Tuesday, June 30, 2009

பிரபாகரன் - உயிருடன் உள்ளாரா, இல்லையா?

சனிக்கிழமை அன்று பெங்களூரிலிருந்து ஒருவர் எனக்கு போன் செய்து பேசினார். கிழக்கு பதிப்பகம் வெளியிட்டிருந்த ‘பிரபாகரன்: வாழ்வும் மரணமும்’ என்ற புத்தகத்தை வாங்கிப் படித்து அதிர்ச்சியில் இருந்தார் அவர்.

“அதெப்படி சார், பிரபாகரன் இறந்துட்டார்னு நீங்க அட்டைல போடலாம்?” என்றார். “உங்களுக்கு என்ன ஆதாரம் இருக்கு? உங்களுக்கு அந்தத் தகவலை யார் கொடுத்தா? நிதர்சனம்.நெட் பாத்தீங்களா, தலைவர் நவம்பர் 27-ம் தேதி வெளில வருவேன்னு அதுல சொல்லியிருக்காரே பாத்தீங்களா?” என்று கேட்டார்.

“ஈழத்துல தமிழன் செத்துகிட்டிருக்கான். நீங்க மரணம்னு போட்டதால தங்களுக்கு இருக்கற ஒரே ஆதரவும் போயிடுச்சேன்னு ஈழத் தமிழர்கள் அதிர்ந்துபோயிடுவாங்களே” என்றார்.

தமிழகத்திலும் உலக அளவிலும் அனைத்து ஊடகங்களிலும் வெளியான ஒரு செய்தி. ஆனாலும் அதை இந்தப் புத்தகத்தில் எழுதி இருக்கக்கூடாது என்றார் அந்த வாசகர்.

உரையாடல், விவாதமாகி, பிரச்னை வலுப்பதற்கு முன்னதாக முற்றுப்புள்ளி வைத்தேன். “ஐயா, உங்களோட உணர்வுகளைக் கொச்சைப்படுத்த விரும்பவில்லை” என்று சொல்லி போனை வைத்துவிட்டேன்.

***

பிரபாகரன் கொலை செய்யப்பட்டாரா, இல்லையா? நீ நேரில் பார்த்தாயா என்று யாராவது கேட்டால் என்ன பதில் சொல்லமுடியும்? இதுவரை தி ஹிந்து பலமுறை பிரபாகரன் மரணம் பற்றி செய்திகளை வெளியிட்டது. ஆனால் இம்முறையும் அப்படியே என்று சொல்லிவிடலாமா? இப்போது சர்வதேச ஊடகங்கள் அனைத்தும் வெளியிட்ட செய்திகளையும் விடுதலைப் புலிகள் அமைப்பிடமிருந்தே வந்த தகவல்களையும் பார்த்தால் ஒன்றை மட்டும்தான் சொல்லமுடியும்.

பிரபாகரன் உயிருடன் இல்லை.

இதனால் ஈழப் போராட்டத்துக்குப் பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்பதில் சந்தேகமே இல்லை.

பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு இலங்கை அரசிடமிருந்து எந்த விதத்திலும் உதவிகள் சரியாகச் செல்லப்போவதில்லை என்பதே என் கருத்தாக இருந்தது. அது நிதர்சனமாகத் தெரிகிறது. இந்தியா 500 கோடி ரூபாய் தருகிறேன் என்று சொல்லியும் இலங்கை அரசு நிவாரணப் பணிகளில் மெத்தனமாக இயங்குகிறது என்று ப.சிதம்பரம் சொல்கிறார். போர் என்று வரும்போது இந்தியாவின் பணத்தை மிக நன்றாகவும் ஆர்வத்துடனும் செலவழித்த இலங்கை, நிவாரணம் என்று வரும்போது மெத்தனம் காட்டுவது இயற்கையே.

விடுதலைப் புலிகள் அழிந்துபோனால், அடுத்த நாளே இலங்கையில் அரசியலமைப்புச் சட்டத்தில் மாற்றங்கள் கொண்டுவந்து, தமிழர்களுக்கு நன்மைகள் வாரி வழங்கப்படும் என்று இந்தியாவைச் சேர்ந்த புலி எதிர்ப்பு அரசியல்வாதிகளும் அறிவுஜீவிகளும் கருத்து தெரிவித்திருந்தனர்.

இந்தியாவில் உள்ள ஒரு மூத்த, புலி எதிர்ப்பு அரசியல்வாதியை (முன்னாள் மத்திய அமைச்சர்) சில வாரங்களுக்கு முன் சந்தித்தேன். பிரபாகரன் இல்லை என்றானபிறகு தமிழர்களுக்கு எந்த விதத்தில் நன்மை கிடைக்கும் என்று நீங்கள் கருதுகிறீர்கள் என்று கேட்டேன். ராஜபக்‌ஷே தன்னிடம் உறுதி அளித்துள்ளதாகவும், கட்டாயமாக தமிழர்களுக்கு நல்லது நடக்கும் என்று தான் நம்புவதாகவும் சொன்னார். இலங்கையின் ஹார்ட்லைன் அரசியல்வாதிகள் இதை ஏற்றுக்கொள்வார்களா என்று கேட்டேன். அவர்களைச் சரிக்கட்டுவது ராஜபக்‌ஷேயின் பிரச்னை என்றார்.

அதுதான் பிரச்னை. எந்த சிங்கள அரசியல்வாதியும் தமிழர்களின் நலன் பற்றி சிந்திப்பதே இல்லை. புலிகளை ஒழிக்கவேண்டும் என்பது ஒன்றுமட்டுமே குறிக்கோளாக இருந்தது. ஒழித்தாகிவிட்டது. அடுத்த சில நாள்கள் விடுமுறை. சில மாதங்களுக்குப் பின், வேண்டுமென்றால் ஏதாவது கமிட்டி அமைத்து, சில பல வட்டமேஜை மாநாடுகளை நடத்தி, பிறகு மெதுவாகப் பார்த்துக்கொள்ளலாம்.

இந்தப் பிரச்னையில் இந்தியாவின் நிலை ஆயாசத்தைத் தருகிறது. எந்த விதத்திலும் இந்தியாவின் அயலுறவுக் கொள்கையை மாற்றமுடியாத நிலையில் வாக்காளர்கள் இருப்பது வருத்தத்துக்கு உரியது.

நிவாரணப் பொருள்களை ஏந்திவந்த வணங்காமண் கப்பல் இலங்கையிலிருந்து துரத்தப்படுகிறது. அது சென்னை துறைமுகத்துக்கு வந்தபோது, அங்கிருந்தும் துரத்தப்படுகிறது. கப்பல்துறை அமைச்சர் வாசன், இலங்கையை எப்படியாவது அந்தப் பொருள்களை ஏற்றுக்கொள்ளவைப்போம் என்கிறார். ஆனால் இலங்கை கண்டுகொள்வதாகவே தெரியவில்லை. இந்த எளிதான விஷயத்தில்கூட இந்தியாவால் ஒன்றும் செய்ய முடியவில்லை என்னும்போது, இலங்கையின் அரசியல் அமைப்புச் சட்டத்தை மாற்ற இந்தியாவால் என்ன செய்துவிட முடியும்?

முடியலாம். அதற்கு இந்தியத் தலைமையிடம் ஒரு சீரிய மாற்றம் வரவேண்டும். அது குற்ற உணர்ச்சியினால் விளைந்ததாகவும் இருக்கலாம். இலங்கைத் தமிழர்களின் ரத்தம் தம் கையில் என்ற குற்ற உணர்ச்சி.

அது ஒன்றால் மட்டும்தான் இந்தியத் தரப்பில் மாற்றம் ஏற்படக்கூடும். பாமக, மதிமுக போன்ற கட்சிகள் தங்களது போராட்டத்தை நிறுத்திவிடக்கூடாது. திமுக தொண்டர்களும் தமது கட்சியின் தலைமைக்கு நெருக்கடி தந்து இந்த விஷயத்தைப் பொருத்தமட்டில் மாற்றத்தைக் கொண்டுவர முயற்சி செய்யவேண்டும்.

Sunday, June 28, 2009

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தேவையா?

மனிதவள மேம்பாட்டு அமைச்சர் கபில் சிபல், ஒரு வெடியைக் கொளுத்திப் போட்டுள்ளார். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வே வேண்டாமே என்கிறார்.

இது யஷ் பால் கமிட்டி பரிந்துரையின் பேரில் வந்துள்ளது என்று நினைக்கிறேன். யோசித்துப் பார்த்ததில் இது நியாயமாகவே எனக்குப் படுகிறது. இதை ஆப்ஷனல் என்று வைத்துவிட்டால், சரியாகத்தான் இருக்கும். பள்ளி இறுதித் தேர்வு என்று ஒரு தேர்வு இருந்தாலே போதும் என்று தோன்றுகிறது.

11, 12 வகுப்புகளில் எந்த அடிப்படையில் ஒரு மாணவருக்கு ஒரு குறிப்பிட்ட பாடத் துறை தரப்படும் என்ற கேள்வி எழும். சமீபத்தில் தான் விரும்பிய ஒரு பாடத் துறை கிடைக்காத ஒரு மாணவி தற்கொலை செய்துகொண்ட செய்தியை வலைப்பதிவுகளிலும் பத்திரிகைகளிலும் பார்த்தோம். அந்தப் பிரச்னையை எதிர்கொள்வது வேறு விஷயம்.

அடுத்து முக்கியமானது பாலிடெக்னிக் மற்றும் ஐடிஐ படிப்புகளுக்கு எந்த அடிப்படையில் மாணவர்களை சேர்ப்பது என்ற கேள்வி. இந்தப் படிப்புகளுக்கு ஒருவர் போக விரும்பினால், முன்னதாகவே முடிவு செய்து, ஆப்ஷனல் 10-ம் வகுப்பு தேர்வை எழுதி, பின்னர் இந்தப் படிப்புகளுக்குப் போகவேண்டும். இதனால் பல மாணவர்களுக்கு என்ன செய்வது என்று தெரியாத குழப்பம் ஏற்படலாம்.

அடுத்தது, பள்ளி விட்டு பள்ளி மாறும்போது. பத்தாம் வகுப்புத் தேர்வையும் ஒரு பள்ளிக்கூடமே நடத்தி மதிப்பெண்கள் கொடுக்கும்போது, மாணவர் வேறு ஒரு பள்ளிக்கு மாற விரும்பினால் அந்த மாணவரது தரம் என்ன என்பதை எப்படி அறிந்துகொள்வது? இது ஒரு பெரிய விஷயம் இல்லை என்று தோன்றுகிறது. இப்போது ஒன்பதாம் வகுப்பிலோ, பதினொன்றாம் வகுப்பிலோ மாறும்போது என்ன நடக்கிறதோ, அதையோ பத்தாம் வகுப்பு முடித்து மாற்றும்போது செய்துகொள்ளவேண்டியதுதான்.

மற்றொரு சிக்கல்: இப்படி ஏதாவது நடைபெறுவதாக இருந்தால், மத்திய அரசும் மாநில அரசுகளும் சேர்ந்து சில சட்டங்களை இயற்றவேண்டும். கல்வி என்பது concurrent list-ல் உள்ளது. சில மாநில அரசுகள் இந்தத் திட்டத்தை ஏற்கவில்லை என்றால் நிறைய குழப்பங்கள் வரக்கூடும்.

கல்வித் துறையைச் சேர்ந்தவர்களிடம் இந்தத் திட்டத்துக்கு முழு ஆதரவு இருக்காது என்றே நினைக்கிறேன்.

எந்த மாற்றம் கொண்டுவந்தாலும் குழப்பங்கள் இருக்கத்தான் செய்யும். என் கருத்து, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை ஒழித்துவிடலாம்; வேண்டுபவர்களுக்கு ஆப்ஷனலாக வைத்துக்கொள்ளலாம் என்பதே.

Saturday, June 27, 2009

வடபழனி, மகாகவி பாரதி நகர், தி.நகர் கிழக்கு புத்தகக் கண்காட்சிகள்

கிழக்கு புத்தகக் கண்காட்சிகள் இப்போது சென்னையில் கீழ்க்கண்ட இடங்களில் நடக்கின்றன:

பொன்மனம் திருமண மண்டபம்
சரவண பவன் ஹோட்டலுக்கு எதிரில்
115/213, ஆர்காட் ரோடு
வடபழனி, சென்னை 600026

எம்.கே.பி (மகாகவி பாரதி நகர்) பஸ் ஸ்டாண்ட் அருகில்
356-A, வெஸ்ட் அவென்யூ
எம்.கே.பி நகர், சென்னை 600039

ஜெயச்சந்திரன் டெக்ஸ்டைல்ஸ், முதல் மற்றும் நான்காம் மாடிகளில்
மாம்பலம் ரயில்வே ஸ்டேஷன் அருகில்
ரெங்கநாதன் தெரு
தி.நகர், சென்னை 600017

அத்துடன் ஏற்கெனவே பெரம்பூரிலும் நடந்து வருகிறது.

ஆர்.கே.சண்முகம் செட்டியார் (17.10.1892 - 5.5.1953)

சுதந்தர இந்தியாவின் முதல் நிதியமைச்சர் ஆர்.கே.சண்முகம் செட்டியார் என்பவர் என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் இவரைப் பற்றி இதற்குமேல் அதிகமாக எனக்கு ஏதும் தெரிந்திருக்கவில்லை.

பிரதமர் ஜவாஹர்லால் நேருவின் தலைமையில் சுதந்தர இந்தியாவின் முதல் அமைச்சரவை உருவாக்கப்பட்டபோது அதில் காங்கிரஸ் கட்சியில் இல்லாத இருவர் பங்குபெற்றனர். அவர்கள்: நிதியமைச்சர் ஆர்.கே.சண்முகம் செட்டியார்; சட்ட அமைச்சர் அம்பேத்கர். அம்பேத்கர் தனக்கு நிதி போர்ட்ஃபோலியோ கிடைக்கும் என்று எதிர்பார்த்தார் என்று ஓரிடத்தில் படித்தேன். (கிறிஸ்டோஃபர் ஜாஃப்ரிலாட் எழுதிய Dr Ambedkar And Untouchability: Analysing And Fighting Caste என்ற புத்தகத்தில் என்று நினைக்கிறேன்.) ஆக, அம்பேத்கரை மீறி, காங்கிரஸ் கட்சிக்கு வெளியிலிருந்து கொண்டுவந்து இவருக்கு நிதித்துறை என்னும் மிக முக்கியமான பொறுப்பை நேரு கொடுக்கக் காரணம் என்ன? இவர் பொருளாதாரத் துறையில் என்ன சாதித்திருந்தார்?

அமைச்சரவை தொடர்பாக காந்தியிடம் ஆலோசிக்காமல் நேருவும் படேலும் முடிவெடுத்திருக்க மாட்டார்களே? காந்திக்கு சண்முகத்தைத் தெரியுமா? காந்தி என்ன சொல்லியிருப்பார்?

நிதியமைச்சராக இருந்த சண்முகம், ஒரே ஆண்டில் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு கோயம்புத்தூர் திரும்பியது ஏன்? காங்கிரஸ்காரர்கள் என்ன கலகம் செய்து இவரைத் துரத்தினர்?

இந்த மனிதர் பற்றி நமக்குத் தெரிந்த தகவல்கள் மிகக் குறைவே. சுமார் 60 ஆண்டுகள் வாழ்ந்த இவரது வாழ்க்கை வரலாற்றை இவரது பேரன் ஆர்.சுந்தரராஜ், ஒரு பிஎச்.டி ஆய்வுக்கட்டுரையாக எழுதியுள்ளார். அதன் ஜனரஞ்சக வடிவத்தை தமிழ்ப் புத்தகமாக கிழக்கு பதிப்பகம் வெளியிடப் போகிறது.

அதனை எடிட் செய்யும்போதுதான் இந்த மனிதரின் பல குணங்கள், சாதனைகள் எனக்குப் புரிய ஆரம்பித்தது. தமிழகத்தின் மிகப்பெரும் சாதனையாளர்களுல் இவர் ஒருவர். ஆனால் பெரியாருக்கோ, ராஜாஜிக்கோ கிடைத்த அளவு புகழும் பெருமையும் இவருக்குக் கிடைக்கவில்லை.

இவர் காங்கிரஸில் இருந்திருக்கிறார். பிராமணர்-பிராமணரல்லாதார் பிரச்னை வலுத்தபோது காங்கிரஸிலிருந்து விலகியுள்ளார். நீதிக்கட்சியின் ஆதரவில் தேர்தலில் நின்றுள்ளார். பிறகு அந்தக் கட்சியுடனான தொடர்பை நீட்டிக்கவில்லை. பெரியாருடன் நெருங்கிய நட்பு பாராட்டி, சுயமரியாதை இயக்கத்தில் இருந்துள்ளார். ஆனால் சுயமரியாதை இயக்கத்தின் கடவுள் எதிர்ப்புக் கொள்கையை ஏற்றுக்கொள்ளாமல் அந்த இயக்கத்திலிருந்து விலகியுள்ளார். அடிப்படையில் பெரியாரின் பிற சீர்திருத்தங்களை ஏற்றுக்கொண்ட இவர், கடவுள் நம்பிக்கையை விடத் தயாராக இல்லை.

இந்தியாவுக்கு சுதந்தரம் வேண்டும் என்று கேட்டுப் போராடிய பலருள் இவர் இருந்திருக்கிறார். ஆனால் முகமது அலி ஜின்னா போல, ஆங்கிலேயர்களுடன் கருத்து வேற்றுமை இருந்தாலும், தெருவில் இறங்கிப் போராடி ஜெயிலுக்குப் போகவில்லை. கடைசிவரை ஆங்கிலேய அரசாங்க அதிகாரிகளுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தார். ஆங்கில அரசு சார்பில் இவருக்கு ஏதாவது ஒரு பதவி இருந்துவந்தது. ஆனால் அதே நேரம், இந்தியா சுய நிர்ணய உரிமை பெற்று தன்னாட்சி அதிகாரத்துடன் விளங்கவேண்டும் என்பதில் இவர் கடுமையாக உழைத்திருக்கிறார். உதாரணமாக அட்லாண்டிக் பிரகடனம் தொடர்பாக இவர் பிராங்க்ளின் ரூஸ்வெல்ட்டுடன் பேசியது.* (இதுபற்றி தனியாக எழுதவேண்டும்.)

இந்திய நிதியமைச்சராக இருந்தபோது பிரிட்டன் இந்தியாவுக்குத் தரவேண்டிய Balance of Payment சுமார் 1,500 கோடி ரூபாயைப் பெறுவதில் முக்கியப் பங்கு வகித்துள்ளார்.

கோயமுத்தூர் பகுதியை தொழிற்சாலைகள் நிறைந்த இடமாக்கியதில் மிக முக்கியமான பங்கு இவருக்கு இருந்திருக்கிறது. கோவையில் SIMA, SITRA போன்ற அமைப்புகளை உருவாக்கியதில் இவருக்குத்தான் முக்கியப் பங்குள்ளது. கொச்சி சமஸ்தான திவானாக 7 ஆண்டுகள் இருந்து, அந்த இடத்தில் பெரும் வளர்ச்சியைக் கொண்டுவந்துள்ளார். தமிழிசை இயக்கத்தில் முக்கியமானவராக இருந்துள்ளார். ராஜா அண்ணாமலை செட்டியாருடன் சேர்ந்து தமிழிசை இயக்கத்தை ஆரம்பித்து, அண்ணாமலை செட்டியாருக்கு அடுத்து அந்த இயக்கத்தின் இரண்டாவது தலைவராக இருந்துள்ளார். அண்ணாமலைப் பலகலைக்கழகத்தின் துணைவேந்தராக இரண்டு ஆண்டுகள் இருந்துள்ளார். சிலப்பதிகாரத்தை ஆராய்ந்து உரை எழுதியுள்ளார். (உரையா, ஆய்வுக்கட்டுரையா என்று தெளிவாகத் தெரியவில்லை. ஒரு பிரதி கிடைக்க முயற்சி செய்துகொண்டிருக்கிறேன்.) தமிழ்க் கல்விக்காக பேரூரில் ஒரு கல்லூரி உருவாக்கியுள்ளார்.

மேலே நான் சொன்னது மிகச் சில துளிகளே. இவரது வாழ்க்கையில் தெரிந்துகொள்ள சுவாரசியமான பல விஷயங்கள் உள்ளன.

தனிவாழ்வில் நிறைய சொத்து சேர்த்துள்ளார். பொதுவாழ்வில் நிறைய சாதித்துள்ளார். ஒருவிதத்தில் பார்த்தால் உலகளாவிய பெருமை பெற்ற முதல் தமிழர் என்று சொல்லலாம். ஆனால் இவர்மீது வெளிச்சமே விழாமல் இருப்பதற்கான காரணம் என்ன?

Sunday, June 21, 2009

கல்விக் கடன்

இன்று கலைஞர் செய்திகள் தொலைக்காடி சானலில் டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்பான ஒரு நேரடி நிகழ்ச்சியில் விருந்தினராகக் கலந்துகொண்டேன். கடந்த வாரத்தில் ஏற்கெனவே ஒருமுறை கலந்துகொண்டிருந்தேன்.

நிகழ்ச்சியை நடத்துபவர் ஷண்முக சுந்தரம். அவர் இன்று காலையில்தான் கல்விக் கடன் தொடர்பாக ஒரு நேரடி நிகழ்ச்சியை நடத்தியிருந்தார். இந்த நிகழ்ச்சியிலும் நேயர்கள் தொலைபேசி மூலம் தங்கள் கேள்விகளைக் கேட்டு பதில்களைப் பெறலாம். இன்று கலந்துகொண்ட விருந்தினர்களில் ஒருவர் இந்தியன் வங்கியின் சேர்மன் சுந்தர ராஜன். இந்த நிகழ்ச்சி பற்றியும் எந்த மாதிரியான கேள்விகள் வந்தன என்றும் ஷண்முக சுந்தரத்திடம் பேசிக்கொண்டிருந்தேன்.

கல்விக்குக் கடன் தருவதில் வங்கிகள் சுணக்கம் காட்டுகின்றன. வினவு போன்றவர்கள் என்னவோ சூட், கோட், டை கட்டியவர்களுக்கு மட்டும் கடன் தருவதாக எழுதிக் குழப்புகின்றனர்.

கடன் பெற யார் தகுதி உடையவர்? உயர் கல்வி நிறுவனம் எதில் இடம் கிடைத்திருந்தாலும் போதும், அந்த நபர் கல்விக் கடன் பெறத் தகுதி உடையவர் ஆகிறார். அவர் தனது அட்மிஷன் ஆவணங்களை எடுத்துச் சென்றால் போதும். கூட, கையெழுத்து போட அவரது பெற்றோர் ஒருவர். 4 லட்ச ரூபாய் வரை கடன் பெற இது போதும். இதற்கு மேல் வேறு எதுவும் வேண்டாம். அதற்குமேல், 7.5 லட்ச ரூபாய் வரை கடன் வேண்டுமென்றால் சொத்து ஆவணங்கள் வேண்டும்.

இந்தக் கடனை கல்விக் கட்டணத்துக்கு மட்டுமே பயன்படுத்திக் கொள்ளலாம். இங்குதான் இரண்டாம் பிரச்னை ஆரம்பமாகிறது. (முதல் பிரச்னை கடன் பெறுவதிலேயே உள்ளது. அது பின்னர்.) பொறியியல் கல்லூரிகளின் கட்டணம் ஆண்டுக்கு 80,000 ரூபாய் என்ற அளவில் இருக்கும்போது கல்விக் கடன் பெற்று ஒருவர் பிழைத்துவிடலாம். மேற்கொண்டு ஆகும் இதர செலவுகளுக்கு - புத்தகங்கள், துணி, ஹாஸ்டல் - பெற்றோர்கள் அல்லது உறவினர்கள்/நண்பர்கள் செலவு செய்யவேண்டியிருக்கும். ஆனால் கல்வி நன்கொடை (அதாவது லஞ்சம்) போன்றவற்றுக்கு இந்தக் கடன் உதவி செய்யாது.

இப்போது முதல் பிரச்னைக்கு வருவோம். 4 லட்சம் வரை உடனடியாகக் கடன் கிடைக்கும் என்னும்போது, பிரச்னை ஏதும் இல்லையே என்று நீங்கள் கேட்கலாம். பிரச்னை, கடனைத் திருப்பித் தராமல் ஓடிவிடும் மாணவர்களால் ஏற்படுகிறது. 60% கடன்கள் திருப்பிக் கட்டப்படுவதில்லையாம். இப்படி வாராக் கடன்கள் இருக்கும் ஒரு நிலையில் மேற்கொண்டு எந்த வங்கிதான் கல்விக் கடன் தர முற்படும்? ஏதாவது சாக்குப் போக்கு சொல்லி கடன் தராமல் இருக்கவே வங்கிகள் முற்படும். தனியார் வங்கிகள் கிட்டவே நெருங்கா.

இதனை எப்படி மாற்றுவது?

எப்படி ஒரு வீட்டை, நிலத்தை வாங்கும்போது நில ஆவணம் மார்ட்கேஜ் செய்யப்படுகிறதோ, அதேபோல, கடன் வாங்கும் நபரை மார்ட்கேஜ் செய்தால்தான் வாராக்கடன்கள் குறைக்கப்படும். இதுவரை கடன் வாங்கிய மாணவர்கள் இரண்டில் ஒருவர் செய்துள்ள ஏமாற்றால்தான் இனி வரும் மாணவ சமுதாயத்துக்குக் கடன்கள் கிடைப்பதில்லை. இதைக் குறைக்க, கல்விக் கடன் கோரும் ஒவ்வொரு மாணவர்மீதும் சில கட்டுப்பாடுகளை விதிக்கவேண்டும்.

1. ஒரு மாணவர் வாங்கியுள்ள கல்விக் கடன் பணம் கட்டணத்துக்கு என்று நேரடியாக கல்வி நிறுவனத்துக்குப் போகவேண்டும். அந்தக் கடனுக்கு மாணவர், வங்கி, கல்வி நிறுவனம் என்ற மூவரும் உடந்தையாக இருக்கவேண்டும்.

2. மாணவர் கல்வி நிறுவனம் வாயிலாக கேம்பஸ் நேர்முகம் மூலம் வேலை பெறுகிறார் என்றால் அந்தத் தகவலை கல்வி நிறுவனம் வங்கிக்கு அறிவிக்கவேண்டும். தொடர்ந்து, வேலை கொடுத்துள்ள நிறுவனம், மாணவர், வங்கி என்று முத்தரப்பு ஒப்பந்தம் ஒன்று ஏற்படுத்தப்பட்டு, மாணவரது மாத வருமானத்தில் குறிப்பிட்ட பங்கு மாதாமாதம் வங்கிக்குச் செல்லுமாறு செய்யவேண்டும்.

3. பாஸ்போர்ட்டில் ECNR என்று ஸ்டாம்ப் செய்திருப்பார்கள். அதேபோல பாஸ்போர்ட் வைத்திருக்கும் மாணவர்களுக்கு கல்விக்கடன் கொடுக்கப்பட்டுள்ளது, கட்டிமுடிக்கப்படவில்லை என்ற ஸ்டாம்ப் இருக்கவேண்டும். இது கொஞ்சம் கஷ்டமானது, இதைச் செயல்படுத்த எந்த முறையைப் புகுத்தவேண்டும் என்று சற்றே யோசிக்கவேண்டும். மாணவர்கள் கடனைக் கட்டினால்தான் இந்த ஸ்டாம்ப் நீக்கப்படும், அதன் பின்னரே அவர்கள் வெளிநாடு செல்லலாம் என்ர முறை வரவேண்டும். அல்லது அவர்கள் வெளிநாட்டுக்க்ப் போவது மற்றொரு மேல்படிப்பு என்றால், அதற்கேற்றார்போல் அவரது வங்கி அதனை ஏற்றுக்கொண்டு no objection சான்றிதழ் தரவேண்டும். அதன்பின்னரே எமிக்ரேஷன் துறை அவரை வெளிநாடு செல்ல அனுமதிக்கும்.

4. சொந்த முயற்சியில் வேலை பெறுபவர்களை எப்படிக் கண்காணித்து அவர்களை கடன்களைத் திரும்பச் செலுத்துமாறு செய்வது என்று யோசிக்கவேண்டும்.

ஏன் இத்தனை கட்டுப்பாடுகள்? இந்தக் கட்டுப்பாடுகள் இல்லாமல் இந்தியர்கள் நியாயமாக நடந்துகொள்வதில்லை என்பது தெளிவு. எங்காவது அரசை, வங்கிகளை ஏமாற்ற வழி இருக்கிறது என்றால் ஓர் இந்தியன் அந்த ஏமாற்றும் காரியத்தைச் செய்கிறான் என்பதைத்தான் 60% கடன்கள் திரும்பச் செலுத்தப்படாதது தெரிவிக்கிறது. எனவே, வருங்கால மாணவர்களுக்கு கல்விக் கடனால் நன்மை வரவேண்டும் என்றால் இந்தக் கட்டுப்பாடுகள் அவசியமாகின்றன.

இல்லாவிட்டால், நியாயமானவர்களுக்கும் ஒழுங்காகக் கடன்கள் கிடைக்காமல் போய்விடும்.