சென்ற வாரம், பி.எஸ்சி வேதியியல் படிக்கும் ஒரு மாணவனைச் சந்தித்தேன். இரண்டாம் ஆண்டு தேர்வு எழுதிவிட்டு, மூன்றாம் ஆண்டு போகிறான். மேற்கொண்டு என்ன செய்யப்போகிறாய் என்று கேட்டேன். ஐ.ஏ.எஸ் படிக்க விருப்பம் என்றான். சரி, ஐ.ஏ.எஸ் படிக்கவேண்டுமானால் என்ன செய்யவேண்டும் என்று தெரியுமா என்று கெட்டேன். தெரியாது என்றான். ஆனால், மூன்றாம் ஆண்டு தேர்வுகள் முடிந்ததும், ஏதாவது கோச்சிங் வகுப்பில் சேர்ந்தால் போதும் என்று நினைப்பதாகச் சொன்னான்.
ஐ.ஏ.எஸ் பரீட்சைக்குத் தயார் செய்யும் அதே நேரம், வேலை எதிலாவது சேர முற்படுவாயா என்று கேட்டேன். ஆமாம், வேலை என்பது மிகவும் அவசியம் என்றான். அவனது பெற்றோர்கள் கூலி வேலை செய்பவர்கள். சம்பாத்தியம் மிகவும் குறைவு. மிகவும் பின்தங்கிய வகுப்பிலிருந்து வருபவன். குடும்ப உறவுகள் என்று யாரும் அவனுக்கு வேலை வாங்கித் தரப்போவதில்லை. இப்போது அவன் படிப்பதற்கும் ஹாஸ்டலில் தங்குவதற்குமான செலவை அவனது கல்லூரி நிர்வாகமே ஏற்றுக்கொண்டுள்ளது.
அப்படியானால், ஐ.ஏ.எஸ் என்பதைவிட, வேலை என்பது முக்கியம் அல்லவா என்று கேட்டேன். ஆமாம் என்று ஒப்புக்கொண்டான். சரி, வேலை என்றால் எங்கெல்லாம் வேலை கிடைக்கும், எந்த மாதிரியான வேலை கிடைக்கும் என்று தெரியுமா என்றேன். தெரியாது என்றான். அவன்தான் கல்லூரியில் அவனது வகுப்பில் முதல் மாணவன். ஆனால் அது போதாதே வேலை கிடைக்க. அவனது கல்லூரியில் கேம்பஸ் நேர்முகம் நடக்கிறதா என்று கேட்டேன். ஐடி சரிவால், யாரும் வருவதில்லை என்றான்.
சரி, ஐடி வேலையை கண்டுகொள்ளாதே; ஆனால் வேதியியல் வேலைகள் ஏதேனும் கிடைக்குமே என்றேன். எந்த மாதிரியான வேதியியல் நிறுவனங்கள் புதுமுக பயிற்சி நிலை மாணவர்களை எடுத்துக்கொள்ளும் என்று தெரியுமா என்று கேட்டேன். தெரியாது என்றான்.
நம் மாணவர்கள் வேலை பற்றி மிகவும் அசட்டையாக, கவனக்குறைவாக இருக்கிறார்களோ என்று தோன்றுகிறது. முதல் வேலை என்பதை நாம்தான் தேடிப் பெறவேண்டும். அது தானாகக் கையில் கிடைக்காது. ஒரு வேலையில் எப்படியோ தட்டி முட்டிச் சேர்ந்துவிட்டால், அடுத்து அடுத்து என்று வேலைகள் கற்றுக்கொண்டு, நிறுவனங்கள் மாறி, ஒரு நல்ல நிலையை அடையலாம்.
கல்லூரிப் படிப்பின்போதே ஒரு மாணவன் மேற்படிப்பு, வேலை ஆகியவை தொடர்பாக என்னவெல்லாம் செய்யவேண்டும் என்பது பற்றி சற்றே விரிவாக, சில பதிவுகளை எழுதலாம் என்றுள்ளேன். அதற்கான பீடிகை இந்தப் பதிவு.