Thursday, December 10, 2009

ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் விலகும் நேரம்

ராஜிவ் கொலை தமிழகத்தையே உலுக்கிய ஒரு நிகழ்வு. அதன் விளைவு, அடுத்த 19 ஆண்டுகள் கழித்தும்கூட இலங்கைப் பிரச்னையில் இந்தியாவின் நிலைப்பாட்டை ஒரு குறிப்பிட்ட திசையில் செலுத்தியது.

ராஜிவ் கொலையைப் புலனாய்வு செய்த சிறப்புப் புலனாய்வுக் குழுவின் தலைவராக இருந்தவர் டி.ஆர்.கார்த்திகேயன் (ஐ.பி.எஸ்) என்ற தமிழர். தலைமைப் புலனாய்வு அதிகாரியாக இருந்தவர் அப்போது டி.எஸ்.பி ரேங்கில் இருந்த சிபிஐ அதிகாரி கே.ரகோத்தமன் என்ற தமிழர்.

கார்த்திகேயன் ஒரு புத்தகத்தை எழுதியுள்ளார். அதைப் படித்து நான் எழுதிய பதிவு இங்கே. ஒருமுறை புது தில்லியில் கார்த்திகேயனை அவரது வீட்டில் சந்தித்து நானும் சத்யாவும் பேசிக்கொண்டிருந்தோம். கொலை எப்படித் துப்பறியப்பட்டது முதற்கொண்டு பல விஷயங்களைப் பற்றிப் பேசினோம். இந்தப் புத்தகத்தின் தமிழாக்க உரிமையைக் கேட்டோம். அதற்குள் அவர் கலைஞன் பதிப்பகத்துக்கு அந்த உரிமையைத் தந்திருந்தார். சில மாதங்கள் கழித்து நண்பர் (கிழக்கின் எழுத்தாளர்) சந்திரமௌளியின் மொழிபெயர்ப்பில் அந்தப் புத்தகம் தமிழில் கலைஞன் வெளியீடாக வெளியானது.

ராஜிவ் கொலை பற்றி எழுதப்பட்ட மற்றொரு புத்தகம் சுப்ரமணியம் சுவாமியுடையது. அதன் தமிழாக்கம் சுதாங்கனால் செய்யப்பட்டு அல்லயன்ஸ் வெளியீடாக வந்தது. அந்தப் புத்தகத்தைப் பற்றி நான் எழுதிய பதிவுகள் இங்கே + இங்கே. சமீபத்தில் (ஜூன்/ஜூலை 2009) சுப்ரமணியம் சுவாமியுடன் பேசும்போது அவர் இந்தக் கொலை தொடர்பாகப் பல யூகங்களைச் சொன்னார். அவை பொதுவில் எழுத முடியாதவை. அவரே வேண்டுமானால் அதைப்பற்றி எழுதலாம்.

சந்திரமௌளி மூலமாகத்தான் ரகோத்தமன் அறிமுகமானார். இரண்டு வருடங்களுக்கு முன்னால் என்று நினைக்கிறேன். அப்போது அவர், ராஜிவ் கொலை பற்றி ஒரு குறுந்தகடு வெளியிட்டிருந்தார். புத்தகம் எழுதமுடியுமா என்று கேட்டிருந்தேன். அதைப்பற்றி மேலோட்டமாகப் பேசியிருப்போம். ஆனால் அப்போது எதுவும் நடக்கவில்லை. (ஏன் என்று பின்னர்தான் காரணம் தெரிந்தது.) அடுத்து ரகோத்தமனிடம் பேசியது ஜூன் 2009-ல்தான்.

அலுவலகம் வந்திருந்தவர் ராஜிவ் கொலை வழக்கு பற்றி நிறையப் பேசினார். மடைதிறந்த வெள்ளம் போலப் பேசினார். நான், சத்யா, பிரசன்னா அறையில் இருந்தோம். கார்த்திகேயனின் புத்தகம் பற்றியும் பேசினார். அதில் பல தகவல்கள் இல்லை என்றார். சில முரண்பாடுகள் இருந்தன என்றார். ஒரு புலனாய்வு அதிகாரியாக, களத்தில் இருந்து பார்த்தவராக, அவருக்குப் பல விஷயங்கள் தெரிந்திருந்தன. அப்போதுதான் அவர் ஏன் ஒரு புத்தகத்தை எழுதக்கூடாது என்று கேட்டோம். அவரிடம் அனைத்து ஆவணங்களும் இருந்தன. விரல் நுனியில் தகவல்கள் இருந்தன. எந்த நாள், எந்த நேரம், எந்த இடத்தில் யாரைக் கைது செய்தார் என்று பட்டென்று சொன்னார்.

கடைசியில் புத்தகம் எழுதுவதாக ஒப்புக்கொண்டார். கடுமையாக உழைத்தார். எங்கள் அலுவலக எடிட்டோரியலைச் சேர்ந்த எடிட்டர்கள், ரகோத்தமனின் சிந்தனை எழுத்தாக மாற உதவினர். ரகோத்தமனின் தலையில் சிதறிக்கிடந்த பல தகவல்களையும் ஒழுங்குசெய்து, நேராக்கி, எளிமையாகப் புரியும்வண்ணம் சீர்செய்யவேண்டியிருந்தது. கடைசி நேரம் வரை எடிட்டர்கள் புத்தகத்தைப் படித்து, பல மாற்றங்களைச் சொல்லிக்கொண்டிருந்தனர். ஒவ்வொரு வெர்ஷனுக்கும் பிறகு ரகோத்தமனுக்குப் புதிதாக சில விஷயங்கள் தோன்றும். அதைச் சேர்ப்பார். கடைசியில் ஒரு கட்டத்தில் இது திருப்தியாக உள்ளது என்று அவர் முடிவெடுத்தார். சில சென்சிடிவான விஷயங்கள் இருந்தன. அவையெல்லாம் கண்டிப்பாக இடம் பெறவேண்டும் என்றார். என்ன பிரச்னை என்றாலும் தான் சமாளித்துக்கொள்வதாகக் கூறினார். வார்த்தைகள் சரியாக வரவேண்டுமே, சொல்லும்போது தொனி சரியாக இருக்கவேண்டுமே என்று நிறைய கவனம் எடுத்துக்கொள்ளவேண்டியிருந்தது.

அவரிடம் அனைத்து விசாரணை கமிஷன் ஆவணங்கள், வாக்குமூலங்கள், கடிதங்கள், துண்டு துணுக்குகள் என்று ஏகப்பட்ட தகவல்கள் இருந்தன. குவிந்துகிடந்த ஆவணங்களிலிருந்து சிலவற்றை மட்டும் புத்தகத்தில் சேர்ப்பது என்ற முடிவுக்கு வந்தோம். சில கடிதங்கள், விடுதலைப் புலிகள் பயன்படுத்திய வயர்லெஸ் சங்கேத சமிக்ஞைகள், சில படங்கள் போன்றவை.

கடைசியாக புத்தகம் அச்சாகி வந்துவிட்டது. கடைகளுக்கு அடுத்த ஓரிரு நாள்களில் செல்லும். திங்கள் முதலே சில கடைகளில் கிடைத்துவிடலாம்.

படிப்பவர்கள் யாருமே புத்தகத்தைக் கீழே வைக்கமுடியாது என்று என்னால் அடித்துச் சொல்லமுடியும். புத்தகத்தில் அதிர்ச்சிகரமான விஷயங்கள் உள்ளனவா, இதனால் தமிழகத்தில் சர்ச்சைகள் ஏற்படுமா என்றெல்லாம் எனக்குத் தெரியாது. படிப்பவர்கள் தாங்களே முடிவு செய்துகொள்ளட்டும்.

புத்தகத்தை வாங்க

.

7 comments:

  1. Just ordered one Badri.

    Thanks

    Venkataraghavan R

    ReplyDelete
  2. ஒரு புத்தக உருவாக்கத்திற்கு பின் உள்ள உழைப்பும் ,
    இது போன்ற சென்சிடிவான சப்ஜெக்டை கையில் எடுத்திற்கும் உங்கள் 'தில்' லும்
    மலைக்க வைக்கிறது. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. It should be interesting to see how you would be dealing with if they start sending "autos" to NHM once the word spreads on this book..

    ReplyDelete
  4. Hope it turns out to be the best seller of the year. English translation should help too.

    ReplyDelete
  5. Is he not bound by service rules?. Does he has the permission to write this from the government. I will not buy or read such books because in this case this is the third book.Swamy has written, Karthikeyan has written and here is another one. Perhaps each have an axe to grind and want to project their views and themselves.Only person who is not connected with the investigation and prosecution will be able to dig out what they have not told and how these versions differ. For Kizhaku this may be a best seller. A reader who wants to know the truth will have to wait for an objectve and unbiased book on the subject.

    ReplyDelete
  6. இந்த வருஷ கண்காட்சில இதுதான் ஹாட்டாபிக்கா இருக்கப் போகுது..!

    ReplyDelete
  7. புத்தகம் ஸ்டாக்கில் இல்லையா? ஆன் லைனில் காணோம்?

    ReplyDelete