Wednesday, December 09, 2009

தெலுங்கானா


உண்ணாவிரதம் இருந்தால் தனி மாநிலம் கிடைக்கும் என்பதை நன்கு உணர்ந்தவர்கள் தெலுங்கர்கள். பொட்டி ஸ்ரீராமுலு உண்ணாவிரதம் இருந்து உயிர் துறந்தார். ஆந்திர மாநிலம் உருவானது. இப்போது சந்திரசேகர ராவ். தெலுங்கானாவும் உருவாகிவிடலாம்.

தெலுங்கானாவைப் பற்றிச் சிந்திக்கும்போது, அது தேவைதான் என்று முன்னர் நினைத்திருந்தேன். ஆனால் மீண்டும் ஆழமாகச் சிந்திக்கும்போது அது தவறோ என்று தோன்றுகிறது. இந்தியாவில் சிறு மாநிலங்கள் எல்லாமே சகதியில் மாட்டியுள்ளன. அவற்றின் சட்டமன்றங்கள் inherently unstable வகையைச் சார்ந்தவை. அதிலும் சமீபத்தில் உருவாக்கப்பட்ட மூன்று மாநிலங்களான ஜார்க்கண்ட், உத்தராஞ்சல், சட்டீஸ்கர் ஆகியவற்றை எடுத்துக்கொள்ளுங்கள். பெரு மாநிலங்களின் சிறு துண்டுகளாக இருந்தவை. அனைத்திலும் கனிம வளம். அனைத்திலும் பழங்குடியினர். அனைத்திலும் மாவோயிஸ்டுகள். அனைத்துமே பின்தங்கிய பகுதிகள்.

இவை எல்லாமே ஒன்றோடு ஒன்று இணைந்தவை. பழங்குடிகள் அதிகமாக இருக்கும் இடங்கள், நவீன நாகரிக அளவுகோல்களின்படிப் பார்த்தால் பின்தங்கிய பகுதிகளாகவே இருக்கும். பழங்குடிகள் காட்டில் வசிக்க விரும்புபவர்கள். காடுதான் அவர்களுக்கு உணவு; காடுதான் அவர்களுக்கு வாழ்விடம். அவர்களுக்கு பணம் தேவையில்லை. பணம் என்பதை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்றே இன்னும் அறியாமல் இருக்கிறார்கள். (ஜார்க்கண்டுக்குச் சென்றுவந்த வங்கி அதிகாரி ஒருவர் இதைப்பற்றி என்னிடம் கூறினார்.) அந்தப் பகுதிகளில் மருத்துவமனைகள் கிடையாது. சாலைகள் கிடையாது. பள்ளிக்கூடங்கள் கிடையாது.

ஆனால் அங்கேதான் கனிமங்கள் உள்ளன. எனவே கனிம வளங்களை வெட்டி எடுக்க விரும்பும் நிறுவனங்கள் வருகின்றன. விளைநிலம் என்றாலாவது அதிலிருந்து கிடைக்கும் விளைச்சல் பரவலாகும். செல்வம் அனைத்து மக்களுக்கும் போய்ச்சேராவிட்டாலும் பலருக்கும் போய்ச்சேரும். மீதம் உள்ளவர்களுக்கு வேலையாவது கிடைக்கும். ஆனால் கனிமங்கள் என்றால் முதலீடு நிறையத் தேவை. அதிலிருந்து கிடைக்கும் செல்வமும் சில பெரு நிறுவனங்களுக்கும் அதன் பங்குதாரர்களுக்கும் மட்டுமே போய்ச்சேரும். அந்த நிறுவனங்களில் பழங்குடியினருக்கு வேலை கிடைக்காது. அங்கு வேலை செய்ய பிற இடங்களிலிருந்து ஏழைகள் அழைத்து வரப்படுவார்கள்.

எனவே மாவோயிஸ்டுகள் தோன்றித்தான் ஆகவேண்டும்.

அடிப்படையில் வலுவற்ற, ஆட்டம் காணும் சிறு சட்டமன்றங்கள், பெரும் பணத்தால் எளிதாக வளைக்கப்படும். எனவே காவலர்களின் காட்டாட்சி, பின்னர் ராணுவத்தின் ரத்த வேட்டை. சிறு சட்டமன்றங்களில்தான் ஊழல் அதிகமாகவும் இருக்கும்.

எந்தக் கட்டத்திலும் வளர்ச்சி வராது; எனவே மாநிலம் ஆரம்பிக்க இருந்த ஆதாரக் கருத்தான ‘பின்தங்கிய’ பகுதிகள் மேலும் பின்தங்கியே இருக்கும். ஜார்க்கண்டைப் பாருங்கள். உத்தராஞ்சலைப் பாருங்கள். சட்டீஸ்கரைப் பாருங்கள்.

தெலுங்கானாவிலும் இதுவே நடக்கும். அங்கும் கனிம வளம் உண்டு. அங்கும் நக்சலைட் பிரச்னைகள் உண்டு. ஹைதராபாத், ரங்காரெட்டி மாவட்டம் என்ன ஆகும் என்பது தனிக்கேள்வி. தெலுங்கானா உருவாவதற்கு உள்ள மிகப்பெரிய இடையூறே ஹைதராபாத் நகரம்தான். தெலுங்கானாவில் மஹ்பூப்நகர், நால்கொண்டா, கம்மம் மாவட்டங்கள் இருக்கும் என்றால், ரங்கா ரெட்டியும் ஹைதராபாதும் அதற்குள் சிக்கியே ஆகவேண்டும். ஆனால் கடந்த சில ஆண்டுகளில் கோடி கோடியாகக் கொட்டி இழைத்து அந்த நகரை உருவாக்கி, அதனை “வேறு யாருக்கோ” கொடுக்க எந்த முதலமைச்சருக்கும் மனம் வராது. ஒருவேளை ரோசையா போன்ற non-descript ஆள் அதைப்பற்றிக் கவலைப்படாமல் இருக்கலாமோ, என்னவோ.

*

அப்போது வேறு என்னதான் வழி? மாவோயிசப் பிரச்னைக்கான வழி பற்றிப் பிறகு பேச முற்படுகிறேன். ஒரு மாநிலத்தில் சில பகுதிகள் பின்தங்கியிருந்தால் என்ன செய்யலாம்? அந்தப் பகுதிகளுக்கு வளர்ச்சியைக் கொண்டுவர, அது ஒரு பெரிய மாநிலமாக இருந்தால்தான் முடியும்.

பெரிய மாநிலங்களுக்கு சில நன்மைகள் உள்ளன. அவற்றின் வருமானம் அதிகம். இரு வகைகளில். முதலில் மத்திய அரசு பகிர்ந்தளிக்கும் வரி வருமானம் ஜனத்தொகைக்கு ஏற்றவாறு நிறையக் கிடைக்கும். அடுத்து, பெரிய மாநிலத்தின் பல பகுதிகள் தொழில் வளம் பெற்றவையாக இருக்கும். எனவே விற்பனை வரி நிறையக் கிடைக்கும். அந்தப் பகுதிகளில் ரியல் எஸ்டேட் மதிப்பு அதிகமாக இருக்கும். எனவே சொத்து வரி அதிகம் கிடைக்கும்.

இதனால், பின்தங்கிய பகுதிகளுக்கு அதிக அளவு பணத்தைச் செலவு செய்ய முடியும். தேவை அதிகமாக உள்ள பகுதிகளுக்கு அதிகமான பகுதியைப் பகிர்ந்தளிப்பதுதானே அரசின் வேலை? ஆனால் இது நடக்கவேண்டுமென்றால் மாநில முதல்வர் enlightened ஆசாமியாக இருக்கவேண்டும். ஒருவிதத்தில் பார்க்கும்போது தமிழக முதல்வர்கள் மாவட்ட அல்லது பகுதிச் சார்பு இல்லாதவர்களாக, தமிழகம் முழுமைக்குமாகச் செலவு செய்பவர்களாகவே இருந்துள்ளனர். தமிழகத்திலும் கிருஷ்ணகிரி, தர்மபுரி மக்கள் தங்கள் மாவட்டங்களின் பின்தங்கிய நிலையை எடுத்துச் சொல்லி முறையிடலாம். ஆனால் அவர்கள்கூட தனி மாநிலம் என்று பேசமாட்டார்கள்.

கேரளாவை எடுத்துக்கொள்ளுங்கள். நல்ல அரசியல்வாதிகள். மக்களுக்கு நிறைய நல்லது செய்யவேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். ஆனால் அதற்குத் தேவையான வருமானம் அவர்களிடம் இல்லை. ஆனால் ஊருக்கெல்லாம் தொலைக்காட்சிப் பெட்டி வாரி வழங்கும் அளவுக்கு தமிழகத்திடம் வருமானம் உள்ளது.

எனவே தெலுங்கானா மக்கள் தனி மாநிலம் கேட்டுப் போராடுவது நல்லதல்ல என்று தோன்றுகிறது. மாறாக, அவர்கள் பகுதியைச் சேர்ந்த ஒருவரை முதல்வர் ஆக்கச்சொல்லி சோனியா காந்தியின் கால்களில் விழலாம். அது வேலை செய்யவில்லை என்றால், நல்ல மனிதர் யாராவது ஒருவர் முதல்வர் ஆகிறாரா என்று பார்த்து அவர் காலில் விழலாம். இல்லையா, மாநில சட்டமன்றம் தொங்கு சட்டமன்றமாக ஆகும்வரை பொறுத்திருந்து, தெலுங்கானா எம்.எல்.ஏக்கள் எல்லாம் ஒன்றுசேர்ந்து ஒரு கூட்டமைப்பாகி தங்கள் பகுதிக்கு நிறையச் செலவுசெய்தால்தான் ஆதரவு என்ற நிலை வருமாறு செய்யலாம்.

வருடங்கள் அதிகமானாலும் இதில்தான் நிரந்தர நன்மை உள்ளது என்று நம்புகிறேன்.

12 comments:

  1. //வருடங்கள் அதிகமானாலும் இதில்தான் நிரந்தர நன்மை உள்ளது என்று நம்புகிறேன் //

    101% I agree with you boss.

    ReplyDelete
  2. சரி சரி. எதுக்குன்னாலும் காலில் விழுந்துதான் ஆகணுமுன்னு சொல்றீங்க:-)))))

    ReplyDelete
  3. //தெலுங்கானாவைப் பற்றிச் சிந்திக்கும்போது, அது தேவைதான் என்று முன்னர் நினைத்திருந்தேன்.//

    இதே சிந்தனையில் இருந்த என்னை இக்கட்டுரை கொஞ்சம் மாற்றி இருக்கிறது. ஒரே மாநிலமாக இருந்தாலும் பின் தங்கிய மாவட்டங்களுக்கு செலவு செய்வதன் மூலமே இப்பிரச்சனையைத் தீர்க்க முடியும். நல்ல கட்டுரை.

    ReplyDelete
  4. நீங்கள் கூறுவது ஒருவகையில் சரிதான்.இருப்பினும் தெலுங்கானா வரலாற்றை படித்தால் 1956இல் ஆந்திரா உருவானபோதே மாநிலங்கள் சீரமைப்புக் குழு இதனை ஆதரிக்கவில்லை என்பதை உணர்வீர்கள். அவர்களின் எதிர்ப்பை சமாளிக்க அரசு Gentlemen's agreement (1956)என்று கொண்டுவந்த நீங்கள் குறிப்பிட்டுள்ள,காலில் விழாமலே, சலுகைகளை அதில் காணலாம். 50 ஆண்டுகளாக இதனை letter and spiritஇல் நிறைவேற்றாதது தான் இப்படி வெடிக்கிறது. காங்கிரஸ் தேர்தல் சமயங்களில் வாக்குறுதிகளைக் கொடுத்து இப்போது பின்வாங்குவதும் தார்மீக அடிப்படையில் சரியல்ல.

    மற்றபடி ஜார்க்கண்ட்டிற்கு அடுத்த நக்சல் மாநிலம் தெலுங்கானா என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

    பி.கு:உத்தராஞ்சலில் பிரச்சினை எதுவும் இருப்பதாகத் தெரியவில்லையே..
    பி.கு2:கேரளாவிற்கு வருமானம் கம்மி என்று ஏதேனும் தரவுகளை பார்த்துத் தானே சொல்கிறீர்கள் ? எனக்கு மலைபடுகடாம் பார்த்து சம்சயம்...

    ReplyDelete
  5. மணியன்: நக்சலைட் பிரச்னை உத்தராஞ்சலிலும் உள்ளது. ஆனால் ஜார்க்கண்ட், பிகார், தெலுங்கானா, மத்தியப் பிரதேசம், சட்டிஸ்கர் அளவுக்கு அல்ல. உத்தராஞ்சல் மாநிலம் நேபாளத்தை ஒட்டியுள்ள மாநிலம். என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். ஏன் தனியாகப் பிரிந்தபின்னும் அந்த மாநிலத்தின் பெரும் முன்னேற்றங்கள் இல்லை?

    அடுத்து காங்கிரஸோ அல்லது தெலுகு தேசமோ ஏன் தெலுங்கானாவுக்கு ஒன்றுமே செய்யவில்லை? ‘காலில் விழுந்து’ என்று நான் சொல்வது ஃபிகரேட்டிவ். உடன்பாடுகளைச் செய்துகொண்டு, தங்கள் பகுதிக்கு வேண்டிய வசதிகளைச் செய்துகொள்வது. இதுநாள்வரையில் ஏன் நடக்கவில்லை? சரி, போகட்டும். தெலுங்கானா பிரச்னை என்று வந்தபின்னராவது அந்த இடத்தில் எங்கு பார்த்தாலும் சாலைகள், ஊருக்கு ரெண்டு பள்ளிக்கூடங்கள், ஆங்காங்கே சில கல்லூரிகள் என்று கட்டியிருக்கலாமே? ரொம்பச் செலவாகியிருக்காதே?

    கேரளா வருமானம் என்றால், கேரள அரசின் வருமானம். அது குறைவுதான். பெர் கேபிடா அரசு வருமானம் என்ன என்று பார்ப்போம்.

    2008-09:

    தமிழக வருமானம்: 58,270 கோடி ரூபாய்; தமிழக மக்கள்தொகை: சுமார் 6.6 கோடி. தலைக்கு ரூ. 8,830

    கேரள வருமானம்: 21,500 கோடி ரூபாய்; கேரள மக்கள்தொகை: சுமார் 3.4 கோடி. தலைக்கு ரூ. 6,322

    வித்தியாசம்: தலைக்கு 2,500 ரூபாய் (தமிழக அரசு தரும் ஒரு கலர் டிவியின் விலை:-)

    ReplyDelete
  6. பத்ரி,

    திராவிட கட்சிகள் ஆட்சிக்கு வந்த பின்னர் தமிழக அரசியலில் ஒரு எழுதப்படாத விதி உள்ளது

    ஒரு மாவட்டத்திற்கு ஒரு அமைச்சர்
    அதிக அளவில் மக்கள் தொகை உள்ள சாதிகள் என்றால் ஒரு சாதிக்கு ஒரு அமைச்சர் !!

    ஆழ்ந்து யோசித்து பார்த்தால் இது கூட ஒரு வகையில் இடப்பங்கீடு (இட ஒதுக்கீடு தான்) :) :) :)

    இதனால் அனைத்து மாவட்டங்களிலும் ஒரு அமைச்சர் கட்டாயம் இருக்கிறார். அந்த மாவட்டத்திற்கு தேவையான சில வசதிகளை (பள்ளிக்கூடம், மருத்துவமனை, பாலம், கல்லூரி) போராடி வாங்குகிறார் (பல நேரம் அவரது தொகுதியில்)

    நான் மருத்துவர் என்பதால் என் துறையிலிருந்தே உதாரணம் தருகிறேன். தமிழகத்தில் கடந்த சில வருடங்களில் ஆரம்பிக்கப்பட்ட மருத்துவ கல்லூரிகளின் பின்னால் ஒரு அமைச்சரோ அல்லது முதல்வரோ இருக்கிறார்கள் என்பதை எளிதாக கண்டுபிடிக்க முடியும்

    தேனி
    கன்னியாகுமரி
    வேலூர்
    தர்மபுரி
    திருவாரூர்
    சிவகங்கை
    பெரம்பலூர்

    இவ்வாறு மாவட்டத்திற்கு ஒரு அமைசச்ர் என்று இருப்பதால், வளர்ச்சி பணிகள் அனைத்து மாவட்டத்திற்கும் பகிர்ந்தே அளிக்கப்படுகின்றன. அனைத்து மாவட்டங்களும் அரசின் நிதியை ஏறத்தாழ சமமாகவே பெறுகின்றன.

    எனவே நீண்ட நாட்களாக புறக்கணிக்கப்பட்டோம் என்று எந்த மாவட்ட மக்களாலும் சொல்ல முடியாது.

    இந்த நல்ல திட்டத்தை அனைத்து மாநிலங்களும் கடைபிடிக்க வேண்டும் என்று நினைக்கிறென்

    ReplyDelete
  7. வித்தியாசம் தலைக்கு 2500 ரூபாய் என்று சொல்லப்போக, ஒரே வீட்டுக்கு நாலைந்து டிவிக்கள் கேட்கப்போகிறார்கள்...:-)

    ReplyDelete
  8. மொழியின் அடிப்படையில் மாநிலங்கள் பிரிய வேண்டும் என்று வாதிடும் திராவிடக் கட்சிகளின் கருத்து என்ன? மக்களை இணைக்க மொழி ஒரு கருவி என்று நீங்கள் கருதுகிறீர்களா?
    தெலுங்கு பேசும் தெலுங்கானா தெலுங்கு பேசும் ஆந்திராவிலிருந்து பிரிய நினைக்கும் இந்த சந்தர்ப்பத்தில், தமிழ்நாட்டிலும் கொங்கு நாடும், பாண்டியநாடும் கேட்டுப் போராடினால் என்ன ஆகும்? இதைப் பற்றியும் தாங்கள் எழுதி இருந்தால், மொழிவழிப் பிரிவினையாளர்கள் சிந்திக்க முற்படுவார்கள்.
    கிருஷ்ணமூர்த்தி

    ReplyDelete
  9. தமிழகத்தில் வருமானத்திற்கு தகுந்த மாதிரி அனைத்து பகுதிகளுக்கும் வளர்ச்சி இல்லை என்பது மேற்கு மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு தனிமனிதனும் உணர்ந்திருக்கிறான்.தமிழக மொத்த வருமானத்தின் சுமார் 40 சதவீத(22,000 கோடி)வருமானத்தைத் தரும் கொங்குபகுதியை ஒருமுறை வலம் வந்துபாருங்கள்.மத்திய,மாநில அரசுகளின் தொடர்ந்த புறக்கணிப்புதான் இங்கேயும் தனிமாநில கோரிக்கையை முனகவைத்திருக்கிறது.

    ReplyDelete
  10. நன்று.வாழ்க வளமுடன்.

    ReplyDelete
  11. தெலுங்கானா தனி மாநிலம் ஆவது சிக்கல் இல்லாமல் தீர்க்கப்பட்டிருக்கவேண்டிய பிரச்சனை.

    காங்கிரஸின் கையாலாகாத்தனத்தால் பிரச்சனை பூதாகரமாக வெடித்துக்கொண்டிருக்கிறது. ஒவ்வொறு முறை ப.சிதம்பரத்தைப் பார்க்கும் போதும், கையாலாகாதவன், ஒரு வேலைக்கும் லாயக்கில்லாதவன் என்றே தோன்றுகிறது.

    உள்துறை எல்லாம் அந்த ஆளுக்குச் சரிப்பட்டு வராது...முதலில் அந்த ஆள் ஜெயித்ததே சந்தேகம் தான்.

    ReplyDelete
  12. Dear sir,

    The problems that you expect for the small states (weak legislative body, easily purchasable members, etc.) are already prevalent with the bigger and stronger states.

    Same argument is also applicable for the reasons of Maoists-like movements in bigger and stronger states. Condition of the backward area has not changed despite their existence with the a bigger state.

    Rather the demands have natural reasons. Separation of states based on language is never organical. Defining states based on natural boundaries have always proved more beneficial.

    Although the economic condition of a new born state would be comparatively minimal, economic and other developments based on the cultural integrity will surpass the achievements of the current partitioning of the states.

    Your earlier assessment is correct.

    ReplyDelete