறுகிறவர்களில் ஏழை மாணவர்களால் இணைய இணைப்புக்கு ணெலவழிக்க முடியுமா, அப்படி இணைய வசதி இல்லை என்றால் லாப்டாப்பை வைத்துப் படம் பார்ப்பது தவிர வேறு என்ன உருப்படியாகச் செய்ய முடியும் என்று தெரியவில்லை. (ஆபிஸ் மெனபொருள் கற்பது தவிர).

    மேலும் பள்ளிகளுக்கு கரும்பலகை, பெஞ்ச் டெஸ்க், கழிவறை, குடிநீர் வசதி போன்ற அடிப்படை வசதிகளே (நூலகம், ஆய்வகம், விளையாட்டுக் கருவிகள் போன்றவற்றை விட்டுவிட்டாலும்) செய்து தரப் பணம் அல்லது மனம் இல்லாத அரசுக்கு லாப்டாப் கொடுக்க மட்டும் எங்கிருந்து பணம் கிடைக்கிறது?

    சரவணன்

    ReplyDelete
  4. தொடர்ந்து இது போன்ற உண்மையான சமூகத்தை படம் பிடித்துக் காட்டும் விசயங்களை பதிவிடவும்.

    ReplyDelete
  5. மகிழ்ச்சி அழிக்கிறது இம்மாதிரியான முயற்சிகள்

    கோட்டூர் மாணவர்கள் அண்ணா நூலகத்தை பயன்டுத்துவதில் எந்த சிரமமும் இருக்காது என நினைக்கிறேன்.
    ஆனால் ஒருமுறை அண்ணா நூலகத்தின் குழந்தைகள் பிரிவிற்கு சென்று பார்த்தேன். ஒரு தமிழ் புத்தகம் கூட அங்கு இல்லாதது வருத்தத்தை அளித்தது.

    ReplyDelete
  6. அமேசானில் தமிழ்ப் புத்தகங்கள் வாசிக்கக் கிடைக்கின்றனவா?
    எவை போன்ற புத்தகங்கள்?

    கிண்டில் பிடிஎஃப் கோப்புகளுக்கு(நமது சொந்த சேமிப்புகள்) உதவாது என்று அறிகிறேன்..உண்மையா?

    வாசகன்

    ReplyDelete
  7. தமிழில் ஈனிட் ப்ளைடன், ஹாரிபாட்டர் வகையரா புத்தகங்கள் வரும் வரை இது நடக்குமா என்பது சந்தேகம். புத்தகங்களை படிக்கும் பழக்கம் பெற்றோரிடம் இல்லாத பட்சம் குழந்தைகளிடம் எதிர் பார்ப்பது வீண். வருடத்திற்கு ஒரு முறை ஒவ்வொரு துறை ஆசிரியரும் தனக்கு பிடித்த சிறுகதையோ நாவலையோ பள்ளியில் படித்தாலே ஆர்வம் தொடங்கலாம். மாணவரை அழைத்து உறக்க படிக்க வைத்தால் இன்னும் சிறப்பு. ஆசிரியர்களுக்கு அந்த சுதந்திரமோ ஆர்வமோ இல்லை. விதையின்றி மரம் வளரா.

    ReplyDelete