Wednesday, February 02, 2005

தமிழகக் குழந்தை வேலைக்காரர்கள் கேரளத்தில் விற்பனைக்கு

பாலவேலக்கார் வில்பனய்க்கு - மாத்ருபூமி 2-2-2005, இன்றைய மாத்ருபூமி தினப்பத்திரிகையில் முதல் பக்கச் செய்தி, தமிழாக்கம்: இரா.முருகன்

குழந்தை வேலைக்காரர்கள் விற்பனைக்கு

ஒல்லூர் (திருச்சூர் மாவட்டம்)

குழந்தைகள் விற்பனைக்கு. விருப்பமான வேலை செய்ய வைத்துக்கொள்ளலாம். கூலி மாதம் ரூ எழுநூற்றைம்பது மட்டும். ஏஜண்டுக்கு ரூபாய் ஐநூறு கமிஷன்.

தேசிய நெடுஞ்சாலை எண் 47-ல், செவ்வாய்க்கிழமை (நேற்று) இது காணக் கிடைத்தது. வழியருகே நிறுத்திய ஒரு க்வாலிஸ் காரில் சுமார் பதினைந்து சிறுவர் சிறுமியர் இப்படி விற்பதற்காகக் காட்சிப் படுத்தப்பட்டார்கள்.

சேலத்துக்காரர்களான இவர்களில் 11 வயதுள்ள சிறுவனும், 9 வயதுள்ள சிறுமியும் உண்டு. ஏஜண்டுக்கு அதிக நேரம் காத்திருக்க வேண்டியில்லாமல், குழந்தைகள் வேலைக்கு வைத்துக்கொள்ளக் கூட்டிப்போகப்பட்டார்கள்.

சேலம் நெடுஞ்செழியன் என்பது ஏஜண்ட் பெயர். செயிண்ட் மெரீஸ் தேவாலய மடத்தின் அருகில் நெரிசல் மிகுந்த சாலையில் குழந்தைகள் விற்பனைக்குக் கொண்டுவரப்பட்டன.

குறைந்தது ஓர் ஆண்டாவது குழந்தைகளை வேலைக்கு வைத்துக்கொள்ள வேண்டுமென்ற நிபந்தனை உண்டு. குழந்தைகளை அழைத்துப் போகும்போது கமிஷன் கொடுக்க வேண்டும். ஆறு மாதத்துக்கு ஒருமுறை குழந்தைகளை 'வாங்கிய' வீடுகளுக்கு ஏஜண்டுகள் போவார்கள். அப்போது குழந்தைகளுடைய ஆறு மாதச் சம்பளத்தை மொத்தமாகத் தரவேண்டும். உடன்படிக்கை எல்லாம் வாய்மொழியாகத்தான். திருச்சூரில் மட்டுமில்லை, மற்ற கேரள மாவட்டங்களிலும் இப்படிக் குழந்தைகளை விற்பனை செய்வதுண்டு.

ஒரு வருட ஒப்பந்தம் முடிந்தால் வீட்டுக்காரர்கள் தங்கள் உறவினர்களுக்கோ, நண்பர்களுக்கோ இக்குழந்தைகளை ஏஜண்ட் மூலம் மறுபடி விற்கலாம். குழந்தைகள் அந்த ஒரு வருடத்தில் செய்த வேலை, உழைப்புத் திறனை வைத்து அவர்களுக்கு அடுத்த கூலி நிர்ணயிக்கப்படும்.

சின்னக் குழந்தைகளைக் கவனித்துக் கொள்வது, நோயாளிகளுக்குப் பணிவிடை செய்வது என்பது போன்ற வேலைகளுக்காக இக்குழந்தைகள் பணியாளர்களாக அமர்த்தப்படுகின்றனர்.

ஒவ்வொரு மாதமும் இரண்டு தடவையாவது இப்படிக் குழந்தைகளைப் பகிரங்கமாக விற்பது நடைபெறுகிறது என்று ஏஜண்ட் சொன்னான். (நம் நிருபர்) வேலைக்குக் குழந்தை வேண்டும் என்று நடித்து அவனை அணுகியபோது இதைச் சொன்னான். குழந்தைகள் சேலம் பகுதியிலிருந்து புகைவண்டியிலோ, பேருந்திலோ கொண்டுவரப்பட்ட பிறகு இப்படி வேன்களில் சந்தைப்படுத்தப்படுவார்கள்.

கூடுதல் விலைபோகும் இடத்தில் வேனை நிறுத்திவைப்பார்கள். ஒல்லூரில் ஒருவரே மூன்று குழந்தைகளை வாங்கிப்போனார். ஒரு வருடம் வேலை செய்த குழந்தைகளை அவர்கள் வேலை செய்த வீடுகளிலிருந்து கூட்டி வந்து வேறு வீட்டுக்காரருக்குக் கைமாற்றுவதும் இந்த வேளையில் நடக்கும்.

குழந்தைகளைப் பார்த்துவிட்டுத் திரும்பி நடக்கும்போது, பின்னாலேயே வந்த ஏஜண்ட் நெடுஞ்செழியன் சொன்னான், "சார், 650 ரூ கொடுத்தாலும் போதும்; பிள்ளையைக் கூட்டிட்டுப் போங்க".

நன்றி: மாத்ருபூமி 2.2.2005

Tuesday, February 01, 2005

அப்துல் ஜப்பார் - கிரிக்கெட்டின் குரல்

தொலைக்காட்சி வருவதற்கு முன்னர் பெரும்பாலும் வானொலி கிரிக்கெட் வர்ணனையாளர்கள் தங்களது ஆட்டம் பற்றிய அறிவுக்காகவும், குரல் வளத்துக்காகவுமே தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

வானொலியில் கிரிக்கெட் வர்ணனை தருபவர்கள் இருவகைப்படுவர். ஒருவர் ஆட்ட வர்ணனையாளர். மற்றவர் வர்ணனைக்கு வளம் சேர்க்கும் நிபுணர். இருவரும் ஒருசேர அமர்ந்திருந்து தங்களுக்குள்ளாக ஒரு உரையாடலை நடத்திக்கொண்டிருப்பர். இடையிடையே பந்துகள் வீசப்படும்போது வர்ணனையாளர் பந்தை விவரிப்பார். மட்டையடியை விவரிப்பார். பந்து தடுக்கப்படுவதை விவரிப்பார். அப்பொழுது நிபுணர் வாய்பொத்தி அமைதியாக இருப்பார். பந்தின், அடியின், தடுத்தலின் விவரம் முடிந்தவுடன் வர்ணனையாளர் நிபுணரைப் பேச்சுக்கு இழுப்பார். அந்தப் பந்தில் உருப்படியாக ஏதாவது நடந்திருந்தால் கேள்வி அதுபற்றியதாக இருக்கும். இல்லாவிட்டால் ஏற்கெனவே நடந்துகொண்டிருக்கும் உரையாடல் தொடரும்.

இந்த உரையாடல் எதைப்பற்றி வேண்டுமானாலும் இருக்கலாம். கிரிக்கெட் பற்றி இருக்கவேண்டுமென்று கூடக் கிடையாது. பிபிசி கிரிக்கெட் வர்ணனையில் ஹென்றி புளோஃபெல்ட் கேக் சாப்பிடுவதிலிருந்து, புத்தகம் படிப்பதிலிருந்து, கூட்டத்தில் இருப்பவர்களின் காதுத் தோடுகள் வரை எதைப்பற்றி வேண்டுமானாலும் பேசுவார். நிபுணர் ஒரு தேர்ச்சிபெற்ற முன்னாள் கிரிக்கெட் வீரர்/கோச் என்றால் பேச்சு பெரும்பாலும் அவர்களைப் பற்றியதாக இருக்கும். நிபுணரின் வாயைத் தோண்டித் துருவி சுவையான விஷயங்களை வெளிக்கொணர்பவரே சிறந்த வர்ணனையாளர்.

அப்துல் ஜப்பார்தொலைக்காட்சி வந்ததும் கிரிக்கெட் வர்ணனை முற்றிலுமாக அழிந்துபோனது. நட்சத்திர கிரிக்கெட் வீரர்களை மட்டுமே வைத்து தொலைக்காட்சி வர்ணனை நடந்தது. படங்களே எல்லாவற்றையும் விவரிப்பதால், தொலைக்காட்சி வர்ணனையாளர் எப்பொழுதாவது ஓரிரு வார்த்தைகள் சொன்னால் போதும் என்றானது.

இன்றும்கூட BBC Test Match Special வானொலி வர்ணனை மிகவும் பிரசித்தி பெற்றது. (ஆனால் முன்போல் இல்லாது சற்றே தரத்தில் குறைந்துள்ளது. நிறைய செய்தித்தாள் நிருபர்களை வைத்து ஒப்பேற்றப் பார்க்கிறார்கள். நான்கு பேர்கள் போதும். ஆனால் அதை விடுத்து தேவையின்றி கூட்டம் சேர்க்கிறார்கள்.)

இந்திய வானொலி தரத்துக்குப் பேர் போனதல்ல. ஆங்கில/ஹிந்தி கிரிக்கெட் வர்ணனை மிகச்சிறப்பு வாய்ந்தது என்று சொல்ல முடியாது.

ஆனால் சென்னை கிரிக்கெட் ஆட்டத்துக்காக சென்னை வானொலி தயாரிக்கும் தமிழ் கிரிக்கெட் வர்ணனை நல்ல தரம் வாய்ந்ததாகவே இருந்தது. அப்துல் ஜப்பார், ராமமூர்த்தி, கூத்தபிரான் போன்றோர் தமது வர்ணனையில் கணீரென்ற குரலையும், நல்ல கிரிக்கெட் அறிவையும், அதற்கு மேல் தீவிர ஆர்வத்தையும் கொண்டுவந்தனர். இவர்கள் அனைவருமே கிரிக்கெட் நிபுணர்கள் என்ற பிரிவில் வரமாட்டார்கள். வர்ணனையாளர்கள் என்ற பிரிவில் வருவார்கள். ஆனால் ஒருவர் வர்ணனை செய்யும்போது அடுத்தவர் நிபுணர் இருக்கையில் அமர்ந்திருப்பார். (பெரிய அளவில் கிரிக்கெட் விளையாடிய தமிழர்களுக்கு உருப்படியாகத் தமிழில் பேசவராது என்பதனால் சரியான கிரிக்கெட் நிபுணர் யாருமே தமிழ் வர்ணனைக்குக் கிடைத்ததில்லை.)

அப்துல் ஜப்பார் 'வாலாஜா சாலை முனையிலிருந்து பந்துவீச்சாளர் தனது ஓட்டத்தைத் தொடங்குகிறார்' எனும்போது கண்ணில் அந்தக் காட்சி தெரியும். 'அளவு சற்றுக் குறைவாக விழுந்த பந்து' எனும்போது பந்து ஆடுகளத்தின் நடுவில் குத்தி நம் கண் முன்னே எழுந்து வரும். 'பின்காலில் சென்று வெட்டி ஆடுகிறார்' எனும்போது கைகள் தானாக 'cut' செய்யும். 'கவர் திசைக்கும், பாயிண்ட் திசைக்கும் இடையே பந்து பறந்து செல்கிறது' ... பந்து செல்லும். 'பந்துத் தடுப்பாளர் பாய்ந்து தடுக்கிறார்' ... தடுப்பார். 'வேகமாக ஓடிச்சென்று இரண்டு ஓட்டங்களைப் பெறுகிறார்கள்'... 'அணியின் எண்ணிக்கை 63ஆக உயர்கிறது' ... 'அடுத்த பந்து...'

கிரிக்கெட் போன்ற ஓர் ஆட்டத்தில் நுட்பமான பல விஷயங்கள் உண்டு. பிற ஆட்டங்களிலும் உண்டு. பொதுமக்களுக்கு நுண்ணிய விஷயங்கள் தெரிந்திருக்காது. அளவு குறைந்து வரும் பந்தை ஏன் பின்னங்காலில் சென்று ஆட வேண்டும்? முன்னங்காலில் வந்து ஆடினால்? வர்ணனையாளர் உதவியில்லையென்றால் பலருக்கு என்ன நடக்கிறது என்றே புரியாது.

வானொலி வர்ணனை போய், தொலைக்காட்சி வந்ததும் இன்று பலரும் கிரிக்கெட் பார்க்கிறார்கள். ரன்கள் பெறும்போதெல்லாம் கைதட்டுகிறார்கள். அது விளிம்பில் பட்டு ஸ்லிப் மேல் அசிங்கமாக எகிறி எல்லைக்கோட்டைக் கடந்தாலும் சரி, விஷ்வநாத் கடைசி விநாடியில் தட்டிய 'லேட் கட்' ஆக இருந்தாலும் சரி. ஆட்டம் மட்டும் புரிவதில்லை.

நேற்று அப்துல் ஜப்பாரைச் சந்தித்தபோது கடந்த சென்னை ஆட்டத்தின்போது தமிழில் வர்ணனை இல்லாததைப் பற்றி வருத்தம் தெரிவித்தார். தனக்கு வாய்ப்பு போய்விட்டதே என்பதால் அல்ல, தமிழில் வர்ணனை இல்லாது போய்விட்டதே என்பதால் என்றார். இனி சிறு சிறு நகரங்களில் இருக்கும் தமிழன் கிரிக்கெட்டை எப்படிப் புரிந்து கொள்ளப்போகிறான் என்ற ஆதங்கம் அதில் வெளிப்பட்டது. எனக்கு இதுபற்றி மிகப்பெரும் வருத்தம்தான்.

தமிழில் 24 மணிநேரமும் விளையாட்டுகள் (கிரிக்கெட் மட்டுமல்ல) பற்றிப் பேசிக்கொண்டே இருக்கும் ஒரு பண்பலை வானொலி நிலையம் வருவது சாத்தியமானதுதான். பிரிட்டனில் டாக் ஸ்போர்ட் என்றொரு வானொலி உள்ளது. அதைப்போல. டென்னிஸ், கால்பந்து, கிரிக்கெட், ஹாக்கி, தடகளப் போட்டிகள் (ஒலிம்பிக்ஸ், தேசியப் போட்டிகள்) என்று பல்வேறு ஆட்டங்களைப் பற்றிய நேர்முக வர்ணனைகள், செய்திகள், நேர்முகங்கள், பழைய விளையாட்டுகளின் தொகுப்புகள் என்று பலவும் இருக்குமாறு செய்யலாம்.

அதற்கும் காலம் வரும்.

தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாத மசோதா, 2004

மத்திய அரசின் கிராமப்புற வளர்ச்சி அமைச்சகத்தின் இணையத்தளத்திலிருந்து: தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாத மசோதா, 2004, PDF கோப்பாக.

பிப்ரவரி 10-இலிருந்து 20-க்குள் ஏதோ ஒரு நாள் மதுரையில் மேற்படி மசோதாவின் மீதான ஒருநாள் கருத்தரங்கு நடக்க உள்ளது. இதை நடத்துவது Public Expenditure Round Table (PERT) (அ) பொதுச்செலவுகள் வட்ட மேசை என்னும் அறக்கட்டளை.

இந்தக் கருத்தரங்கு பற்றிய முழு விவரங்கள் எனக்கு இன்னமும் கிடைக்கவில்லை. கிடைத்தவுடன் இதுபற்றி இங்கு அறிவிக்கிறேன். பொதுச்செலவுகள் வட்ட மேசையின் இணையத்தளம் (ஆங்கிலத்தில்) தயாராகிக் கொண்டிருக்கிறது. தயாரானதும் அதன் தள முகவரியையும் அறிவிக்கிறேன்.

வலைவலம் - 1

தினமும் தமிழ்மணம் புண்ணியத்தில் தமிழ் வலைப்பதிவுகளில் புதிதாகக் கிடைக்கும் பதிவுகள் செய்தியோடையாக எனது ஃபயர்ஃபாக்ஸ் உலாவிக்கு வந்துவிடுகிறது. உங்களில் பலரும் அவ்வாறே படிப்பீர்கள் என நினைக்கிறேன். அப்படியும் சில உங்கள் கண்களில் படாமல் போய்விடலாம். எனவே நான் கூர்ந்து படித்த சிலவற்றை உங்கள் முன் - இந்த வாரம் மட்டும் - வைக்கிறேன்.

நாரயணனின் போர்களின் கோரமுகங்கள் பற்றிய இரண்டு சினிமாக்களின் அறிமுகம்.

மதியின் ஃபைண்டிங் நீமோ படத்தில் நீமோவை வரைந்த டான் லீ நுரையீரல் புற்று நோயால் இறந்தது பற்றிய செய்தி. Finding Nemo, நானும் என் மகளும் வாரத்துக்கு ஒரு முறையாவது பார்க்கும் படம். செய்தி வருத்தத்தைத் தருகிறது.

ஆச்சிமகனின் கண்களைக் குருடாக்கும் லேசர் விளக்குகள் மலிவு விலையில் என்னும் பதிவு. எனக்கு இதில் சந்தேகம் உள்ளது. இது உடலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்தாதது என்றுதான் நினைக்கிறேன். லேசர் நிபுணர் வெங்கட் பதிவில் இதுபற்றிக் கேட்டிருக்கிறேன்.

சுதேசி விழிப்புணர்வு இயக்கம் ஒருநாள் கருத்தரங்கு

ஸ்வதேஷி ஜாகரன் மஞ்ச் எனப்படும் சுதேசி விழிப்புணர்வு இயக்கம், 12 பிப்ரவரி 2005, சனிக்கிழமை அன்று சென்னையில் ஒருநாள் கருத்தரங்கு ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது. இடம்: டாக்டர் எம்.ஜி.ஆர் ஜானகி கலை, அறிவியல் பெண்கள் கல்லூரி, 11-13, துர்காபாய் தேஷ்முக் சாலை, அடையார், சென்னை (ஆந்திர மகிள சபா எதிரில்). நேரம்: காலை 9.30 முதல் மாலை 4.30 வரையில்.

காலையில் இரண்டு முக்கியமான பேச்சுகள் உள்ளன.

1. உலக வர்த்தக அமைப்பும், உலகமயமாதலும், காப்புரிமையும் - ஒரு பார்வை : குமாரசுவாமி.
2. இந்தியச் சூழலில் வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் - முரளிதரன்

இதைத்தவிர சுதேசி விழிப்புணர்வு இயக்கத்தின் கொள்கைகள், செயல்பாடுகள் ஆகியவை பற்றியும், கலந்துரையாடலும் நடைபெறும்.

கலந்துகொள்வதற்குக் கட்டணம் ரூ. 50. மதிய உணவும், இடையிடையே காபி, டீயும் வழங்கப்படும்.

கலந்துகொள்ள விரும்புபவர்கள் தொடர்பு கொள்ள: ரவி வானமாமலை - 98415-91518, ஸ்ரீதர் - 94441-90977