Wednesday, May 18, 2016

மருத்துவ நுழைவுத் தேர்வு - சில குறிப்புகள்

நியூஸ்7 தொலைக்காட்சியில் நேற்று இரவு நடந்த விவாதத்தில் கலந்துகொண்டேன். முழுமையாகப் பலவற்றைப் பேச முடியவில்லை. சில குறிப்புகள் இங்கே:

(1) ஒற்றை மருத்துவ நுழைவுத் தேர்வு - NEET - நியாயமற்றது. அது பல மொழிகளில் இருந்தாலுமே. இது எதிர்க்கப்படவேண்டியதற்கான முதன்மைக் காரணம், மாநிலங்களில் உரிமையில் முரட்டுத்தனமாக இது தலையிடுவதே. அதுவும், எதையும் பரிசீலிக்காமல் உச்ச நீதிமன்றம் தடாலடியாக இதுகுறித்துத் தீர்ப்பு சொல்வது கடுமையாகக் கண்டிக்கப்படவேண்டும்.

(2) பல மாநிலங்கள் இந்த ஒற்றை நுழைவுத் தேர்வை எதிர்க்கின்றன. தில்லி முதல்வர் கெஜ்ரிவால் இதனை வெகுவாக ஆதரிக்கிறார். தில்லி அரசு தான் ஏதும் மருத்துவக் கல்லூரிகளை நடத்துவதில்லை. பிற மாநில அரசுகள் நிறைய மருத்துவக் கல்லூரிகளை நடத்திவருகின்றன. அதுவும் இந்தியாவிலேயே தமிழக அரசுதான் அதிகபட்சமான மருத்துவக் கல்லூரிகளை நடத்திவருகிறது. தன் மருத்துவக் கல்லூரிகளை எப்படி நிரப்புவது என்பதை அதுதான் முடிவு செய்யவேண்டும். மத்திய அரசோ, சிபிஎஸ்சியோ, உச்ச நீதிமன்றமோ அல்ல.

(3) தமிழகத்தில் தற்போதைக்கு மருத்துவம், பொறியியலுக்கு நுழைவுத் தேர்வு கிடையாது. கவுன்செலிங் முறையில் 12-ம் வகுப்பு பாடங்களில் மதிப்பெண்கள் அடிப்படையில் இடங்கள் தீர்மானிக்கப்படுகின்றன. இதுதான் ‘சமூக நீதி’, ‘சமதளம்’ என்று சொல்லப்படுகிறது. அதனை நான் ஏற்கமாட்டேன். நுழைவுத் தேர்வு பணம் படைத்தவர்களுக்கும் கோச்சிங் வகுப்புகளுக்குச் செல்லக்கூடிய நகர மக்களுக்கும் மட்டுமே உகந்தது என்பதை நான் முழுமையாக ஏற்கமாட்டேன். தற்போதைய 12-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் கிராம மக்களுக்கும் பணம் இல்லாதவர்களுக்கும் வாய்ப்புகள் முன்பு இருந்ததைவிட அதிகமாகக் கிடைத்திருக்கிறதா என்பதை ஆராய்ந்து பார்த்து தமிழக அரசு, நுழைவுத் தேர்வு தேவையா என்பதைக் கருத்தில் கொள்ளலாம்.

(4) தனியார் மருத்துவக் கல்லூரிகளை எப்படி ஒழுங்குபடுத்துவது, எப்படி அவர்கள் அதீதமாகச் செய்யும் பணவசூலைத் தடுப்பது? NEET அதற்கு உதவும் என்று சிலர் கருதுகிறார்கள். NEET-க்குபதில், மாநில அரசு கொண்டுவரும் கட்டுப்பாட்டுக்குள் அந்தந்த மாநிலத்தின் தனியார் கல்லூரிகளின் அட்மிஷன் வரவேண்டும் என்று சொன்னால், தமிழகத்தில் அது 12-ம் வகுப்பு மதிப்பெண்ணின்கீழ் வரும். தனியார் மருத்துவக் கல்லூரிகள் இதிலிருந்து வழுக்கிச் செல்லப் பார்க்கும்.

தனியார் மருத்துவக் கல்லூரிகள் அனைத்தும் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின்கீழ் வருகின்றன. எனவே இக்கல்லூரிகளின் ஆள்சேர்க்கையைக் கட்டுப்படுத்தும் பொறுப்பும், கட்டணத்தை ஒழுங்குபடுத்தும் பொறுப்பும் இந்தப் பல்கலைக்கழகத்துக்கு இருக்கிறது. தமிழக அரசு இதனை உடனடியாகச் செய்வது நல்லது. எம்.சி.ஐயின் பொறுப்பு புதிய கல்லூரிகள் உருவாக அனுமதி தருவதும், சரியான உள்கட்டமைப்புகள் கல்லூரிகளில் உள்ளனவா என்பதைப் பரிசோதிப்பதும் மட்டுமே. மற்ற எல்லாவற்றையும் டிகிரி வழங்கும் பல்கலைக்கழகம்தான் முடிவு செய்யவேண்டும்.

(5) நுழைவுத் தேர்வு (Entrance Test) vs தரப்படுத்தப்பட்ட தகுதித் தேர்வு (Standardised Eligibility Test): இந்த வித்தியாசத்தை நாம் புரிந்துகொள்வதில்லை.

12-ம் வகுப்புப் பரீட்சை என்பது ஒருவரைத் தேர்ச்சி பெற்றவர் என்று சொல்லலாமா, கூடாதா என்பதைப் பரிசோதிக்க வைப்பது. எனவே அது முழு சிலபஸையும் கருத்தில் கொள்ளும். ஒவ்வொரு பரீட்சையும் 3 மணி நேரம் எடுக்கும்.

நுழைவுத் தேர்வு என்பது உங்களுக்கு என்னவெல்லாம் தெரிந்திருக்கிறது என்பதைப் பரிசோதிக்காது. 1000 இடங்கள், ஒரு லட்சம் பேர். எனவே 99,000 பேரைக் கழித்துக்கட்டவேண்டும். அதற்காக மிகக் கடுமையான கேள்விகளைக் கேட்கும். எப்படியோ 99,000 பேரைக் கழித்துக்கட்டும். இன்னொரு நுழைவுத் தேர்வை அடுத்த நாள் வைத்தால், அதே 1,000 பேருக்கு மீண்டும் இடம் கிடைக்குமா என்றால் இருக்காது.

ஆனால் தரப்படுத்தப்பட்ட தேர்வின் நோக்கம் வேறு. அனைவருக்கும் ஒரே கேள்வித்தாள் கிடையாது. ஜி.ஆர்.இ, எஸ்.ஏ.டி போன்ற அமெரிக்கத் தேர்வுகளில் இப்போதெல்லாம் கணினியில் தேர்வை எடுக்கிறீர்கள். ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு கேள்விகள் வரும். மாணவர்கள் வெவ்வேறு நாள்களில் தேர்வுகளை எடுக்கலாம். குறிப்பிட்ட காலகட்டத்தில் சிலமுறை நீங்கள் அந்தத் தேர்வை மீண்டும் மீண்டும் எடுத்தாலும் நீங்கள் பெறும் “ஸ்கோர்” கிட்டத்தட்ட ஒரேமாதிரியானதாகத்தான் இருக்கும். இது யாரையும் கழித்துக்கட்டச் செய்யப்படும் தேர்வல்ல. ஒரு மாணவருடைய தற்போதைய தரமதிப்பெண் என்ன என்பதைக் காட்டுவது மட்டுமே. நான் சிபிஎஸ்இ, அவன் ஸ்டேட் போர்ட் என்றெல்லாம் சண்டை போடவேண்டியதில்லை.

எனவே... நம்மூரில் நுழைவுத் தேர்வு என்ற ஒன்றைக் கடாசிவிட்டு, தரத்தேர்வு என்பதை அறிமுகப்படுத்தலாம். இதன் மதிப்பெண் புள்ளியையும், +2-வில் பெற்ற மதிப்பெண்ணையும் வேறுசிலவற்றையும் கணக்கில் எடுத்துக்கொண்டு ஒவ்வொரு கல்லூரியும் மாணவர்களைத் தேர்ந்தெடுக்கலாம்.

ஐயோ, இன்னொரு தேர்வா, பாவம் இந்தப் பிள்ளைகள் என்று அங்கலாய்ப்பது சரியாகத் தெரியவில்லை.

4 comments:

  1. பிரவின் ஜோஷிWed May 18, 07:21:00 PM GMT+5:30

    எதற்க்கும் உதவாத மதிப்பெண்களாள் இங்கே தோற்க்கடிக்கபட்டவர்கள் பலர்.

    ReplyDelete
  2. "இதுதான் ‘சமூக நீதி’, ‘சமதளம்’ என்று சொல்லப்படுகிறது. அதனை நான் ஏற்கமாட்டேன்.

    இங்குதான் நீங்கள் எல்லோரும் வித்தியாசப்படுகின்றீர்கள்

    அப்புறம், 99000 பேர்களை கழித்துக்கட்டுவதற்கு மட்டுமே நுழைவுத்தேர்வு என்றால் அது எதுக்கு? +2 தேர்வு மதிப்பெண் மட்டுமே போதுமே.

    ReplyDelete
  3. தமிழ்நாட்டில் மதிப்பெண்ணுக்கு மட்டுமே தேர்வு நடத்தப் படுகிறது. அனத்து பாடங்களைப் படிக்காமலேயே உச்ச அளவு மதிப்பெண் பெறுதல் எளிது. மேலும் 200க்கு 200 எளிதாக்கப்பட்டுவிட்டது. பெருவாரியான மாணவர்கட்கு மருத்துவம் கிடைப்பதில்லை. எனவே பொறியியல் கல்லூரிகள் போல கூடுதலான அளவில் மருத்துவ கல்லூரிகள் துவக்கப்படவேண்டும். பொறியியல் படிப்பு போல அனைவருக்கும் மருத்துவ படிப்பு வேண்டும். அதிக கல்லூரிகள், அதிக இடங்கள் சமூக நீதியைக் காக்கும். அப்போது கழித்துக் கட்டும் நிலை ஏற்படாது அல்லவா? இதன் மூலம் மனிதவள ஆற்றல் பெருகும். அதிக மருத்துவர் குறைந்த மருத்துவச் செலவு. ஒரு கல்லில் மூன்று மாங்காய் -- பேரளவு கல்லூரிகள் - பேரளவு மருத்துவர்கள் - குறைந்த மருத்தவச் செலவு. மாநில அரசு தலைப்பட்டால் இயலாதது ஒன்றுமில்லை.

    ReplyDelete
  4. சீனிவாசன், சக்தி கருத்துக்களோடு நானும் உடன்படவே செய்கின்றேன். பத்ரி சார் தங்களுக்கு இன்னமும் முழுமையாக கிராமம், நகர இடைவெளி,இந்த இரண்டு பிரிவினருக்கும் அதன் காரணமாகவே (அதாவது அமைவிடச் சிறப்பு,அமைவிடச் சாபத்தீடு என்ற)வாய்ப்புகளில் ஏற்படும் இடைவெளி பற்றிய சரிதான புரிதல் இல்லையோ எனத் தான் நினைக்க வேண்டியுள்ளது.இதை எல்லாம் எழுதிப் படித்துப் புரிந்து கொள்வதைக் காட்டிலும் நேரடியாக அனுபவித்துப் பார்த்தால் தான் தெரியும், அதன் வலி எத்தகுக் கொடுமையானது என்பது. அதே நேரத்தில் கட்டுரையில் உங்கள் தரப்பு வாதங்களில் உள்ள நியாயத்தையும் முழுமையாக மறுக்க விரும்பவில்லை.இட ஒதுக்கீட்டை அவ்வளவு சீக்கிரத்தில் அழித்தொழிக்க நினைப்பது அவ்வளவு எளிதல்ல, அது கூடவும் கூடாது.

    ReplyDelete