Monday, December 14, 2009

கிழக்கு பதிப்பகத்தில் முதலீடு

தமிழின் முதன்மைப் பதிப்பகமான கிழக்கு பதிப்பகத்தை நடத்தும் நியூ ஹொரைசன் மீடியா (பி) லி., தனது அடுத்த கட்ட வளர்ச்சிக்காக தனிப்பட்ட முதலீட்டாளர்களை வரவேற்கிறது. இந்த முதலீடு ஈக்விட்டி (பங்குகள்) வாயிலாக இருக்கும்.

விரும்பும் "High Networth Individuals" (HNIs) என்னைத் தொடர்புகொள்ளவும். பெரும்பாலும் ஒருவர் அல்லது இருவரிடமிருந்து மட்டுமே முதலீடுகள் பெற்றுக்கொள்ளப்படலாம்.

எனது மின்னஞ்சல் முகவரி: badri@nhm.in
.

Thursday, December 10, 2009

ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் விலகும் நேரம்

ராஜிவ் கொலை தமிழகத்தையே உலுக்கிய ஒரு நிகழ்வு. அதன் விளைவு, அடுத்த 19 ஆண்டுகள் கழித்தும்கூட இலங்கைப் பிரச்னையில் இந்தியாவின் நிலைப்பாட்டை ஒரு குறிப்பிட்ட திசையில் செலுத்தியது.

ராஜிவ் கொலையைப் புலனாய்வு செய்த சிறப்புப் புலனாய்வுக் குழுவின் தலைவராக இருந்தவர் டி.ஆர்.கார்த்திகேயன் (ஐ.பி.எஸ்) என்ற தமிழர். தலைமைப் புலனாய்வு அதிகாரியாக இருந்தவர் அப்போது டி.எஸ்.பி ரேங்கில் இருந்த சிபிஐ அதிகாரி கே.ரகோத்தமன் என்ற தமிழர்.

கார்த்திகேயன் ஒரு புத்தகத்தை எழுதியுள்ளார். அதைப் படித்து நான் எழுதிய பதிவு இங்கே. ஒருமுறை புது தில்லியில் கார்த்திகேயனை அவரது வீட்டில் சந்தித்து நானும் சத்யாவும் பேசிக்கொண்டிருந்தோம். கொலை எப்படித் துப்பறியப்பட்டது முதற்கொண்டு பல விஷயங்களைப் பற்றிப் பேசினோம். இந்தப் புத்தகத்தின் தமிழாக்க உரிமையைக் கேட்டோம். அதற்குள் அவர் கலைஞன் பதிப்பகத்துக்கு அந்த உரிமையைத் தந்திருந்தார். சில மாதங்கள் கழித்து நண்பர் (கிழக்கின் எழுத்தாளர்) சந்திரமௌளியின் மொழிபெயர்ப்பில் அந்தப் புத்தகம் தமிழில் கலைஞன் வெளியீடாக வெளியானது.

ராஜிவ் கொலை பற்றி எழுதப்பட்ட மற்றொரு புத்தகம் சுப்ரமணியம் சுவாமியுடையது. அதன் தமிழாக்கம் சுதாங்கனால் செய்யப்பட்டு அல்லயன்ஸ் வெளியீடாக வந்தது. அந்தப் புத்தகத்தைப் பற்றி நான் எழுதிய பதிவுகள் இங்கே + இங்கே. சமீபத்தில் (ஜூன்/ஜூலை 2009) சுப்ரமணியம் சுவாமியுடன் பேசும்போது அவர் இந்தக் கொலை தொடர்பாகப் பல யூகங்களைச் சொன்னார். அவை பொதுவில் எழுத முடியாதவை. அவரே வேண்டுமானால் அதைப்பற்றி எழுதலாம்.

சந்திரமௌளி மூலமாகத்தான் ரகோத்தமன் அறிமுகமானார். இரண்டு வருடங்களுக்கு முன்னால் என்று நினைக்கிறேன். அப்போது அவர், ராஜிவ் கொலை பற்றி ஒரு குறுந்தகடு வெளியிட்டிருந்தார். புத்தகம் எழுதமுடியுமா என்று கேட்டிருந்தேன். அதைப்பற்றி மேலோட்டமாகப் பேசியிருப்போம். ஆனால் அப்போது எதுவும் நடக்கவில்லை. (ஏன் என்று பின்னர்தான் காரணம் தெரிந்தது.) அடுத்து ரகோத்தமனிடம் பேசியது ஜூன் 2009-ல்தான்.

அலுவலகம் வந்திருந்தவர் ராஜிவ் கொலை வழக்கு பற்றி நிறையப் பேசினார். மடைதிறந்த வெள்ளம் போலப் பேசினார். நான், சத்யா, பிரசன்னா அறையில் இருந்தோம். கார்த்திகேயனின் புத்தகம் பற்றியும் பேசினார். அதில் பல தகவல்கள் இல்லை என்றார். சில முரண்பாடுகள் இருந்தன என்றார். ஒரு புலனாய்வு அதிகாரியாக, களத்தில் இருந்து பார்த்தவராக, அவருக்குப் பல விஷயங்கள் தெரிந்திருந்தன. அப்போதுதான் அவர் ஏன் ஒரு புத்தகத்தை எழுதக்கூடாது என்று கேட்டோம். அவரிடம் அனைத்து ஆவணங்களும் இருந்தன. விரல் நுனியில் தகவல்கள் இருந்தன. எந்த நாள், எந்த நேரம், எந்த இடத்தில் யாரைக் கைது செய்தார் என்று பட்டென்று சொன்னார்.

கடைசியில் புத்தகம் எழுதுவதாக ஒப்புக்கொண்டார். கடுமையாக உழைத்தார். எங்கள் அலுவலக எடிட்டோரியலைச் சேர்ந்த எடிட்டர்கள், ரகோத்தமனின் சிந்தனை எழுத்தாக மாற உதவினர். ரகோத்தமனின் தலையில் சிதறிக்கிடந்த பல தகவல்களையும் ஒழுங்குசெய்து, நேராக்கி, எளிமையாகப் புரியும்வண்ணம் சீர்செய்யவேண்டியிருந்தது. கடைசி நேரம் வரை எடிட்டர்கள் புத்தகத்தைப் படித்து, பல மாற்றங்களைச் சொல்லிக்கொண்டிருந்தனர். ஒவ்வொரு வெர்ஷனுக்கும் பிறகு ரகோத்தமனுக்குப் புதிதாக சில விஷயங்கள் தோன்றும். அதைச் சேர்ப்பார். கடைசியில் ஒரு கட்டத்தில் இது திருப்தியாக உள்ளது என்று அவர் முடிவெடுத்தார். சில சென்சிடிவான விஷயங்கள் இருந்தன. அவையெல்லாம் கண்டிப்பாக இடம் பெறவேண்டும் என்றார். என்ன பிரச்னை என்றாலும் தான் சமாளித்துக்கொள்வதாகக் கூறினார். வார்த்தைகள் சரியாக வரவேண்டுமே, சொல்லும்போது தொனி சரியாக இருக்கவேண்டுமே என்று நிறைய கவனம் எடுத்துக்கொள்ளவேண்டியிருந்தது.

அவரிடம் அனைத்து விசாரணை கமிஷன் ஆவணங்கள், வாக்குமூலங்கள், கடிதங்கள், துண்டு துணுக்குகள் என்று ஏகப்பட்ட தகவல்கள் இருந்தன. குவிந்துகிடந்த ஆவணங்களிலிருந்து சிலவற்றை மட்டும் புத்தகத்தில் சேர்ப்பது என்ற முடிவுக்கு வந்தோம். சில கடிதங்கள், விடுதலைப் புலிகள் பயன்படுத்திய வயர்லெஸ் சங்கேத சமிக்ஞைகள், சில படங்கள் போன்றவை.

கடைசியாக புத்தகம் அச்சாகி வந்துவிட்டது. கடைகளுக்கு அடுத்த ஓரிரு நாள்களில் செல்லும். திங்கள் முதலே சில கடைகளில் கிடைத்துவிடலாம்.

படிப்பவர்கள் யாருமே புத்தகத்தைக் கீழே வைக்கமுடியாது என்று என்னால் அடித்துச் சொல்லமுடியும். புத்தகத்தில் அதிர்ச்சிகரமான விஷயங்கள் உள்ளனவா, இதனால் தமிழகத்தில் சர்ச்சைகள் ஏற்படுமா என்றெல்லாம் எனக்குத் தெரியாது. படிப்பவர்கள் தாங்களே முடிவு செய்துகொள்ளட்டும்.

புத்தகத்தை வாங்க

.

Wednesday, December 09, 2009

தெலுங்கானா


உண்ணாவிரதம் இருந்தால் தனி மாநிலம் கிடைக்கும் என்பதை நன்கு உணர்ந்தவர்கள் தெலுங்கர்கள். பொட்டி ஸ்ரீராமுலு உண்ணாவிரதம் இருந்து உயிர் துறந்தார். ஆந்திர மாநிலம் உருவானது. இப்போது சந்திரசேகர ராவ். தெலுங்கானாவும் உருவாகிவிடலாம்.

தெலுங்கானாவைப் பற்றிச் சிந்திக்கும்போது, அது தேவைதான் என்று முன்னர் நினைத்திருந்தேன். ஆனால் மீண்டும் ஆழமாகச் சிந்திக்கும்போது அது தவறோ என்று தோன்றுகிறது. இந்தியாவில் சிறு மாநிலங்கள் எல்லாமே சகதியில் மாட்டியுள்ளன. அவற்றின் சட்டமன்றங்கள் inherently unstable வகையைச் சார்ந்தவை. அதிலும் சமீபத்தில் உருவாக்கப்பட்ட மூன்று மாநிலங்களான ஜார்க்கண்ட், உத்தராஞ்சல், சட்டீஸ்கர் ஆகியவற்றை எடுத்துக்கொள்ளுங்கள். பெரு மாநிலங்களின் சிறு துண்டுகளாக இருந்தவை. அனைத்திலும் கனிம வளம். அனைத்திலும் பழங்குடியினர். அனைத்திலும் மாவோயிஸ்டுகள். அனைத்துமே பின்தங்கிய பகுதிகள்.

இவை எல்லாமே ஒன்றோடு ஒன்று இணைந்தவை. பழங்குடிகள் அதிகமாக இருக்கும் இடங்கள், நவீன நாகரிக அளவுகோல்களின்படிப் பார்த்தால் பின்தங்கிய பகுதிகளாகவே இருக்கும். பழங்குடிகள் காட்டில் வசிக்க விரும்புபவர்கள். காடுதான் அவர்களுக்கு உணவு; காடுதான் அவர்களுக்கு வாழ்விடம். அவர்களுக்கு பணம் தேவையில்லை. பணம் என்பதை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்றே இன்னும் அறியாமல் இருக்கிறார்கள். (ஜார்க்கண்டுக்குச் சென்றுவந்த வங்கி அதிகாரி ஒருவர் இதைப்பற்றி என்னிடம் கூறினார்.) அந்தப் பகுதிகளில் மருத்துவமனைகள் கிடையாது. சாலைகள் கிடையாது. பள்ளிக்கூடங்கள் கிடையாது.

ஆனால் அங்கேதான் கனிமங்கள் உள்ளன. எனவே கனிம வளங்களை வெட்டி எடுக்க விரும்பும் நிறுவனங்கள் வருகின்றன. விளைநிலம் என்றாலாவது அதிலிருந்து கிடைக்கும் விளைச்சல் பரவலாகும். செல்வம் அனைத்து மக்களுக்கும் போய்ச்சேராவிட்டாலும் பலருக்கும் போய்ச்சேரும். மீதம் உள்ளவர்களுக்கு வேலையாவது கிடைக்கும். ஆனால் கனிமங்கள் என்றால் முதலீடு நிறையத் தேவை. அதிலிருந்து கிடைக்கும் செல்வமும் சில பெரு நிறுவனங்களுக்கும் அதன் பங்குதாரர்களுக்கும் மட்டுமே போய்ச்சேரும். அந்த நிறுவனங்களில் பழங்குடியினருக்கு வேலை கிடைக்காது. அங்கு வேலை செய்ய பிற இடங்களிலிருந்து ஏழைகள் அழைத்து வரப்படுவார்கள்.

எனவே மாவோயிஸ்டுகள் தோன்றித்தான் ஆகவேண்டும்.

அடிப்படையில் வலுவற்ற, ஆட்டம் காணும் சிறு சட்டமன்றங்கள், பெரும் பணத்தால் எளிதாக வளைக்கப்படும். எனவே காவலர்களின் காட்டாட்சி, பின்னர் ராணுவத்தின் ரத்த வேட்டை. சிறு சட்டமன்றங்களில்தான் ஊழல் அதிகமாகவும் இருக்கும்.

எந்தக் கட்டத்திலும் வளர்ச்சி வராது; எனவே மாநிலம் ஆரம்பிக்க இருந்த ஆதாரக் கருத்தான ‘பின்தங்கிய’ பகுதிகள் மேலும் பின்தங்கியே இருக்கும். ஜார்க்கண்டைப் பாருங்கள். உத்தராஞ்சலைப் பாருங்கள். சட்டீஸ்கரைப் பாருங்கள்.

தெலுங்கானாவிலும் இதுவே நடக்கும். அங்கும் கனிம வளம் உண்டு. அங்கும் நக்சலைட் பிரச்னைகள் உண்டு. ஹைதராபாத், ரங்காரெட்டி மாவட்டம் என்ன ஆகும் என்பது தனிக்கேள்வி. தெலுங்கானா உருவாவதற்கு உள்ள மிகப்பெரிய இடையூறே ஹைதராபாத் நகரம்தான். தெலுங்கானாவில் மஹ்பூப்நகர், நால்கொண்டா, கம்மம் மாவட்டங்கள் இருக்கும் என்றால், ரங்கா ரெட்டியும் ஹைதராபாதும் அதற்குள் சிக்கியே ஆகவேண்டும். ஆனால் கடந்த சில ஆண்டுகளில் கோடி கோடியாகக் கொட்டி இழைத்து அந்த நகரை உருவாக்கி, அதனை “வேறு யாருக்கோ” கொடுக்க எந்த முதலமைச்சருக்கும் மனம் வராது. ஒருவேளை ரோசையா போன்ற non-descript ஆள் அதைப்பற்றிக் கவலைப்படாமல் இருக்கலாமோ, என்னவோ.

*

அப்போது வேறு என்னதான் வழி? மாவோயிசப் பிரச்னைக்கான வழி பற்றிப் பிறகு பேச முற்படுகிறேன். ஒரு மாநிலத்தில் சில பகுதிகள் பின்தங்கியிருந்தால் என்ன செய்யலாம்? அந்தப் பகுதிகளுக்கு வளர்ச்சியைக் கொண்டுவர, அது ஒரு பெரிய மாநிலமாக இருந்தால்தான் முடியும்.

பெரிய மாநிலங்களுக்கு சில நன்மைகள் உள்ளன. அவற்றின் வருமானம் அதிகம். இரு வகைகளில். முதலில் மத்திய அரசு பகிர்ந்தளிக்கும் வரி வருமானம் ஜனத்தொகைக்கு ஏற்றவாறு நிறையக் கிடைக்கும். அடுத்து, பெரிய மாநிலத்தின் பல பகுதிகள் தொழில் வளம் பெற்றவையாக இருக்கும். எனவே விற்பனை வரி நிறையக் கிடைக்கும். அந்தப் பகுதிகளில் ரியல் எஸ்டேட் மதிப்பு அதிகமாக இருக்கும். எனவே சொத்து வரி அதிகம் கிடைக்கும்.

இதனால், பின்தங்கிய பகுதிகளுக்கு அதிக அளவு பணத்தைச் செலவு செய்ய முடியும். தேவை அதிகமாக உள்ள பகுதிகளுக்கு அதிகமான பகுதியைப் பகிர்ந்தளிப்பதுதானே அரசின் வேலை? ஆனால் இது நடக்கவேண்டுமென்றால் மாநில முதல்வர் enlightened ஆசாமியாக இருக்கவேண்டும். ஒருவிதத்தில் பார்க்கும்போது தமிழக முதல்வர்கள் மாவட்ட அல்லது பகுதிச் சார்பு இல்லாதவர்களாக, தமிழகம் முழுமைக்குமாகச் செலவு செய்பவர்களாகவே இருந்துள்ளனர். தமிழகத்திலும் கிருஷ்ணகிரி, தர்மபுரி மக்கள் தங்கள் மாவட்டங்களின் பின்தங்கிய நிலையை எடுத்துச் சொல்லி முறையிடலாம். ஆனால் அவர்கள்கூட தனி மாநிலம் என்று பேசமாட்டார்கள்.

கேரளாவை எடுத்துக்கொள்ளுங்கள். நல்ல அரசியல்வாதிகள். மக்களுக்கு நிறைய நல்லது செய்யவேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். ஆனால் அதற்குத் தேவையான வருமானம் அவர்களிடம் இல்லை. ஆனால் ஊருக்கெல்லாம் தொலைக்காட்சிப் பெட்டி வாரி வழங்கும் அளவுக்கு தமிழகத்திடம் வருமானம் உள்ளது.

எனவே தெலுங்கானா மக்கள் தனி மாநிலம் கேட்டுப் போராடுவது நல்லதல்ல என்று தோன்றுகிறது. மாறாக, அவர்கள் பகுதியைச் சேர்ந்த ஒருவரை முதல்வர் ஆக்கச்சொல்லி சோனியா காந்தியின் கால்களில் விழலாம். அது வேலை செய்யவில்லை என்றால், நல்ல மனிதர் யாராவது ஒருவர் முதல்வர் ஆகிறாரா என்று பார்த்து அவர் காலில் விழலாம். இல்லையா, மாநில சட்டமன்றம் தொங்கு சட்டமன்றமாக ஆகும்வரை பொறுத்திருந்து, தெலுங்கானா எம்.எல்.ஏக்கள் எல்லாம் ஒன்றுசேர்ந்து ஒரு கூட்டமைப்பாகி தங்கள் பகுதிக்கு நிறையச் செலவுசெய்தால்தான் ஆதரவு என்ற நிலை வருமாறு செய்யலாம்.

வருடங்கள் அதிகமானாலும் இதில்தான் நிரந்தர நன்மை உள்ளது என்று நம்புகிறேன்.

Tuesday, December 01, 2009

கிழக்கு பாட்காஸ்ட் வாரம் 16: ‘அடியாள்’ ஜோதி நரசிம்மன்

ஜோதி நரசிம்மன் எழுதி வெளியான இந்தப் புத்தகம், வெளியானபோதே நல்ல வரவேற்பைப் பெற்றது.

நல்ல குடும்பம். பெற்றோர்கள் இருவரும் ஆசிரியர்கள். அவர்களது பிள்ளையாகப் பிறந்த ஒருவர் அடியாளாக, அடிதடியில் இறங்கி, காவலர்களிடமிருந்து தப்பி ஓடிக்கொண்டே இருக்கவேண்டிய காரணம் என்ன?

ஏன் ஜெயிலுக்குப் போகிறார்?

ஜெயிலில் என்ன நடக்கிறது?

பின் ஏன் மனம் மாறி, வன்முறை வாழ்க்கையிலிருந்து வெளியே வருகிறார்? அரசியலில் ஈடுபடத் தூண்டுவது எது?

அவர்மீது போடப்பட்ட வழக்குகளின் நிலை என்ன?

இப்படிப் பல கேள்விகளுக்கு சரளமாகப் பதில் சொல்கிறார் ஜோதி நரசிம்மன்.

இங்கேயே கேட்க:



தரவிறக்கிக்கொள்ள