Thursday, January 11, 2007

சென்னை புத்தகக் காட்சி: நாள் 1

10/1/2007. புது இடம். பச்சையப்பன் கல்லூரிக்கு எதிராக உள்ள செயிண்ட் ஜார்ஜ் மேல் நிலைப் பள்ளி வளாகத்தில் 30-வது சென்னை புத்தகக் காட்சி தொடங்கியது.

தமிழக முதல்வர் கருணாநிதி தொடங்கி வைத்தார்.

Announcements for the day:

* முதல்வர் தன் சொந்தப் பணத்திலிருந்து ரூ. ஒரு கோடியை எழுத்தாளர்களுக்காக என்று நன்கொடையாகக் கொடுப்பதாக அறிவித்தார். இந்தப் பணத்தை வைப்புநிதியில் வைத்து இதிலிருந்து வரும் வட்டியைக் கொண்டு ஆண்டுக்கு ஐந்து எழுத்தாளர்களுக்கு தலா ஒரு லட்ச ரூபாய்கள் பரிசாக அளிக்க வேண்டும். இந்த நிதியை நிர்வகிப்பது பபாஸி எனப்படும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம்.

* நிரந்தரப் புத்தகக் கண்காட்சி ஒன்று அமைய அரசு 50% செலவை ஏற்கும். பொதுப்பணித்துறைக்குச் சொந்தமான இரண்டு இடங்களில் ஏதாவது ஓர் இடத்தை அரசு பதிப்பளர்களுக்கு வழங்கும். பபாஸி/பதிப்பாளர்கள் ஒன்றுசேர்ந்து மீதிப் பணத்தை செலவழித்து இடத்தைக் கட்டிக்கொள்ளவேண்டும். எத்திராஜ் கல்லூரிக்கு அருகில் அல்லது சைதாப்பேட்டை தாடண்டர் நகரில் இடங்கள் உள்ளன. (என்னுடைய விருப்பம் எத்திராஜ் கல்லூரிக்கு அருகில் உள்ள இடம்...)

Awards for the day:

* சிறந்த எழுத்தாளர்: பிரபஞ்சன்
* சிறந்த குழந்தை எழுத்தாளர்: ரேவதி எனும் பெயரில் எழுதும்/எழுதிய ஹரிஹரன்
* சிறந்த பதிப்பகம்: பிரேமா பிரசுரம்
* சிறந்த புத்தகக் கடை: திருச்சி அகத்தியர் புத்தக நிலையம்

Other news

* முதல்வர் மின்சார காரில் அரங்கைச் சுற்றி வருவதாக இருந்தது. ஆனால் பத்திரிகை படம்பிடிப்போர் அடித்துப் பிடித்து காவலர்களைத் தள்ளி அமளி செய்ததில், முதல்வர் வாசலோடே கிளம்பிவிட்டார். இவ்வளவு அடாவடியான போட்டோகிராஃபர்களை நான் பார்த்ததே இல்லை.

* முதல்வர் வந்ததால் காவல்துறை அனுமதிச்சீட்டு இல்லாதவர்களை உள்ளே அனுமதிக்கவில்லை. முதல்வர் சென்றபிறகே 6.30 மணி அளவில்தான் மக்கள் அனுமதிக்கப்பட்டனர். காயிதே மில்லத் கல்லூரியைவிட இந்த இடம் ஊருக்குத் தொலைவில் இருப்பதாலும் முதல் நாள் கூட்டம் சற்றே குறைவாக இருந்தது.

Smile of the day:வாயெல்லாம் பல்லாக - அல்லது பல் இல்லாத ஈறாக.

Picture of the day:Prodigy Books (ஸ்டால் எண் 205/206) அறையில் குழந்தைகள் வண்ணம் தீட்டுகின்றன.

3 comments:

 1. தலைவரே...பச்சயப்பா காலேஜ் ஊருக்கு தொலைவா? எல்லாம் டைம்ஸ் ஆஃப் இந்தியா :-) . இட மாற்றம் பற்றி போதிய அளவுக்கு விளம்பரம் இல்லை

  அது சரி, தினமும் இது மாதிரி கமெண்டரி உண்டா? வந்து கலந்துகொள்ள முடியாதவங்களுக்கு இது உபயோகமாக இருக்கும்.

  ReplyDelete
 2. பதிவிற்கு நன்றி பத்ரி! புத்தகக் காட்சி நிகழ்வுகள் பற்றி சந்தர்ப்பம் கிடைத்தால் தொடர்ந்து வலைப் பதிவு செய்ய வேண்டுகிறேன்.

  ReplyDelete
 3. முதல் நாள் விழாவின் செய்தியில் கலைஞர் அவர்கள் ஒரு சிறு வாகனத்தில் அமர்ந்திருப்பதாக புகைப்படம் இருந்ததே. அவர் கலைஞரின் அறிவுக்கூடத்திற்கு சென்றிருந்ததாகவும் செய்தி ஹிண்டுவில் இட்டிருந்தார்கள்.

  தங்களுடைய பேட்டியையும் கண்டேன். ஆங்கில நாவல்கள் மற்றும் பிரபலங்களில் சுயவாழ்க்கை வரலாறு புத்தகங்களையும் தமிழில் மொழிபெயர்ப்பது நல்ல விஷயம்தான்.முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள்.

  பொருட்காட்சியில் நடக்கும் இலக்கியவாதிகளின் கூட்டத்தைப் பற்றியும் குறிப்பிட்டால் பயனுள்ளதாக இருக்கும். ஆங்கிலப் பத்திரிகைகளில் பொருட்காட்சியைப் பற்றிய நிகழ்ச்சிகள் வெளியிட வசதி செய்தாலும் நல்லது என்று நினைக்கிறேன்.

  ReplyDelete