Sunday, June 21, 2009

கல்விக் கடன்

இன்று கலைஞர் செய்திகள் தொலைக்காடி சானலில் டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்பான ஒரு நேரடி நிகழ்ச்சியில் விருந்தினராகக் கலந்துகொண்டேன். கடந்த வாரத்தில் ஏற்கெனவே ஒருமுறை கலந்துகொண்டிருந்தேன்.

நிகழ்ச்சியை நடத்துபவர் ஷண்முக சுந்தரம். அவர் இன்று காலையில்தான் கல்விக் கடன் தொடர்பாக ஒரு நேரடி நிகழ்ச்சியை நடத்தியிருந்தார். இந்த நிகழ்ச்சியிலும் நேயர்கள் தொலைபேசி மூலம் தங்கள் கேள்விகளைக் கேட்டு பதில்களைப் பெறலாம். இன்று கலந்துகொண்ட விருந்தினர்களில் ஒருவர் இந்தியன் வங்கியின் சேர்மன் சுந்தர ராஜன். இந்த நிகழ்ச்சி பற்றியும் எந்த மாதிரியான கேள்விகள் வந்தன என்றும் ஷண்முக சுந்தரத்திடம் பேசிக்கொண்டிருந்தேன்.

கல்விக்குக் கடன் தருவதில் வங்கிகள் சுணக்கம் காட்டுகின்றன. வினவு போன்றவர்கள் என்னவோ சூட், கோட், டை கட்டியவர்களுக்கு மட்டும் கடன் தருவதாக எழுதிக் குழப்புகின்றனர்.

கடன் பெற யார் தகுதி உடையவர்? உயர் கல்வி நிறுவனம் எதில் இடம் கிடைத்திருந்தாலும் போதும், அந்த நபர் கல்விக் கடன் பெறத் தகுதி உடையவர் ஆகிறார். அவர் தனது அட்மிஷன் ஆவணங்களை எடுத்துச் சென்றால் போதும். கூட, கையெழுத்து போட அவரது பெற்றோர் ஒருவர். 4 லட்ச ரூபாய் வரை கடன் பெற இது போதும். இதற்கு மேல் வேறு எதுவும் வேண்டாம். அதற்குமேல், 7.5 லட்ச ரூபாய் வரை கடன் வேண்டுமென்றால் சொத்து ஆவணங்கள் வேண்டும்.

இந்தக் கடனை கல்விக் கட்டணத்துக்கு மட்டுமே பயன்படுத்திக் கொள்ளலாம். இங்குதான் இரண்டாம் பிரச்னை ஆரம்பமாகிறது. (முதல் பிரச்னை கடன் பெறுவதிலேயே உள்ளது. அது பின்னர்.) பொறியியல் கல்லூரிகளின் கட்டணம் ஆண்டுக்கு 80,000 ரூபாய் என்ற அளவில் இருக்கும்போது கல்விக் கடன் பெற்று ஒருவர் பிழைத்துவிடலாம். மேற்கொண்டு ஆகும் இதர செலவுகளுக்கு - புத்தகங்கள், துணி, ஹாஸ்டல் - பெற்றோர்கள் அல்லது உறவினர்கள்/நண்பர்கள் செலவு செய்யவேண்டியிருக்கும். ஆனால் கல்வி நன்கொடை (அதாவது லஞ்சம்) போன்றவற்றுக்கு இந்தக் கடன் உதவி செய்யாது.

இப்போது முதல் பிரச்னைக்கு வருவோம். 4 லட்சம் வரை உடனடியாகக் கடன் கிடைக்கும் என்னும்போது, பிரச்னை ஏதும் இல்லையே என்று நீங்கள் கேட்கலாம். பிரச்னை, கடனைத் திருப்பித் தராமல் ஓடிவிடும் மாணவர்களால் ஏற்படுகிறது. 60% கடன்கள் திருப்பிக் கட்டப்படுவதில்லையாம். இப்படி வாராக் கடன்கள் இருக்கும் ஒரு நிலையில் மேற்கொண்டு எந்த வங்கிதான் கல்விக் கடன் தர முற்படும்? ஏதாவது சாக்குப் போக்கு சொல்லி கடன் தராமல் இருக்கவே வங்கிகள் முற்படும். தனியார் வங்கிகள் கிட்டவே நெருங்கா.

இதனை எப்படி மாற்றுவது?

எப்படி ஒரு வீட்டை, நிலத்தை வாங்கும்போது நில ஆவணம் மார்ட்கேஜ் செய்யப்படுகிறதோ, அதேபோல, கடன் வாங்கும் நபரை மார்ட்கேஜ் செய்தால்தான் வாராக்கடன்கள் குறைக்கப்படும். இதுவரை கடன் வாங்கிய மாணவர்கள் இரண்டில் ஒருவர் செய்துள்ள ஏமாற்றால்தான் இனி வரும் மாணவ சமுதாயத்துக்குக் கடன்கள் கிடைப்பதில்லை. இதைக் குறைக்க, கல்விக் கடன் கோரும் ஒவ்வொரு மாணவர்மீதும் சில கட்டுப்பாடுகளை விதிக்கவேண்டும்.

1. ஒரு மாணவர் வாங்கியுள்ள கல்விக் கடன் பணம் கட்டணத்துக்கு என்று நேரடியாக கல்வி நிறுவனத்துக்குப் போகவேண்டும். அந்தக் கடனுக்கு மாணவர், வங்கி, கல்வி நிறுவனம் என்ற மூவரும் உடந்தையாக இருக்கவேண்டும்.

2. மாணவர் கல்வி நிறுவனம் வாயிலாக கேம்பஸ் நேர்முகம் மூலம் வேலை பெறுகிறார் என்றால் அந்தத் தகவலை கல்வி நிறுவனம் வங்கிக்கு அறிவிக்கவேண்டும். தொடர்ந்து, வேலை கொடுத்துள்ள நிறுவனம், மாணவர், வங்கி என்று முத்தரப்பு ஒப்பந்தம் ஒன்று ஏற்படுத்தப்பட்டு, மாணவரது மாத வருமானத்தில் குறிப்பிட்ட பங்கு மாதாமாதம் வங்கிக்குச் செல்லுமாறு செய்யவேண்டும்.

3. பாஸ்போர்ட்டில் ECNR என்று ஸ்டாம்ப் செய்திருப்பார்கள். அதேபோல பாஸ்போர்ட் வைத்திருக்கும் மாணவர்களுக்கு கல்விக்கடன் கொடுக்கப்பட்டுள்ளது, கட்டிமுடிக்கப்படவில்லை என்ற ஸ்டாம்ப் இருக்கவேண்டும். இது கொஞ்சம் கஷ்டமானது, இதைச் செயல்படுத்த எந்த முறையைப் புகுத்தவேண்டும் என்று சற்றே யோசிக்கவேண்டும். மாணவர்கள் கடனைக் கட்டினால்தான் இந்த ஸ்டாம்ப் நீக்கப்படும், அதன் பின்னரே அவர்கள் வெளிநாடு செல்லலாம் என்ர முறை வரவேண்டும். அல்லது அவர்கள் வெளிநாட்டுக்க்ப் போவது மற்றொரு மேல்படிப்பு என்றால், அதற்கேற்றார்போல் அவரது வங்கி அதனை ஏற்றுக்கொண்டு no objection சான்றிதழ் தரவேண்டும். அதன்பின்னரே எமிக்ரேஷன் துறை அவரை வெளிநாடு செல்ல அனுமதிக்கும்.

4. சொந்த முயற்சியில் வேலை பெறுபவர்களை எப்படிக் கண்காணித்து அவர்களை கடன்களைத் திரும்பச் செலுத்துமாறு செய்வது என்று யோசிக்கவேண்டும்.

ஏன் இத்தனை கட்டுப்பாடுகள்? இந்தக் கட்டுப்பாடுகள் இல்லாமல் இந்தியர்கள் நியாயமாக நடந்துகொள்வதில்லை என்பது தெளிவு. எங்காவது அரசை, வங்கிகளை ஏமாற்ற வழி இருக்கிறது என்றால் ஓர் இந்தியன் அந்த ஏமாற்றும் காரியத்தைச் செய்கிறான் என்பதைத்தான் 60% கடன்கள் திரும்பச் செலுத்தப்படாதது தெரிவிக்கிறது. எனவே, வருங்கால மாணவர்களுக்கு கல்விக் கடனால் நன்மை வரவேண்டும் என்றால் இந்தக் கட்டுப்பாடுகள் அவசியமாகின்றன.

இல்லாவிட்டால், நியாயமானவர்களுக்கும் ஒழுங்காகக் கடன்கள் கிடைக்காமல் போய்விடும்.

9 comments:

  1. இந்த குறிப்பிட்ட விஷயத்தில் நான் வினவு கட்சிதான். அம்பானிக்கும் டாடாவுக்கும் அள்ளி அள்ளிக் கொடுக்கிறார்கள், ஏழைகளின் கல்விக் கடன் என்றால் கண்ணை உறுத்துகிறதோ என்று 'சாய்நாத்' த்தனமாக வெல்லாம் இல்லாவிட்டாலும், என் லெவலுக்கு சில விஷயங்கள்.

    சப்போர்ட்டுக்கு எந்த தரவுகளும் இல்லாமல், வங்கி உயரதிகாரி, 60 பர்சண்ட் மாணாவர்கள் திருப்பிக் கட்டாமல் ஓடிவிடுகிறார்கள் சொல்ல, ( நாட்டாமை... தீர்ப்ப மாத்திச் சொல்லு.. ஹியர்சே எல்லாஞ்ச் செல்லாது செல்லாது...) அதைக் கேட்டு, நீங்களும், சில ஐடியாக்கள் குடுக்க, எனன்க்கென்ன தோணுதுன்னா.... வேணாம் அதை நேர்ல பாக்கறப்ப சொல்றேன்.

    அப்படியே அவர் சொன்னது சரியான கணக்குதான்னாலும், அந்த 60% ல யார் யார் இருப்பாங்கன்னு எனக்கு ஒரு கணக்கு இருக்கு.

    1. லோன் வாங்கித்தந்துடறேன். மொதல்ல ஒழுங்கா கட்டு , மத்தத பின்னால பாத்துக்கலாம் என்று கல்விக் கடன் வாங்கித் தரப்பட்டவர்கள்.
    2. ஹ... பேங்க் லோன் வாங்கிட்டுத் திருப்பிக் கட்டறதா? நா யார் தெரியுமில்லே என்று உதார் விடும் அதிகாரத்தில் உள்ள பவர்புல் பெருசுகள்.
    3. படிச்சு முடிச்சு வேலை கிடைக்காதவர்கள்.
    4. குறைந்த சம்பளத்தில் வேலை பார்த்துக் கொண்டு, கடனைத் திருப்பிக் கட்ட நிசமாகவே வக்கு இல்லாதவர்கள்.

    இந்த எல்லாருக்கும் ஒரே மாதிரியான தீர்ப்புதானா?

    //(முதல் பிரச்னை கடன் பெறுவதிலேயே உள்ளது. அது பின்னர்.)// என்று நீங்கள் சொல்கிறீர்கள். முதலில் அதைப் பற்றித்தான் பேச வேண்டும். கல்விக்கடனை பெறுவதில் உள்ள 'ஃபார்மாலிட்டீஸுக்கும்', அது வராக்கடனாக வங்கியின் என்பிஏவில் குந்திக்கொள்வதற்கும் நேரடியாகத் தொடர்பு உண்டு.

    ReplyDelete
  2. பாஸ்போர்ட் அளவுக்கு போக வேண்டாம். அது சிரமமாகக் கூட இருக்கலாம். degree சர்டிபிகேட்டை பல்கலைக் கழகம் வங்கிக்கு hypothecation செய்யலாம். வாகனங்களுக்கு செய்வதைப் போல. கடன் கட்டி முடித்தவுடன் hypothecation எடுக்கப்பட்டு புதிய சான்றிதழ் வழங்கலாம்...

    ReplyDelete
  3. பணம் திரும்ப செலுத்தாதவர்கள் அதன் மூலம் மற்றவர்கள் பலனை அடையவிடாமல் தடுப்பது என்ற உண்மை “சுடுகிறது”.

    ReplyDelete
  4. முதலில்

    ஏன் கல்விக்கடன் வேண்டும்

    ஏன் அரசே அனைத்து கல்வி நிலையங்களையும் நாட்டுடைமையாக்கி இலவச கல்வி அளிக்க கூடாது

    என்ற கேள்விக்கு விடை தேவை !!

    --

    சுத்தமான தண்ணீரை கூட இலவசமாக தருவதில்லை. இதில் இலவச உயர் கல்வியா என்று பல்லை கடிப்பது தெரிகிறது

    ReplyDelete
  5. பிரகாஷ், நீங்கள் சொல்வது தவறு. கல்விக்கடனை திருப்பி செலுத்தாமல் காலம் தாழ்த்தும் சதவீதம் மிகவும் அதிகம்.

    ஆனால் பத்ரி சொல்லி இருப்பதுபோல் இவ்வளவு எளிதாக வங்கிகள் பணம் கொடுப்பது இல்லை. எனக்கு MCA படிக்க 36,000 ரூபாய் தேவைப்பட்டது. (1996). பல முயற்சிகளுக்கு பிறகு கனரா வங்கியில் (அங்கு பணிபுரியும் ஒருவரின் சிபாரிசுடன்) கடன் கிடைத்தது. ஆனாலும் அங்கு இருந்த மேலாளர் 10,000 ருபாய் FD யில் போட சொல்லி வற்புறுத்தினார். அதை செய்த பிறகே கடனும் கிடைத்தது.

    ReplyDelete
  6. பிரகாஷ்: இந்தப் பதிவைப் பாருங்கள்: http://education-loan.blogspot.com/2009/01/banks-reluctant-on-disbursing-education.html

    ReplyDelete
  7. I second Bruno's comment.
    Have you considered how many eligible students could not pursue higher education because they did not have the means to even get a loan approved?
    Education should be at no or absolutely low cost to the student or the parents.
    I believe that by requiring banks to channel a few percentage points from the interest rates they charge on every loan they provide, banks can generate enough perennial capital flow to extend free loans to a sizeable student population. Banks can be given income tax concessions to encourage such practice.
    Alternatively, there can be an education tax, similar to sales tax, that can be collected from corporations and individuals to fund mass education (of course, there is a trust factor).
    Repayment is a responsibility - punishments hardly build responsibility. There should be an awareness in the student mind about the need and societal benefit of upholding the repayment responsibility.

    ReplyDelete
  8. பத்ரி : கடனைத் திருப்பிக் கட்டாதவர்கள் அதிகம் பேர் இருக்கலாம் என்கிற சாத்தியத்தை நான் மறுக்கவில்லை.

    தவறான பரிந்துரைகளின் பேரிலும், கடனைத் திருப்பிக் கட்டுவார்களா மாட்டார்களா என்பதை சரியாகப் பரிசீலிக்காமலும் கல்விக் கடன்களை - அது அவர்களுக்கு நிசமாகவே தேவைப்படுகிறதா என்பதை அறியாமல் - எலிஜிபிலிடி இருக்கிறது என்கிற ஒரே காரணத்துக்காக கடன்களை அளித்தது வங்கிகள் ( அதிகாரிகளின்) தவறு. கட்டாமல் விட்டது படித்து முடித்த மாணவர்கள் செய்த தவறு. இவற்றுக்காக, எதிர்காலத்தில் கடனை நம்பி படிக்க நினைப்பவர்கள் வயிற்றில் அடிப்பது என்ன நியாயம்?

    'இனிமேல் கல்விக் கடன் இல்லை என்று யார் சொன்னது? ' என்று கேள்வி வரும்.

    பின், ' Banks reluctant on disbursing education loans' என்கிற் ஸ்டேட்மெண்ட் எங்கே கொண்டு போய் விடும் என்று நினைக்கிறீர்கள்? ஐஓபி யைத் தொடர்ந்து, மற்ற இந்திய வங்கிகளும் இது போல அறிக்கை விடும். ஊடகங்களில் விவாதிக்கபடும். அதிலே கல்விக் கடன் மூலம் பயன் பெற்றவர்களை ஓரங்கட்டிவிட்டு, வராக்கடன்கள் பற்றி மட்டுமே பேசும். 'Should India Really Waste Money in Giving Educational Loans? என்று பர்காதத் நிகழ்ச்சி நடக்கும். கல்விக்காக அளிக்கப்படும் கடனுக்கும், பர்சனல் லோனுக்கும் மலையளவு - ஒட்டுமொத்தப்பயன்மதிப்பு அடிப்படையில் - வித்தியாசம் இருக்கிறதடா மடையர்களா என்று சொல்ல யாரும் இருக்க மாட்டார்கள். ஊத்தி மூடப்படும் அல்லது பெயரளவுக்கு எதையோ செய்வார்கள்.

    சினிக் என்பீர்கள். பரவால்லை :)

    பொதுத்துறை வங்கிகள், தங்கள் மேல் தோற்றத்தை, லட்சக்கணக்கில் மினிமம் பாலன்ஸ் வைக்கச் சொல்லும் லாபகரமான மல்டிநாஷனல் வங்கியினது போலவே மாற்றிக் கொள்ள பிரம்மப் பிரயத்தனம் செய்து வருகின்றன. அவ்வங்கிகள் மாற்றிக் கொள்ள நினைப்பது தங்கள் மேல் தோற்றத்தை மட்டுமல்ல.

    ReplyDelete