டிசம்பர் 2009-ல் தமிழ் பாரம்பரியம் குழுமம் நிகழ்வில் கலந்துகொண்டு பாலசுப்ரமணியன் B+ பேசியதன் வீடியோ. இது சொற்பொழிவாக இல்லாமல் ஓர் உரையாடலாக இருந்தது. உடன் உரையாடுபவர் நிர்மலா ஸ்ரீதர்.
மார்ச் மாதம் (6 மார்ச் 2010) அன்று தமிழ் பாரம்பரியம் நிகழ்வில், கே.பி.ஜீனன் கலந்துகொண்டு பேசினார். பொறியியல் கல்வி பயின்ற ஜீனன், பின்னர் நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டிசைனில் கல்வி பெற்றபின், நகர நாகரிகத்தை முற்றிலுமாக ஒதுக்கிவிட்டு, கேரளாவில் அரவக்கோடு என்ற இடத்தின் அருகே ஒரு கிராமத்தில் வசித்துவருகிறார்.
அங்கே குழந்தைகள் எப்படி கலையை எளிதாக உள்வாங்குகிறார்கள், அற்புதமாகப் படைக்கிறார்கள், எப்படி ‘படிப்பறிவில்லாத’ கிராம மக்கள் கலையைப் படைக்கிறார்கள் ஆகியவற்றை அருகே இருந்து படம் பிடித்து ஆவணப்படுத்தியுள்ளார். கலை, கல்வி ஆகியவை தொடர்பான தன் கருத்துகளை அவர் முன்வைத்தார். அதனை கீழே காணலாம்.
தமிழ் பாரம்பரியம் வழங்கும் நிகழ்ச்சி முனைவர் எஸ்.பாலுசாமி மாமல்லை ‘அருச்சுனன் தபசு’ சிற்பத் தொகுதி நாள்: 3 ஏப்ரல் 2010 நேரம்: மாலை 5.30 மணி இடம்: வினோபா ஹால், தக்கர் பாபா வித்யாலயா, தி.நகர்
வெளிப்புறப் புடைப்புச் சிற்பம் என்பது பல்லவர் காலத்துக்கு முன்னும் இருந்ததில்லை, பின்னும் இருக்கவில்லை. மாமல்லையில் காணப்படும் புடைப்புச் சிற்பங்களிலேயே மிக முக்கியமானது ‘பெருந்தவச் சிற்பத் தொகுதி’ என்பது.
சில அறிஞர்கள் இது அர்ஜுனன் தவம் செய்யும் காட்சி என்கிறார்கள். தவம் செய்பவர் அர்ஜுனன் என்பதும், அவர் சிவனை நோக்கி தவம் செய்து பாசுபத அஸ்திரத்தைப் பெறும் விருப்பத்தில் உள்ளார் என்பதும் இவர்கள் கருத்து. வேறு சிலர் இது பகீரதன் தவத்தைக் குறிக்கிறது என்கிறார்கள். தன் தந்தையும் பாட்டனும் சாதிக்கமுடியாததை பகீரதன் சாதிக்கிறான். கங்கையிடம் தவம் இருந்து அவளை பூமிக்கு வரச் சம்மதிக்க வைக்கிறான். அவளது வேகத்தைத் தாங்கக்கூடிய திறன் சிவனுக்கு மட்டுமே உண்டு. எனவே சிவனிடம் தவம் இருந்து அவரையும் சம்மதிக்கவைக்கிறான்.
இந்த இரு கதைகளில் எந்தக் கதையை மாமல்லை காண்பிக்கிறது? சில அறிஞர்கள் இது சிலேடை என்றும் ஒரே சிற்பத் தொகுதியில் இரண்டு கதைகளையும் குறிப்பிடுகிறது என்றும் சொல்கிறார்கள்.
முனைவர் பாலுசாமி முற்றிலும் புதிய கருத்தை முன்வைக்கிறார். பெருந்தவச் சிற்பத் தொகுதியில் தவத்துக்கு மேலும் பல விஷயங்கள் உள்ளன என்பது அவர் கருத்து. இங்கு தவம் செய்பவர் பாசுபதம் வேண்டி நிற்கும் அர்ஜுனன்தான் என்பதை ஏற்கும் பாலுசாமி, மாமல்லையின் சிற்பிகள் அதையும் தாண்டி சிந்தித்துள்ளனர் என்கிறார்.
இதனை விளக்கும் செயல்பாட்டில் பாலுசாமி அந்தச் சிற்பத் தொகுதியில் உள்ள ஒவ்வொரு தனிச் சிற்பத்தையும் கவனமாகப் பட்டியல் இடுகிறார். ஒவ்வொரு விலங்கு, ஒவ்வொரு பறவை, ஒவ்வொரு கடவுளர், ஒவ்வொரு மனிதர் என்று யாரையும் விடவில்லை. இங்கே காண்பிக்கப்படும் விலங்குகள் எல்லாம் இஷ்டத்துக்கு செதுக்கப்பட்டவை அல்ல, மிகக் குறிப்பாக, கவனமாகசத் தேர்ந்தெடுத்துச் செதுக்கப்பட்டவை என்பது அவரது வாதம்.
ஏன் இந்தத் தொகுதியில் ‘பொய்த்தவப் பூனை’ செதுக்கப்பட்டுள்ளது? வெறும் நகைச்சுவைக்காக மட்டும்தானா? இதற்கும் பாலுசாமியிடம் பதில் உள்ளது.
பாலுசாமியின் ஆழ்ந்த ஆராய்ச்சியின் பயனாக விளைந்துள்ள இந்த விளக்கம் சாதாரண மனிதர்களும் புரிந்துகொள்ளும் வகையில் உள்ளது. இது சமீபத்தில் காலச்சுவடு வாயிலாக தமிழில் புத்தகமாக வெளிவந்துள்ளது.
சுமார் 4 மணிக்கு ஆழ்வார்பேட்டை எல்டாம்ஸ் ரோட்டிலிருந்து நடையாகவே கிளம்பினோம். அப்படியே சி.பி.ராமசாமி தெரு வழியாக சாய்பாபா கோயில் வழியாக நடந்து மாடவீதி. இம்முறை அப்ரதட்சிணமாகச் சுற்றலாம் என்று முடிவு செய்தோம். நேரம் அதிகமாக அதிகமாக தெற்கு மாடவீதிக்குள் அறுபத்து மூவர் விக்கிரகங்கள் வந்துவிட்டால், அங்கே தெருவில் நிற்கவே முடியாது. எனவே தெற்கு மாடவீதியில் நுழைந்து, அப்படியே கிழக்கு, வடக்கு என்று சுற்றி, மீண்டும் அலுவலகம் நோக்கி நடந்து சென்றுவிடுவது.
நடுத்தெருவில் சூடம் ஏற்றி வழிபட்டுக்கொண்டிருந்தனர் பலர். கொஞ்சம் அபாயமான விஷயம்தான் இது. சரியாகக் கவனிக்காதவர்கள் உடையில் நெருப்பு பற்றிக்கொள்ளும் அபாயம் உள்ளது.
ஒவ்வொரு முனையிலும் காவல்துறை கண்காணிப்பு ‘கோபுரம்’ மாதிரி ஒரு தாற்காலிக மேடை அமைத்து வீடியோ கேமரா கண்காணிப்பும் உள்ளது. ‘இவர்கள் பிக்பாக்கெட் திருடர்கள்’ என்று ஒரு பட்டியல் அங்கே காணப்பட்டது. அதில் பல முகங்கள். பெண்களுக்கான 33% அளவுக்கு அதிலும் இட ஒதுக்கீடு இருந்தது! அதைப் பார்த்தபின் சுற்றி யாரைப் பார்த்தாலும் பிக்பாக்கெட் போலவே தோன்றியது.
தெற்கு மாடவீதியில் ஒரு கட்டடத்தில் வித்தியாசமான அலங்காரங்கள் இருந்தன. வெள்ளைக்கார சிப்பாய்கள் போல பல கட் அவுட்கள் வாசலில் தூணுக்குத் தூண் தென்பட்டன. இதன் தாத்பர்யம் என்ன என்று புரியவில்லை.
கொஞ்சம் தள்ளி, ஒரு காய்கறிக் கடைக்காரர் பிளாஸ்டிக் பாக்கெட்டில் தக்காளி, வெங்காயம் ஆகியவற்றைக் கட்டி தூக்கி எறிந்துகொண்டிருந்தார். ஆள் ஆளுக்குப் பிரசாதம் வழங்குவதைப் போல இவர் காய்கறிப் பிரசாதம்! பின் திடீரென மாங்காய்கள் பறக்க ஆரம்பித்தன.
கொஞ்சம் தள்ளி சுடச்சுட சர்க்கரைப் பொங்கல். பல இடங்களிலும் சர்க்கரைப் பொங்கல் கிடைத்தது. அதற்குள் பல விக்கிரகங்கள் உலா வரத் தொடங்கியிருந்தன.
தெற்கு மாடவீதியில் கூட்டம் அதிகமாக, குளத்தை ஒட்டிய தெருவில் நுழைந்து மாமி மெஸ் வழியாக வந்தால், அங்கு நல்ல எலுமிச்சை சர்பத். பிறகு மீண்டும் சர்க்கரைப் பொங்கல்! அப்படியே கிழக்கு மாடவீதிக்குள் நுழைந்தால் மீண்டும் கூட்டம் அப்பியது. அங்கே சேஷாத்ரி ஸ்வாமிகள் என்று கொட்டகை போட்டு ‘தனலட்சுமியை அப்படியே வாரி எடுத்துக்கொண்டு போங்கள்’ என்று மைக்கில் பேசிக்கொண்டிருந்தார் ஒரு மாமி. வாங்கிச் சென்றால், ‘அறுபதே நாட்களில் பணம் கொட்டோ கொட்டென்று கொட்டும்’ என்று தமாஷாகப் பேசிக்கொண்டிருந்தார்.
வந்த வழியே திரும்பி, கோயில் வாசலுக்குச் சென்றோம். அங்கிருந்து சந்நிதித் தெரு வழியாக தேர் வரை கூட்டமே இல்லாமல் போகமுடிந்தது.
தேர் அருகில் ஒரு வீட்டில் போளி கொடுத்துக்கொண்டிருந்தார்கள். ஆனால் கூட்டம் அம்மியது. தேரை ஒட்டிப் பின்னால் திரும்பினால் குடை ராட்டினம் சுற்றிக்கொண்டிருந்தது.
சற்று தள்ளி மூன்று பேர் தாரை, தப்பு வைத்துக்கொண்டு அடித்துப் பின்னிக்கொண்டிருந்தார்கள். நான் படம் எடுக்க ஆரம்பித்ததும் சூடு அதிகமாகியது. என்ன ஒரு ஒருங்கிணைப்பில் ‘தாளம்’ மாறுகிறது என்று பாருங்கள்.
எதிரே என் ஃபேவரிட்டான அம்மன் முகம் வந்தது.
அதைத் தாண்டியதும் திருவள்ளுவர், வாசுகியுடன் பவனி வரத் தொடங்கினார். இதற்குமுன், இப்படி தாடி வைத்து விக்கிரகமாக வழிபடப்படும் திருவள்ளுவரை நான் தரிசித்ததில்லை. ‘அகர முதல எழுத்தெல்லாம்’ என்று சொல்லியா இவரை தினம் தினம் அர்ச்சிப்பார்கள்?
கூட்டம் கட்டுக்கடங்காமல் போகும் நிலையில் அழகாக எஸ்கேப் ஆகி, அலுவலகத்தை மீண்டும் வந்தடைந்தோம். இரண்டு முழு மணி நேரங்கள். கால் வலி. நிறையப் பிரசாதம்.
இன்று மயிலையில் அறுபத்து மூவர் திருவிழா. காலையில் திரும்பிய திசை எல்லாம் ஷாமியானா கட்டி, ஸ்பீக்கர் வைத்து ‘நமசிவாயம் நமசிவாயம் ஓம் நமசிவாயம்’ பாட்டு. தெரு ஓரத்தில் ஆட்டோ ஸ்டாண்ட்கள் எல்லாவற்றிலும் தண்ணீர் பந்தல். வித விதமான மெனு. ஓரிடத்தில் பிரிஞ்சி என்றால் இன்னோர் இடத்தில் சாம்பார் சாதம்.
நீங்கள் சென்னையில் இருக்கிறீர்களா? இன்று மதியம் வேலை வெட்டி இல்லையா? அப்படியே ஜாலியாகக் கிளம்புங்கள். முதுகுப் பை ஒன்று இருப்பது உத்தமம். வண்டியில் வந்தால் வண்டியை நாகேஸ்வரராவ் பூங்கா பக்கத்தில் எங்காவது நிறுத்திவிட்டு, பொடி நடையாக லஸ் சந்திக்கு வாருங்கள். அங்கிருந்து கபாலீஸ்வரர் கோயிலுக்கு சுற்றிப் பிரதட்சிணமாகப் போங்கள். வழியில், வெட்கம் பாராமல் வரிசையாகக் கிடைக்கும் பிரசாதங்களை உண்டு மகிழுங்கள். கையோடு பேப்பர் நாப்கின் கைத்துடைக்க எடுத்துச் செல்லுங்கள், அல்லது நல்ல பெரிய கைக்குட்டைகள் சில.