Tuesday, October 21, 2014

அம்மா மொபைல்?

நோக்கியாவின் சென்னைத் தொழிற்சாலை மூடப்படப்போகிறது. இந்த ஆலையின் தொழிற்சங்கத் தலைவர்கள் ஆட்சியாளர்களைச் சந்தித்து இந்த ஆலையைத் தமிழக அரசே எடுத்துக்கொண்டு, மக்களுக்கு இலவசமாக வழங்கப்படும் பொருள்களில் செல்பேசியையும் ஏன் சேர்த்துக்கொள்ளக்கூடாது என்கிறார்கள். அம்மா மொபைல் என்று அழைக்கவேண்டுமாம்.

எந்த ஆலை மூடப்பட்டாலும் அது சோகமே. பல ஆயிரம் பேர் வேலை இழக்க நேரிடும். நோக்கியா வரி ஏய்ப்பு செய்துள்ளது என்று தமிழக அரசு குற்றம் சாட்டுகிறது. இதன் காரணமாக, நோக்கியா தன்னையே மைக்ரோசாஃப்டுக்கு விற்கும்போது இந்த ஆலையையும் சேர்த்து விற்க முடியவில்லை. ஏனெனில் ‘தலைவலி’ ஒன்றை விலைக்கு வாங்க மைக்ரோசாஃப்ட் தயாராக இல்லை.
இந்நிலையில் சென்னை (திருப்பெரும்புதூர்) நோக்கியா தொழிற்சாலையின் எதிர்காலம் என்னவாக இருக்கலாம்?

(1) முற்றிலுமாக இழுத்து மூடுதல். இதனால் நோக்கியா பங்குதாரர்கள் பாதிப்படைவார்கள். ஆனால் அவர்களைப் பொருத்தமட்டில் ஜான் போனாலென்ன, முழம் போனாலென்ன நிலைதான். ஏதோ எப்படியோ கம்பெனியை மைக்ரோசாஃப்டுக்கு விற்று, கிடைத்த பணத்தை வாங்கிக்கொண்டுவிட்டார்கள். அவர்கள் இப்போது சென்னை ஆலையை மறந்தேபோயிருப்பார்கள்.

அடுத்து தொழிலாளர்கள். தனிப்பட்ட முறையில் வேலையை இழப்பது என்பது எப்போதுமே ஒரு நபருக்குக் கடினமானதுதான். அந்த 4,000/5,000 ரூபாயை நம்பித்தான் ஒரு குடும்பம் இருக்கிறது. ஆனால் அதற்காக அந்த ஆலையை அப்படியாவது திறந்து வைத்திருக்கவேண்டும் என்று சொல்வது சரியாகத் தெரியவில்லை. இந்தத் தொழிலாளர்கள் வேறு வேலை தேடிப்போவதுதான் உசிதம். நோக்கியா ஆலையில் வேலை செய்தவர் என்பதால் வேறு மின்னணுப் பொருள் உற்பத்தி ஆலையில் வேலை கிடைக்கும் வாய்ப்புகள் அதிகமாக இருக்கும். கிடைக்கும் வேறு வேலையை எடுத்துக்கொண்டு, சிறிது சிறிதாக வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்பவேண்டும்.

(2) அரசு இந்த ஆலையைக் கையகப்படுத்துதல். இதைவிட அபத்தம் வேறு எதுவும் இருக்க முடியாது. ஒரு தனியார் நிறுவனமே, அதுவும் ஒரு காலத்தில் மொபைல் உலகைக் கட்டியாண்ட ஒரு நிறுவனமே இம்மாதிரியான சந்தையில் தாக்குப்பிடிக்க முடியாத நிலையில் அரசு முதல் நாளே ஆடிப்போய்விடும். எத்தனை கோடியை இதில் கொட்டினாலும் அரசுக்கு ரிட்டர்ன்ஸ் இருக்கவே இருக்காது. நம்மூர் இடதுசாரிகள் இதைச் சிந்திக்கவே மாட்டார்கள். உண்மையில் இந்த ஆலையில் வேலை இழக்கப்போகும் அனைவருக்கும் மாதா மாதம் சம்பளத்தை வெறும் உதவித்தொகையாகக் கொடுத்தால் அரசுக்கு என்ன பனம் செலவாகுமோ அதைப் போலப் பல மடங்கு பணம் இந்த ஆலையைக் கையகப்படுத்தி நடத்துவதால் இழக்கப்படும். எனவே தொழிற்சங்கத் தலைவர்களின் ‘அம்மா மொபைல்’ திட்டத்தை நாம் எதிர்க்கவேண்டும்.

மேலும் இன்று ‘அம்மா’ எதிர்கொண்டிருக்கும் இருப்பியல் பிரச்னைகளில் ‘அம்மா மொபைல்’ போன்ற அற்புதத் திட்டங்களைச் செயல்படுத்த வாய்ப்பே இல்லை.

(3) வேறு தனியார் நிறுவனத்துக்கு இந்த ஆலையை விற்பது. இது நடக்கச் சாத்தியம் இப்போது குறைவு என்று தோன்றுகிறது. இன்று பெரும்பாலான ஃபோன்கள் சீனா, தாய்வான், கொரியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு விற்கப்படுகின்றன. நோக்கியா தன் ஆலையை சென்னையில் அமைக்க முன்வந்தபோது அதனிடம் ஒரு பெரும் தொலைநோக்குத் திட்டம் இருந்தது. (அது உருப்படாமல் போனது என்பது வேறு விஷயம்.) எனவே வேண்டிய அளவு பணத்தை முதலீடு செய்ய அது அப்போது தயாராக இருந்தது. இன்றைய இந்திய மொபைல் ஃபோன் விற்பனையாளர்கள் எவ்வளவு பணத்தை ஓர் ஆலையில் முதலீடு செய்யத் தயாராக இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. அப்படி அவர்கள் விரும்பியிருந்தால் இத்தனை நாள்களில் தமிழக அரசிடமும் நோக்கியாவிடமும் பேசியிருப்பார்கள். ஏமாற்றிய வரியை ஒழுங்காகக் கட்டிவிட்டு, ஆலையை விற்றுவிட்டுப் போகலாம் நோக்கியா. அப்படி வாங்க யாரும் தயாராக இல்லை என்பது தெரிகிறது.

(4) வேறு மின்னணுப் பொருளைத் தயாரிக்கும் ஆலையாக இந்த ஆலையை மாற்றுவது. இதுவும் சாத்தியமா என்று தெரியவில்லை.

கடைசியில், இந்தத் தொழிற்சாலையின் பல்வேறு இயந்திரங்கள் காயலான் கடைக்கு அடிமாட்டு விலையில் விற்கப்படப்போகின்றன என்றுதான் தோன்றுகிறது.


இதன் அடிப்படைகளைப் புரிந்துகொள்ளாமல் வெறும் போராட்டங்களை நிகழ்த்துவதால் பயன் ஏதும் இல்லை. தொலைக்காட்சி விவாதங்களில் இதனைக் காரணமாகக் காட்டி புதிய பொருளாதாரக் கொள்கையில் பயனற்ற தன்மை பற்றிப் பேசுகிறார்கள். லிபரல் பொருளாதாரக் கொள்கையில் ஆலைகள் திறக்கப்படும், மூடப்படும். எதுவும் சாசுவதம் கிடையாது. அவை உருவாக்கும் பொருள்கள் மக்கள் மத்தியில் பயன்பாட்டில் இருக்கும்வரைதான் அந்த நிறுவனத்துக்கு மதிப்பு. அதில் வேலை செய்வோருக்குச் சம்பளம். நோக்கியா தன் ஸ்ட்ரேட்டஜியில் பிழை செய்த காரணத்தால் மக்கள் நோக்கியாவை விட்டு நகர்ந்தார்கள். 

இந்த ஆலை தொடரவேண்டும் என்று விரும்பும் எத்தனை பேர் இந்த ஆலை உருவாக்கும் மொபைலை மட்டுமே வாங்குவோம் என்று சொல்லத் தயார்?

Creative destruction என்பது தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கும்.

3 comments:

 1. ராச்செஸ்டர் போன போது கோடாக் ஃபிலிம் கம்பெனியின் மியூசியம் சென்றது நினைவுக்கு வருகிறது. நோக்கியா ஆலையை அரசு ஏற்று ஒரு மின்னணு காட்சியகமாக மாற்றலாம்.

  ReplyDelete
 2. தங்களுக்கும் தங்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 3. அப்படியே இலவசமாக மொபைல் தர வேண்டும் என்றாலும் அதற்காக ஒரு ஆலையையே வாங்க வேண்டிய அவசியம் இல்லை. இலவச சைக்கிள் தருவதற்காக சைக்கிள் ஆலையா நடத்துகிறார்கள்?

  ஃபோன்களை ஏற்றுமதி செய்ததற்கு சுங்கத்துறை அளித்த சான்றிதழ் இருப்பதாக நோக்கிய கூறுகிறது; பின்பு அவை உள்நாட்டில் விற்கப்பட்டதாக தமிழக அரசு சொல்லக் காரணம் தெரியவில்லை. இதில் உயர் நீதிமன்றத்தில் நோக்கியா வென்றுவிட்டது என்று நினைக்கிறேன்.

  மத்தய அரசுத்துறை தன் பங்குக்கு இதில் உள்ள மென்பொருளுக்கு சென்னை ஆலை கொடுத்த பணம் விலை அல்ல ராயல்டி, அதனால் இது பின்லாந்துடன் இருக்கும் இரட்டை வரிவிதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தின்கீழ் வராது, எனவே பல ஆயிரம் கோடி வரி கட்ட வேண்டும் என்று குண்டைத் தூக்கிப் போட்டது.

  தமிழக, மத்திய அரசுகள் போட்ட வரிகள் சட்டப்படி சரியா என்று எனக்குத் தெரியாது. ஆனால் என்ன தோன்றுகிறது என்றால் ஒரு கம்பெனி நன்றாக நடந்தால் அது நம் அரசுகளின் கண்ணை உறுத்துகிறது. பொன் முட்டையிடும் வாத்தை ஒரே நாளில் அறுத்துவிடத் துடிக்கிறார்கள். வோடஃபோன் விஷயத்திலும் இதுவே நடந்தது.

  பிளிப்கார்ட், ஸ்நாப்டீல் விலை குறைவாக விற்றால் அதுவும் தப்பு என்று ஒரு படையே கிளம்பிவிட்டது! ஒருபுறம் டிஜிட்டல் இந்தியா திட்டத்தில் இ-காமர்ஸ் ஒரு முக்கிய அங்கம் என்று சொல்லிக்கொண்டு இப்போதுதான் முளைவிட ஆரம்பித்திருக்கும் நிலையில் இந்தக் கம்பெனிகளைக் கிள்ளி எறிய நினைக்கிறார்கள். இதுபோக டீசல் விலை கட்டுப்பாடு நீக்கத்துக்குப் பதிதிரிகை தலையங்கங்கள் (உதாரணம் இன்றைய தமிழ் இந்து) ஒப்பாரி வைக்க ஆரம்பித்துவிட்டன.

  ஏர் இந்தியா பல ஆண்டுகளாக மக்கள் விரிப்பணத்தை அளித்துக் காப்பாற்றப்படுகிறது. ஏன் என்று தெரியவில்லை. அதில் பயணிப்பவர்கள் யாரும் ஏழைகள் இல்லை. இதேபோல சில வருடம் முன்பு வரை ஓரளவு லாபத்தில் நடந்த பிஎஸ்என்எல் இப்போது நஷ்டமடைய ஆரம்பித்துவிட்டது. அதற்கும் மானியம் தந்து காப்பாற்றப் போகிறார்கள்.

  கான்பூரில் பிரிட்டிஷ் இந்தியா கார்ப்பரேஷன் என்கிற அரசு கம்பெனி எந்தப் பொருளும் உற்பத்தி செய்யாமல் கடந்த 9 வருடங்களாக தினமும் 3 ஷிப்ட் (!) நடந்துவருகிறது.!! இதுபோல நோக்கியா செய்ய வேண்டும் என்றால் 'மேக் இன் இந்தியா' எப்படி நிஜமாகும்? இந்தியா என்றாலே உற்பத்தித் துறை கம்பெனிகள் பின்னங்களால் பிடரியில்பட ஓட்டம் பிடிக்கின்றன.

  சரவணன்

  ReplyDelete