Saturday, June 27, 2009

ஆர்.கே.சண்முகம் செட்டியார் (17.10.1892 - 5.5.1953)

சுதந்தர இந்தியாவின் முதல் நிதியமைச்சர் ஆர்.கே.சண்முகம் செட்டியார் என்பவர் என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் இவரைப் பற்றி இதற்குமேல் அதிகமாக எனக்கு ஏதும் தெரிந்திருக்கவில்லை.

பிரதமர் ஜவாஹர்லால் நேருவின் தலைமையில் சுதந்தர இந்தியாவின் முதல் அமைச்சரவை உருவாக்கப்பட்டபோது அதில் காங்கிரஸ் கட்சியில் இல்லாத இருவர் பங்குபெற்றனர். அவர்கள்: நிதியமைச்சர் ஆர்.கே.சண்முகம் செட்டியார்; சட்ட அமைச்சர் அம்பேத்கர். அம்பேத்கர் தனக்கு நிதி போர்ட்ஃபோலியோ கிடைக்கும் என்று எதிர்பார்த்தார் என்று ஓரிடத்தில் படித்தேன். (கிறிஸ்டோஃபர் ஜாஃப்ரிலாட் எழுதிய Dr Ambedkar And Untouchability: Analysing And Fighting Caste என்ற புத்தகத்தில் என்று நினைக்கிறேன்.) ஆக, அம்பேத்கரை மீறி, காங்கிரஸ் கட்சிக்கு வெளியிலிருந்து கொண்டுவந்து இவருக்கு நிதித்துறை என்னும் மிக முக்கியமான பொறுப்பை நேரு கொடுக்கக் காரணம் என்ன? இவர் பொருளாதாரத் துறையில் என்ன சாதித்திருந்தார்?

அமைச்சரவை தொடர்பாக காந்தியிடம் ஆலோசிக்காமல் நேருவும் படேலும் முடிவெடுத்திருக்க மாட்டார்களே? காந்திக்கு சண்முகத்தைத் தெரியுமா? காந்தி என்ன சொல்லியிருப்பார்?

நிதியமைச்சராக இருந்த சண்முகம், ஒரே ஆண்டில் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு கோயம்புத்தூர் திரும்பியது ஏன்? காங்கிரஸ்காரர்கள் என்ன கலகம் செய்து இவரைத் துரத்தினர்?

இந்த மனிதர் பற்றி நமக்குத் தெரிந்த தகவல்கள் மிகக் குறைவே. சுமார் 60 ஆண்டுகள் வாழ்ந்த இவரது வாழ்க்கை வரலாற்றை இவரது பேரன் ஆர்.சுந்தரராஜ், ஒரு பிஎச்.டி ஆய்வுக்கட்டுரையாக எழுதியுள்ளார். அதன் ஜனரஞ்சக வடிவத்தை தமிழ்ப் புத்தகமாக கிழக்கு பதிப்பகம் வெளியிடப் போகிறது.

அதனை எடிட் செய்யும்போதுதான் இந்த மனிதரின் பல குணங்கள், சாதனைகள் எனக்குப் புரிய ஆரம்பித்தது. தமிழகத்தின் மிகப்பெரும் சாதனையாளர்களுல் இவர் ஒருவர். ஆனால் பெரியாருக்கோ, ராஜாஜிக்கோ கிடைத்த அளவு புகழும் பெருமையும் இவருக்குக் கிடைக்கவில்லை.

இவர் காங்கிரஸில் இருந்திருக்கிறார். பிராமணர்-பிராமணரல்லாதார் பிரச்னை வலுத்தபோது காங்கிரஸிலிருந்து விலகியுள்ளார். நீதிக்கட்சியின் ஆதரவில் தேர்தலில் நின்றுள்ளார். பிறகு அந்தக் கட்சியுடனான தொடர்பை நீட்டிக்கவில்லை. பெரியாருடன் நெருங்கிய நட்பு பாராட்டி, சுயமரியாதை இயக்கத்தில் இருந்துள்ளார். ஆனால் சுயமரியாதை இயக்கத்தின் கடவுள் எதிர்ப்புக் கொள்கையை ஏற்றுக்கொள்ளாமல் அந்த இயக்கத்திலிருந்து விலகியுள்ளார். அடிப்படையில் பெரியாரின் பிற சீர்திருத்தங்களை ஏற்றுக்கொண்ட இவர், கடவுள் நம்பிக்கையை விடத் தயாராக இல்லை.

இந்தியாவுக்கு சுதந்தரம் வேண்டும் என்று கேட்டுப் போராடிய பலருள் இவர் இருந்திருக்கிறார். ஆனால் முகமது அலி ஜின்னா போல, ஆங்கிலேயர்களுடன் கருத்து வேற்றுமை இருந்தாலும், தெருவில் இறங்கிப் போராடி ஜெயிலுக்குப் போகவில்லை. கடைசிவரை ஆங்கிலேய அரசாங்க அதிகாரிகளுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தார். ஆங்கில அரசு சார்பில் இவருக்கு ஏதாவது ஒரு பதவி இருந்துவந்தது. ஆனால் அதே நேரம், இந்தியா சுய நிர்ணய உரிமை பெற்று தன்னாட்சி அதிகாரத்துடன் விளங்கவேண்டும் என்பதில் இவர் கடுமையாக உழைத்திருக்கிறார். உதாரணமாக அட்லாண்டிக் பிரகடனம் தொடர்பாக இவர் பிராங்க்ளின் ரூஸ்வெல்ட்டுடன் பேசியது.* (இதுபற்றி தனியாக எழுதவேண்டும்.)

இந்திய நிதியமைச்சராக இருந்தபோது பிரிட்டன் இந்தியாவுக்குத் தரவேண்டிய Balance of Payment சுமார் 1,500 கோடி ரூபாயைப் பெறுவதில் முக்கியப் பங்கு வகித்துள்ளார்.

கோயமுத்தூர் பகுதியை தொழிற்சாலைகள் நிறைந்த இடமாக்கியதில் மிக முக்கியமான பங்கு இவருக்கு இருந்திருக்கிறது. கோவையில் SIMA, SITRA போன்ற அமைப்புகளை உருவாக்கியதில் இவருக்குத்தான் முக்கியப் பங்குள்ளது. கொச்சி சமஸ்தான திவானாக 7 ஆண்டுகள் இருந்து, அந்த இடத்தில் பெரும் வளர்ச்சியைக் கொண்டுவந்துள்ளார். தமிழிசை இயக்கத்தில் முக்கியமானவராக இருந்துள்ளார். ராஜா அண்ணாமலை செட்டியாருடன் சேர்ந்து தமிழிசை இயக்கத்தை ஆரம்பித்து, அண்ணாமலை செட்டியாருக்கு அடுத்து அந்த இயக்கத்தின் இரண்டாவது தலைவராக இருந்துள்ளார். அண்ணாமலைப் பலகலைக்கழகத்தின் துணைவேந்தராக இரண்டு ஆண்டுகள் இருந்துள்ளார். சிலப்பதிகாரத்தை ஆராய்ந்து உரை எழுதியுள்ளார். (உரையா, ஆய்வுக்கட்டுரையா என்று தெளிவாகத் தெரியவில்லை. ஒரு பிரதி கிடைக்க முயற்சி செய்துகொண்டிருக்கிறேன்.) தமிழ்க் கல்விக்காக பேரூரில் ஒரு கல்லூரி உருவாக்கியுள்ளார்.

மேலே நான் சொன்னது மிகச் சில துளிகளே. இவரது வாழ்க்கையில் தெரிந்துகொள்ள சுவாரசியமான பல விஷயங்கள் உள்ளன.

தனிவாழ்வில் நிறைய சொத்து சேர்த்துள்ளார். பொதுவாழ்வில் நிறைய சாதித்துள்ளார். ஒருவிதத்தில் பார்த்தால் உலகளாவிய பெருமை பெற்ற முதல் தமிழர் என்று சொல்லலாம். ஆனால் இவர்மீது வெளிச்சமே விழாமல் இருப்பதற்கான காரணம் என்ன?

8 comments:

 1. http://en.wikipedia.org/wiki/Shanmukham_Chetty

  http://www.hindu.com/thehindu/mp/2004/03/29/stories/2004032900240300.htm

  அன்னாரைப் பற்றி.

  சண்முகம் செட்டி ஈ.வெ.ரா. வைப் போலவோ, ராஜாஜி போலவோ பொது மக்கள் அரசியல் வாதி இல்லை. He was a competent professional at best. அதனால் ஆனால் பெரியாருக்கோ, ராஜாஜிக்கோ கிடைத்த அளவு புகழும் பெருமையும் இவருக்குக் கிடைக்கவில்லை என சொல்வது ஆரஞ்சுகளையும், ஆப்பிள்கலையும் ஒப்பு செய்வதாகும்.

  மேலும் தமிழர்களுக்கு அர்சியல், சினிமா கிளுகிளுப்பு இல்லையென்றால், ஒரு சாதனையாரை கண்டுகமாட்டர்கள், அல்லது தக்க மதிப்பு கொடுக்க மாட்டர்கள். எவ்வளவு தமிழக தெருப் பெயர்கள் உண்மையான சாதனயாளரான சர் சி.வி. ராமன் அல்லது சந்திரசேகர் அல்லது கணக்கு ராமானுஜம் மேல் உள்ளது.

  ReplyDelete
 2. லஞ்சமாக இருக்கலாம்......தற்போதைய அரசியல்வாதிகளின் வாழ்க்கை வாழ்ந்திருக்கலாம்...வெளிப்படையாக

  ReplyDelete
 3. பா. ரெங்கதுரைSun Jun 28, 09:17:00 AM GMT+5:30

  இவர் நாட்டுக்கோட்டை செட்டியாரா அல்லது வேறு பிரிவைச் சேர்ந்தவரா?

  ReplyDelete
 4. நேருவின் அமைச்சரவையில் இந்து மகா சபையின் தலைவரான டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜியும் இருந்தார். வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சராக. ஆக, நேருவின் முதல் அமைச்சரவையில் காங்கிரஸ் அல்லாத தலைவர்கள் மூவர் என்று நினைக்கிறேன்.

  ஆர். முத்துக்குமார்

  ReplyDelete
 5. ஒரு தகவலுக்காக பதிவில் இடம்பெறாதத் தகவல்களைச் சொல்கிறேன்.

  * இவர்தான் தாழையூத்துரிலும், சங்ககிரியிலும் சிமெண்ட் தொழிற்சாலைகள் அமைய பெருமுயற்சி மேற்கொண்டு, அதற்கான லைசென்ஸூம் வழங்கினார்.

  *1920ஆம் ஆண்டு நீலகிரி தொகுதியின் எம்.எல்.சி ஆனார்.

  * அவர் கோவையில் வாழ்ந்த காலத்தில் அவரது இல்லத்தில் ஒவ்வொரு மாலையும் இலக்கியக்கூட்டம் நிகழும். கூட்டத்திற்கு வரும் அன்பர்கள் பேசுகையில் 'பிறமொழி கலந்தால் ஒரு ரூபாய் அபாரதம்' எனக் கட்டுப்பாடு விதிப்பார்.

  * இவரது நேர்மையான, தூய வாழ்வையும் பெரியார் பல்வேறு சந்தர்ப்பங்களில் பேசியும், எழுதியும் பாராட்டியுள்ளார்.

  ReplyDelete
 6. Few tidbits about this personality:

  1. He belongs to the Nagarathat (Nattukottai Chettiar) community.

  2. I belive, there stands a building, opposite to main administrative offices, in the Annamalai University campus.

  ReplyDelete
 7. There are many like him, doyens about whom hardly anything is known today.
  How many of us know about Anathasayanam
  Iyengar the first speaker of post-independence Lok Sabha or about J.C.Kumarappa or about Mavalankar or about Jayakar.Many south indians had been divans or advisors to many princely states or had played a major role as
  civil servants. They had never received the credit or attention they deserved
  in post 1947 India

  ReplyDelete
 8. வரலாற்றின் பக்கங்களில் பரவலாக அறியப்படாத அல்லது மறைக்கப்பட்டதொரு ஆளுமையைப் பற்றியதொரு புத்தகத்தை 'கிழக்கு' கொண்டு வருவது குறித்து அறிய மகிழ்ச்சி. அப்போதைய சூழ்நிலையை சாதிப் பெயரையும் இணைத்து பெயரை எழுதுவது இயல்பாக இருந்திருக்கலாம். இப்போதைய காலகட்டத்திற்கு அது தேவையா என்பது குறித்து யோசிக்கலாம்.

  அவ்வாறு எழுதப்படவில்லையெனில் அதேமாதிரி பெயர்களின் இடையில் அடையாளம் காண்பது சிரமம் என்கிற வேறுவழியில்லாத சூழ்நிலையில் வேண்டுமானால் இது அனுமதிக்கப்படலாம் என்றும் தோன்றுகிறது.

  ReplyDelete