Wednesday, November 16, 2011

பெங்களூரு புத்தகக் கண்காட்சி: 18-27 நவம்பர் 2011

இந்த ஆண்டு பெங்களூரு புத்தகக் கண்காட்சி, 18 நவம்பர் முதல் 27 நவம்பர் வரை நடக்கிறது. கிழக்கு பதிப்பகம் இதில் கலந்துகொள்கிறது.

கடை எண்கள்: 124, 125, 126

இடம்:

பேலஸ் மைதானம்
காயத்ரி விஹார் (மேக்ரி சர்க்கிள் அருகில்)
பெல்லாரி ரோடு
பெங்களூரு

தொடர்புக்கு:

காளிபாண்டியன், 95000-45608


முன்பதிவு:

சாரு நிவேதிதாவின் ‘எக்ஸைல் ’ நாவலுக்கு முன்பதிவு செய்துகொள்ள இங்கே பணம் செலுத்தலாம். புத்தகம் வெளியாகும் அன்று உங்களுக்குத் தபாலில் கிடைக்கும்.

ஹெலிகாப்டரில் பிறந்தநாள் - கேப்டன் கோபிநாத்

[இன்று வெளியாக இருக்கும் கேப்டன் கோபிநாத்தின் ‘வானமே எல்லை’ புத்தகத்திலிருந்து ஒரு சிறு பகுதி - சுருக்கப்பட்டது. புத்தக வெளியீடு நிகழ்ச்சி ஸ்பென்சர் பிளாஸா லாண்ட்மார்க் புத்தகக் கடையில் புதன்கிழமை, 16-11-2011 அன்று, மாலை 6.30 மணிக்கு நடக்கும். அனைவரும் வருக.]

எனக்கு வரும் எல்லாத் தொலைபேசி அழைப்புகளையும் நான் பெரிதும் மதிப்பேன். புதிய அழைப்பு என்றால், புதிய மனிதருடனான அறிமுகம் என்று அர்த்தம். ஒருநாள் காவ்யா என்ற இளம் பெண் தொலைபேசியில் பேசினார். ஹெலிகாப்டருக்கு வாடகை எவ்வளவு என்று கேட்டார். பறக்கும் நேரத்தையும் காத்திருக்கும் நேரத்தையும் பொருத்தது என்றேன். சுமார் மூன்று மணி நேரப் பயணம் என்றால் ஒரு லட்சத்திலிருந்து ஒன்றரை லட்சம் ஆகும் என்று சொன்னேன். அதைக் கேட்டதும் அவருடைய குரலில் ஒரு சோகம் கவ்வியதைப் புரிந்துகொள்ள முடிந்தது.

மிகவும் தயக்கத்துடன், அரை மணி நேரத்துக்குக் கிடைக்காதா என்று கேட்டார். அரை மணி நேரத்துக்கு என்றாலும் முழு நாளையும் அதற்கென ஒதுக்கத்தான் வேண்டியிருக்கும். சரி எங்கு போகவேண்டும் என்று கேட்டேன். கூர்க் என்றார். அப்படியானால், கூர்குக்குப் போக வரும் செலவையும் அவரே கொடுக்க வேண்டியிருக்குமே என்றேன். அந்தப் பெண்ணுக்கு மிகவும் வருத்தமாகிவிட்டது.

அந்தப் பெண்ணைப் பற்றிக் கூடுதலாகத் தெரிந்துகொள்ளவேண்டும் என்று தோன்றியது. அவர் படிக்கிறாரா? எங்காவது வேலை பார்க்கிறாரா? எதற்காக ஹெலிகாப்டர் தேவைப்படுகிறது? அந்தப் பணத்தை எப்படிக் கொடுப்பார்? அந்தப் பெண் சொன்ன கதையைக் கேட்டதும் நெகிழ்ந்து போய்விட்டேன். அந்தப் பெண், தன் அப்பாவின் அறுபதாவது பிறந்த நாளுக்கு அவருக்கு ஓர் இன்ப அதிர்ச்சி தர விரும்புகிறாராம். ஹெலிகாப்டரில் அப்பாவைப் பறக்கவைக்க விரும்புகிறாராம்.

காவ்யா சிறு பெண்ணாக இருந்தபோது ஒரு நாள் அவருடைய அப்பா மிகவும் உற்சாகத்துடன் வீட்டுக்கு வந்தாராம். என்ன விஷயம் என்று கேட்டபோது, நான் இன்று ஹெலிகாப்டரில் வந்தேனே என்று குழந்தைபோல் குதூகலித்தாராம். என்ன விஷயம் என்றால், அவரும் முதலமைச்சர் குண்டு ராவும் நண்பர்களாம். எதேச்சையாக இருவரும் சந்தித்திருக்கிறார்கள். அவர் தன் ஹெலிகாப்டரில் காவ்யாவின் அப்பாவை அழைத்துவந்திருக்கிறார். அதைச் சொல்லிச் சொல்லி மகிழ்ந்த காவ்யாவின் அப்பா சிறிது நேரம் கழித்து ஏக்கப் பெருமூச்சுடன் சொல்லியிருக்கிறார்: ‘இது என் முதல் ஹெலிகாப்டர் பயணம் மட்டுமல்ல. இதுவே கடைசியாகவும் இருக்கும்.’

அப்பா அப்படிச் சொன்னது காவ்யாவின் மனத்தில் ஆழமாகப் பதிந்திருக்கிறது. அன்றே தன் அப்பாவை எப்படியாவது மறுபடியும் ஹெலிகாப்டரில் பறக்க வைக்கவேண்டும் என்று தீர்மானித்திருக்கிறார். அன்று தொடங்கி, தனக்குக் கிடைக்கும் காசு அனைத்தையும் சேமித்து வந்திருக்கிறார். இப்போது அவருடைய அப்பாவுக்கு அறுபதாவது வயது நெருங்கிவிட்டிருக்கிறது. பிறந்த நாள் பரிசாக ஹெலிகாப்டர் பயணத்தை ஏற்பாடு செய்யத்தான் என்னிடம் வந்திருக்கிறார்.

அந்தப் பெண்ணுக்கு எப்படியும் உதவ வேண்டும் என்று தீர்மானித்தேன். கூர்கில் மடிகேரி என்ற ஊரில் அவர்கள் வசித்துவந்தார்கள். மடிகேரிக்கு ஹெலிகாப்டரைக் கொண்டுபோய் அப்பாவை அசத்தவேண்டும்; அங்கிருந்து அவரை பெங்களூருக்கு ஹெலிகாப்டரில் பறக்க வைக்கவேண்டும் என்பதுதான் அந்தப் பெண்ணின் ஆசை. ஒரு மணி நேரப் பயணத்துக்கு எவ்வளவு வாடகை என்பதைச் சொன்னேன். பயண நேரம் எவ்வளவு என்பதையும் சொன்னேன்.

‘ஒன்று, அவரை பெங்களூருக்குக் கொண்டுவரலாம். அல்லது வெறுமனே பத்து இருபது நிமிடங்கள் வானில் பறக்க வைக்கலாம். எது என்பதைத் தீர்மானித்துக் கொள்ளுங்கள். மொத்த வாடகையில் ஐம்பது சதவிகிதம் தள்ளுபடி தருகிறேன்’ என்று சொன்னேன். நான் சொன்ன தொகை அவரைப் பொருத்தவரை அப்போதும் மிகவும் அதிகமாக இருந்திருக்கிறது. இருந்தும் உறுதியாக, ‘இன்னும் ஒரு வருடத்துக்குள் அந்தப் பணத்தை எப்படியும் சேமித்துவிடுவேன். அதன் பிறகு உங்களை வந்து பார்க்கிறேன்’ என்று சொன்னார். அதன் பிறகு வேறு வேலைகளில் ஈடுபடலானேன். அவரை மறந்தேவிட்டேன்.

சிறிது காலம் கழித்து திடீரென்று ஒரு பெண்ணிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. என்னைத் தெரிகிறதா என்று கேட்டார். முதலில், எனக்கு யார் என்று தெரியவில்லை. ‘நான்தான் காவ்யா! என் அப்பாவுக்காக ஹெலிகாப்டர் வேண்டும் என்று கேட்டிருந்தேனே?’ என்று நினைவுபடுத்தினார்.

நாங்கள் பேசிப் பல மாதங்கள் ஆகிவிட்டிருந்தன. காவ்யாவுக்குத் திருமணம் ஆகிவிட்டிருந்தது. அவருடைய கணவரும் மாமனாரின் ஆசையை நிறைவேற்றித் தர முன்வந்திருந்தார். காவ்யாவிடம் சொன்னேன்: ‘இதோ பார். மடிகேரிக்கு ஹெலிகாப்டரில் போய் இறங்கிக்கொள். வாருங்கள், சும்மா வெளியே போய்விட்டு வருவோம் என்று உன் அப்பாவை வாசலுக்கு அழைத்து வா. காரிலோ அல்லது ஆட்டோவிலோ எங்கோ போகக் கூப்பிடுகிறாள் என்று நினைத்து வருவார். வாசலில் இருக்கும் ஹெலிகாப்டரைப் பார்த்ததும் இன்ப அதிர்ச்சியில் மூழ்குவார். எங்களுடைய சிறிய பரிசாக உங்களை காவிரி ஆற்றின் மேலாகப் பறக்கவைக்கிறோம்’ என்று சொன்னேன்.

காவ்யாவுக்கு அந்த யோசனை பிடித்திருந்தது.

காவ்யாவின் அம்மாவிடமும் சகோதரியிடமும் இந்தத் திட்டத்தைச் சொல்லி ரகசியமாக வைத்துக்கொள்ளச் சொன்னோம். அவர்களும் பயண ஏற்பாடுகளை அப்பாவுக்குத் தெரியாமல் செய்தனர். காவ்யாவும் அவருடைய கணவரும் எந்த முன் அறிவிப்பும் இல்லாமல் மடிகேரிக்குப் போய் நின்றார்கள். அப்பாவை வாசலுக்கு அழைத்து வந்தார்கள். வாசலில் நிற்கும் ஹெலிகாப்டரைப் பார்த்ததும் கிட்டத்தட்ட அவருக்கு ஹார்ட் அட்டாக்கே வந்துவிட்டது என்று சிரித்தபடியே பின்னர் சொன்னார் காவ்யா. நடு வானில் கேக் வெட்டிக் கொண்டாடினார்கள். காவிரி மேலாகப் பறந்தார்கள்.

கூர்கில் இருப்பவர்களுக்கு காவிரி ஒரு புனித நதி. அதை வலம் வந்து அந்தப் பிறந்த நாளைக் கொண்டாடினார்கள். யாருமே வாழ்வில் அப்படி ஒரு பிறந்த நாளைக் கொண்டாடியிருக்க முடியாது. நாங்கள் வெறும் ஒரு ஹெலிகாப்டர் கம்பெனி நடத்தவில்லை என்ற மன நிறைவு அடைந்த தருணங்களில் அதுவும் ஒன்று.

புத்தகத்தை வாங்க

Tuesday, November 15, 2011

பங்களாதேசப் போர் - கேப்டன் கோபிநாத்

[நாளை வெளியாக இருக்கும் கேப்டன் கோபிநாத்தின் ‘வானமே எல்லை’ புத்தகத்திலிருந்து ஒரு சிறு பகுதி - சுருக்கப்பட்டது. புத்தக வெளியீடு நிகழ்ச்சி ஸ்பென்சர் பிளாஸா லாண்ட்மார்க் புத்தகக் கடையில் புதன்கிழமை, 16-11-2011 அன்று, மாலை 6.30 மணிக்கு நடக்கும். அனைவரும் வருக.]

1971 செப்டெம்பர்-அக்டோபரில் ஆர்ட்டிலரி பள்ளியில் நான் இருந்தபோது பங்களாதேச விடுதலைப் போராட்டம் ஆரம்பித்தது. பயிற்சி பாதியில் நிறுத்தப்பட்டு சிக்கிம் மாநிலத்துக்கு அனுப்பப்பட்டேன்.

தேவ்லாலியில் இருந்து பாக்தோக்ராவுக்கு ரயிலில் போனேன். பிறகு அங்கிருந்து காங்டாக்குக்கு ஜீப்பில் போனேன். முதலில் சீன எல்லையில் எங்கள் படை முகாம் இட்டிருந்தது. பிறகு அங்கிருந்து காங்டாக்குக்கு இடம் மாறியிருந்தது. போருக்குத் தயாராகும்படி உத்தரவுகள் தரப்பட்டன. எங்கும் ஒரே பதட்டம், பரபரப்பு.

உண்மையில் கிழக்கு பாகிஸ்தானில் அப்போது நடந்தது ஓர் உள்நாட்டுப் போர்தான். பாகிஸ்தான் ராணுவம் கட்டவிழ்த்துவிட்ட வன்முறையால் ஏராளமான அப்பாவிகள் இந்தியாவுக்கு அகதிகளாக வந்து குவிந்தனர். சுமார் ஒரு கோடி பேர் இந்தியாவின் கிழக்குப் பகுதியில் குடியேறினர். இந்திய ராணுவமும் பாகிஸ்தான் ராணுவத்தை அகற்றுவதற்கு, முக்தி வாஹினி என்ற அமைப்புக்கு தேவையான ராணுவப் பயிற்சியைத் தந்துவந்தது.

முதல் கட்டத் தாக்குதலுக்குப் பிறகு நம் படைகள் மின்னல்போல் ஊடுருவின. எதிரிகள் சுதாரிக்க நேரம் கொடுக்கக்கூடாது என்பதே எங்களுடைய இலக்கு.

கிழக்கு பாகிஸ்தானின் ஆறுகள், நீரோடைகள்மீது கட்டப்பட்டிருக்கும் பாலங்களைத் தகர்ப்பதன் மூலம் எதிரிகளுக்குப் பொருட்கள் கிடைப்பதைத் தடுப்பதே எங்கள் நோக்கம். இதன்மூலம் பாகிஸ்தானிய படைப்பிரிவு ஒவ்வொன்றும் தனிமைப்படுத்தப்பட்டது. முதலில் தீவிரமாகத் தாக்கியவர்கள், விரைவிலேயே தப்பி ஓடவேண்டிய நிலை வந்துவிட்டது. அவர்களுடைய தோல்விக்கு முக்கியக் காரணம் தார்மிக வலிமை இல்லாது போனதுதான். உள்ளூர் மக்களிடமிருந்து அவர்களுக்குத் துளிக்கூட ஆதரவில்லை. ஆனால், நம் ராணுவத்துக்கோ, கிழக்கு பாகிஸ்தான் மக்களிடம் பெரும் வரவேற்பு இருந்தது.

நான் பீரங்கிப் பிரிவில் இருந்தேன். இரவும் பகலும் விடாமல் சுட்டபடி முன்னேறிக்கொண்டிருந்தோம். ஒரே ஒரு முறை எதிரியை வெகு அருகில் சந்திக்க வேண்டிவந்தது. பாகிஸ்தான் படையினர் நாங்கள் இருந்த பகுதிக்குள் ஊடுருவியிருக்கும் தகவலை எங்கள் கமாண்டர் மேஜர் பாக்கர் சிங் சொன்னார். என் படைப்பிரிவுதான் எளிதில் தாக்குதலுக்கு ஆளாகும் நிலையில் இருந்தது. சிறிது காலத்துக்கு முன்புதான் பாகிஸ்தானிய வீரர்கள் நிறையக் கண்ணிவெடிகளை வழியில் பதித்து வைத்திருந்தனர். நம் வீரர்கள் சிலர் அதில் மாட்டி இறந்திருந்தனர். ஆயுதங்களும் சிதைந்துபோயிருந்தன.

அக்டோபர் மாதவாக்கில் கிழக்கு பாகிஸ்தானுக்குள் நுழைந்தோம். பிரதான போர் இரண்டு வாரங்கள் மட்டுமே நீடித்தது. பாகிஸ்தானின் முக்கியப் படையைச் சுற்றி வளைத்தோம். ஜெனரல் மானேக்‌ஷா, பாகிஸ்தான் வீரர்களுடன் ரேடியோவில் பேசினார். அவர்களைச் சரணடைய வற்புறுத்தினார்.

பாகிஸ்தான் ராணுவம் எல்லாப் பக்கங்களிலும் வளைக்கப்பட்டிருந்தது. அவர்களுடைய மன தைரியம் முற்றாகக் குலைந்துபோயிருந்தது. நாங்கள் மட்டும் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டிருந்தால் நவீன வரலாற்றிலேயே மிக மோசமான ரத்த ஆறு பெருக்கெடுத்து ஓடியிருக்கும்.

சரணடையும் படலம் வந்தது. திரைப்படத்தில் இடம்பெறும் காட்சிபோல் அது இருந்தது. கிழக்கு பாகிஸ்தானில் இருந்த பாகிஸ்தானின் ராணுவ கமாண்டர், தன் படைகளுடன் பொது நிகழ்ச்சி ஒன்றில் சரணடைய வைக்கப்பட்டார். அவர்கள் வசம் இருந்த ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சரணடைந்த வீரர்களை இந்தியாவின் பல்வேறு இடங்களில் இருந்த போர்க் கைதிகள் முகாம்களுக்கு அனுப்பினோம். உலக வரலாற்றிலேயே மிகப் பெரிய சரணடைவு நிகழ்ச்சி அது. சுமார் ஒரு லட்சம் பாகிஸ்தான் ராணுவத்தினர் இந்திய ராணுவத்திடம் சரணடைந்தார்கள்.

பங்களாதேசம் என்று பெயர் மாற்றம் பெற்ற அந்த நாட்டிலிருந்து அதன் பிறகு நாங்கள் வெளியேறினோம். என்னுடைய படைப் பிரிவு சிக்கிமுக்குப் போனது. தினஜ்பூர், ரங்பூர் வழியாக சிக்கிம் வரையிலான பாதையில் மக்கள் எங்களுக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தார்கள். ‘இந்திரா காந்தி வாழ்க! இந்திய ராணுவம் வாழ்க! மானேக்‌ஷா வாழ்க!’ என்று மக்கள் தெருக்களில் இறங்கி உற்சாகத்துடன் கோஷங்கள் போட்டார்கள்.

நகரங்கள், ஊர்கள், ஏன் சிறு கிராமங்களில்கூட சுதந்தரத்தை உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர். விவசாயிகள், சாதாரண மக்கள், கல்லூரிப் பெண்கள், குழந்தைகள் என எல்லாரும் மாலை மரியாதையுடன் எங்களை வரவேற்றனர். நட்பின் அடையாளமாக எங்களுக்கு இனிப்புகள் வழங்கினார்கள்.

புத்தகத்தை வாங்க

Monday, November 14, 2011

ஜாஃபர்கான்பேட்டை மாணவர்களுடன் சந்திப்பு

இன்று குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு சென்னை பள்ளிகள் என்று இப்போது அழைக்கப்படும் மாநகராட்சிப் பள்ளிகள் அனைத்திலும் கொண்டாட்டங்கள் நடைபெற்றன. அதில் ஜாஃபர்கான்பேட்டை பள்ளிக்கு நான் சென்றிருந்தேன். சியோசா (CIOSA) அமைப்பின் பிரசன்னாவும் ‘நம்ம சென்னை’ (முன்னாள் காலச்சுவடு) அரவிந்தனும் அழைத்ததன்பேரில் அங்கு சென்றிருந்தேன். ஜெயா டிவியின் ஆசிரியர் குழுவில் இருக்கும் சிவலிங்கமும் அங்கே இருந்தார். இவருக்கு இந்தப் பள்ளியுடன் நெருங்கிய தொடர்பு இருக்கிறது என்பதை அவர் பேசும்போது அறிந்துகொண்டேன். பள்ளியின் தலைமையாசிரியர் முனியன், பிற ஆசிரியர்கள் அன்புடன் வரவேற்றனர்.

நான் செல்லும்போது ஒரு மாணவி ஜவாஹர்லால் நேருவின் வாழ்க்கையை விவரித்துக்கொண்டிருந்தார். பின்னர் சிவலிங்கம் பேசினார். தொடர்ந்து நானும் பேசினேன். இடையே பள்ளியின் தலைமையாசிரியரும் பேசினார். வீடியோ கீழே:




சென்னை பள்ளி மாணவர்கள் சந்திக்கும் சவால்கள், பிற ஆங்கில மீடிய, தனியார் பள்ளிகளின் மாணவர்கள் சந்திக்கும் சவால்களிலிருந்து முற்றிலும் வேறானவை. குடும்பச் சூழல், பெற்றோர்களின் படிப்பு, பெற்றோர்கள் வீட்டுக்குக் கொண்டுவரும் வருமானம், வாழிடத்தில் உள்ள வசதிகள் ஆகிய அனைத்துக் குறைபாடுகளையும் மீறி, நன்கு படித்து, நல்ல மதிப்பெண் பெற்று, நல்ல பழக்கங்களுடன் வெளியேறி, நல்ல வேலையைப் பெற்று, நல்ல வாழ்க்கையை அமைத்துக்கொள்ளவேண்டிய நிலையில் அம்மாணவர்கள் உள்ளனர். சிறிது சறுக்கினாலும் சிஸ்டம் அவர்களை வெளியே தள்ளவே முயல்கிறது. இவற்றையெல்லாம் மீறி, மாரிச்செல்வம்போல இந்த மாணவர்கள் சாதனை செய்யவேண்டும்.

இதற்கு நாம் எவ்வகையில் பங்களிக்கலாம் என்பதுதான் நம்முன் இருக்கும் கேள்வியே.

ஏர் டெக்கான் கேப்டன் கோபிநாத்தின் புத்தக வெளியீடு

கேப்டன் கோபிநாத் ஆங்கிலத்தில் எழுதி வெளியான சுயசரிதை நூல் Simply Fly.

கிழக்கு பதிப்பகம் இந்நூலின் தமிழாக்கத்தை வெளியிடுகிறது, வானமே எல்லை என்ற தலைப்பில். இந்தப் புத்தகம் தயாராகிச் சில மாதங்கள் ஆகியிருந்தாலும், கோபிநாத்தே புத்தக வெளியீட்டு நிகழ்ச்சிக்கு வரவேண்டும் என்பதால் புத்தகத்தை அச்சிடாது இருந்தோம். வரும் புதன் கிழமை, சென்னை ஸ்பென்சர் பிளாஸாவில்,  மாலை 6.30 மணிக்கு, கேப்டன் கோபிநாத் முன்னிலையில் யுனிவெர்செல் செல்பேசி விற்பனைச் சங்கிலி உரிமையாளர் சதீஷ் பாபு புத்தகத்தை வெளியிட, ட்ரைஜின் டெக்னாலஜிஸ் ல்மிடெட் நிறுவனத்தில் சேர்மன் ஆர். கணபதி புத்தகத்தைப் பெற்றுக்கொள்கிறார். அவர்கள் இருவரும் பேசுவார்கள். அதன்பின் கேப்டன் கோபிநாத்தும் தன் வாழ்க்கைப் பயணம் பற்றிப் பேசுவார்.

கேப்டன் கோபிநாத்தின் வாழ்க்கை மிக சுவாரசியமானது. நாளையும் மறுநாளும் அவரது புத்தகத்திலிருந்து சில பகுதிகளை எடுத்து என் பதிவில் போடுகிறேன். (புத்தகத்தை வாங்க...)


*** ஏர் டெக்கான்-தான் இந்தியாவின் முதல் மலிவுக் கட்டண விமானச் சேவை நிறுவனம். விஜய் மல்லையாவின் கிங்ஃபிஷர் நிறுவனம் ஏர் டெக்கானை வாங்கி, அதனை கிங்ஃபிஷர் ரெட் என்று பெயர் மாற்றி, சமீபத்தில் இழுத்து மூடிவிட்டது. இப்போது மல்லையாவின் கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனமே, தன்னை நிலைநிறுத்திக்கொள்ள அரசின் நிதியுதவி தேடிச் சென்றுள்ளது.

*** கோபிநாத்தின் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனமான டெக்கான் 360 (http://deccan360.in/) என்பதும் நிதி நெருக்கடியில் உள்ளது.