Wednesday, February 02, 2005

தமிழகக் குழந்தை வேலைக்காரர்கள் கேரளத்தில் விற்பனைக்கு

பாலவேலக்கார் வில்பனய்க்கு - மாத்ருபூமி 2-2-2005, இன்றைய மாத்ருபூமி தினப்பத்திரிகையில் முதல் பக்கச் செய்தி, தமிழாக்கம்: இரா.முருகன்

குழந்தை வேலைக்காரர்கள் விற்பனைக்கு

ஒல்லூர் (திருச்சூர் மாவட்டம்)

குழந்தைகள் விற்பனைக்கு. விருப்பமான வேலை செய்ய வைத்துக்கொள்ளலாம். கூலி மாதம் ரூ எழுநூற்றைம்பது மட்டும். ஏஜண்டுக்கு ரூபாய் ஐநூறு கமிஷன்.

தேசிய நெடுஞ்சாலை எண் 47-ல், செவ்வாய்க்கிழமை (நேற்று) இது காணக் கிடைத்தது. வழியருகே நிறுத்திய ஒரு க்வாலிஸ் காரில் சுமார் பதினைந்து சிறுவர் சிறுமியர் இப்படி விற்பதற்காகக் காட்சிப் படுத்தப்பட்டார்கள்.

சேலத்துக்காரர்களான இவர்களில் 11 வயதுள்ள சிறுவனும், 9 வயதுள்ள சிறுமியும் உண்டு. ஏஜண்டுக்கு அதிக நேரம் காத்திருக்க வேண்டியில்லாமல், குழந்தைகள் வேலைக்கு வைத்துக்கொள்ளக் கூட்டிப்போகப்பட்டார்கள்.

சேலம் நெடுஞ்செழியன் என்பது ஏஜண்ட் பெயர். செயிண்ட் மெரீஸ் தேவாலய மடத்தின் அருகில் நெரிசல் மிகுந்த சாலையில் குழந்தைகள் விற்பனைக்குக் கொண்டுவரப்பட்டன.

குறைந்தது ஓர் ஆண்டாவது குழந்தைகளை வேலைக்கு வைத்துக்கொள்ள வேண்டுமென்ற நிபந்தனை உண்டு. குழந்தைகளை அழைத்துப் போகும்போது கமிஷன் கொடுக்க வேண்டும். ஆறு மாதத்துக்கு ஒருமுறை குழந்தைகளை 'வாங்கிய' வீடுகளுக்கு ஏஜண்டுகள் போவார்கள். அப்போது குழந்தைகளுடைய ஆறு மாதச் சம்பளத்தை மொத்தமாகத் தரவேண்டும். உடன்படிக்கை எல்லாம் வாய்மொழியாகத்தான். திருச்சூரில் மட்டுமில்லை, மற்ற கேரள மாவட்டங்களிலும் இப்படிக் குழந்தைகளை விற்பனை செய்வதுண்டு.

ஒரு வருட ஒப்பந்தம் முடிந்தால் வீட்டுக்காரர்கள் தங்கள் உறவினர்களுக்கோ, நண்பர்களுக்கோ இக்குழந்தைகளை ஏஜண்ட் மூலம் மறுபடி விற்கலாம். குழந்தைகள் அந்த ஒரு வருடத்தில் செய்த வேலை, உழைப்புத் திறனை வைத்து அவர்களுக்கு அடுத்த கூலி நிர்ணயிக்கப்படும்.

சின்னக் குழந்தைகளைக் கவனித்துக் கொள்வது, நோயாளிகளுக்குப் பணிவிடை செய்வது என்பது போன்ற வேலைகளுக்காக இக்குழந்தைகள் பணியாளர்களாக அமர்த்தப்படுகின்றனர்.

ஒவ்வொரு மாதமும் இரண்டு தடவையாவது இப்படிக் குழந்தைகளைப் பகிரங்கமாக விற்பது நடைபெறுகிறது என்று ஏஜண்ட் சொன்னான். (நம் நிருபர்) வேலைக்குக் குழந்தை வேண்டும் என்று நடித்து அவனை அணுகியபோது இதைச் சொன்னான். குழந்தைகள் சேலம் பகுதியிலிருந்து புகைவண்டியிலோ, பேருந்திலோ கொண்டுவரப்பட்ட பிறகு இப்படி வேன்களில் சந்தைப்படுத்தப்படுவார்கள்.

கூடுதல் விலைபோகும் இடத்தில் வேனை நிறுத்திவைப்பார்கள். ஒல்லூரில் ஒருவரே மூன்று குழந்தைகளை வாங்கிப்போனார். ஒரு வருடம் வேலை செய்த குழந்தைகளை அவர்கள் வேலை செய்த வீடுகளிலிருந்து கூட்டி வந்து வேறு வீட்டுக்காரருக்குக் கைமாற்றுவதும் இந்த வேளையில் நடக்கும்.

குழந்தைகளைப் பார்த்துவிட்டுத் திரும்பி நடக்கும்போது, பின்னாலேயே வந்த ஏஜண்ட் நெடுஞ்செழியன் சொன்னான், "சார், 650 ரூ கொடுத்தாலும் போதும்; பிள்ளையைக் கூட்டிட்டுப் போங்க".

நன்றி: மாத்ருபூமி 2.2.2005

7 comments:

  1. இந்த விற்பனை ஒரு புறமிருக்க கேராளாவில் மட்டுமில்லாது கர்நாடகா, பாம்பே என்று எல்லா இடங்களிலும் தமிழ் சிறுவர்கள் மட்டுமே வேலையிலிருப்பதை காணமுடியும். என் அனுபவத்தில் மற்ற மானிலங்களில் ஹோட்டல்களில் ஒரு சின்ன பையனை வேலையில் பார்த்து, அவனிடம் பேச்சு கொடுத்து, என் ஊகம் ஒருபோதும் தப்பியதில்லை. சேலம் அருகிலேயோ எங்கிருந்தோ வரும் தமிழ் சிறுவர்களை மட்டுமே இப்படி சந்தித்திருக்கிறேன்..

    ReplyDelete
  2. வசந்தின் கருத்தோடு ஒத்துப் போகிறேன். நான் மலேசியாவிலிருக்கும் போது சாப்பிட்ட இடங்களெங்கும் (இந்திய/ சீன)/ மலாய் ) தமிழ் சிறுவர்கள் டேபிள் துடைக்கவும், பாத்திரங்கள் கழுவவும் பயன் படுத்தப் படுகிறார்கள். இதுமட்டுமல்லாமல், போன வாரத்திய டெஹல்காவில், கோவா எப்ப்டி "குழந்தைகள் செக்ஸ் (Pedophile)"-ன் சொர்க்கமாக விளங்குகிறது என ஒரு அதிர்ச்சியூட்டும் தகவலை வெளியிட்டிருந்தனர். இதில் ஈடுபடும் பெரும்பாலான சிறுவர்கள் தென்மாநிலங்களிலிருந்து கடத்தி வரப்படுபவர்கள். அவ்வளவு தூரம் ஏன் போகவேண்டும், சற்றே பெசன்ட் நகர் கடற்கரையோரம் சென்று, சுண்டல், மாங்காய் விற்கும் சிறுவர்களிடம் பேச்சுக் கொடுங்கள். 90% பேர் இராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து அழைத்து வரப்பட்டவர்கள். அவர்க்ளின் ஒரு நாளைய சம்பளம் 50 ரூபாய்க்கும் குறைவே. நிலைமை இப்படியிருக்க அண்டை மாநிலங்களை குறை சொல்லுவதில் என்ன பெருமை இருக்கப் போகிறது ? கடுமையான சட்டங்கள் இருக்கும்போதே, இவ்வாறான வரம்புமீறல்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

    ReplyDelete
  3. இது மட்டுமல்ல. ஒரிஸா எல்லையில் 'முறுக்கு பிழிவது' என்ற பெயரில் உள்ள சில கொத்தடிமை வேலைகளுக்கு (அதிலிருந்து தப்பி வந்தவரின் கதையை கேட்டால் அது ஏதோ கடின உழைப்பு முகாம் மாதிரி இருக்கிறது) என்று தமிழகத்திலிருந்து மனிதர்கள் விற்கபடுகின்றனர், ஏமாற்றி கடத்தபடுகின்றனர். வறுமை என்பது ஓரளவு சமமாய் எல்லா இஅடத்திலும் இருக்க இது போன்றவை எல்லாம் (உதாரணமாய் கிட்னி விற்பது, பறிகொடுப்பது கூட) தமிழகத்திலேயே பரவலாய் நடப்பதற்கான காரணங்கள் பிடிபடவில்லை. இது குறித்த விரிவான ஆய்வுதேவை.

    ReplyDelete
  4. என் மலையாளி நண்பன் ஒருவன்கூட, தனது மாமா உட்பட, கேரளாவில் செங்கற்சூளைகளில் வேகும் சூட்டில் நின்று வேலைசெய்ய தமிழ்நாட்டினரை, சிறுவர்களைத்தான் உபயோகப்படுத்துகிறார்கள் என்றான். தமிழ்நாட்டைப்பற்றிய அவர்களது பிம்பம் அப்படித்தான் இருக்கிறது. கேரளத்தவர்கள் குறைந்தபட்சம் டீக்கடையாவது வைத்துப் பிழைப்பார்களே தவிர, பாண்டிக்காரன்கள் (மலையாள இழி) போல் இதுபோன்ற வேலைகளெல்லாம் செய்வதில்லை என்பது அவர்களது நாகரீக வாதம்!! அமெரிக்கா வந்தபின் தனது கக்கூஸைத் தானே கழுவிக்கொள்ளும் ஒரு நண்பன் கூட, பெங்களூர் முனிசிபாலிட்டியில் தோட்டி வேலை செய்பவர்கள் அனைவரும் தமிழர்கள்தான் என்றான் ஸ்டைலாக. அடிப்படையிலேயே எங்கேயோ தவறு உள்ளது.

    ReplyDelete
  5. இதற்கெல்லாம் மொத்த காரணம் இந்திய அரசியல், சினிமா போன்றவைதான். தமிழகத்திற்கான பணம் எங்கெல்லாமோ வீணடிக்கப்படுகிறது. மக்கள் என்ன செய்வதென்று தெரியாமல் மனிதாபிமானமின்றி நடந்து கொள்கின்றார்கள். தமிழ் நாட்டு ஒன்று திரண்டு எப்போது அரசியலில் ஒரு புரட்சியைக் கொண்டு வருகின்றார்களோ அப்போதுதான் தமிழ் நாட்டு நிலமை மாறும் என்பது என் கருத்து. இதற்கு மிகப் பிரமாண்டமான புரட்சி தேவை. இது சாத்தியமா?

    By: karupu

    ReplyDelete
  6. I hope Mr.Murugan alerted the police immediately

    ReplyDelete
  7. OOPS.Sorry,I hope the malayali journalist,who wrote the original article, alerted the police immediately

    ReplyDelete