Tuesday, March 30, 2010

மாமல்லை ‘அர்ச்சுனன் தபசு’ பற்றி முனைவர் பாலுசாமி


தமிழ் பாரம்பரியம் வழங்கும் நிகழ்ச்சி
முனைவர் எஸ்.பாலுசாமி
மாமல்லை ‘அருச்சுனன் தபசு’ சிற்பத் தொகுதி
நாள்: 3 ஏப்ரல் 2010
நேரம்: மாலை 5.30 மணி
இடம்: வினோபா ஹால், தக்கர் பாபா வித்யாலயா, தி.நகர்

வெளிப்புறப் புடைப்புச் சிற்பம் என்பது பல்லவர் காலத்துக்கு முன்னும் இருந்ததில்லை, பின்னும் இருக்கவில்லை. மாமல்லையில் காணப்படும் புடைப்புச் சிற்பங்களிலேயே மிக முக்கியமானது ‘பெருந்தவச் சிற்பத் தொகுதி’ என்பது.

சில அறிஞர்கள் இது அர்ஜுனன் தவம் செய்யும் காட்சி என்கிறார்கள். தவம் செய்பவர் அர்ஜுனன் என்பதும், அவர் சிவனை நோக்கி தவம் செய்து பாசுபத அஸ்திரத்தைப் பெறும் விருப்பத்தில் உள்ளார் என்பதும் இவர்கள் கருத்து. வேறு சிலர் இது பகீரதன் தவத்தைக் குறிக்கிறது என்கிறார்கள். தன் தந்தையும் பாட்டனும் சாதிக்கமுடியாததை பகீரதன் சாதிக்கிறான். கங்கையிடம் தவம் இருந்து அவளை பூமிக்கு வரச் சம்மதிக்க வைக்கிறான். அவளது வேகத்தைத் தாங்கக்கூடிய திறன் சிவனுக்கு மட்டுமே உண்டு. எனவே சிவனிடம் தவம் இருந்து அவரையும் சம்மதிக்கவைக்கிறான்.

இந்த இரு கதைகளில் எந்தக் கதையை மாமல்லை காண்பிக்கிறது? சில அறிஞர்கள் இது சிலேடை என்றும் ஒரே சிற்பத் தொகுதியில் இரண்டு கதைகளையும் குறிப்பிடுகிறது என்றும் சொல்கிறார்கள்.

முனைவர் பாலுசாமி முற்றிலும் புதிய கருத்தை முன்வைக்கிறார். பெருந்தவச் சிற்பத் தொகுதியில் தவத்துக்கு மேலும் பல விஷயங்கள் உள்ளன என்பது அவர் கருத்து. இங்கு தவம் செய்பவர் பாசுபதம் வேண்டி நிற்கும் அர்ஜுனன்தான் என்பதை ஏற்கும் பாலுசாமி, மாமல்லையின் சிற்பிகள் அதையும் தாண்டி சிந்தித்துள்ளனர் என்கிறார்.

இதனை விளக்கும் செயல்பாட்டில் பாலுசாமி அந்தச் சிற்பத் தொகுதியில் உள்ள ஒவ்வொரு தனிச் சிற்பத்தையும் கவனமாகப் பட்டியல் இடுகிறார். ஒவ்வொரு விலங்கு, ஒவ்வொரு பறவை, ஒவ்வொரு கடவுளர், ஒவ்வொரு மனிதர் என்று யாரையும் விடவில்லை. இங்கே காண்பிக்கப்படும் விலங்குகள் எல்லாம் இஷ்டத்துக்கு செதுக்கப்பட்டவை அல்ல, மிகக் குறிப்பாக, கவனமாகசத் தேர்ந்தெடுத்துச் செதுக்கப்பட்டவை என்பது அவரது வாதம்.

ஏன் இந்தத் தொகுதியில் ‘பொய்த்தவப் பூனை’ செதுக்கப்பட்டுள்ளது? வெறும் நகைச்சுவைக்காக மட்டும்தானா? இதற்கும் பாலுசாமியிடம் பதில் உள்ளது.

பாலுசாமியின் ஆழ்ந்த ஆராய்ச்சியின் பயனாக விளைந்துள்ள இந்த விளக்கம் சாதாரண மனிதர்களும் புரிந்துகொள்ளும் வகையில் உள்ளது. இது சமீபத்தில் காலச்சுவடு வாயிலாக தமிழில் புத்தகமாக வெளிவந்துள்ளது.

No comments:

Post a Comment