தொலைக்காட்சி வருவதற்கு முன்னர் பெரும்பாலும் வானொலி கிரிக்கெட் வர்ணனையாளர்கள் தங்களது ஆட்டம் பற்றிய அறிவுக்காகவும், குரல் வளத்துக்காகவுமே தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
வானொலியில் கிரிக்கெட் வர்ணனை தருபவர்கள் இருவகைப்படுவர். ஒருவர் ஆட்ட வர்ணனையாளர். மற்றவர் வர்ணனைக்கு வளம் சேர்க்கும் நிபுணர். இருவரும் ஒருசேர அமர்ந்திருந்து தங்களுக்குள்ளாக ஒரு உரையாடலை நடத்திக்கொண்டிருப்பர். இடையிடையே பந்துகள் வீசப்படும்போது வர்ணனையாளர் பந்தை விவரிப்பார். மட்டையடியை விவரிப்பார். பந்து தடுக்கப்படுவதை விவரிப்பார். அப்பொழுது நிபுணர் வாய்பொத்தி அமைதியாக இருப்பார். பந்தின், அடியின், தடுத்தலின் விவரம் முடிந்தவுடன் வர்ணனையாளர் நிபுணரைப் பேச்சுக்கு இழுப்பார். அந்தப் பந்தில் உருப்படியாக ஏதாவது நடந்திருந்தால் கேள்வி அதுபற்றியதாக இருக்கும். இல்லாவிட்டால் ஏற்கெனவே நடந்துகொண்டிருக்கும் உரையாடல் தொடரும்.
இந்த உரையாடல் எதைப்பற்றி வேண்டுமானாலும் இருக்கலாம். கிரிக்கெட் பற்றி இருக்கவேண்டுமென்று கூடக் கிடையாது. பிபிசி கிரிக்கெட் வர்ணனையில் ஹென்றி புளோஃபெல்ட் கேக் சாப்பிடுவதிலிருந்து, புத்தகம் படிப்பதிலிருந்து, கூட்டத்தில் இருப்பவர்களின் காதுத் தோடுகள் வரை எதைப்பற்றி வேண்டுமானாலும் பேசுவார். நிபுணர் ஒரு தேர்ச்சிபெற்ற முன்னாள் கிரிக்கெட் வீரர்/கோச் என்றால் பேச்சு பெரும்பாலும் அவர்களைப் பற்றியதாக இருக்கும். நிபுணரின் வாயைத் தோண்டித் துருவி சுவையான விஷயங்களை வெளிக்கொணர்பவரே சிறந்த வர்ணனையாளர்.
தொலைக்காட்சி வந்ததும் கிரிக்கெட் வர்ணனை முற்றிலுமாக அழிந்துபோனது. நட்சத்திர கிரிக்கெட் வீரர்களை மட்டுமே வைத்து தொலைக்காட்சி வர்ணனை நடந்தது. படங்களே எல்லாவற்றையும் விவரிப்பதால், தொலைக்காட்சி வர்ணனையாளர் எப்பொழுதாவது ஓரிரு வார்த்தைகள் சொன்னால் போதும் என்றானது.
இன்றும்கூட BBC Test Match Special வானொலி வர்ணனை மிகவும் பிரசித்தி பெற்றது. (ஆனால் முன்போல் இல்லாது சற்றே தரத்தில் குறைந்துள்ளது. நிறைய செய்தித்தாள் நிருபர்களை வைத்து ஒப்பேற்றப் பார்க்கிறார்கள். நான்கு பேர்கள் போதும். ஆனால் அதை விடுத்து தேவையின்றி கூட்டம் சேர்க்கிறார்கள்.)
இந்திய வானொலி தரத்துக்குப் பேர் போனதல்ல. ஆங்கில/ஹிந்தி கிரிக்கெட் வர்ணனை மிகச்சிறப்பு வாய்ந்தது என்று சொல்ல முடியாது.
ஆனால் சென்னை கிரிக்கெட் ஆட்டத்துக்காக சென்னை வானொலி தயாரிக்கும் தமிழ் கிரிக்கெட் வர்ணனை நல்ல தரம் வாய்ந்ததாகவே இருந்தது. அப்துல் ஜப்பார், ராமமூர்த்தி, கூத்தபிரான் போன்றோர் தமது வர்ணனையில் கணீரென்ற குரலையும், நல்ல கிரிக்கெட் அறிவையும், அதற்கு மேல் தீவிர ஆர்வத்தையும் கொண்டுவந்தனர். இவர்கள் அனைவருமே கிரிக்கெட் நிபுணர்கள் என்ற பிரிவில் வரமாட்டார்கள். வர்ணனையாளர்கள் என்ற பிரிவில் வருவார்கள். ஆனால் ஒருவர் வர்ணனை செய்யும்போது அடுத்தவர் நிபுணர் இருக்கையில் அமர்ந்திருப்பார். (பெரிய அளவில் கிரிக்கெட் விளையாடிய தமிழர்களுக்கு உருப்படியாகத் தமிழில் பேசவராது என்பதனால் சரியான கிரிக்கெட் நிபுணர் யாருமே தமிழ் வர்ணனைக்குக் கிடைத்ததில்லை.)
அப்துல் ஜப்பார் 'வாலாஜா சாலை முனையிலிருந்து பந்துவீச்சாளர் தனது ஓட்டத்தைத் தொடங்குகிறார்' எனும்போது கண்ணில் அந்தக் காட்சி தெரியும். 'அளவு சற்றுக் குறைவாக விழுந்த பந்து' எனும்போது பந்து ஆடுகளத்தின் நடுவில் குத்தி நம் கண் முன்னே எழுந்து வரும். 'பின்காலில் சென்று வெட்டி ஆடுகிறார்' எனும்போது கைகள் தானாக 'cut' செய்யும். 'கவர் திசைக்கும், பாயிண்ட் திசைக்கும் இடையே பந்து பறந்து செல்கிறது' ... பந்து செல்லும். 'பந்துத் தடுப்பாளர் பாய்ந்து தடுக்கிறார்' ... தடுப்பார். 'வேகமாக ஓடிச்சென்று இரண்டு ஓட்டங்களைப் பெறுகிறார்கள்'... 'அணியின் எண்ணிக்கை 63ஆக உயர்கிறது' ... 'அடுத்த பந்து...'
கிரிக்கெட் போன்ற ஓர் ஆட்டத்தில் நுட்பமான பல விஷயங்கள் உண்டு. பிற ஆட்டங்களிலும் உண்டு. பொதுமக்களுக்கு நுண்ணிய விஷயங்கள் தெரிந்திருக்காது. அளவு குறைந்து வரும் பந்தை ஏன் பின்னங்காலில் சென்று ஆட வேண்டும்? முன்னங்காலில் வந்து ஆடினால்? வர்ணனையாளர் உதவியில்லையென்றால் பலருக்கு என்ன நடக்கிறது என்றே புரியாது.
வானொலி வர்ணனை போய், தொலைக்காட்சி வந்ததும் இன்று பலரும் கிரிக்கெட் பார்க்கிறார்கள். ரன்கள் பெறும்போதெல்லாம் கைதட்டுகிறார்கள். அது விளிம்பில் பட்டு ஸ்லிப் மேல் அசிங்கமாக எகிறி எல்லைக்கோட்டைக் கடந்தாலும் சரி, விஷ்வநாத் கடைசி விநாடியில் தட்டிய 'லேட் கட்' ஆக இருந்தாலும் சரி. ஆட்டம் மட்டும் புரிவதில்லை.
நேற்று அப்துல் ஜப்பாரைச் சந்தித்தபோது கடந்த சென்னை ஆட்டத்தின்போது தமிழில் வர்ணனை இல்லாததைப் பற்றி வருத்தம் தெரிவித்தார். தனக்கு வாய்ப்பு போய்விட்டதே என்பதால் அல்ல, தமிழில் வர்ணனை இல்லாது போய்விட்டதே என்பதால் என்றார். இனி சிறு சிறு நகரங்களில் இருக்கும் தமிழன் கிரிக்கெட்டை எப்படிப் புரிந்து கொள்ளப்போகிறான் என்ற ஆதங்கம் அதில் வெளிப்பட்டது. எனக்கு இதுபற்றி மிகப்பெரும் வருத்தம்தான்.
தமிழில் 24 மணிநேரமும் விளையாட்டுகள் (கிரிக்கெட் மட்டுமல்ல) பற்றிப் பேசிக்கொண்டே இருக்கும் ஒரு பண்பலை வானொலி நிலையம் வருவது சாத்தியமானதுதான். பிரிட்டனில் டாக் ஸ்போர்ட் என்றொரு வானொலி உள்ளது. அதைப்போல. டென்னிஸ், கால்பந்து, கிரிக்கெட், ஹாக்கி, தடகளப் போட்டிகள் (ஒலிம்பிக்ஸ், தேசியப் போட்டிகள்) என்று பல்வேறு ஆட்டங்களைப் பற்றிய நேர்முக வர்ணனைகள், செய்திகள், நேர்முகங்கள், பழைய விளையாட்டுகளின் தொகுப்புகள் என்று பலவும் இருக்குமாறு செய்யலாம்.
அதற்கும் காலம் வரும்.
ஆன்மீகத்திற்கும் கவிதைக்கும் என்ன தொடர்பு?
11 hours ago
நான் கிரிக்கெட் குறித்து எல்லா ஆர்வத்தையும் இப்போது தொலைத்துவிட்டாலும், கிரிக்கெட் வெறி பெடித்தலைந்த காலத்தில் பொங்கல் அன்று தமிழ் கமெண்டரி கேட்க காத்திருந்த பெருங்கூட்டதில் ஒருவன்.தமிழ் வர்ணணை நிறுத்தப்பட்டதெனப்து ஒரு அராஜகமாகவே தெரிகிறது.
ReplyDeleteநல்ல தலைப்பு. அந்த வர்ணனையாளர்கள் கூட்டத்தில், சிறப்பு நிபுனராக ரங்காச்சாரி அவர்கள் பணி புரிந்து வந்தார்கள்.
ReplyDeleteவர்ணனைகளில் சில
- ஓட்டம் எதுவும் இல்லை, ரன்னில் மாற்றம் எதுவும் இல்லை
- கோம்ஸ் அவர்கள் அதளபாதாளத்தின் மேல் கயிற்றில் நடப்பது போல விளையாடினார்.
தமிழில் வர்ணனை கேட்பதற்காகவே சென்னையில் நடக்கும் டெஸ்ட் போட்டிகளுக்கு காத்திருந்த நாட்கள் பல.
ஒரு விளையாட்டு வானொலி நிலையம் வந்தால், ரஞ்சி முதல் கெம்ப்ளாஸ்ட், பிஸ்டன்ஸ், ஆழ்வார்ப்பேட்டை போட்டிகள் வரை தமிழிலேயே சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தலாம். சூரியனும், மிர்ச்சியும் அடைந்துள்ள இடத்தை அடையலாம்.
அன்னா, சென்னை பல்கலைக்கழகங்களும், கல்லூரிகளுமே பன்பலை ஒலிபரப்பு செய்தால், விளையாட்டு போட்டிகளுக்கும் குறிப்பிட்ட நேரம் ஒதுக்கலாம்..
எல்லாமே 'கலாம்' தான். கலிபோர்னியாவில் ஒரு தமிழ் வானொலியில் கிரிக்கெட் வர்ணனை செய்ய ஆசை இருந்தது. ஆனால் எப்படியோ காலம் சென்று விட்டது.
By: NS
இப்பவும் ஞாபகம் உள்ளது. இந்திய ஆஸ்திரேலிய சென்னை டெஸ்ட் - டை ஆன போது ராமமூர்த்தி அவர்களின் 'இதய பலவீனமுள்ளவர்கள் வானொலியை அணைத்துவிடவும்' என்கிற அளவில் மிகவும் உச்ச கட்ட ஆட்டத்தை அருமையாக சொன்னார்கள். அப்துல் ஜப்பாரின் அந்த துள்ளி வரும் வார்த்தைகள், ராமமூர்த்தி மற்றும் கூத்தபிரான் அவர்களின் இலக்கிய (கம்பராமயாணம் போன்ற) செய்தி கூட்டுதல், சென்னை/தமிழுக்கே உரித்தான சில எடுத்துக்காட்டுகளை சரியாக கையாளுவது.... காவஸ்கர், விஸ்வநாத், ரிச்சர்ட்ஸ், பார்டர் போன்றோரின் ஆட்டங்களை சுவைபடக் கேட்ட அந்த நாட்கள்...ஹும்
ReplyDelete- அலெக்ஸ்
By: Alex Pandian
நாம் இழந்து கொண்டிருக்கும் எத்தனையோ நல்ல விஷயங்களில் இதுவும் ஒன்று.
ReplyDeleteதமிழில் வந்த கிரிக்கெட் வர்ணனைகளை யாரேனும் (சென்னை வானொலி நிலையம், திரு.ஜப்பார் முதலானோர்) பதிவு செய்து தொகுத்து வைத்துள்ளார்களா? அப்படியிருப்பின், அதைக் 'கேசட்' மற்றும் குறுந்தகட்டில் அவர்கள் வெளியிடலாமே!
அப்துல் ஜப்பார் அவர்களின் அருமையான வருணனைகளை கேட்டு மகிழ்ந்தவர்களுள் நானும் ஒருவன். வருனனை மட்டுமே செய்து வந்த அவர் இப்போது நன்றாக சிக்சர்களும் பவுண்டரிகளும் விளாசுகிறார் - தன் தமிழ் தளத்தில் தான். - இன்னும் குறிப்பிடவேண்டிய விஷயம் அவர் யாருடைய விக்கட் களையும் வீழ்த்த முற்படுவதில்லை என்பது.
ReplyDeleteBy: IbnuHamdun